2-ஜி நடந்து முடிந்த ஊழல்! 4-ஜி முற்றுப் பெறாத ஊழல்!!

13-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் நடைபெற்றுள்ள எஸ் பாண்ட் ஊழல் பற்றி இந்த வார ஜூனியர் விகடனில் வந்திருக்கும் கட்டுரை இது..!

ஒருவேளை, முதல் ஊழலை முடிந்த வரையில் அமுக்கிப் போடவே இரண்டாவது ஊழல் லீக்-அவுட் செய்யப்பட்டு உள்ளதோ... என்னவோ!    2-ஜி-யை 'ஜன்பத் ஆதரவு பெற்ற ஊழல்’ என்றால், 4-ஜி எஸ்-பாண்ட் ஊழலை 'ரேஸ்கோர்ஸ் ஆதரவு பெற்ற ஊழல்’ என்று சொல்லலாம். ஜன்பத் என்பது சோனியாவைக் குறிக்கும்; ரேஸ் கோர்ஸ் என்பது பிரதமர் மன்மோகன்சிங்கைக் குறிக்கும்!


இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 150 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எஸ் பாண்ட் அலைக்கற்றை என்று பெயர். இந்த அலைக்கற்றையில்தான் முன்பு தூர்தர்ஷன் போன்ற சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. பின்னர், இந்த எஸ் பாண்ட்டில் இருந்து, க்யூ பாண்ட்டுக்கு மாறிக் கொண்டனர். இதில் இருந்துதான் இப்போது சன், டாடா, ஏர்டெல் என்று பல சேனல்கள் டி.டி.ஹெச். ஒளிபரப்பை நடத்துகின்றன. காலியாக இருந்த எஸ் பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டது. இதில்தான் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது.

தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியே இந்த முறைகேட்டின் மையப் புள்ளி. இஸ்ரோவைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜி.சந்திரசேகர் ஓய்வு பெற்றும், இன்னும் சிலர் கட்டாய ஓய்விலும் வெளியேறி இந்த நிறுவனத்தைத் தொடங்கினர்.  இவர்கள் இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தங்கள் வசம் கொண்டுவரும் முயற்சிக்கு வித்திட்டனர்.

12 வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் தரப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் தன்னுடைய வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, 12 வருட காலத்துக்குப் பின்னரும் இதைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

2-ஜி விவகாரத்தில் நாடே கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 4-ஜி விவகாரம் ஒப்பந்தமும் வெளியானதைக் கண்டு பிரதமர் அலுவலகத்துக்கு பயங்கர அதிர்ச்சி. 'இந்த விவகாரம் பிரதமருக்குத் தெரிந்து நடந்ததா? அல்லது பிரதமரை ஏமாற்றிவிட்டு அவரைச் சுற்றி இருக்கும் 'லாபி’ அலைக்கற்றையை முழுங்கியதா?’ என்று பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும் இப்போது பதிலைத் தேடுகின்றன. 

மத்திய அரசாங்கத்தின் 'சி.இ.ஓ.’ என்று அழைக்கப்படுகின்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தில், எந்த அளவுக்கு ஓட்டைகள் இருக்கின்றன என்பதற்கு இந்த விவகாரம் சரியான உதாரணம்.


இந்திய அரசிடம் இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் அணுசக்தியை அடுத்து மிக முக்கிய விவகாரம் விண்வெளி. இந்த விண்வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஒரு பிரதமர் இருந்தால், அது நாட்டின் பாதுகாப்பு பற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை என்றே அர்த்தம்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து மன்மோகன்சிங் பிரதமரான பின்னர், இந்த தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி 2005 ஜனவரி 28-ல் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டது. அந்த ஒப்பந்தம், பிரதமருக்கும், ஏன் மத்திய அமைச்சரவைக்கும் சரியாக விளக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு செயற்கைக்​கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக வேண்டும். இதைத்தான் தெரியாது என்கிறது பிரதமரது அலுவலகம்.

சாதாரணமாக ஒரு செயற்கைக்கோள் தயாரிக்க நூற்றுக்கணக்கான கோடிகள் செலவாகும். சம்பந்தப்​பட்ட அமைச்சருக்கோ, பிரதமருக்கோ தெரியாமல் இந்த செயற்கைக்கோள் திட்டம் தொடங்கப்படாது. ஆனால், பிரதமருக்குத் தெரியாது என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களிடம் ஒப்புக் கொண்டார். அப்படி​யானால், பிரதமருக்குத் தெரியாமல் மறைத்தவர்கள் யார்?


பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் சரியாகத் தெரிவிக்கப்படாத இந்த செயற்கைக்கோள்களுக்கு ஆகும் செலவு 2,000 கோடி. இந்த அமைச்சகத்தின் முக்கியத்துவம் கருதி இதற்குப் பிரதமர்தான் கேபினெட் அமைச்சர். அப்போது பிருதிவிராஜ் சௌகான் இணை அமைச்சராக இருந்தார்.

2-ஜி-யில் சிக்கிக் கொண்ட சில தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், கடந்த ஆண்டே இந்த விவகாரத்தை வெளியே லீக் செய்தார்கள். சட்ட அமைச்சகம், ''மற்ற போலீஸ் துறைக்கும் ராணுவத்துக்குமே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பற்றாக்குறையாக உள்ள நிலையில், மல்டி மீடியாவுக்கு ஒதுக்கத் தேவையில்லை!'' என்று அறிவுரை கூறியது.

2005-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டு, எல்லா பணிகளும் முன்னோட்ட நடவடிக்கைகளும் முடிக்கப்பட்ட பின்னர், 2010 ஜூலை மாதம்தான் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனின் பரிசீலனைக்கு இந்த ஃபைல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

2005-ல் தேவாஸ் நிறுவனத்துக்காகத் தயாரிக்கப்பட இருந்த செயற்கைக்கோளுக்கு அனுமதி கேட்டு, கேபினெட்டுக்கு இஸ்ரோ ஃபைல் அனுப்பும்போது, சட்டப் பரிசீலனை செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. பின்னர் தேவாஸுக்கு முன் கட்டணத்தைச் செலுத்தியபோது பரிசீலனை செய்யப்பட்டதா? அப்போதும் இல்லை.

இவர்களுக்குப் பயம் வந்ததே ஸ்பெக்ட்ரம் 2-ஜி விவகாரம் வெடித்து... சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்த பிறகுதான். அதன் பிறகும்கூட தடுப்பு நடவடிக்கையில் இறங்காமல், மறைக்கும் காரியங்களில்தான் இறங்கினர் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள்.

கடந்த 7-ம் தேதி, பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததுமே லைசென்ஸ் ரத்து என்று அறிவித்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்​பட்டார்கள்!
 
தவறு என்று தெரிந்தும், இதுநாள் வரை ஏன் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை? காரணம், தேவாஸ் நிறுவனம் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்தை வைத்து முதலீடுகளைப் பெற்றுள்ளதோடு இந்தியன் ரயில்வேக்கும், இன்டர்நெட் சேவைகளை வழங்க சில முன்னோட்டங்களையும் செய்து காட்டி வருகிறது. இதோடு, இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸுக்கும், தேவாஸுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அதற்குக் கோடிக்கான தொகையை ஆன்ட்ரிக்ஸ் கொடுக்க வேண்டியது வருமாம்.

முறைகேடான 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களையே ரத்து செய்ய முடியாது என்று சொல்லி வருவது மாதிரி இதிலும் சிக்கல்கள் உண்டு. ஆக, ஆ.ராசாவுக்கு இணையான சிக்கல்களில் மன்மோகன்சிங் இப்போது மாட்டிக்கொண்டு இருக்கிறார்.


இரண்டு செயற்கைக் கோள்களையும், அதில் இருந்து அலைவரிசைகளை பகிர்ந்தளிக்கும் 10 டிரான்ஸ்​பாண்டர்களையும், தாரை வார்க்கும் விவகாரத்துக்கு இஸ்ரோவின் தலைவராக இருந்த மாதவன் நாயர், அப்போது பிரதமரின் முக்கியச் செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் ஆகிய இருவர் மட்டுமே பொறுப்பா? அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிய மனிதர்கள் யார் யார்? இதெல்லாம் அடுத்த கட்ட விசாரணைகளில் தெரியவரும். பிரதமரின் இன்றைய செயலாளர் சந்திரசேகருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது என்கிறார்கள்.

தற்போது, 'பி.கே.சதுர்வேதி, ரோடாம் நரசிம்மா ஆகிய இரு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பிரதமர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த தேசம் இன்னும் எதற்கெல்லாம் தலை குனிய வேண்டி இருக்கிறதோ..?

நன்றி : ஜூனியர் விகடன் - 16-02-2011

22 comments:

ஜோதிஜி said...

ஆகா நான் தான் முதல் ஆளா?

Ashif said...

Nalla padivu

N said...

Whatever you say, We will vote only for DMK and Congress!!!

Sankar Gurusamy said...

It appears no body is above or without corruption. And Politicians are silent partners in all the Scandals. They have not even spared the Scientists for this matter. GOD Save our Country..

http://anubhudhi.blogspot.com/

Indian Share Market said...

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு 'மேதாவி' விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் போது, நம் நிஜ விஞ்ஞானிகள் 'விஞ்ஞான ரீதியில்' ஊழல் செய்வதில் என்ன அதிசயம்!

ரிஷி said...

ஆதர்ஷ் சொசைட்டியின் ஊழல் வெளிவந்தது. முறைகேடாகக் கட்டப்பட்ட 31 மாடி கட்டிடத்தையும் இடித்து தரைமட்டமாக்கச் சொல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சரே சொல்லிவிட்டார்!! அவ்வளவுதான் அது முடிந்தது. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கப் போவதில்லை.

அடுத்ததாக, இந்த 4G சம்பந்தப்பட்ட பிரச்சினை. திடீரென பிரதமரிடமிருந்தே கூட அறிவிப்பு வெளியாகலாம். சம்பந்தபட்ட இரண்டு செயற்கைக்கோள்களையும் உடைத்து தரைமட்டமாக்கி விடுங்கள். அவ்வளவுதான் பிரச்சினை முடிந்தது! எப்பேர்ப்பட்ட எளிமையான தீர்வுகள்!! வாழ்க பாரதம்!

ரிஷி said...

ஒரு விவசாயி பாடுபட்டு வேளாண்மை செஞ்சு, கமிஷன் கடைக்கு கொண்டு வந்து கொட்டுவான் வெங்காய மூடைகளை! மூட்டைக்கு 60 கிலோ கணக்கு. கிலோ ஒன்னுக்கு 10ரூ வீதம் 600ரூ x 10 மூடை = 6000ரூ வாங்கிட்டுப் போவான். 5000 முதல் போட்டு ஆறுமாசம் பாத்த விவசாயத்துக்கு 1000 ரூ லாபம்!

கமிஷன் கடைக்காரன் சில்லறை வியாபாரிகளுக்கு மூட்டைக்கு ஒன்னுக்கு 100ரூ லாபம் வச்சு ரெண்டே நாள்ல அந்த பத்து மூடைகளையும் தள்ளி விட்டுடுவான்! ரெண்டே நள்ல 1000ரூ லாபம்!

பத்துல ஒரு மூட்டைய வாங்கிட்டுப் போன சில்லறை கடைக்காரன் ஒரு வாரத்துல 60 கிலோவும் வித்துடுவான், கிலோவுக்கு அஞ்சு ரூபா லாபம் வச்சு. ஒரு வாரத்துல அவனுக்கு அடிக்குது 300ரூ லாபம்!!

இது அனுபவப்பூர்வமாய் எங்கள் ஊர் மார்க்கெட்டில் நான் பார்ப்பது..

பாடுபட்டுப் படிச்சு பட்டங்கள் பல வாங்கி விஞ்ஞானிகளா வேலைக்கு சேர்ந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ராப்பகலாக உழைத்து செயற்கைக்கோள்களை தயாரிக்கும் அந்த விஞ்ஞானிகளுக்கு எந்தப் பலனும் இல்லை! ஆனால் அதிகார பீடத்தின் உச்சியிலிருக்கிறோம் என்ற இறுமாப்பில் அத்தனை மக்கள் சொத்துக்களும் தமக்கே என ஆடுவோரின் ஆட்டம் மிக அற்புதமாய் இருக்கிறது!!!! வாழ்க பாரதம்!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

ஆகா நான்தான் முதல் ஆளா?]]]

நீங்களுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[Ashif said...

Nalla padivu.]]]

நன்றிகள் ஜூனியர்விகடனைச் சேரட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[N said...

Whatever you say, We will vote only for DMK and Congress!!!]]]

எதுவும் சொல்வதற்கில்லை.. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sankar Gurusamy said...

It appears nobody is above or without corruption. And Politicians are silent partners in all the Scandals. They have not even spared the Scientists for this matter. GOD Save our Country..

http://anubhudhi.blogspot.com/]]]

காப்பாத்துவாரான்னு பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு 'மேதாவி' விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும்போது, நம் நிஜ விஞ்ஞானிகள் 'விஞ்ஞான ரீதியில்' ஊழல் செய்வதில் என்ன அதிசயம்!]]]

குட் கொஸ்டீன்..! இதேபோல் அனைத்துத் துறையினரும் ஊழல்களை விரைவாகச் செய்தால் நல்லது. அப்போதாவது துருக்கியைப் போல மக்கள் மட்டும் கிளர்ந்தெழுவார்களா என்று பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஆதர்ஷ் சொசைட்டியின் ஊழல் வெளிவந்தது. முறைகேடாகக் கட்டப்பட்ட 31 மாடி கட்டிடத்தையும் இடித்து தரைமட்டமாக்கச் சொல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சரே சொல்லிவிட்டார்!! அவ்வளவுதான் அது முடிந்தது. அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கப் போவதில்லை.]]]

உண்மைதான். விசாரணை கமிஷன் வைத்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை..!

[[[அடுத்ததாக, இந்த 4G சம்பந்தப்பட்ட பிரச்சினை. திடீரென பிரதமரிடமிருந்தேகூட அறிவிப்பு வெளியாகலாம். சம்பந்தபட்ட இரண்டு செயற்கைக் கோள்களையும் உடைத்து தரைமட்டமாக்கி விடுங்கள். அவ்வளவுதான் பிரச்சினை முடிந்தது! எப்பேர்ப்பட்ட எளிமையான தீர்வுகள்!! வாழ்க பாரதம்!]]]

ஹா.. ஹா.. உங்க எண்ணம் பலிக்காமல் இருக்க முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஒரு விவசாயி பாடுபட்டு வேளாண்மை செஞ்சு, கமிஷன் கடைக்கு கொண்டு வந்து கொட்டுவான் வெங்காய மூடைகளை! மூட்டைக்கு 60 கிலோ கணக்கு. கிலோ ஒன்னுக்கு 10ரூ வீதம் 600ரூ x 10 மூடை = 6000ரூ வாங்கிட்டுப் போவான். 5000 முதல் போட்டு ஆறு மாசம் பாத்த விவசாயத்துக்கு 1000 ரூ லாபம்!

கமிஷன் கடைக்காரன் சில்லறை வியாபாரிகளுக்கு மூட்டைக்கு ஒன்னுக்கு 100ரூ லாபம் வச்சு ரெண்டே நாள்ல அந்த பத்து மூடைகளையும் தள்ளி விட்டுடுவான்! ரெண்டே நள்ல 1000ரூ லாபம்!

பத்துல ஒரு மூட்டைய வாங்கிட்டுப் போன சில்லறை கடைக்காரன் ஒரு வாரத்துல 60 கிலோவும் வித்துடுவான், கிலோவுக்கு அஞ்சு ரூபா லாபம் வச்சு. ஒரு வாரத்துல அவனுக்கு அடிக்குது 300ரூ லாபம்!!

இது அனுபவப்பூர்வமாய் எங்கள் ஊர் மார்க்கெட்டில் நான் பார்ப்பது..]]]

ஏன் விவசாயிகளை நேரடியாகவே விற்பனை செய்ய அனுமதித்தால் என்ன..? இந்தக் குழப்பம் போய் நியாயமான விலை அனைவருக்கும் கிடைக்குமே..?

[[[பாடுபட்டுப் படிச்சு பட்டங்கள் பல வாங்கி விஞ்ஞானிகளா வேலைக்கு சேர்ந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ராப்பகலாக உழைத்து செயற்கைக்கோள்களை தயாரிக்கும் அந்த விஞ்ஞானிகளுக்கு எந்தப் பலனும் இல்லை! ஆனால் அதிகார பீடத்தின் உச்சியிலிருக்கிறோம் என்ற இறுமாப்பில் அத்தனை மக்கள் சொத்துக்களும் தமக்கே என ஆடுவோரின் ஆட்டம் மிக அற்புதமாய் இருக்கிறது!!!! வாழ்க பாரதம்!]]]

விஞ்ஞானிகளே இதுக்கு ஒரு தீர்வு சொல்லக் கூடாதா..? இந்தியன், அந்நியன் டைப்புல..?

ரிஷி said...

//ஏன் விவசாயிகளை நேரடியாகவே விற்பனை செய்ய அனுமதித்தால் என்ன..? இந்தக் குழப்பம் போய் நியாயமான விலை அனைவருக்கும் கிடைக்குமே..?
//

உழவர் சந்தைகள் இருக்கின்றன. ஆனால் நூறு மூடைகளைக் கொண்டு வரும் விவசாயி அத்தனையையும் எப்படி விற்றுக் காசாக்குவான்?

சரக்கை இங்கிட்டு வாங்கி அங்கிட்டு கைமாற்றிவிடும் தொழிலில் தான் எத்துணை லாபங்கள்!!! ஸ்பெக்ட்ரத்திலும் இதுதான் நடந்தது; காய்கறி வியாபாரத்திலும் இதுதான் நடக்கிறது!

ரிஷி said...

//விஞ்ஞானிகளே இதுக்கு ஒரு தீர்வு சொல்லக் கூடாதா..? இந்தியன், அந்நியன் டைப்புல..? //

விஞ்ஞானிகளின் மூளை தீவிரமாய் அவர்கள் துறை சார்ந்த விஷயத்தில் மட்டும் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு சிறந்த படைப்பாளிக்கு அவன் சரக்கை விற்கத் தெரியாது. விற்கத் தெரிந்தவனிடம் கொடுத்தால் அவன் நேர்மையற்றவனாக இருக்கிறான். இவனது படைப்புக்கேற்ற பலனை இவனுக்கு கொடுக்காமல் தனக்கென பெரும்பகுதியை அமுக்கிக் கொள்கிறான்.

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//ஏன் விவசாயிகளை நேரடியாகவே விற்பனை செய்ய அனுமதித்தால் என்ன..? இந்தக் குழப்பம் போய் நியாயமான விலை அனைவருக்கும் கிடைக்குமே..?//

உழவர் சந்தைகள் இருக்கின்றன. ஆனால் நூறு மூடைகளைக் கொண்டு வரும் விவசாயி அத்தனையையும் எப்படி விற்றுக் காசாக்குவான்?
சரக்கை இங்கிட்டு வாங்கி அங்கிட்டு கை மாற்றிவிடும் தொழிலில்தான் எத்துணை லாபங்கள்!!! ஸ்பெக்ட்ரத்திலும் இதுதான் நடந்தது; காய்கறி வியாபாரத்திலும் இதுதான் நடக்கிறது!]]]

அப்படியானால் ஸ்பெக்ட்ரமில் சொல்வது போலவே அரசே விவசாயிகளிடமிருந்து முழுவதையும் கொள்முதல் செய்து அதனை மற்றவர்களுக்கு விற்பனை செய்யலாமே..? நியாயமான விலை கிடைக்குமே விவசாயிகளுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//விஞ்ஞானிகளே இதுக்கு ஒரு தீர்வு சொல்லக் கூடாதா..? இந்தியன், அந்நியன் டைப்புல..? //

விஞ்ஞானிகளின் மூளை தீவிரமாய் அவர்கள் துறை சார்ந்த விஷயத்தில் மட்டும் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு சிறந்த படைப்பாளிக்கு அவன் சரக்கை விற்கத் தெரியாது. விற்கத் தெரிந்தவனிடம் கொடுத்தால் அவன் நேர்மையற்றவனாக இருக்கிறான். இவனது படைப்புக்கேற்ற பலனை இவனுக்கு கொடுக்காமல் தனக்கென பெரும் பகுதியை அமுக்கிக் கொள்கிறான்.]]]

அப்ப இது தனி மனிதர்களின் தவறுதான்.. அரசியல், அதிகார அமைப்புகளின் தவறில்லை என்கிறீர்களா..? அப்படியானால் யார்தான் இதற்கு பொறுப்பாவது..?

ரிஷி said...

பத்ரி சேஷாத்ரி இதிலும் ஊழலே நடக்கவில்லை எனக் கூறி விட்டார். :-)

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
பத்ரி சேஷாத்ரி இதிலும் ஊழலே நடக்கவில்லை எனக் கூறிவிட்டார்.:-)]]]

ம்ஹும்.. அறிவுஜீவிகள் அனைவரும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள்..! எப்படி புரிய வைப்பது என்றும் தெரியவில்லை..! ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றும் கண்டறிய முடியவில்லை. வருத்தமே மிஞ்சுகிறது..!

அகண்ட வெளி சிந்தனை said...

இங்கேயும் மலையாள நாய்கள் சதிதான்....சந்தேகமே இல்லை

ரிஷி said...

//இங்கேயும் மலையாள நாய்கள் சதிதான்....சந்தேகமே இல்லை//

தயவுசெய்து நாய்களை தரக்குறைவாக உபயோகிக்க வேண்டாம். அவை அற்புதமான பிறவிகள்!