மூச்சை நிறுத்திக் கொண்ட தமிழன் எக்ஸ்பிரஸ்..!

10-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்திய எனது சோகம், எனது எழுத்துப் பணியைத் துவக்கி வைத்து, எனக்கு பால பாடம் கற்பித்துக் கொடுத்த 'தமிழன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை தனது மூச்சை நிறுத்திக் கொண்டதுதான்.


'இந்தியன் எக்ஸ்பிரஸின்' ஸ்தாபகர், ராம்நாத் கோயங்கோ இறந்த பின்பு எழுந்த சொத்துப் பிரச்சினை பல மாத கால இழுபறிக்குப் பிறகு ஒரு சமரசத் திட்டத்திற்கு வந்தது. வட மாநிலங்கள் முழுவதும் பேரன் விவேக் கோயங்காவிற்கும், தென்னகம் முழுவதும் இன்னொரு பேரன் மனோஜ்குமார் சொந்தாலியாவிற்கும் என பிரிக்கப்பட்டது.

தனது ஆளுமையின் கீழ் இருந்த 'பைனான்ஸியல் எக்ஸ்பிரஸ்,' 'ஸ்கிரீன்' என்ற பத்திரிகைகளைப் போல தமிழிலும் ஒரு வாரப் பத்திரிகை துவக்க வேண்டும்  என்கிற ஆர்வத்தில் விவேக் கோயங்கோ இருந்தபோது மிகச் சரியாக அப்போதுதான் ஜூனியர் விகடனில் இருந்து வெளியேறிய 'மிஸ்டர் கழுகார்' சுதாங்கனின் சந்திப்பும் நடக்க.. இதன் பின்புதான் தமிழன் எக்ஸ்பிரஸ் துவக்கப்பட்டது.

'தமிழன் எக்ஸ்பிரஸில்' இருந்த அத்தனை செய்தியாளர்களும் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்தான். அங்கிருந்து அழைக்கப்பட்டவர்கள். ஆரம்பித்த புதிதில் மிகவும் பரபரப்பாகவே கிளம்பி டாப் கியருக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் அடியேன் அங்கே கால் வைத்தேன்.

அதுவரையில் எனக்கிருந்த ஒரே ஆர்வம் பத்திரிகைகளை படிப்பதில்தான். ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பாக்ஸ்புரோ புரோகிராரமாராக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்த நான்.. சினிமா ஆசையில் வேலையை விட்டுவிட்டு நாளைக்கு ஷூட்டிங்.. நான் ரெடி என்பது போல் தயாராக இருந்தேன்.

ஆனால் எனது சினிமா மீதான பார்வையை ஆர்வம் என்று மட்டுமே அப்போது கண்டு கொண்ட எனது அப்போதைய காட்பாதரான சி.ஜெரால்டு, என் வாழ்க்கையை நாசமாக்க விரும்பாமல், “நான் ஒரு அட்ரஸ் தரேன். அங்க போ.. வேல்பாண்டியன்னு ஒருத்தன் இருப்பான். நான் சொன்னேன் சொல்லி வேலை கேளு. கொடுக்குற வேலையைச் செய்யு.. கொஞ்ச நாள் அங்க இரு. நான் தனியா படம் பண்ணும்போது கண்டிப்பா உன்னைக் கூப்பிடுறேன்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

'காட்பாதரண்ணன்' சொல்றாரே என்கிற மரியாதைக்காக வேல்பாண்டியனை சந்தித்து அவர் மூலமாக 'ப்ரூப் ரீடர்' என்கிற மரியாதைக்குரிய பணியினை ஏற்றுக் கொண்டு, 'தமிழன் எக்ஸ்பிரஸில்' இணைந்தேன்.

உள்ளே நுழைந்த பின்பு எனக்குள் ஏற்பட்ட பத்திரிகை மயக்கத்தில் அத்தோடு சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆசையை இரண்டாம்தாரமாக தள்ளி வைத்துவிட்டு முழு மூச்சாக பத்திரிகையாளனாக மாறினேன்.

நான் உள்ளே நுழைந்தபோது தமிழன் எக்ஸ்பிரஸின் சர்க்குலேஷன் ஒரு லட்சத்து பத்தாயிரம்.. நான்கரையாண்டுகள் கழித்து நான் எனது ‘வனவாச'த்தை முடித்துவிட்டு வெளியேறியபோது அதன் சர்க்குலேஷன் வெறும் இரண்டாயிரம்தான்..

வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய..? அந்தப் பத்திரிகையில் வந்த அரசியல் செய்திகள், கட்டுரைகள் அனைத்தும் சுதாங்கனின் பீரியடில் கம்பீரமாக இருந்தவை.

தமிழகத்தை மிகப் பரபரப்பாக்கிய புதுக்கோட்டை மகளிர் காவலர்களின் லெஸ்பியன்  மேட்டரை துப்பறிந்து சொன்னபோது அதன் சர்க்குலேஷன் எகிறியது.

அதேபோல் சிதம்பரம் ம.தி.மு.க. பிரமுகர் பழனிவேலு கொலை வழக்கில் மற்ற பத்திரிகைகள் பெயரைக்கூட குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக குற்றவாளிகள் இவர்களாக இருக்குமோ என்று போலீஸ் சந்தேகிப்பதாகத் தெரிவித்தபோது 'தமிழன் எக்ஸ்பிரஸ்'தான் முதன்முதலாக வாண்டையார் சகோதரர்களின் பெயரைக் குறிப்பிட்டது.

அத்தோடு அப்போதைய மாவட்ட கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு கடலூர் மாவட்ட ஏரிகளில் தனி போட் வைத்து வாண்டையார்களைச் சல்லடை போட்டுத் தேடியதையும் தனி கவர் ஸ்டோரியாகவே போட்டது. அப்போதெல்லாம் கடலூர், சிதம்பரம் ஏரியாக்களில் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒட்டு மொத்தமாக வாங்கப்பட்டு மொத்தமாக தீ வைத்து எரிக்கப்பட்ட கதையும் நடந்தது..

இதேபோல் இன்னொரு வாண்டையாரான தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையாரின் தோட்டத்தில் நடந்திருந்த பல மர்மக் கொலைகளையும் துணிச்சலாக அம்பலப்படுத்தியதும் நான் இருந்த காலக்கட்டத்தில் நடந்ததுதான்..

இந்திய அரசியல் சரித்திரத்திலேயே ஒரு பிரதமர் மாநிலப் பத்திரிகையின் ஆசிரியருக்கே போன் செய்து ஒரு மறுப்பு தெரிவித்தார் என்றால் அது 'தமிழன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு மட்டும்தான். அவர் தேவேகவுடா. பிரச்சினை இப்போது வேண்டாம். சொன்னால் வீடு தேடி வந்து உதைக்க ஆள் தயாராக இருக்கிறார்கள்.

பத்திரிகைகள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று நானும் ச்சும்மாதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் ஒரு ஆட்சி கவிழ்ந்து, இன்னொரு ஆட்சியும் வந்து, பின்பு அதுவும் இன்னொரு கட்டுரையினால் காணாமல் போக வழிவகுத்து, தேர்தலைக் கொண்டு வந்து... உஷ்ப்பா.. இப்போ அதையெல்லாம் நினைச்சா மலைப்பா இருக்கு.. (பின்னாடி நான் கிழடு தட்டி நடக்க முடியாமல் இருக்கும்போது, விரிவா இது பத்தி சொல்கிறேன்.)

அரசியல் கட்டுரைகளில் முக்கியமானதாக தற்போது 'எரிதழல்' என்கிற தலைப்பில் ரிப்போர்ட்டரில் எழுதிவரும் 'ஜென்ராம் அண்ணன்', அப்போது தமிழன் எக்ஸ்பிரஸில் 'தெருத்தொண்டன்' என்கிற தலைப்பில் இதே போன்ற அரசியல் கொத்துப் புரோட்டாக்களை வீசிக் கொண்டிருந்தார். அத்தனையும் நல்முத்துக்கள்.. இன்றைக்கும் அவைகள் படிக்கக் கிடைத்தால் ஆயிரமாயிரம் கதைகளைப் பேசும்..

சிரிக்க வைப்பதோடு அல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் பண்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் நெல்லை கண்ணனின் 'குறுக்குத்துறை ரகசியங்களும்', எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் 'இனிது இனிது காதல் இனிது - இரண்டாம் பாகமும்' தமிழன் எக்ஸ்பிரஸின் மிகச் சிறப்பான வெளியீடுகள்தான். இதன் பின்புதான் ஆஸ்தான இடத்தைப் பிடித்து 'தொடத் தொடத் தங்கம்' என்னும் சஸ்பென்ஸ் திரில்லரை வழங்கினார் இந்திரா செளந்தர்ராஜன்.

1996-ல் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பதவியேற்றவுடனேயே ஒரு நாள் முழுக்க சுதாங்கன் ஸாரை அருகில் வைத்துக் கொண்டு அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவு செய்ய வைத்து பேட்டியளித்தது மிக வித்தியாசமான நிகழ்வு.

வாரம் ஒரு மந்திரிகளின் நடவடிக்கைகளை அலசி, ஆராய்ந்ததில் சிலருக்கு இலாகாக்கள் பறிபோய், இடம் மாறுதலாகி ஒரு மாற்றத்தையும் உண்டு செய்வதற்குக் காரணமாகியிருந்தது.

டைட்டானிக் படம் வந்த புதிதில் இணையம் என்ற ஒரு விஷயம் அப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக நமது இளைய சமுதாயத்தினரை கவர்ந்து கொண்டிருந்தபோது தடாலடியாக இணையத்தின் மூலமாகவே டைட்டானிக் ஹீரோயின் கே,ட் வின்ஸ்லெட்டுடன் பேசி, பேட்டியெடுத்து வெளியிட்டது அப்போதைய ஒரு எதிர்பார்க்காத செய்தி..

தமிழகத்தையே பரபரப்பாகிய பிரம்மானந்த சாமியாரின் குடில் லீலைகளை அனைத்துப் பத்திரிகைகளும் கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தன. தற்போது லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையில் இருக்கும் உயரதிகாரியான துக்கையாண்டி தலைமையிலான சிறப்பு போலீஸ் டீம்தான் இந்த வழக்கை விசாரித்தது. இந்த சிறப்பு போலீஸ் டீம் எந்த லட்சணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரித்தார்கள் என்பதையும், சாமியார் மீது குற்றம் சொன்ன பெண்களை எப்படியெல்லாம் விசாரித்தார்கள் என்பதையும் விலாவாரியாக எழுதியது தமிழன் எக்ஸ்பிரஸ்தான்.

பிரம்மானந்தா சாமியாருக்கு சப்போர்ட்டா என்றுகூட அப்போது பத்திரிகையுலகத்தில் கெட்ட பெயர் எடுத்தாலும், மனித உரிமை மீறல்கள் இந்த வழக்கில் நடந்திருப்பதை, பின்னாளில் குற்றம் சுமத்திய பெண்களே அதனை வெளிப்படுத்தியும், சாமியாரின் ஆசிரமத்திலேயே மீண்டும் இணைந்ததும் உண்மை என்று நிரூபித்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு பற்றிய விசாரணைக் கமிஷன்களின் அறிக்கையை வெளிப்படுத்தி அதில் இருந்த குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தி, சுப்பிரமணியசுவாமி, திருச்சி வேலுச்சாமி மோதலின் முதல் திரியைக் கொளுத்திவிட்டது தமிழன் எக்ஸ்பிரஸ்தான். வர்மா கமிஷன் முன் சி.பி.ஐ. தனது ஆதாரங்களை சமர்ப்பிக்க மறுத்தது ஏன் என்பது பற்றியும், இந்திய அமைதி காப்புப் படை இலங்கையில் என்னென்ன கொடுமைகள் செய்தது என்பது பற்றியும் தனிக்கட்டுரையை வெளியிட்டு தேசத்துரோகி பட்டத்தையும் சுமந்தது இந்தப் பத்திரிகை..

இந்த நான்கரை ஆண்டு ‘வனவாச' காலத்தில் என்னால் மறக்க முடியாத துயரச் சம்பவம் என்னை அறிமுகப்படுத்தி வைத்து, அந்த அலுவலகத்தில் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்த எனது நண்பன் வேல்பாண்டியனின் அகால மரணம்தான்..

நள்ளிரவில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சாலை விபத்தொன்றில் உயிரைவிட்ட வேல்பாண்டியனிடம் அப்போது இருந்த கனவுகளெல்லாம் அந்த மேம்பாலத்தின் நீளத்தையும் தாண்டியது. அத்தனையையும் மணல் லாரி வடிவில் வந்த எமன் ஒரே நொடியில் வீழ்த்திவிட்டது காலத்தின் கொடூரம்..

போதும் இந்த பத்திரிகை வாழ்க்கை என்று என்னை முடிவெடுக்க வைத்தது அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாக மாற்றங்கள்தான். சுதாங்கன் ஸார், தமிழன் எக்ஸ்பிரஸில் இருந்து வெளியேறிய பின்பு சில மாதங்கள் கழித்து நானும் எனது அடுத்த குருகுலமான மின்பிம்பங்கள் நிறுவனத்திற்கு சுதாங்கனாலேயே அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு போய் சேர்ந்தேன்..

இதன் பின்பு தொடர்ச்சியான வியாபாரச் சரிவினால் மும்பை எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன் இதனை மூட எத்தனித்தபோது மதுரை பப்ளிகேஷன்ஸ் தானாகவே முன் வந்து இதனை ஏற்றுக் கொண்டது. மேனேஜ்மெண்ட் கை மாறியதால் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இடம் புகுந்தும் ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் சர்க்குலேஷன் ஏறாதது மிகப் பெரும் குறை.

இத்தனைக்கும் காவல்துறை, அரசியல் சம்பந்தப்பட்டு இந்தப் பத்திரிகையில் வெளிவந்த அத்தனை செய்திகளும் நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான் இருந்தது. இருக்கும். அந்த அளவுக்கு அந்தச் செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது தமிழகத்தின் அத்தனை பத்திரிகையாளர்களுக்கும், அரசியல்வியாதிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

எல்லாம் இருந்தும், ஈர்க்கப்படாத பத்திரிகையின் லே-அவுட்டும், பல தாமதமான செய்திகளாலும் ஒரு காலத்தில் ஜூனியர்விகடனுக்கே சவால்விட்ட இந்தப் பத்திரிகை, “ச்சின்னப் பத்திரிகை.. அதான் இப்படி சின்னத்தனமா கேள்வி கேக்குறாங்க” என்று கருணாநிதியாலேயே கிண்டல் அடிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது வருத்தத்திற்குரியது.

ஆனாலும் உடல் உழைப்பில் இருக்கின்ற சுகத்தை இந்தப் பத்திரிகையில் வேலை பார்த்தபோதுதான் நான் அறிந்தேன். இரவு முழுவதும் வடபழனி விஜயா பிரிண்ட்டிங் பிரஸ்ஸில் பார்ம் ஓடும்போது உடன் இருந்து ப்ரூப் பார்த்து கையொப்பம் பார்த்துக் கொடுத்து.. பின்பு ஒவ்வொரு பார்முக்கும் முழித்திருந்து.. உட்கார்வதற்குக்கூட அங்கே சேர் இருக்காது.. பாரம் ஒட்டுகின்ற இடம் ஓரிடம்.. பிளேட் போடும் இடம் வேறிடம்.. மிஷின் கீழே வேறிடத்தில்.. என்று தனித்தனி இடத்திற்கு காலில் சக்கரத்தைக் கட்டிவிட்டதைப் போல விடிய, விடிய ஓடிக் கொண்டேயிருந்தது தனி சுகம்..

இத்தனை அலுப்பும், சலிப்பும் அந்த வாரத்திய புத்தகத்தைக் கையில் வாங்கியவுடன் மறந்து போகும்.. புத்தகத்தைப் புரட்டப் புரட்ட எத்தனை பேரின் உழைப்பு, எத்தனை பேரின் வியர்வை இந்த 48 பக்கங்களில் அடங்கியிருக்கிறது என்கிற உணர்வோடு அதில் மயங்கியிருந்த காலமெல்லாம் சட்டென்று ஒரு நாளில் உடைந்துபோனதை நினைத்தால் இன்றைக்கும் வருத்தமாகத்தான் உள்ளது.

அந்த அலுவலகத்தில் இருந்து நான் விடுதலையான பின்பும் தொடர்ந்து அதன் இதழ் நிறுத்தப்படுகின்றவரையிலும் இத்தனை வருடங்கள் அந்தப் பத்திரிகையை நான் வாங்கிப் படித்துதான் வந்திருக்கிறேன்.. கடைசியாக நான் வழக்கம்போல கேட்க, “நிறுத்தியாச்சாம்.. இனிமேல் வராதாம்..” என்று கடைக்காரர் சொன்னபோது எனக்குள் எழுந்த உணர்வை இப்போதும் என்னால் வெளிப்படுத்த முடியவில்லை..

நிறுத்திவிடுவார்கள்.. நிறுத்திதான் ஆக வேண்டும் என்பதெல்லாம் என் காதுக்கும் எட்டிய செய்திகள்தான் என்றாலும், சாவுச் செய்தியைப் போலவே சட்டென மனம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து நின்று போனதே அந்தக் குடும்பத்தில் ஒருவனாக இருந்து அந்தச் சோகத்தைத் தாங்கிக் கொண்ட உணர்வைத் தந்தது.

அலுவலகம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டு, பட்டனைத் தட்டினால் காப்பி என்ற வசதியினால் நிமிடத்திற்கொருமுறை காபியைக் குடித்துவிட்டு. ஏறினால் ஆட்டோ.. இறங்கினால் ஆட்டோ என்று அலுவலக வேலைக்காக ஆட்டோவிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொஞ்சம் சொகுசு வாழ்க்கையையும் எனக்குக் கொடுத்திருந்தது தமிழன் எக்ஸ்பிரஸ்.



வாழ்க்கைப் பாடத்தில் யார், யாரிடம் எப்படி பேச வேண்டும்? எப்படிப் பழக வேண்டும்..? நீக்குப் போக்குடன் நடந்து கொள்வது எப்படி..? என்பதையெல்லாம் கற்றுக் கொடுத்ததும் இந்தப் பத்திரிகைதான். அதோடு இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் ஒரு பத்திரிகை அலுவலகம் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகவும் இந்தப் பத்திரிகை அனுபவத்தை வைத்துதான் உணர்ந்து கொண்டேன்..!


அதே நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்.. புதிது, புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்து, இரவில் அதிக நேரம் கண் விழித்து வேலை பார்க்கின்ற பழக்கத்தை ஏற்படுத்தி, இன்றுவரையிலும் அதன் பலனை எனக்குக் கிடைக்க வைத்திருக்கும் இந்தப் பத்திரிகையை நான் என்றென்றும் மறவேன்..!!!

56 comments:

பழமைபேசி said...

இன்றைய உலகில் எழுவதும் வீழ்வதும் வெகு இயல்பாகிப் போனவைகள்... விரிவாக அறியக் கொடுத்தமைக்கு நன்றி!!!

நசரேயன் said...

//
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பாக்ஸ்புரோ புரோகிராரமாராக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்த நான்
//

சினிமாவை நம்பி சென்னை வந்தவன் தான் நானும், வயத்து பசி எல்லாம் மறந்து பொட்டி தட்ட ஆரம்பிச்சேன். இன்னைக்கு பொழப்பு ஓடுது

எஸ்.கே said...

கற்றுத்தந்த இடங்களை பிரிவதென்றாலே வேதனை,
அவை மறைவதென்றால்....

அந்த ஞாபகங்கள் மட்டும் மிச்சம்.

-/பெயரிலி. said...

/நான் உள்ளே நுழைந்தபோது தமிழன் எக்ஸ்பிரஸின் சர்க்குலேஷன் ஒரு லட்சத்து பத்தாயிரம்.. நான்கரையாண்டுகள் கழித்து நான் எனது ‘வனவாச'த்தை முடித்துவிட்டு வெளியேறியபோது அதன் சர்க்குலேஷன் வெறும் இரண்டாயிரம்தான்../

சரவணன் அண்ணே எக்ஸ்பிரஸ் பிரேக்டவுனாப் போனதுக்கான காரணத்தை இப்படி உடைச்சுச் சொன்னால் எப்படி? ;-))

ராம்ஜி_யாஹூ said...

கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது.
சுதாங்கனின் சிறப்பான பணிக்கு தமிழன் எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல உதாரணம். உங்களின் பங்களிப்பிற்கும் நன்றிகள்.

மாலன் தினமணியில் இருந்து மீடியா உயர் படிப்பு/ஆய்விற்கு அமெரிக்கா சென்று அப்போது சுதாங்கனுக்கு எழுதிய பதில்கள் அன்புள்ள தமிழனுக்கு .
அதே சூட்டோடு சுதாங்கன் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆரம்பித்து மிக சிறப்பாக சென்று கொண்டு இருந்தார்.

அபி அப்பா said...

\\(பின்னாடி நான் கிழடு தட்டி நடக்க முடியாமல் இருக்கும்போது, விரிவா இது பத்தி சொல்கிறேன்)\\

பின்னாடி மட்டும் தனியாவா கிழடு தட்டும்? ஒட்டுமொத்தமா தான் தட்டும்:-)

பின்னாடில இருந்து பழுக்க நீங்க என்ன மாம்பழமா?

அபி அப்பா said...

அடடா பாதி படிச்ச பின்னே போட்ட என் முந்தைய பின்னூட்டம் பத்தி மறந்துடுங்க. நெசமாவே உங்க பதிவு கொஞ்சம் கலங்க அடிச்சது உண்மை. எனக்கும் அந்த வலி தெரியும். ஒரு கடை ஆரம்பித்து மூடின வலி:-(

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
இன்றைய உலகில் எழுவதும் வீழ்வதும் வெகு இயல்பாகிப் போனவைகள். விரிவாக அறியக் கொடுத்தமைக்கு நன்றி!!!]]]

ஆனாலும் அவற்றின் எச்சங்கள் இன்னமும் மனதில் தொக்கி நிற்கின்றனவே..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...

//ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பாக்ஸ்புரோ புரோகிராரமாராக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்த நான்//

சினிமாவை நம்பி சென்னை வந்தவன்தான் நானும்.. வயத்து பசி எல்லாம் மறந்து பொட்டி தட்ட ஆரம்பிச்சேன். இன்னைக்கு பொழப்பு ஓடுது]]]

நீங்களுமா..? நசரேயன் ஆச்சரியமா இருக்கு..!?

சென்னையில் எல்லா துறையிலும் இது போன்று சினிமாவை நம்பிக் கெட்டவர்கள் இருக்கிறார்கள் போலும்..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
கற்றுத் தந்த இடங்களை பிரிவதென்றாலே வேதனை,
அவை மறைவதென்றால், அந்த ஞாபகங்கள் மட்டும் மிச்சம்.]]]

உண்மைதான் எஸ்.கே. நமக்கு வழிகாட்டிய இடம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது..!

உண்மைத்தமிழன் said...

[[[-/பெயரிலி. said...

/நான் உள்ளே நுழைந்தபோது தமிழன் எக்ஸ்பிரஸின் சர்க்குலேஷன் ஒரு லட்சத்து பத்தாயிரம்.. நான்கரையாண்டுகள் கழித்து நான் எனது ‘வனவாச'த்தை முடித்துவிட்டு வெளியேறியபோது அதன் சர்க்குலேஷன் வெறும் இரண்டாயிரம்தான்../

சரவணன் அண்ணே எக்ஸ்பிரஸ் பிரேக்டவுனாப் போனதுக்கான காரணத்தை இப்படி உடைச்சுச் சொன்னால் எப்படி? ;-))]]]

வேறென்ன சொல்வது..? உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்..?

பத்திரிகைகளின் பலமும், வெற்றியும் அதன் சர்க்குலேஷனை வைத்துத்தான முடிவு செய்யப்படுகிறது..!

சர்க்குலேஷன் குறைந்ததற்கு பல காரணங்கள்..! ம்ஹும்.. யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

\\(பின்னாடி நான் கிழடு தட்டி நடக்க முடியாமல் இருக்கும்போது, விரிவா இது பத்தி சொல்கிறேன்)\\

பின்னாடி மட்டும் தனியாவா கிழடு தட்டும்? ஒட்டு மொத்தமாதான் தட்டும்:-) பின்னாடில இருந்து பழுக்க நீங்க என்ன மாம்பழமா?]]]

ஹா... ஹா.. ஹா..! நக்கலு விடாது.. கூடவே பொறந்தது போல..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...
அடடா பாதி படிச்ச பின்னே போட்ட என் முந்தைய பின்னூட்டம் பத்தி மறந்துடுங்க. நெசமாவே உங்க பதிவு கொஞ்சம் கலங்க அடிச்சது உண்மை. எனக்கும் அந்த வலி தெரியும். ஒரு கடை ஆரம்பித்து மூடின வலி:-(]]]

உங்களுக்கும்மா..? அபிப்பா கூல் டவுன்..

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது.

சுதாங்கனின் சிறப்பான பணிக்கு தமிழன் எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல உதாரணம். உங்களின் பங்களிப்பிற்கும் நன்றிகள்.

மாலன் தினமணியில் இருந்து மீடியா உயர் படிப்பு/ஆய்விற்கு அமெரிக்கா சென்று அப்போது சுதாங்கனுக்கு எழுதிய பதில்கள் அன்புள்ள தமிழனுக்கு .

அதே சூட்டோடு சுதாங்கன் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆரம்பித்து மிக சிறப்பாக சென்று கொண்டு இருந்தார்.]]]

ராம்ஜி ஸார்..

சுதாங்கனும் அதில் ஒரு சிறந்த தொடரை எழுதிக் கொண்டிருந்தார்..

ஏதோ ஒரு கட்டத்தில் அனைவருக்குமே அது பத்திரிகையியல் முனைப்பாக இல்லாமல், மாதச் சம்பளம் வாங்கும் அரசு அலுவலகம் போல் நினைத்து எந்திரமாக வேலை பார்க்கத் துவங்கினோம்.. விளைவு இதுதான்..!

Trails of a Traveler said...

Very good article!

Ram

butterfly Surya said...

ரொம்ப நாளைக்கு பிறகு நீங்க எழுதின நெகிழ்வான பதிவு.

உங்க சுயசரிதை எழுதுங்கண்ணே... ஆர்வமாய் இருக்கேன்..

butterfly Surya said...

ஹாலிவுட் பாலா எங்கே..?? Las Vegas..??

ஜோதிஜி said...

அற்புதமான கட்டுரை, உங்கள் சிறந்த ஆக்கங்களில் இதுவும் ஒன்று.

பித்தன் said...

anne ketkave kazhtamaaga irukkirathu, ungal vaazhkaiyum intha paththirikkai vaazhkaiyum romba suvaarasiyammai vivariththirukkireergal.

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

Very good article! Ram]]]

நன்றி ராம்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
ரொம்ப நாளைக்கு பிறகு நீங்க எழுதின நெகிழ்வான பதிவு. உங்க சுயசரிதை எழுதுங்கண்ணே... ஆர்வமாய் இருக்கேன்..]]]

நன்றிண்ணே..!

அப்போ இத்தனை நாளா எழுதினதெல்லாம்..?

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
ஹாலிவுட் பாலா எங்கே..?? Las Vegas..??]]]

ஆமாம்.. ஹாலிடேயை ஜாலியாகக் கொண்டாட சென்றிருக்கிறார்.. எனக்கு ஒரு பி்ன்னூட்டம் குறைவாயிருச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
அற்புதமான கட்டுரை, உங்கள் சிறந்த ஆக்கங்களில் இதுவும் ஒன்று.]]]

நன்றி ஜோதிஜி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
anne ketkave kazhtamaaga irukkirathu, ungal vaazhkaiyum intha paththirikkai vaazhkaiyum romba suvaarasiyammai vivariththirukkireergal.]]]

அது ஒரு பள்ளிக்கூடம் பித்தன்..! சாகும்வரையிலும் மறக்க முடியாதது.. மறக்கவும் கூடாதது..!

Santhosh said...

அண்ணே இந்த இதழ் ஏன் சரிந்தது என்று எழுதினால் நல்ல படிப்பினையாக இருக்கும் முடிந்தால் எழுதுங்களேன்

Forum said...

I was just browsing the net and stumbled upon this article. Excellent.. Your feelings have been injected into the words and written from the heart.. Journalism and writing are addictive in nature. Once you get into that.. it is difficult to come out.. and at the same time the joy which it gives cannot be got from any other source.. Beautiful article.. Keep writing..
Mahesh,Chennai.

Unknown said...

நல்ல கட்டுரை! தகவலுக்கு நன்றிகள்

Rajaraman said...

உ.த. சார், என்ன உங்க ரியாக்ஷன் ஒன்னும் காணும், அங்க ஒரு தாய்லாந்து அம்மணி நம்ம நாட்டாமை கிட்ட பிராது கொடுத்து பெரிய ரணகளமே ஓடிகிட்டு இருக்கு, அதுல ஒரு பார்ட்டி உங்க பெற கூட இழுத்து உட்டிருக்காறு, நீங்க கம்முனு இருக்கீங்க...

ராஜ நடராஜன் said...

முன்பெல்லாம் பத்திரிகை படிப்பது பரந்து கிடந்ததும்,அரசியல் ஆர்வமும் மறைந்த பின் வந்த கணினி யுக மாற்றங்களும் கூட தமிழன் எக்ஸ்பிரஸ் நின்று போனதற்கு காரணம் என நினைக்கிறேன்.

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

ராஜ நடராஜன் said...

முதல் பின்னூட்டக்காரர் எங்கே:)

கானா பிரபா said...

நெகிழவைத்த பதிவு

உண்மைத்தமிழன் said...

[[[சந்தோஷ் = Santhosh said...
அண்ணே இந்த இதழ் ஏன் சரிந்தது என்று எழுதினால் நல்ல படிப்பினையாக இருக்கும் முடிந்தால் எழுதுங்களேன்.]]]

இப்போதைக்கு முடியாது சந்தோஷ்.. சில சிக்கல்கள் இருக்கின்றன..! மனிதர்களை ஒரேயடியாகப் புறக்கணிக்கக் கூடாது..!

உண்மைத்தமிழன் said...

[[[Forum said...

I was just browsing the net and stumbled upon this article. Excellent.. Your feelings have been injected into the words and written from the heart.. Journalism and writing are addictive in nature. Once you get into that.. it is difficult to come out.. and at the same time the joy which it gives cannot be got from any other source.. Beautiful article.. Keep writing..

Mahesh,Chennai.]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் மகேஷ்..

உண்மைத்தமிழன் said...

[[[நந்தா ஆண்டாள்மகன் said...
நல்ல கட்டுரை! தகவலுக்கு நன்றிகள்]]]

நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.. சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rajaraman said...
உ.த. சார், என்ன உங்க ரியாக்ஷன் ஒன்னும் காணும், அங்க ஒரு தாய்லாந்து அம்மணி நம்ம நாட்டாமை கிட்ட பிராது கொடுத்து பெரிய ரணகளமே ஓடிகிட்டு இருக்கு, அதுல ஒரு பார்ட்டி உங்க பெற கூட இழுத்து உட்டிருக்காறு, நீங்க கம்முனு இருக்கீங்க...]]]

-)))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

முன்பெல்லாம் பத்திரிகை படிப்பது பரந்து கிடந்ததும்,அரசியல் ஆர்வமும் மறைந்த பின் வந்த கணினி யுக மாற்றங்களும்கூட தமிழன் எக்ஸ்பிரஸ் நின்று போனதற்கு காரணம் என நினைக்கிறேன்.

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.]]]

நினைத்தால் நல்லபடியாக நக்கீரனுக்கு அடுத்த நிலையிலாவது நடத்தியிருக்கலாம்.. முனைப்பு இல்லாமல் விட்டுவிட்டார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
முதல் பின்னூட்டக்காரர் எங்கே:)]]]

லாஸ்வேகாஸில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.. அவராவது நல்லா வாழட்டும்..!

காலப் பறவை said...

அருமையான பகிர்வு ..... வாழ்த்துக்கள்

pichaikaaran said...

மூடியது தவறான முடிவு.. அந்த பத்திரிக்கைக்கு என பிராண்ட் நேம் உண்டு. தரமான பத்திரிக்கை என்று. முயற்சித்தால் , மீண்டும் ப்ழைய இட்த்தை அடைந்து இருக்கலாம்.
அதில் கேள்வி பதில் பகுதி ஒன்று வருமே.. பரவலான வரவேற்பை பெற்ற அதைபற்றி சொல்லி இருக்கலாம்..
சுதாங்கன் ஏன் வெளியேறினார் என்றும் சொல்லி இருக்கலாம்..
மிக மிக சிறந்த பதிவு...

Thomas Ruban said...

நெகிழ்வான பதிவு அண்ணே... படிப்பதற்க்கு சங்கடமாக இருக்கிறது...

Thomas Ruban said...

//வேறென்ன சொல்வது..? உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்..? //

அதனால்தான் உங்களுக்கு உண்மைத்தமிழன் என்று பெயர் வந்ததா அண்ணே....

Thomas Ruban said...

//(பின்னாடி நான் கிழடு தட்டி நடக்க முடியாமல் இருக்கும்போது, விரிவா இது பத்தி சொல்கிறேன்.)//

அப்ப பரபரப்பான சுயசரிதை புத்தகம் இருக்குன்னு சொல்லுங்கள்.

Mahi_Granny said...

நிறைய வாழ்க்கை பாடங்கள் .நல்ல அனுபவ பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...
நெகிழ வைத்த பதிவு]]]

நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
அருமையான பகிர்வு ..... வாழ்த்துக்கள்]]]

நன்றி காலப்பறவைகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

மூடியது தவறான முடிவு.. அந்த பத்திரிக்கைக்கு என பிராண்ட் நேம் உண்டு. தரமான பத்திரிக்கை என்று. முயற்சித்தால் , மீண்டும் ப்ழைய இட்த்தை அடைந்து இருக்கலாம்.]]]

போட்ட முதலீடு கிடைக்காவிட்டால் எத்தனை நாட்கள்தான் ஓட்டுவார்கள். பணம் நஷ்டம்தானே..!

[[[அதில் கேள்வி பதில் பகுதி ஒன்று வருமே.. பரவலான வரவேற்பை பெற்ற அதைப் பற்றி சொல்லி இருக்கலாம்..]]]

ஆம்.. சொல்லியிருக்கலாம்..! மன்னிக்கணும்.. தமிழன் பதில்கள் என்ற தலைப்பில் வித்தியாசமான கேள்விகளுடன் வெளிவரும்..

[[[சுதாங்கன் ஏன் வெளியேறினார் என்றும் சொல்லி இருக்கலாம்..
மிக மிக சிறந்த பதிவு...]]]

அது இப்போது வேண்டாம் என்பதால்தான் தவிர்த்தேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...
நெகிழ்வான பதிவு அண்ணே... படிப்பதற்க்கு சங்கடமாக இருக்கிறது...]]]

என்ன செய்வது..? ஜீரணித்துத்தானே ஆக வேண்டும்..!? வேறு வழியில்லையே..!

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

//வேறென்ன சொல்வது..? உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்..? //

அதனால்தான் உங்களுக்கு உண்மைத்தமிழன் என்று பெயர் வந்ததா அண்ணே....]]]

ஹி.. ஹி.. ஹி.. நானே இதை வெளில சொல்லிக்கிட்டா என்னைப் பத்தி நாலு பேரு தப்பா பேச மாட்டாங்க..!?

உண்மைத்தமிழன் said...

[[[Thomas Ruban said...

//(பின்னாடி நான் கிழடு தட்டி நடக்க முடியாமல் இருக்கும்போது, விரிவா இது பத்தி சொல்கிறேன்.)//

அப்ப பரபரப்பான சுயசரிதை புத்தகம் இருக்குன்னு சொல்லுங்கள்.]]]

நிச்சயமா..?

உண்மைத்தமிழன் said...

[[[Mahi_Granny said...
நிறைய வாழ்க்கை பாடங்கள் .நல்ல அனுபவ பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.]]]

தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள்..!

அரவிந்தன் said...

/ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பாக்ஸ்புரோ புரோகிராரமாராக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்த நான்//

அப்படியே தொடர்ந்து மென்பொருள் துறையில் இருந்திருந்தால் நீங்கள் நிச்சயம் இன்று அமெரிக்காவில் பெரிய அளவில் இருந்திருப்பீர்கள்..

90 களின் ஆரம்பத்தில் மென்பொருள் துறையில் இருந்தவர்கள் இன்று பெரிய நிறுவனங்களில் பெரிய நிலையில் இருக்கிறார்கள்.

என்னதான் இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட ஆர்வம் சினிமா மற்றும் பத்திரிக்கை என்று இருக்கும்போது அதில் தொடர்ந்து இருப்பதே உங்களுக்கு மனநிறைவை தரும்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

உண்மைத்தமிழன் said...

[[[அரவிந்தன் said...

/ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பாக்ஸ்புரோ புரோகிராரமாராக ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்த நான்//

அப்படியே தொடர்ந்து மென்பொருள் துறையில் இருந்திருந்தால் நீங்கள் நிச்சயம் இன்று அமெரிக்காவில் பெரிய அளவில் இருந்திருப்பீர்கள்..

90-களின் ஆரம்பத்தில் மென்பொருள் துறையில் இருந்தவர்கள் இன்று பெரிய நிறுவனங்களில் பெரிய நிலையில் இருக்கிறார்கள்.]]]

நிஜமாகவே மென்பொருள் துறையிலேயே போயிருக்கலாமே என்று இப்போது நிறையவே வருத்தப்படுகிறேன் அரவிந்தன்..!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தங்கள் பதிவைப் படிக்கும் போது உங்கள் எழுத்தின் தாக்கம் என் மனதை மிகவும் நிலை தடுமாறவைத்தது. ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கும் சோகம் என் கண்ணுக்குள் முள் கொண்டு குத்துவதாய் இருந்தது. அருமையானப் பதிவு. மறக்க முடியாத அனுபவம். சுதாங்கன் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும்... அவரை[ப் பார்த்தால் நான் விசாரித்தகாச் சொல்லவும்!.

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தங்கள் பதிவைப் படிக்கும் போது உங்கள் எழுத்தின் தாக்கம் என் மனதை மிகவும் நிலை தடுமாறவைத்தது. ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கும் சோகம் என் கண்ணுக்குள் முள் கொண்டு குத்துவதாய் இருந்தது. அருமையானப் பதிவு. மறக்க முடியாத அனுபவம். சுதாங்கன் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் பார்த்தால் நான் விசாரித்தகாச் சொல்லவும்!.]]]

மிக்க நன்றிகள் ஸார்.. சுதாங்கன் ஸாரிடம் அவசியம் சொல்கிறேன்..!

chidambaranathan said...

அன்புள்ள நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட வேல் பாண்டியன் என் சிறந்த நண்பர்களுள் ஒருவர். நான் அப்போது கதிரவன் நாளிதழில் பணிபுரிந்த போது தொலைபேசி மூலம் அறிமுகமானார். ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஒரு வருடத்திற்கு மேல் பேசிப் பழகியிருப்போம். பின்னர் என்னைக்காண என் அலுவலகம் வந்தார். என் மீது அதீத அன்பு செலுத்தியவர். நான் பின்னர் சன் டிவிக்கு செல்லவும் தூண்டுகோலாகவும் அமைந்தார். ஒரு நாள் மாலை என் தாயார், என்னிடம், ஐயா, வேல் பாண்டியன் போன் பண்ணினார். ஏதோ உன்னிடம் பேச வேண்டும் என்றார். என்ன விஷயம் என்று தெரியவில்லை என்றார். நான் சரி பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். அப்போது மாலை 6.00 மணி இருக்கும். மறுநாள் சன் டிவி சென்றபோது, செய்திபிரிவில் வேல் பாண்டியன் இறந்துவிட்ட செய்தியும், அவர் உடல் மதுரை கொண்டுசெல்லப்பட்ட செய்தியும் கேட்டு துடித்து போனேன். என்னிடம் சொல்ல வந்த விஷயம் என்ன என்று கடைசி வரை தெரிந்துகொள்ள முடியாமல் போனது. அனேகமாக அவர் என் தாயிடம் பேசியது தான் கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் படத்தைப் போட்டு தமிழன் எக்ஸ்பிரசில் செய்தி வந்திருந்தது. அந்த புத்தகத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை காணவில்லை. அந்த கள்ளம் கபடம் இல்லாமல் பழகிய நல்ல நண்பனை நினைக்காத நாளில்லை. அவர் படம் ஏதேனும் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். சிதம்பரநாதன்.

உண்மைத்தமிழன் said...

[[[chidambaranathan said...

அன்புள்ள நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட வேல் பாண்டியன் என் சிறந்த நண்பர்களுள் ஒருவர். நான் அப்போது கதிரவன் நாளிதழில் பணிபுரிந்த போது தொலைபேசி மூலம் அறிமுகமானார். ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஒரு வருடத்திற்கு மேல் பேசிப் பழகியிருப்போம். பின்னர் என்னைக் காண என் அலுவலகம் வந்தார். என் மீது அதீத அன்பு செலுத்தியவர். நான் பின்னர் சன் டிவிக்கு செல்லவும் தூண்டுகோலாகவும் அமைந்தார். ஒரு நாள் மாலை என் தாயார், என்னிடம், ஐயா, வேல் பாண்டியன் போன் பண்ணினார். ஏதோ உன்னிடம் பேச வேண்டும் என்றார். என்ன விஷயம் என்று தெரியவில்லை என்றார். நான் சரி பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். அப்போது மாலை 6.00 மணி இருக்கும். மறுநாள் சன் டிவி சென்றபோது, செய்தி பிரிவில் வேல்பாண்டியன் இறந்துவிட்ட செய்தியும், அவர் உடல் மதுரை கொண்டு செல்லப்பட்ட செய்தியும் கேட்டு துடித்து போனேன். என்னிடம் சொல்ல வந்த விஷயம் என்ன என்று கடைசி வரை தெரிந்துகொள்ள முடியாமல் போனது. அனேகமாக அவர் என் தாயிடம் பேசியதுதான் கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் படத்தைப் போட்டு தமிழன் எக்ஸ்பிரசில் செய்தி வந்திருந்தது. அந்த புத்தகத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை காணவில்லை. அந்த கள்ளம் கபடம் இல்லாமல் பழகிய நல்ல நண்பனை நினைக்காத நாளில்லை. அவர் படம் ஏதேனும் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.

சிதம்பரநாதன்.]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

வேல்பாண்டியனின் புகைப்படம் கிடைத்தவுடன் அனுப்பி வைக்கிறேன். எனது மெயிலுக்கு உங்களுடைய மெயிலில் ஒரு ஹலோ கொடுத்து வையுங்கள்..!

தன்னுடைய வருங்கால மனைவியின் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்து பேசியிருந்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியவரைத்தான் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மணல் லாரி வடிவில் வந்த எமன் தூக்கிக் கொண்டான்..! ச்சே.. ரொம்பவே கொடூரம்..!