மீராவுடன் கிருஷ்ணா - சினிமா விமர்சனம்

30-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹீரோ கிருஷ்ணா கொஞ்சம் கோக்குமாக்கான குணமுடையவர்.  சின்ன வயசுல அவர் கண்ணுல பட்டதெல்லாம் பலான, பலான மேட்டராவே இருக்கறதால, அப்பவே அந்த விஷயத்துல கொஞ்சம் டிஸ்டர்ப்பானவர். போதாக்குறைக்கு அவரோட ரோல் மாடலாவும், காட்பாதராவும் இருந்த வாத்தியார் ஒருத்தரும் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவராக உருவெடுக்க.. அது அழிக்க முடியாத வடுவாக கிருஷ்ணாவின் மனதில் பதிந்துவிடுகிறது.


தனது அம்மாவின் கல்யாண வற்புறுத்தலை இதன் காரணமாகவே மறுத்துவரும் கிருஷ்ணா, மீரா என்னும் டாக்டருக்கு மட்டும் தலையாட்ட வேண்டி வருகிறது.  திருமணம் முடிந்ததும் மற்றவர்களைப் போல மனைவியுடன் விளையாட கிருஷ்ணாவுக்கு நேரமில்லை.  தனக்காவது துரோகம் செய்யாத மனைவியாக இவள் இருப்பாளா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணா.  இந்த நேரத்தில் மீரா வேலை செய்யும் மருத்துவமனையின் சீப் டாக்டர், மீரா தனக்குக் கிடைக்காத கோபத்தில் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய கதையாக செல்போனில் மீராவைப் பற்றி பற்ற வைத்துவிட.. அது கொழுந்துவிட்டு எரியத் துவங்குகிறது.. மனைவியைப் பிரிய வேண்டிய சூழலில் கிருஷ்ணாவுக்கு மயக்கம் தெளிந்ததா..? அல்லது மீரா தனியே போனாளா என்பதைத்தான் மிச்சம், மீதியிருக்கும் ரீலில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

நிச்சயமாக இந்தக் கேரக்டரில் நடிக்க இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் எந்த நடிகரும் இல்லை..! ஏனெனில் இது ஒரு கதையே இல்லை என்பார்கள்.. ஏற்கெனவே அண்ணன் கரு. பழனியப்பன் 'மந்திரப் புன்னகை'யில் சிறு வயது பாதிப்புகளை வைத்து ஒரு கதை செய்துவிட்டார். அதற்கு முன்பாக ஏழெட்டு படங்களிலும் இது பல்வேறு விதமாக கொத்து புரோட்டா போடப்பட்டுவிட்டது..

தம்பதிகள் ஒருவருக்கொரு சந்தேகப்படக் கூடாது.. குடும்பம் என்பது தேன்கூடு. அதில் சந்தேகம் என்னும் கல்லைக் கொண்டு கூட்டைக் கலைக்க வேண்டாம் என்றெல்லாம் தத்துவங்களை உதிர்த்து படத்தை விளம்பர இஷ்யூவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இயக்குனரே ஹீரோவாகியிருக்கிறார். வேறு ஹீரோக்கள் கிடைக்கவில்லை என்பதால் தானே ஹீரோவானதாக இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கூறினார். மகிழ்ச்சி.. ஆச்சரியப்படும்விதமாக சில சில ஆக்சன்களில் அசத்தியிருக்கிறார் நடிகர் கிருஷ்ணா. 
நடுத்தர வயது ஹீரோவாக தோற்றமளிப்பது ஒன்றுதான் அவருக்குப் பிரச்சினையே தவிர.. நடிப்பில்லை.. கண்ணாடி முன்பாக நின்று கொண்டு தன்னை வேறு வேறு உருவங்களில் உருவகப்படுத்திக் கொண்டு அவர் செய்யும் மேனரிசம் அசத்தல்..!  மனைவி சொல்லும் காரணங்களை நம்ப முடியாமல் மீண்டும், மீண்டும் தவறாகவே எண்ணிக் கொள்ளும் வேகமும், அந்த கேரக்டரின் பாவனைகளையும் மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

மனைவி மீராவாக நடித்தவர் நல்ல தேர்வு. குடும்பப் பாங்கான பொண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேடிக் கண்டுபிடித்தாராம்..! கணவனை முதலில் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து, பின்பு ஓரளவுக்கு பேசி சரிப்படுத்துவிடலாம் என்று நினைத்து அவர் செய்யும் முயற்சிகள் படத்திற்கு ஓகேதான்..  மேலும் அவர் டாக்டராகவும் இருக்கிறார் என்பதால் ஓரளவுக்கு திரைக்கதையை லாஜிக் பார்க்க முடியாத அளவுக்குக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். செல்போனில் தொடர்ந்து பிட்டு நியூஸ் கொடுக்கும் சீப் டாக்டரை மட்டும் கண்டுபிடிக்கத் தெரியாதவராக இருப்பது ஒன்றுதான் மிகப் பெரிய ஓட்டை.

கிருஷ்ணாவின் டார்ச்சர் தாங்காமல் கோபத்தில் பல இடங்களில் அவரை யோவ்.. வாடா.. போடா.. என்றெல்லாம் மீரா அழைக்கின்ற அந்த சில காட்சிகள் மிக ரகளையானவை..!  பல குடும்பங்களின் சீரழிவுக்கு சந்தேகமும் ஒரு காரணம் என்றாலும், அதனை யோசித்துப் பார்த்து, சோதித்துப் பார்த்து, நம்பலாமா வேண்டாம் என்றுகூட சிந்திக்காமல் செயல்படும் பலரது அவசரத்தனம்தான் பல குடும்பங்களை அழித்திருக்கிறது..!

இந்த ஒரு சின்ன விஷயத்தைக்கூட தனது நண்பனின் கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் மனைவியை சந்தேகிக்கும்வகையில் அவர் சொல்லிக் கொடுக்கும் வழிமுறைதான் மிக ஆபத்தானதாக இருக்கிறது. ஒருவேளை படம் பார்க்க வரும் தம்பதிகள் இதையெல்லாம் பார்த்து, கேட்டு அவர்களுக்கே பிரச்சினையாகப் போகிறது..!

அவரது ரோல்மாடல் வாத்தியார் தமிழின் வாழ்க்கைக் கதை மிக உருக்கமானது. இதுபோன்று ஊருக்கு ஒருத்தர் நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதற்காக அனைவரையும் சந்தேகப்படும் குணத்தை வியாதியாகத்தான் பாவிக்க வேண்டும். கிளைமாக்ஸில் ஒரு நொடியில் திருந்திவிடுவதற்கெல்லாம் பெயர் வியாதி இல்லையே..? 

ஆண்களின் சந்தேக புத்திக்கு பெண்ணை பலிகடாவாக்கி இவ்வளவு சோகமாக படத்தை முடித்திருக்க வேண்டாம்..!  இப்போதும் கிருஷ்ணாவுக்குள் இருக்கும் அந்த பேய் போனதா இல்லையா என்பதையும் தெளிவாகச் சொல்லாமல், அப்படியே நிறுத்தியிருக்கிறார்..!
இயக்கத்தில் எந்தக் குறையும் இல்லாமல்தான் செய்திருக்கிறார் கிருஷ்ணா. அதற்காக தனி பாராட்டுக்கள் அவருக்கு..! அவரிடம் வேலை செய்யும் பானை என்ற அந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஒரு சபாஷ். வித்தியாசமான முக பாவனையுடன் பல காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். 

பாடல்களைப் பற்றி தனியே சொல்லும் அளவுக்கு ஏதுமில்லை. ஆனாலும் இது போன்ற குடும்பக் கதையம்சமுள்ள படங்களில் பாடல்களை அதிகம் வைத்து அதன் மூலம் இன்னமும் அழுத்தமான காட்சிகளை காட்டலாம்.  இதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும், ஏனோ இயக்குநர் அதனைத் தவிர்த்திருக்கிறார்..! அதேபோல் அந்த சிலுக்கு வாய்ஸில் கொஞ்சும் வேலைக்காரி கேரக்டரையும் தவிர்த்திருக்கலாம்..! 

நல்ல படங்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தில் மக்கள் இருப்பதென்னவோ உண்மைதான். ஜாலியாக, பொழுதைப் போக்க வரும் மக்களிடத்தில் அறிவுரையை கொஞ்சமாக வைத்து கலாட்டாவை அதிகமாக்கினால்தான் அவர்களுக்குப் பிடிக்கும். இதில் அறிவுரை அதிகமாகி, கலாட்டாக்கள் குறைவாக இருப்பதுதான் படத்துக்கு மிகப் பெரிய மைனஸ்..!

ஒரு முறை பார்க்கலாம்..!



10 comments:

ராம்ஜி_யாஹூ said...

செய்தி வாசிப்பாளர் மீரா கிருஷ்ணா நடித்த படமோ என்று ஓடோடி வந்தேன் விமர்சனப் பதிவு படிக்க

Anonymous said...

செய்தி வாசிப்பாளர் மீரா கிருஷ்ணாவின் கணவர்தான் இந்த ஹீரோ என்று கேள்விப்பட்டேன்....?

கோவை நேரம் said...

என்னது ..ஒருமுறை பார்க்கலாமா..///ஒருமுறை கூட பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க...

MAHESHWARAN said...

director unga friend gala anna?

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

செய்தி வாசிப்பாளர் மீரா கிருஷ்ணா நடித்த படமோ என்று ஓடோடி வந்தேன் விமர்சனப் பதிவு படிக்க..]]]

அவர் நடிக்கவில்லை. அவர் நடித்திருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

செய்தி வாசிப்பாளர் மீரா கிருஷ்ணாவின் கணவர்தான் இந்த ஹீரோ என்று கேள்விப்பட்டேன்....?]]]

ஐயா சாமி.. இந்த இயக்குநருக்கு இன்னும் கல்யாணமே ஆகலையாம்.. கம்பெனியை கெடுத்திராதீங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[kovai Neram said...

என்னது.. ஒரு முறை பார்க்கலாமா..///ஒரு முறைகூட பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க...]]]

இல்லை.. ஒரு முறை பார்க்கலாம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[MAHESHWARAN said...

director unga friend gala anna?]]]

இல்லையே.. ஏன் கேக்குறீங்க..?

உலக சினிமா ரசிகன் said...

வெங்காயம் படத்துக்கு பதிவு போடவில்லையே!!ஏன்?

உண்மைத்தமிழன் said...

[[[உலக சினிமா ரசிகன் said...

வெங்காயம் படத்துக்கு பதிவு போடவில்லையே!!ஏன்?]]]

படம் பார்த்திட்டு போடுறேன்..!