18-03-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அரவான் போன்ற படங்களுக்கே மக்களிடையே பெரும் வரவேற்பில்லாத சூழலில், பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள் இல்லாமல், கதையை மட்டுமே நம்பி வந்துள்ள படம் இது. புதிய இயக்குநர்கள் புதிய கோணத்தில் ஒரு விஷயத்தை சொல்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றாலும், அதனை வணிக ரீதியாகவும் வெற்றி பெற வைத்து சினிமா தொழிலின் வளர்ச்சிக்கும் வழிவகை செய்தால் நன்றாக இருக்கும்..!
இப்படம் பார்த்து முடிந்த பின்பு, இதனை எப்படி மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பது என்று நினைத்துப் பார்த்தேன். எந்த வழியும் தெரியவில்லை. தற்போதைய நிலையில் மக்களுக்கு தினமும் ஒரு பிரச்சினைகள் கூடுதலாக வந்து கொண்டே இருக்கின்றன. இதிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு பொழுது போக்கிற்காக சினிமா தியேட்டர்களை நாடி வருபவர்களை இது போன்ற 2 மணி 10 நிமிட துன்பவியல் காவியங்கள் எந்த அளவுக்கு ஈர்க்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் படத்தை எடுத்தவிதத்தில் ஒரு சினிமாக்காரனாக எனக்கு திருப்திதான்..!
பிறக்கும்போதே உடலின் ஒரு பாதி இயங்காத நிலையில், காலம் முழுக்க வீல்சேரில்தான் இருக்க வேண்டியிருக்கும் நிலைமையுள்ள குழந்தையை மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி வளர்த்தெடுக்கும் பெற்றோர்கள்.. வளர்ந்த பின்பு, அந்த இளைஞன் தனது வாலிப வயதில் சந்திக்கும் ஒரு பெண்ணின் சிநேகமும், நட்பும் அவனது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதையும், அந்த அனுபவத்தின் மூலம் அவன் உணர்கின்ற உண்மையையும் சொல்கிறது இப்படம்.
பையனின் பிறப்பு முதல், அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும், அதற்கேற்றாற்போன்ற குழந்தை, சிறுவனை வைத்து இயக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது.. குழந்தை பிறந்தது முதல் துவங்கும் சோக ஓவியம், அதன் பின்பு படம் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதால் அந்த இளைஞன் மீதான நமது பரிதாப உணர்வு மிகுதியாகக் கொண்டேதான் செல்கிறதே தவிர.. அதுவொரு சினிமா என்பதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..!
அம்மாவாக நடித்திருக்கும் ஷிகாதான் பெரிய அளவில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். முடிந்த அளவுக்கு அவருக்கான குளோஸப் காட்சிகளை அதிகமாக வைத்து அந்தச் சோகத்தை அவரது கண்களில் இருந்தே காண்பித்து தனது இயக்கத் திறமையை காட்டியிருக்கிறார் இயக்குநர்..!
குழந்தையை அப்படியே வேறொருவரிடம் வளர்க்கக் கொடுக்கும்படி மருத்துவர் சொல்லும் இடத்தில் மருகும், உருகும் ஷிகாவின் நடிப்பும், அப்பாவாக நடித்த ராகுலின் நடிப்பும் உண்மையாகவே இருந்தது..! பையனை பள்ளியில் சேர்க்க விரும்பி அழைத்துச் செல்லும் இடத்தில் பையனின் புரிந்து கொள்ளல் பற்றி ராகுல் செய்யும் விளையாட்டு திடீர் அதிர்ச்சியாக இருந்தாலும், அதைவிட அதிர்ச்சி, பையனின் திடீர் பேச்சுதான்..! கொஞ்சம், கொஞ்சமாக பேசி வருகிறான் என்பதை முதலிலேயே சொல்லியிருந்தால் சட்டென மனம் ஏற்றிருக்கும்.. திடீரென்று நார்மலானவர்களை போன்று பேசுவது கொஞ்சம் அதிகப்படியான காட்சியாகவே தோன்றுகிறது..!
ராகுலின் மேஜிக் தொழில் எதற்காக என்பதும் இன்னொரு சின்னக் குழப்பம். அது எந்தவிசத்திலும் படத்திற்கு பலனளிக்கவில்லை என்பதுதான் சோகம். வேறு கேரக்டர் ஸ்கெட்ச் தயார் செய்திருக்கலாம்.. படத்தோடு ஒன்றிப் போவதற்கு ஹீரோ மட்டுமே தேவையாய் இருந்தார். ஆனால் அவரையும் வீல் சேரில் அமர வைத்துவிட்டால் வேறு என்ன செய்வது..?
பாண்டியராஜன் கதையைக் கேட்டவுடன் நிமிடமும் தாமதிக்காமல் ஒத்துக் கொண்ட கதை என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது சொன்னார். பாராட்ட வேண்டும். அவருக்கான ஸ்கோப் நிறையவே இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு படத்தினை அவர்தான் தாங்கிப் பிடிக்கிறார். அனுஜாவுக்கும், தனக்குமான நட்பை காதல் என்று நினைத்து பேசும் ஹீரோவிடம் அது பற்றி எடுத்துரைக்கும் அவருடைய பேச்சு எளிமையானது..! இது போன்று எதார்த்தமான, மேக்கப் நடிப்பாக இல்லாமல் இருக்கும் பாண்டியராஜினின் தேவை தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அவசியம் தேவைதான்..!
பரிதாபத்தில் பிறக்கும் உணர்வை காதல் என்று நினைப்பதும்.. அதனை பட்டென்று அனுஜா போட்டுடைத்துவிட்டு போவதும்.. பின்னான தொடர்ந்து காதலுக்காக முயலும் காட்சிகளும் வழக்கமான படங்களில் சொல்லப்படுவதுதான்.. இந்தப் படத்தில் இது தேவைதானா என்று கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டார் இயக்குநர்..!
அனுஜாவின் அப்பா ஹீரோவை அவமானப்படுத்தும் விதமும், அதற்கடுத்து ஹீரோ தானாகவே செயல்பட எடுக்கும் முயற்சிகளும் பாராட்டுக்குரியது. இதைத்தான் இயக்குநர் சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன். இந்த கிளைமாக்ஸ் நிச்சயம் பாராட்டுக்குரியது. பரிதாபத்தில் ஏற்படும் காதலை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த உண்மையை ஹீரோ இறுதியில் உணர்ந்து கொள்வதும் ஏற்கக் கூடியதுதான்..
இது போன்ற குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்த்துவரும் பெற்றோர்களுக்கான சில செய்திகளும் படத்தில் உண்டு. இவர்களுக்காகத்தான் இப்படம் எனில் இயக்குநருக்கு ஒரு சல்யூட்டுதான்..! படம் முழுவதிலும் இயக்கத்தில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாகத்தான் இருக்கிறது. இதற்கடுத்து சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு. மிக அழகு.. காட்சிக்கு காட்சி, பிரேமுக்கு பிரேம்.. அழகைக் கொட்டுகிறது திரை..! ஒளிப்பதிவாளர் ஆன்ந்திற்கு தமிழ்ச் சினிமாவில் மிகச் சிறப்பான எதிர்காலம் உண்டு.. நிச்சயம் உயரத்திற்கு வருவார் என்றே நம்புகிறேன். படத்தின் டிரெயிலர் பார்த்த உடனேயே இணையத்தில் இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் பின்புதான் ஆனந்த், நமது சக தோழர் ஜீவானந்தத்தின் மகன் என்பது தெரிந்தது.. வாழ்க..!
படத்தின் இசையமைப்பாளரை பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் டிரெயிலர் வெளியீட்டின்போதே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். ஜூபின். 'பொல்லாங்கு', 'விண்மீன்கள்', 'பழைய வண்ணாரப்பேட்டை' என்று 3 படங்களிலும் இசையை கலக்கலாக செய்திருக்கிறார்..! இதில் 'உன் பார்வையில்' என்ற பாடல் சொக்க வைக்கிறது..! ரொம்ப நாள் கழித்து எனக்கு மீண்டும், மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது இப்பாடல்தான்..! ஜூபினும் ஒரு ரவுண்டு வருவார் என்றே திடமாக நம்புகிறேன்..!
படத்தின் இயக்குநர் விக்னேஷ் மேனன், பழம்பெரும் இயக்குநர் சங்கரின் பேரனாம். வாழ்த்துகள். முதல் படத்திலேயே ஒரு பெரிய கவன ஈர்ப்பை செய்திருக்கிறார். ஆனால் இத்தனை செய்தும், பல லோ பட்ஜெட் படங்களில் இருப்பதைப் போன்று எழுத்துப் பிழையோடு டைட்டில்கள் ஓடியதைப் பார்த்து கோபமாகத்தான் வந்தது.. அதுவும் எடுத்த எடுப்பிலேயே மது உயிரைக் கொள்ளும் என்று எழுதி, அதனை 30 நொடிகளுக்கு அப்படியே வைத்திருந்ததே மகா கொடுமை..! இறுதி டைட்டில்களிலும் பல எழுத்துப் பிழைகள்.. உழைப்பையும், சிரத்தையையும் மற்ற எல்லா விஷயங்களிலும் செலுத்துங்க இயக்குநரே..!
இப்போதைய தமிழ்ச் சினிமாவின் வியாபாரச் சூழலில் இதுவொரு ஆச்சரியமான படம்தான்.. இது போன்ற உடல் குறைபாடு கொண்ட ஒருவனை மையப்படுத்தி எடுத்த முதல் தமிழ்ச் சினிமா என்றும் சொல்லலாம்..! சினிமாக்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால்தான் அதன் தயாரிப்பாளருக்கும் நல்லது. தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும் நல்லது. நல்ல படம், நல்ல பெயர் மட்டும் எடுத்துவிட்டால் இயக்குநருக்கு போதும்தான். ஆனால் தயாரிப்பாளருக்கு..? போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிட்டால் அவர் மீண்டும் ஒரு படத்தினை தயாரிக்க முன் வரலாம்..! இதனை மனதில் வைத்து இயக்குநர்கள் தங்களுடைய பெயர், புகழையெல்லாம் கொஞ்சம் ஓரம்கட்டிவிட்டு மக்கள் விரும்பும்வகையில் அவர்களுக்கேற்றவகையில் கொஞ்சம் கசப்போடு கூடிய மருந்தாக தந்தால் தமிழ்ச் சினிமாவுலகத்திற்கும் நல்லது.. அவர்களுக்கும் நல்லது.. தயாரிப்பாளர்களுக்கும் நல்லது..!
இந்த விண்மீன்கள் நிச்சயம் ஒரு நட்சத்திரம்தான்..!
|
Tweet |
14 comments:
வாங்க. Back to the form...!!!
பன்முக விமர்சனம், அருமை
டைட்டில எழுத்துப் பிழை எல்லாம் வருகிறதா
ஸ்பெல் செக் மென்பொருள்கள் பயன் பாடு இல்லையா
தமிழ் சினிமா இன்னமுமா பின் தங்கி இருக்கிறது
உயிரைக் கொள்ளும்ங்கிறது சரிதானே..
[[[சீனு said...
வாங்க. Back to the form...!!!]]]
ஒரு பதிவு இடைல சொந்தக் கதையை போட்ட உடனேயே எங்கயோ போயிட்டேன்னு நினைச்சுட்டீங்களா..?
[[[ராம்ஜி_யாஹூ said...
பன்முக விமர்சனம், அருமை.]]]
மிக்க நன்றிகள் அண்ணே..!
[[[ராம்ஜி_யாஹூ said...
டைட்டில எழுத்துப் பிழை எல்லாம் வருகிறதா..? ஸ்பெல் செக் மென்பொருள்கள் பயன்பாடு இல்லையா?
தமிழ் சினிமா இன்னமுமா பின் தங்கி இருக்கிறது..?]]]
டைட்டில்ஸை தயாரிக்கச் சொல்லி ஒருவரிடம் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். அவர் ஒரு ஸ்டைலில் அல்லது பாண்ட்டில் எழுதித் தருவார். அவருடைய துணையாளர்களின் கைவண்ணம் இதுதான்..!
இந்த ஒரு படம் என்றில்லை.. பல படங்களிலும் டைட்டில்களின் எழுத்துப் பிழைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன..!
[[[முகிலன் said...
உயிரைக் கொள்ளும்ங்கிறது சரிதானே..]]]
முகிலன் ))))))))))))))
நல்ல விமர்சனம்
எல்லா விடயங்களைப் பற்றி ஆராய்ந்த விரிவான விமர்சனம். நன்றி. சீக்கிரம் பார்த்துவிடுகிறேன்.
[[[hotlinksin said...
நல்ல விமர்சனம்]]]
மிக்க நன்றிகள்..!
[[[ஹாலிவுட்ரசிகன் said...
எல்லா விடயங்களைப் பற்றி ஆராய்ந்த விரிவான விமர்சனம். நன்றி. சீக்கிரம் பார்த்து விடுகிறேன்.]]]
நன்றி ரசிகன்ஜி.. எல்லா படத்துக்கும் இப்படித்தான் சொல்றீங்க.. படம் பார்த்த பின்னாடி வந்து சொல்ல மாட்டேன்றீங்க..?
YOUR WRITEUP ON CINEMA FIELD AND MOVIES ARE GOOD PLS TRAY TO GIVE MORE INFO ABOUT THAT FIELD LIKE "VIKRAMAN SONNA RAHASYAM" IN YOUR BLOG SO THAT OTHER PEOPLE GET MORE INFO I READ MR>R P RAJANAYAHAM BLOG LONG TIME BACK IT WAS FULL OF INFO ABOUT STARS MOVIE MAKING SO THAT COMMON PEOPLE LIKE US WILL COME TO KNOW
[[[ravikumar said...
YOUR WRITEUP ON CINEMA FIELD AND MOVIES ARE GOOD PLS TRAY TO GIVE MORE INFO ABOUT THAT FIELD LIKE "VIKRAMAN SONNA RAHASYAM" IN YOUR BLOG SO THAT OTHER PEOPLE GET MORE INFO I READ MR.R.P.RAJANAYAHAM BLOG LONG TIME BACK IT WAS FULL OF INFO ABOUT STARS MOVIE MAKING SO THAT COMMON PEOPLE LIKE US WILL COME TO KNOW.]]]
இனிமேல் முயற்சி செய்கிறேன் நண்பரே.. ராஜாநாயகம் அண்ணே எனக்கும் நல்ல நண்பர். நானும் அவரது ரசிகர்களில் ஒருவன்.. அவர் எழுதாமல் இருப்பதில் எனக்கும் வருத்தமே..!
Post a Comment