ராசாத்தியம்மாளின் தளபதிகள் பட்டியல்..!

22-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலைஞரின் துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் அவருடைய சந்தேகத்திற்கிடமான தொடர்பாளர்கள் பற்றிய ஜூனியர் விகடனின் கட்டுரை இது..!

ரத்னம், சரவணன், டேனியல் சாமுவேல், டேனியல், ராஜப்பா, சக்தி​வேல், சந்திரமௌலி, முரளி, சஜீவ் ஆர்யன், அலீமா... இந்த 10 பேர்தான் ராஜாத்தி அம்மாளை சுற்றிவரும் மனிதர்கள்.

 ''தனது வீட்டுக்கு யார் வருகிறார்கள்..? யார் போகிறார்கள்..? என்பதே தலைவருக்குத் தெரியாத அளவுக்கு, இவர்களது நட​மாட்டம் சி.ஐ.டி. காலனி வீட்டில் தயக்கமின்றி நடக்கிறது. ராஜாத்தி அம்மாளைக் கைக்குள் வைத்துக்கொண்டு, இவர்கள் நடத்தி வரும் காரியங்கள் பகீர் ரகமானவை! இவர்களது கொட்டம் அடக்கப்படாவிட்டால், ராஜாத்தி அம்மாளையே கபளீகரம் செய்துவிடுவார்கள்...'' என்கிற அளவுக்கு தி.மு.க. வட்டாரம் கவலை தோய்ந்த வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்​திருக்கிறது!




இந்த விவகாரங்களின் சில இழைகளை வெளிப்படையாகப் போட்டு உடைத்திருந்தார் ஜெயலலிதா. ''கனிமொழியின் தாயார் ராஜாத்தியின் வீட்டில் பணிபுரிபவர்களின் நிதி நிலைமையை கவனித்தாலே, ராஜாத்தியின் நிதி நிலைமை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். ராஜாத்திக்கு சொந்தமான ராயல் என்டர்பிரைசஸ் என்ற அறைகலன் காட்சியகத்தில் பெருக்குபவராகப் பணிபுரிந்த சரவணன் என்பவர், பின் அதே நிறுவனத்தின் மேலாளர் ஆனார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச்சைக்குரிய 350 கோடி மதிப்புடைய வோல்டாஸ் நிலம், மலேசியாவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவருக்கு வெறும் 25 கோடிக்கு விற்கப்பட்டபோது, தரகராகச் செயல்பட்டவர் சரவணன்தான். இந்தச் செய்தி அண்மையில் பத்திரிகைகளிலும் வெளியானது.

இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று வெளிப்படையாகத் தெரிவித்த ராஜாத்தி, இந்த நிலம் குறித்த தனது கவலையை, நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்திருக்கிறார். சொற்ப விலைக்கு வோல்டாஸ் நிலத்தை வாங்கிய மலேசியாவின் சண்முகநாதன், கோத்தகிரியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டத்தை வெறும் 25 கோடிக்கு வாங்கி இருக்கிறார்.

சென்னை சி.ஐ.டி. காலனியில் அமைந்துள்ள ராஜாத்திக்குச் சொந்தமான புதிய வீட்டின் குளிர்சாதனப் பெட்டிகளைப் பழுது பார்த்த ஏ.ஸி. மெக்கானிக் டேனியல் சாமுவேல், இன்று பல பி.எம்.டபிள்யூ. சொகுசு வாகனங்களின் உரிமையாளர்! தமிழ்நாட்டின் இரண்டாவது பெண்மணிக்காக மூணாறு, கோட்டயம் மற்றும் கேரளாவில் உள்ள இதர இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.
 
டேனியல் சாமுவேலின் மகள் திருமணம் கொச்சியில் நடைபெற்றபோது ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மூத்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட சென்னையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர், விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்...'' என்று தொடர்கிறது அந்த அறிக்கை!

வோல்டாஸ் குறித்த பணப் பரிமாற்றங்கள் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பல முறை தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். வோல்டாஸ் பரிவர்த்தனையை ஜூ.வி. 26.12.10 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதி இருந்தது. இந்த நபர்கள் பற்றி முழுமையாகத் தகவல் திரட்டியபோது நமக்கே மூச்சு முட்டியது!

''இவர்கள் ராஜாத்தி அம்மாள் பெயரை சர்வ சாதார​ணமாகப் பயன்படுத்துவார்கள். இவர்கள் மீது பல புகார்கள் அரசல் புரசலாகக் கிளம்பியபோது... ராஜாத்தி அம்​மாளும் கருணாநிதியும் கண்டுகொள்ளாததால்... தங்களது அதிகார துஷ்பிரயோகத்தைத் தொய்வில்லாமல் தொடர்கிறார்களாம்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரத்தில் நீரா ராடியாவுடன் ராஜாத்தி அம்மாள் பேசுவதாக ரிலீஸான டேப்பில் வரும் முக்கியப் பெயர் ஆடிட்டர் ரத்னம். ராஜாத்தி அம்மாவால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாத நிலையில், போன் ரிசீவரை ரத்னத்திடம் கொடுக்கச் சொல்வார் ராடியா. அப்போது ராடியாவும், ரத்னமும் பேசுவார்கள். அதில் சென்னையில் உள்ள வோல்டாஸ் நிறுவனம் இயங்கும் இடம்பற்றிய தகவல்கள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு ராஜாத்தி அம்மாளுக்கு நெருக்கமாக இருப்பவர் ரத்னம்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ரத்னம் வந்தது முதல் ராஜாத்தி அம்மாளின் முக்கிய ஆலோசகரானார். தனது அலுவலகத்தில் சரவணனின் மனைவி வேலைக்குச் சேர்ந்ததன் மூலம் ரத்னம் - சரவணன் நட்பு ஏற்பட்டது. ராஜாத்தி அம்மாள் தொடர்புடைய ராயல் ஃபர்னீச்சர், வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிட்டெட் போன்ற நிறுவனங்களை கவனித்துக்கொள்ள, விசுவாசமான ஆள் தேவை என்று இவர்கள் தேட ஆரம்பிக்க... சரவணன் உள்ளே நுழைந்தார்.

 அவரே ராயல் ஃபர்னீச்சர் கடையை முழுமையாக கவனிக்கத் தொடங்கினார். அவர் வந்த நேரம், நல்ல நேரமாக இருந்ததாம். அதனால், செல்வாக்கு அதிகமானது. ராயல் ஃபர்னீச்சர் கடையைக் கவனித்துக்​கொள்வது மட்டுமல்லாமல், ராஜாத்தி அம்மாளின் முக்கிய ஆலோசகர்களுள் ஒருவராகவும் சரவணன் மாறினார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஃபர்னீச்சர் கடைக்கு சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து மரச் சாமான்களை இறக்குமதி செய்​வார்கள். அதைத் தேர்ந்தெடுக்க ராஜாத்தி அம்மாளே அந்த நாடுகளுக்கு நேரில் செல்வார். அப்போது உடன் பாதுகாவலராகச் செல்லும் அளவுக்கு சரவணன் முக்கியத்துவம் பெற்றார்.  பெசன்ட் நகரில் 52.75 லட்சம் மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய வீட்டு மனை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமூக சேவகர் என்ற அடிப்படையில் இவர் இந்த ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளார்.

பாரூக் என்பவர் நடத்தி வரும் எ.கே.ஆர். என்ற வியாபார நிறுவனத்தின் முக்​கியப் பங்குதாரர் சரவ​ணன். இவர்கள், திருக்​கழுக்குன்றத்தில் மார்க்​கெட் அமைக்க நிலங்கள் வாங்குவதில் ராஜாத்தி அம்மாள் பெயரைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகமே இவர்கள் பின்னால் அலைந்ததாம்.

சென்னை விமான நிலையம் அருகே கிருஷ்ணரெட்டி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பிரச்னை... 33 கிரவுண்ட் நிலம்... அதில் 17,000 சதுர அடிக்கு ஒரு கட்டடமும் உண்டு. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கடன் வாங்கிக் கட்டமுடியாமல் அது ஏலத்துக்கு வந்துவிட்டது. கேள்விப்பட்ட சரவணன் அங்கு சென்று ஏலம் எடுத்து இடத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார். இந்த இடத்தில்தான் ஃபர்னீச்சர் கம்பெனியின் குடோன் இரண்டு ஆண்டுகள் செயல்பட்டது...'' என்கிறார்கள்  உள்விவரங்கள் அறிந்தவர்கள்.

மேலும், ''ரத்னம், சரவணனை அடுத்து முக்கியப் புள்ளியாக வலம் வருகிறார் டேனியல் சாமுவேல். கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ஏ.ஸி. மெக்கானிக்காக இந்த வீட்டுக்குள் நுழைந்தார். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி முதல் குறுக்குத் தெருவில் வசிக்கிறார். இவர் மகள் நான்சி சாமுவேலுக்கு சமூக சேவகர் ஒதுக்கீட்டில், திருவான்மியூர் புறநகர் விரிவாக்கத் திட்டத்தில் உள்ள பெசன்ட் நகரில் 71 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள 3,597 சதுர அடி வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தவணையாகவே 28.77 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால், வீட்டு வசதி வாரிய விண்ணப்பத்தில் நான்சி சாமுவேல், தனியார் விமான நிறுவனத்தின் எழும்பூர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு, 'ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படிக்கும்போதே சமூக சேவை செய்தார்’ என்று பரிந்துரைக் கடிதம் தரப்பட்டு வீடு வழங்கப்பட்டுள்ளது.

நான்சி சாமுவேல் திருமணம் கொச்சியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு அதிகார மட்டத்தினர் அளித்த பரிசுப் பொருட்களின் தொகை மலை அளவாம். எர்ணாகுளத்தில் உள்ள தொழிற்சாலை மற்றும் வெஸ்ட் கேட் நிறுவனத்தின் பணிகளை இவர் கவனித்து வருகிறார். இவரை இதுவரை தலைவர் ஒரு முறைகூட நேரில் பார்த்ததே இல்லையாம்!'' என்றதோடு,

''மயிலாடுதுறையின் ராஜப்பா, கடந்த 15 ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாளுக்கு அறிமுகம். இவரும், இவரது நண்பரான கோட்டூர்​புரம் தேவேந்​திரனும்  நிலங்கள் தொடர்பான தரகு வேலைகளில்  கில்லாடிகளாம். தேவேந்திரன், ராஜப்பா, ராஜப்பாவின் தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும், ஓர் இடத்தில் கூடினார்கள் என்றால் முக்கியமான டீலிங்குகள் இருக்கிறது  என்று அர்த்தமாம்.

விருகம்பாக்கத்தில் சுப்பையா, நெடுமாறன் இருவருக்கும் சொந்தமான 70 கிரவுண்ட் இடங்கள் இருந்தன. இதில் சுப்பையா இறந்ததும், இந்த இடத்தில் உள்ள வில்லங்கங்களை சரி செய்து, விற்பனை செய்ய நெடு​மாறன் முயற்சித்தார். அது பற்றி ராஜப்​பாவிடம் பேசுகிறார். எங்கேயோ வைத்துப் பேசாமல் ராயல் ஃபர்னீச்சர் அலுவலகத்திலேயே பஞ்சாயத்து நடந்தது. கடைசியில், மூலப்பத்திரம் ஒரு மார்வாடி பில்டருக்கு மாற்றப்பட்டது. குறிப்பிட்ட இடத்தை சாமுவேல் எடுத்துக்கொண்டார்...'' என்று சொல்கிறார்கள்.

''சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் பணிகளை கவனித்து வந்தார் சந்திரமௌலி. சென்னை துறைமுகக் கழகத்தின் சேர்மனாக சுரேஷ் இருந்தபோது சந்திரமௌலிக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைத்தது. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக் நிறுவனத்துக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இடம் ஒதுக்கீடு கொடுக்க முடியாது!’ என்று மறுத்த தூத்துக்குடி துறைமுகக் கழகத்தின் சேர்மன் ரகுபதியை மாற்றிவிட்டு, சுரேஷ§க்குக் கூடுதல் பொறுப்பு கொடுக்கும் அளவுக்கு, சந்திரமௌலியின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது.

சேர்மன் சுரேஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஓர் ஆண்டுக்கு முன்பு ரெய்டு நடத்தினார்கள். அதில், சந்திரமௌலி மூலம் செய்த பரிந்துரைகள், பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்​கான ஆதாரங்கள் கிடைத்ததாம். அதில் இருந்து அவரைக் கொஞ்ச காலத்துக்கு அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார்களாம். இவர் கவனித்து வந்த வேலைகளை தற்போது கவனிப்பவர் சக்திவேல். கப்பல் போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராக ஜி.கே.வாசன் வந்த பிறகும், ராஜாத்தி அம்மாள் சொன்னார் என்று செய்யப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் அவர் தட்டிக் கழிக்க... சமீபகாலமாக சக்திவேலும் சைலண்ட் ஆக்கப்பட்டுள்ளார்.

தற்போது சி.ஐ.டி. காலனி வீட்டின் செல்லக் குழந்தையாகச் சொல்லப்படுகிறார் முரளி. ஈரோடு, கோவை மேட்டுப்பாளையம், சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ள சில நிறுவனங்களை இவர் மேற்பார்வை செய்​கிறார்.

பல நாட்கள் காலை வேளைகளில், டேனியல் சி.ஐ.டி. காலனியில் வந்து ஆலோசனை செய்துவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. ஃபைனான்ஸியரான இவரது ஆலோசனை இல்லாமல் எந்தக் காரியமும் செய்யப்படுவது இல்லை. தனியார் விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சஜீவ் ஆர்யன் மற்றும் பிரபலமான பியூட்டி பார்லர் பெண்மணியான அலீமா இருவரும் இந்த அணியில் வலம் வருபவர்கள். ராயல் ஃபர்னீச்சருக்குப் பின்புறம் உள்ள தெருவில் இவர்களுக்குத் தனியாக ஓர் அலுவலகமே இருக்கிறது. பல்வேறு பரிவர்த்தனைகள் இங்கேதான் நடக்கின்றன...'' என்றும் பேசிக்  கொள்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமான உடன்பிறப்புகள்...

இப்படி ஒரு கறுப்பு வளையம் ராஜாத்தி அம்மாளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது அவருக்கோ, முதல்வருக்கோ, கட்சிக்கோ நல்லதா..? என்பதே நடப்பவற்றை ஊன்றிக் கவனிப்போரின் கேள்வியாக உள்ளது.

நன்றி - ஜூனியர் விகடன் - 23-02-2011

20 comments:

பொன் மாலை பொழுது said...

//இப்படி ஒரு கறுப்பு வளையம் ராஜாத்தி அம்மாளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது அவருக்கோ, முதல்வருக்கோ, கட்சிக்கோ நல்லதா..? என்பதே நடப்பவற்றை ஊன்றிக் கவனிப்போரின் கேள்வியாக உள்ளது.//

இப்படி இந்த பதிவை முடிக்கும் நிர்பந்தம் என்ன? இதைத்தான் பம்மாத்து என்பார்கள் தமிழ்! இவைகள் எல்லாமே உடையவர்களின் அறிவோடுதான் நிகழும் என்பது சிறு பிள்ளைகளும் அறியும். காலம் போடும் கணக்கு என்றுமே தவறானதில்லை. அந்த அம்மா எலாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். அவள் வந்தால் இவர்கள் எல்லோரும் ஜெயிலில் கலி தின்னும் காலம் வரும் நண்பரே!!
மொத்ததில் தமிழர்களின் சாபக்கேடுதான் இது போன்ற தொடர் அரசியல் .

THOPPITHOPPI said...

நீங்கள் எழுதிய பதிவுகளுக்கு எல்லாம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலர் எதிர்ப்பதிவு எழுதி வருகின்றனர். வரும் தேர்தலில் நீங்க நிக்கலாம் போல.

ராஜ நடராஜன் said...

முந்தைய பந்திக்குத்தான் கடைசி ஆளா வந்தேன்னு சீக்கிரமா ஓடி வந்தா துண்டு போடறதுக்குன்னே ஆளுக வரிசையில:)

ராஜ நடராஜன் said...

ஜூ.வி,உங்களுக்கு முன்னாடி சவுக்கு துப்பறிந்து விடுகிறார்.

குறும்பன் said...

இதைபடித்து முடித்ததும் தமிழர் இரத்தம் குடித்த கருணாநிதிக்கும் 2G ஸ்பெக்ட்ரம் குடும்பத்துக்கும் எதுவுமே தெரியாதது போல் உள்ளது. ஜீ.விகடன் நிருபருக்கு வேண்டிய அளவு ஸ்பெக்ட்ரம் பணம் இறங்கிடுச்சா??

மு.சரவணக்குமார் said...

அனுமதி பெற்றுத்தான் இந்த கட்டுரைகளை மீள் பிரசுரம் செய்கிறீர்களா?

geethappriyan said...

good info

உண்மைத்தமிழன் said...

[[[கக்கு - மாணிக்கம் said...

//இப்படி ஒரு கறுப்பு வளையம் ராஜாத்தி அம்மாளைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது அவருக்கோ, முதல்வருக்கோ, கட்சிக்கோ நல்லதா..? என்பதே நடப்பவற்றை ஊன்றிக் கவனிப்போரின் கேள்வியாக உள்ளது.//

இப்படி இந்த பதிவை முடிக்கும் நிர்பந்தம் என்ன? இதைத்தான் பம்மாத்து என்பார்கள் தமிழ்! இவைகள் எல்லாமே உடையவர்களின் அறிவோடுதான் நிகழும் என்பது சிறு பிள்ளைகளும் அறியும். காலம் போடும் கணக்கு என்றுமே தவறானதில்லை. அந்த அம்மா எலாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவள் வந்தால் இவர்கள் எல்லோரும் ஜெயிலில் கலி தின்னும் காலம் வரும் நண்பரே!! மொத்ததில் தமிழர்களின் சாபக்கேடுதான் இது போன்ற தொடர் அரசியல்.]]]

நானாக இருந்திருந்தால் வேறு மாதிரி எழுதியிருப்பேன். பத்திரிகை என்பதால் இப்படித்தான் எழுதுவார்கள்..! எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கை மீது கொஞ்சம் பயம் இருக்கிறதல்லவா.. அதுதான். இந்த அளவுக்காவாவது எழுதினார்களே என்று சந்தோஷப்படுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[THOPPITHOPPI said...
நீங்கள் எழுதிய பதிவுகளுக்கு எல்லாம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலர் எதிர்ப் பதிவு எழுதி வருகின்றனர். வரும் தேர்தலில் நீங்க நிக்கலாம் போல.]]]

ஹா.. ஹா.. நிக்கலாம். நான் ரெடி. யார் ஓட்டுப் போடுவா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
முந்தைய பந்திக்குத்தான் கடைசி ஆளா வந்தேன்னு சீக்கிரமா ஓடி வந்தா துண்டு போடறதுக்குன்னே ஆளுக வரிசையில:)]]]

நிறைய பேர் எந்நேரமும் ஆன்லைன்லயே இருக்காங்க போலிருக்கு..

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
ஜூ.வி, உங்களுக்கு முன்னாடி சவுக்கு துப்பறிந்து விடுகிறார்.]]]

தோழர் சவுக்கு அவர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் இல்லை. அதனால்தான்..

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...
இதை படித்து முடித்ததும் தமிழர் இரத்தம் குடித்த கருணாநிதிக்கும் 2G ஸ்பெக்ட்ரம் குடும்பத்துக்கும் எதுவுமே தெரியாதது போல் உள்ளது. ஜீ.விகடன் நிருபருக்கு வேண்டிய அளவு ஸ்பெக்ட்ரம் பணம் இறங்கிடுச்சா??]]]

போச்சுடா.. நீங்க அந்த மாதிரி யோசிக்கிறீங்களா..? தப்பு ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...
அனுமதி பெற்றுத்தான் இந்த கட்டுரைகளை மீள் பிரசுரம் செய்கிறீர்களா?]]]

இல்லை. அதுதான் கீழே நன்றி என்று ஒரு வார்த்தை போடுகிறேனே..? ஒன்றும் சொல்ல மாட்டார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

good info]]]

வருகைக்கு நன்றி கீதப்பிரியன்..!

Unknown said...

அல்லக்கைகளுக்கே இவ்வளவு என்றால் அம்மனி எவ்வளவு அடித்திருப்பார்...

R.Gopi said...

தலைவா....

“தல”க்கு தெரியாம ஒரு துரும்பு கூட அசையாது... துட்டு விஷயத்துல “தல” அம்புட்டு ஸ்ட்ராங்கு...

இந்த தீவட்டிகள் எல்லாம் களி தின்ன தயாராகட்டும்...

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...

அல்லக்கைகளுக்கே இவ்வளவு என்றால் அம்மனி எவ்வளவு அடித்திருப்பார்?]]]

அதைப் போல பத்து மடங்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
தலைவா.... “தல”க்கு தெரியாம ஒரு துரும்பு கூட அசையாது... துட்டு விஷயத்துல “தல” அம்புட்டு ஸ்ட்ராங்கு... இந்த தீவட்டிகள் எல்லாம் களி தின்ன தயாராகட்டும்.]]]

இந்த ஒரு காரணத்துக்காகவே ஆட்சி மாறணும்னு நினைக்கிறேன்..!

abeer ahmed said...

See who owns sveinung.com or any other website:
http://whois.domaintasks.com/sveinung.com

abeer ahmed said...

See who owns aisso.org or any other website.