57-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியல்..!

15-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2009-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 57-வது தேசிய திரைப்பட விருதுகள் புதுதில்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. தேர்வுக் குழு தலைவரான பிரபல ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி இதனை வெளியிட்டார்.

இந்தியில் வெளியான 'பா' (Paa) படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் இது. அமிதாப் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3-வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப்பச்சன் ஏற்கெனவே ‘அக்னிபாத்’, ‘பிளாக்’ ஆகிய திரைப்படங்களுக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். மேலும் 1969-ம் ஆண்டு ‘சாட் ஹிந்துஸ்தானி’ என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமாகி, சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியாகி பெரும் வெற்றி கண்ட ‘கேரள வர்மா பழஸிராஜா’ படத்துக்காக இந்த விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாமல் இந்தாண்டுதான் பின்னணி இசைக்கென தனி விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் விருதினை இளையராஜா பெறுவது இது நான்காவது முறையாகும். ஏற்கெனவே ‘சாகர சங்கமம்’, ‘சிந்து பைரவி’, ‘ருத்ர வீணை’ ஆகிய படங்களுக்காக இளையராஜாவுக்கு தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.




சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை ‘பசங்க’ படம் பெற்றுள்ளது. இதில் நடித்த ஜீவா, அன்புக்கரசு இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதும் இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு ரூ. 50,000 சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

அமிர்கான், மாதவன் நடித்த 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படத்துக்கு சிறந்த பொழுது போக்குப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் அந்தப் படத்துக்கே கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியான 'குட்டி ஸ்ராங்கு' படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது. இதில் மம்முட்டி நடித்துள்ளார். ஷாஜி என்.கருண் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான(பாடல்கள்) விருது ‘தேவ் டி’ படத்துக்கு இசையமைத்த அமித் திரிவேதிக்குக் கிடைத்துள்ளது.

பெங்காலி மொழிப் படமான 'அபோ ஹவா' படத்தில் நடித்த அனன்யா சாட்டர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்கிய ரிதுபர்னா கோஷுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.

இதே படத்தை சிறந்த முறையில் தொகுத்து வழங்கியதற்காக அர்கயகமல் மித்ராவுக்கு சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

ஷ்யாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான 'வெல்டன் அபா' படம் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மம்முட்டி ஹீரோவாக நடித்த மலையாள படமான ‘குட்டி ஸ்ரங்க்’ என்னும் திரைப்படம் இந்தியாவிலேயே சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்தமைக்காக அஞ்சுலி சுக்லாவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும்,  ஒரிஜினல் திரைக்கதை எழுதிய பி.எஃப். மாத்யூஸ் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சிறந்த திரைக்கதையாசிரியர்களுக்கான விருதைப் பெற்றுள்ளனர். இவர்களுடன் கூடவே Kanasemba Kudureyaneri என்ற கன்னடப் படமும் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளது.

ஜெயக்குமார் என்பவருக்கு ‘குட்டி ஸ்ராங்க்’ படத்தில் சிறந்த உடையமைப்பு செய்தமைக்காக தேசிய விருதும் கிடைத்துள்ளது.

மேலும் நடுவர்களின் சிறப்புப் பரிசையும் ‘குட்டி ஸ்ராங்க்’ பெற்றுள்ளது. கூடுதலாக நடுவர்களின் சிறப்புப் பரிசை ‘காமினி’ என்ற ஹிந்திப் படமும், ‘கேரள வர்மா பழசிராஜா’வும் இணைந்து பெறுகின்றன.

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய ‘டெல்லி 6’ என்ற திரைப்படத்திற்கு நர்கீஸ் தத் விருது கிடைத்துள்ளது.

பால்கியின் ‘பா’ திரைப்படம் கூடுதலாக இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. இதில் நடித்த அருந்ததிநாக் சிறந்த துணை நடிகைக்கான விருதையும், கிறிஸ்டியன் டின்ஸ்லே மற்றும் டொமைன் டில் இருவரும் சிறந்த மேக்கப்பிற்கான விருதையும் இப்படத்திற்காக பெறுகிறார்கள்.

’3 இடியட்ஸ்’ திரைப்படத்தில் இடம் பெற்ற Behti Hawa Aa Tha Woh என்ற பாடலை எழுதியதற்காக ஸ்வானந்த் கிர்க்கிர் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
.
சஞ்சய்பூரன்சிங் தான் இயக்கிய ‘லாகூர்’ திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். இதை படத்தில் நடித்துள்ள பரூக் ஷேக் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

’மகாநகர்’ என்னும் வங்க மொழிப் படத்தில் ‘கொல்கத்தா’ என்ற பாடலைச் சிறப்பாக பாடியதற்காக ரூபம் இஸ்லாம் என்பவருக்கு சிறந்த ஆண் பாடகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

‘ஹவுஸ்புல்’ என்னும் வங்காள மொழித் திரைப்படத்தில் சிறப்பாக பாடியதற்காக நிலஞ்சனா சர்க்கார் என்னும் பெண்ணுக்கு சிறந்த பெண் பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த படமாகத் தேர்வாகியுள்ள ‘குட்டி ஸ்ராங்கின்’ தயாரிப்பாளரான ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இப்படத்தை இயக்கிய ஷாஜி என்.கருணிற்கும் தங்கத் தாமரை விருதோடு 2,50,000 ரூபாய் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இதே போல் சிறந்த பொழுதுபோக்கு படமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘3 இடியட்ஸ்’ படத்தினைத் தயாரித்த விதுவினோத்சோப்ராவுக்கும் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானிக்கும் தங்கத் தாமரை விருதோடு, 2,00,000 ரூபாய் பரிசுப் பணமும் வழங்கப்படவுள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படமாக ‘புட்டாணி பார்ட்டி’ என்னும் கன்னடப் படமும், ‘கேஷூ’ என்ற மலையாளப் படமும் பெற்றுள்ளன.

தெலுங்கின் சென்ற ஆண்டு சூப்பர்ஹிட் திரைப்படமான ‘மகாதீரா’ சிறந்த நடனத்திற்கான தேசிய விருதையும், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.

சிறந்த ஒலிமைப்புக்கான தேசிய விருது இந்த ஆண்டு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது., ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி, ‘கேரள வர்மா பழசிராஜா’ படத்திற்காகப் பெற்றுள்ளார். மேலும் சுபாஷ் சஹூ என்பவர் ‘காமினி’ என்ற படத்திற்காகவும், ‘3 இடியட்ஸ்’ படத்திற்காக அனுப்தேவும் இந்த விருதினைப் பெறுகிறார்கள். 

சிறந்த ஹிந்தித் திரைப்படமாக ‘பா’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பசங்க’ படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த மலையாள மொழித் திரைப்படமாக ‘கேரள வர்மா பழசிராஜா’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த கன்னட மொழித் திரைப்படமாக கிரீஷ் காசரவள்ளி இயக்கிய ‘Kanasemba Kudureyaneri’ தேர்வாகியுள்ளது.

சிறந்த மராத்தி மொழித் திரைப்படமாக ‘Natarang’ தேர்வாகியுள்ளது.

சிறந்த அஸ்ஸாமிய மொழித் திரைப்படமாக ‘Basundhara’ படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த வங்காள மொழித் திரைப்படமாக ‘அபோமான்’ என்னும் படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த கொங்கணி மொழித் திரைப்படமாக  என்.எஃப்.டி.சி. தயாரித்த ‘Palatadcho Munis’ தேர்வாகியுள்ளது.

நடுவர்களின் சிறப்புச் சான்றிதழ் பரிசினை 'கேரள வர்மா பழசிராஜா' படத்தில் நடித்தமைக்காக நடிகை பத்மப்பிரியா வென்றுள்ளார்.

உண்மையில் அமிதாப்பச்சனின் தேர்வு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது..! இன்றைய அரசியல் சூழலில் அமிதாப் தேர்வு செய்யப்படுவார் என்பது யாராலும் நம்ப முடியாததுதான்.. அந்த வகையில் தேர்வு செய்த நடுவர்களின் டீமுக்கு எனது வாழ்த்துக்களும், சல்யூட்டும்..!

மேலும் விபரங்களுக்கு : http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=65776

19 comments:

Menaga Sathia said...

பகிர்வுக்கு நன்றி சகோ!! நம்ம தமிழ் படமும் தேர்வானதில் சந்தோஷம்...

Menaga Sathia said...

முதல் வடை எனக்குதானா??

க ரா said...

பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி :)

Mahi_Granny said...

சுடச்சுட செய்திகளை முந்தித் தரும் உண்மைத்தமிழன் தம்பிக்கு வாழ்த்துக்கள்

எறும்பு said...

Anaivarukkum vaalthukkal
:)

சிவராம்குமார் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

காலப் பறவை said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

புரட்சித்தலைவன் said...

Dear brother ,
http://www.thedipaar.com/news/news.php?id=18351
who is the writter for this article..............?????
(who is the guilty...??)

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா,என்ன ஒரு டீட்டெய்லான பதிவு.அண்ணே,உங்க கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்குண்ணே

உண்மைத்தமிழன் said...

[[[Mrs.Menagasathia said...
பகிர்வுக்கு நன்றி சகோ!! நம்ம தமிழ் படமும் தேர்வானதில் சந்தோஷம்...]]]

சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் சகோ..!

உண்மைத்தமிழன் said...

[[[Mrs.Menagasathia said...
முதல் வடை எனக்குதானா??]]]

உங்களுக்குத்தான்.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்கள்ல..! அதனாலதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...
பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி :)]]]

இன்னிக்கு வலையுலக பீல்டு இருக்கிற சிச்சுவேஷன்ல நான்தான் நன்னி சொல்லணும்.. நீங்க இல்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[Mahi_Granny said...
சுடச்சுட செய்திகளை முந்தித் தரும் உண்மைத்தமிழன் தம்பிக்கு வாழ்த்துக்கள்.]]]

நன்றிண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[எறும்பு said...

Anaivarukkum vaalthukkal
:)]]]

இங்கிலிபீஸ்ல கமெண்ட் போடுற..?

உண்மைத்தமிழன் said...

[[[சிவராம்குமார் said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!]]]

நன்றி சிவராம்..!

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.]]]

நல்லது.. நன்றி காலப்பறவை..!

உண்மைத்தமிழன் said...

[[[புரட்சித்தலைவன் said...

Dear brother ,
http://www.thedipaar.com/news/news.php?id=18351
who is the writter for this article..............?????
(who is the guilty...??)]]]

விடுங்கண்ணே.. போட்டு்ட்டுப் போறாங்க..! ஏதோ நாம எழுதினது இன்னும் நாலைஞ்சு பேர்கிட்ட போய்ச் சேர்ந்தா போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...
அடேங்கப்பா, என்ன ஒரு டீட்டெய்லான பதிவு. அண்ணே, உங்ககிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்குண்ணே..]]]

இது ஒரு சாதாரண சின்ன விஷயம் தம்பி..! காப்பி அண்ட் பேஸ்ட்தான்.. ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் மொழி பெயர்த்து போட்டுள்ளேன். அவ்ளோதான்..!

Anonymous said...

இசைஞானிக்கு விருதும் சாரு, ஷாஜி முகத்தில் பூசப்பட்ட கரியும்!

http://vanakkamnanbaa.blogspot.com/2010/09/blog-post_15.html