சுஜாதா என்னும் கவிதா எங்கே போனாள்..?

19-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 6-ம் தேதி புதன்கிழமை, மதியவாக்கில் நடிகை சுஜாதா மரணம் என்ற செய்தி திரையுலகத்தில் பரவியபோது பெரும்பாலான திரையுலகப் புள்ளிகள் உச்சரித்த வார்த்தை ஒன்றுதான். ஆனால் அதனை நான் இங்கே குறிப்பிடவே முடியாது..!



நடிகை என்பவளுக்கு தனி இமேஜூம், தனி வாழ்க்கை முறையும், தனியான ஆசைகளும் இருந்து வந்து கொண்டிருக்கிறது என்பது பத்திரிகைகள் அவர்கள் மீது திணித்து வைத்திருக்கும் ஒரு பிம்பம்தான். ஆனால் குளத்தில் கல்லெறிந்து உருவாக்கும் அலைகளைப் போல அவர்களது வாழ்க்கையும் அலைக்கழிக்கிற வாழ்க்கைதான் என்பதை மட்டும் மீடியாக்கள் வெளிச்சம் போடுவதில்லை.

சுஜாதா என்ற இந்த நடிகையின் திரையுலக வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்திருந்த திரையுலகம், மறு பக்கத்தை கடைசிவரையில் பார்க்கவே முடியவில்லை. அப்படியொரு இரும்புக் கோட்டைக்குள் சிக்கிக் கொண்டிருந்த புள்ளிமானாக இருந்தவர் சுஜாதா..!




சினிமா பத்திரிகையாளர்களுக்குள் போட்டி என்று ஒன்று வைத்தால் அதில் முதலிடத்தில் சுஜாதாவிடம் யார் பேட்டி கண்டு வருவது என்கிற ஆப்ஷன்தான் முதலிடத்தில் இருக்கும். அந்த அளவுக்கு தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் தானே சிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டியவர் சுஜாதா..!

கடந்த 5 ஆண்டு காலமாக மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அவர் அலைந்திருந்தபோதிலும் அது பற்றிய விஷயங்கள்கூட மீடியாக்களுக்கு பரவாமல் பார்த்துக் கொண்டனர் அவரது குடும்பத்தினர்..!




அவருடைய நீண்ட நாள் மேக்கப்மேனான சுந்தரமூர்த்தியின் நட்பு மட்டுமே, அந்த வீட்டுக்கும் திரையுலகத்துக்கும் இருந்த ஒரேயொரு தொடர்பு என்கிறது கோடம்பாக்கம்..!

சுஜாதா தமிழில் அறிமுகமான அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதாவுக்கு மேக்கப் போட்டவர் சுந்தரமூர்த்தியின் அப்பாதான். அதன் பின்பு சுந்தரமூர்த்தி அத்தொழிலைக் கையில் எடுத்தபோது பாபாவரையிலும் ரஜினிக்கும், சுஜாதாவுக்கும் ஆஸ்தான மேக்கப்மேன் இவரே..! சுஜாதாவின் அஞ்சலியில் அவரது பெண் திவ்யாவின் கண்ணீருக்குப் பின்பு இந்த சுந்தரமூர்த்தியின் கதறல்தான் அதிகமாக இருந்தது..!




சுஜாதா மலையாள தேசத்தில் இருந்து இறக்குமதி ஆனவர். ஆனால் இலங்கையில் பிறந்தவர். அவர் 1952-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் இலங்கை நெல்லித்தீவில் பிறந்துள்ளார். இந்த வலைத்தளத்தில்(http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=113:2011-04-14-23-22-57&catid=26:2011-03-06-20-34-42&Itemid=48)  உறுதியான ஆதாரத்துடன் இந்தத் தகவல் எழுதப்பட்டுள்ளது. இவருடைய தந்தை மேனன், கேரளாவில் இருந்து இலங்கைக்கு விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றச் சென்றவர். நெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேனன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சுஜாதாவும் ஆரம்பக் கல்வியை அங்கேயே முடித்திருக்கிறார். 1966-ம் ஆண்டில்தான் கேரளாவுக்கே அவரது குடும்பம் திரும்பியிருக்கிறது..!

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி.வரை மட்டுமே படித்து முடித்த சுஜாதா தனது 16-வது வயதிலேயே மலையாள நாடகங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். இது அவரது குடும்பத்தினரின் தூண்டுதலினால்தான் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.




தமிழ்நாட்டை போலவே கேரளாவில் அப்போது நாடகக் கலை வளர்ந்திருந்த நேரத்தில் சுஜாதாவின் கண்ணை ஈர்க்கும் முக அழகும், இயல்பாகவே அவருக்கிருந்த நடிப்பும் அவரை நடிப்புத் துறையிலேயே கொண்டு வந்துவிட்டிருக்கிறது..!

போலீஸ் ஸ்டேஷன் என்ற நாடகம்தான் அவர் முதன் முதலில் நடித்த நாடகம் என்கிறார்கள். இந்த நாடகம் அப்போது தமிழகத்தில்கூட பிரபலமாகப் பேசப்பட்டதாம்.

இதற்கிடையில் 1968-ல் டூ கல்யாண் என்ற இந்திப் படத்தில் ஒரு சில காட்சிகளில் வரக்கூடிய அளவுக்குத் தலையைக் காட்டியிருக்கிறார் சுஜாதா..!

அதே 1968-ல் மலையாளத்தில் தபஷ்வனி என்கிற திரைப்படத்தில் ஜோஸ் பிரகாஷ் என்னும் இயக்குநர்தான் சுஜாதாவை மலையாளத் திரையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதன் பின்பு பல மலையாளப் படங்களில் சிற்சில வேடங்களிலும், குரூப் டான்ஸிலும் வந்து முகத்தைக்  காட்டியிருக்கிறார் சுஜாதா. 

1971-ம் ஆண்டு எர்ணாகுளம் ஜங்ஷன் என்னும் திரைப்படத்தில்தான் சுஜாதா என்ற தனித்த நடிகை மலையாளத் திரையுலகத்தினருக்குத் தெரிந்திருக்கிறது.  காரணம், இத்திரைப்படத்தில்தான் மலையாளத்தில் அப்போதைய காலக்கட்டத்தில் வேறு எந்த புதுமுக நடிகையும் துணிந்து நடிக்க முன் வராத அளவுக்கு டூ பீஸ் உடையில் சுஜாதா நடித்திருந்தது மலையாள திரையுலகத்துக்கே அதிர்ச்சி..!

இந்தத் திரைப்படத்தின் பெயரும், புகழும் இதே காரணத்துக்காகவே சுஜாதாவின் பெயரை கேரளா தாண்டி இங்கேயும் கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் அப்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸார் அறிமுகப்படுத்திய டூ பீஸ் உடை அழகிகள் பட்டியலில் இன்னொருவராக இவரை அறிமுகப்படுத்திவிடலாம் என்று நினைத்து கோடம்பாக்கத்துக்கு சுஜாதாவை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.




ஆனால் இங்கே அவர் எதிர்பார்த்தது என்னவோ கேரக்டர் ரோல்ஸ்.. மலையாளத்தில் தன்னுடன் நடித்திருந்த பத்ரகாளி படத்தின் ஹீரோயின் ராணிசந்திராவின் உதவியோடுதான் தமிழ்த் திரையுலகத்துக்குள் காலெடுத்து வைத்திருக்கிறார் சுஜாதா..!

1973-ல் அவள் ஒரு தொடர்கதை படத்திற்காக புதுமுகம் தேடிக் கொண்டிருந்த கே.பாலசந்தரிடம் வழக்கமான புதுமுகமாகத்தான் சுஜாதா அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார். நெடு நெடு என்ற உயரமும், அக்கா போன்ற தோற்றமும் கேரக்டருக்கு ஏற்றாற்போல் கிடைத்துவிட அவர்தான் அந்தக் கவிதா என்று முடிவு செய்துவிட்டார் கே.பி.




இந்த ஒரு படத்தின் வெற்றி அவருக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும், 1976-ல் வெளிவந்த அன்னக்கிளிதான் அவரை தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது..!

இளையராஜாவின் புதுமையான இசை.. கிராமந்தோறும் காதுகளில் கிசுகிசுக்கப்படும் செய்திகளின் தொகுப்பாக அன்னம் என்ற அந்த அபலையின் கதையை உரக்கச் சொன்ன அன்னக்கிளி, சுஜாதா என்றொரு பண்பட்ட நடிகையை தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அடையாளம் காட்டியது..

இடையில் மீண்டும் தன் தாய்வீட்டுப் பக்கம் கவனத்தைத் திருப்பினாலும் தமிழ் திரைப்பட உலகம் அவருக்குக் காட்டிய வரவேற்பினால் இங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது சுஜாதாவின் குடும்பம்.

திரையுலகில் வெற்றி பெற்ற நடிகைகளின் பின்புலத்திலெல்லாம் யாரோ ஒருவரின் ஆசையும், வெறியும் கலந்திருக்கும் என்பது கோடம்பாக்கத்து விதி. இது சுஜாதாவுக்கும் பொருந்தும். தன்னை மேலும், மேலும் நடிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க வேண்டி வழக்கமாக எல்லா நடிகைகளும் செய்த அதே தவறைத்தான் சுஜாதாவும் செய்தார்.

மவுண்ட்ரோட்டில் பழைய ராஜகுமாரி தியேட்டர் அருகில் குடியிருந்த சுஜாதாவின் வீட்டு மாடியில் ஒண்டுக் குடித்தனத்தில் தங்கியிருந்தவர் ஜெயகர் என்பவர். சுஜாதாவின் வருத்தங்களுக்கும், சோகங்களுக்கும் ஆறுதல் சொல்ல படியிறங்கியவர் சுஜாதாவின் மனதுக்குள்ளும் புகுந்துவிட்டார். வழக்கம்போல தனது வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ஜெயகரை திருமணம் செய்து கொண்டு தனது அடுத்தக் கட்ட வாழ்க்கையைத் துவக்கினார் சுஜாதா. இதுவரையில்தான் அவரது சினிமாவின் பொற்காலம் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.




இதுவெல்லாம் பிற்காலத்தில் நடக்கப் போகிறது என்பது தெரியாமலேயே இயக்குநர் சிகரத்தின் அவர்கள் படத்தில் 1976-ல் நடித்து முடித்தார் சுஜாதா. ஒரு பக்கம் தேளாகக் கொட்டிய கணவன்.. மறுபக்கம்  தன்னை விரும்பும் இரண்டு நல்ல நண்பர்கள் என்று கே.பி. காட்டிய அந்தத் திரைக்காவியத்தில் முதல் வரி  கதை, சுஜாதாவின் நிஜ வாழ்க்கையில் அப்படியே நிகழ்ந்துவிட்டது அவரது துரதிருஷ்டம்தான்..!

1977-ல் நடந்த அவரது திருமணத்திற்குப் பிறகும், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் அவரது திடீர் சினிமா பிரவேசங்களும், திடீர் தலைமறைவுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. பத்திரிகைகள் விரட்டிப் பிடித்துதான் அவரைப் பேச வேண்டிய கட்டாயம்..! எதையும் வெளிப்படையாகப் பேசும் சுஜாதாவுக்கு தனது கணவர் கட்டியிருந்த இரும்புக் கோட்டைக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம்..!




இன்றுவரையிலும் அவருடன் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் அவரது நிலைமை நன்கு தெரியும். அத்தனை பேரிடமும் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இதற்காக தான் இந்தத் திருமணப் பந்தத்தை மீறப் போவதி்ல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இதுதான் பலராலும் ஏற்க முடியாமல் போயிருந்தது.

சுஜாதாவின் இறப்புச் செய்தி கேட்டவுடன் அவருடன் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சொன்ன வார்த்தைகளை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை என்கிறார் அவருக்குத் தகவல் கொடுத்த சினிமா பத்திரிகையாளர்..!

இடையில் தனது நடிப்பு கேரியரில் எந்தப் பங்கமும் வைக்காமல் நடிப்பு வேட்டையைத் தொடர்ந்துதான் வந்திருக்கிறார் சுஜாதா.  அவர்கள் படத்தில் கே.பி.யின் இயக்குதல் பசிக்கு சுஜாதா நிறைய தீனி போட்டிருந்தாலும் சுஜாதாவுக்கே தன்னைப் பிடித்திருந்தது நூல்வேலியில்தான்..! இதையும்விட எனக்குப் பிடித்திருந்தது அவள் ஒரு தொடர்கதையின் நாயகி கவிதாதான்..!

இப்படியொரு சகோதரி வீட்டுக்கு வீடு இருக்கிறார்களே.. இவர்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை என்றெல்லாம் யோசிக்க வைத்தது இத்திரைப்படம். இதில் இவர் காட்டியிருந்த நடிப்பு நிச்சயம் ஒரு புதுமுகம் என்றே சொல்ல முடியவில்லை. வசன உச்சரிப்பில் சுஜாதா ஒரு ஸ்டைலிஸ்ட் என்றே சொல்ல வேண்டும்..!

“சம்பாத்தியத்துக்கு ஒரு தங்கச்சி.. சமைச்சுப் போட ஒரு அம்மா.. படுக்கைக்கு ஒரு பொண்டாட்டி.. த்தூ.. வெட்கங்கெட்ட ஜென்மம்..” என்று ஜெய்கணேஷை பார்த்து பொறுமித் தள்ளும் சுஜாதாவின் வசன உச்சரிப்பை கவனித்துக் கேட்டுப் பாருங்கள். நம்மையும் சேர்த்தே சொல்லியிருப்பார். அல்லது சொல்ல வைத்திருப்பார்..




இதே போன்றதுதான் அந்தமான் காதலி படத்தின் இறுதிக் காட்சி.. சிவாஜி எரிமலையை நோக்கி போய்க் கொண்டிருக்க தாங்க மாட்டாத அளவுக்கு பொறுமை காத்துவிட்டு பின்பு அதனையும் இழந்து.. “அவர்தாண்டா உங்கப்பா...” என்று வெடித்து சிதறுகின்ற காட்சியை எத்தனை முறை இலங்கை வானொலியில் கேட்டும் சலிக்கவில்லை.. படத்தை பார்க்காமலேயே குரலிலேயே தனது நடிப்பை செதுக்கியிருந்தார்..!

இதற்குப் பிறகு சுஜாதாவின் பெயரை ஊரெல்லாம் கொண்டு போய் சேர்த்தது விதி திரைப்படம்தான்.. தன்னை கெடுத்து, பிள்ளையையும் கொடுத்தது “இதோ இந்த டைகர் தயாநிதிதான்..” என்று கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்கும் ஜெய்சங்கரை பார்த்து கையை நீட்டிச் சொல்கின்ற அந்தக் காட்சி.. மறக்க முடியுமா..? அதிலும் அந்த நீதிமன்றக் காட்சிகளின்போது அவ்வப்போது, “டைகர் தயாநிதி..” என்று அவர் உச்சரிக்கும்போதெல்லாம் வரும் வெறித்தனம், அந்த கேரக்டராகவே அவர் மாறியிருந்ததைக் காட்டியது.




பட்டிதொட்டியெங்கும் விதி படத்தின் ஆடியோ கேஸட்டுகள் பட்டையைக் கிளப்பியபோது சுஜாதாவின் அனல் தெறித்த வசனக் காட்சிகளே படத்திற்கு மீண்டும், மீண்டும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு வந்தது..!




இதன் பின்பு ஹீரோயின்களாக இளையவர்களும், எதற்கும் துணிந்தவர்களுமாக அறிமுகமானவுடன் தன்னுடன் அறிமுகமான கமல், ரஜினிக்கே அம்மா வேடம் போடவும் சுஜாதா தயங்கவில்லை.

தமிழ்ச் சினிமா தவிர்த்து தெலுங்கு, கன்னட உலகத்திலும் சுஜாதாவின் நடிப்புலகம் விரிந்தது.. தெலுங்கில் நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சோபன்பாபு என்ற மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் ஆடி முடித்தார் சுஜாதா.. தமிழைவிட தெலுங்கில்தான் மிக அதிகப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சுஜாதா என்கிறார்கள் தெலுங்குக்காரர்கள்..! இதன் பின்பு இன்றுவரையிலும் தெலுங்கு ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் அம்மாவாக வேடம் போட்டு ஓய்ந்துவிட்டார்.

இதனால்தான் இவருடைய மரணத்திற்கு தமி்ழ்த் திரைப்படத் துறையின் வருத்தப்பட்டதைவிடவும், தெலுங்கு திரையுலகமும், ஆந்திராவும் அதிகமாகவே அஞ்சலி தெரிவித்தன.

நீலாங்கரை வீட்டில் முதல் நாளில் இருந்து மறுநாள் அவருடைய உடல் சவப்பெட்டியில் வைத்து கொண்டு செல்லப்படும்வரையிலும் இருந்தது தெலுங்கு சேனல்காரர்கள்தான். ஆந்திராவில் மிக அவசர செய்தியாகவே சுஜாதாவி்ன் மரணச் செய்தி அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.



“சுஜாதா மிக மிக ஒழுக்கமான பெண்மணி..” என்று கூறியிருக்கிறார் ராமாநாயுடு..! “நடிப்பு ஒன்றைத் தவிர சுஜாதாவுக்கு வேற ஒண்ணுமே தெரியாது. எப்படிப்பட்ட கஷ்டம் என்றாலும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார்..” என்று சொல்லியிருக்கிறார் நாகேஸ்வரராவ்..! ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியே சுஜாதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

தெலுங்கு சேனல்களில் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பல நடிகர், நடிகைகள் தங்களது சோகத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்..!  ஆனால், தமிழ்ச் சேனல்கள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்ததினாலும் நீலாங்கரைவரைக்கும் போய் படம் எடு்க்க வேண்டுமா என்கிற சோம்பேறித்தனத்தினாலும் ஒரேயொரு முறை கடமைக்கு வந்து எடுத்துக் கொண்டு போனதாகச் சொல்கிறார்கள். அதையும்கூட சரிவர காட்டவில்லை. ஆனால் தெலுங்கு சேனல்கள் அனைத்திலும் அத்தனை செய்தி நேரங்களிலும் குறைந்தபட்சம் 3 நிமிடங்களாவது சுஜாதாவுக்காக ஒதுக்கியிருந்தார்கள்..!




தெலுங்கில் அவருக்குக் கிடைத்த அமைதி.. பத்திரிகையாளர்களின் விரட்டுதல் இல்லாத தனிமை.. இது சுஜாதாவுக்கு மிகவும் பிடித்துப் போக கடைசி சில வருடங்களில் அவர் அதிகம் நடித்தது தெலுங்கு படங்கள்தான்.. இவர் கடைசியாக நடித்ததுகூட தெலுங்கில் நாகார்ஜூனாவின் படமான 2006-ல் வெளி வந்த ஸ்ரீராமதாசுதான். ஆனால் இதற்கு முன்பே 2004-ம் ஆண்டே வரலாறு என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து முடித்து தனது தமிழ்த் திரையுலக வரலாற்றை முடித்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா..!




தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி, மற்றும் ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றிருக்கும் சுஜாதாவை திரைப்பட விழாக்களில் பார்த்ததாக யாராவது சொல்லியிருந்தாலே அது மிகப் பெரிய விஷயம்..!

சில வருடங்களுக்கு முன்பாக பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் பொன்விழாவையொட்டி சென்னையில் ராடன் மீடியாஸ் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு ஜானகியை வாழ்த்த சுஜாதாவை அழைக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்..!



அந்தக் கூட்டத்தில் மிக ரத்தினச் சுருக்கமாய் தனது பேச்சை முடித்துக் கொண்டு மிக விரைவாக வெளியேறிய சுஜாதாவை பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது..! கடைசியாக சுஜாதா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் இதற்கு முன்பாகவும் ஒரு முறை அவர் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் தோன்றியிருந்தார். அது நடிகர் திலகம் சிவாஜியின் மரணத்தின்போது..

சிவாஜியின் உடல் தகனம் நடைபெற்ற நாளன்று காலையில் பாண்டிபஜார் அருகே இருந்து தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகைகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சிவாஜியின் வீடு நோக்கி நடந்து வந்தார்கள். அந்த ஊர்வலத்தில் முன் வரிசையில் மனோரமாவுடன் கைகோர்த்து தலையைக் குனிந்த நிலையிலேயே சுஜாதா வந்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் வீட்டு முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உடலுக்கு மாலை அணிவித்த கையோடு பட்டென்று சிவாஜியின் வீட்டுக்குள் சென்று பதுங்கிவிட்டார் சுஜாதா. அவரிடத்தில் இரங்கல் செய்தி கேட்பதற்காக அனைத்து சேனல்காரர்களும் சிவாஜியின் வீட்டைச் சுற்றிச் சுற்றி தேடியலைந்ததை நேரில் கண்டேன்..!

சில நடிகர், நடிகைகள் லாரியில் சிவாஜியின் உடலுக்குப் பின்னால் சென்றபோதாவது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர் வெளியில் வரவே இல்லை..!

“கண்ணிலே என்னவென்று கண்கள்தான் அறியும்..!

கையிலே ஈரம் உண்டு கண்களா அறியும்..?

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்..?”

- இப்படி அவள் ஒரு தொடர்கதையில் தனக்கான கேரக்டரில் பாடிய சுஜாதா, நிஜத்திலும் அவர் யார் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத சூழலையே உருவாக்கி வைத்திருந்தார்..! ஆனால் இது அத்தனைக்கும் பத்திரிகையாளர்கள் குற்றம் சொல்வது அவரது கணவரைத்தான்.

சுஜாதா நடிக்கின்றவரையிலும் அவரது கால்ஷீட்டை அவரது கணவர் ஜெயகர்தான் கவனித்துக் கொண்டார். ஜெயகரையே போனில் பிடிப்பது மகா கஷ்டம். சுஜாதாதான் நடிக்க வேண்டும் என்றாலே தயாரிப்பு நிர்வாகிகள் அலுத்துக் கொள்வது அவரை நினைத்துத்தான்..!




பத்திரிகைகளுக்கு பேட்டி. அனாவசியமாக அரட்டைகள் என்று எதற்கும் இடம் கொடுக்காமல் சுஜாதாவை அழைத்து வருவது.. கூட்டிச் செல்வதாக இருந்தவர் ஜெயகர். அவரை மீறி பத்திரிகையாளர்கள் நெருங்க முடியாமல் தவித்து பின்பு அதையே குற்றம்சாட்டி பத்திரிகைகளில் பகிரங்கமாக எழுதிய பின்புகூட சுஜாதாவே இதற்கு மறுப்பளிக்கக்கூட மறுத்துவிட்டார்.

மீறி சுஜாதாவைத் தேடி வீட்டிற்குச் சென்றவர்களைக்கூட ஜெயகரே வரவேற்று பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு “மேடம்.. இப்போ தூங்குறாங்க.. போன்ல பேசிட்டு வாங்க..” என்றோ, இல்லையெனில் ஏதாவது ஒரு பொய் சொல்லியோ வாசலிலேயே திருப்பியனுப்பிய கதை தமிழ்த் திரையுலகில் கி்ட்டத்தட்ட அத்தனை சினிமா பத்திரிகையாளர்களுக்கும் நேர்ந்திருக்கிறது..!

அப்படியிருந்தும் சிற்சில சமயங்களில் தேர்ந்தெடுத்த சில மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பேட்டியளித்திருந்த சுஜாதா தனது கணவர், குழந்தைகள் குடும்பம் பற்றி மட்டும் மூச்சுவிட்டதில்லை.




தற்போது அவருக்கு மாலை போடச் சென்ற சினிமா பிரபலங்கள் அவரது மகள் திவ்யாவை இத்தனை ஆண்டுகள் கழித்துதான் நேரில் பார்த்திருக்கிறார்கள். அத்தோடு கடந்தாண்டுதான் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறதாம். சஜீத் என்ற சுஜாதாவின் மகனையும் அன்றைக்குத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. மாலை போட்ட கையோடு பிரபலங்கள் திகைப்போடு திரும்பி வந்திருக்கிறார்கள்..!



உடல் நலக் குறைவால் மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டு கடந்த மாதத்தில் சுஜாதாவை பார்க்க விரும்பி நேரில் சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் வாசலில் இருக்கிறார் என்று தெரிந்து இறப்புக்கு முதல் நாள் எப்படியாவது பார்த்துவிடலாம் என்று கடும் முயற்சி செய்த சினிமாவின் மூத்த நிருபர்களுக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை..!




அவரது இறுதிக் காலத்திலாவது அவருடன் பணியாற்றியவர்களை பார்க்க அனுமதித்திருந்தால் அவர் கொஞ்சமாவது மனம் சந்தோஷப்பட்டிருப்பார் என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.. கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் என்ற நிலையில் 5 ஆண்டு காலமாக இருந்தவரை கடைசியில் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்பது கொடூரமான விஷயம்..!

அவருடைய இறப்பைக் கேள்விப்பட்டு வேகமாக விரைந்தோடிய சினிமா பத்திரிகையாளர்களுக்கு முதலிலேயே அனுமதி மறுக்கப்பட்டு, “வீட்டில் கரண்ட் இல்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்று பொய் சொல்லி வாசலிலேயே நிறுத்தியிருக்கிறார்கள்..! பின்பு ஒரு மணி நேரம் கழித்துதான் பத்திரிகையாளர்களையே அனுமதித்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்..! சுஜாதாவின் நெஞ்சார்ந்த அன்புக்கும், பண்புக்கும் முதல் பாத்திரமான சினிமா பத்திரிகையாளர்களின் நெஞ்சத்தை கீறியிருக்கிறது இந்தச் சம்பவம்.. ஆனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை..!

ஒரு முறை டயலாக்கை வாசித்துக் காண்பித்துவிட்டாலே போதும்.. அதனை உள்வாங்கிக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன், மிகச் சரியான டைமிங்கில் கதாபாத்திரங்களை நோக்கி கை காட்டிப் பேசும்  வித்தைக்காரரான சுஜாதாவுக்கு தனது திரையுலக வாழ்க்கையை தமிழ்த் திரையுலகத்தில் மிகச் சரியான விதத்தில் பதிந்துவைக்க முடியாமல் போனது நமது துரதிருஷ்டம்தான்..!




1979-ல் நூல்வேலியில் நடித்த பின்பு தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரத்தை பல ஆண்டுகளாக சந்திக்கக்கூட விரும்பாமல் ஒதுங்கியே இருந்ததன் காரணம்தான் என்ன என்று தெரியவில்லை..! பாவம் கே.பி.க்கும் இது தெரியவில்லை..! இறுதியில் இந்தக் கோலத்தில்தான் இவரை நான் பார்க்க வேண்டுமா என்கிற தனது ஆதங்கத்தை அவரது சிஷ்யப்பிள்ளை கமலஹாசனுடன் அந்த வீட்டிலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கே.பி..!

எனக்கு தமிழ்த் திரையுலகம் மீது ஒரு பிடிப்பையும், ஆர்வத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்திய கேரக்டர் அவள் ஒரு தொடர்கதையின் நாயகியான கவிதாதான். இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா பார்த்திருந்த அம்மாக்கள், அக்காக்களுக்கு ஆதர்ச நாயகி கவிதாதான்.. யாரிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்..!

கே.பி.யை பல்வேறு சந்திப்புகளிலும், பேட்டிகளிலும் அனைத்து பத்திரிகையாளர்களும் கேட்கின்ற கேள்விகளில், “அதுக்குப் பின்னாடி அந்தக் கவிதா என்ன ஸார் ஆனாங்க..? ஏன் அப்படியே அவங்களை நிறுத்திட்டீங்க..? அடுத்த பாகம் வருமா..?” என்ற கேள்வி கட்டாயம் இடம் பிடித்திருக்கும்..!

இன்றைக்கும் அதே கேள்விதான் எனக்குள்ளும் தோன்றுகிறது. அந்தக் கவிதா நிஜத்திலும் ஏன் இப்படியிருந்தார்..? ஏன் இப்படியே மறைந்தார்..? யார் சொல்வது..?

தகவல்கள மற்றும் புகைப்படங்கள் : பல்வேறு இணையத்தளங்கள்

65 comments:

Unknown said...

வருத்தமாக இருக்கிறது!!!

a said...

இரங்கல் செய்தியில் இவ்வளவு விசயங்களா..

துளசி கோபால் said...

வருந்துகின்றேன்:((((((

ஈஸ்வரி said...

சுஜாதாவின் வாழ்க்கையே போராட்டம்தான். அருமையான தொகுப்பு.

kalyani said...

verysad.

ராம்ஜி_யாஹூ said...

அற்புதமான பதிவு.
கோடானு கோடி நன்றிகள்.

tamil said...

வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் பல நடிகைகள் செய்த தவறைத்தான் அவரும் செய்திருக்கிறார்.காதல் திருமணம் செய்து கொண்டவர் பெற்றோர்,சகோதரருடன் உறவைப் பேணியிருக்கலாம்.
அல்லது தன் விலங்கினை உடைத்து வெளியேயிருக்கலாம்.
கொஞ்சம் தோண்டினால் ஜெயகர் யார், என்ன
தொழில் செய்தார் என்பதும் தெரியவரும்.அவரிடம் ஏமாந்தது சுஜாதா என்பதும் தெரியவ்ரும்.
இன்னொன்று தெரிகிறது - சினிமாவில் வெளிச்சத்தில் தெரியும் பலரின் நிஜவாழ்க்கை துயர்
மிகுந்தது, கசப்பான அனுபவங்களைக்
கொண்டது,இறுதியில் மிஞ்சுவது தனிமை/துயரம்.மலேசியா வாசுதேவனுக்கும்,சுஜாதாவிற்கும்
இது பொருந்தும்.திரையில் மின்னும் பலருக்கு சாதாரண மனிதர்களிடையே
உள்ள முன் ஜாக்கிரதையும்,தீர யோசித்து முடிவெடுக்கும் குணமும்
இல்லாமல் போவதால் அவர்கள் முடிவுகள் பல சமயங்களில் தவறாக
இருக்கின்றன.

சீனு said...

அவள் ஒரு தொடர்கதை படம் வெளியான பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு கவிதா என்று பெயர் வைத்தவர்களை கேளுங்கள், இந்த படத்தின் தாக்கம் கட்டாயம் இருக்கும். என் சொந்தக்காரப் பெண் ஒருவருக்கும் கவிதா என்ற பெயர் தான் வைத்தார்கள். காரணம் அவள் ஒரு தொடர்கதை.

//கடந்த 6-ம் தேதி புதன்கிழமை, மதியவாக்கில் நடிகை சுஜாதா மரணம் என்ற செய்தி திரையுலகத்தில் பரவியபோது பெரும்பாலான திரையுலகப் புள்ளிகள் உச்சரித்த வார்த்தை ஒன்றுதான். ஆனால் அதனை நான் இங்கே குறிப்பிடவே முடியாது..!//

இப்படி மொட்டையா போட்டதுக்கு போடாமலேயே இருந்திருக்கலாம். ஏனெனில், அவரவர் யூகங்கள் எப்படி வேண்டுமானாலும் (தவறாகவும்) இருக்கும்.

Feroz said...

சினிமாவை பொருத்தவரை எனக்கு அந்த அளவு பிடித்தம் கிடையாது. ஆனால் நடிகை சுஜாதா விசயத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சர்யப்படும் அளவு தகவல்கள். அறியத்தந்தமைக்கு நன்றி.

Feroz said...

சினிமாவை பொருத்தவரை எனக்கு அந்த அளவு பிடித்தம் கிடையாது. ஆனால் நடிகை சுஜாதா விசயத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சர்யப்படும் அளவு தகவல்கள். அறியத்தந்தமைக்கு நன்றி.

seethag said...

பத்திரிக்கையாளர்கள் அவரை நடத்தியவிதம் ,ஒருகமுக்கிய காரணமாக இருக்கும்.அவருக்கு திருமணம் ஆன புதிதில் அவர் அமேரிக்கா போகிறார் என்று கூறினார். ஆனால் அப்புறனம் செல்லவில்லை.எத்தனை பத்திரிக்கைகள் அதற்க்காக ஏளனம் செய்தன?பத்திரிக்கையாளர்களும் கழுககளைப்போல நடந்துகொண்டது மறக்க இயலாததுதானே?

pichaikaaran said...

கண் கலங்க வைத்த இடுகை . இயற்கையின் கோணல் புத்தி எனலாம் . அல்லது கடவுள் ஒரு சைக்கோ எனவும் நினைக்கலாம்

Ponchandar said...

அருமையான விவரமான தொகுப்பு... இத்தனை விஷயங்களை எப்படித்தான் தொகுத்தீர்களோ ??

சசிகுமார் said...

உங்கள் பதிவில் எவ்ளோ விஷயங்கள் சார் இவ்வளவு தகவல்களை சிரமப்பட்டு திரட்டி கொடுத்து இருக்கீங்க. நீங்கள் உழைத்து வீணாக வில்லை. பதிவு மிக அருமையாக உள்ளது. இதை படித்து முடிக்கவே எனக்கு 15 நிமிடத்திற்கு மேல் ஆனது. இவ்வளவு தகவல்களையும் திரட்டி கொடுக்க உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்திருக்கிறீர்கள் நன்றி சார்.

உலக சினிமா ரசிகன் said...

எழுபதுகளில் சுஜாதா தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய பாதிப்பு மிகவும் அழுத்தமானது.ஆழமானது.உங்கள் பதிவு கண்ணீர் மலர்களால் தொகுக்கப்பட்ட மலர் வளையம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||1979-ல் நூல்வேலியில் நடித்த பின்பு தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரத்தை பல ஆண்டுகளாக சந்திக்கக்கூட விரும்பாமல் ஒதுங்கியே இருந்ததன் காரணம்தான் என்ன என்று தெரியவில்லை..! பாவம் கே.பி.க்கும் இது தெரியவில்லை..! ||

ஒரு பெண்ணாக தமிழ்த் திரையுலகில் நடிகைகள் திரைமறைவில் படும் பாடுகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.இது நடிகர்கள் மூலம் மட்டுமல்ல,இயக்குநர்களின் மூலமும் வரலாம்..

ரோஜா ஏன் கடைசி வரை கமலஹாசனின் நாயகியாக நடிக்க வில்லை என்பதையும், நடிகையின் கதையின் சில அத்தியாயங்களையும் நீங்கள் படித்தால் லட்சுமண ரேகைக்கு அப்பாற்பட்டவர்களாக திரையுலக ஆண்கள் எவரும் இல்லை என்பது தெரியும்,ஒருவர் தவிர-சிவகுமார்...

சிலர் திறைமறைவு நடப்புகளையே வெளிச்சப் புகழுக்கும் வழியாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் நொந்து உள்ளுக்குள் மறுகுகிறார்கள்..

எது எவ்விதம் என்பதை நாம் எப்படி அறிய முடியும்?

ஸ்வாதி said...

நெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேனன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சுஜாதாவும் ஆரம்பக் கல்வியை அங்கேயே முடித்திருக்கிறார்.

@

மஹாஜனா கல்லூரி இருக்கும் இடத்தின் பெயர் தெல்லிப்பளை. இந்தக் கல்லூரியின் உதைபந்தாட்டக் குழு பெயர் போனது. ஒரு காலத்தில் இக் கல்லூரியின் அதிபராயிருந்தவர் எங்கு திறமையான ஆசிரியர்களை கண்டாலும் அவரை மஹாஜனக் கல்லூரியில் கடமையாற்ற வைத்ஹுவிடுவாராம்..அங்கு கல்வி பயிற்ருவித்த சிவசுப்பிரமணியம் (பார் மாஸ்டர்) அன்ற இரசாயனக்கல்வி ஆசிரியர் இலங்கையிலேயே புகழ் பெற்ற பிரபலமான இரசாயனவியல் ஆசிரியர். சமீபத்தில் தான் அவரும் காலமானார்.

ஸ்வாதி said...

தீபம் படம் இலங்கையில் திரையிட்ட போது சுஜாதாவின் புடவையழகில் மயங்காதவர் யாருமேயில்லையெனலாம். ஆன், பெண் என்ரு இருபாலாரையும் கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். அவள் ஒரு தொடர்கதையிலிருந்து அவரின் இரசிகை நான்...அவர் நடித்து என்னை பாதித்த படம் அவர்கள். அவருடைய மறைவை இன்னும் மனம் ஏற்றுக் கொள்ளவேயில்லை...அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டும்...

Ganpat said...

நல்ல தொகுப்பு..நன்றி சரவணன்.

ஆனால் இது பத்திரிக்கையாளர் சார்புள்ளதாய் இருக்கிறது.

உலகின் எழுதப்படாத விதி "சாதுக்களும்,எளியோர்களும்,கோழைகளும் அதிக இன்னலுக்கு ஆளாவார்கள்" என்பதுதான்!
இதையே ஆங்கிலத்தில் "Survival of the fittest" என்றும் சொல்லலாம்

இவர்களுக்கு(சாதுக்களுக்கும்,எளியோர்களுக்கும்,கோழைகளுக்கும்) ஆறுதல் அளிக்கவே,ஆன்மிகம் தோன்றியது

எனவே திரை வாழ்வில் கவிதா என்ற பாத்திரத்தில் வெளுத்துக்கட்டிய ஒரு பெண்மணி,நிஜ வாழ்க்கையில் அந்த பாத்திரத்தின் நூறில் ஒரு பங்கு தைரியத்தையும் ஆளுமையும் காட்டாமல் வாழ்ந்திருந்தால்,யார் என்ன செய்வது?

திருமணத்திற்கு பிறகு திரையுலகுடன் உள்ள தொடர்பை மொத்தமாக வெட்டிவிடவேண்டும் என்பது அவர்கள்(சுஜாதா&ஜெயகர்)திருமண ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய அம்சமாக கூட இருக்கலாம்! யார் கண்டது?

திருமணத்திற்கு பிறகு அவர் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார் என்பது ஒரு அனுமானம் தானே?இதுவும் பேட்டி கிடைக்காத பத்திரிக்கையாளர்கள் கிளப்பி விட்ட செய்திதானே?

எனக்கு என்னவோ,ஒரு அமைதியான home loving lady, தன் திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தினரிடம் ஐக்கியமாகி,தன் கடந்த கால வாழ்க்கையை மறந்து சந்தோஷமாக வாழ்ந்து,நோயுற்று மறைந்துள்ளார் என்றே தோன்றுகிறது

அவர் ஆன்மா சாந்தி அடைவதாக!

guru said...

கண் கலங்க வைத்த இடுகை.

தனிமரம் said...

யாரும் வலைப்பதிவு செய்யவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது என்னால் சிறுபதிவே இடுவதற்கு காலஅவகாசம் இருந்தது.நீங்கள் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் பரந்த தகவல்கூட .நன்றி உங்களின் விரிவான பதிவுக்கு சுஜாத்தா ஒரு சிறந்த நடிகை நிஜத்திலும் என்பதை இவ்வளவு துயரங்களையும் தாங்கி இருக்கிறாரே!
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்!

Thameez said...

The best homage to Actress Sujatha. Fantastic collection none can do this.

IKrishs said...

அவள் ஒரு தொடர் கதையில் - அப்பாவிடம் அசால்ட்டாக சொல்வாரே.. "நீங்க யாத்திரை யை தொடரலாம்!" செம நடிப்பு!
அமைதிபடை யில் சத்யராஜ் கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்![தாயம்மா என பெயர் வைத்து விட்டு அவர் கொடுக்கும் Expression !]
அம்மா கதாபாத்திரம் என்றாலும் அதிக முக்கியத்துவம் உள்ள வேடங்களே அவருக்கு அமைந்தது!
[செந்தமிழ் பாட்டு,நினைவிருக்கும் வரை,அவள் வருவாளா போன்றவை]

பாபா வரை நடித்த சக நடிகைக்கு ரஜினி ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்பதும் ஆச்சர்யமாக உள்ளது.. [மொக்கையான பாராட்டு விழாக்களுக்கெல்லாம் போகிறார்! ]

தமிழ் ஊடகங்கள் இவர் மறைவு குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தராதது அநியாயம்.[வடிவேலு வை கட்டி அழுது கொண்டிருந்தனர் அப்போது]
ஆனால் உங்களது இந்த பதிவு ஒரு மகத்தான,நிறைவான அஞ்சலி .. நன்றிகள் பல!

IKrishs said...

Ganpat said...

நல்ல தொகுப்பு..நன்றி சரவணன்.

ஆனால் இது பத்திரிக்கையாளர் சார்புள்ளதாய் இருக்கிறது.

எனவே திரை வாழ்வில் கவிதா என்ற பாத்திரத்தில் வெளுத்துக்கட்டிய ஒரு பெண்மணி,நிஜ வாழ்க்கையில் அந்த பாத்திரத்தின் நூறில் ஒரு பங்கு தைரியத்தையும் ஆளுமையும் காட்டாமல் வாழ்ந்திருந்தால்,யார் என்ன செய்வது?
திருமணத்திற்கு பிறகு அவர் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார் என்பது ஒரு அனுமானம் தானே?இதுவும் பேட்டி கிடைக்காத பத்திரிக்கையாளர்கள் கிளப்பி விட்ட செய்திதானே?

எனக்கு என்னவோ,ஒரு அமைதியான home loving lady, தன் திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தினரிடம் ஐக்கியமாகி,தன் கடந்த கால வாழ்க்கையை மறந்து சந்தோஷமாக வாழ்ந்து,நோயுற்று மறைந்துள்ளார் என்றே தோன்றுகிறது
////

எனக்கும் இது போல் தோன்றியது.. ஆனால் பிரபலம் ஆகிவிட்ட அவர்,வதந்திகளுக்கு (இருக்கும் பட்சத்தில்!)
முற்று புள்ளி வைக்க வாவது பத்திரிக்கையாளர்களை சந்தித்திருக்கலாம்!

ஸ்ரீராம். said...

சுஜாதா மறைந்த நாளிலிருந்தே உங்களிடமிருந்து பதிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஒரு திறமையான நடிகை மறைந்தது எங்கள் போன்றோருக்கு நிறையவே வருத்தம். பலரும் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல அவர் துன்ப வாழ்வு வாழ்ந்தார் என்பதற்கு சாட்சியம் ஏதும் கிடையாது என்று உங்கள் பதிவைப் படித்தால் தோன்றுகிறது. அபபடி நினைத்துக் கொள்வது மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. எது உண்மையோ பொய்யோ, தமிழ் திரையுலகம்
அல்லது தமிழ் தொலைக் காட்சிகள் அவர் மறைவை உரிய முறையில் வெளியிடவில்லை என்பது வருத்தம்தான்.

malar said...

அற்புதமான பதிவு......

kumar said...

பாராட்டுக்கள் தோழரே ! மிக அருமையான பதிவு.நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்.அந்த குரல் என்றும்,
யாராலும் மறக்க முடியாதது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீங்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சிரத்தையுடன் முழுமையாக அருமையாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே.

San said...

TT
Good compilation.Liked it.

Trails of a Traveler said...

My condolences.. Interesting article..

Ram

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

வருத்தமாக இருக்கிறது!!!]]]

-(((((((((((

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

இரங்கல் செய்தியில் இவ்வளவு விசயங்களா..?]]]

இன்னும் இருக்கிறது.. ஆனால் எழுதத்தான் மனம் வரவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

வருந்துகின்றேன்:((((((]]]

-((((((((

உண்மைத்தமிழன் said...

[[[ஈஸ்வரி said...
சுஜாதாவின் வாழ்க்கையே போராட்டம்தான். அருமையான தொகுப்பு.]]]

நன்றி ஈஸ்வரி...!

உண்மைத்தமிழன் said...

[[[kalyani said...

very sad.]]]

-((((((((((

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

அற்புதமான பதிவு.
கோடானு கோடி நன்றிகள்.]]]

நன்றி ராம்ஜி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[tamil said...

திரையில் மின்னும் பலருக்கு சாதாரண மனிதர்களிடையே உள்ள முன் ஜாக்கிரதையும், தீர யோசித்து முடிவெடுக்கும் குணமும்
இல்லாமல் போவதால் அவர்கள் முடிவுகள் பல சமயங்களில் தவறாக
இருக்கின்றன.]]]

உண்மைதான் தமிழ்.. அவசரத்தில் ஏதோ ஒரு கிளை கிடைத்தால்போதும் என்று பிடித்துவிடுகிறார்கள். பின்பு விட முடியாமல் தவிக்கிறார்கள். இதுதான் சுஜாதா விஷயத்திலும் நடந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

அவள் ஒரு தொடர்கதை படம் வெளியான பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு கவிதா என்று பெயர் வைத்தவர்களை கேளுங்கள், இந்த படத்தின் தாக்கம் கட்டாயம் இருக்கும். என் சொந்தக்காரப் பெண் ஒருவருக்கும் கவிதா என்ற பெயர்தான் வைத்தார்கள். காரணம் அவள் ஒரு தொடர்கதை.]]]

நிச்சயமாக இருக்கும்..!

//கடந்த 6-ம் தேதி புதன்கிழமை, மதியவாக்கில் நடிகை சுஜாதா மரணம் என்ற செய்தி திரையுலகத்தில் பரவியபோது பெரும்பாலான திரையுலகப் புள்ளிகள் உச்சரித்த வார்த்தை ஒன்றுதான். ஆனால் அதனை நான் இங்கே குறிப்பிடவே முடியாது..!//

இப்படி மொட்டையா போட்டதுக்கு போடாமலேயே இருந்திருக்கலாம். ஏனெனில், அவரவர் யூகங்கள் எப்படி வேண்டுமானாலும் (தவறாகவும்) இருக்கும்.]]]

சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Feroz said...

சினிமாவை பொருத்தவரை எனக்கு அந்த அளவு பிடித்தம் கிடையாது. ஆனால் நடிகை சுஜாதா விசயத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சர்யப்படும் அளவு தகவல்கள். அறியத் தந்தமைக்கு நன்றி.]]]

வருகைக்கு நன்றி பெரோஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[thiru said...

பத்திரிக்கையாளர்கள் அவரை நடத்தியவிதம், ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அவருக்கு திருமணம் ஆன புதிதில் அவர் அமேரிக்கா போகிறார் என்று கூறினார். ஆனால் அப்புறம் செல்லவில்லை. எத்தனை பத்திரிக்கைகள் அதற்காக ஏளனம் செய்தன? பத்திரிக்கையாளர்களும் கழுககளைப் போல நடந்து கொண்டது மறக்க இயலாததுதானே?]]]

நடிகர், நடிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்குமான உறவு அப்படிப்பட்டதில்லை. கோபம் இருந்தாலும் நெருங்கியவர்களிடம் உண்மையைச் சொல்லிவிடுவார்கள். அப்படிச் சொல்லப்பட்ட அவருடைய நண்பர்களிடமிருந்துதான் இந்த விஷயங்கள் திரையுலகில் பரவின.. இது 30 வருட காலமாக திரையுலகில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

கண் கலங்க வைத்த இடுகை. இயற்கையின் கோணல் புத்தி எனலாம். அல்லது கடவுள் ஒரு சைக்கோ எனவும் நினைக்கலாம்.]]]

-((((((((

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...
அருமையான விவரமான தொகுப்பு... இத்தனை விஷயங்களை எப்படித்தான் தொகுத்தீர்களோ ??]]]

திரையுலகில் அத்தனை பக்கங்களிலும் கண்கள் உண்டு நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...

உங்கள் பதிவில் எவ்ளோ விஷயங்கள் சார் இவ்வளவு தகவல்களை சிரமப்பட்டு திரட்டி கொடுத்து இருக்கீங்க. நீங்கள் உழைத்து வீணாகவில்லை. பதிவு மிக அருமையாக உள்ளது. இதை படித்து முடிக்கவே எனக்கு 15 நிமிடத்திற்கு மேல் ஆனது. இவ்வளவு தகவல்களையும் திரட்டி கொடுக்க உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்திருக்கிறீர்கள் நன்றி சார்.]]]

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி சசி..! இப்படியொரு பதிவு எழுத நேர்ந்தமைக்காக நான் வருந்துகிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[உலக சினிமா ரசிகன் said...

எழுபதுகளில் சுஜாதா தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய பாதிப்பு மிகவும் அழுத்தமானது. ஆழமானது. உங்கள் பதிவு கண்ணீர் மலர்களால் தொகுக்கப்பட்ட மலர் வளையம்.]]]

-((((((((((

உண்மைத்தமிழன் said...

[[[அறிவன்#11802717200764379909 said...

||1979-ல் நூல்வேலியில் நடித்த பின்பு தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரத்தை பல ஆண்டுகளாக சந்திக்கக்கூட விரும்பாமல் ஒதுங்கியே இருந்ததன் காரணம்தான் என்ன என்று தெரியவில்லை..! பாவம் கே.பி.க்கும் இது தெரியவில்லை..! ||

ஒரு பெண்ணாக தமிழ்த் திரையுலகில் நடிகைகள் திரைமறைவில் படும் பாடுகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இது நடிகர்கள் மூலம் மட்டுமல்ல, இயக்குநர்களின் மூலமும் வரலாம்..]]]

இல்லை அறிவன். கே.பி. அப்படிப்பட்டவர் அல்ல. பக்கா ஜென்டில்மேன்..! கே.பி. மட்டுமல்ல தன்னை வைத்து இயக்கிய எந்த இயக்குநரின் வீட்டு விசேஷங்களில்கூட கலந்து கொள்ள வராதவர்..!

[[[ரோஜா ஏன் கடைசி வரை கமலஹாசனின் நாயகியாக நடிக்க வில்லை என்பதையும், நடிகையின் கதையின் சில அத்தியாயங்களையும் நீங்கள் படித்தால் லட்சுமண ரேகைக்கு அப்பாற்பட்டவர்களாக திரையுலக ஆண்கள் எவரும் இல்லை என்பது தெரியும்,ஒருவர் தவிர-சிவகுமார்.]]]

நக்கீரன் கதையைச் சொல்கிறீர்களா..? சிரிக்கிறேன்..!

[[[சிலர் திறைமறைவு நடப்புகளையே வெளிச்சப் புகழுக்கும் வழியாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நொந்து உள்ளுக்குள் மறுகுகிறார்கள். எது எவ்விதம் என்பதை நாம் எப்படி அறிய முடியும்?]]]

சுஜாதாவின் வாழ்க்கையே போராட்டமாக இருந்தது என்பதுதான் திரையுலகில் பேசப்படும் உண்மை. இதில் பொய்யில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்வாதி said...

நெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேனன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சுஜாதாவும் ஆரம்பக் கல்வியை அங்கேயே முடித்திருக்கிறார்.

@

மஹாஜனா கல்லூரி இருக்கும் இடத்தின் பெயர் தெல்லிப்பளை. இந்தக் கல்லூரியின் உதைபந்தாட்டக் குழு பெயர் போனது. ஒரு காலத்தில் இக் கல்லூரியின் அதிபராயிருந்தவர் எங்கு திறமையான ஆசிரியர்களை கண்டாலும் அவரை மஹாஜனக் கல்லூரியில் கடமையாற்ற வைத்து விடுவாராம். அங்கு கல்வி பயிற்ருவித்த சிவசுப்பிரமணியம் (பார் மாஸ்டர்) அன்ற இரசாயனக் கல்வி ஆசிரியர் இலங்கையிலேயே புகழ் பெற்ற பிரபலமான இரசாயனவியல் ஆசிரியர். சமீபத்தில்தான் அவரும் காலமானார்.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸ்வாதி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்வாதி said...

தீபம் படம் இலங்கையில் திரையிட்டபோது சுஜாதாவின் புடவையழகில் மயங்காதவர் யாருமேயில்லையெனலாம். ஆன், பெண் என்ரு இருபாலாரையும் கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். அவள் ஒரு தொடர்கதையிலிருந்து அவரின் இரசிகை நான். அவர் நடித்து என்னை பாதித்த படம் அவர்கள். அவருடைய மறைவை இன்னும் மனம் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.]]]

-(((((((((((

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...

நல்ல தொகுப்பு. நன்றி சரவணன்.
ஆனால் இது பத்திரிக்கையாளர் சார்புள்ளதாய் இருக்கிறது.
உலகின் எழுதப்படாத விதி "சாதுக்களும்,எளியோர்களும்,கோழைகளும் அதிக இன்னலுக்கு ஆளாவார்கள்" என்பதுதான்! இதையே ஆங்கிலத்தில் "Survival of the fittest" என்றும் சொல்லலாம்.]]]

எங்களால் இப்படித்தான் எழுத முடியும் கண்பத்..!

உண்மைத்தமிழன் said...

[[[guru said...

கண் கலங்க வைத்த இடுகை.]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Nesan said...

யாரும் வலைப்பதிவு செய்யவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது என்னால் சிறுபதிவே இடுவதற்கு காலஅவகாசம் இருந்தது. நீங்கள் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் பரந்த தகவல்கூட. நன்றி உங்களின் விரிவான பதிவுக்கு சுஜாத்தா ஒரு சிறந்த நடிகை நிஜத்திலும் என்பதை இவ்வளவு துயரங்களையும் தாங்கி இருக்கிறாரே!
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்!]]]

- மிக்க நன்றி நேசன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thameez said...

The best homage to Actress Sujatha. Fantastic collection none can do this.]]]

-((((((((((

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

எனக்கும் இது போல் தோன்றியது.. ஆனால் பிரபலம் ஆகிவிட்ட அவர், வதந்திகளுக்கு (இருக்கும் பட்சத்தில்!) முற்று புள்ளி வைக்கவாவது பத்திரிக்கையாளர்களை சந்தித்திருக்கலாம்!]]]

இது வதந்தியாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

அவள் ஒரு தொடர் கதையில் - அப்பாவிடம் அசால்ட்டாக சொல்வாரே.. "நீங்க யாத்திரையை தொடரலாம்!" செம நடிப்பு!]]]

எப்போதும் ஒரு அலட்சியப் புன்னகை அவரிடமிருந்து வீசப்படுமே.. அதுதான் அழகு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

சுஜாதா மறைந்த நாளிலிருந்தே உங்களிடமிருந்து பதிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஒரு திறமையான நடிகை மறைந்தது எங்கள் போன்றோருக்கு நிறையவே வருத்தம். பலரும் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல அவர் துன்ப வாழ்வு வாழ்ந்தார் என்பதற்கு சாட்சியம் ஏதும் கிடையாது என்று உங்கள் பதிவைப் படித்தால் தோன்றுகிறது. அபபடி நினைத்துக் கொள்வது மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. எது உண்மையோ பொய்யோ, தமிழ் திரையுலகம்
அல்லது தமிழ் தொலைக் காட்சிகள் அவர் மறைவை உரிய முறையில் வெளியிடவில்லை என்பது வருத்தம்தான்.]]]

-((((((((

உண்மைத்தமிழன் said...

[[[malar said...

அற்புதமான பதிவு.]]]

மிக்க நன்றி மலர்..!

உண்மைத்தமிழன் said...

[[[basheer said...

பாராட்டுக்கள் தோழரே ! மிக அருமையான பதிவு. நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த குரல் என்றும்,
யாராலும் மறக்க முடியாதது.]]]

அது அவருக்கே உரித்தான குரல்..! சோகத்தையும், காதலையும், கம்பீரத்தையும் அது சொல்கின்றவிதமே தனி..!

உண்மைத்தமிழன் said...

[[[Rathnavel said...

அருமையான பதிவு. ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சிரத்தையுடன் முழுமையாக அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[San said...

TT

Good compilation. Liked it.]]]

நன்றி சேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

My condolences.. Interesting article..

Ram]]]

நன்றி ராம்..!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ஒரு மனம் திறந்த மென்மையான பதிவு.

என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...
ஒரு மனம் திறந்த மென்மையான பதிவு.

என்றென்றும் அன்புடன் ,
சுகி]]]

நன்றிகள் ஸார்..!

abeer ahmed said...

See who owns bdnationwidemortgage.com or any other website:
http://whois.domaintasks.com/bdnationwidemortgage.com

abeer ahmed said...

See who owns aisso.net or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com

Unknown said...

அருமை சார்.