ஸ்பெக்ட்ரம் ஊழல் - சீன நிறுவனத்தின் மறைமுக முதலீடு..!

02-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தியிருக்கும் சீன நாட்டு நிறுவனத்தின் பங்களிப்பு பற்றிய முக்கியமான கட்டுரை இது :

”2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதிக விலைக்கு அதை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்றதால் நம்முடைய மத்திய அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டது. அரசாங்க கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி இழப்பாகி விட்டது. இம்மாதிரியான இழப்புகளைக்கூட நாம் வேறு தொழில் முதலீடுகள் மூலமாக ஈட்டிக் கொள்ள முடியும்.







ஆனால், இப்படிக் கைமாற்றி விடப்​பட்ட நிறுவனங்களின் ஜாதகங்களைப் பற்றி நம்முடைய மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் ஒழுங்காக விசாரணை நடத்தினார்களா? வெளிநாட்டு மூலதனக் குவிப்பு வாரியமாவது ஆய்வு நடத்தியதா? இவை மிக முக்கியமான விஷயங்கள்…” என்று சொல்லும் டெல்லி அதிகாரி ஒருவர், ”2-ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற ஒரு நிறுவனம், தன்னுடைய கணிசமான அளவு பங்குகளை சீனாவைச் சார்ந்த ஒரு நிறுவனத்துக்கு தாரை வார்த்திருக்கிறது.

இந்தியாவின் எல்லையில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தையே தன்னுடைய பகுதியாகச் சொல்லி வம்படி பண்ணும் நாடு சீனா. கடந்த 50 வருஷங்களாக அவர்களுக்கும் நமக்கும் எல்லைத் தகராறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அருணாசலப் பிரதேசம் வழியாக அந்நிய ஊடுருவலை சீனா தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பரம எதிரியாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் மட்டுமல்லாமல்… அனைத்து உதவிகளையும் சீனா செய்து வருகிறது. மேலும் ஆஃப்கானிஸ்தானத்து தாலிபன் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி​யையும் சீனா வழங்கி வருகிறது.

அப்படிப்பட்ட சீனாவின் ‘உளவு நிறு​வனம்’ போல செயல்படுவதாக நாங்கள் சந்தேகப்படும் ஒரு நிறுவனம் 2-ஜி பங்குகளை வாங்கியுள்ளது. இதை வைத்துப் பார்த்தால், இந்தியாவின் தொலைத் தொடர்பு வசதி, தடங்கல் இல்லாமல் நம் போட்டி தேசத்துக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இந்த கம்பெனியின் உரிமையாளர் 1982-ம் ஆண்டுவரை சீன ராணுவத்தில் இருந்தவர். ராணுவத்தில் ஆட்​குறைப்பு செய்கிறோம் என்று சொல்லி விலக்கப்பட்டார். இரண்டு மூன்று ஆண்டுகள் அமைதியாக இருந்து​விட்டு, மின் சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்கினார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிப்புக்குள் நுழைந்தார்.

அவரது கம்பெனி, சீனாவைவிட மற்ற வெளிநாடுகளில் தனது நிறுவனங்களைத் தொடங்குவதிலேயே ஆர்வமாக இருந்தது. 1999-ம் ஆண்டு 10 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு போட்டு பெங்களூருவில் அந்த நிறுவனம் முதலில் உள்ளே நுழைந்தது. அடுத்து இன்னொரு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்கள்.

வேலைக்கு ஆள் எடுக்கப்பட்ட 513 பேரில் 178 பேர் சீனா​வைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பெரும்​பாலும் அயல்நாட்டு நிறுவனங்கள் இங்கே தனது தொழிலைத் தொடங்கினாலும், அதற்கான ஊழியர்களைத் தங்கள் நாட்டில் இருந்து அதிகமாகக் கொண்டு வராது. ஆனால், இந்த நிறுவனம் மட்டும் சீனாக்காரர்களை பெரும்பாலும் கொண்டு வந்து குவித்தது. இதை மத்திய உளவுத்துறை முதல் முறையாக மோப்பம் பிடித்து அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தியது.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் (1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி) இந்தியப் பயணிகள் விமானம் ஆஃப்கான் தலைநகரான காந்தகாருக்கு கடத்திச் செல்லப்பட்டது. இந்த விமானக் கடத்தலுக்கு அதிகமான உதவியைச் செய்தவர்கள் தாலிபன் தீவிரவாதிகள். அவர்கள் கேட்டது மாதிரி இந்தியச் சிறையில் இருக்கிற நான்கு பேரை விடுவிக்க வேண்டியதாயிற்று.

இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் ஆஃப்கானிஸ்தானுக்கு சீனாவில் இருந்து ஒரு தொழில் நுட்ப வல்லுநர் குழு சென்றது. அந்தக் குழுவில், பெங்களூரூ நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல ஊழியர்கள் அனுப்பி வைக்கப்​பட்டார்கள்.

அன்றைய பி.ஜே.பி. அரசாங்கத்துக்கு அப்போதுதான் சீனாவின் இந்த மாயவலை உறைக்க ஆரம்பித்தது. ஏற்கெனவே தாலிபன் தீவிரவாதிகளுக்கு சீனா உதவி செய்து வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால், பெங்​களூருவில் மையம் கொண்டிருக்கும் நிறுவனமும் அந்த நிழல் படிந்ததுதான் என்பதை மத்திய அரசு உணர்ந்தது. உடனடியாக பெங்களூரு நிறுவனங்கள் இரண்டுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

‘நாங்கள் பாகிஸ்தானில் வர்த்தகம் செய்கிறோமே தவிர, எங்களுக்கும் தாலிபன்களுக்கும் தொடர்பு இல்லை’ என்று அந்நிறுவனத்தின் சார்பில் மத்திய அரசுக்கு கடந்த 10.12.2001 தேதியன்று பதில் தரப்பட்டது. ஆனால், இதை மத்திய உளவுப் பிரிவு மற்றும் ரா அதிகாரிகள் ஏற்க​வில்லை.

‘இந்தியாவில் இருக்கிற நிறுவனம் ஒன்று ஆஃப்கானிஸ்தானுக்கு எப்படிச் செல்கிறது? அதன் உரிமை​யாளர்கள் யார் என்பதாவது அரசாங்கத்துக்குத் தெரியுமா?’ என்று காங்கிரஸ் கட்சியே அன்று கேள்வி​கள் கேட்டது. நாடாளுமன்றத்தில் இது பற்றிப் பேசிய அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி, ‘இது போன்ற    செயல்க​ளில் இனியும் அந்த நிறுவனம் ஈடுபட்​டால், பெங்களூரு கம்பெனியில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட சீன நிபுணர்களை இந்தியா நாடு கடத்தவும் தயங்காது!’ என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

‘மிகக் குறைந்த விலையில் தொழில் நுட்ப உபகரணங்​களைக் கொடுத்து உள்ளே நுழைந்து, அதன் பிறகு தனது நீண்ட கால ராணுவத் தேவைகளை சீனா பெற்றுக் கொள்கிறது!’ என்று டெல்லி பத்திரிகைகள் அப்போதே விமர்சனங்கள் செய்தன.

‘இந்தியாவில் வியாபாரம் செய்து வரும் இரண்டு சீன நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அப்போது இருந்த தேசியப் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சர்கள் குழு முடிவெடுத்தது. மத்திய உளவுத் துறையும் ரா அமைப்பும் இதற்கான ஆதாரங்களை வலுவாக சமர்ப்​பித்துள்ளன.

ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரில் 1.30 லட்சம் பேருக்கு தொலைபேசி இணைப்பு கொடுக்கும் நிறுவனம் இந்தியாவில் இருந்து செயல்பட்டால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்’ என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அன்றைய தினம் எழுதியது. இதன் பிறகு இந்த நிறுவனம் தன்னுடைய விஸ்தரிப்பைக் குறைத்துக் கொண்டது.

நான்கு ஆண்டுகள் கழித்து அதாவது 2005-ம் ஆண்டில் 60 மில்லியன் டாலர் முதலீட்டில் தனது நிறுவனத்தை விரிவாக்கும் திட்டத்தை நம்முடைய மத்திய அரசாங்கத்துக்கு சமர்ப்​பித்தது. இதை இந்தியத் தொலைத் தொடர்புத் துறை ஏற்கவில்லை. இதை ஏற்கக் கூடாது என்று மத்திய உளவுத்துறையும், ரா அமைப்பும் அறிவுரை கூறியது. இந்திய வெளிநாட்டு மூலதனக் குவிப்பு வாரியமும் இதற்கு மறுப்பு தெரிவித்தது.

‘சீனாவைச் சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனங்களின் படையெடுப்பில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள இந்தியா முயன்று வருகிறது’ என்று ‘ஏசியா டைம்ஸ் ஆன்லைன்’ கருத்துக் கூறியது.  இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் தன்னிடம் வேலை பார்த்து வந்த இந்தியர்களைப் படிப்படியாகக் குறைத்துவிட்டு முழுமையாக சீனாக்காரர்களையே நியமிக்​கும் காரியத்தைப் பார்த்தது.  2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், இந்த நிறுவனத்துக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.

ஆனால் அதன் பிறகு மத்திய அரசாங்கத்தின் தொலைத் தொடர்புக் கொள்கையே மாற ஆரம்பித்தது. அதுவரை 49 சதவிகிதமாக இருந்த அந்நிய மூலதனம் அதன் பிறகு 74 சதவிகிதமாக ஆக்கப்பட்டது. வெளி​நாட்டு கம்பெனிகள் தராதரம் இல்லாமல் தங்களது காலைப் பதிக்க ஆரம்பித்தன. பெங்களூருவில் மையம் கொண்ட சீன நிறுவனத்துக்கும் பயம் இல்லாமல் போனது. முதலில் டாடா நிறுவனம் இந்த சீன நிறுவனத்துடன் கோவாவில் பிசினஸ் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது. அதன் பிறகு ரிலையன்ஸ் கை கோர்க்க ஆரம்பித்தது. நீரா ராடியா டாடா நிறுவனங்களுக்காக   சீன நிறுவனத்தை தொடர்பு கொள்ளத் துவங்கினார்.

‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு நேரடியாக நாங்கள் விண்ணப்பித்தால் பழைய விஷயங்களைத் தோண்டிப் பார்த்து மத்திய உளவுத்துறையும் ரா அமைப்பும் கட்டை​யைப் போட்டு விடும். எனவே, வேறு ஒரு நிறுவனம் லைசென்ஸ் வாங்கட்டும். அதிலிருந்து நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்’ என்று சீன நிறுவனம் பேரம் பேசி காரியத்தை கனகச்சிதமாக முடித்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்!” என்று அந்த அதிகாரி சொன்னபோது… நமக்கு மூச்சு முட்டியது.

"இந்தியப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் சீனாவின் ஒரு நிறுவனம் இப்படி உள்ளே புகுந்திருப்பது இந்தியா​வின் பாதுகாப்புக்கு என்றைக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்!” என்று கூறுகிறார் இந்த அதிகாரி. 

இங்கு லைசென்ஸைக் கைப்பற்றியிருக்கும் இந்த சீன நிறுவனம், ஆஸ்திரேலியாவில் ஒரு லைசென்ஸைப் பெற முயற்சித்தபோது கடும் எதிர்ப்புக் கிளம்பியதாம். அதன்​பிறகு அங்கே லைசென்ஸ் பெறவே முடியவில்லை. அமெரிக்காவில் த்ரி.காம் உரிமத்தை வாங்க அதே நிறுவனம் முயற்சித்தபோது அந்நாட்டுப் பத்திரிகைகள் கடுமையாக எதிர்த்து எழுதின. கனடாவைச் சார்ந்த ஒரு நிறுவனத்தை வாங்க 2008-ல் முயன்றபோது அங்கும் எதிர்ப்பு கிளம்பவே, பின் வாங்கினார்கள். ஆனால், இந்தியாவில் எந்த எதிர்ப்புமே இல்லை…” என்றும் அந்த அதிகாரி சொல்கிறார்.

இந்த மாதிரி வெளிநாடுகளில் தடை விழுவதை அறிந்த இந்திய அரசு அந்த பெங்களூரு கம்பெனிக்கு ‘உங்களது உரிமையாளர்கள் யார் என்ற தகவலை ஒரு மாதத்துக்குள் தந்தாக வேண்டும்’ என்று நோட்டீஸ் அனுப்பினார்களாம். ஒரு சீனப் பெயரைக் குறிப்பிட்டு, ”இவர்தான் எங்களது உரிமையாளர். ஆனால், அவருக்கு வருமானத்தில் 1.42 சதவிகித பங்குகள்தான் உண்டு. மற்ற பங்குகள் அனைத்தும் இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உரிமையானது” என்று பதில் அளிக்கப்பட்டதாம்.

இது மாதிரியான தகவல்கள் கூட இலங்கை பத்திரிகைகளில்தான் அதிகமாக வெளிவருகின்றன. ஏனென்றால், அந்த சீன நிறுவனம் இப்போது அதிகமாக அங்குதான் நுழைய ஆரம்பித்திருக்கிறது. ”ராசா ராஜினாமாவுடன் முடியும் விவகாரம் அல்ல. அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்வதே, இதற்கு முடிவான தீர்வாக இருக்க முடியும்!” என்று பி.ஜே.பி. சொல்ல ஆரம்பித்திருப்பது இதனால்தான்.

”இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி, இப்போது சுதந்திர இந்தியாவை எப்படி கட்டிக் காப்பாற்றுகிறது பார்த்தீர்களா!” என்று நமது ஸோர்ஸ் அதிகாரி எழுப்பிய கேள்விதான் காதில் ஒலித்துக்​கொண்டே இருக்கிறது.

நன்றி : ஜூனியர் விகடன் 26-01-2011

18 comments:

Unknown said...

அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்வதே, இதற்கு முடிவான தீர்வாக இருக்க முடியும்!..

kandippaga ituthan தீர்வாக இருக்க முடியும்.

செங்கோவி said...

என் கடையில் ‘தீப்பிடித்து விட்டதால்’ உங்க கடைக்கு உடனே வரமுடியல..வந்து பார்த்தால் அஞ்சுமணி நேரத்திற்கு ஒரு பதிவு...பதிவு மழை!

Sivakumar said...

>>> இலங்கையில் 'டிராகன்' நுழைந்திருப்பது தமிழகத்துக்கு பாதகம் என்பதும் சந்தேகமில்லை. மிலிட்டரி ஆட்சி வந்தாலாவது நாடு உருப்படுமா??

உண்மைத்தமிழன் said...

[[[akbar said...
அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்வதே, இதற்கு முடிவான தீர்வாக இருக்க முடியும்! kandippaga ituthan தீர்வாக இருக்க முடியும்.]]]

நிச்சயமாக.. ஆனால் அரசு இதனைச் செய்ய முன் வருமா என்று தெரியவில்லை. வியாபாரிகளின் லாபி செல்வாக்கு அப்படி..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
என் கடையில் ‘தீப்பிடித்து விட்டதால்’ உங்க கடைக்கு உடனே வரமுடியல. வந்து பார்த்தால் அஞ்சு மணி நேரத்திற்கு ஒரு பதிவு. பதிவு மழை!]]]

நேத்து மட்டும்தான ஸார்.. அதுக்கே பாராட்டா..? உங்க கடை தீப்பிடிச்சதுக்கு எனது பாராட்டுகள்(!!!)

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...
இலங்கையில் 'டிராகன்' நுழைந்திருப்பது தமிழகத்துக்கு பாதகம் என்பதும் சந்தேகமில்லை. மிலிட்டரி ஆட்சி வந்தாலாவது நாடு உருப்படுமா??]]]

கொஞ்சம் உருப்படும்ன்னு நினைக்கிறேன்..!

Anonymous said...

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம். நானும் திருவாரூரில் சொந்தமாக DTP கடை வைத்திருப்பவன். எனக்கும் தமிழ் typing மிக சரளமாக வரும். ஆனால் என்னுடைய ரெகுலர் font DSC இஸ்மாயில் என்னால் அதனை பயன்படுத்தி எவ்வாறு ப்ளாக் எழுத முடியும். உதவவும். நான் உங்களது பழைய ப்ளாக் படித்து suratha.com இல் முயற்சி செய்தேன். ஆனால் என்னுடைய போஸ்ட் இல் paste செய்தால் paste ஆகவில்லை. இதனை தீர்த்து வைக்க உதவவும். நன்றி.

Sankar Gurusamy said...

Very much worrying factor. The Govt should investigate this very seriously and cancel the relevent licenses and spectrum allocations.

http://anubhudhi.blogspot.com/

middleclassmadhavi said...

படிக்கப் படிக்க பயமா இருக்கு!

Ganpat said...

Pl.go thro the writeup by one Viswamitra in Idli Vadai on Raja’s arrest.
Very rarely one comes across such brilliant write ups

தமிழ் குரல் said...

அண்ணே,

இந்த ஜுவி புனைவு பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பேசாம நீங்கள் எல்லாம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகி விடலாமே?

சீனா மோசமான அமைப்பாக இருந்தாலும் அதனை குற்றவாளி என சொல்ல உங்களின் கேவலமான இந்திய-பார்ப்பன ஆதிக்க வர்க்கத்திற்கு எந்த தகுதியும் இல்லை...

எல்லா நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய முடியாதே? அதில் மன்மோகனுக்கும், பிரனாபிற்கும், மற்ற காங்கிரஸ் கொள்ளைகாரர்களின் பங்குள்ள நிறுவங்கள் இருக்கிறதோ?

Anonymous said...

/////// சீனா மோசமான அமைப்பாக இருந்தாலும் ////

வாரே!!!!! வா !!

//////// அதனை குற்றவாளி என சொல்ல உங்களின் கேவலமான இந்திய-பார்ப்பன ஆதிக்க வர்க்கத்திற்கு எந்த தகுதியும் இல்லை...//////

ஓகே ..,ரைட் தமிழ்குரல் ..,வேற யாரு சொல்லணும் சொல்றீங்க ? இந்தியானா பிறந்த எவனும் சொல்ல கூடாது ..,எங்க கிட்ட வந்து வோட்டு பிச்சை கேட்டு வாங்கிட்டு போனாங்களே ..,நாங்க இதை கூடவா கேக்க கூடாது ..,இது என்ன போங்கு ஆட்டம்

உண்மைத்தமிழன் said...

[[[செந்தில் குமார் said...
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம். நானும் திருவாரூரில் சொந்தமாக DTP கடை வைத்திருப்பவன். எனக்கும் தமிழ் typing மிக சரளமாக வரும். ஆனால் என்னுடைய ரெகுலர் font DSC இஸ்மாயில் என்னால் அதனை பயன்படுத்தி எவ்வாறு ப்ளாக் எழுத முடியும். உதவவும். நான் உங்களது பழைய ப்ளாக் படித்து suratha.com இல் முயற்சி செய்தேன். ஆனால் என்னுடைய போஸ்ட் இல் paste செய்தால் paste ஆகவில்லை. இதனை தீர்த்து வைக்க உதவவும். நன்றி.]]]

செந்தில்..

இணையத்தில் நாம் தட்டச்சு செய்யும் சாதாரண பாண்ட்களை பயன்படுத்த முடியாது. யூனிகோடு பாண்ட்டுகளைத்தான் பயன்படுத்த முடியும்.

அதற்காக NMH.in என்னும் இணையத்தளத்தில் கிடைக்கும் NHMWriter என்னும் சாப்ட்வேரை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து அதில் இருக்கும் தட்டச்சு முறைகளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யுங்கள்..! அதற்கான வழிமுறைகளும் அதே இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன..!

வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[சங்கர் குருசாமி said...
Very much worrying factor. The Govt should investigate this very seriously and cancel the relevent licenses and spectrum allocations.

http://anubhudhi.blogspot.com/]]]

இவங்களா செய்வாங்க..? நீங்க வேற..? இழுத்துப் போர்த்திக்கிட்டுத் தூங்கப் போறாங்க. அவ்ளோதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[middleclassmadhavi said...

படிக்கப் படிக்க பயமா இருக்கு!]]]

எனக்குக் கோபம் கோபமா வருது..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...
Pl.go thro the writeup by one Viswamitra in Idli Vadai on Raja’s arrest. Very rarely one comes across such brilliant write ups.]]]

படித்தேன். மிக அருமை.. நன்றி கண்பத் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் குரல் said...

அண்ணே, இந்த ஜுவி புனைவு பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?]]]

சொல்லிவிட்டுப் போகிறார்கள். அதைவிட மோசமாக சக பதிவர்களே எழுதியிருக்கிறார்கள். படித்துவிட்டு, சிரித்துவிட்டுப் போக வேண்டியதுதான்..!

[[[பேசாம நீங்கள் எல்லாம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகி விடலாமே? சீனா மோசமான அமைப்பாக இருந்தாலும் அதனை குற்றவாளி என சொல்ல உங்களின் கேவலமான இந்திய-பார்ப்பன ஆதிக்க வர்க்கத்திற்கு எந்த தகுதியும் இல்லை.
எல்லா நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய முடியாதே? அதில் மன்மோகனுக்கும், பிரனாபிற்கும், மற்ற காங்கிரஸ் கொள்ளைகாரர்களின் பங்குள்ள நிறுவனங்கள் இருக்கிறதோ?]]]

இருக்கிறதோ.. இல்லை.. இருக்கிறது என்பதுதான் உண்மை. இதில் காங்கிரஸ்காரர்களுக்கும் பங்குண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் தட்டிக் கொடுத்து விசாரித்து வருகிறார்கள்..! லைசென்ஸ்களை கேன்ஸல் செய்யவும் மறுக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[தில்லு முல்லு said...

/////// சீனா மோசமான அமைப்பாக இருந்தாலும் ////

வாரே!!!!! வா !!

//////// அதனை குற்றவாளி என சொல்ல உங்களின் கேவலமான இந்திய-பார்ப்பன ஆதிக்க வர்க்கத்திற்கு எந்த தகுதியும் இல்லை...//////

ஓகே. ரைட் தமிழ்குரல். வேற யாரு சொல்லணும் சொல்றீங்க ? இந்தியானா பிறந்த எவனும் சொல்ல கூடாது. எங்ககிட்ட வந்து வோட்டு பிச்சை கேட்டு வாங்கிட்டு போனாங்களே. நாங்க இதை கூடவா கேக்க கூடாது. இது என்ன போங்கு ஆட்டம்..?]]]

இதுதான் பார்ப்பன ஆட்டம்.. பதில் சொல்ல முடியவில்லையெனில் ஆட்டத்தைத் திசை திருப்புவது..!