புள்ளி..! பிறை..!! பவுர்ணமி..!!!

01-06-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆட்டோ சங்கர் பற்றிய ஜூனியர்விகடனின் 2-வது கட்டுரை இது..! ஜர்னலிஸம் என்றால் என்ன என்பதையும், புலனாய்வுப் பணி என்றால் என்ன என்பதையும் ஜூனியர்விகடனை வைத்துத்தான் அந்தக் காலத்தில் அளவிட்டார்கள்..!

அதற்கான காரணங்கள் அவர்களின் இந்தக் கட்டுரையிலேயே தென்படும். படித்துப் பாருங்கள்..!
 பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 13: 20.7.88
 

திருவான்மியூர் கொலைகளைத் தொடர்ந்து விசாரணைகள் நடத்தியதில்... ஏழு ஆண்கள், மூன்று பெண்கள் என்று மொத்தம் 10 பேரை (எண்ணிக்கை கூடலாம்!) கொலை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கௌரி சங்கர் என்கிற (ஆட்டோ) சங்கர் மற்றும் இவரது கூட்டாளிகள் சுமார் எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பி.யு.சி. வரை ஒரு கல்லூரியில் படித்துவிட்டு, கரஸ்பாண்டன்ட் கோர்ஸில் பி.ஏ. (பொருளாதாரம்) படித்து வருகிறார் சங்கர்!

தந்தை தங்கராஜ், கட்டட மேஸ்திரி. தாயார், ஒரு நர்ஸிங்ஹோமில் ஆயா. ஏழைக் குடும்பம். எனவே, பி.யு.சி. முடித்ததும் வேலை தேடி அலைந்தார் சங்கர். எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஆனாலும் வீடுகளுக்கு வெள்ளையடிப்பது, கட்டட வேலைகளுக்கு எடுபிடியாக... என்று பல்வேறு வேலைகள் பார்த்து வந்தார். கல்லூரி நாட்களிலேயே கஞ்சா, சாராயம் என்று எல்லாப் பழக்கங்களும் உண்டு.


இப்படித்தான் ஒரு நாள், ஒரு வீட்டுக்கு வெள்ளையடித்து, அதில் கிடைத்த கூலியில் நிறைய சாராயம் குடித்துவிட்டு ரோட்டில் கிடந்தார். அந்த வழியே போன போலீஸார் இரண்டு பேர், சங்கரைத் தூக்கிப் போய் ஸ்டேஷனில் போட்டார்கள். போதை தெளிந்து எழுந்தவரிடம், ''குடிச்சுப் போட்டுக் கலாட்டாவா பண்றே...?'' என்று லத்தியடி கொடுக்க, சங்கர், ''நானா... கலாட்டாவா? ஐயோ... கிடையாதே சார்!'' என்றார். அதற்கு கான்ஸ்டபிள்கள், ''அதைச் சும்மா சொன்னா எப்படி...? 'முறைப்படி’ சொல்லு...'' என்றதும், சட்டென்று புரிந்துகொண்ட சங்கர், தன் பையிலிருந்த ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு 'விடுதலை’யானார்!

மற்றொரு சமயம் குடித்துவிட்டு, நிஜமாலுமே கலாட்டா செய்து இரண்டு பேரை அடித்துக் காயப்​படுத்திவிட்டார். தொடர்ந்து, நேராக ஸ்டேஷன் போய் 'தோஸ்த்’ கான்ஸ்டபிள்களிடம் 'முறைப்படி’ விஷயத்தைச் சொன்னார். விளைவு? அடிபட்ட இரண்டு பேரையும் 'குடித்துவிட்டுக் கலாட்டா செய்ததாக’க் கூறி லாக்கப்பில் அடைத்து​விட்டார்கள்!

இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு நண்பன் மூலம் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டார். 83-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டிச் சென்று ஒரு பெரியவர் மீது மோதிவிட, 'ராமநாதன்’ என்ற பெயர் கொண்ட அவர், படுகாயத்​துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தே போனார். உடனே சங்கர், டிராஃபிக் இன்வெஸ்டி​கேட்டிங் ஆபீஸரிடம் 'முறைப்படி’ சரணடைய, இறந்துபோன பெரியவர் 'அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த’தாக வழக்கில் எழுதப்பட்டது!

ஒரு விதத்தில் இதுதான் சங்கரின் முதல் கொலை!

பிறகுதான் சங்கர், கள்ளச் சாராயத்துக்கும், விபசாரத்துக்கும் பேர் போன திருவான்மியூர் பகுதிக்கு வந்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலாகி இருந்தது. அந்த நேரத்தில், 'திறமையாகவும், துணிச்சலாகவும் ஆட்டோ ஓட்ட இளைஞர்கள் தேவை. திருமணம் ஆகாதவர்கள் மட்டும் அணுகவும்’ என்று ஒரு விளம்பரம், நாளிதழ் ஒன்றில் வந்தது. குறிப்பிட்ட முகவரிக்குப் போனார் சங்கர். அது அ.தி.மு.க. (இப்போது ஜானகி அணி) பிரமுகர் ஒருவரின் முகவரி. அவரின் தொழில் - சாராயம் விற்பது!

சங்கரின் தோற்றத்தைக் கண்டதும் பிரமுகருக்குப் பிடித்துவிட்டது. உடனே வேலை கிடைத்துவிட்டது. ஆட்டோவில் சாராயம் ஏற்றி வருவது... போவதுதான் வேலை.

நாளுக்கு சுமார் 200 ரூபாய் வருமானம். குடிக்கச் சாராயம் இலவசம். பண நடமாட்டம் அதிகரிக்க, விபசாரிகளின் நட்பு ஏற்பட்டது! அவ்வப்போது போலீஸ் பிடிக்கும்​போது எல்லாம், 'முறைப்படி’ சொல்லி வெளிவந்துவிடுவார். அதையும் மீறிப்​  போனால், பிரமுகர் தலையிட்டு வெளியே அழைத்து வந்துவிடுவார்.  இதனால் ஆட்டோ டிரைவர்களில் பலரும் போலீஸ் பிரச்னை எனில், சங்கரிடம்தான் வருவார்கள். சாரும் அதைத் தீர்த்துவைப்பார். இப்படியாகக் கொஞ்சம் 'ஹீரோ’ ஆனார்.

ஒரு முறை அ.தி.மு.க. பிரமுகருக்காக ஓர் இளம் பெண்ணை ஏற்பாடு செய்து கொடுத்தார் சங்கர். என்ன நடந்ததோ தெரியாது... இரண்டு நாள் கழித்து நாளிதழ்களில் 'இளம் பெண் வயிற்று வலி தாங்காமல் தூக்குப் போட்டு இறந்தாள்’ என்ற செய்தி வந்தது!

உண்மையில் என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆனால், '85-ம் ஆண்டு மத்தியில் நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், திருவான்மியூர் பகுதி விபசாரிகளுடன் சங்கரின் தொடர்பு நெருக்கமானது.

இதற்கிடையில் சுந்தரி என்ற பெண்ணைத் திருமணம் செய்து​கொண்​டார். சுந்தரி 82-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்துவிட்டாள்! (அவள் நினைவாகத் தன் வீட்டுக்கு 'கீத சுந்தரி’ என்று பெயரிட்டுள்ளார்!)

12 வயதுக்கு மேற்பட்ட எத்தனை வயதுடைய  பெண்ணும் தனியாக வந்தால், ஆட்டோவில் ஃப்ரீயாக ஏற்றிச் செல்லும் வழக்கம் உடையவராம். ஒரு முறை பெரிய மழையில் தனியாக மாட்டிக் கொண்ட ஜெகதீஸ்வரி என்ற பெண்ணைத் தன் 'சம்பிரதாயப்படி’ ஓசியில் ஆட்டோவில் கொண்டுபோய் வீட்டில் இறக்கி உதவ... காதல் மலர்ந்து கல்யாணமும் செய்துகொண்டார். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடந்த திருமணத்துக்கு சுமார் 100 போலீஸார் வந்திருந்தார்களாம். பல கான்ஸ்டபிள்களுக்கு அழைப்பிதழோடு 100 ரூபாயும் கவரில் வைத்து  அனுப்பி​யதாகக் கூறப்படுகிறது!


திருமணமான பிறகு, சங்கரின் தொழிலில் பெரிய முன்னேற்றம். தனியாகவே சாராய விற்பனை, விபசாரத் தொழில் நடத்த ஆரம்பித்​தார். இதற்கு முக்கிய பலமாக இருந்தவர் அரசியல் வி.ஐ.பி. ஒருவர். தன் தொழிலுக்குத் தோதான 'வொர்க்கிங் பார்ட்னர்’ சங்கருக்குத் தேவைப்பட்டது. அப்போதுதான் பாபு கிடைத்தார்.

சுமார் 12 வயதில் இருந்தே ஆட்டோ ஓட்டி(!) வந்த பாபு,  கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர். நடேச நாடார் என்பவரைக் கொலை செய்ததற்காகக் கைது செய்யப்​பட்டார். உடனே சங்கர் போய், பாபுவை ஜாமீனில் எடுத்தார். லாக்கப்​பில் இருந்து மீட்கப்பட்டதால் விசுவாசம் கொண்ட பாபுவை அடுத்து, ஏரியாவில் கொஞ்சம் சீனியர் 'மாமா’வான சுடலையையும் தன் பார்ட்னராகச் சேர்த்துக் கொண்டார் சங்கர்.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தனியாக வரும் பெண்களை குறிப்பிட்ட ஆட்டோ டிரைவர்கள் பார்த்தால் உடனே ஆட்டோவில் ஏற்றி, சங்கரிடம் விட்டுவிட்டுப் போவார்கள். எனவே, தினசரி புதுப் பெண்கள், புது வாடிக்கையாளர்கள்... என்று தொழில் அமோகமாக நடந்தது.

இது பற்றி சங்கர் கூறுகையில், ''சின்னப் பொண்ணு, நடுத்தரம், பழைய கிராக்கினு ஏக ரகம் உண்டு. அதனாலே அடையாள வார்த்தைகள் (Code words) வெச்சிக்கிட்டோம். புள்ளி, பிறை, பௌர்ணமி... இப்படி. அதாவது புள்ளின்னா இருபது வயசுக்குள்ள... பிறைன்னா முப்பது வயசுக்குள்ள... பௌர்ணமின்னா அதுக்கு மேலே...'' என்றார்.

இப்படித் தொழில் ஆரம்பித்த ஒரே வருடத்தில் சுமார் 30 லட்ச ரூபாய் சம்பாதித்துவிட்டாராம். ''அதிலே​தான் வீடு கட்டினேன்...'' என்று கூறும் சங்கரின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்​பெக்டர் உள்படப் பல போலீஸார் வந்தனர்!

அதன் பின் ஆறு மாதம் சங்கருக்கு ஏழாம் இடத்தில் சனி திசை! காரணம், தயாநிதி என்ற சப்-இன்ஸ்பெக்டர் திருவான்மியூருக்கு மாற்றலாகி வந்தார். சங்கரின் நடவடிக்கையை நிறுத்தி, சங்கரை மொட்டை போட்டு நடு ரோட்டில் வைத்து, அடித்து உதைத்து வழக்கு போட்டார். உடனே ஒரு (மாஜி)மந்திரி தலையிட்டு சங்கருக்கு சப்போர்ட் செய்ய, 'விட முடியாது’ என்று மறுத்துவிட்டார் தயாநிதி. விளைவு? தயாநிதிக்கு டிரான்ஸ்ஃபர்!

ஆனாலும் சங்கர் தனக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னையால் மனம் ஒடிந்து நிறையக் குடித்தார். இதனால் 'தொழில்’ பாதித்தது. அதற்குப் பதில் தொழிலை சுடலை என்பவர் கவனித்து வந்தார். அந்த நேரம்தான் லலிதா என்ற 'புது கிராக்கி’ பெங்களூரில் இருந்து வந்தாள். சங்கருக்கு லலிதாவைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. பழைய உற்சாகம் திரும்பியது. அவளுடனே சுற்றினார். ஆனால், சங்கரை லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சுடலையுடன் பழக ஆரம்பித்தாள். விளைவு? கோபம் கொண்ட சங்கர், சுடலையை ஒரு டவலால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் கொன்றுவிட்டார். லலிதாவின் பிணத்தைப் புறம்போக்கு நிலத்தில் வைத்துப் புதைத்து, தளம் எல்லாம் பூசி ஒரு குடிசையும் கட்டினார். அடுத்த சில தினங்களில் மேலும் ஏழெட்டுக் குடிசைகள் கட்டி அங்கே இருந்த ஏழைகளுக்கு மாதம் 20 ரூபாய் வீதம் வாடகைக்கு விட்டுவிட்டார்!


லலிதாவைப் புதைத்த இடத்தில் (வீட்டில்) வயதான ஒரு பெண்மணி குடியிருந்தார். விசாரணையின்போது (ஜூலை 14-ம் தேதி வியாழன் அன்று) மேற்படி லலிதாவைக் கொன்ற விஷயம் தெரிந்தது. எனவே, மறுநாள் ஜூலை 15-ம் தேதி காலை குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார்கள். தோண்டுவதற்கு முன்பு குடியிருந்த கிழவியிடம் விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம்... ''ஐயோ... ஐயோ! இந்த இடத்திலேதான் நான் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இந்த இடத்திலே பொணமா...?'' என்று அலறியபடி ஓடியே போனார்!

தோண்டிய இடத்தில் எலும்புக்​ கூடு கிடைத்தது. அங்கேயே போஸ்ட்​மார்ட்டம் நடந்தது.  ஆட்டோ டிரைவர் ரவி, ''சுடலை அன்னிக்கு உன்னைப் பார்க்க வந்தானே... அப்புறம் ஆளையே காணோமே?'' என்று கேட்க... பிணமாக்கப்பட்டு புதைக்கப்பட்டார் ரவி!

இந்த ரவியைக் கொல்லும்போது இந்திரா என்ற (விபசார) பெண் உடன் இருந்தாளாம். ரவி கொலையான ஆறு நாட்கள் கழித்து இந்திரா 'தீப்பிடித்து எரிந்து’ இறந்துவிட்டாள்! சங்கரின் வீட்டிலேயே நடந்த இந்த இறப்பு  பற்றி போலீஸ் புகார் பெறவும் இல்லை... எவ்வித விசாரணையும் செய்யவும் இல்லை.

கடைசியாகத்தான் சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய மூவரும் கடந்த 29.5.88 அன்று சங்கரின் குரூப்பால் கொலை செய்யப்பட்டார்கள். இம்மூவரையும் கொல்வதற்குக் காரணம்?


சங்கரைப் போலவே வில்சன் என்று ஒரு வஸ்தாது அதே ஏரியாவில் இருந்தார். அவருடைய நண்பர்கள் (கையாட்கள்?)தான் இந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் என்று போலீஸார் கூறுகிறார்கள். அந்த வில்சனை ஏப்ரல் மாதத்தில் இருந்து காணவில்லை. அது பற்றி விசாரிக்க வந்த மூவரையும்தான் சங்கர் அண்ட் கோ தீர்த்துக் கட்டியது! ஆக, வில்சன் என்ற நபரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

மொத்தத்தில்...

மேற்படி கொலைகளுக்கு முழுக் காரணம் போலீஸார் என்றே கூறலாம். ஆரம்பத்தில் இருந்தே போலீஸாருடன் 'முறைப்படி’ தன் உறவை வளர்த்து வந்திருக்கிறார் சங்கர். உதாரணமாக டி.ஐ.ஜி. ஒருவர் உபயோகித்து வந்த கார் ஒன்றை ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த காரில்தான் விபசாரிகள், சாராயக் கடத்தல் எல்லாம் நடத்தி வந்தார் சங்கர். இந்த காரை ரோட்டில் கண்டதும் அட்டென்ஷனில் சல்யூட் அடிக்கும் கான்ஸ்டபிள்கள் நிறையப் பேர். இந்த காரை சங்கர் ஏலம் எடுக்கக் காரணமாகவும், இந்தக் கொலைகளை மறைக்க உடந்தையாக இருந்ததற்காகவும் ஒரு கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், ஒரு டி.எஸ்.பி. ஆகியோ​ரும் தண்டிக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது.

இவர்களைத் தவிர, அரசியல் பிரமுகர்கள் நான்கு பேர் சங்கர் விஷயத்தில் நிறைய உதவிகள்(?) செய்து இருப்பதாகத் தெரிகிறது. பல போலீஸ் 'தலை’களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. எனவே, முக்கியமாகிவிட்ட இந்த வழக்கு துரிதமாக நடக்கும் பொருட்டு, விரைவில் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. விரைவில், மேலும் பல 'எலும்புக்​ கூடுகள்’ வெளிவரலாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-06-2011

23 comments:

PARAYAN said...

Nandru!!

மு.சரவணக்குமார் said...

அப்போது பிரபலமாயிருந்த பல சினிமா நடிகைகளுடன் இவருக்கு தொடர்பிருந்ததாகக் கூட தகவல்கள் உண்டு.

bandhu said...

//ஜர்னலிஸம் என்றால் என்ன என்பதையும், புலனாய்வுப் பணி என்றால் என்ன என்பதையும் ஜூனியர்விகடனை வைத்துத்தான் அந்தக் காலத்தில் அளவிட்டார்கள்..!
//
ஆலையில்லாத ஊருக்கு..!

ராஜ நடராஜன் said...

நக்கீரன் டப்பிங்கா இது:)

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...

Nandru!!]]]

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[மு.சரவணக்குமார் said...

அப்போது பிரபலமாயிருந்த பல சினிமா நடிகைகளுடன் இவருக்கு தொடர்பிருந்ததாகக் கூட தகவல்கள் உண்டு.]]]

பலான தொழிலில் ஈடுபட்டிருந்த சில துணை நடிகைகள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[bandhu said...

//ஜர்னலிஸம் என்றால் என்ன என்பதையும், புலனாய்வுப் பணி என்றால் என்ன என்பதையும் ஜூனியர் விகடனை வைத்துத்தான் அந்தக் காலத்தில் அளவிட்டார்கள்..!//

ஆலையில்லாத ஊருக்கு..!]]]

சரிதான்..! அப்போது வேறு எந்த தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகள் போலீஸ் விசாரணை போல் துப்பறியும் வேலையைச் செய்யவில்லை.. ஜூ.வி.தான் முதலில் துவக்கியது..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

நக்கீரன் டப்பிங்கா இது:)]]]

நோ.. நக்கீரன்தான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராஜராஜேஸ்வரி said...

Interesting.]]]

இன்னும் நிறைய இருக்கு. தொடர்ந்து வரும்போல தெரியுது. அத்தனையையும் காப்பி பேஸ்ட் பண்றேன். படிச்சுப் பாருங்க..!

krishjapan said...

ஆமா, இந்த படுபாவி கோலோச்சியபொழுது தமிழகத்த ஆண்டது, அந்த மாபாதகன் கருணாநிதிதான, பொன்மனச் செம்மல் இல்ல தான....

N.H. Narasimma Prasad said...

ஆட்டோ ஷங்கரை பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் இந்த கட்டுரையின் நடை மீண்டும் படிக்க தூண்டுகிறது.

Kite said...

பிறகுதான் சங்கர், கள்ளச் சாராயத்துக்கும், விபசாரத்துக்கும் பேர் போன திருவான்மியூர் பகுதிக்கு வந்தார்.//

திருவான்மியூரின் இன்றைய முன்னேற்றத்தை யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

Kite said...

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சென்னையிலேயே சட்டம், ஒழுங்கு இந்த லட்சணத்தில்தான் இருந்தது என்பதை கட்டுரை தெளிவாக விளக்குகிறது. மாட்டிக்கொண்ட சங்கர் தூக்கிலடப்பட்டான். மாட்டாதவர்கள் கல்வித் தந்தை ஆனார்கள்.

Kite said...

இவ்வழக்கு விசாரணை நடந்தபோது அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்றதால் விசாரணை தடம் புரளாமல் இருந்தது என்று கருதுகிறேன்.

ஷர்புதீன் said...

மத ரீதியான விவாதத்துக்குரிய இன்றைய எனது பதிவினை பார்க்க அழைக்கிறேன்

Amudhavan said...

'நன்றி ஜூனியர் விகடன்' என்று போடுகிறீர்கள் சரி; குறிப்பிட்ட கட்டுரை எழுதுகிறவர்களின் பெயர்களும் ஜூனியர் விகடனிலோ, ஆனந்த விகடனிலோ வருகிறதுதானே? அந்தப் பெயர்களை மட்டும் ஏன் போடுவதில்லை? இனிமேல் அவர்களின் பெயர்களையும் போடுவதுதான் சரியானதாக இருக்கும் இல்லையா?

உண்மைத்தமிழன் said...

[[[krishjapan said...

ஆமா, இந்த படுபாவி கோலோச்சிய பொழுது தமிழகத்த ஆண்டது, அந்த மாபாதகன் கருணாநிதிதான, பொன்மனச் செம்மல் இல்லதான.]]]

ஜானகி எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இதனால்தான் குறுக்கீடு இல்லாமல் போலீஸாரால் விசாரிக்க முடிந்தது என்றும் சொல்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[N.H.பிரசாத் said...

ஆட்டோ ஷங்கரை பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் இந்த கட்டுரையின் நடை மீண்டும் படிக்க தூண்டுகிறது.]]]

எனக்கும்தான் பிரசாத்.. அப்போது படித்தது. 20 வருடங்கள் கழித்து இப்போதுதான் படிக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

பிறகுதான் சங்கர், கள்ளச் சாராயத்துக்கும், விபசாரத்துக்கும் பேர் போன திருவான்மியூர் பகுதிக்கு வந்தார்.//

திருவான்மியூரின் இன்றைய முன்னேற்றத்தை யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.]]]

திருவான்மியூரிலும் குடிசைப் பகுதிகளைத்தான் சொல்கிறார்கள்..! இப்போதும் இதே போல் இருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சென்னையிலேயே சட்டம், ஒழுங்கு இந்த லட்சணத்தில்தான் இருந்தது என்பதை கட்டுரை தெளிவாக விளக்குகிறது. மாட்டிக் கொண்ட சங்கர் தூக்கிலடப்பட்டான். மாட்டாதவர்கள் கல்வித் தந்தை ஆனார்கள்.]]]

வாரியத் தலைவர் ஒருவர்தான் முழு ஆதரவும் அளித்திருக்கிறார்.

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

இவ்வழக்கு விசாரணை நடந்தபோது அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடைபெற்றதால் விசாரணை தடம் புரளாமல் இருந்தது என்று கருதுகிறேன்.]]]

முற்றிலும் உண்மை ஜெகன்னாத்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷர்புதீன் said...

மத ரீதியான விவாதத்துக்குரிய இன்றைய எனது பதிவினை பார்க்க அழைக்கிறேன்.]]]

மிகவும் அலுப்புத் தட்டுகிறது ஷர்புதீன். அதனால்தான் நான் அந்த மாதிரியான சர்ச்சைகளில் சிக்குவதில்லை.. மதம் ஒரு அபின்..!

உண்மைத்தமிழன் said...

[[[Amudhavan said...

'நன்றி ஜூனியர் விகடன்' என்று போடுகிறீர்கள் சரி; குறிப்பிட்ட கட்டுரை எழுதுகிறவர்களின் பெயர்களும் ஜூனியர் விகடனிலோ, ஆனந்த விகடனிலோ வருகிறதுதானே? அந்தப் பெயர்களை மட்டும் ஏன் போடுவதில்லை? இனிமேல் அவர்களின் பெயர்களையும் போடுவதுதான் சரியானதாக இருக்கும் இல்லையா?]]]

யோசிக்கிறேன் நண்பரே..!