20-03-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு கல் ஒரு கண்ணாடி
'ஒரு கல் ஒரு கண்ணாடி'யின் இசை வெளியீட்டு விழா அமர்க்களமாக நடந்து முடிந்தது..! தயாரிப்பாளரின் செல்வாக்கினால் மிக முக்கிய இயக்குநர்களும், நடிகர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தார்கள். உதயநிதிக்கு காதல் காட்சிகளில் நடிப்பை வரவழைக்க உதவி இயக்குநர்களையே ஹீரோ, ஹீரோயினாக்கி நடிக்க வைத்து பயிற்சி கொடுத்ததாக இயக்குநர் சொன்னபோது, இவ்ளோ கஷ்டம் தேவையா என்றுதான் தோன்றியது.. ஆனாலும் உதயநிதி வெகுளியாகப் பேசுகிறார். “இந்த ஒரு படம் ஓடினால் தொடர்ந்து நடிப்பேன். இல்லைன்னா தயாரிப்பு மட்டும்தான்..” என்கிறார் திடமாக..! நல்லவேளை, தமிழ்நாட்டை காப்பாத்தினீங்கண்ணே.. நன்றி..!
படத்தின் டாக்கிங் போர்ஷன் 3 மாதங்களுக்கு முன்பாகவே முடிந்துவிட்டாலும் ஹாரிஸ் ஜெயராஜின் இழுவையினால் படம் இன்னமும் முடியாமல் இருக்கிறது.. இதனால் ரிலீஸ் தேதியையும் பிக்ஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார் உதயநிதி. விழா மேடையிலேயே மறைமுகமாக இதற்கு ஒரு பன்ச் வைத்தார் உதயநிதி. “நாளைல இருந்து ரீரிக்கார்டிங்கையும் முடிச்சுக் கொடுத்தீங்கன்னா, கொஞ்சம் நல்லாயிருக்கும் ஸார். நாளைக்கு காலைல 10 மணிக்கே நான் உங்க ஆபீஸ்ல இருப்பேன்...” என்று உதயநிதி சொல்ல.. ஹாரிஸ் சன்னமாக சிரித்துக் கொண்டார்..! வரும்.. ஆனால் வராது கதைதான்..!
தொடர்ந்து நடந்த பிரஸ்மீட்டில் யாரையாவது வம்பிழுக்கணும்னு நினைச்சாரோ என்னவோ, கேமிராமேன் பாலசுப்ரமணியெத்தை வம்பிழுத்துவிட்டார் உதயநிதி. “நம்ம கேமிராமேன், ஹீரோயினுக்கு மட்டும்தான் குளோஸப் ஷாட் வைப்பார்.. 'கொஞ்சம் நம்மளையும் அழகா காட்டுங்க ஸார்'ன்னு சொன்னா.. 'இருக்குறதுதான் வரும்.. அவ்வளவுதான்'ம்பாரு.. ஆண்ட்ரியா வந்துட்டாங்கன்னா அவ்ளோதான்.. கேமிராவைத் தூக்கிட்டு அவங்க பின்னாடியே ஓடிருவாரு..” என்றார்.. பாலசுப்ரமணியெம் இதைக் கேட்டு ஒரு நொடி வெலவெலத்துதான் போனார். பின்பு நிகில் முருகன் மைக் பிடித்து சமாளித்தது வேறு கதை. இதையெல்லாம் பத்திரிகைகாரங்க எழுதினாத்தான் பிரச்சினை. அவங்களே சொல்லிட்டா நோ பிராப்ளமாம்..!
----------------------------
சொந்த செலவில் சூனியம்..!
'பத்திரமா பார்த்துக்குங்க' என்றொரு சினிமா. படத்தின் தயாரிப்பாளரே இயக்குநர். யாரிடமும் இவர் உதவி, துணை, இணையாக பணியாற்றியதில்லை. எடுத்த எடுப்பிலேயே இயக்குநர் போஸ்ட்டிங். அதான் காசு இருக்கே.. பத்தாது..?
“ஏன் ஸார் இந்த முடிவு..?” என்றால் சொன்னார் பாருங்கள் ஒரு பதில்..! “இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நான் எப்பவோ எழுதி டைப் பண்ணி பைண்ட் பண்ணி வைச்சிருந்தேன். வந்த இயக்குநர்கள்கிட்ட படிக்கக் கொடுத்தேன். 'இதைப் படமா பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டேன். ஆனா அவங்களோ அவங்களோட கதையைத்தான் சொன்னாங்க. இதை மாட்டேன்னுட்டாங்க. அப்பத்தான் என்னோட அஸிஸ்டெண்ட்ஸ் எல்லாரும், “இந்தக் கதையை நீங்க செஞ்சா மட்டும்தான் ஸார் நல்லா வரும்.. வேற யார் செஞ்சாலும் சொதப்பலாயிரும்..னு சொன்னாங்க.. அதான் நானே துணிஞ்சு இறங்கிட்டேன்..” என்றார். படம் எப்படின்னு கேக்குறீங்களா..? வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் முடங்கிவிட்டது.! அவரவர் ஆசைக்கு அவர்களே பலியாகிறார்கள்..!
------------------------------
எல்லா புகழும் இசைஞானிக்கே..!
சென்ற மாதத்தில் ஒரு நாள் எனது வாழ்வின் முக்கியமான நாள். கேமிரா கவிஞர் பாலுமகேந்திராவை ஒரு காலை நேரத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இசைஞானியின் இன்னிசையில் அவரது 'ஓலங்கள்' படத்தில் துவங்கிய 'தும்பி வா' பாடலின் தொடர்ச்சியான பல வெர்ஷன்கள் பற்றி பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன்.
மாடிக்கு அழைத்துச் சென்றார். ஹாலில் ஜன்னலோரம் ஒரு சேரும், டேபிளும் போடப்பட்டிருந்தது. சேரில் அமர்ந்தவர் கேமிராவை அவருக்கு எதிராக வைக்கச் சொன்னார். தனது நெஞ்சு அளவுக்கு மட்டும் கேமிராவை போகஸ் செய்யச் சொன்னார். அதனை வியூ பைண்டரில் பார்க்கவும் செய்தார். ஜன்னலை இரண்டு முறை ஒரு அளவுக்கு திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தை பேலன்ஸ் செய்தார். எதிரில் சும்மா இருந்த ஒரு சேரை எடுத்து எதிரில் போடச் சொன்னார். அதில் என்னை அமர வைத்து கதையை ஆரம்பித்தார். சொல்லும்போது அவருக்கும் ஒரு பிடிப்பு வேண்டுமே என்பதற்காக தலையை ஆட்ட ஆரம்பித்தேன். கடைசிவரையில் நிறுத்தவே இல்லை..!
“மணிரத்னம் தான் முதலில் இயக்கிய ‘பல்லவி அனு பல்லவி’ படத்துக்கு என்னை ஒளிப்பதிவு செய்ய கூப்பிட்டிருந்தார். அப்போ நான் 'மூன்றாம் பிறை' படத்தையும் செஞ்சுக்கிட்டிருந்தேன். இளையராஜாவை 'மூன்றாம் பிறை' ரீரிக்கார்டிங் சம்பந்தமா அந்தச் சமயத்துல சந்திச்சப்போ ஒரு டியூனை என்கிட்ட பாடிக் காட்டி ‘நல்லாயிருக்கா?’ன்னு கேட்டார் இளையராஜ். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. ‘இதை உங்க குரல்ல பாடி ஒரு கேஸட்ல போட்டுக் கொடுங்க’ன்னு கேட்டு வாங்கிக்கிட்டேன். ‘பல்லவி அனு பல்லவி’ படத்துக்கு லொகேஷன் பார்க்க மணிரத்னம்கூட கார்ல போகும்போதுஸ இந்த கேஸட்டை கேட்டுக்கிட்டேதான் போனேன். ஏனோ, எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு இந்த டியூன்..! ‘மூன்றாம் பிறை’ படத்துலேயே இந்த டியூனை ரீரிக்கார்டிங்ல பயன்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறமா ‘ஓலங்கள்’ல ‘தும்பி வா’ பாடலாவும் கொண்டு வந்தேன். அதுல ஆரம்பிச்சு இத்தனை வெர்ஷனாகியும் அந்த டியூனை யாராலேயும் மறக்க முடியலைன்னா, அதுக்குக் காரணம் இளையராஜாதான்..” என்றார்..!
பேட்டி முடிவுக்கு வந்தது என்பதை அவராகவே எனக்கு உணர்த்திவிட்டு, நொடிகூட தாமதிக்காமல் காலர் மைக்கை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு எழுந்தார். எனது கேமிராமேன் அந்த அவசரத்திலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள எனக்குத்தான் நேரம் கிட்டவில்லை. நொடியும் தாமதிக்காமல் படியிறங்கிவிட்டார்.! ப்ச்.. ஏமாற்றமாகிவிட்டது..!
பாலுஜியின் மாடி அறையில் என்னைக் கவர்ந்தது விண்டோ டைப் படுக்கை அறைதான்..! நான்கு புறமும் கண்ணாடிகளால் ஆன அந்த அறையில் நடு நாயகமாக ஒரு மரக் கட்டில் போடப்பட்டு அதன் மேல் குஷன் பெட் போட்டு அழகான கண்கவர் பெட்ஷீட் விரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே 2 அண்டா சைஸுக்கு பெரிய மரம் ஒன்றின் அடிவேர் மட்டும் வைக்கப்பட்டிருந்தது..! எதற்கோ..? வித்தியாசமான கலை அறை..!
--------------------------------
சாந்தி முகூர்த்தத்தை சுருக்கமாக வைச்சுக்க முடியுமா..?
தெலுங்கில் சென்ற ஆண்டு வெளியான 'வீரா' என்ற தெலுங்கு படம் 'வீரய்யா' என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகிறது..! டாப்ஸி மற்றும் காஜல் அகர்வாலின் அட்டகாசத்தில் படத்தின் பாடல்களை பார்க்கும்போது குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. படம் தெலுங்கில் கொஞ்சூண்டு ஓடியிருந்தாலும் தமிழில் டாப்ஸி மற்றும் காஜல் அகர்வாலுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை வைச்சு ஏதாச்சும் அள்ளிரலாம் என்று கணக்குப் போட்டு டப்பிங் செய்திருக்கிறார்கள்.
பாடல் வெளியீட்டு விழாவில் ச்சும்மா பார்க்க வந்தவங்களையெல்லாம் மேடையேத்தி உக்கார வைச்சிருந்ததால, “2 நிமிடம் மட்டுமே பேசுங்கள்..” என்றார் லேடி அறிவிப்பாளர். பேச வந்தவர்களில் பலரும் இதையே சாக்காக வைத்து 'படம் வெற்றியடைய வாழ்த்துகள்' என்று ஒற்றை வரியில் சொல்லி விடைபெற்றார்கள். இயக்குநர் திலகம் பாக்யராஜ் தன் பேச்சில் இதைக் குறிப்பிட்டுப் பேசினார். “கல்யாணத்தை ஓஹோன்னு கிராண்டா, பிரமாண்டமா நடத்திட்டு, 'சாந்தி முகூர்த்தத்தை சுருக்கமா வைச்சுக்குங்க'ன்னு சொல்றாப்புல இருக்கு...” என்றார்.. விழாவுக்கு வந்திருந்த பெண்கள் மத்தியில் செம வரவேற்பு..! இதைக் கூட புரிந்து கொள்ளாத அந்த பெண் அறிவிப்பாளர் மீண்டும், “டைம் இல்லைன்றனாலதான் ஸார் சொன்னேன்..” என்று வெள்ளந்தியாக திரும்பவும் சொல்ல.. ஏக கலகலப்பு..!
'தாலாட்டு கேட்குதம்மா' படத்தில் தன்னை நடிக்க அழைத்தபோது அந்தக் கதை தனக்கு ஷூட் ஆகாது என்று தான் மறுத்த கதையையும் சொன்னார் பாக்யராஜ். அதில் முதல் இரவிலேயே பொண்ணுக்கு செக்ஸ்ன்னாலே பிடிக்காது.. தெரியாதுன்ற மாதிரியும், ஹீரோ 'அது'க்கு அலையற மாதிரியும் இருந்ததாம் கதை.. “ஏற்கெனவே எனக்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தில ரொம்ப நல்ல பேரு. இந்த நேரத்துல நான் இப்படியொரு கதைல நடிச்சா கண்டிப்பா படம் ஓடாது'ன்னு சொல்லி நான் நடிக்க மாட்டேன்னுட்டேன்..” என்றார்.. அதன் பின்பு தனது நண்பரின் மகனுக்கு இது போன்று குறை இருந்து, அதனை தானே டாக்டரிடம் அழைத்துச் சென்று சரி செய்த கதையையும் சொல்ல.. பொழுது நல்லாவே போனது..!
இனி எல்லா நிகழ்ச்சிக்கும் இவரையே கூப்பிட்டால்தான் என்ன..? எழுதறதுக்காச்சும் ஏதாவது ஸ்டோரி கிடைக்குமே..!?
------------------------------------
பெட்டிக்குள் முடங்கிய மாசி..!
இந்திய தேசியத்தின் தீவிர பக்தரான அர்ஜூன் நடித்திருக்கும் மாசி படம் பல தடைகளைக் கடந்து சென்ற வாரம்தான் ரிலீஸ் ஆகியிருக்கு..! “ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்..” என்றார் அர்ஜூன்.. "தேசியக் கொடி, தேசியத்தை பத்தி படத்துல ஏதாவது இருக்கா..?" என்ற கேள்விக்கு.. "அது இல்லாமலா..? “அர்ஜூன் ஸார் இருந்தா இந்தியாவே இருந்த மாதிரி..” என்றார் இயக்குநர் கிச்சா..!
'பவானி ஐ.பி.எஸ்.' படத்தினால் மிகப் பெரும் பொருள் இழப்புக்குள்ளாகி இந்தப் படத்தையும் முடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி இப்போதுதான் ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கிறார் கிச்சா. “நாளைக்கு படம் ரிலீஸ்.. அவசியம் எல்லோரும் பார்க்கணும்.. மறுபடியும் பிரஸ் ஷோல உங்களையெல்லாம் சந்திக்கிறேன்”னு சொல்லிட்டுப் போனார் அர்ஜூன். அந்தோ பரிதாபம்.. அன்றைய இரவிலேயே கிச்சாவும், அவருடைய நண்பரும், 'எப்படி மனசுக்குள் வந்தாய்' இயக்குநருமான பிரசாத்தும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட, 'மாசி' மீண்டும் பெட்டிக்குள் முடங்கி ஒரு வார தாமதத்திற்குப் பின்பு வெளியானது..!
கைது செய்யப்பட்ட விவகாரமும் திகைப்பை ஊட்டுகிறது..! பெரிய நடிகர்களை வைத்து படம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்த பிரசாத் 67 லட்சம் ரூபாயை செக்காக வாங்கிக் கொண்டு கடைசியில் தயாரிப்பாளர் தமிழ்க்குமரனின் மகனையே ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டாராம்..! இதனை தயாரிப்பாளர் ஏற்க மறுக்க.. இயக்குநர் பிரசாத் தானே இப்படத்தின் தயாரிப்பாளராக மாறுகிறேன் என்று சொல்லி 67 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்து, அதுவும் பவுன்ஸாகிவிட்டதாம்..! பிரசாத் இதில் கொஞ்சத்தை கிச்சாவுக்குக் கொடுத்து 'மாசி' ரிலீஸுக்கு வழிவகை செய்திருக்கிறார் போலும். அதனால் கிச்சாவையும் எஃப்.ஐ.ஆரில் சேர்த்து உள்ளே வைத்துவிட்டார் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன். இப்போது மும்முரமாக சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்..!
--------------------------------------
வட்டார மொழியே இல்லாதது கஞ்சாதான்..!
'கஞ்சா கூட்டம்'. வழக்கமான தலைப்புக்கேற்ற கதைதான். கஞ்சா விற்கும் 4 வாலிபர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் நங்கைகளின் காதல் விளையாட்டுதான் படமாம்..!
படத்தின் தயாரிப்பாளர் தனது சொந்த ஊரில் இருந்து 4 பஸ்களில் சொந்த, பந்தங்களை அழைத்து வந்துவிட்டதால், பத்திரிகையாளர்களே நிற்க வேண்டி வந்தது.. ஆடியோவை ரிலீஸ் செய்து பேசிய முக்குலத்தோரின் தற்போதைய திரையுலக 'சின்னக் கலைவாணரான' விவேக் “கஞ்சா என்ற பெயருக்கு மட்டும் தமிழ்நாட்டில் வட்டார மொழியே கிடையாது.. கஞ்சாவிற்கு ஒரே ஒரு பெயர்தான்.. அது கஞ்சாதான்..” என்று ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். பாடல் காட்சிகள் ரசனையாகத்தான் இருக்கிறது..! பாடல்களும் அப்படித்தான் இருக்கின்றன..! ஆனால் தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க ஓப்பனிங் தேவையாய் இருக்கிறதே..? என்ன செய்ய..?
------------------------------------------
கபாலிக்கு ஒரு வரவேற்பு..!
பெயரும், ஆளும் நச் என்று மிகப் பொருத்தமாக இருந்தார்கள், 'கபாலி' ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில்..! தமிழ், கன்னடத்தில் ஒரே நேரத்தில் வெளியாகப் போகிறதாம்..! ஹீரோயின் வரவில்லை. ஆனால் அயிட்டம் கேர்ளாக நடித்தவர் மட்டும் மிகப் பொறுப்பாக வந்திருந்தார். சொந்த ஊர் கொல்கத்தாவாம்.. டான்ஸ் மேல் விருப்பமாததால் கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் வந்து அதன் வழியாக ஹைதராபாத் வந்து, அப்புறமா கோடம்பாக்கத்தில் கால் வைத்திருக்கிறாராம்..! வெல்கம்..!
“ச்சும்மா சென்னைல ஒரு நிகழ்ச்சியை மட்டும் நடத்திட்டு இதை தமிழ்ச் சினிமாவா ஆக்கிராதீங்க.. தமிழ்ச் சினிமான்னா தமிழ்நாட்டுலேயே 60 சதவிகித படப்பிடிப்புகள் நடத்தணும்..” என்றார் ஆர்.கே.செல்வமணி.
வந்திருந்த இன்னொரு வி.ஐ.பி.யான இயக்குநர் வீ.சேகரோ நிறைய அட்வைஸ்களை வாரி வழங்கினார். “படத்தை முதல்ல உங்க நண்பர்கள், சொந்தக்காரங்களுக்கு போட்டுக் காட்டுங்க. அவங்க ஏதாவது திருத்தம் சொன்னாங்கன்னா அது சரிதானான்னா யோசிங்க..! இன்னொரு தடவை சில சீன்களையோ, அல்லது பாட்டு சீன்களையோ எடுக்கணும்னு தோணுச்சுன்னா சட்டுன்னு செலவு பார்க்காம எடுத்திருங்க. என்னோட 'காலம் மாறிப் போச்சு' படத்துல எல்லாம் முடிஞ்சு ரஷ் போட்டு பார்த்தப்போ, ஏதோ ஒண்ணு குறையற மாதிரியிருந்துச்சு. அப்புறமாத்தான் கடைசீல வடிவேலுவை வைச்சு 'வாடி வாடி பொட்டப்புள்ளை'ன்ற பாட்டை ஷூட் செஞ்சு இணைச்சேன். படம் 100 நாள் ஓடுச்சு..” என்றார்..!
இறுதியாகப் பேசிய கலைப்புலி ஜி.சேகரன், “சினிமாக்குள்ள வந்து, சினிமா புகழை வைச்சு பொது வாழ்க்கைல உயரத்துக்கு வர விரும்பும் நடிகர்கள் முதலில் தங்களது ரசிகர் மன்றத்தினரிடம் தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் வாங்காதீர்கள் என்று சொல்ல வேண்டும். தங்களது படங்களை திரையிடும்போது டிக்கெட் விலையை அநியாய விலையாக உயர்த்த அனுமதிக்க்க் கூடாது.. தங்களது படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்க்க் கூடாது என்று தியேட்டர்களை நிர்ப்பந்திக்க வேண்டும். இதையெல்லாம் செய்து கொஞ்சமாவது நேர்மையைக் காப்பாற்றிக் காட்டிவிட்டு அதன் பின்பு பொதுவாழ்க்கையில் அவர்கள் இறங்கட்டும்..” என்றார் சூடாக..!
இதையெல்லாம் விஜய், விஜய்காந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் பட விழாக்களில் பேசினால்தானே எடுபடும்..!
------------------------------
வருகிறது வனயுத்தம்
'குப்பி' படத்தின் இயக்குநர் ரமேஷின் அடுத்த படம் வனயுத்தம். வீரப்பனின் வாழ்க்கை வரலாறுதான் கதை. வீரப்பனாக கிஷோர், அவரது மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமி, விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூன் என்று பதம் பிரித்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு விஜய்மில்டன். வசனம் நம்ம எழுத்தாளர் அண்ணன் அஜயன் பாலா..!
பிரஸ் மீட்டில் நடிகர் மணியின் பில்டப்பான பேச்சை பார்த்து அர்ஜூனும், இயக்குநருமே சிரித்துவிட்டார்கள். விட்டால் மைக் உடையும்வரை கீழே வைக்க மாட்டார் போலிருக்கிறது என்று பதறிப் போன பத்திரிகையாளர்கள் ஒரே குரலாக “அண்ணே.. வேண்டாம்ண்ணே..” என்று கெஞ்ச அதுக்கப்புறம்தான் தனது பில்டப்பை கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்.
அர்ஜூன் தன் பேச்சில் விஜயகுமார் மீதான பாசத்தைக் கொஞ்சம் தொட்டுக் கொண்டார்.. வீரப்பன் கொலைகாரன் என்பதாகவே அர்ஜூனின் பேச்சு இருந்தது.. அனைத்து டிவிக்களுக்கும் ஒரே நேரத்தில் பேட்டியளித்து தப்பித்துக் கொண்டார்... "ச்சும்மா வாங்க பாஸ்.. வேற பேசுவோம்.." என்று அழைத்ததற்கு, "வேணாம் பாஸ்.. உங்க சேட்டையெல்லாம் எப்படின்னு தெரியும்.." என்று சிரித்தபடியே சொல்லி எஸ்கேப்பானார்.
“இந்தப் படத்தில் எந்த இடத்திலும் நாங்கள் பொய் சொல்லவில்லை. முழுக்க முழுக்க நடந்த உண்மையைத்தான் அப்படியே எடுத்திருக்கிறோம்.. 4 மாதங்கள் வீரப்பன் சம்பந்தமான அனைத்து ஊர்களுக்கும் நேரடியாகவே சென்று பேட்டியெடுத்து, அனைத்து ஜெயில்களுக்கும் சென்று வீரப்பன் தொடர்பான குற்றவாளிகள் அனைவரையும் சந்தித்துவிட்டுத்தான் ஸ்கிரிப்ட் ரெடி செய்தோம். என்னைப் பொறுத்தவரையில் வீரப்பன் ஒரு ஹீரோ..” என்றார் அஜயன்பாலா..!
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.. அழகாக பேசுகிறார். பணிவாக பழகுகிறார். மிக எளிமையாக இருக்கிறார்.. கடும் உழைப்பாளி என்றார்கள். “படத்தைப் பார்த்தால் தெரியும்.. அதிகம் பேசவில்லை. நான் ஒரு வேலையாள். வீரப்பனை பற்றி தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல தெரியவில்லை..” என்று ஒப்பனாகச் சொல்லிவிட்டு தப்பித்துக் கொண்டார். இதே கருத்தைத்தான் வீரப்பனின் மனைவியாக நடித்த விஜயலட்சுமியும் கூறுகிறார்..! தப்பிக்கத் தெரிஞ்சவங்கதான்..!
இயக்குநரோ, இந்தப் படத்தில் தன்னைவிட அதிகம் உழைத்திருப்பது ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான் என்று பழியை அவர் மீது தூக்கிப் போட்டார். கூடவே, “வீரப்பனை ஹீரோவாகவும் உயர்த்தவில்லை.. வில்லனாகவும் பழிக்கவில்லை. நடந்தவைகளை அப்படியே படம் பிடித்திருக்கிறேன்.. படத்தை பார்த்துட்டு வாங்க. இன்னும் நிறைய பேசுவோம்..” என்றார். இந்தப் படத்தை தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ். இதற்காக வாஸ்து சரியில்லை தனது மனைவியிடம் பொய் சொல்லி தனது வீட்டையே விற்றாராம்...!
எப்படியிருப்பினும், வீரப்பனின் முடிவாக படத்தில் இருப்பது என்னவென்றால், அரசுத் தரப்பு என்ன சொன்னதோ அதுதானாம்.. டிரெயிலர் அப்படித்தான் சுட்டிக் காட்டுகிறது.. படம் வரட்டும்.. பார்த்துவிடுவோம்..!
-----------------------------------
இன்னொரு காதல்..!
“கல்லூரியின் தோல்விக்குப் பிறகு மீண்டும் அசர வைக்குற மாதிரி ஒரு படத்தைக் கொடுக்கணும்னு நினைச்சேன். அதனாலதான் இவ்ளோ பெரிய பிரேக்...” என்றார் பாலாஜி சக்திவேல். எல்லாரும் புதுமுகங்கள்.. பொதுவாக ஹீரோயினைத்தான் கேரளாவில் இருந்து இறக்குமதி பண்ணுவாங்க இந்தப் படத்துல ஹீரோக்கள்ல ஒருத்தர் கேரள இறக்குமதியாம்..
படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமியும், இவரும் ஷங்கரிடம் துணை இயக்குநர்கள் வேலை பார்க்கும்போது ஒரே அறையில் தங்கியிருந்தவர்களாம்.. அந்த நட்பு இன்றைக்கும் அப்படியே தொடர்கிறது என்றார் லிங்குசாமி. “ஒரு நாள் மதிய சாப்பாட்டிற்காக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தபோது நான் ஒரு கதை சொல்றேன் கேளுன்னு பாலாஜி சொன்னாரு. நானும் ம்.. ம்..ன்னு கேட்டுக்கிட்டேயிருந்தேன். நான் சமைச்சு முடிக்கிறதுக்குள்ள கதையை சொல்லி முடிச்சார். அதுதான் 'காதல்' படத்தின் கதை. அதை நான்தான் தயாரிச்சிருக்கணும். பட்.. மிஸ்ஸாயிருச்சு. இந்தத் தடவை நான் விடலை.. 'காதல்' மாதிரியே இந்தப் படமும் உங்களை உலுக்கப் போகுது..” என்று உறுதியாகச் சொன்னார் லிங்குசாமி..!
பாலாஜி சக்திவேலும் தன் பேச்சில் லிங்குசாமியைப் பற்றிக் குறிப்பிடும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். "என்ன கதை, யார் நடிக்கிறான்னு எதையும் கேக்கலை.. ஓகே ஆரம்பிங்கன்னு கை காட்டிட்டாரு லிங்கு. தினமும் அவர் ஆபீஸுக்கு போவேன்.. வருவேன்.. ஷூட்டிங்குக்கும் போயிட்டு வந்துக்கிட்டிருக்கேன். ஒரு நாள்கூட அவர் கேக்கலை.. சில மாதங்கள் கழித்து 'அப்புறம்'ன்னாரு.. அப்பத்தான் சொன்னேன்.. 'எல்லாம் முடிஞ்சிருச்சு.. ஆனால் படத்தோட ஓப்பனிங் எப்படின்னு நான் இன்னும் முடிவு பண்ணலை. அதை டிஸ்கஸ் பண்ணிட்டு ஷூட் பண்ணிட்டு அப்புறமா உன்கிட்ட காட்டுறேன்'னு சொன்னேன்.. அதுக்கும் ஒரு 'உம்' சொல்லிட்டுப் போயிட்டாரு.. இப்படியொரு தயாரிப்பாளர் எனக்கு நண்பனாவும் கிடைச்சது பெரிய பாக்கியம்..” என்று கண் கலங்கிச் சொன்னார்..!
இன்னொரு 'காதல்' என்கிறார்கள். கைக்குட்டையோடதான் தியேட்டருக்குள்ள போகணும் போலிருக்கு..!
ஓகே.. நிறைய பேசிட்டோம் மக்களே.. அடுத்த வாரம் சந்திப்போம்..!
|
Tweet |
18 comments:
கலக்கல் :)
.பத்து பதிவா போட வேண்டிய மேட்டர்
பத்திரிக்கையாளனா வேலைப்பார்க்கனும்னு ஆசையே வந்திருச்சு அண்ணே..
[[[அருண்மொழித்தேவன் said...
கலக்கல் :)]]]
நன்றி தம்பி..!
படிப்பதற்கு சுவையான ஏராளமான சினிமா செய்திகள்...
//இந்த ஒரு படம் ஓடினால் தொடர்ந்து நடிப்பேன். இல்லைன்னா தயாரிப்பு மட்டும்தான்..” என்கிறார் திடமாக..! //
சிலவேளை படம் நிச்சயம் ஓடும்ணு பட்டும் படாமல் சொல்றாரோ?
360 super
my blog : http://scenecreator.blogspot.in/
[[[காவேரிகணேஷ் said...
பத்து பதிவா போட வேண்டிய மேட்டர்.]]]
காவேரி உண்மைதான்..! அவசரப்பட்டுட்டேன்..!
[[[மணிஜி...... said...
பத்திரிக்கையாளனா வேலை பார்க்கனும்னு ஆசையே வந்திருச்சு அண்ணே..]]]
வாங்கண்ணே.. சேர்ந்தே பண்ணுவோம்..!
[[[ஹாலிவுட்ரசிகன் said...
//இந்த ஒரு படம் ஓடினால் தொடர்ந்து நடிப்பேன். இல்லைன்னா தயாரிப்பு மட்டும்தான்..” என்கிறார் திடமாக..! //
சில வேளை படம் நிச்சயம் ஓடும்ணு பட்டும் படாமல் சொல்றாரோ?]]]
எல்லாம் ஒரு நம்பிக்கையிலதான் ஆரம்பிச்சிரு்ககாரு..! வாழ்த்துவோம்.. விடுங்க..!
[[[scenecreator said...
360 super
my blog : http://scenecreator.blogspot.in/]]]
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!
[[[scenecreator said...
360 super
my blog : http://scenecreator.blogspot.in/]]]
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!
i guess there is some problem in your blog. its restarting repeatedly.
please check
[[[Kovam Nallathu said...
i guess there is some problem in your blog. its restarting repeatedly.
please check.]]]
என் கம்ப்யூட்டர்ல பிராப்ளம் இல்லையே ஸார்..? நல்லா செக் பண்ணிப் பாருங்க.. மவுஸ்ல ஏதாவது பிரச்சினையா இருக்கப் போகுது..!
நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.
[[[Indian said...
நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.]]]
ஓகே.. நன்றி இந்தியன்..!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!.....
தொடர்ந்து எழுதுங்கள்.........
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
[[[Kannan said...
வெற்றி பெற வாழ்த்துக்கள்!.....
தொடர்ந்து எழுதுங்கள்.........]]]
மிக்க நன்றிகள் கண்ணன்..!
Post a Comment