விநாயகனே..! வினை தீர்ப்பவனே..!


11-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



விநாயகனே! வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே! ஞான முதல்வனே!
விநாயகனே! வினை தீர்ப்பவனே..!

ஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தியில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று பொருள். ‘நாயகன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.

விநாயகருக்கு மற்றொரு பெயர் விக்னேஸ்வரர். 'விக்னம்' என்றால் 'தடை' என்று பொருள். 'தடைகளை நீக்குகின்ற ஈஸ்வரன்' என்பதனால் இப்பெயர் பெற்றார்.

“குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்” என்ற பழமொழியை கேட்டிருப்பீங்க. உண்மையிலேயே “குட்டுப்பட்டாலும் மோதகக் கையால் குட்டுப்பட வேண்டும்” என்பதுதான் இதன் அர்த்தம்.

விநாயகரைத் தவிர நாம் வேறு எந்தத் தெய்வத்தின் முன்னாலும் நாம் குட்டுப் போட்டுக் கொள்வதில்லை. ஆனால் தினமும் விநாயகர் முன்னால் இதனைச் செய்கிறோம்.

விநாயகருக்கு ஐந்து கரங்கள் உண்டு. ஒரு கையை தாய், தந்தையரான பரமசிவம்-பார்வதிக்கும், மற்றொரு கையைத் தேவர்களின் நலம் பொருட்டும், ஒரு கையைத் தன் பொருட்டும், இரு கைகளை நமக்கு உதவுவதன் பொருட்டும் வைத்திருக்கிறார் என்று தணிகைப் புராணம் கூறுகிறது.

‘ஓம்’ என்ற எழுத்தின் வடிவமாய் ஓங்கார ரூபத்தில் எழுந்தருளி இருக்கும் சகல ஞானத்திற்கும் அதிபதியான விநாயகரைத் தொழும் சிறந்த கால் விநாயகர் சதுர்த்தி நாளன்றுதான்.

இப்படிப்பட்ட முழுமுதற் கடவுளான விநாயகர் எங்கும் இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தனித்து நிற்கிறார்.

விநாயகர் வழிபாடு என்பது பாரத நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, போர்னியோ, இந்தோனேசியா, சீனா, சிரு, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி எனப் பற்பல நாடுகளிலும் பற்பல நூற்றாண்டுகளாகப் பரவி, நிலவியமைக்கும் பல சான்றுகள் உள்ளன.

பிள்ளையார்பட்டி பிள்ளையார்

ஊரும், பேரும் ஒரே பெயர். அவர்தான் பிள்ளையார்பட்டி பிள்ளையார்.

பரஞ்சோதி முனிவர் வாதாபியிலிருந்து கொண்டு வந்த விநாயகரை திருச்செங்காட்டான் குடியில் பிரதிஷ்டை செய்தபோது பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருந்தான்.

பிள்ளையார் உருவம் அவன் மனதைப் பெரிதும் கவர்ந்தது. காரைக்குடியை அடுத்த குன்றக்குடி அருகே ஒரு குன்றில் அப்பிள்ளையார் உருவத்தை அமைத்தான். அங்கே கற்பக விநாயகர் அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்துவிட்டார்.

கும்பகர்ணப் பிள்ளையார்

இந்தப் பிள்ளையார் கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

ஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரைப் பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி எறி எனறு கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார். விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் விநாயகப் பெருமானுக்கு கும்பகர்ணப் பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஸ்ரீஆதியந்தப் பிரபு

சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் அழகிய கோயிலில் இந்த விநாயகர் அமர்ந்திருக்கிறார்.

இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான விக்கிரகத்தை இங்கு பார்க்கிறோம்.

இதில் மற்றுமொரு விசேஷம். நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்தக் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

இரட்டைப் பிள்ளையார் தரிசனம்

ஒரு விநாயகரை வணங்கினாலே சிறப்பு. இரட்டை விநாயகரை வணங்கினால் மிகவும் சிறப்பு.

ஆனால் இரட்டை விநாயகர் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில இடங்களில் இருக்கிறார்கள்.

சங்கரன்கோவிலில், சங்கரநாராயணர் கோவிலின் பின்புறம் வேலப்ப தேசிகர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.

இக்கோவிலில் இரட்டை விநாயகர் அமைந்து அருள் பாலித்து வருகின்றனர்.

வலம்சுழி வெள்ளை விநாயகர்

தமிழ்நாட்டில் கோவில்கள் சூழ்ந்த இடம் என்று கும்பகோணத்தைச் சொல்வார்கள்.

கும்பகோணத்திற்கு அருகில் இருப்பது சுவாமி மலை. சுவாமி மலைக்கு மிக அருகில் இருப்பது திருவலஞ்சுழி.

இந்தத் திருக்கோயிலில் வலம்சுழி வெள்ளை விநாயகர் தரிசனம் தருகிறார். வெள்ளை நிறக் கையினால் தொடப்படாதவர் இவருக்கு பச்சைக் கற்பூரத்தால்தான் அபிஷேகம். பார்க்கடல் கடையுமுன்னர் வழிபட்ட மூர்த்தி என்று கூறப்படுகிறது.

உற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் வாணி, கமலா என்ற இரு தேவிமார்கள் இருக்கின்றனர்.

துதிக்கை வலமாக சுருண்டிருப்பதினாலேயே வலஞ்சுழி என்று இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது.

இவருடைய திருவடிவை கடல் நுரையால் உருவாக்கி, தேவேந்திரன் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகத் தல புராணம் கூறுகிறது. இந்த விநாயகரைத் தரிசிக்க வந்த கவி காளமேகம் மிக அழகான பாடலொன்றைப் பாடியுள்ளார்.

“பறவாத தம்பி கருகாத வெங்கரி பண் புரண்டேஇறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல்நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில்பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே”

தும்பி, வெங்கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்னும் பெயர்கள் ஆனையைக் குறிக்கும் சொற்களாகவும் நற்றமிழில் விளங்குகின்றன.

அவற்றை இப்பாடலில் விநாயகருடன் பொருந்தி, ‘பறக்காத தும்பி, கருகாத கரி, ஸ்வரம் எழுப்பாத வீணைத் தந்தி, உருகாத பொன், சிவப்பைக் காட்டாத சிந்துரம், பூச முடியாத சந்தனம், நீல் நிலையில் தோன்றாத ஆம்பல்’ என்று சிலேடையைக் கவி காளகமேகம் பாடுவது ஆழ்ந்து, ரசிக்கத்தக்க அற்புதமாய் விளங்குகிறது.

வினைகளைத் தீர்க்கும் வில்வ விநாயகர்

வேழமுகத்து விநாயகர் சில திருத்தலங்களில் வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கொலு வீற்றிருப்பார். அவரை வணங்கி அல்லல் நீங்கப் பெற்றிருப்போம்.

ஆனால் சிவனுக்கே உரிய வில்வ மரத்தடியில் அமர்ந்த வலம்புரி விநாயகராக அருள் புரியும் பிள்ளையார் பெருமானை நீங்கள் தரிசத்ததுண்டா?

சென்னை குரோம்பேட்டை உமையாள்புரம் என்னும் வீதியில் விநாயகப் பெருமான் வில்வ மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

நிறம் மாறும் அற்புத விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கேரளபுரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஒரு அழகிய ஆலயம் உள்ளது. இதுவே மகாதேவன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதியே கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. இங்கு எழுந்தருளியிருப்பவரே நிறம் மாறும் விநாயகராவார்.

ஆண்டு தோறும் உத்தராயண காலத்தில் (மாசி மாதம் முதல் ஆடி மாதம்வரை) இவ்விநாயகர் (ஆவணி மாதம் முதல் தை மாதம்வரை) நிறம் கருமையாக உள்ளது என்பது இதன் சிறப்பு.

ஈச்சனாரி விநாயகர்

கோவை மாவட்டத்தில் மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படுவது பேரூர் ஆகும்.

இங்குள்ள பாடல் பெற்ற பராதனப் பெருமைமிக்க பண்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.

அப்படி வண்டியில் வைத்து எடுத்து வந்தபோது வண்டியின் அச்சுமுறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.

விநாயகர் சிலையைப் பட்டீஸ்வரத்திற்கு எடுத்துச் சென்ற பக்தர்களால் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.

இறைவனின் விருப்பத்தை யார் தடுக்க முடியும்?

இறுதியில் அங்கேயே விநாயகப் பெருமான் கலியுகக் கர்ணாமூர்த்தியாக அருள் புரிய சித்தம் கொண்டார்.

ஆம், அவ்விடத்தில் பிள்ளையார் பெருமானுக்குப் புகழ் பெற்ற ஆலயம் எழும்பியது. அதுவே இப்போது ஈச்சனாரி விநாயகர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜை

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.

விநாயகரின் திருவுருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளைச் சலவைக்கல், முத்து, பவழம், யானைத் தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைந்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.

அந்தப் பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயகப் பெருமானின் பலவிதப் பெயர்களைச் சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தைச் சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டைப் பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது. எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியைப் பெற்றுத் தரும்.

எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.

வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களைத் தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.

சந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.

அவரே வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள்...!


31 comments:

pichaikaaran said...

first

pichaikaaran said...

‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று பொருள். ‘நாயகன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.

அதாவது , இரண்டையும் சேர்த்து பார்த்தால், தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் தான் வினாயகன் என என்னை போன்ற சிறுவர்களுக்கும் புரியும்படி எழுதியதற்கு நன்றி

R. Gopi said...

பாஸ் நானும் பிள்ளையார் கோவிலைப் பத்தில்லாம் எழுதி இருக்கேன். நீங்க ரெண்டு நாளா என்னைக் காப்பி அடிக்கிறீங்க!!!:)

Ganpat said...

அற்புதம்!
விநாயகர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிட்டட்டும்!

butterfly Surya said...

உங்க பெரியப்பா விநாயகன் (முருகனை நீங்க அப்பன்னு தானே சொல்வீங்க) அருள் உங்களுக்கு என்றும் உண்டு..

துளசி கோபால் said...

பிள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

சென்னையில் பில்ராத் ஹாஸ்பிடல் இருக்கு பாருங்க அதே ரோடில் சங்கீதாவை நோக்கி வந்தால் வலது பக்கம் ஒரு ரெட்டைப்பிள்ளையார் இருக்கார்.

மாமல்லபுரத்தில் பெருமாள் கோவிலில் மூணுபிள்ளையார் சைடு பை சைடா இருக்காங்க.

போய் சேவிச்சுக்குங்க.

எஸ்.கே said...

விநாயகர் நிறைய பேருக்கு இஷ்ட தெய்வமா இருக்கார். சின்ன வயசிலேயே அவர் மேலே ஈர்ப்பு வந்துடுது! அதனாலதானோ என்னமோ எல்லோரும் நிறைய பிள்ளையார் கோயிலை கட்டிடறாங்க!

ராமலக்ஷ்மி said...

அருமையான பதிவு.

பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்!

San said...

Dear TT,
arumaiana padhivu.
Thanks for sharing and may lord vinayaka bless you.

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
first]]]

பார்வையாளன் ஸார்.. நீங்களுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று பொருள். நான் இது மாதிரி இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்லை..!

‘நாயகன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள். அதாவது , இரண்டையும் சேர்த்து பார்த்தால், தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் தான் வினாயகன் என என்னை போன்ற சிறுவர்களுக்கும் புரியும்படி எழுதியதற்கு நன்றி.]]]

நன்றி.. விநாயகப் பெருமான் உங்களுக்கு அருள் புரியட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[இரா கோபி said...
பாஸ் நானும் பிள்ளையார் கோவிலைப் பத்தில்லாம் எழுதி இருக்கேன். நீங்க ரெண்டு நாளா என்னைக் காப்பி அடிக்கிறீங்க!!!:)]]]

ச்சூ.. சத்தமா பேசாதீங்க.. யாருக்காச்சும் தெரிஞ்சிரப் போகுது.. இந்தப் பதிவே போன வருஷ பிள்ளையார் சதுர்த்திக்கு போட்ட பதிவுதான்..!

ச்சும்மா நேரமில்லாததால மீள் பதிவு.. மீள் கும்பிடு..!

உண்மைத்தமிழன் said...

[[[Ganpat said...
அற்புதம்! விநாயகர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிட்டட்டும்!]]]

உங்களுக்கும் சேர்த்தே கிடைக்கட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
உங்க பெரியப்பா விநாயகன் (முருகனை நீங்க அப்பன்னுதானே சொல்வீங்க) அருள் உங்களுக்கு என்றும் உண்டு..]]]

இந்த பெரியப்பன், அப்பன்.. ரெண்டு பேருமே சில சமயத்துல ஒண்ணா வந்து தொல்லை கொடுக்குறாங்க.. இன்னா செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

பிள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

சென்னையில் பில்ராத் ஹாஸ்பிடல் இருக்கு பாருங்க.. அதே ரோடில் சங்கீதாவை நோக்கி வந்தால் வலது பக்கம் ஒரு ரெட்டைப் பிள்ளையார் இருக்கார்.

மாமல்லபுரத்தில் பெருமாள் கோவிலில் மூணு பிள்ளையார் சைடு பை சைடா இருக்காங்க. போய் சேவிச்சுக்குங்க.]]]

டீச்சர்.. எந்த ஊருக்குப் போனாலும் கோவில்களை மட்டும் மனப்பாடம் பண்ணி எடுத்திட்டுப் போயிர்றீங்க..? சூப்பர்..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
விநாயகர் நிறைய பேருக்கு இஷ்ட தெய்வமா இருக்கார். சின்ன வயசிலேயே அவர் மேலே ஈர்ப்பு வந்துடுது! அதனாலதானோ என்னமோ எல்லோரும் நிறைய பிள்ளையார் கோயிலை கட்டிடறாங்க!]]]

அவருடைய தோற்றமும், கும்பிடுவதில் இருக்கும் வித்தியாசமான அணுகுமுறையும்தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்..! குறிப்பாக அந்தத் தோப்புக்கரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராமலக்ஷ்மி said...

அருமையான பதிவு. பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்!]]]

சாப்பிட்ட கொழுக்கட்டைக்கு வாழ்த்துக்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[San said...

Dear TT,
arumaiana padhivu.
Thanks for sharing and may lord vinayaka bless you.]]]

நன்றி சேன் ஸார்..!

ராம்ஜி_யாஹூ said...

நீங்க இன்னிக்கு சென்னையில் எந்த பிள்ளையார் கோயிலுக்கு எல்லாம் போனீங்க

kanagu said...

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அண்ணா :)

‘விநாயகர்’ என்ற பெயருக்கு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி :) :)

kanagu said...

’தமிழன் எக்ஸ்பிரஸ்’ பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...

இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பெரிய பத்திரிக்கை நிறுவனத்தை சேர்ந்த பத்திரிக்கைகே இந்த நிலைமையெனில் கஷ்டம் தான் :(

இப்போதிருக்கும் அரசியல் பத்திரிக்கைகள்-ல எதுண்ணா நல்லா இருக்கு???

a said...

விநாயகர் பற்றிய புதிய தகவல்கள்.............. இந்த வெவரமெல்லாம் எங்க
படிக்கிறீங்க..

மரா said...

உங்க பெரியப்பா விநாயகன் (முருகனை நீங்க அப்பன்னு தானே சொல்வீங்க) அருள் உங்களுக்கு என்றும் உண்டு..

haa haa haa:)

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
நீங்க இன்னிக்கு சென்னையில் எந்த பிள்ளையார் கோயிலுக்கு எல்லாம் போனீங்க]]]

வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சின்னக் கோவிலுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அண்ணா :) ‘விநாயகர்’ என்ற பெயருக்கு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி :) :)]]]

நான் படித்ததை இங்கே உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன் கனகு..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

’தமிழன் எக்ஸ்பிரஸ்’ பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...

இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பெரிய பத்திரிக்கை நிறுவனத்தை சேர்ந்த பத்திரிக்கைகே இந்த நிலைமையெனில் கஷ்டம் தான் :(

இப்போதிருக்கும் அரசியல் பத்திரிக்கைகள்-ல எதுண்ணா நல்லா இருக்கு???]]]

அந்தப் பதிவுல போட வேண்டிய பின்னூட்டத்தை இதுல போடுறீங்களே கனகு..?

இப்போதைக்கு எந்தப் பத்திரிகையுமே நடுநிலைமையோடு இல்லை. அத்தனையும் ஒரு சார்புதான்.. பெரும்பான்மையாக அரசு சார்பு பத்திரிகைகள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
விநாயகர் பற்றிய புதிய தகவல்கள் இந்த வெவரமெல்லாம் எங்க
படிக்கிறீங்க..]]]

எல்லாம் பல்வேறு பத்திரிகைகளில் படித்ததுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மரா said...
உங்க பெரியப்பா விநாயகன் (முருகனை நீங்க அப்பன்னு தானே சொல்வீங்க) அருள் உங்களுக்கு என்றும் உண்டு..

haa haa haa:)]]]

தமிழ்க் கடவுள்களே குடும்பத்துடன்தான் காட்சியளிக்கிறார்கள். அதனால் இதிலொன்றும் தவறில்லை மரா..!

ஜோ/Joe said...

நல்லா தொகுத்திருக்கீங்க .வாழ்த்துகள் அண்ணே!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...
நல்லா தொகுத்திருக்கீங்க .வாழ்த்துகள் அண்ணே!]]]

நன்றி ஜோ.. போன வருஷமே இதைப் படிக்கலையே..?

Trails of a Traveler said...

A very nice post Saravana!!

Ram