ஆட்டோ சங்கர் சிறையில் இருந்து தப்பிய கதை..!

16-06-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 17: 29.8.1990
   

1990, ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 35-வது பிறந்த நாள் காணும் ஆட்டோ சங்கரின் மீதான வழக்கு செப்டம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு வரும் அன்றுதான், இந்த வழக்கின் அப்ரூவர் பாபுவிடம் குறுக்கு விசாரணையும் ஆரம்பிக்க இருந்தது.

'பாபுவை எப்படியெல்லாம் விசாரிக்க வேண்டும்... எந்த பாயின்ட்​டில் மடக்க வேண்டும்’ என்றெல்லாம் தன் வக்கீலான நடராஜனிடம் டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்த ஆட்டோ சங்கருக்கு, கடந்த ஜூலை மாதம் இரண்டாம் வாரம் வரையில் ஜெயிலில் இருந்து தப்பி ஓட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவே இல்லை.

பெயிலில் வெளியே வர இரண்டு முறை மனுத் தாக்கல் செய்த சங்கர், மூன்றாம் முறையாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதில், முந்தைய சில தீர்ப்புகளின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். எப்போதும் நம்முடன் தொடர்பு வைத்திருந்த சங்கர், பல சட்ட விஷயங்களை எடுத்துக்​ கூறி, ''மேக்ஸிமம் எனக்கு லைஃப்தான் கொடுப்பாங்க. லைஃப் தண்டனைங்கறது பன்னிரண்டு வருஷம். அதுல காந்தி, அண்ணா, காமராஜ் பிறந்த நாட்களையட்டி கிடைக்கும் சலுகைகள், நன்னடத்தையுடன் நடந்து கொள்ளும்போது கிடைக்கும் தண்டனைக் குறைப்பு எல்லாம் போக ஏழெட்டு வருஷம் உள்ளே இருக்க வேண்டியதிருக்கும். அப்புறம் வெளியே வந்து யோக்கியமா இருக்கப் போறேன்...'' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அடிக்கடி தன் மனைவியையும், குழந்தைகளையும் நினைத்துக் கவலைப்​படும் சங்கருக்கு, நாமறிந்த வரையில்... ஜெயிலில் இருந்து தப்பி ஓட வேண்டும் என்ற எண்ணம் மிக சமீபத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

காரணம் - சங்கர் நம்மிடம் ஒரு முறை, ''உங்கள மாதிரி பத்திரிகைக்காரங்கதான் எப்பவும் என்னை வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காங்க. மத்தபடி போலீஸால் பெரிய பிரச்னை ஏதும் இல்லை. உங்களுக்குக்கூடத் தெரிஞ்சிருக்குமே... ஒரு தடவை நான் செங்கல்பட்டு கோர்ட்டுக்குப் போறப்போ, என் கோட்டூர்புரம் ஹவுஸிங் போர்டு வீட்டுக்குப் போய் டிபன் சாப்பிட்டுப் போனேன். அவ்வளவு ஃப்ரீ!'' என்று சொன்னார்.

இது உண்மைதான். சங்கர் கோர்ட்டுக்குப் போகும்போதும் சரி... ஜி.ஹெச்-சுக்கு ஏதாவது சிகிச்சைக்குப் போகும் போதும் சரி... கூட வரும் எஸ்கார்டுகள் அலட்சியமாகவே இருப்​பார்கள்.

சங்கர் தப்பியோட முன்பே எண்ணியிருக்கும் பட்சத்தில் அதற்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன.

அதையெல்லாம் உபயோகிக்காத சங்கர், கடந்த திங்கள் நள்ளிரவு அவ்வளவாக அறிமுகமில்லாத ராஜா மற்றும் குமார் என்ற நபர்களுடன் ஜெயிலுக்குள் இருந்து தப்பி ஓடியது ஏன்? எதற்கு? எப்படி?

மேற்படி கேள்விகளுக்கு விடை தெரியும் முன்பு சில விஷயங்களை மட்டும் அறிந்து கொள்வது நல்லது.

ஆட்டோ சங்கர் எளிதில் எவரையும் நண்பராக்கிக் கொள்ளும் சுபாவம் உடையவர். அந்த வகையில் சிறையில் பலரையும் நண்பர்களாக்கித் தனக்கென ஒரு 'தாதா’தனத்தையும் உருவாக்கிக் கொண்டார். சங்கர் வருவதற்கு முன்பு வரையில் ஜெயிலுக்குள் இருந்த தாதா, சென்னையின் பிரபல கேடி அகரம் நாராயணன்தான். சில தமிழ் சினிமாக்களில்(கூட) வருவது மாதிரி நாராயணனின் காலைப் பிடித்துவிட ஒருவர், கையைப் பிடித்துவிட ஒருவர் என்று இருந்த நாராயணன், சில முறை காவலிலிருந்து தப்பியோடி இருக்கிறார். சங்கர் ஜெயிலுக்குள் வந்த பிறகு நாராயணன் மகிமை குறைந்து விட்டது. அகரக்காரன், ஆட்டோக்காரன் என்று இரு அணிகள் உருவாயின.

இந்தச் சூழ்நிலையில்தான் சங்கருக்கு மிக நெருக்கமான போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயிலுக்கு உள்ளேயும் சங்கரின் கை ஓங்க வழி செய்தார். அந்த போலீஸ் அதிகாரியின் ஆலோசனைப்படி, சென்னை ஜெயிலின் உயர் அதிகாரி ஜெயிலுக்குள் தினசரி சென்று சங்கரை ஓர் அறையில் சமமாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பார். வாரம் ஒரு முறை உயர் அதிகாரி வீட்டிலிருந்தே சங்கருக்கு உணவு வர ஆரம்பித்தது. இதனால், ஜெயிலில் உள்ள மற்ற அதிகாரிகள், சங்கரின் போக்கை எந்த விதத்திலும் கண்டிக்க முடியாமல் போய்... ஒரு கட்டத்தில் எல்லா அதிகாரிகளும் சங்கருக்கு 'குட்மார்னிங்... குட் நைட்’ சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

விளைவு...? சங்கரே ஓர் அதிகாரி போல ஆகிவிட்டார். அகரத்தார் அம்பேல்! தினசரி காலை எழுந்தவுடன் பார்வையாளர் இடத்தருகே வந்து சங்கர் அமர்ந்து கொள்வார். சங்கரைப் பார்க்க வாரம் இரு முறை அவர் மனைவி ஜெகதீஸ்வரி வருவார். மற்றபடி குறிப்பிடத்தக்க நபர்கள் யாரும் வர மாட்டார்கள். என்றாலும், தன் சக கைதிகளின் உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருப்பார்.

இப்படித்தான்... கணபதி என்ற கைதியின் மனைவியான தேவி என்பவருடன் பேச ஆரம்பித்தார் சங்கர். பிறந்தது என்னவோ தனுர் ராசியில்தான் ஆனாலும் ஏகப்பட்ட கன்னிராசி உண்டே! தேவி, சங்கரின் அபிமானி ஆகிவிட்டார். தொடர்ந்து, தேவி தன் கணவரான கணபதியைக்கூட பார்ப்பதைத் தவிர்த்து, சங்கரை மட்டுமே சந்தித்துப் பேச ஆரம்பித்து விட்டார். இதனால், சங்கரும் நண்பர்களிடையே இருக்கும்போது, திடீரென்று, 'தேவி... ஸ்ரீதேவி... உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா.. பாவி... அப்பாவி... உன் தரிசனம் கிடைத்திட வழி கொடம்மா...’ என்ற 'வாழ்வே மாயம்’ படப் பாடலை அடிக்கடி பாட ஆரம்​பித்து விடுவார்.

இதனால் மனம் உடைந்துபோன கணபதி, சங்கரைக் கை நீட்டி அடித்துவிட... பதிலுக்கு சங்கர் அடிக்கவில்லை. கணபதியை வேலூர் ஜெயிலுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண ஏற்பாடு செய்து விட்டார். பிறகு... நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேவி - சங்கர் காதல்(?) வளர்ந்தது.

இந்த நிலையில்தான் ஒரு முறை சங்கரைப் பார்க்க தேவி வந்திருந்தார். அதே நேரம் முதல் மனைவி ஜெகதீஸ்வரியும் வந்து விட்டார். முன்பே ஜெகதீஸ்வரிக்கு யாரோ தேவி சமாசாரத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், தேவியிடம், ''.......'' என்று ஆபாச வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துச் சண்டை பிடிக்க, தேவியும் பதிலுக்குக் கத்த... ஜெயிலுக்கு உள்ளேயே இரு பெண்களுக்கும் அடிதடி தகராறு நடந்தது. சங்கர் ரொம்ப கஷ்டப்பட்டு இருவரையும் பிரித்து அனுப்ப... தேவி போகும்போது ''அவ என்னை இப்படித் திட்டினதாலே மானமே போச்சு... இனிமே நான் உயிரோட இருக்க மாட்டேன். தற்கொலை பண்ணிக்கப் போறேன்...'' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

அவ்வளவுதான்... சங்கர் அப்செட்?! தேவியை தாஜா பண்ண உயர் அதிகாரியின் உதவியை நாடினார். உதவியும் கிடைத்தது... எப்படி? ''நீ தேவியுடன் சேர்ந்து எங்காவது போய் வாழ்க்கை நடத்த வேண்டும்... சம்மதம் என்றால் தேவியை சமாதானம் செய்கிறோம்...'' என்ற (வீக்னஸ் தெரிந்த) நிபந்தனை விதிக்கப்பட்டது. இது எப்படி இருக்கு?

சங்கர் நிறைய யோசித்தார். 'ஊட்டியில் ஒரு கான்வெட்டில் படிக்கும் தன் குழந்தைகளைப் பார்க்க வேண்டும்... ஒரிஸ்ஸாவில் இருக்கும் தன் தந்தையை காண வேண்டும்... தான் தங்கியிருந்த திருவான்மியூர் வீட்டை வாங்கிய பார்ட்டியிடம் தானே போய் முழுப் பணத்தையும் (சுமார் ஒண்ணரை லட்ச ரூபாய்) வாங்க வேண்டும்...’ இப்படி நிறைய யோசித்தார். யோசித்ததை உயர் அதிகாரியிடம் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு ரொம்ப சந்தோஷம். ''எப்போது சங்கர் வெளியேறுவது... எப்படி வெளியேறுவது... கூட எவரெல்லாம் வெளியேறுவது...?’ என்று அதிகாரிகள் முன்னிலையில் திட்டம் இடப்பட்டது.

நாளும் குறிக்கப்பட்டது. சனி, ஞாயிறு அல்லது திங்கள் ஆகிய மூன்று நாட்களில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவெடுத்தார்கள்.

இந்த முடிவு எடுத்த பிறகு சங்கரின் சந்தோ​ஷத்துக்கு எல்லையே இல்லை. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து தினசரி அதிகாரி வீட்டிலிருந்தே நான்-வெஜ் சாப்பாடு! ''இதை ஒரு வகையில் பிரிவு உபசார விருந்து என்றுதான் சொல்ல வேண்டும்'' என்று கூறினார் நமக்குப் பல தகவல்கள் கொடுத்த வார்டன் ஒருவர்.

அவர் மேலும், ''பிரச்னை என்னவென்றால், இந்தச் சதி(?) உயர் அதிகாரிகள் அளவில் நடந்தது. ஆனால், அவர்கள் நேரடியாகத் தலையிட முடியாது. அதே சமயத்தில் கீழ்மட்ட அலுவலர்களின் உதவியைப் பெற முடியாது. இதற்காகவே கடந்த இருபது நாட்களாக பந்தோபஸ்து குறித்தான விஷயங்களில் 'அலட்சியம்’ காட்ட ஆரம்பித்தார்கள்...'' என்றும் கூறினார்.
இந்த நிலையில்தான் மற்றோர் உயர் அதிகாரிக்கு இந்த விஷயம் ஓரளவு தெரிய வந்தது. உடனே அவர், இது குறித்து தனக்கு மேலே இருப்பவர்களுக்கு ஒரு பிரத்தியேகக் கடிதம் எழுதி, அதில் தான் கேள்விப்பட்ட விஷயம் பற்றியும் குறிப்பிட்டார். அதுவும் அலட்சியப்படுத்தப்பட்டது!

ஆனாலும், கடந்த 17-ம் தேதி திடீரென்று சிறைச்சாலைக்கு வந்த ஐ.ஜி. வைகுந்த், காவலர்​களின் எண்ணிக்கை, பாதுகாப்பு குறித்து விசாரித்தார். நேர்மையான அதிகாரியான அவருக்கு ஏதோ நெருடியது போலும்! ''ஸ்ட்ரென்த் காணாது போலிருக்கு, மேலும் கொஞ்சம் ஆட்களை அனுப்புகிறேன்...'' என்று சொல்லிவிட்டுப் போனவர் மறுநாளே வேலூரில் இருந்து இருபத்தைந்து வார்டன்களைத் சென்னை சிறைச்சாலைக்கு அனுப்பினார்.

ஆனால்...

அந்த இருபத்தைந்து பேருக்கும் பகல் டியூட்டி மட்டும் கொடுக்கப்பட்டது. இரவில், சாதாரணமாகப் பதினைந்து கன்விக்ட் வார்டன்​களாவது டியூட்டி பார்ப்பது வழக்கம். அன்றைய தினங்களில் மூன்றே மூன்று கன்விக்ட்களுக்கு மட்டும் டியூட்டி போடப்பட்டது. அதேபோல பூட்டு, லைட் எரியாமை போன்ற எல்லா விஷயங்களும் தயார்படுத்தப்பட்டன. சங்கர், மோகன், செல்வராஜ் ஆகிய மூவர் மட்டும் தப்பித்துச் செல்வது அவ்வளவு உசித​மல்ல என்பதால், நட்பு அடிப்படையில் சங்கரின் 'செல’வில் தங்கியிருந்த ராஜா மற்றும் குமார் ஆகியோரையும் சேர்த்து தப்பிக்கவிடவும் முடிவு செய்யப்பட்டதாகக் கடைசித் தகவல் கூறுகிறது.

1990, ஆகஸ்ட் 20-ம் தேதியன்று சங்கர் இருந்த 10-ம் நம்பர் 'செல்’லிலிருந்து நள்ளிரவு சுமார் மணி 2.30-க்கு வெளியேறி காம்​பவுண்ட் சுவரை அடைய... இடையே தகரத்தாலான தடுப்பு ஒன்று உண்டு. அதை நீக்கிச் சுமார் 13 அடி உயரமே காணப்படும் சுவரில் ஒரு கயிற்றின் மூலம் ஏறிச் செல்ல...

அது பூங்கா நகர் ரயில் நிலையப் பகுதி!

ஜன நடமாட்டமே இல்லாத பகுதி. அதுவும் இரவு நேரம் யார் தலைகாட்டப் போகிறார்கள்?

அங்கே... தேவி தயாராக கொண்டு வந்திருந்த ஒரு காரில் ஏறித் தப்பி இருக்கிறார்கள். அந்தக் கார் சென்னை நகர எல்லையை விட்டு தாண்டி இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் குறைவு. காரணம் - இப்போது நகரின் முக்கிய முனைகள் ஒவ்வொன்றிலும் செக்-போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. செக்-போஸ்ட்டைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு காரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் காரோ அல்லது சங்கர் கோஷ்டியோ நகரை விட்டு வெளியே செல்ல வாய்ப்பும் இல்லை!

சரி... சென்னையில்தான் இந்த கோஷ்டி பதுங்கி இருக்கிறது என்றால், எங்கு?

இதைக் கண்டுபிடிக்க மொத்தம் மூன்று போலீஸ் டீம்கள் பாடுபட்டு(?) வருகின்றன. சிட்டி போலீஸ் டீம், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டீம், சிறைத்துறை போலீஸ் டீம்... ஆகிய மூன்று டீம்களும் தனித்தனியே அலசுகின்றன.

இதிலும் சோகம் என்னவென்றால் - இந்த மூன்று டீம்களுக்குள் கூட ஒற்றுமை இல்லாமல் இஷ்டப்படி சுற்றிக் கொண்டிருப்பதுதான். ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாறிக் கொள்வதுகூட இல்லை.

இவர்கள் கண்களில் சங்கர் கோஷ்டி சிக்குமா என்பது சந்தேகமே! சென்னை நகர மக்கள் ஒரேயடியாக நிம்மதி இழந்திருப்பது உண்மை!

- வி.குமார்

நன்றி : ஜூனியர்விகடன்-15-06-2011

மூன்று போலீஸ் படையினரின் விசாரணையில் பல தகவல்கள் சிறையில் இருந்தே அவர்களுக்குக் கிடைத்தது. தேவி, ஆட்டோ சங்கர் காதல், தேவி, ஆட்டோ சங்கரின் மனைவி மோதல் இதெல்லாம் வார்டன்கள், சிறைக் காவலர்கள் முன்னிலையிலேயே நடந்திருந்ததால் அனைத்தையும் ஆதி முதல் அந்தம் வரை ஒப்பித்துவிட்டார்கள். தேவியின் வீட்டைச் சோதனை செய்து, தேவியின் கணவர் தரப்பைத் தூக்கி வந்து விசாரித்து யார், யாருக்கு எங்கெல்லாம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தபோது ஆட்டோ சங்கர் தனது தந்தையைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சிறையில் பலரிடமும் சொன்னது காவல்துறையினரின் காதில் பட்டது.

தொடர்ந்த விசாரணையில் ஆட்டோ சங்கரின் தந்தை இருக்கும் ஒரிஸ்ஸாவில் அவன் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்தது. இதற்கிடையில் தப்பிச் சென்ற ஒரே வாரத்தில் வக்கீல் ராஜாவும், சுண்டல்குமாரும் பெங்களூரில் வைத்து போலீஸில் சிக்கினார்கள். இவர்களை 'பெண்டு' கழட்டியதில் ஆட்டோ சங்கர், தேவியுடன் ஒரிஸ்ஸாவுக்கு சென்றது உறுதியானது.

பெங்களூரில் சிக்கியவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரிஸ்ஸா விரைந்தது தமிழக போலீஸ். அங்கே இரும்பு எஃகு தொழிற்சாலைக்கு பெயர் போன ரூர்கேலாவின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தனி குடிசை வீட்டில் புதுமணத் தம்பதிகளாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த சங்கரையும், தேவியையும் பிடித்தார்கள். தப்பித்த 12 நாட்களில் இப்படி மாநிலம் விட்டு மாநிலம்  தேடி வந்து தன்னைக் கைப்பற்றுவார்கள் என்று சங்கர் நினைக்கவேயில்லை. பின்பு ஒரு சமயம் தன்னை கோர்ட் வளாகத்தில் சந்தித்த நிருபர்களிடம் "எப்படி என்னை ஒரிஸ்ஸாவுக்கே தேடி வந்து பிடிச்சாங்க..?" என்று ஆச்சரியப்பட்டார்.

தொடர்ந்து இவர்களிடத்தில் நடத்திய விசாரணைக்குப் பின்பு பாட்னாவில் பதுங்கியிருந்த ஆட்டோ சங்கரின் தம்பி மோகனும், செல்வராஜூம் போலீஸின் கையில் சிக்கினார்கள். ஒரிஸ்ஸாவில் இருந்து ஆட்டோ சங்கரும், தேவியும் விமானத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இதில் விசேஷம்..!

இதற்குப் பிறகு இந்தத் தப்பிச் சென்ற வழக்கிற்காகவும் ஆட்டோ சங்கருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சென்னை மத்தியச் சிறையில் ரொம்ப நாளைக்கு விட்டு வைக்கக் கூடாது என்று சொல்லி சேலம் சிறைக்கு இடம் மாற்றினார்கள். கடைசியில் ஆட்டோ சங்கர் தூக்கில் தொங்கவிடப்பட்டவரையிலும் சேலம் மத்திய சிறையில்தான் இருந்தார்..!

14 comments:

கேரளாக்காரன் said...

Avlothana mudinjupocha. so sad sir

கேரளாக்காரன் said...

Sir ivara pathi innum viriva therinjukka ethavathu web reference irukkutha sir?

manjoorraja said...

ஜூனியரில் வந்த போது படித்திருந்தாலும் இப்போதுபடிக்கும் போதும் சுவராஸ்யமாக இருக்கு.

ஒரு வாசகன் said...

இது எந்த திகதியிட்ட ஜீவியில் வந்தது. அன்லைனில் இப்போது உள்ள ஜீவியில் இதைக் காணவில்லையே. எடுத்துவிட்டார்கள் போல் உள்ளது

vidivelli said...

nallaayirukkunka.....



can you come my said?

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Avlothana mudinjupocha. so sad sir.]]]

ஆடிய ஆட்டம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது..! 7 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு கிடைத்த முடிவு இது..!

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Sir ivara pathi innum viriva therinjukka ethavathu web reference irukkutha sir?]]]

கூகிளாண்டவர் இருக்கும்போது நமக்கென்ன கவலை..? ஆட்டோ சங்கர் என்று தட்டச்சு செய்யுங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[manjoorraja said...

ஜூனியரில் வந்தபோது படித்திருந்தாலும் இப்போது படிக்கும் போதும் சுவராஸ்யமாக இருக்கு.]]]

-))))))))

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

இது எந்த திகதியிட்ட ஜீவியில் வந்தது. அன்லைனில் இப்போது உள்ள ஜீவியில் இதைக் காணவில்லையே. எடுத்து விட்டார்கள் போல் உள்ளது.]]]

முந்தைய இதழ்கள் என்ற பகுதியில் தேடிப் பாருங்கள். நிச்சயம் இருக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[vidivelli said...

nallaayirukkunka.....

can you come my said?]]]

இதென்ன புது மாதிரியான கமெண்ட்டு..?

abeer ahmed said...

See who owns hoopchina.com or any other website:
http://whois.domaintasks.com/hoopchina.com

abeer ahmed said...

See who owns ihost.tw or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com

abeer ahmed said...

See who owns blogspot.com 2518553010 or any other website.