20-02-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நீதி தேவதையின் கண்ணை மறைத்திருக்கும் திரையை விலக்கி நீதி, நியாயத்திற்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்கள் கல்லெடுத்து எறிவதையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் பதிலுக்கு கல்லெடுத்து வீசுவதையும், ஒரு சேர பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.
இந்த அளவுக்கான குரோத உணர்வு, இரு தரப்பாருக்குள்ளும் நீண்ட நாட்களாகவே இருந்து வருவதுதான்.. இந்தியத் திருநாட்டில் தினந்தோறும் ஒரு ஊரிலோ, நகரிலோ வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் மோதிக் கொண்டுதான் வருகின்றனர். காவல்துறையினருக்கோ தங்களுடைய திவான் மற்றும் ஜமீன்தார் பாணியிலான அதிகாரத்தை வழக்கறிஞர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்று அவர்கள் மீது கோபம். வழக்கறிஞர்களுக்கோ சட்டம் பயின்ற தேவாதிதேவர்களான தங்களை காவல்துறையினர் எதிர்க்கவே கூடாது என்ற கொள்கை.
இப்படி கைவிட முடியாத கொள்கையும், தலைவணங்க மறுத்தலும்தான் இந்த இரு தரப்பாருக்குள்ளும் மேலும், மேலும் பகையுணர்ச்சியை ஊட்டி பங்காளிகளாக இருக்க வேண்டியவர்களை பகையாளிகளாக மாற்றி விட்டிருக்கிறது.
சுப்பிரமணியம் சுவாமி ஈழப் பிரச்சினையில் ஒரு கொள்கையைக் கொண்டிருக்கிறார் என்றால், அதை அணுக வேண்டிய விதமும் கொள்கைவிதமாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தான் சட்டமும், நீதியும் சொல்கின்றன. சட்ட அறைக்குள்ளேயே நுழைந்து அவரைத் தாக்கியது எந்த விதத்திலும், எந்த வகையிலும் தமிழ் ஈழப் போராட்டத்துக்கு பெருமை சேர்க்கின்ற விஷயமல்ல.. வன்முறை என்பதற்கு ஒரே முகம்தான்.. அதைப் பயன்படுத்துபவர்கள் வேறு, வேறாக இருந்தாலும் வெளிப்பாட்டின் முடிவு ஒன்று போலத்தான்.
நீதிமன்றத்திற்கு வந்த சு.சுவாமிக்கு எதிர்ப்பைக் காட்டும்விதமாக கருப்புக் கொடி காட்டியிருக்கலாம். அவர் வருகையின்போது கோஷம் எழுப்பியிருக்கலாம்.. அவரிடமே சென்று அவருடைய கருத்துக்களை மறுக்கும்வகையில் தமது எண்ணங்களை எழுதிக் கொடுத்திருக்கலாம்.. அல்லது அவரது கவனத்தை ஈர்க்கும்வகையில் போராட்டங்களை நடத்தியிருக்கலாம்.. இது போன்றெல்லாம் செய்வதற்கு உரிய தகுதியுடையவர் அவர் அல்ல என்று நினைத்திருந்தால், யாரோ ஒருவன், தெருவில் கத்திவிட்டுப் போகிறான் என்ற நினைப்பில் மறந்துவிட்டு தம் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நீதிமன்ற அறைக்குள்ளேயே சென்று நீதியரசர்கள் முன்னிலையிலேயே அவரைத் தாக்கியிருப்பது வன்முறை என்ற கணக்கில்தான் சேருமே ஒழிய, விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக எந்தக் காலத்திலும் சித்தரிக்கப்படாது.
வழக்கறிஞர்களும், சட்டம் பயிலும் மாணவர்களும் நடத்துகின்ற போராட்டங்கள் பெரும்பாலும் சட்டத்தை மீறிய விளைவுகளையே, இறுதியில் ஏற்படுத்தி விடுகின்றன என்பது துரதிருஷ்டம்தான்.
சாதாரண பொதுஜனங்களைப் போல் வழக்கறிஞர்களையும், சட்டக் கல்லூரி மாணவர்களையும் காவல்துறையால் அணுக முடியவில்லை. அவர்களுக்குள் ஒரு தயக்கம் எப்போதுமே இருந்து வருகிறது. அந்தத் தயக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தின்போது இந்தியத் திருநாடே பார்த்தது.
இப்போது நேற்று மறுபடியும் ஒரு கண் கொள்ளாக் காட்சி.
சு.சுவாமி தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது நீதியரசர்களின் கண் முன்னால். நீதியரசர்கள் சும்மா இருக்க முடியுமா? உத்தரவு போட்டுவிட்டார்கள் புலன் விசாரணை செய்யும்படி.. அந்த அறையில் இருந்தவர்களிடம் விசாரித்து, அதன்படி சுவாமி மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு கொண்டு வழக்கமான தனது நடவடிக்கைகளைத் துவக்கியது காவல்துறை. இதனை அவர்கள் செய்துதான் தீர வேண்டும். இல்லாவிடில் நாளை நீதியரசர்கள் கேள்வி கேட்டால், இவர்கள் என்ன பதில் சொல்வார்கள்..?
வழக்கறிஞர்களைத் தேடி காவல்துறை, உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது பேச்சுவார்த்தைக்கு முதலில் வழக்கறிஞர்கள் வந்திருக்கிறார்கள். கைதுக்கு உள்ளாக வேண்டிய வழக்கறிஞர்களின் பட்டியலை அவர்களிடத்தில் காட்டியிருக்கிறது காவல்துறை. அதனை வாங்கிக் கொண்ட வழக்கறிஞர்கள், சுப்பிரமணியம் சுவாமி மீது தாங்களும் ஒரு புகார் தருவதாகவும் அதனை ஏற்று அவரையும் கைது செய்யும்படியும் கோரியுள்ளது.
காவல்துறை வழக்கறிஞர்கள் கொடுத்த சுவாமி மீதான புகாரை வாங்கிக் கொண்டு அதற்கான ரசீதையும் வழக்கறிஞர்களிடம் ஒப்படைத்துள்ளது. "அவரிடமும் விசாரிப்போம். விசாரணை முடிவில் கைது செய்ய வேண்டி வந்தால், சுவாமியை உடனேயே கைது செய்வோம். இப்போது இந்தப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய நீங்கள் ஒத்துழையுங்கள்" என்று கேட்டுள்ளது காவல்துறை. இது நியாயம்தானே..?
"சுப்பிரமணியம் சுவாமியை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உடனேயே கைது செய்து கொண்டு வாருங்கள்.. பின்பு நாங்கள் சரணடைகிறோம்..” என்று வழக்கறிஞர்கள் கோரியுள்ளார்கள். காவல்துறையால் உடனேயே இதனை ஏற்க முடியவில்லை. புகார் கொடுத்து 1 நிமிடத்திலேயே, "அவரைக் கைது செய்து கொண்டு வா.. பின்பு நான் வருகிறேன்..” என்று சொல்வது சட்டத்தை திரித்து எழுதுபவர்களும், சட்டத்தை ஏய்க்க நினைப்பவர்களும் சொல்கின்ற வாதம்.. அதனை சட்டம் பயின்ற வழக்கறிஞர்கள் சொன்னதுதான் பிரச்சினையின் முதல் படி.
இரு தரப்பாருக்குள்ளும் சமாதானப் பேச்சுவார்த்தை முற்றிப் போய், அது வாக்குவாதமாகி, பின்பு கை கலப்பாகி, அடுத்து சொக்கப்பானை கொளுத்தி.. அது அடிதடியாகி.. கடைசியில் பொதுவானவர்கள் எந்தத் தரப்புப் பக்கமும் பேச முடியாத அளவுக்கு மிகப் பெரிய கலவரமாக உருவெடு்த்தது மகா கொடுமை.
காவல் நிலையத்தின் பதிவேடுகளையும், ஆவணங்களையும் எரித்ததோடு காவல் நிலையத்தின் பீரோக்களையும் தூக்கிக் கொண்டு வந்து வெளியே வீசி கொள்ளி வைத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.. கலவரத்திற்கு முதல் புள்ளியை வரைந்திருப்பது வழக்கறிஞர் சமூகத்தினர்தான்..
தீ வைப்பது வரையிலும் வெளியே நின்று வேடிக்கை பார்த்த காவல்துறை, வேறு வழியில்லாமல் மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்த பின்பே அவர்களுடன் மோதலுக்குக் குதித்துள்ளது. கலவரக்காரர்கள் கல்லெறிந்தால், நாமளும் கல்லெறிவோம்.. அவர்கள் அடித்தால், நாமளும் அடிப்போம்.. என்று பதிலுக்குப் பதில் அவர்களுடன் மல்லுக் கட்டியிருப்பதை பார்த்தால் எத்தனை நாள் வன்மத்தை மனதில் வைத்திருந்திருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
இதுதான் பரவாயில்லை.. ஏதோ ரவுடிகள் அளவுக்குத் தங்களை உயர்த்திக் கொண்ட காவல்துறையினர், உயர்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும், இரு சக்கர வாகனங்களையும் தாக்கியும், உடைத்தும் தங்களின் பராக்கிரமத்தைக் காண்பித்தது இவர்களெல்லாம் காவல்துறை பணிக்கே லாயக்கில்லாதவர்கள் என்று உறுதியுடன் சொல்ல வைத்திருக்கிறார்கள்..
கலவரக்காரர்களைத் தாக்கப் போனவர்கள், தங்களால் முடியாத கோபத்தை வாகனங்களின் மீது காட்டியது இவர்களுக்கும் அதிகாரம் கிடைத்தால் என்னென்ன செய்வார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிலும் கையில் கிடைத்த வழக்கறிஞர்களை சூழ்ந்து கொண்டு தாக்கியதும், "வேண்டாம்.. போதும்.. வேண்டாம்" என்று ஒரு அதிகாரி தடுத்தும் தொடர்ந்து தாக்கியதையெல்லாம் பார்த்தால், காவல்துறையினருக்கு பாடமெடுத்து, பயிற்சி கொடுத்து உருவாக்கியனுப்பிய காவல்துறை பயிற்சி கல்லூரிகள் மேல் கோபம், கோபமாக வருகிறது.
ரத்தம் வடிய, வடிய இழுத்து வரப்படும் வழக்கறிஞர்களை அந்த நிலையிலேயே நான்கைந்து காவலர்கள் ஏதோ ரவுடிகள் போல் சூழ்ந்து கொண்டு தாக்குவது ஏதோ அந்த நேரத்து கோபம்போல் தெரியவில்லை. இன்னொரு முறை இவர்கள் நம்மை எதிர்க்கவே கூடாது.. ஏன் அந்த நினைப்புகூட இவர்கள் மனதில் எழக்கூடாது என்கிற வெறியில் காவலர்கள் நடந்து கொள்வது போலத்தான் தோன்றுகிறது.
நீதியரசர் ஒருவர் தன் தலையில் வழிந்தோடி வரும் ரத்தத்தைத் துடைத்தபடியே ஓடி வந்தது சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அம்மா ஆட்சியில் கல் டேபிள்வரைக்கும் வந்தது. இப்போது ரத்தமே சிந்தியாகிவிட்டது. பதிலுக்குப் பதில் சரியாகிவிட்டது போலும்.
கல்வீச்சு, ரகளை என்று ஆரம்பித்த பின்பு பொறுப்பான நபர்களுடன் பேசாமல் எங்களது உடமைகளைக் கொழுத்திய பின்பும் நாங்கள் எப்படி பொறுப்போம் என்ற காவல்துறையின் மனநிலையில் ஒரு ஆண்டான்-அடிமைத்தனம்தான் தென்படுகிறது. இதற்கான முழு முதற் பொறுப்பை, சென்னை காவல்துறையின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
வழக்கறிஞர்களை கைது செய்யப் போகிறோம். நிச்சயம் எதிர்ப்பு வரும். பிரச்சினையாகும் என்பது தெரிந்து அதனை சரியான முறையில் அணுகியிருக்க வேண்டும். சட்டம் பேசத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்றால் காவல்துறை அவர்களையும் சட்டத்தின்படியே அணுகியிருந்தால் இது போன்ற போர்க்கோலக் காட்சிகள் உருவாகியிருக்காது.
அவர்கள் சரணடைய மறுத்துவிட்டார்கள் என்றால், தேடப்படும் குற்றவாளிகள் என்ற அறிவிப்பையோ அல்லது உங்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணைக்கு இந்த காவல் நிலையத்துக்கு இந்த நாளில், இந்த நேரத்தில் நேரில் வந்து விளக்கம் சொல்லும்படி அறிவிப்பாணையை சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பியிருக்கலாம்.. நீதியரசர்களின் உத்தரவின்பேரில்தானே விசாரணை தொடர்கிறது.. பிறகென்ன பயம்..?
காலம் கடந்தால் என்ன..? நோட்டீஸ் கிடைத்த பின்பு அவர்கள் என்ன வராமலா இருக்கப் போகிறார்கள்..? அப்படி இருந்துவிட முடியுமா? முன் ஜாமீன் கேட்டால் கேட்கட்டுமே..? நீ்திமன்றத்திற்குள்ளேயே நடந்த தாக்குதல் என்பதால் நிச்சயம் முன் ஜாமீன் கிடைத்திருக்காது.. கிடைக்காது என்பது எனது அனுமானம். நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள்.. நீதியரசர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் என்பது நிரூபணமானாலே போதுமே.. எதற்கு இந்தக் கைது..?
அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தால்தான் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது என்று அர்த்தமா..?(இதுபோன்ற சிறிய குற்றம் சார்ந்த வழக்குகள் அனைத்திற்குமே இந்தக் கருத்து பொருந்தும்) வேண்டுமானால் அவர்களது முன் ஜாமீனை வன்மையாக எதிர்த்து அரசு வழக்காடினாலே, இந்த வழக்கில் எந்த வழக்கறிஞரும் முன் ஜாமீன் பெறவே முடியாது.. உயர்நீதிமன்றம் இதனை மிகத் தீவிரமான சம்பவமாக நினைத்துதான் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
அவர்கள் சரணடைந்து சிறைக்குள் சென்ற பின்பு அவர்களை காவல்துறை தனது பொறுப்பில் எடுத்து நடந்தவைகள் பற்றி விசாரித்திருக்கலாமே.. அப்போது எந்த வழக்கறிஞர்கள் கூட்டமும், சட்டமும் அதனைத் தடை செய்ய முடியாதே..
கண் முன்பே ஜெயிப்பதற்கு நிறைய வழிகள் இருக்க.. அதையெல்லாம் விட்டுவிட்டு இதனை ஒரு தன்மானப் பிரச்சினையாக உருவாக்கி தங்கள் சக்தியைக் காட்டுவதாக நினைத்து வம்புச் சண்டைக்குப் போய், அதனைப் பெரிதாக்கி ஒரு மோதலை உருவாக்கி ஒரு நல்ல வாய்ப்பை வீணாக்கியிருக்கிறது காவல்துறை.
உயர்நீதிமன்றப் பதிவாளரோ யாரைக் கேட்டு காவல்துறையினர் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே வழக்கறிஞர்கள், காவல்துறை, நீதியரசர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தையின்போதே "காவல்துறையினர் தேவையில்லாமல் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வரக்கூடாது. அப்படியே வருவதாக இருந்தாலும் பதிவாளரிடம் முன்கூட்டியே சொல்லிவிடவும்" என்று முடிவெடுத்திருந்தார்களாம்.. நேற்றைக்கு எப்படி இந்த முடிவை மீறி காவல்துறையினர் நடந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
இப்படி வரிசையாக இரு தரப்பினருமே தவறுகளைச் செய்திருக்கிறார்கள்.
இனி என்ன நடக்கும்..?
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசரின் வேண்டுகோளுக்கிணங்,க இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு.
இனி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது வழக்கறிஞர்கள் யாரிடம் போய் மோதுவார்களாம்..? அவர்கள் சம்மன் அனுப்பித்தான் விசாரணைக்கு அழைப்பார்கள். முன் ஜாமீன், விசாரணைக்குத் தடை கோரி மனு.. என்று சொல்லி நேரம் கடத்தும் வேலைகள் கச்சிதமாக நடக்கும்..
உயர்நீதிமன்றத்திற்குள் இருந்த காவல் நிலையத்தின் ஆவணப் பதிவேடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டனவாம். இனி அந்த இடத்தில் காவல் நிலையம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
தமிழகம், முழுவதும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவித்து இன்றைக்குத் தப்பித்துக் கொண்டது மாநில அரசு. திங்கள்கிழமை முதல் என்ன செய்வார்களாம்..? வழக்கறிஞர்கள் அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடுவார்களா..? அவர்களும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இறங்கத்தான் போகிறார்கள்.
ஏற்கெனவே தமிழகம் முழுவதுமே பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் கிலோமீட்டர் கணக்கில் தேங்கிப் போயுள்ளன. தேங்கிப் போயுள்ள வழக்குகளால் அப்பாவி மக்களின் ஒவ்வொரு நாளும் வீணாகிக் கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டமும் தொடர்கின்றபோது அதனால் பாதிக்கப்படப் போவது அப்பாவிகள்தான்..
இதெல்லாம் தெரிந்தும் அரசும், நிர்வாகமும் பாராமுகமாக இருக்கிறது எனில் அவர்களுக்கு இதனால் எந்தவிதத்திலும் ஆபத்தில்லை. அவர்களது ஆட்சிக்கும் பங்கமில்லை என்கிற போது மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படாததில் ஆச்சரியமில்லை.
முதல்வர் மருத்துவமனையில் இருந்து பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்கிவிட வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் பிரச்சினையே அவர்தான் என்பதை அவர் இனிமேல் என்றைக்கு, எந்த வயதில் உணர்ந்து அதன் பிறகு தீர்வை நோக்கி நாம் செல்வது என்று தெரியவில்லை..
சட்டக் கல்லூரியை இந்த வாரத்தில் திறக்கலாம் என்ற நினைப்பில் இருந்த அரசின் எண்ணத்தில் மண்ணு.. எப்படியும் இன்னும் ஒரு மாதமாகலாம்.
உயர்நீதி்மன்றத்திலேயே 3 பதிவாளர்கள் தலைமையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் என்னவிதமாக எந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
முதலமைச்சர் தனக்கு உடல் நிலை சரியில்லாவிட்டாலும் பரவாயில்லை.. ஆம்புலன்ஸ் வேனிலாவது உங்கள் வீட்டிற்கு வந்து பேசுகிறேன் என்று தலைமை நீதிபதிக்கு தூது அனுப்பியுள்ளார். இப்படி எதையாவது செய்யாவிட்டால் முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா என்கிற சந்தேகம் மக்களுக்கு வந்துவிடும் என்று அவரும் பயப்படுகிறார்.
போயஸ் தோட்டத்து அம்மா, வழக்கம்போல மைனாரிட்டி தி.மு.க. அரசை 356வது பிரிவின்படி நீக்க வேண்டும் என்று சந்தடிச் சாக்கில் சந்தில் சிந்து பாடியிருக்கிறார்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுமே மாநில அரசின் கையாலாகத்தனத்தைத்தான் இது காட்டுகிறது என்று தங்களது அரசியல் சிந்தனையைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். வழக்கறிஞர்களைத் துளியும் கண்டிக்காமல் காவல்துறையினரின் லத்தியை மட்டுமே குறி வைத்துத் தாக்கியிருக்கிறார்கள் சில மேடை அரசியல்வியாதிகள்..
சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் மீது ஆட்சேபணை இருப்பின் அவரை கெரோ செய்தோ, அவர் அலுவலகம், வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்தோ கவன ஈர்ப்பு செய்திருக்கலாம்.. சுவாமி ஏற்கெனவே அறிக்கை மன்னன். இதையும் வைத்து அவருக்கு ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வழக்கறிஞர்கள் ரத்தம் சிந்தியதுதான் இந்த விவகாரத்தில் மீதமாகியிருக்கிறது.
இனிமேற்கொண்டு நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பதெல்லாம் காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து என்ற நோக்கில்தான் நடைபெறப் போகிறது.
தமிழகத்து மக்களிடையே தியாக சீலர்களின் உன்னதமான தியாகத்தால் எழுப்பப்பட்டுள்ள ஈழப் போருக்கான ஆதரவு என்கிற விஷயம் மெல்ல, மெல்ல மறக்கடிக்கப்பட்டு, 'காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை.
புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி..!
புகைப்படங்கள் உதவி : தி ஹிந்து
|
Tweet |
38 comments:
நெத்தியடி.
அருமையான பதிவு.
//நியாயத்திற்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்கள் கல்லெடுத்து எறிவதையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் பதிலுக்கு கல்லெடுத்து வீசுவதையும், ஒரு சேர பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்கள்
நடுநிலையோடு எழுதியிருக்கின்றீர்கள்.
காவல் துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகள் இதனை அனுமதிக்கமாட்டார்கள். இன்னமும் பிரிட்டிஷ் காலத்து சட்டமும் நடைமுறையும் இருக்கும் வரை நமது அடிமைத்தனம் போகாது.
அருமையான பதிவு...
///Anonymous said...
நெத்தியடி. அருமையான பதிவு.//
மிக்க நன்றி அனானி..
//நியாயத்திற்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்கள் கல்லெடுத்து எறிவதையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் பதிலுக்கு கல்லெடுத்து வீசுவதையும், ஒரு சேர பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்கள்.///
இல்லை.. சோகத்தை இப்படிச் சொல்கிறேன்..
//நந்தவனத்தான் said...
நடுநிலையோடு எழுதியிருக்கின்றீர்கள்.
காவல் துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகள் இதனை அனுமதிக்கமாட்டார்கள். இன்னமும் பிரிட்டிஷ் காலத்து சட்டமும் நடைமுறையும் இருக்கும்வரை நமது அடிமைத்தனம் போகாது.//
நன்றி நந்தவனத்தான் ஸார்..
இரு தரப்பினருமே தத்தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட்டாலே போதும்..
யார் பெரியவர் என்கிற ஈகோதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம்..
//வண்ணத்துபூச்சியார் said...
அருமையான பதிவு...//
ராத்திரில கண்ணு முழிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்குறீங்க..
'தமிழகத்து மக்களிடையே தியாக சீலர்களின் உன்னதமான தியாகத்தால் எழுப்பப்பட்டுள்ள ஈழப் போருக்கான ஆதரவு என்கிற விஷயம் மெல்ல, மெல்ல மறக்கடிக்கப்பட்டு, 'காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை.'
நேர்மையாகவும், அருமையாகவும் எழுதி இருக்கிறீர்கள்.என் போன்ற பெரும்பாலோரின் கருத்தும் இதுதான்.பாராட்டுக்குரிய பதிவு.
'தமிழகத்து மக்களிடையே தியாக சீலர்களின் உன்னதமான தியாகத்தால் எழுப்பப்பட்டுள்ள ஈழப் போருக்கான ஆதரவு என்கிற விஷயம் மெல்ல, மெல்ல மறக்கடிக்கப்பட்டு, 'காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை.'
நேர்மையாகவும், அருமையாகவும் எழுதி இருக்கிறீர்கள்.என் போன்ற பெரும்பாலோரின் கருத்தும் இதுதான்.பாராட்டுக்குரிய பதிவு.
//வழக்கறிஞர்களை கைது செய்யப் போகிறோம். நிச்சயம் எதிர்ப்பு வரும். பிரச்சினையாகும் என்பது தெரிந்து அதனை சரியான முறையில் அணுகியிருக்க வேண்டும். சட்டம் பேசத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்றால் காவல்துறை அவர்களையும் சட்டத்தின்படியே அணுகியிருந்தால் இது போன்ற போர்க்கோலக் காட்சிகள் உருவாகியிருக்காது//
சரியாச்சொன்னீங்க தல.............. அருமையான பதிவு..
//ஷண்முகப்ரியன் said...
'தமிழகத்து மக்களிடையே தியாக சீலர்களின் உன்னதமான தியாகத்தால் எழுப்பப்பட்டுள்ள ஈழப் போருக்கான ஆதரவு என்கிற விஷயம் மெல்ல, மெல்ல மறக்கடிக்கப்பட்டு, 'காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை./
நேர்மையாகவும், அருமையாகவும் எழுதி இருக்கிறீர்கள்.என் போன்ற பெரும்பாலோரின் கருத்தும் இதுதான்.பாராட்டுக்குரிய பதிவு.//
நீங்களே பாருங்கள்.. அமைதியாகப் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை வேண்டுமென்றே திசை திருப்புவதைப் போல்தான் இந்த விஷயம் போய்க் கொண்டிருக்கிறது..
திங்கள்கிழமை முதல் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை..
இதில் ஈழப் போராட்டத்தின் நிலைமையை என்னவென்று சொல்வது..?
வழக்கறிஞர்கள் முதலில் காவல்துறையை எதிர்த்துப் போராடுவார்களா..? அல்லது ஈழப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கப் போகிறார்களா.. என்று தெரியவில்லை..
///அத்திரி said...
//வழக்கறிஞர்களை கைது செய்யப் போகிறோம். நிச்சயம் எதிர்ப்பு வரும். பிரச்சினையாகும் என்பது தெரிந்து அதனை சரியான முறையில் அணுகியிருக்க வேண்டும். சட்டம் பேசத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்றால் காவல்துறை அவர்களையும் சட்டத்தின்படியே அணுகியிருந்தால் இது போன்ற போர்க்கோலக் காட்சிகள் உருவாகியிருக்காது//
சரியாச் சொன்னீங்க தல. அருமையான பதிவு.///
நன்றி அத்திரி..
நிறைய பேர் இதைத்தான் சொல்றாங்க..
ஏன் நீங்களும் இதைத்தான் நினைச்சிருக்கீங்க பார்த்தீங்களா..?
புரியறவங்களுக்குப் புரிஞ்சா சரி..
//நியாயத்திற்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்கள் கல்லெடுத்து எறிவதையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் பதிலுக்கு கல்லெடுத்து வீசுவதையும், ஒரு சேர பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//
:(
///மங்களூர் சிவா said...
//நியாயத்திற்காக வாதாட வேண்டிய வழக்கறிஞர்கள் கல்லெடுத்து எறிவதையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் பதிலுக்கு கல்லெடுத்து வீசுவதையும், ஒரு சேர பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.//
:(///
வாங்க சிவா தம்பி.. சவுக்கியமா..?
ஏதோ ஆடிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைதான் நம்ம வூட்டுக்குள்ள வர்றீங்க.. இப்பவும் ஒரு ஸ்மைலிதானா..?
நல்லாயிருப்பூ..
[[[ உயர்நீதிமன்றத்திற்குள் இருந்த காவல் நிலையத்தின் ஆவணப் பதிவேடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டனவாம். இனி அந்த இடத்தில் காவல் நிலையம் இருக்குமா என்பது சந்தேகம்தான் ]]]
ஏன் சார் - - - மீண்டும் அதே இடத்தில் காவல் நிலையம் வந்தே தீரும்
ஒரு சில பொறுக்கி வகீல்களுக்காக சகலருக்கும் இடையூறு விளைய
கூடாதல்லவா ?
[[[ ஏற்கெனவே தமிழகம் முழுவதுமே பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் கிலோமீட்டர் கணக்கில் தேங்கிப் போயுள்ளன ]]]
பல காலமாக என்னிடம் ஒரு கேள்வி நிலைக்கிறது
கடையடைப்பு - - - பந்த் - - - மறியல் போராட்டம் ஆகியவை
யாரை தாக்கி வதைக்கிறது ?
அடிக்கடி ஒவ்வொரு அமைப்பும் மாறி மாறி இவ்வாறன
அடைப்பு மறியல் நடாத்தினால் மக்களது நிலை என்ன ?
[[[போயஸ் தோட்டத்து அம்மா, வழக்கம்போல]]]
தமிழ் நாட்டு அரசியல் இவ்வளவு அருவருப்பான
நிலைக்கு இறங்கியதன் காரணம் என்ன சார் ?
மக்களதும் மீடியா களதும் பலவீனமான பொறுப்பு
உணர்ச்சிதானே ?
[[[சுவாமி ஏற்கெனவே அறிக்கை மன்னன். இதையும் வைத்து அவருக்கு ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வழக்கறிஞர்கள் ரத்தம் சிந்தியதுதான் இந்த விவகாரத்தில் மீதமாகியிருக்கிறது]]]
கொழுப்பு மித மின்சியோருக்கு இரத்தம் சிந்தியது பெரிதாகாது
இதில் மாடுப்பட்ட வக்கீல்கள் தொழில் புரியும் தடை விதிக்க
படுமா சார் ?
அல்லது மீண்டும் அவர்கள் தடியடி சண்டியை தொடர்வார்களா ?
[[[காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை]]]
அதுதான் சார் சாணகியம் - - - இதை புரிந்து கொள்வோர் சண்டியர் அல்லவே !
அநியாயம் - - - தமிழ் நாட்டு அரசியல் இப்படி போகின்றதே !!
சகலருக்கும் வோட் உருமை பிழை என்பது இங்கே தான் சரியாகின்றது !!!
[[[நந்தவனத்தான் said...
நடுநிலையோடு எழுதியிருக்கின்றீர்கள்.
காவல் துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகள் இதனை அனுமதிக்கமாட்டார்கள். இன்னமும் பிரிட்டிஷ் காலத்து சட்டமும் நடைமுறையும் இருக்கும் வரை நமது அடிமைத்தனம் போகாது]]]
இரு கருத்துகளும் பொருத்தமானவையே
இங்கே சென்றிருந்தேன் http://vinavu.wordpress.com
அதன்ன சார் அப்பிடி ஒரு வெறியுடன் பாபனர் என்று
தாக்குகின்றார்களே
இதில் நியாயம் இருக்கிறதா என்று அறிய ஆவலாக
இருக்கு - - - முடியுமா சார் ?
"தமிழகத்து மக்களிடையே தியாக சீலர்களின் உன்னதமான தியாகத்தால் எழுப்பப்பட்டுள்ள ஈழப் போருக்கான ஆதரவு என்கிற விஷயம் மெல்ல, மெல்ல மறக்கடிக்கப்பட்டு, 'காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை."
உண்மை....
//benzaloy said...
[[[உயர்நீதிமன்றத்திற்குள் இருந்த காவல் நிலையத்தின் ஆவணப் பதிவேடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டனவாம். இனி அந்த இடத்தில் காவல் நிலையம் இருக்குமா என்பது சந்தேகம்தான்]]]
ஏன் சார் - - - மீண்டும் அதே இடத்தில் காவல் நிலையம் வந்தே தீரும். ஒரு சில பொறுக்கி வகீல்களுக்காக சகலருக்கும் இடையூறு விளையகூடாதல்லவா?//
தவறு இரண்டு பக்கமுமே இருக்கிறது பென்ஸ் ஸார்..
ஒரு தரப்பை மட்டுமே நாம் சொல்ல முடியாது..
மறுபடியும் நிச்சயமாக அந்தக் காவல் நிலையத்தை திறப்பார்கள் என்றே நினைக்கிறேன்..
//benzaloy said...
[[[ஏற்கெனவே தமிழகம் முழுவதுமே பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் கிலோமீட்டர் கணக்கில் தேங்கிப் போயுள்ளன]]]
பல காலமாக என்னிடம் ஒரு கேள்வி நிலைக்கிறது. கடையடைப்பு - - - பந்த் - - - மறியல் போராட்டம் ஆகியவை யாரை தாக்கி வதைக்கிறது? அடிக்கடி ஒவ்வொரு அமைப்பும் மாறி மாறி இவ்வாறன
அடைப்பு மறியல் நடாத்தினால் மக்களது நிலை என்ன?//
கஷ்டம்தான்.. ஆனா இங்கே வேற வழியில்லை பென்ஸ் ஸார்..
நீங்க தூங்கிக்கிட்டிருக்கும்போதே கண்ணைத் தோண்டி எடுக்குற ஆளுகதான் அரசியல்வியாதிகளாக இருக்காங்க.. அவங்களுக்கு இது மாதிரி ஒவ்வொண்ணுக்கும் போராட்டம் நடத்தி ஞாபகப்படுத்தினாத்தான் மக்களுடைய நிலைமை புரிகிறது.. இல்லாவிடில் தங்களது குடும்பத்தாரை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள்.
அதனால்தான் போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகிறது..
//benzaloy said...
[[[போயஸ் தோட்டத்து அம்மா, வழக்கம்போல]]]
தமிழ் நாட்டு அரசியல் இவ்வளவு அருவருப்பான நிலைக்கு இறங்கியதன் காரணம் என்ன சார்? மக்களதும் மீடியாகளதும் பலவீனமான பொறுப்பு
உணர்ச்சிதானே?//
மக்களுக்கு தான் என்கிற எண்ணம் அதிகமாகிக் கொண்டே போகிறது..
அடுத்தவனுக்கு எது நடந்தாலும் அதனைப் பற்றிக் கவலைப்படாதவன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் மட்டுமே ஆதரவு கேட்டு வாயைத் திறக்கிறான்..
இந்த சுயநல உணர்வுதான் தமிழன் கெட்டதற்கு முழு முதற் காரணம்..
//benzaloy said...
[[சுவாமி ஏற்கெனவே அறிக்கை மன்னன். இதையும் வைத்து அவருக்கு ஒரு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வழக்கறிஞர்கள் ரத்தம் சிந்தியதுதான் இந்த விவகாரத்தில் மீதமாகியிருக்கிறது]]
கொழுப்பு மித மின்சியோருக்கு இரத்தம் சிந்தியது பெரிதாகாது. இதில் மாடுப்பட்ட வக்கீல்கள் தொழில் புரியும் தடை விதிக்கபடுமா சார்?//
அந்த அளவுக்கெல்லாம் போகாது.. அப்படிச் செய்தால் ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவிடுவார்கள்..
கொஞ்ச நாளில் இரு தரப்பினருமே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள்.. பார்த்திக்கிட்டே இருங்க.. இதுதான் நடக்கப் போகுது..
//அல்லது மீண்டும் அவர்கள் தடியடி சண்டியை தொடர்வார்களா?//
இன்னொரு தடவை தடியடியா..? இரண்டு பேருமே தாங்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்..
//benzaloy said...
[[[காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை]]]
அதுதான் சார் சாணகியம் - - - இதை புரிந்து கொள்வோர் சண்டியர் அல்லவே!//
ஓ.. அந்த சாணக்கியத்தனம் என்னைப் போன்ற ஏழை, பாமரனுக்கு எங்கே புரியப் போகிறது ஸார்..?
//benzaloy said...
[[[நந்தவனத்தான் said...
நடுநிலையோடு எழுதியிருக்கின்றீர்கள்.
காவல் துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகள் இதனை அனுமதிக்கமாட்டார்கள். இன்னமும் பிரிட்டிஷ் காலத்து சட்டமும் நடைமுறையும் இருக்கும் வரை நமது அடிமைத்தனம் போகாது]]]
இரு கருத்துகளும் பொருத்தமானவையே.//
நன்றி பென்ஸ் ஸார்..
//benzaloy said...
இங்கே சென்றிருந்தேன் http://vinavu.wordpress.com
அதன்ன சார் அப்பிடி ஒரு வெறியுடன் பாபனர் என்று தாக்குகின்றார்களே..
இதில் நியாயம் இருக்கிறதா என்று அறிய ஆவலாக இருக்கு - - - முடியுமா சார்?//
அவர்களைப் பற்றி எழுதினால் எப்படியும் வீடு தேடி வர மாட்டார்கள்..? ஆட்டோ அனுப்ப மாட்டார்கள்..
ஆனால் இதே போல மற்ற ஜாதியினரைப் பற்றிச் சொல்லிப் பாருங்கள்.. உள்ளே தள்ளிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்..
இதுதான் தமிழ்நாடு..
//krpsenthil said...
"தமிழகத்து மக்களிடையே தியாக சீலர்களின் உன்னதமான தியாகத்தால் எழுப்பப்பட்டுள்ள ஈழப் போருக்கான ஆதரவு என்கிற விஷயம் மெல்ல, மெல்ல மறக்கடிக்கப்பட்டு, 'காவல்துறை-வழக்கறிஞர்கள் போர்' என்று பேசப்பட்டு ஈழப் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்கிற கருத்தில் எனக்கு சந்தேகமே இல்லை."
உண்மை....//
நன்றி செந்தில் ஸார்..
இது என்ன சாலமன் பாப்பையா பட்டிமன்றம்மா இதுவும் தவறு ,அதுவும் தவறு, என்று ஒரு தீர்ப்பு சொல்ல, கருத்தை சரியாய் சொல்லவிலையே.
[[[ இல்லாவிடில் தங்களது குடும்பத்தாரை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள் ]]]
அமெரிக்கா வில் ரெண்டாந்தரம் George Bush ஐ தேர்ந்த மக்கள் தான் அவரை இப்போ தூற்றுகின்றார்கள் - - - கேட்டால் அன்றைய நிலைமை அப்படி என்றார்கள் - - - அமெரிக்க
மக்கள் தேர்தலில் ஆர்வம் காடுவதில்லையே அத்துடன் அரசியலிலும் ஈடுபாடு அதிகம்
காணபடைல்லையே என்றதும் - - - ஆம் மக்களில் அரசியல் விழிப்புணர்ச்சி பற்றாது தான் என்று ஒத்துக்கொண்டார் !
இதே நிலை இந்திய தமிழ் நாட்டுக்கு பொருந்துமா ?
கருணாநிதி நேர்மை அற்றவர் Nepotism நிறைந்தவர் ஆகவே மக்களை வழி நடத்த
அருகதை அற்றவர்
போயஸ் அம்மா ''தமிழ் பெண் கலாசாரம் கற்பு'' ஆகிய அத்தனையையும் மீறினவர்
மேலும் அரசியல் வாழ்கையில் பெரும் பணம் பண்ணி சகல விதத்தாலும் வருங்கால
இளம் சந்ததியினர்க்கு உதாரண மனிசி அல்ல
ஆனால் தமிழ் நாட்டு மக்கள் இவர்கள் இருவரையும் மட்டுமே மாறி மாறி தெரிகின்றார்கள் - - - அப்போ தமிழ் நாட்டு மக்களது அபிபிராயங்களும் அவ்வித
தரம் குன்றியவையாக தானே இருக்கும்
ஒட்டுமொத்தமா இல்லாதுபோனாலும் பொதுவாகப் பார்த்தால் குறையே தான்
எனது முடிவு பிழைதானே !
நண்பர்களே..
இந்தப் பதிவின் நோக்கம் தவறுகள் வக்கீல்கள்-போலீஸ் இரு தரப்பாரின் மேலும் இருக்கிறது என்பதைத்தான் சொல்ல முனைந்திருக்கிறது..
போலீஸார் முதலில் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதி பெறாமல் நுழைந்ததே தவறு என்று சொல்லியிருக்கிறேன்.
அதேபோல் முதலிலேயே அதிரடிப் படையினர் இரண்டு முறை உள் வளாகம்வரையிலும் சென்று வழக்கறிஞர்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய பின்புதான் கோபப்பட்ட வக்கீல்கள் பின்பு திரண்டு வந்து காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது..
இதன் பிறகு மூன்றாவது தடவையாகவும் போலீஸ் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியுள்ளது..
அதிலும் மப்டி டிரெஸ்ஸில், வக்கீல் போன்ற தோற்றத்தில் வந்த சில போலீஸாரும் பத்திரிகையாளர்களிடம் வக்கீல்கள் பேரில் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சில்லறைத்தன நாடகமாக கார் கண்ணாடிகளையும், வண்டி, பைக்குகளையும் உடைத்தது புகைப்படங்களில் ஆவணமாகச் சிக்கியுள்ளது..
எது எப்படியிருந்தாலும் முதல் தவறு போலீஸ் மீதுதான் உள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை..
//krishnaaleelai said...
இது என்ன சாலமன் பாப்பையா பட்டிமன்றம்மா இதுவும் தவறு,அதுவும் தவறு, என்று ஒரு தீர்ப்பு சொல்ல, கருத்தை சரியாய் சொல்லவிலையே.//
இரு தரப்பில் ஒருவர் அமைதி காத்து மற்றவர் வன்முறையில் இறங்கியிருந்தால் சொல்லலாம்.. இரண்டு தரப்பிலுமே ஒழுங்கு மீறியிருக்கிறார்கள்.
இதில் முதல் தவறு போலீஸார் மீதுதான்.. அவர்கள் அனுமதி பெறாமல் உள்ளே போயிருக்கவே கூடாது..
நான் சொன்னதுபோல நோட்டீஸ் அனுப்பி வரச் சொல்லி மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுகூட தெரியாமலா காவல்துறையில் இருக்கிறார்கள்..? காவல்துறை மேலதிகாரிகளைத்தான் இதற்கு குற்றம் சொல்ல வேண்டும்..
இப்போது பிரச்சினை எங்கே வந்து நிற்கிறது பாருங்கள்..
//benzaloy said...
[[[ இல்லாவிடில் தங்களது குடும்பத்தாரை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள் ]]]
அமெரிக்காவில் ரெண்டாந்தரம் George Bush ஐ தேர்ந்த மக்கள்தான் அவரை இப்போ தூற்றுகின்றார்கள் - - - கேட்டால் அன்றைய நிலைமை அப்படி என்றார்கள் - - - அமெரிக்க
மக்கள் தேர்தலில் ஆர்வம் காடுவதில்லையே அத்துடன் அரசியலிலும் ஈடுபாடு அதிகம்
காணபடைல்லையே என்றதும் - - - ஆம் மக்களில் அரசியல் விழிப்புணர்ச்சி பற்றாதுதான் என்று ஒத்துக்கொண்டார்!
இதே நிலை இந்திய தமிழ் நாட்டுக்கு பொருந்துமா?//
நிச்சயம் பொருந்தும் பென்ஸ் ஸார்..
எமது மக்கள் தேர்தலன்று ஓட்டுப் போட்டுவிட்டாலே போதும் ஜனநாயகம் வாழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்ற நாடுகளைப் போல அரசியல் காரணங்களுக்காக தெருவுக்கு வந்து போராடுவதற்கு ரொம்பவே தயங்குகிறார்கள்..
இந்தத் தயக்கத்தைத்தான் அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது மக்களுக்குப் புரிய மறுக்கிறது.
//கருணாநிதி நேர்மை அற்றவர் Nepotism நிறைந்தவர் ஆகவே மக்களை வழி நடத்த அருகதை அற்றவர். போயஸ் அம்மா ''தமிழ் பெண் கலாசாரம் கற்பு'' ஆகிய அத்தனையையும் மீறினவர்.
மேலும் அரசியல் வாழ்கையில் பெரும் பணம் பண்ணி சகலவிதத்தாலும் வருங்கால
இளம் சந்ததியினர்க்கு உதாரண மனிசி அல்ல. ஆனால் தமிழ் நாட்டு மக்கள் இவர்கள் இருவரையும் மட்டுமே மாறி மாறி தெரிகின்றார்கள் - - - அப்போ தமிழ் நாட்டு மக்களது அபிபிராயங்களும் அவ்வித
தரம் குன்றியவையாகதானே இருக்கும்
ஒட்டு மொத்தமா இல்லாது போனாலும் பொதுவாகப் பார்த்தால் குறையேதான். எனது முடிவு பிழைதானே!//
பிழை அல்ல ஸார்.. நூற்றுக்கு நூறு உண்மை..
இவர்கள் இருவரைத் தவிர வேறு யாராவது வர மாட்டார்களா என்று அனைவருமே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.. வருவதற்குத் தகுதியுள்ளவர்கள் வரத் தயங்குகிறார்கள். தகுதியில்லாதவர்கள் தைரியமாக வந்து நிற்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு ஓட்டளிக்க மறுக்கிறார்கள். இதுதான் தொடர்ந்து நடக்கிறது..
பரவாயில்லையே.. எங்கட நாட்டு விஷயத்தை இவ்ளோ நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கீங்க..?
பென்ஸ் ஸார்.. சூப்பர் போங்க..
சட்டம் படிப்பவர்களில் பலர் விரும்பி தான் சட்டம் படிப்பது போல தெரியவில்லை.
சட்டகல்லூரி முதல் ஆண்டில் இருந்தே இவர்களின் அட்டகாசம் ஆரம்பித்து விடுகிறது.
[[[ இதன் பிறகு மூன்றாவது தடவையாகவும் போலீஸ் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியுள்ளது..
அதிலும் மப்டி டிரெஸ்ஸில், வக்கீல் போன்ற தோற்றத்தில் வந்த சில போலீஸாரும் பத்திரிகையாளர்களிடம் வக்கீல்கள் பேரில் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சில்லறைத்தன நாடகமாக கார் கண்ணாடிகளையும், வண்டி, பைக்குகளையும் உடைத்தது புகைப்படங்களில் ஆவணமாகச் சிக்கியுள்ளது..
எது எப்படியிருந்தாலும் முதல் தவறு போலீஸ் மீதுதான் உள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை ]]]
எப்பிடி சார் இந்த விபரங்கள் எல்லாத்தையும் நான் உங்களது முன் பதிவுகுகளில் காணவில்லை - - - அப்போ கார்களை அடித்து நொறுக்கியது வக்கீல் போல மப்படி
வேஷம் போட்டு வந்த போலிஸ் - - - சரி, அவர்களது அடாவடித்தனம் போட்டோ பிடித்தாயிற்று - - - நீங்களும் வெப்சைட் ல போட்டிங்க - - - உங்கள மாதிரி இந்த போட்டோகள் தினசரி பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கும் - - - போலிஸ்
டிபாட்மேண்டுகும் இன்சூரன்ஸ் கொம்பனிகளுக்கும் அடையாளம் காண்பதற்கு தடையோ கஷ்டமோ கிடையாது - - - குற்றம் விளைத்தவர்கள் தண்டிகபடுவார்களா ?
//Arun Kumar said...
சட்டம் படிப்பவர்களில் பலர் விரும்பிதான் சட்டம் படிப்பது போல தெரியவில்லை. சட்டகல்லூரி முதல் ஆண்டில் இருந்தே இவர்களின் அட்டகாசம் ஆரம்பித்து விடுகிறது.//
அப்படியல்ல.. சட்டம் படிப்பதினாலும், சட்டம் படித்ததினாலும் சட்டப்படியே போலீஸார் தங்களை அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அதனால் விளைந்த விளைவுதான் இது..
///benzaloy said...
[[[ இதன் பிறகு மூன்றாவது தடவையாகவும் போலீஸ் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியுள்ளது..
அதிலும் மப்டி டிரெஸ்ஸில், வக்கீல் போன்ற தோற்றத்தில் வந்த சில போலீஸாரும் பத்திரிகையாளர்களிடம் வக்கீல்கள் பேரில் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சில்லறைத்தன நாடகமாக கார் கண்ணாடிகளையும், வண்டி, பைக்குகளையும் உடைத்தது புகைப்படங்களில் ஆவணமாகச் சிக்கியுள்ளது.. எது எப்படியிருந்தாலும் முதல் தவறு போலீஸ் மீதுதான் உள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை ]]]
எப்பிடி சார் இந்த விபரங்கள் எல்லாத்தையும் நான் உங்களது முன் பதிவுகுகளில் காணவில்லை - - - அப்போ கார்களை அடித்து நொறுக்கியது வக்கீல் போல மப்படி
வேஷம் போட்டு வந்த போலிஸ் - - - சரி, அவர்களது அடாவடித்தனம் போட்டோ பிடித்தாயிற்று - - - நீங்களும் வெப்சைட் ல போட்டிங்க - - - உங்கள மாதிரி இந்த போட்டோகள் தினசரி பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கும் - - - போலிஸ்
டிபாட்மேண்டுகும் இன்சூரன்ஸ் கொம்பனிகளுக்கும் அடையாளம் காண்பதற்கு தடையோ கஷ்டமோ கிடையாது - - - குற்றம் விளைத்தவர்கள் தண்டிகபடுவார்களா?///
தண்டிக்கப்படுவார்களா என்பது நிச்சயமில்லை.
ஏனெனில் எங்களது நாட்டின் நீதித்துறை அமைப்பு அப்படி.. பல வருடமாகும்..
இந்தப் பதிவில் போட்டிருக்கும் புகைப்படத்திலேயே நீங்கள் கேட்டதற்கான ஆதாரம் இருக்கும். போலீஸ் டிரெஸ்ஸில் இருவரும், மப்டியில் ஒருவருமாக காரை அடித்து நொறுக்குகிறார்கள். பாருங்கள்..
எங்க பிரச்சினை எங்களுக்கு..?
Post a Comment