கனிமொழி, தயாளு அம்மாள் பெயர்களைச் சேர்க்காதது ஏன்?

05-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 2-ம் தேதியன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் முதல் கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அது தொடர்பாக ஜூனியர்விகடனில் வந்திருக்கும் ஸ்பெஷல் கட்டுரை இது..!

கடந்த 28 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் விளையாட்டில் உலகக் கோப்பையைக் கைப்பற்றி, சனிக்கிழமை அன்று இரவில், தலைநிமிர்ந்து ஆர்ப்பரித்தது இந்தியா!  அன்று பகலில், டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை

ஒன்று,  'இந்தியாவின் ஜனநாயக விளையாட்டில் பணமும் அதிகார துஷ்பிரயோகமும் எப்படி தலைவிரித்து ஆடுகிறது’ என்பதை உறுதிபடச் சொல்லி, இந்தியாவைத் தலைகுனிய வைத்து இருக்கிறது!

உலகக் கோப்பையை வாங்கித் தந்த டீமில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்பது வருத்தமான விஷயம்தான். ஆனால், இந்தக் குற்றப்பத்திரிகையில் இருந்த முதல் பெயரே, தமிழகத்து முகம் என்பது அதைவிட வருத்தமானது!

'1.76 லட்சம் கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒதுக்கீட்டை மிக மிகக் குறைவான விலைக்கு விற்றதன் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார். இதில் ஏராளமான கோடிகள் சுய லாபம் அடைந்தார்’ என்பதுதான் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.



2007-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி இந்தத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆ.ராசா, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை 2008-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் செய்தார்.

இதில் தவறுகள் நடந்து இருப்பதாகவும் சுமார் 22 ஆயிரம் கோடி பணம் கைமாறி இருப்பதாகவும் மத்திய விழிப்பு உணர்வு மற்றும் கண்காணிப்பு ஆணையம் நவம்பர் 15-ம் தேதி குற்றம்சாட்டியது. இதனை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

சி.பி.ஐ. கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி வழக்கை பதிவு செய்தது. ராசா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் கைது செய்யப்பட்டதும், இன்று திகார் சிறையில் இருப்பதும் தொடர்ச்சியாக நடந்த திருப்பங்கள்!

இந்த வழக்கை எப்படியாவது கிடப்பில் போடவேண்டும் என்று தி.மு.க. தரப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால், உச்சநீதிமன்றமும் சி.பி.ஐ-யும் காட்டிய அழுத்தமான பிடிமானத்தால் ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த சனிக்கிழமை மதியம் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி ஓ.பி.ஷைனி, தனக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த மலை அளவு ஆவணங்களைப் பார்த்துவிட்டு, ''இந்த வழக்கு, விசாரணைக்கான முகாந்திரம் கொண்டதுதான்...'' என்று சொன்ன வார்த்தைகள் 2-ஜி விவகாரத்தின் மர்மப் பக்கங்களை, அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி அதிகாரபூர்வமாகத் திறந்து பார்ப்பதற்கான முக்கியமான சாவி!

இதில், ஒன்பது பேரை குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. இணைத்துள்ளது. மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா இதன் மையப்புள்ளி. அவரது தனிச் செயலாளராக இருந்து ராசாவின் கட்டளையை அட்சரசுத்தமாக நிறைவேற்றிய ஆர்.கே.சந்தோலியா, இரண்டாவதாக உள்ளார். இத்துறையின் செயலாளராக இருந்த சித்தார்த்த பெஹுரா மூன்றாவதாக குறிப்பிடப்பட்டு உள்ளார். ஸ்வான் நிறுவனத்தின் உரிமையாளரான ஷாகித் பால்வா அடுத்து வருகிறார். இந்த நால்வரையும் சி.பி.ஐ. முன்னதாகவே கைது செய்து சிறையில் வைத்து இருக்கிறது.




ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆஸிப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரை அடுத்த தவணையாகக் கைது செய்தது. இவர்கள் போக வினோத் கோயங்கா, கவுதம் ஜோஷி, சுரேந்திரா பிரபா, ஹரி நாயர் ஆகிய நான்கு பெயர்களை சி.பி.ஐ. புதிதாகக் கொண்டு வந்துள்ளது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளர்தான் வினோத் கோயங்கா. இவரும் ஷாகித் பால்வாவும் நெருங்கிய கூட்டாளிகள். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்தான் கவுதம் ஜோஷி, சுரேந்திரா பிரபா, ஹரி நாயர் ஆகிய மூவரும்.

'அனில் அம்பானி தன்னுடைய உயர் அதிகாரிகளை வைத்து ஸ்வான், டி.பி. ரியாலிட்டி ஆகிய கம்பெனிகளை உருவாக்கி, அவர்களை வைத்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளைப் பெற்று லாபம்  பார்த்துள்ளார்’ என்றுதான் சி.பி.ஐ. நினைக்கிறது.

''அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான எந்தத் தகுதியும் இல்லாத நிறுவனங்களான ஸ்வான், யுனிடெக் வயர்லெஸ் ஆகியவை உள்ளே புகுந்து லாபம் பார்த்துள்ளது. இதில் யுனிடெக் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது!'' என்று சொல்கிறது சி.பி.ஐ.

ஊழல் தடுப்பு, குற்றச்சதி, சூழ்ச்சி, மோசடி ஆகிய நான்கு வகையான முறைகேடுகள், இந்த வழக்குக்கு அடிப்படையாக உள்ளன.

125 சாட்சிகளும் 654 ஆவணங்களும் சி.பி.ஐ. வசம் உள்ளன. 'அகலக் கால் வைத்தால் வழக்கு பலவீனம் ஆகிவிடும்' என்பதால், முதல் கட்டமாக தங்களுக்குக் கிடைத்த பலமான ஆவணங்களை மட்டும் வைத்துக்கொண்டு, இப்போதைக்கு ஊழல் கணக்கை 'சிக்கனமாகவே' சொல்லியுள்ளது சி.பி.ஐ!

இவர்கள் சொன்ன கணக்கின்படி சுமார் 30 ஆயிரத்து  985 கோடிவரை இழப்பு! கைது செய்யப்பட்ட ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த்த பெஹுரா, ஷாகித் பால்வா ஆகிய நான்கு பேருக்கும் குற்றப்பத்திரிகையை நீதிபதி ஓ.பி.ஷைனி வழங்கினார். மற்ற நால்வருக்கும் ஏப்ரல் 13-ம் தேதி கொடுப்பதாகச் சொன்னார்.

திகார் சிறையில் இருந்து இதற்காக அழைத்து வரப்பட்டு இருந்தார் ஆ.ராசா. அவரது முகம் கறுத்தும் உடல் மெலிந்தும் காணப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளைப் பார்த்து மெள்ளச் சிரித்த ராசா, ''இப்போது உங்களுக்கு சந்தோஷமா?'' என்று கேட்டார். அவர்கள் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. இறுக்கமான முகத்துடன் இருந்தனர். மற்றபடி யாருடனும் அதிகமாகப் பேசவில்லை ராசா.

''மே 31-ம் தேதிக்குள் நாங்கள் அனைத்து விசாரணை​களையும் முடித்து விடுவோம். இப்போது நாங்கள் தாக்கல் செய்து இருப்பது முதல் கட்ட குற்றப்பத்திரிகைதான். இரண்டாம்கட்ட குற்றப்பத்திரிகையில் விரிவாக அனைத்து விஷயங்களையும் சொல்வோம். அநேகமாக ஏப்ரல் 25-ம் தேதி அந்த அறிக்கை தாக்கல் ஆகும்!'' என்று சி.பி.ஐ. சார்பில் அப்போது கூறப்பட்டது. எனவே, ஏப்ரல் 25-ம் தேதி அன்றுதான் பரபரப்பான விஷயங்களை சி.பி.ஐ. கட்டவிழ்க்கக் கூடும் என்கிறார்கள்.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் சஞ்சய் சந்திரா, யுனிடெக் ரியல் எஸ்டேட் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். வட இந்தியாவின் ரியல் எஸ்டேட் புள்ளியான இவருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கும் இருக்கும் தொடர்புகளுக்கு முழுமையான ஆதாரங்களை சி.பி.ஐ. எடுத்து வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ. ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. ''கலைஞர் டி.வி., சினியுக் ஃபிலிம்ஸ், கிரீன் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனங்களை எங்களது விசாரணை வளையத்தில் வைத்துள்ளோம்'' என்பதுதான் அது!

''கலைஞர் டி.வி-க்கு பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது தொடர்பாக முக்கியமானவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். கலைஞர் டி.வி-யின் பொறுப்பாளர்களில் ஒருவரான சரத்குமார், 'நாங்கள் கடன் வாங்கினோம். அதை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டோம்’ என்கிறார். இதற்கான ஆதாரத்தை குஸேகான் நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் மினிட்ஸ் புக் என்று ஒரு தாளைக் கொடுக்கிறார்கள். 'ஒரிஜினல் மினிட்ஸ் தேவை’ என்றால், தர முடியவில்லை. 'அந்த மினிட்ஸ் புக்கை கலைஞர் டி.வி-க்கு அனுப்பிவிட்டோம்’ என்று கைவிரிக்கிறார்கள். ஆனால், 'மினிட்ஸ் புக்கை எங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கவில்லை’ என்று சொல்கிறார் சரத்குமார்.

அதைத் தொடர்ந்துதான் இந்த விவகாரத்தில் தொடர்புடைய குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்களான ஆஸிப் பால்வா, ராஜீவ் அகர்வால்   இருவரையும் நாங்கள் கஸ்டடிக்குக் கொண்டு வந்தோம்'' என்று சி.பி.ஐ. சொல்கிறது.

'அப்படியானால், கலைஞர் டி.வி-யின் பங்குதாரர்கள் பற்றி இந்தக் குற்றப்பத்திரிகையில் எதுவும் கூறப்படாதது ஏன்?’ என்ற கேள்விக்கு சி.பி.ஐ. அதிகாரிகளால் பதில் தர முடியவில்லை.

''ஏப்ரல் 25-வரை அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டாம். எங்களது இரண்டாவது குற்றப்பத்திரி​கையில் அதற்கான விடை கிடைக்கும்'' என்று மட்டும் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

''தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. கலைஞர் டி.வி-யின் சரத்குமார், கனிமொழி, தயாளு கருணாநிதி ஆகிய மூவர் நோக்கியும் 'நெகடிவ்'வான நடவடிக்கை இருந்தால், தேர்தலில் அது எதிரொலிக்கும். சி.பி.ஐ-க்கும் அது தேவையில்லாத அரசியல் சிக்கலைக் கிளப்பிவிடும். எனவேதான் இன்னும் இரண்டு வாரங்களுக்கு சி.பி.ஐ. அடக்கி வாசிக்கப் போகிறது!'' என்று சொல்கிறார்கள், உள்விவகாரங்கள் அறிந்த டெல்லி அதிகாரிகள்.

நழுவும் நீரா ராடியா!






ராசாவின் நெருங்கிய தோழியாகவும் பல்வேறு நிறுவனங்களின் தரகராகவும் இருந்து, இந்த முறைகேட்டில் முக்கிய மீடியேட்டராக வலம் வந்த 'மர்மப் பெண்' வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நீரா ராடியா.

இந்த 'லாபியிஸ்ட்'டை இதுவரை சி.பி.ஐ. பல முறை விசாரித்துள்ளது. வீடு, அலுவலகத்தை ரெய்டு செய்தது. ஆனால், அவர் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை. 125 சாட்சிகளில் ஒருவராகவே நீரா சேர்க்கப்பட்டுள்ளார். 'இந்த விவகாரத்தில் நீராவின் பங்களிப்பே அவ்வளவுதானா?’ என்ற அதிர்ச்சியான கேள்விகள் இதன் மூலம் எழுந்துள்ளன.

''நீரா ராடியா என்பது பனி மலையின் ஒரு முனை மட்டுமே. அவரை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்த்தால், இந்திய பொருளாதாரத்தையே தாங்கிச் செல்லும் பலே பிசினஸ் முதலைகளையெல்லாம் அடுத்தடுத்து வழக்கினுள் இழுக்க வேண்டி வரும். அதற்கு சி.பி.ஐ. தயாரா?

இப்போதைக்கு அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சுதந்திரம், அடுத்தக்கட்டத்துக்கு விஸ்தரிக்கப்பட்டால் மட்டும்தான் அது சாத்தியம். இப்போதைக்கு ஒரு மெகா நிறுவனத்தின் பலம்தான் நீராவை காப்பாற்றி வைத்திருக்கிறது.

'அவர் சி.பி.ஐ-யின் விசாரணைக்கு ஒத்துழைப்பார். கைது செய்ய வேண்டாம். அவர் அளவுக்கு உண்மை என்று தெரிந்த அனைத்துத் தகவல்களையும் தந்துவிடுவார்...’ என்று அந்த நிறுவனத்தின் பெருந்தலை வாக்கு கொடுத்திருப்பதால், நீராவை இதுவரை கைது செய்யவில்லை.

சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது படேலும் இவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்துக் காரியங்களையும் பார்க்கிறார்'' என்று டெல்லியில் தகவல் பரவிக் கிடக்கிறது!

ஒன்று உறுதி... நீரா ராடியா மீது வழக்கு பாய்ந்தால் அவர் வெகுண்டு போவார். அதைத் தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தால், 2-ஜி-யின் பின்னால் மறைந்திருக்கும் பல காங்கிரஸ்ஜி-க்கள் தடுமாற ஆரம்பித்துவிடுவார்கள்!

நன்றி - ஜூனியர்விகடன்-10-04-2011

11 comments:

ரிஷி said...

நீரா ராடியா..
நீதான் பலே கேடியா??
அடித்தது பல கோடியா??
அம்பானிக்கு நீ அடிப்பொடியா?

ரிஷி said...

2ஜி என்றொரு அலைவரிசையுண்டு
மாண்புமிகுஜிக்களின் கைவரிசை அதிலுண்டு!
உலாவருவார் பல்வரிசை தெரிய..
பகட்டாய் பேசுவார் சொல்வரிசை விரிய..!

Anonymous said...

சார்... போன பதிவுலே ஒரு கட்டுல எத்தன கார்டு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிடீங்க...
திரும்ப திரும்ப தெரியாத விஷயத்த ஏன் எழுதறீங்க..!
//உலகக் கோப்பையை வாங்கித் தந்த டீமில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்பது வருத்தமான விஷயம்தான்.//
அஸ்வின் என்ன ஆப்ரிக்காவை சேர்ந்தவரா? அன்னைக்கு மேட்சுல அவர் ஆடல... ஆனா அவர் உலக கோப்பை வாங்கித்தந்த டீம்ல தான் இருந்தார்...
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...!
அன்புடன் நண்டு!

Muthukumara Rajan said...

if DMK lose in this election all scene will be changed.

Congress no need support from DMK in centre. Mulayamsingh yadav is there to support.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
நீரா ராடியா..
நீதான் பலே கேடியா??
அடித்தது பல கோடியா??
அம்பானிக்கு நீ அடிப்பொடியா?]]]

இப்படியெல்லாம் ஓப்பனா கேட்டா எப்படி ரிஷி..?

பாவம் அந்தம்மா.. யாரை மொதல்ல காப்பாத்துறதுன்னு யோசிச்சுக்கிட்டிருக்காம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

2-ஜி என்றொரு அலைவரிசையுண்டு.
மாண்புமிகுஜிக்களின் கைவரிசை அதிலுண்டு!
உலா வருவார் பல்வரிசை தெரிய..
பகட்டாய் பேசுவார் சொல்வரிசை விரிய..!]]]

அந்தச் சொல் வரிசை இப்போது அதைக் காட்டாமல் இறுக்கப் பூட்டப்பட்டிருக்கிறதாம்..! திறக்கப்படுமா? அல்லது தானாக திறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி..!

உண்மைத்தமிழன் said...

[[[nandu said...

சார்... போன பதிவுலே ஒரு கட்டுல எத்தன கார்டு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிடீங்க.
திரும்ப திரும்ப தெரியாத விஷயத்த ஏன் எழுதறீங்க..!]]]

எனக்குத் தெரிஞ்ச விஷயத்தைத்தான் நான் எழுதிக்கிட்டிருக்கேன். உங்களுக்குப் புரியாத விஷயத்தை நீங்க ஏன் திருப்பித் திருப்பிப் படிச்சுக்கிட்டிருக்கீங்கன்னுதான் எனக்குத் தெரியலை..!

[[[//உலகக் கோப்பையை வாங்கித் தந்த டீமில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்பது வருத்தமான விஷயம்தான்.//

அஸ்வின் என்ன ஆப்ரிக்காவை சேர்ந்தவரா? அன்னைக்கு மேட்சுல அவர் ஆடல. ஆனா அவர் உலக கோப்பை வாங்கித் தந்த டீம்லதான் இருந்தார். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...!
அன்புடன் நண்டு!]]]

ஆமாம்.. உண்மைதான்.. யார் இல்லை என்று சொன்னது..? இந்த மேட்டர் இங்கே எதுக்கு..? குழப்பமாயிட்டீங்களோ..?

உண்மைத்தமிழன் said...

[[[Thirumurugan MPK said...

Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this. Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

http://indiaagainstcorruption.org/citycontacts.php
http://www.facebook.com/IndiACor]]]

எழுத வேண்டிய விஷயம்தான்.. செய்துவிடுவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...
if DMK lose in this election all scene will be changed. Congress no need support from DMK in centre. Mulayamsingh yadav is there to support.]]]

ஜெயலலிதா கொள்ளை அடிக்கிறாரோ இல்லையோ அதனை அடுத்தத் தேர்தலில் பார்ப்போம்.

இப்போது மு.க.வுக்கும், ராசாவுக்கும் ஏதோ ஒன்று கிடைக்குமல்லவா..? அது போதும்..!

ராஜ நடராஜன் said...

இதில் கார்பரேட் பெரும் முதலைகள் தப்பித்து விடும்.

மாட்டிக்கொண்டது ராசாதான்.ஆமா இன்னும் எத்தனை நாளைக்கு திகார்ல களி தின்பாராம்?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
இதில் கார்பரேட் பெரும் முதலைகள் தப்பித்து விடும். மாட்டிக் கொண்டது ராசாதான்.ஆமா இன்னும் எத்தனை நாளைக்கு திகார்ல களி தின்பாராம்?]]]

இந்தத் தேர்தலில் தி.மு.க. வென்றால் முடிவுகள் அறிவித்தவுடன் ராசா மிக எளிதாக வெளியில் வந்துவிடுவார். மாறாக தி.மு.க. தேர்தலில் தோற்றுவிட்டால் ராசாவின் விடுதலை காங்கிரஸ் கட்சியின் கையில்தான் உள்ளது..!