தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிதான் ஸ்பெக்ட்ரம் குற்றவாளி பால்வா..!

18-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியிருக்கும் ஸ்வான் நிறுவனத்தின் தலைவர் சையத் உஸ்மான் பால்வா கைது செய்யப்பட்டது குறித்து எழுதப்பட்ட இந்தப் பதிவிலேயே என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இருந்தது. அது  பால்வா நிர்வாக இயக்குநராக இருக்கும் டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராஹிம் என்று குறிப்பிட்டிருந்ததுதான்.

இது உண்மையாக இருக்குமா என்றெல்லாம் குழப்பம் எனக்குள்ளும் நீடித்திருந்தது. கராச்சியில் தலைமறைவாக இருந்து கொண்டு அவ்வப்போது துபாய்க்கு வந்து தனது சர்வதேச கடத்தல் தொழிலைச் செய்து வருவதாக சிபிஐ குற்றம் சாட்டியிருக்கும் தாவூத் இப்ராஹிம் எப்படி இந்தியாவில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் துணைத் தலைவராகவும், அதன் தொடர்பிலும் இருக்க முடியும் என்கிற கேள்வி எனக்குள் இன்னமும் இருந்து கொண்டே வருகிறது.

இந்த ஆச்சரியத்தை இன்னமும் அதிகப்படுத்தி அது உண்மைதான் என்று சொல்கிறார் மகாராஷ்டிரா மாநிலத்தின் போலீஸ் டி.எஸ்.பி.சிவானந்தன்.

லேட்டஸ்ட் ஜூனியர்விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் தாவூத் இப்ராஹிகமோடு ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டிருக்கும் சையத் உஸ்மான் பால்வாவுக்கு தொடர்பு உண்டு என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

அந்தப் பேட்டி இங்கே உங்களுக்காக :

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது போலீஸ் டி.ஜி.பி-யாக இருப்பவர்  சிவானந்தன் ஐ.பி.எஸ்., கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர். கிட்டத்தட்ட 35 வருட போலீஸ் பணியில் இருந்து, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.

பல வருடங்களுக்கு முன்பு, மும்பையை ரிமோட் கன்ட்ரோலில் இயக்கிவந்த தாவூத் இப்ராஹிம் போன்ற நிழல் உலக தாதாக்களை அடக்கியவர். 300-க்கு மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் மூலம் மும்பையில் தாதாக்களின் ஆட்டத்தை தணிய வைத்த  பெருமையும் இவருக்கு  உண்டு.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி சென்னை வந்திருந்தார் சிவானந்தன். எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீஸர்ஸ் மெஸ்ஸில் அவரை நாம் சந்தித்தோம்!

 ''நீங்கள் ரிட்டயர்டு ஆனதும் கோவைக்கு வந்து செட்டில் ஆகப் போகிறீர்களா?''

''இல்லையில்லை... மகாராஷ்டிராவில்தான் வசிக்கப்​ போகிறேன். அந்த மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். இங்கே நான் அறிமுகமில்லையே! அது மட்டு​மில்லாது அங்கே போலீஸார் என்னை ஒரு யூனியன் தலைவராகத்தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு என்ன அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலும் என்னை  உடனே தொடர்பு கொள்கிறார்கள். நானும் முடிந்ததை செய்து கொடுக்கிறேன்.

பதவி முடிந்ததும், முழு வீச்சில் இந்தப் பணியைத் தொடரும் திட்டம் வைத்திருக்கிறேன். போலீஸ்காரர்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக தானேயில் ஒரு பள்ளிக்கூடம் துவக்கியிருக்கிறோம். பிரம்மாண்டமான பில்டிங், பிரபல பள்ளிக்கூட பாடமுறை. கடந்த ஐந்து வருடத்தில் 2,000 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் பாதிப்பேர் போலீஸ்காரர்களின் பிள்ளைகள். இவர்கள் நாளைக்கு டாக்டர், இன்ஜினீயர் படிப்புகளுக்குப் போக  நாங்கள் தூண்டுதலாக இருக்கிறோம்.

போலீஸாருக்கென்று மூணரை கோடி ரூபாய் செலவில் ஆஸ்பத்திரி, விளையாட்டு ஸ்டேடியம், ஹோட்டல் ஊர்ஜிதா, புரவிஷன் ஸ்டோர்ஸ், காபே போன்றவை அமைத்திருக்கிறோம். அவையெல்லாம் மேலும் வளர்ச்சி அடைவதற்கான செயல்பாடுகளை விட்டுவிட்டு இங்கே வர நான் நினைக்கவில்லை!'' 

''2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி இருக்கும் ஷாகித் பால்வா மும்பையில் பிரபல புள்ளி. நீங்கள் மும்பை கமிஷனர், மாநில உளவுத்துறை தலைவராகவும் இருந்திருக்​​கிறீர்கள். இப்போது டி.ஜி.பி-யாக பதவியில் இருக்கிறீர்கள். பால்வாவுக்கும் நிழல் உலக தாதாவான தாவூத்துக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறதா?''


''மும்பையில் சாதாரண மக்களுக்குக்கூட இது தெரியும். பால்வாவுக்கும் தாவூத்துக்கும் கனெக்ஷன் உண்டு என்பதை யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். சாதாரண ஜனங்களுக்குத் தெரிவது போலீஸாருக்குத் தெரியாமல் இருக்குமா? சந்தேகத்தை கிளப்பும் பல தகவல்கள் சி.பி.ஐ. கையில் சிக்கியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் துணிந்து கைது செய்திருக்கிறார்கள்.
 

பால்வாவுக்கு  மிக செல்வாக்குள்ள அரசியல் தலைவர்களது   ஆசி உண்டு என்பதும் அனைவருக்கும் தெரியும். மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு, க்ரைம் விவகாரங்களில் பால்வா ஈடுபட்டிருந்தால், வேடிக்கை பார்த்திருக்க மாட்டேன். ஆனால், அவர் ரியல் எஸ்டேட் பிஸினஸில் பிரபலம்.

உதாரணத்துக்குச் சொல்வதென்றால், ஒரு சாதாரண பொதுஜனம் கஷ்டப்பட்டு 100 சதுர அடி நிலம் வாங்கி அதில் கட்டடம் கட்டப் போனால், அதற்கு ஆயிரம் தடை போடுவார்கள். ஆனால் பால்வா மாதிரியான மனிதர்கள் எவ்வளவு பெரிய பில்டிங்குகளையும் சர்வசாதாரணமாக எழுப்பி விடுவார்கள். எந்தத் தடையும் அவர்களது அதிகாரத்துக்கு குறுக்கே நிற்கமுடியாது. அந்த அளவுக்கு பவர்ஃபுல் கனெக்ஷன்கள் அவர்களுக்கு  இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் போலீஸ் கன்ட்ரோலில் வராது!''

''பால்வாவின் துபாய் தொடர்புகளை  வைத்து நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியாதா?''

''என்னை நீங்கள் கொல்ல வந்தால் நான் திருப்பித் தாக்கி  குற்றத்தைத் தடுக்கலாம். ஆனால் ஏ.ஸி. அறையில் உட்கார்ந்து கொண்டு கறுப்பு பணத் தொடர்பு மூலம் மிகப் பெரிய திட்டங்களை கொண்டு வந்து பிஸினஸ் செய்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் தொடர்புகள் வேறு இருக்கின்றன. மற்றபடி போலீஸுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லையே?


இந்த நேரத்தில் பஞ்சதந்திரக் கதை ஒன்றுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு விவசாயி தோட்டத்தில் நாய் ஒன்றையும், கழுதையையும் கட்டி வைத்திருந்தானாம். நள்ளிரவு நேரத்தில் தோட்டத்துக்கு திருடன் வந்தால், நாய் குரைக்கும் என்பது விவசாயி எதிர்பார்ப்பு. ஒரு நாள் நாய் தூங்கிவிட்டது. திருடன் புகுந்துவிட்டான். அவனைப் பார்த்து பதறிய கழுதை கத்தியதாம். அதைக் கேட்ட திருடன் தாவிக் குதித்து ஓடிவிட்டான். கழுதையின் விடாத கத்தலைக் கேட்டு விழித்தான் விவசாயி. 'தூக்கத்தைக் கெடுக்கிறீயே' என்று சொல்லி, தடி எடுத்து கழுதையை விளாசி தள்ளினானாம். அது மாதிரி, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலையைத்தான் அவரவர்கள் செய்யவேண்டும். மாறிச் செய்தால், கழுதைக்கு ஏற்பட்ட கதிதான் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறேன்!''

''பால்வாவின் வளர்ச்சி காரணமாக, வெளிநாட்டு தீவிரவாதம் உள்நாட்டுக்குள் வந்துவிடாதா? கடல் மூலம் மும்பையை நோக்கி வரும் தீவிரவாதம் எந்த அளவில் இருக்கிறது?''

''ஆபத்து எப்போதும் இருக்கிறது. பால்வா 2ஜி-யில் என்ன பண்ணினார் என்பதை சி.பி.ஐ. விசாரிக்கிறது. கூடிய விரைவில் முழு விவரமும் தெரியவரும். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க, மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது உளவுப் பிரிவை ஆற்றல் மிக்கதாக உருவாக்கி வருகிறோம். நேரடி தேர்வு மூலம் உளவுப் பிரிவுக்காக பிரத்யேகமாக 2,000 பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து  பயிற்சி தருகிறோம். 'மகாராஷ்டிரா இன்டெலிஜென்ஸ் அகாடமி.காம்' என்கிற இணையத்தளத்தில் போய் பாருங்கள். பிரமித்துப் போவீர்கள்!''

நன்றி : ஜூனியர்விகடன்

ஒரு மாநிலத்தின் போலீஸ் டிஜிபியே தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார் நாட்டின் மிகப் பெரிய கிரிமினலுடன் தொடர்புடையவர் இந்த பால்வா என்று..! ஆனாலும் அதனை உறுதிப்படுத்தி அவரைக் கைது செய்ய முடியாத சூழல் இருக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்கிறார். இதற்காக அவர் சொல்லும் காரணம், பால்வாவின் அரசியல் தொடர்புகள். ஆம்.. அரசியல்வியாதிகளின் ஆதரவு இருந்தால் போதும்.. யார் வேண்டுமானாலும் தீவிரவாதியாக மாற்றப்படலாம். யார் வேண்டுமானாலும் புண்ணியவானாக மாற்றப்படலாம்.

தனது அதிகாரத்துக்கு ஒரு எல்லை உண்டு என்பதைச் சொல்லி கழுதை-நாய் கதையை உதாரணமாக்குகிறார் சிவானந்தன். சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

அடுத்த முறை எங்காவது குண்டு வைக்கும்போது இந்த அரசியல்வியாதிகளின் குடும்பத்தினர் மட்டும் செத்துத் தொலைந்தால் அப்போதும் இப்படித்தான் இருப்பார்களா இவர்கள்..?

22 comments:

நையாண்டி நைனா said...

இந்த பால்வா கைதெல்லாம், ஒரு பாவ்லா கைது தான்..

ராஜ நடராஜன் said...

அண்ணே!தாவூத் இப்ராகிமின் புகைப்படம் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் முன்னதாக இருக்கலாம்.நீங்கள் மட்டுமல்ல,வட இந்திய தொலைக்காட்சிகளும் பம்பாய் குண்டுவெடிப்புக் கால கட்டத்திற்கு முன்பான படம்,ஸ்டில்களையே வெளியிடுகிறது.

நாளைக்கே சென்னை வந்து சிட்டிசென்ட்ரலில் ஷாப்பிங்க் செய்துகிட்டு பிசா சாப்பிட்டுகிட்டு உட்கார்ந்துகிட்டிருந்தாலும் உளவுத்துறைக்கு கூட இவன் தான் தாவூத் இப்ராஹிம்ன்னு தெரியாது:)

ராஜ நடராஜன் said...

உளவுத்துறைன்னு சொன்னதும் மிக ரகசியம் என்ற ரகசிய கடிதமொன்று படித்தேன்.பெரும் கார்பரேட்காரர்களின் சண்டைகள்,சினிமா தியேட்டரில் 100 ரூபா டிக்கட்டை 300க்கோ 500க்கோ விற்கிற மாதிரி இந்த ஆளுக 1500 கோடிக்கு வாங்கி 6000 கோடிக்கு விற்றது,கணக்கில் வராத கடன் என்கிற பெயரில் கடனை ஒருத்தரிடமிருந்தோ அல்லது வங்கியிலிருந்தோ வாங்கி லைசென்ஸ் வாங்கி காசை ஆட்டையப் போட்டதெல்லாம் பார்க்கும் போது ராசா சூப்புன விரல் கூலி பெரம்பலூர் வட்டாரம்,பங்களா இன்ன பிற அசையா சொத்து என்ற வெறும் கைசூப்பல் அளவுக்கு மட்டுமே என்பதும் பெருசுக்கு தெரிந்தோ தெரியாமலே கூட ஆட்டையப்போட்டதுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம்.கூடவே கருப்பு பணங்கள் வெள்ளையாகும் வித்தைகள்,வெளிநாட்டு வங்கிக்கு பணம் கடத்தல் என்ற இந்தியாவுக்கு துரோகப் படலமென்று இன்னும் கதை விரியும் போல தோணுது.

ரகசியங்களை விட்டுடுவேனா என்று பிடிவாதம் பிடிச்சதுல திகார் ஜெயிலில் வீட்டுச்சாப்பாடு சாப்பிடலாமென்ற அனுமதியுடன் பங்காளி ஒருத்தர் கூட ஒண்ணாம் நம்பர் அறையில தூங்குறாராம் ராசா.

புதுசு புதுசா எவன் எவனோ பேர் தெரியாதவென்ல்லாம் கதையில வர்றானே புலம்பல் பின்னூட்டக்காரர் திரும்பவும் வந்தா பல்வாகிட்ட புடிச்சுக்கொடுத்துடுவேன்னு சொல்லுங்க:)

ராஜ நடராஜன் said...

//ஆம்.. அரசியல்வியாதிகளின் ஆதரவு இருந்தால் போதும்.. யார் வேண்டுமானாலும் தீவிரவாதியாக மாற்றப்படலாம். யார் வேண்டுமானாலும் புண்ணியவானாக மாற்றப்படலாம்.//

மும்பையின் பாதாள உலகிற்கும்,இப்போதைய பல்வாவின் ஊழல்களுக்கும் கூட சரத்பவாரின் பெயர் அடிபடுகிறது.2007ல் டாடா எழுதின கடிதமே என்னிடம் இன்னும் வந்து சேரவில்லைங்கிற மாதிரி சரத்பவாரும் ஒரே அறிக்கையில் பல்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட்டார்.

நல்ல அரசியல்வாதிகளும்,நல்ல கார்பரேட் நிறுவன இயக்குநர்களும் இணைவதால் மட்டுமே ஒரு தனி மனித ஊதிய விகிதாச்சாரம் உயரும் சாத்தியமிருக்கிறது உலகளாவிய பொருளாதாரத்தில்.

இந்தியாவின் சாபம்தான் என்ன?

settaikkaran said...

சில மாதங்களுக்கு முன்பு, மும்பையின் நிழலுலக தாதாக்கள் அளித்த விருந்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியானதை அண்ணன் மறந்துவிட்டாரோ? 26/11 நிகழ்வுக்கு அப்புறமும் இது போல காவல்துறைக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு ஆல்போல் தழைக்கிறது என்றால், தலையிலடித்துக்கொண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு நம்மால் ஆவதென்ன? ஜெய் ஹோ!

ரிஷி said...

ஒரு சக்தி வாய்ந்த உயர் போலீஸ் அதிகாரியே தனது அதிகார எல்லைகளுக்குட்பட்டே பணியாற்ற முடியும் என்கிறார். உண்மைதான்! நாய் கழுதை கதை உதாரணமும் வெகு உண்மை!

நம்மால் இங்கு இணையவெளியில் கூச்சல் மட்டுமே போட முடிகிறது. ஒரு சலசலப்பை ஏற்படுத்த மட்டுமே முடிகிறது. அடியோடு புரட்டிப் போட முடிவதில்லை!
இருக்கிற அத்தனை கருப்புப் பணத்தையும் இங்கு கொண்டுவந்துவிட்டால் இந்திய பொருளாதாரம் நாசமாகப் போகும் என்கின்றனர் பத்ரி சேஷாத்ரிக்கள்!! இப்போ மட்டும் என்ன வாழ்ந்து கொண்டா இருக்கிறது??
இதை மாற்றவே முடியாதா??????

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...

இந்த பால்வா கைதெல்லாம், ஒரு பாவ்லா கைதுதான்..]]]

ஒரு வரி உடான்ஸுல குப்புறக் கவுத்திட்டியே நைனா..?!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அண்ணே! தாவூத் இப்ராகிமின் புகைப்படம் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் முன்னதாக இருக்கலாம். நீங்கள் மட்டுமல்ல, வட இந்திய தொலைக்காட்சிகளும் பம்பாய் குண்டு வெடிப்புக் காலகட்டத்திற்கு முன்பான படம், ஸ்டில்களையே வெளியிடுகிறது.]]]

இருக்கிறதைத்தாண்ணே வெளியிட முடியும்.. சில தனி நபர்கள் அல்ல.. ஒரு அமைப்பு, சில அமைப்புகள் அல்ல.. ஒரு நாடே.. ஒரு நாட்டின் அரசாங்கமே அவனை பாதுகாத்து வருகிறது.. எப்படி பாலோ செய்ய முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

உளவுத்துறைன்னு சொன்னதும் மிக ரகசியம் என்ற ரகசிய கடிதமொன்று படித்தேன். பெரும் கார்பரேட்காரர்களின் சண்டைகள், சினிமா தியேட்டரில் 100 ரூபா டிக்கட்டை 300க்கோ 500க்கோ விற்கிற மாதிரி இந்த ஆளுக 1500 கோடிக்கு வாங்கி 6000 கோடிக்கு விற்றது, கணக்கில் வராத கடன் என்கிற பெயரில் கடனை ஒருத்தரிடமிருந்தோ அல்லது வங்கியிலிருந்தோ வாங்கி லைசென்ஸ் வாங்கி காசை ஆட்டையப் போட்டதெல்லாம் பார்க்கும்போது ராசா சூப்புன விரல் கூலி பெரம்பலூர் வட்டாரம், பங்களா இன்ன பிற அசையா சொத்து என்ற வெறும் கைசூப்பல் அளவுக்கு மட்டுமே என்பதும் பெருசுக்கு தெரிந்தோ தெரியாமலே கூட ஆட்டையப் போட்டதுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கூடவே கருப்பு பணங்கள் வெள்ளையாகும் வித்தைகள், வெளிநாட்டு வங்கிக்கு பணம் கடத்தல் என்ற இந்தியாவுக்கு துரோகப் படலமென்று இன்னும் கதை விரியும் போல தோணுது.
ரகசியங்களை விட்டுடுவேனா என்று பிடிவாதம் பிடிச்சதுல திகார் ஜெயிலில் வீட்டுச்சாப்பாடு சாப்பிடலாமென்ற அனுமதியுடன் பங்காளி ஒருத்தர்கூட ஒண்ணாம் நம்பர் அறையில தூங்குறாராம் ராசா.
புதுசு புதுசா எவன் எவனோ பேர் தெரியாதவென்ல்லாம் கதையில வர்றானே புலம்பல் பின்னூட்டக்காரர் திரும்பவும் வந்தா பல்வாகிட்ட புடிச்சுக் கொடுத்துடுவேன்னு சொல்லுங்க:)]]]

சரி.. சொல்லிடறேன்.. கார்ப்பரேட்டுகளே காசை அள்ளியதாக இருக்கட்டும்.. பிச்சைக் காசை பெற்ற பிச்சைக்காரனாகவே ஆ.ராசா இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தப் பிச்சைக்காக இவரை முதன் முதலில் தண்டித்தாலாவாது இனி வரும் காலங்களில் இவரைப் போன்ற வேறொரு பிச்சைக்காரன் உருவாகாமல் தடுக்கலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//ஆம்.. அரசியல்வியாதிகளின் ஆதரவு இருந்தால் போதும்.. யார் வேண்டுமானாலும் தீவிரவாதியாக மாற்றப்படலாம். யார் வேண்டுமானாலும் புண்ணியவானாக மாற்றப்படலாம்.//

மும்பையின் பாதாள உலகிற்கும், இப்போதைய பல்வாவின் ஊழல்களுக்கும்கூட சரத்பவாரின் பெயர் அடிபடுகிறது. 2007ல் டாடா எழுதின கடிதமே என்னிடம் இன்னும் வந்து சேரவில்லைங்கிற மாதிரி சரத்பவாரும் ஒரே அறிக்கையில் பல்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார். நல்ல அரசியல்வாதிகளும், நல்ல கார்பரேட் நிறுவன இயக்குநர்களும் இணைவதால் மட்டுமே ஒரு தனி மனித ஊதிய விகிதாச்சாரம் உயரும் சாத்தியமிருக்கிறது உலகளாவிய பொருளாதாரத்தில். இந்தியாவின் சாபம்தான் என்ன?]]]

சரத்பவார் போன்ற மலிவான அரசியல்வியாதிகள் துணையுடன் ஆட்சியில் இருக்க நினைக்கும் இந்த வெட்கம்கெட்ட காங்கிரஸ் கட்சியைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

சில மாதங்களுக்கு முன்பு, மும்பையின் நிழலுலக தாதாக்கள் அளித்த விருந்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியானதை அண்ணன் மறந்துவிட்டாரோ? 26/11 நிகழ்வுக்கு அப்புறமும் இது போல காவல்துறைக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு ஆல்போல் தழைக்கிறது என்றால், தலையிலடித்துக் கொண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு நம்மால் ஆவதென்ன? ஜெய் ஹோ!]]]

வாழ்க பாரதம்..! வாழிய நாடு..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

ஒரு சக்தி வாய்ந்த உயர் போலீஸ் அதிகாரியே தனது அதிகார எல்லைகளுக்குட்பட்டே பணியாற்ற முடியும் என்கிறார். உண்மைதான்! நாய் கழுதை கதை உதாரணமும் வெகு உண்மை!

நம்மால் இங்கு இணையவெளியில் கூச்சல் மட்டுமே போட முடிகிறது. ஒரு சலசலப்பை ஏற்படுத்த மட்டுமே முடிகிறது. அடியோடு புரட்டிப் போட முடிவதில்லை! இருக்கிற அத்தனை கருப்புப் பணத்தையும் இங்கு கொண்டு வந்துவிட்டால் இந்திய பொருளாதாரம் நாசமாகப் போகும் என்கின்றனர் பத்ரி சேஷாத்ரிக்கள்!! இப்போ மட்டும் என்ன வாழ்ந்து கொண்டா இருக்கிறது? இதை மாற்றவே முடியாதா?]]]

முடியும்.. எகிப்து போன்ற ஒற்றுமையுடன் தெருவில் இறங்கினாலோ, அல்லது அதே ஒற்றுமையை தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் காட்டினாலோ செய்து காட்டலாம்..!

Sankar Gurusamy said...

Such are the people with BAD Money doing the BAD Things. This is spread across the Government from TOP to Bottom cutting across the Party Lines.

Very SAD..

http://anubhudhi.blogspot.com/

Indian Share Market said...

இது காங்கிரஸ் ( சோனியா, ராகுல் ) வேலை..... ஜுஜுபி மேட்டர், இதுக்கு எல்லாம் எங்க தாத்தா அசைய மாட்டார் ....

உண்மைத்தமிழன் said...

[[[Sankar Gurusamy said...

Such are the people with BAD Money doing the BAD Things. This is spread across the Government from TOP to Bottom cutting across the Party Lines. Very SAD..

http://anubhudhi.blogspot.com/]]]

இது நம்மைப் பீடித்த நோயாக உள்ளது. குணப்படுத்த முடியாவிட்டால் பாகத்தை வெட்டி விடுவதுதான் ஜனநாயகம் என்னும் நமது உயிருக்கு நல்லது..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

இது காங்கிரஸ்(சோனியா, ராகுல்) வேலை. ஜுஜுபி மேட்டர், இதுக்கு எல்லாம் எங்க தாத்தா அசைய மாட்டார்.]]]

நாங்க அடிக்கிற மாதிரி அடிக்கிறோம். நீங்க வாங்குற மாதிரி வாங்குங்கன்னு சொல்லி வைச்சு நடிக்கிறாங்கப்பா..

Ashok D said...

thank you Ji... for sharing :)

Ashok D said...

படம் ஒன்னு போட்டு நண்பர்கள தலைதெறிக்க ஓட வெச்சியிருக்கீங்க போல :))

ரிஷி said...

வழக்கமா அறுபதுக்கு மேலே பின்னூட்டங்கள் குவியும். வந்திருக்கறதப் பார்த்தா எல்லாருக்கும் இது போன்ற விஷயங்கள் சலிச்சுப் போச்சுங்கறது மட்டும் நல்லாத் தெரியுது!!

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...

thank you Ji... for sharing :)]]]

நன்றி அசோக்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...

படம் ஒன்னு போட்டு நண்பர்கள தலைதெறிக்க ஓட வெச்சியிருக்கீங்க போல :))]]]

இன்னிக்கு, இன்னொரு படத்தைப் பார்த்துட்டு நேத்தைக்குவிட அதிக ஸ்பீட்ல ஓடி வந்திருக்கேன் வீட்டுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...
வழக்கமா அறுபதுக்கு மேலே பின்னூட்டங்கள் குவியும். வந்திருக்கறதப் பார்த்தா எல்லாருக்கும் இது போன்ற விஷயங்கள் சலிச்சுப் போச்சுங்கறது மட்டும் நல்லாத் தெரியுது!!]]]

அதேதான் ரிஷி. இதுதான் நம்ம மக்களின் இயல்பான மனநிலை. இதெல்லாம் சகஜம்தான என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்..!