ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!

09-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் 2-ஜி ஊழல் சம்பந்தப்​பட்ட 'ஏ-ஒன்’ குற்றவாளியான  முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையை எதிர்கொள்ளத் தயாராகி, நீதிமன்றத்தில் ஆஜரானார்!

கிட்டத்தட்ட 60 நாட்கள் சிறை​வாசத்தில் மனிதர் சற்று இளைத்து, முகம் வாடிக் காணப்பட்டார். சரியாக அயர்ன் செய்யப்படாத பேன்ட் சட்டை​யோடு நின்றார். மற்ற குற்றவாளி​களின் உறவினர்கள், நண்பர்கள் எல்​லாம் வந்திருக்க... ஆ.ராசாவின் மனைவி​யோ குழந்தைகளோ, நெருங்கிய   உறவினர்​களோகூட நீதிமன்றத்துக்கு வரவில்லை.

''என்னுடைய பாவத்தை நானே சுமக்கிறேன். நீங்கள் யாரும் வர வேண்டாம்!'' என்று  ஆ.ராசாவே கூறிவிட்டாராம். தி.மு.க-வுக்கு நெருக்கமான டெல்லி மூத்த வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசத்திடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் ஆ.ராசா.

வெறும் 127 பக்கங்கள்தான் குற்றப் ​பத்திரிகை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட 125 சாட்சிகளுக்கும் கிட்டத்​தட்ட 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 654 தஸ்தாவேஜுகளும் டிரங்க் பெட்டியில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு வந்து இறங்கிய​போது த்ரில் கூடியது.


சி.பி.ஐ. டி.ஐ.ஜி. எஸ்.கே.பல்சானியா மற்றும் விவேக் பிரியதர்சினி ஆகியோரை சந்தித்துக் கை குலுக்கிய ஆ.ராசா, ''நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பது வேறு. ஆனால், உங்களைப் பாராட்டுகிறேன். இவ்வளவு விஷயங்களை, குறுகிய காலத்தில் கொண்டு வந்தது பாராட்டுக்கு உரியது!'' என்றார். 

ஷாகித் பால்வாவும் தன் பங்குக்கு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினார். ''எங்களை மட்டும் கைது செய்து உள்ளே அனுப்பிவிட்டு, மற்ற நிறுவனங்களையும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் கௌர​வமாக நடத்துகிறீர்கள். இது அக்கிரமம்!'' என்றார் பால்வா!

இந்த ஊழலில் விழுங்கப்பட்ட பண விவகாரங்களை சி.பி.ஐ. கண்டுபிடித்ததோ... இல்லையோ, இந்த ஊழலின் ஆணி வேரைக் கண்டுபிடித்து, அதைக் குற்றப் பத்திரிகையாக நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. இந்த முதல் குற்றப் பத்திரிகையில் ஊழல் பற்றி சி.பி.ஐ. தெரிவித்துள்ளவை கொஞ்சம்தான்.

''மே 2007-ம் ஆண்டு தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றபோது, தன்னோடு சுற்றுச்சூழல் அமைச்​சகத்தில் பிரைவேட் செக்ரெட்டரியாக இருந்த ஆர்.கே.சந்தோலியா, கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்த சித்தார்த்த பெஹுரா இருவரையும் தன் அமைச்சகத்துக்கு அழைத்து வந்து, செயலராக ஆக்கினார். திட்டமிட்டுத் தனக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து சதித் திட்டம் தீட்டினார்.

அதேபோல, ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், மற்ற குற்றவாளிகளான டிபி ரியாலிட்டி ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் சஞ்சய் சந்திரா எல்லோரும் அவருக்குப் பழக்கமானார்கள்.

இந்தத் தொழில் அதிபர்களின் பல ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஆ.ராசா அப்போதே அனுமதி வழங்கி உள்ளார். இவர் அமைச்சரானவுடன் முதல் காரியமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும், யுனிடெக் நிறுவனத்துக்கும், ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்தைக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தார்!

ஸ்வான் டெலிகாம் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு மனு செய்து இருந்தது. யுனிடெக் நிறுவனம் விதவிதமான பெயர்களில் எட்டு நிறுவனங்களைத் தயாராக வைத்திருந்தது.

1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றின் (என்.டி.பி.99) அடிப்​படையில் டிராய் அடிக்கடி வலியுறுத்திய விஷயம், 'ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்குப் போக, ஸ்பெக்ட்ரம் மீதம் இருந்தால்தான்... புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கவேண்டும்’ என்பது. ஆனால், ஆ.ராசா இந்த ஸ்பெக்ட்ரம் இருப்பை அறிந்து  கொள்ளாமலே புதிய உரிமங்களை அளிக்கத் தொடங்கினார்.

புதிய உரிமங்களைப் பெறும் விண்ணப்பங்களை அளிக்கும் தேதியை அக்டோபர் 1 என்று அறிவித்துவிட்டு, பின்னர் 'செப்டம்பர் 24 வரை அளிக்கப்பட்டவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்’ என்று அறிவித்தார். இந்த மாற்றம் குறித்து சட்ட அமைச்சகத்துக்கு 2007 அக்டோபரில் தகவல் கொடுத்தார்.

சட்ட அமைச்சகம், 'இது அமைச்சரவைக் குழுவில் வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியும், அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பாமல், தன் முடிவில் ராசா குறியாக இருந்தார். அதோடு, 'அப்படி அனுப்புவது தேவை இல்லாதது’ என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார்!

02.11.2007-ல், 'ஸ்பெக்ட்ரம் போதுமானதாக இல்லாத நிலையில் ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் இதற்குரிய ஒதுக்கீடுகளை கவனமாகவும் வெளிப்படையாகவும் செய்ய வேண்டும்’ என்று பதில் எழுதினார் பிரதமர்.

அந்தக் கடிதத்துக்கு, அன்று இரவே சந்தோலியாவை வைத்துக்கொண்டு பதில் எழுதிய ஆ.ராசா, 'ஒரு சிறு விதிமுறைகூட மீறாமல் தொலைத் தொடர்பு துறை வெளிப்படையாக இந்த உரிமங்களை வழங்குகிறது’ என்று தெரிவித்தார். ஆனால், நடந்தவையோ வேறு!

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை தரும் கொள்கையிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. 'முன்பு இருந்த அமைச்சர்கள் பின்பற்றியதைத்தான் பின் ​தொடர்ந்​தேன்’ என்று கூறினார் ஆ.ராசா. ஆனால், முதலில் விண்ணப்பித்தவர்கள் என்கிற முறையை மாற்றி, 'உரிமக் கட்டணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை’ என்று ஆ.ராசா மாற்றினார். கைப்பற்றப்பட்ட ஃபைல்கள் மூலம் இது தெரிய வருகிறது. இதில்தான் சொலிசிட்டர் ஜெனர​லையும் ஆ.ராசா ஏமாற்றியுள்ளார். இதில் ஆ.ராசாவின் கூட்டாளி அதிகாரிகளான ஆர்.கே.சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெஹுரா ஆகி​யோர் கூட்டுச் சதிகள் புரிந்துள்​ளனர்.


முதலில் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற முறை இருந்​திருந்​தால், சம்பந்தப்பட்ட   நிறுவனத்​​துக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்​பட்டவுடன் ஏழு   நாட்​களுக்குள் விண்ணப்பதாரர்கள் தொலைத் தொடர்புத் துறையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன் பின்னர் 15 நாட்களில் நுழைவுக் கட்டணத் தொகையை வங்கி கியாரன்ட்டிகள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட்டாக செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொன்றும் படிப்படியாக நடந்தால், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்கள் தகுதி இழந்துவிடும் என்பதால், அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர்! 

தங்களுக்கு வேண்டிய இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரகசியத் தகவல்களைக் கொடுத்தனர். அதாவது, 'யார் முதலில் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் அனுமதி’ என்கிற தகவல், அறிவிப்பு வருவதற்கு முன்கூட்டியே இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.

இதன்படி இவர்கள் வங்கி கியாரன்ட்டி, டிமாண்ட் டிராஃப்ட் எல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே எடுத்துத் தயாராக இருந்தனர். இந்த அறிவிப்பு, 2008 ஜனவரி 10-ம் தேதி பிற்பகல் 1.47-க்கு பத்திரிகை செய்தி, வெப்சைட் மூலமாக வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் 3.30 மணிக்கு அனுமதிக் கடிதம் விநியோகிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்படுகிறது.

இதன்படி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அவகாசம் மற்ற கம்பெனிகளையெல்லாம் திணறடித்துவிட... ஸ்வான் மற்றும் யுனிடெக்கின் எட்டு நிறுவனங்கள் இந்த வங்கி கியாரன்ட்டிகளைக் கொடுத்தன. அனுமதிக் கடிதங்களையும் முதலில் பெற்றுச் சென்றனர்.

இந்த இரு நிறுவனங்கள் உட்பட 120 நிறுவனங்கள் கடிதங்களைப் பெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியே தள்ளப்பட்டன. இதனால், முதலில் வருவோர்க்கு முதல் முன்னுரிமை விவகாரத்திலேயே தில்லுமுல்லு நடந்து உள்ளது!'' என்று அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் குற்றப் பத்திரிகையில்!

இப்படி ஆதாரங்களோடு பல விஷயங்களையும் சொல்லி இருக்கும் சி.பி.ஐ., அடுத்து ஏப்ரல் 25-ல் வைக்கப் போகும் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இன்னும் பல அணுகுண்டுகள் வெடிக்கும்!

நன்றி : ஜூனியர்விகடன்  - 13-04-2011

20 comments:

ம.தி.சுதா said...

hot rice..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

ம.தி.சுதா said...

எப்பங்க இந்த லெக்சன் முடியும் பலரது வண்டவாளம் பார்க்க காத்திருக்கேன்...

ராஜ நடராஜன் said...

இதனை முன்பே படித்த மாதிரி தெரியுதே!உங்களை முந்திக்கொண்டது யார்:)

Muthukumara Rajan said...

ராஜாவின் பெயருக்கு முன்னால் மானமிகு பட்டம் போடாதது உங்கள் பார்ப்பன பாசிச பற்று தெரிகிறது

- கலைஞர் பதில் இதுதான்

Unknown said...

பயங்கரமா எழுதியிருக்கீங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

Unknown said...

குற்றப் பத்திரிக்கை அளித்துவிட்டால் மட்டும் குற்றாவாளி என்று ஆகிவிடுமா?-கொலிஞர்..

Sundar said...

ஒரு கேள்வி... லோக்பால் நல்ல விஷயம்தான். இப்போதைய தலைவர்களின் காலத்திற்க்குப்பிறகு, அடுத்துவரும் உறுப்பினர்களை, இந்த அரசியல் வியாதிகள் விலைக்கு வாங்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அல்லது எனக்கு இந்த லோக்பால், அதன் அமைப்பு, அதன் உறுப்பினர் நியமனம் சரியாக புரியவில்லையா? கொஞ்சம் எனக்காக இதை விளக்கமுடியுமா?

காவேரிகணேஷ் said...

அண்ணே,
ஜீ.வியின் இந்த வாரம் தேர்தல் ரிசல்ட் 2011 , தொகுதிவாரியாக அதை எடுத்து போடவும்.

உண்மைத்தமிழன் said...

[[[♔ம.தி.சுதா♔ said...

hot rice..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா]]]

ஓட்டுப் போடும்போது இதையெல்லாம் ஞாபகத்துல வைச்சுக்குங்க பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[♔ம.தி.சுதா♔ said...
எப்பங்க இந்த லெக்சன் முடியும்? பலரது வண்டவாளம் பார்க்க காத்திருக்கேன்.]]]

மே 14-ல் புதிய முதல்வர் பொறுப்பேற்பார். அன்றிலிருந்தே நீங்கள் பலரது உண்மை முகத்தை கண்டறியலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

இதனை முன்பே படித்த மாதிரி தெரியுதே! உங்களை முந்திக் கொண்டது யார்:)]]]

முன்பே அவுட்லுக்கில் வந்த தகவல்தான். நானும் அதனை எடுத்துப் போட்டிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...

ராஜாவின் பெயருக்கு முன்னால் மானமிகு பட்டம் போடாதது உங்கள் பார்ப்பன பாசிச பற்று தெரிகிறது

- கலைஞர் பதில் இதுதான்]]]

ஹா.. ஹா.. சொன்னாலும் சொல்வார் முத்துக்குமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[meere said...

பயங்கரமா எழுதியிருக்கீங்க.]]]

நான் எழுதலீங்க.. ஜூனியர்விகடன்ல எழுதியிருக்காங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.]]]

தேர்தலில் தி.மு.க. ஜெயித்தால் மிக எளிதாக சிறையில் இருந்து வெளியேறிவிடுவார் ராசா..

மாறாக தி.மு.க. தோற்றால் கஷ்டம்தான். தி.மு.க.வைச் சேர்ந்த இன்னும் சிலர் உள்ளே போக வேண்டியிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
குற்றப் பத்திரிக்கை அளித்துவிட்டால் மட்டும் குற்றாவாளி என்று ஆகி விடுமா?-கொலிஞர்..]]]

இதே கருத்து ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா..?

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

ஒரு கேள்வி... லோக்பால் நல்ல விஷயம்தான். இப்போதைய தலைவர்களின் காலத்திற்க்குப் பிறகு, அடுத்து வரும் உறுப்பினர்களை, இந்த அரசியல்வியாதிகள் விலைக்கு வாங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அல்லது எனக்கு இந்த லோக்பால், அதன் அமைப்பு, அதன் உறுப்பினர் நியமனம் சரியாக புரியவில்லையா? கொஞ்சம் எனக்காக இதை விளக்க முடியுமா?]]]

இதன் உறுப்பினர்களாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளைத்தான் நியமிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்..!

3 பேரை நியமித்தால்கூட அதில் ஒருவரை விலைக்கு வாங்கிவிடக் கூடும் அபாயம் உண்டுதான்.. அரசியல்வியாதிகள் எதையும் செய்வார்கள்..!

ஆனாலும் இதையெல்லாம் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[காவேரிகணேஷ் said...

அண்ணே, ஜீ.வியின் இந்த வாரம் தேர்தல் ரிசல்ட் 2011, தொகுதிவாரியாக அதை எடுத்து போடவும்.]]]

போட்டிருவோம்..!

Sundar said...

முன்னாள் நீதிபதிகள்? போங்கண்ணே, சிரிப்பு மூட்டாதீங்க! இவங்கதானே, ஏற்கனவே ஏகப்பட்ட விசாரணைக்கமிஷன்களின் தலைவர்களா இருக்காங்க! நான் இந்த லோக்பாலை குறைசொல்லவில்லை. இது நிச்சயம் ஒரு பெரிய, தேவையான மாற்றம்தான். ஆனாலும்... புறயோடிப்போயிருக்கும், இந்த அரசியல் வியாதிகளை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது! இவர்கள் எதையாவது ஒழுங்காக செய்யவிடுவார்களா?

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

முன்னாள் நீதிபதிகள்? போங்கண்ணே, சிரிப்பு மூட்டாதீங்க! இவங்கதானே, ஏற்கனவே ஏகப்பட்ட விசாரணைக் கமிஷன்களின் தலைவர்களா இருக்காங்க! நான் இந்த லோக்பாலை குறை சொல்லவில்லை. இது நிச்சயம் ஒரு பெரிய, தேவையான மாற்றம்தான். ஆனாலும் புறயோடிப் போயிருக்கும், இந்த அரசியல் வியாதிகளை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது! இவர்கள் எதையாவது ஒழுங்காக செய்ய விடுவார்களா?]]]

விட மாட்டார்கள்தான். ஆனாலும் அதற்காக நாம் போராடாமல் இருக்க முடியுமா..? சொல்லுங்கள். இப்போது ஹசாரேயின் இந்தப் போராட்டத்திற்குப் பின்புதானே ஆளும் வர்க்கம் அசைந்து கொடுத்திருக்கிறது..!?