காங்கிரஸால் முட்டிக் கொள்ளும் மாறன்களும், கோபாலபுரத்தார்களும்..!

08-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த சில நாட்களாக தயாநிதி மாறன் பற்றிய செய்திகள் வெளியாகிய நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் மந்திரி சபை மாற்றத்தில் தயாநிதி நீக்கப்படுவார் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

கனிமொழி கைது, கலைஞர் டெல்லி சென்று தனது அன்பு மகளை பார்த்த நாள் வரையிலும் தயாநிதி பற்றிய செய்திகளும், அவர் மீதான விசாரணைகளும் வேகமெடுக்காத நிலையில் திடீரென்று இந்தச் செய்திகள் பறந்து வந்ததற்கான காரணங்கள் என்ன..?


இதற்குப் பின்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்று நான் நினைக்கிறேன். இப்போது ஜன்பத் வீட்டுக் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதி மாறன் செய்த முறைகேடுகள் பற்றிய சி.பி.ஐ.யின் அந்தக் கடிதத்தை வாங்கி பெட்டியில் வைத்துவிட்டு கும்பகர்ணத் தூக்கத்தில் இருப்பதாக நீங்கள் நினைத்துவிட வேண்டாம்..! சமயம் வரும்போது அதனைப் பயன்படுத்துவோம் என்று நினைத்து வைத்திருந்தார்கள்.  இப்போது சமயமாகிவிட, பூனைக்குட்டியும் வெளியே வந்துவிட்டது.

குற்றம் செய்தவர்களைக்கூட தங்களுக்கு சாதகமாக்கி அதன் மூலம் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு பின்பு அந்த வழக்கை நிர்மூலமாக்க அத்தனை வழிகளையும் கையாண்டு கேஸ் நடத்தியதுபோலவும் ஆச்சு.. குற்றவாளிகளை தப்பிக்க வைச்ச மாதிரியும் ஆச்சு.. தாங்களும் பிழைத்துக் கொண்டது போலவும் ஆச்சு என்ற வெக்கம்கெட்ட அரசியல் பொழைப்பை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது..!

மத்தியில் அடுத்த பிரதமராகவும், காங்கிரஸ் கட்சியின் ஒளி விளக்காகவும் மிளிரப் போகிற ராகுல்காந்திக்கு தமிழகத்தின் மீது ஒரு கண். எப்பாடுபட்டாவது தனது ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் காங்கிரஸை உட்கார வைக்க நினைக்கிறார்..!


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாக வேண்டுமெனில் அதற்குத் தோதான அரசியல் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதன் முதல் கட்டப் பணியினைத்தான் தனது ஆட்சி அதிகாரத்தை வைத்து சில்லரைத்தனமாக இப்படி செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

இருக்கின்ற இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தினால் ஒழிய காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் அரியணை ஏறுவது நடவாத காரியம் என்பது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்.

இதற்கெல்லாம் நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கிடைத்ததுதான் கடந்த கால தி.மு.க.வின் கேடு கெட்ட ஆட்சி..! தாத்தா பாராட்டுக் கூட்டங்களில் திளைத்திருக்கும் நேரத்தில் மகன்களும், மகள்களும், பேரன்களுமாக தமிழ்நாட்டைச் சுரண்டியெடுத்ததை வேடிக்கை பார்த்த காங்கிரஸ் இந்தத் தகவல்களை கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் விட்டு ஆழம் பார்த்தது..!


காங்கிரஸ்தான் இந்த குள்ளநரித்தனத்தைச் செய்கிறது என்பதை உணர்ந்தும், அதனைத் தடுக்க இயலாத அளவுக்கு தாத்தாவுக்கு புத்திரப் பாசம் பீடித்துக் கொண்டுவிட்டது.. தாத்தாவின் இந்த நவீன திருதராஷ்டிரன் பாசத்தை காங்கிரஸ் தற்போதுவரையிலும் நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது..!

2-ஜி விவகாரத்தை முதலில் தமிழகத்தில் தொடர்ந்து வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வேண்டிய அளவுக்கான செய்திகளை வழங்கியதுகூட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான்..! மீண்டும் மாறன்கள் கட்சியிலும், குடும்பத்திலும் இணைந்த பின்பு சமயம் பார்த்து நீரா ராடியாவின் டேப்புகளை ரிலீஸ் செய்தது சி.பி.ஐ.யின் உள்ளடி வேலைதான்..!

ஒரு டேப் வெளியானால்கூட சரி.. யாரோ ஒருத்தர் செய்திருக்கிறார் என்று நினைக்கலாம். ஆனால் வரிசையாக சர்ச்சைக்கிடமான விஷயங்களை மட்டுமே உள்ளடக்கிய டேப்புகளாக பார்த்து வெளியிட்டால் அதற்கு யார் காரணமாக இருக்க முடியும்..? மத்திய அரசின் தலையசைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்று இந்தியாவில் பத்திரிகை அலுவலகங்களில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்கள்கூட சொல்வார்கள்..!

பிரச்சினைகள் பெருக, பெருக தனக்கும் இதற்கும் யாதொரு சந்தர்ப்பமும் இல்லாததுபோல் காட்டிக் கொண்டது காங்கிரஸ்.. தி.மு.க.வின் குடும்ப விவகாரங்களெல்லாம் சந்தி சிரிக்கின்றவரையில் டெல்லி மேலிடம் கை கட்டி வேடிக்கை பார்த்தது. டேப்புகள் ரிலீஸ் ஆவது நின்றபாடில்லை.

பத்திரிகையாளர்கள் பர்கா தத், வீர் சங்வி, ரத்தன் டாட்டாவுடனான நீரா ராடியாவின் பேட்டிகளைப் படித்துப் பாருங்கள்..! இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதைக் காட்டுவதற்காகவே அவர்களையும் இழுத்து தெருவில்விட்டார்கள் சி.பி.ஐ.யினர்.. இப்போது பத்திரிகையுலகம் ஆட்சியாளர்களை திட்ட முடியுமா..? தொழில் உலக கூட்டமைப்பினர் ரத்தன் டாட்டாவின் டிரெஸ்ஸிங்சென்ஸை ராடியா வர்ணிப்பதை படித்து பொறாமைப்படுவார்களா? அல்லது அரசைக் கண்டிப்பார்களா..?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டுத்தான் பிரசாந்த் பூஷன் செய்தார். இதுவும் ஏற்கெனவே உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்குத் தெரியும். ஆனாலும் மெளனம் சாதித்தது..! யாரோ சிக்கப் போகிறார்கள். நமக்கென்ன என்ற எண்ணமில்லை.. சிக்கப் போவது நமது பரம்பரை எதிரிகள்.. தற்போதைய கூட்டணிக் கட்சியாக இருந்தால் என்ன? நமக்கு அரசியல் லாபம்தான் முக்கியம் என்பதில் குறியாக இருந்தது காங்கிரஸ் அரசு.

உச்சநீதிமன்றத்தில் எந்த அளவுக்குச் சொதப்ப முடியுமோ அத்தனையையும் செய்து கடைசியில் கேஸை அந்த நீதிமன்றத்திடமே விட்டுவிட்டு தான் தப்பித்துவிட்டது. எதிர்பார்த்ததுபோலவே உச்சநீதிமன்றம் தனது சாட்டையை வீசத் துவங்க.. தள்ளி நின்ற தி.மு.க.வை பிடித்திழுத்து அடி வாங்க வைத்ததும் காங்கிரஸ்தான்..!

ஆ.ராசாவை ஆரம்பத்திலேயே அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருந்தால் தி.மு.க.வுக்கும், காங்கிரஸுக்கும் இத்தனை கெட்ட பெயர் கிடைத்திருக்காது.. ஆனாலும் காங்கிரஸ் மானம், ரோஷம் பார்க்க மாட்டார்கள் என்பதால் இது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. ஆனால் சிங்கள் டீயைக் குடித்துவிட்டு நாள் முழுக்க ஊர் முழுக்க கலைஞர் வாழ்க. தி.மு.க. வளர்க என்று போஸ்டர் ஒட்டும் உடன்பிறப்புக்களுக்கு அது இருக்கிறதே.. அந்த ஒரு தொண்டனின் தொண்டைக் குழியில் ஒரு சொட்டு தண்ணீராவது நிம்மதியாக இறங்கியிருக்கும்..! செய்யவிடவில்லையே காங்கிரஸ்..!

திட்டம் போட்டு தீட்டினார்கள்..! மன்னமோகனசிங்குக்கு முனங்கத்தான் தெரியும். பேசத் தெரியாது.. அதேபோல் லேசு பாசாகவே சொன்னார்கள். “ராசா இல்லாதிருந்தால் நன்றாக இருக்குமே.. வேறு யாராவது வரட்டுமே..” என்றார்கள்.. தங்களுடைய இயலாமையினால் தங்களிடம் கெஞ்சுகிறார்கள் என்று தப்புக் கணக்குப் போட்ட தி.மு.க. தலைமை, “அதெப்படி நாம் ராஜினாமா செய்வது.. முடியாது..” என்று முறுக்கிக் கொண்டது. இவர்கள் முறுக்குவார்கள் என்பது தெரிந்தே காங்கிரஸ் மேலும், மேலும் நீதிமன்றத்தில் குழப்பத்தை கூட்டிக் கொண்டே வந்தது..!

“ராசா ஏன் இன்னும் அவர் பதவியில் இருக்கிறார்..?” என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்ட பின்பும்கூட நேரடியாக சொல்லாமல் ஆள் விடும் தூதுக்களில் மட்டுமே சொன்னது காங்கிரஸ்.. தானாகவே தூக்கு மேடையில் வந்து நின்ற நிலைமைக்கு தி.மு.க. வந்தவுடன், ராசா ராஜினாமா என்றானது..

பின்பு சி.பி.ஐ. விசாரணை என்ற வளையத்திற்குள் வந்தவுடன் முதல் 7 நாட்களும் கைது செய்யாமல் பாவ்லா காட்டியவர்கள் கைது தவிர்க்க முடியாதது. கோர்ட், அதிகாரிகளைத் தோண்டித் துருவுகிறது. என்ன செய்யறது..? என்று கேட்டு நோகாமல் நொங்கெடுத்துவிட்டார்கள்..!


தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பின்புற அலுவலகத்தில் சி.பி.ஐ.யை அனுப்பி மனைவியையும், மகளையும் விசாரிக்க வைத்தது காங்கிரஸ்..! இதெல்லாம் தங்களைத் திட்டமிட்டு செய்யப்படும் சதி என்பது தி.மு.க.வுக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ஆட்சி, அதிகாரம், மகன், மகள்களின் பதவி ஆசை, பேரன்களின் பண ஆசை.. இதற்கெல்லாம் மையப் புள்ளியான அதிகாரத்தை விட்டுத் தர வேண்டுமா? ஆட்சியைத் துறக்க வேண்டுமா? என்றெல்லாம் யோசித்து, யோசித்து இதோ கடைசியில் தனது அருமை மகளையும் ஜெயிலுக்குள் அனுப்பிவிட்டு இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறார் தமிழர்களின் தன்மானத் தலைவர்..!

அடுத்தது யாராக இருக்கும் என்று யோசிக்க வைத்த சூழலில் இரண்டு பக்கமும் இடி கொடுப்பதைப் போல ஏர்செல் விவகாரம், மற்றும் இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் விவகாரத்தை சி.பி.ஐ. கசிய விட்டிருக்கிறது..!

இனி பத்திரிகைகள் இவைகளைப் பற்றி தினமும் செய்து வெளியிடும் சூழலில் தயாநிதிக்கும் சூழல் இறுக்கப்படும். தயாநிதி மாறன் தானாகவே பதவி விலகும் சூழலை காங்கிரஸ் அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இறுதியில் ராசாவும், கனிமொழியும் ஜாமீனில் வெளிவரும்போது உள்ளே போகும் அடுத்தச் சொந்தமாக தயாநிதி இருக்கக் கூடும்..! இதற்குக் காரணமாக உச்சநீதிமன்றத்தை கை காட்டிவிட்டு காங்கிரஸ் எளிதாகத் தப்பித்துக் கொள்ளும்.


இதையெல்லாம் தவிர்க்கத்தான் தயாநிதி மூலமாக தி.மு.க.வை உடைக்கும் வேலையில் காங்கிரஸ் முயல்வதாக தலைநகரத்து  செய்திகள் கசிகின்றன..! கேடி பிரதர்ஸின் பணம், ஊடகங்களின் பலம் இவற்றை வைத்து தி.மு.க.வின் சில தலைவர்களையாவது அவர்கள் பக்கம் இழுக்க வைத்து வைகோ விலகிய சூழலை போன்று ஏற்படுத்த காங்கிரஸ் நினைப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது..!

தாத்தா எந்தக் காரணத்தை முன்னிட்டும் இப்போது மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற மாட்டார். அப்படி வாபஸ் வாங்கினால் காங்கிரஸ்காரர்கள் யார் காலில் விழுந்தாவது தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அத்தோடு இந்த ஊழல் வழக்குகளில் இருந்து தி.மு.க.வினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது பெரும்பாடுதான் என்பதை நன்கு உணர்ந்துதான் இருக்கிறார் தாத்தா. எனவே காங்கிரஸ் இழுக்கின்ற இழுப்புக்கு தாத்தா போய்தான் ஆக வேண்டும்..! இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது..!

தாத்தாவின் குடும்பப் பூசல்கள் பகிரங்கமாக வெடிக்கும் சூழல் ஒன்றைத்தான் காங்கிரஸ் தற்போது எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்குத் தோதாகத்தான் அழகிரியை கேடி பிரதர்ஸ் தற்போது வளைத்துப் பிடித்திருப்பதாகத் தெரிகிறது.

ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை முன்னிறுத்தி அவருக்குப் பின்னால் நின்று அப்போதைக்கு வேண்டிய பணம், ஊடக பலம் ஆகியவற்றைக் கொடுத்து என்.டி.ராமராவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு செய்த புரட்சியைப் போல கருணாநிதியை வீட்டிலேயே உட்கார வைக்க ஒரு திட்டமும் இருக்கிறதாம்..!

அப்படியொரு சூழலில் அதற்காக கேடி பிரதர்ஸ் சம்மதித்தால் தற்போது தயாநிதியைச் சுற்றியுள்ள வலை கொஞ்சம், கொஞ்சமாக சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலமாகவே அறுத்தெடுக்கப்படும். இல்லையெனில் அவர்களது கழுத்திலேயே இறுக்கப்படும் என்றே நானும் நினைக்கிறேன்..!

இன்னொரு வதந்தியும் தலைநகரில் உலா வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. தலைமை காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டால் தயாநிதி மாறன் காங்கிரஸில் சேரும் நிலைமை நிச்சயம் ஏற்படும் என்கிறார்கள். இதனை அவர்களின் குடும்பத்தினரே உணர்ந்திருக்கிறார்களாம்..

இப்போதே தயாநிதி மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்..! தற்போது தயாநிதி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி தி.மு.க. தலைமை மெளனம் சாதிக்கும் அதே வேளையில் தயாநிதி மட்டுமே பதில் சொல்லி வருகிறார். கட்சிக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லையோ என்று நினைக்குமளவுக்கு பிரச்சினையைக் கண்டும், காணாததுபோல் இருக்கிறது தி.மு.க. தலைமை. இல்லையெனில் இந்நேரம் கலைஞரோ, ஸ்டாலினோ இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள்..!

போதாக்குறைக்கு நக்கீரன் இதழில் உலக அதிசயமாக தயாநிதி மாறனின் ஊழல் பற்றிய தெஹல்கா கட்டுரையைத் தமிழாக்கம் செய்து போட்டிருப்பது பத்திரிகை வட்டாரங்களில் பரபரப்பை கூட்டியிருக்கிறது..! இது நிச்சயம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்..!

இப்போது நக்கீரனுக்கு நடுநிலைமை வேஷம் போட வேண்டிய தேவையில்லை. அப்படியிருந்தால் நீரா ராடியா டேப்புகள் பற்றியும், கனிமொழி, வோல்டாஸ், டாட்டா, ராஜாத்தி தொடர்புகள் பற்றியும் அவர்கள் எழுதியிருப்பார்கள். அதையெல்லாம் வி்ட்டுவிட்டு தயாநிதியை குறித்து எழுதியிருப்பது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தயாநிதி மற்றும் அவரது பி.ஏ.வின் போன் நம்பரைகூட வெளிப்படையாகக் குறிப்பிட்டு எழுதியிருப்பது என்னவோ நடக்கப் போகிறது என்கிறார்கள்..!

தொடர்ச்சியான 3-வது நக்கீரன் இதழிலும் தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகளே வெளியாகியுள்ளது. இத்தனை நாட்கள் சன் குழமத்திற்கும், நக்கீரனுக்கும் இருந்த நட்பு எப்படி ஒரே நாளில் மறைந்து போயிருக்கும் என்ற குழப்பத்திற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். ஆனந்த விகடன் குழுமத்தில் மாறன் சகோதரர்களும் கை வைத்துவிட்டதை மீடியா உலகமே தற்போது நம்பி வருகிறது. பேசியும் வருகின்றனர். இந்தக் காரணத்தினால்தான் அறிவாலய வட்டாரம் நக்கீரனை முன்னிறுத்தி தயாநிதி பற்றிய ஊழல்களை எக்ஸ்போஸ் செய்வதாகத் தோன்றுகிறது..!


நேற்றைய நிலவரப்படி விரைவில் மந்திரி பதவியை இழந்து திஹார் ஜெயிலுக்குள் நுழையப் போகும் அடுத்த வி.ஐ.பி. தயாநிதிதான் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்..! தயாநிதி மீதான வழக்கு கோர்ட் விசாரணைக்கு வந்தால், கலாநிதி மாறன் கோர்ட் படியேற வேண்டி வரும். ஏன் அவரே கைது செய்யப்பட்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. அப்படியொன்றைத் தவிர்ப்பதற்காக மாறன் சகோதரர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!  இதோ இன்றைக்கு கனிமொழியின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் கிடைக்காது என்பது தெரிந்த விஷயம்..!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்க உதவிகள் செய்தும், கட்சியையும், தங்களது குடும்பத்தினரையும் அழிக்கப் பார்க்கிறார்களே என்கிற கோபத்தில் தி.மு.க. இருக்கிறது..!

கலைஞர் டிவி ஆரம்பிக்கின்றவரையிலும், தி.மு.க.வின் ஊதுகுழலாகவும், ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தின் முடிவுரைக்கு உதவியும், ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்த குடும்பத்தினரெல்லாம் இன்றைக்கு ஸ்கூடா காரில் போகும் சூழலை ஏற்படுத்தி கோடி, கோடியாக கொடுத்தும் நம்மை ஓரங்கட்டி ஜெயிலுக்கு அனுப்பத் துடிக்கும் தனது சக குடும்ப உறவுகள் மீதான கோபத்தில் மாறன் சகோதரர்கள்..!

இந்த முட்டல் மோதலை எட்ட நின்று வேடிக்கை பார்த்து சமயத்துக்குக் காத்திருக்கும் குள்ள நரியாக காங்கிரஸ்..!

நாமும் வேடிக்கையை பார்ப்போம்..! இந்த மாதத்திற்குள் இந்திய அரசியலில் ஏதோவொன்று நடக்கும் என்று நம்புகிறேன்..!

38 comments:

குசும்பன் said...

அண்ணே நன்றின்னு எதாவது ஒரு புக்கு பேரு போடுவீங்களே போடவில்லையா?

manjoorraja said...

அண்ணே இது நீங்க சொந்தமா அலசி ஆராய்ஞ்சி எழுதினது போலெ இருக்கே....

jayaramprakash said...

:))))))))))))))))))))))))))))))))

Ponchandar said...

நல்லதொரு அலசல். மீடியாக்களுக்கு தொடர்ச்சியாக பரபரப்பான செய்திகள் இருந்து கொண்டே இருக்கும். கேடி சகோதர்கள் பாடு திண்டாட்டம்தான். சன் டிவி யின் பங்குகள் ஒரே நாளில் 105 ரூ குறைந்து அடுத்த நாள் 20 ரூ ஏறியும் விட்டது. இந்த தருணத்தில் விஜய் டிவி நடுநிலையான செய்திகளை வழங்கினால் சன் டிவியை இரண்டாம் இடத்திற்கு தள்ளலாம்

Unknown said...

ரெண்டு கனெக்‌ஷன்தான் தெரியுது. மீதி?
(423-2=421)

சீனு said...

ஜூவியின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய சவுக்கு செய்தியை படித்தீர்களா?

Indian Share Market said...

வெளியிலே காசு எண்ணிக்கிட்டு இருப்போம், உள்ளுக்குள்ளே போனா கம்பி எண்ணிக்கிட்டு இருப்போம்

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை:)

பழம் தின்று கொட்டை போட்ட கலைஞருக்கு அதுவும் ஆட்சிக்காலத்தில் தெரியாமலா இருந்திருப்பார்?

எப்படியோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

நேற்று கலைஞரின் கூடாநட்புக்கு வை.கோ மறு குறள் சொன்னாரே கேட்டீங்களா?

raja said...

உங்களுடைய ஒரிஜினல் கட்டுரை மிக அருமையான அலசல். திமுகவின் அந்திமக்காலத்தை நாம் பார்த்தே ஆகவேண்டும். ஈழத்தமிழர்களை கைவிட்டபோதே அதன் அடிப்படை நொறுங்கிப்போனது, திமுக வின் தொண்டர்களான என்னைப்போன்ற பலர் அதன் நிறமாறுதலை கண்டு அருவருப்பானோம். முக்கியமாக கடந்த 5 ஆண்டுகளில் குடும்ப ஆதிக்கம். இப்பொழுதைய காலம் தமிழ்தேசியத்தின் எழுச்சிக்காலம் அதை முன்னிறுத்தியே புதிய இயக்கங்கள் தோன்ற வேண்டும் வை.கோ.சீமான், திருமா, ராமதாஸ் நிணைத்தால் ஒரு பெரும் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.. முக்கியமாக தமிழ் மக்கள் நலன் சார்ந்த அணியாக..(கட்சியாக தனித்தனியாக இயங்கினாலும் மத்திய அரசில் உள்ளது போல), திமுகவின் மிக மோசமான வைரஸ் கே.டி சகோதரர்களே... அதை வளர்த்ததும் கருணாநிதி என்பதுதான் பெரும் சோகம்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

pichaikaaran said...

இந்திரா , ராஜீவ் போன்றோரை திணர வைத்த திமுக , சோனியா கையில் சிக்கி தவிப்பது வினோதம் .

குறும்பன் said...

அண்ணே, ரிப்போர்ட்டரில் அப்படிதான் போட்டிருக்கு?(கனி vs மாறன்) சொன்னால் உங்களுக்கு கோடி புண்ணியம்.

kicha said...

I think, Jaya probably realised it. However, she seems to be having a feeling that the congress stands no chance in the next parliament election due to corruption, price raise and anti incumbency factor. Also, congress is likely to fare poorly in the south compared to previous election due to the loss of YSR.
Indeed, today's resolution in assembly on ealam is probably an aim to rub salt on congress wounds. MK is clearly in deep trouble, although he could have avoided it by distancing himself from congress during the 2009 Parliament election.

மு.சரவணக்குமார் said...

வெறும் ஊகங்களை மட்டுமே வைத்து அரசியல் கட்டுரைகள் எழுதுவதும், சினிமா கிசு கிசு எழுதுவதும் தேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு கைவந்த கலை!!

அந்த கலையில் நீங்கள் வெகுவாக தேறிவிட்டீர்கள்!

வாழ்த்துக்கள்!! :)

மு.சரவணக்குமார் said...

கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அழிந்து விட்டால் திமுகவே அழிந்து விடும் என்பது ரொம்பவும் அபத்தமான ஒரு சிந்தனை போக்கு.

திமுக வின் பலம் அதன் தொண்டர்களிடம்தான் இருக்கிறது.கருணாநிதி வீழ்ந்தாலும் கூட வைக்கோ மாதிரியானவர்கள் திமுகவை உயர்த்திப் பிடிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... பதிவுக்கு ரொம்ப மெனக்கட்டு இருக்கீங்க... அருமையான அலசல்.


தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

ரிஷி said...

களேபரங்களுக்கு நடுவில் சிறிது நேரம் ஒதுக்கி கலையையும் ரசிக்கலாம். மனதிற்கு இதம் தரும் சில கைவேலைகள் இங்கே...

https://picasaweb.google.com/artistilayaraja

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

அண்ணே நன்றின்னு எதாவது ஒரு புக்கு பேரு போடுவீங்களே போடவில்லையா?]]]

அடப்பாவி.. சொந்தமா எழுதினதுடா சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[manjoorraja said...

அண்ணே இது நீங்க சொந்தமா அலசி ஆராய்ஞ்சி எழுதினது போலெ இருக்கே....]]]

இருக்கே - இல்லீங்கண்ணா.. அதுதான் உண்மை.. யாரும் மண்டபத்துல உக்காந்து எழுதித் தரலை.. நானே.. நானேதான் எழுதினேன்..!

ஸ்ப்பா.. எவ்ளோ வெளக்கம் சொல்ல வேண்டியிருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[jayaramprakash said...

:))))))))))))))))))))))))))))))))]]]

இதுக்குப் பதிலா ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை எழுதியிருக்கலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

நல்லதொரு அலசல். மீடியாக்களுக்கு தொடர்ச்சியாக பரபரப்பான செய்திகள் இருந்து கொண்டே இருக்கும். கேடி சகோதர்கள் பாடு திண்டாட்டம்தான். சன் டிவி யின் பங்குகள் ஒரே நாளில் 105 ரூ குறைந்து அடுத்த நாள் 20 ரூ ஏறியும் விட்டது. இந்த தருணத்தில் விஜய் டிவி நடுநிலையான செய்திகளை வழங்கினால் சன் டிவியை இரண்டாம் இடத்திற்கு தள்ளலாம்.]]]

விஜய் டிவில எங்க ஸார் நியூஸ் வருது. அதான் நிறுத்திட்டாங்களே..! இனிமேல் வேற ஏதாவது ஒரு சேனல் வந்து கொடுத்தால்தான் உண்டு..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ரவிஷங்கர் said...

ரெண்டு கனெக்‌ஷன்தான் தெரியுது. மீதி?

(423-2=421)]]]

327-தான்.. இந்த எண்ணிக்கையே அந்த மெயினான இரண்டு நம்பர்களுக்குள் அடக்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

ஜூவியின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய சவுக்கு செய்தியை படித்தீர்களா?]]]

படித்தேன்..! இனி எல்லாம் சீக்கிரமே வெளியில் வந்துவிடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

வெளியிலே காசு எண்ணிக்கிட்டு இருப்போம், உள்ளுக்குள்ளே போனா கம்பி எண்ணிக்கிட்டு இருப்போம்.]]]

ம்.. கேடி பிரதர்ஸ் உள்ள போக வேண்டி வரும் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை:)]]]

கற்பனையில்லை ஸார்.. எதிர்பார்ப்பு..!

[[[பழம் தின்று கொட்டை போட்ட கலைஞருக்கு அதுவும் ஆட்சிக் காலத்தில் தெரியாமலா இருந்திருப்பார்? எப்படியோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.]]]

எல்லாம் தெரிந்துதான் அலட்சியமாக இருந்துவிட்டார். முருகன் தனது திருவிளையாடலைக் காட்டிவிட்டான்..!

[[[நேற்று கலைஞரின் கூடாநட்புக்கு வை.கோ மறு குறள் சொன்னாரே கேட்டீங்களா?]]]

இல்லையே.. என்ன குறள் அது..?

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

உங்களுடைய ஒரிஜினல் கட்டுரை மிக அருமையான அலசல். திமுகவின் அந்திமக் காலத்தை நாம் பார்த்தே ஆக வேண்டும். ஈழத் தமிழர்களை கைவிட்டபோதே அதன் அடிப்படை நொறுங்கிப் போனது, திமுகவின் தொண்டர்களான என்னைப் போன்ற பலர் அதன் நிறமாறுதலை கண்டு அருவருப்பானோம். முக்கியமாக கடந்த 5 ஆண்டுகளில் குடும்ப ஆதிக்கம். இப்பொழுதைய காலம் தமிழ் தேசியத்தின் எழுச்சிக் காலம் அதை முன்னிறுத்தியே புதிய இயக்கங்கள் தோன்ற வேண்டும் வை.கோ.சீமான், திருமா, ராமதாஸ் நிணைத்தால் ஒரு பெரும் அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தலாம். முக்கியமாக தமிழ் மக்கள் நலன் சார்ந்த அணியாக.(கட்சியாக தனித்தனியாக இயங்கினாலும் மத்திய அரசில் உள்ளது போல), திமுகவின் மிக மோசமான வைரஸ் கே.டி சகோதரர்களே. அதை வளர்த்ததும் கருணாநிதி என்பதுதான் பெரும் சோகம்.]]]

நன்றி ராஜா..! தனது குடும்பமே தன்னை ஏமாற்றியிருக்கிறது என்பதை உணர்ந்தும் அது தெரியாதது போல் இன்னமும் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் தானைத் தலைவர்..! எத்தனை காலம்தான் இவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பாரோ..?

உண்மைத்தமிழன் said...

[[[Rathnavel said...

நல்ல பதிவு.]]]

நன்றி ரத்னவேல் ஸார்..

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

இந்திரா, ராஜீவ் போன்றோரை திணர வைத்த தி.மு.க., சோனியா கையில் சிக்கி தவிப்பது வினோதம்.]]]

காலத்தின் கோலம் என்பது இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

அண்ணே, ரிப்போர்ட்டரில் அப்படிதான் போட்டிருக்கு?(கனி vs மாறன்) சொன்னால் உங்களுக்கு கோடி புண்ணியம்.]]]

உண்மையும் இதுதான். தமிழக அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் அனைவருமே இதைத்தான் சொல்வார்கள் குறும்பன்..!

உண்மைத்தமிழன் said...

[[[kicha said...

I think, Jaya probably realised it. However, she seems to be having a feeling that the congress stands no chance in the next parliament election due to corruption, price raise and anti incumbency factor. Also, congress is likely to fare poorly in the south compared to previous election due to the loss of YSR.

Indeed, today's resolution in assembly on ealam is probably an aim to rub salt on congress wounds. MK is clearly in deep trouble, although he could have avoided it by distancing himself from congress during the 2009 Parliament election.]]]

அடுத்தத் தேர்தலில் ஜெயாவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.. அதற்குள்ளாக ஜெயா மீதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால், ஆத்தாவின் நிலைமை சிக்கல்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

வெறும் ஊகங்களை மட்டுமே வைத்து அரசியல் கட்டுரைகள் எழுதுவதும், சினிமா கிசு கிசு எழுதுவதும் தேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு கை வந்த கலை!! அந்த கலையில் நீங்கள் வெகுவாக தேறிவிட்டீர்கள்!

வாழ்த்துக்கள்!! :)]]]

ஊகங்கள் என்பதே அரசியல்வியாதிகளின் நடத்தையை வருடக்கணக்காக பார்த்து வந்ததினால் எழுந்ததுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அழிந்து விட்டால் திமுகவே அழிந்து விடும் என்பது ரொம்பவும் அபத்தமான ஒரு சிந்தனை போக்கு.
திமுகவின் பலம் அதன் தொண்டர்களிடம்தான் இருக்கிறது. கருணாநிதி வீழ்ந்தாலும்கூட வைகோ மாதிரியானவர்கள் திமுகவை உயர்த்திப் பிடிக்க வாய்ப்புள்ளது.]]]

கலைஞருக்குப் பிறகுதான் வைகோ தி.மு.க. பற்றியே யோசிக்க முடியும்..! அதுவும் தி.மு.க. உடைந்தால் மட்டுமே..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

அண்ணே... பதிவுக்கு ரொம்ப மெனக்கட்டு இருக்கீங்க... அருமையான அலசல்.]]]

நன்றி தமிழ்வாசி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

களேபரங்களுக்கு நடுவில் சிறிது நேரம் ஒதுக்கி கலையையும் ரசிக்கலாம். மனதிற்கு இதம் தரும் சில கை வேலைகள் இங்கே.

https://picasaweb.google.com/artistilayaraja]]]

நன்றி ரிஷி..!

ராஜ நடராஜன் said...

//
[[[நேற்று கலைஞரின் கூடாநட்புக்கு வை.கோ மறு குறள் சொன்னாரே கேட்டீங்களா?]]]

இல்லையே.. என்ன குறள் அது..?//

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

இதற்கு சாலமன் பாப்பையா என்ன விளக்கம் சொல்றாருன்னா....

ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

அத்திரி said...

raittu

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//
[[[நேற்று கலைஞரின் கூடாநட்புக்கு வை.கோ மறு குறள் சொன்னாரே கேட்டீங்களா?]]]

இல்லையே.. என்ன குறள் அது..?//

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

இதற்கு சாலமன் பாப்பையா என்ன விளக்கம் சொல்றாருன்னா....
ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன் மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.]]]

கருணாநிதிக்குத் தேவையானதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[அத்திரி said...

raittu.]]]

என்ன தம்பி..? ரொம்ப நாளா ஆளைக் காணோம்..?