ஈரானின் 'மாட்டுக்கார வேலன்..!'

16-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Loose Rope (Iran)


ஈரானியத் திரைப்படங்களின் மிக முக்கிய பலமே கதைதான்..

கதையைத் தேடுவதில் அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தங்களிடமிருந்தே கதைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முலாம் பூசப்பட்ட பூச்சுக்கள் தேவையிருக்காது.. ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம், படத்தினை பார்க்கவைக்கும் உலகளாவிய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்கிற ஒரேயொரு விஷயத்தில் மட்டுமே ஈரானியர்களிடத்தில் உள்ளது.


அளவான, மிக குறைவான கட்டுப்பாடுகளுடன் இணைந்தியங்கும் தணிக்கைத் துறையை உள்ளடக்கிய ஈரானியத் திரைப்படங்கள், சமீப காலமாக உலக அளவில் திரைப்படத் துறையில் சாதித்தவை ஏராளம். கற்பனையில் உருவாகாத கதை, நினைத்துப் பார்க்க முடியாத திரைக்கதை, செல்லரித்துப் போன வசனங்கள்.. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அதீதமான நடிப்பு, இயக்கம் என்கிற பெயரில் உருவாக்கப்படும் கட்டாயமான பிணைப்புக் காட்சிகள் என்றில்லாமல் மிக, மிக இயல்பாக கட்டமைக்கப்பட்டவைகள் என்கிற அடையாளம்தான் ஈரானியத் திரைப்படங்களின் கவன ஈர்ப்புக்கு அடிப்படைக் காரணங்கள்.

Loose Rope என்கிற இந்தத் திரைப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்..

சஜித் என்கிற வாடகை வேன் வைத்து ஆடு, மாடுகளை கொண்டு செல்லும் டிரைவர், முதன் முதலில் தானே ஒரு மாட்டை வாங்கி அதனை விநியோகம் செய்யும் தொழிலில் இறங்க முடிவு செய்கிறான்.. ஜெயித்தானா? இல்லையா..? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. இரண்டு வரிகளில் சொல்லிவிடக் கூடிய கதைதான்.

திரைக்கதைக்கு அதிகம் மெனக்கெடவில்லை இயக்குநர். ஒரு வாரம் ஆடு, மாடுகளை வாங்கி, விற்கும் மார்க்கெட் பகுதியில் சுற்றியலைந்து அங்கேயே திரைக்கதையே மனதில் ஏற்றி செல்லூலாய்டில் செதுக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மிகக் குறைவான காட்சிகள்.. குறைவான ஆனால் கூர்மையான வசனங்கள்.. இயல்பைத் தொலைக்காத நடிப்பு, மிகைப்படுத்தப்படாத இயக்கம் என்று அனைத்தும் கண் முன்னே நடப்பது போல் இருக்கிறது.

சஜித்தும், அவனது உதவியாளன் ஹபீப்பும் ஒரே வீட்டில்தான் தங்கியிருக்கிறார்கள். ஆடு, மாடுகளை வேனில் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று இறக்குவது என்கிற ஒன்றுதான் அவர்களது வேலை. வேன் வாடகை, எரிபொருள் செலவு போக மிச்சத்தில் இவர்களது வண்டி ஓட வேண்டும்.

சஜீத் எப்படியாவது தொழிலில் முன்னேறியாக வேண்டும் என்று நினைக்கிறான். சஜீத்தின் நண்பனான ஒரு மாட்டு வியாபாரி அவனையும் இதே தொழிலில் இறங்கும்படி தூண்டுகிறான். "எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் மாட்டையும், ஆட்டையும் கொண்டு வருவ..? நீயே ஒரு மாட்டைப் பிடிச்சு வாங்கிட்டு வாயேன்.. கசாப்பு போடுறதுக்கு முன்னாடி உனக்கு நல்ல துட்டு கிடைக்கும்..” என்று தூண்டில் போடுகிறான்.

இது பற்றி சிந்தனைப்படும் சஜீத்திடம் 300 கிலோவிலிருந்து 400 கிலோவுக்குள் இருக்கும் ஒரு மாட்டைப் பிடித்து வரும்படி சொல்கிறான் வியாபாரி. அந்த மாட்டை வாங்க வேண்டி பணம் சேமிக்கிறான் சஜீத்.

ஹபீப் தனது அம்மாவுக்கு அனுப்ப வேண்டிய பணத்தையும் சஜீத்திடம் கொடுத்து இதனையும் சேர்த்து மாடு வாங்கும்படி சொல்கிறான். சஜீத் மறுத்தும் கேளாமல் வலுக்கட்டயமாகத் திணிக்கிறான் ஹபீப்.

இருவரும் மாடு வாங்கச் செல்கிறார்கள். மாட்டு சந்தை கோலாகலமாக இருக்கிறது.. விதவிதமான எடைகளில் மாடுகள் கிடைக்கின்றன. ஆனால் இவர்கள் கேட்கின்ற எடையில் இல்லை. தேடுதல் வேட்டையின்போது வேறொரு வேலை வருகிறது. மாடுகளை கொண்டு செல்லும் பணி. இப்போதைக்கு இதனைப் பார்ப்போம் என்று சொல்லி அதனைச் செய்கிறார்கள்.

அவர்கள் கொண்டு வரும் வண்டியிலிருந்து ஒரேயொரு மாட்டைத் தவிர மற்றவைகள் இறங்கிவிடுகின்றன. அந்த ஒன்று மட்டும் இறங்க முடியாமல் சுணங்கிப் போய் படுத்திருக்கிறது. ஹபீப்பும், சஜீத்தும் அதனைக் கீழேயிறக்க முயல்கிறார்கள். மாட்டை வாங்கியவனை அழைத்து வருகிறார்கள். அவனும் கிளப்பிப் பார்க்கிறான். மாடு முடியாது என்று அடம் பிடிக்கிறது.

மாட்டின் காலில் சிறிது அடிபட்டிருப்பதாக மாட்டுக்காரன் சொல்கிறான். கூட்டம் கூடுகிறது. அனைவரும் ஒன்று சேர்ந்து அதனைத் தூக்க முயல்கிறார்கள். முடியவில்லை. ஊர்ப்பட்ட கொழுப்பை உடம்பில் சேர்த்திருக்கிறது மாட்டின் எடை சஜீத் தேடியதைவிடவும் அதிகமாக இருக்கிறது.

காலில் அடிபட்டு நடக்க முடியாததால் இதனை யாரும் வாங்க மாட்டார்கள்.. பேசாமல் கொன்றுவிடு என்று அனைவரும் ஐடியா கொடுக்கிறார்கள். வாங்க முன் வருபவர்களும் மிகக் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள். இது கடைசியில் கசாப்புக் கடைக்குத்தான் போகப் போகிறது என்று தெரிந்தாலும் நோய் இல்லை என்று பொய் சொல்லி விற்றுவிடலாம் என்ற சாமானியனின் மனநிலையில் சிலர் பேரம் பேசுகிறார்கள்.

மாட்டை விற்பனை செய்ய வேறு வழியில்லை என்பதால் மாட்டுக்காரன் மனசைக் கல்லாக்கிக் கொண்டு மாட்டை கொலை செய்ய சம்மதிக்கிறான். ஹபீப் மிக ஆர்வத்தோடு, "இதெல்லாம் ஒரு விஷயமா..? நான் எத்தனை கொலை செய்திருக்கிறேன்..” என்கின்ற தெம்பில் கத்தியோடு ஆனாலும் கொஞ்சம் பதட்டத்தோடு மாட்டின் கழுத்தருகே வந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு மாட்டின் கழுத்தில் கத்தியை வைத்து ஒரு இழு இழுக்கிறான்.

கழுத்து அறுபட்ட வேகத்தில் மாடு திடீரென்று எழுந்து வண்டியில் இருந்து கீழே குதித்து விழுந்து ஓடுகிறது. அதிர்ச்சியும், பதட்டமும் ஒன்று சேர.. அனைவரும் மாட்டை விரட்டுகிறார்கள். மாடு ஓடுகிறது.. சஜீத் பதட்டத்துடன் மாட்டின் கழுத்தில் சுருக்குக் கயிற்றை வீசி அதனை மடக்கிப் பிடிக்கிறான். இப்போது அனைவருக்குமே தெரிந்துவிடுகிறது. "மாடு நல்லாத்தான் இருக்கு. ஏதோ ஒரு மப்புலதான் படுத்திருச்சு..” என்று..

கழுத்தில் அரைவட்ட வடிவில் அறுபட்டு ரத்தம் சிந்திய நிலையில் மாடு பரிதாபமாக நிற்க.. சஜீத்திற்கு இப்போது ஒரு யோசனை மின்னல் வேகத்தில் தோன்றுகிறது. மரணத்தில் தப்பிய இந்த மாட்டை நாமே வாங்கினால் என்ன என்று.. ஹுபீப் சொல்லியும் கேளாமல் முழுப் பணத்தையும் கொடுத்துவிட்டு மாட்டை வாங்குகிறான் சஜீத்.

மாடு தற்போது சஜீத் வசம். ஆனால் அது காயம்பட்டிருக்கிறது. டவுனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் அவனுடைய நண்பர் பரிந்துரைக்கும் ஒரு மாட்டு டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டி அதனை வேனில் ஏற்றி நகரம் நோக்கிப் பயணிக்கிறார்கள் ஹபீபும், சஜீத்தும்.

வேன் நகரம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போதுதான் இன்னொரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது. ஒரு பெண். பெயர்..? கடைசிவரை சொல்லப்படவேயில்லை.. அது தேவையுமில்லை என்று பொடென்று பொடனியில் அடித்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் அந்தப் பெண் மறுநாள் முதல் துவங்கவிருக்கும் தனது கல்லூரித் தேர்வுக்காக நகரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறாள். தனது சொந்த ஜீப்பை ஓட்டியபடியும், செல்போனில் தனது நண்பிகளுடன் பேசியபடியும் வருகிறாள்.

சஜீத்தின் வேனுக்கு வழிவிடாத வண்ணம் தனது பேச்சில் மும்முரமாக இருக்கிறாள் அந்தப் பெண். பல முறை ஹாரன் அடித்து கவனஈர்ப்பு செய்த பின்பே சஜீத்தால் அவளைக் கடக்க முடிகிறது. ஒரு முறை பார்த்தாலே மறுபடியும் திரும்பிப் பார்க்க வைக்கும் முகம். நம்ம தேவிகாவையும், வைஜெயந்திமாலாவையும் பிரதியெடுத்தாற்போல் இருக்கிறாள்.


ஹபீப் நகரத்தின் வாசனையை அதிகம் நுகராதவன். அனைத்தையும் புதிது, புதிதாகப் பார்க்கும் சிறுபிராயத்தின் குணங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறவன். அவனுக்கு அவள் இப்போது தேவதைபோல் தெரிகிறாள். சஜீத்திடம் அவளைப் பற்றி பேசியபடியே வருகிறான்.

செல்போனில் பேசி முடித்த பின்பு தனக்கு முன் செல்லும் வேனை பார்க்கும் அந்தப் பெண் வேனின் பின்புறம் கடுந்தவம் புரிவதைப் போல் நின்றபடி வந்து கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து பிரமிக்கிறாள். இவ்ளோ பெரிய மாட்டை அவளது வாழ்க்கையில் அவள் பார்த்ததே இல்லை போலும்.. தனது செல்போன் கேமிராவில் படம் எடுக்கிறாள். சஜீத்தின் வேனை ஒட்டியபடியே தனது ஜீப்பை செலுத்தி பல கோணங்களில் மாட்டைப் படம் பிடிக்கிறாள். இது சஜீத்துக்கு எரிச்சலூட்ட.. ஹுபீப்புக்கோ சிரிப்பு வருகிறது.

வேனும், ஜீப்பும் தொடர்ந்தாற்போல் போய்க் கொண்டிருக்க.. எதிரில் இரண்டு பெரிய லாரிகள் சாலையை அடைத்தாற்போல் ஒரு வரிசையில் வர.. மோதலைத் தவிர்க்க வேண்டி ஹாரன் அடிக்கிறான் சஜீத். கடைசி நேரத்தில் ஒரு லாரிக்காரன் முந்திக் கொண்டு போக.. சஜீத் தப்பிக்கிறான். ஆனால் பின்னால் வந்த அந்தப் பெண்ணின் ஜீப் ரோட்டிலிருந்து விலகி கீழே சரிந்து விழுந்துவிடுகிறது.

உடல் முழுக்கக் காயங்களுடன் முனங்கியபடியே கிடக்கும் அந்தப் பெண்ணை ஓடிச் சென்று பார்க்கிறார்கள் சஜீத்தும், ஹபீப்பும். அவளுடைய ஜீப் கிளம்ப முடியாத சூழலுக்குப் போய்விட்டதனால் அவளை தங்களுடைய வேனில் ஏற்றிக் கொண்டு கிளம்புகிறான் சஜீத். அவளுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதனால் ஹபீபை பின்புறம் மாட்டிற்குத் துணையாக வரும்படி பணிக்கிறான் சஜீத்.

அந்தப் பெண் கையில் காயம்பட்டு, ரத்தம் வடிய சோகத்தில் முனங்குகிறாள். தான் விவசாயப் பல்கலைக்கழக மாணவி என்றும், "நாளைக்கு பரீட்சையை எப்படி எழுதப் போறேன்னு தெரியலையே..” என்றும் புலம்பியபடியே வருகிறாள். சஜீத் தன் வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறான். ஹபீபோ இந்த நிலைமையிலும் அவளை 'ரசித்தபடியே' வருகிறான்.

இடையில் மாட்டை எதிர்பார்த்து காத்திருப்பவன் சீக்கிரம் மாடு வந்தாக வேண்டும் என்று செல்போனில் உத்தரவு போடுகிறான். சஜீத்தின் திட்டம் முதலில் மாட்டைக் கொண்டு போய் டாக்டரிடம் காட்டி மருந்தும், ஊசியும் போட்டுவிட்டு பின்பு மாடு கேட்ட நண்பனிடம் விற்பனை செய்ய வேண்டும் என்பது. இடையில் இந்தப் பெண் வந்து நிலைமையைச் சிக்கலாக்கிவிட.. முதலில் இவளை அனுப்பிவிட்டு மறுவேலை பார்ப்போம் என்று நினைக்கிறான்.

அந்தப் பெண் வழியில் தனது அப்பா போன் செய்தபோதும் தனது நிலைமையைச் சொல்லாதவள், ஒரு நண்பி போன் செய்தவுடன் அவளிடம் தான் இப்போது முன்பின் தெரியாத ஆடவர்களோடு வந்து கொண்டிருப்பதாகவும், "யாரிடமும் இதனைச் சொல்லிவிடாதே" என்று பதட்டமாகவும் சொல்கிறாள்.

நகரம் தென்படுகிறது. பிரம்மாண்டமான கட்டிடங்களும், வழுக்கிச் செல்லும் தார்ச்சாலைகளும், நிறுத்தக் கோடுகளும், தானியங்கி ஆட்காட்டிகளுமாக நகரத்தின் மேன்மையை பறை சாற்ற ஹபீப் அனைத்துயும் ரசித்தபடியே வருகிறான்.

அந்தப் பெண் விரும்பிய மருத்துவமனைக்கு வந்து அவளை இறக்குகிறார்கள். சஜீத் ஓடிப் போய் ஸ்ட்ரெச்சரை அழைத்து வருகிறான். அந்தப் பெண் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போக.. ஹபீப் எதையோ எதிர்பார்த்து நிற்பவன் ஏமாற்றமாகிறான். சஜீத்தோ உடனேயே அடுத்த வேலைக்கு பரபரக்கிறான். அடுத்து மாட்டு டாக்டரை பார்க்க வேண்டுமே..

டாக்டரின் அபார்ட்மெண்ட்டுக்கு வருகிறார்கள். கிளீனிக் மாடியில் இருக்க.. லிப்ட்டிற்கு காத்திருக்கிறான் ஹபீப். லிப்ட் முதல் மாடியிலேயே நிற்கிறது. வெறுத்துப் போய் மாடிக்கு ஓடுகிறான் ஹபீப். அங்கே ஒரு காதலர்களோ, தம்பதிகளோ.. லிப்ட்டிற்குள் பெண் நிற்க.. ஆண் வெளியில் நிற்க.. ஏதோ சுமூக பேச்சுவார்த்தை நடக்கிறது, கோபத்துடன் அந்த ஆணை லிப்ட்டிற்குள் தள்ளிவிட்டு லிப்ட்டை இயக்குகிறான் ஹபீப். (நான் மிகவும் ரசித்தக் காட்சி இது..)

மருத்துவர் மாட்டை மாடிக்குக் கொண்டு வர முடியாது என்பதனால் தானே கீழே இறங்கி வருகிறார். மாட்டிற்கு ஊசி போடுகிறார். "இனி பயமில்லை.. கொண்டு போங்க" என்கிறார். அதே வேனிலேயே மாட்டை வியாபாரியிடம் கொண்டு போகிறார்கள். வழியெங்கும் மாணவர்கள், மாணவிகள் கூட்டம், கூட்டமாக சென்று கொண்டிருக்க.. சில மாணவிகளும், மாணவர்களும் நெருக்கமாக சாலையின் இருபுறங்களிலும் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் ஹபீப், இந்த மாய உலகத்தை முதல் முறையாக தரிசிப்பதால் உணர்ச்சிவசப்படுகிறான். கொடுத்து வைத்தவர்கள் என்று வாய்விட்டே சொல்கிறான்.

சஜீத்தோ தனது முழு கவனத்தையும் வியாபாரத்திலேயே வைத்திருக்கிறான். அவனுடைய நீண்ட நாள் லட்சியம் நிறைவேறப் போகிறதே என்றாலும், ஒரு சிறிய சந்தோஷத்தைக்கூட முகத்தில் காட்டாமல் இறுக்கமாகவே இருக்கிறான்.

வழியில் காரில் வந்து கொண்டிருந்த மாணவர்கள் கூட்டம் ஒன்று மாட்டைப் பார்த்தவுடன் உற்சாகமாகிவிடுகிறார்கள். சாலையின் போக்குவரத்து சிக்னலும் சிவப்பு விளக்கைக் காட்ட வேன் நிறுத்தப்படுகிறது. இப்போது பின்னாலேயே வந்த காரிலிருந்து இறங்கும் மாணாக்கர்கள் கூட்டம் தங்களது செல்போனில் மாட்டை வளைத்து, வளைத்துப் படம் பிடிக்கிறார்கள். ஹபீப் பயந்தே விடுகிறான். "முன்ன பின்ன மாட்டை பார்த்ததே இல்லையா..?” என்று கத்துகிறான். ஆனாலும் மாணவர்கள் காதில் அது ஏறவில்லை. பச்சை விளக்கு ஒளிர்ந்த பின்புதான் மாணவர்களும் தங்களது படம் பிடிக்கும் வேலையை நிறுத்திவிட்டுப் போகிறார்கள்.

வேன் இன்னும சிறிது தூரம் சென்றதும் ஓரிடத்தில் நின்றே விடுகிறது. என்ஜின் தனது உயிரை விட்டுவிட்டதாக சஜீத் அறிந்து கொள்கிறான். "வேறு வழியில்லை. இன்னும் கால்மணி நேரத்தில் நாம் அங்கே இருந்தாக வேண்டும்..” என்று சொல்லி மாட்டைப் பிடித்துக் கொண்டு கால்நடையாகவே கொண்டு போய் சேர்த்துவிடலாம் என்கிறான்.

நெருக்கடியான அந்த பிரதான சாலையின் ஒரு ஓரமாக மாடு ஒய்யாரமாக நடந்து வர அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்தபடியே சஜீத் நடந்து வர மாட்டை விரட்டிக் கொண்டே ஹபீப் செல்ல.. மூவருமே காட்சிப் பொருளாகின்றனர் பொதுமக்களுக்கு.

மாடு ஒரு பக்கம் இழுக்க.. சஜீத் ஒரு பக்கம் இழுக்க என்று ஒரு இழுபறி நிலைமையில்தான் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் மூவரும். ஒரு பள்ளியின் வாசலருகே வந்தபோது மாடு கேட்டிருந்த வியாபாரி சஜீத்திற்கு போன் செய்ய மாட்டை வாசலில் இருந்த ஒரு ஸ்டேண்டில் கட்டிப் போட்டுவிட்டு ஹபீபை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சஜீத் சற்றுத் தள்ளிச் சென்று செல்போனில் பேசுகிறான்.

இன்னும் 5 நிமிடத்தில் மாடுடன் தான் அங்கே இருப்பேன் என்றும் வேன் பிரச்சினை மற்றும் விபத்து ஏற்பட்டதனால்தான் இவ்வளவு தாமதம் என்றும் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருக்கிறான்.

வெளியில் ஹபீப் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்ததுபோல ரோட்டில் வருவோர், போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஏனோ அந்தச் சூழல் அவர்களின் மாட்டிற்கு பிடிக்கவில்லை. போதாததற்கு பொதுமக்கள் தன்னை ஏதோ பொம்மைபோல் பார்க்கிறார்கள் என்று மாட்டிற்கு சிறிது கோபமும் வருகிறது. இறுக்கம் இல்லாமல் கட்டப்பட்டிருந்த கயிற்றை உதறிவிட்டு மாடு தானாகவே தனது நடைப்பயணத்தைத் துவக்குகிறது.

சஜீத் பேசி முடித்துவிட்டு ஹபீப்பை தேடி வர அவனும் தனது வேடிக்கையை முடித்துவிட்டு வந்து பார்க்க மாடு காணவில்லை. ஒரு நொடியில் பதறுகிறான் சஜீத். ஓட்டமாய் ஓடுகிறார்கள் இருவரும். மாடு நடுரோட்டில் போய் நிற்க.. கார்களும், வேன்களும் சீர்குலைய.. போக்குவரத்து தடைபடுகிறது.


சஜீத் ஓடிய வேகத்தில் மாட்டைப் பிடிக்கப் போக.. அது அவன் கையில் சிக்கக்கூடாது என்பதற்காக ஓடத் துவங்க.. சூப்பரான மஞ்சுவிரட்டு துவங்குகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோல் ஹபீப்பும், சஜீத்தும் மாட்டை துரத்துகிறார்கள். மாடு இவர்கள் கையில் சிக்குவேனா என்று தண்ணி காட்டுகிறது.

ஆட்கள் சிதறி ஓடத் துவங்க.. இவர்களை வேடிக்கை பார்த்தபடியே ஒரு கூட்டம் பின்னால் ஓடி வருகிறது. மாடு முட்ட வருகிறதே என்றெண்ணி பலரும் கீழே விழுந்து பதறியடித்து சிதறி ஓட.. சஜீத்திற்கு இப்போது எப்பாடுபட்டாவது மாட்டை பிடித்தாக வேண்டிய சூழல்.

எதிரில் வந்த ஒரு சிறு பையனை மாடு குறி வைத்துவிடுகிறது. பின்னாலேயே விரட்டத் துவங்க.. அந்தப் பையன் "அம்மா.. அம்மா..” என்று கதறியபடியே ஓடத் துவங்கி.. ஓரிடத்தில் கால் தடுமாறி கீழே விழுகிறான். மாடு எப்படியும் முட்டாமல் விடாது என்ற ரீதியில் பார்க்க.. பையன் அழுகுரலுடன் தரையில் படுத்தபடியே பின்புறமாக ஊர்ந்து நகர்ந்து கொண்டிருக்க.... பின்னால் தட்டுத் தடுமாறி வந்து நிற்கும் சஜீத் நொடியில் சூழ்நிலையை உணர்ந்து ஹபீப்பின் இடுப்பில் சொருகியிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்டு மாட்டின் அருகே செல்ல..

Screen Fade Out-ஆகி Fade in-ஆகிறது..

ஆசை, ஆசையாக தனது முதல் வியாபார முயற்சியாக தனது சேமிப்பு முழுவதையும் செலவழித்து வாங்கியிருந்த அந்த அருமை மாடு கழுத்தறுபட்டு இறந்து கிடக்க.. அதன் அருகிலேயே இரண்டு கைகளும் ரத்தத்தில் குளித்திருக்க... கையில் பிடித்திருந்த கத்தியில் இருந்து ரத்தம் துளி துளியாக சொட்டிக் கொண்டிருக்க சஜீத் சோகத்துடன் அமர்ந்திருக்கிறான்.

உலகத்தில் என்ன நடந்தாலும் சரி.. மாலையானதும் நான் கடலுக்குள் மறைவேன் என்ற பிடிவாதத்தின்படி சூரியன் எதிர்த்திசையில் மறைந்து கொண்டிருக்க.. ஹபீப்பும், சஜீத்தும் அதனைப் பார்த்தபடியே இருப்பதுடன் படம் நிறைவடைகிறது.

கொஞ்சம்கூட சோர்வில்லாமல், அலுப்புத் தட்டாமல் கடிகாரத்தைப் பார்க்க வைக்காமல் திரைக்கதையை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

எந்தவொரு கேரக்டரும் அலட்டல் இல்லாத நடிப்பு. துவக்கத்தில் மார்க்கெட்டில் இறந்து போகும் ஆடுகளைக் களவாண்டு கடைகளுக்குக் கொண்டு சென்று காசாக்கும் ஒருவனைப் பற்றியும் சொல்லப்படுகிறது. அவனை அடையாளம் கண்டு ஹபீப் சஜீத்திடம் வந்து சொல்ல அவன் வேனிலேயே வந்து திருடனின் பைக்கில் இருந்த ஆட்டை எடுத்து வந்து ஒரு வயற்காட்டில் புதைக்கிறான் சஜீத். பின்னாலேயே வரும் திருடன் அப்படியும் அந்த ஆட்டை திருட முயல்வதும், சஜீத் அவனை அடித்துவிரட்டுவதுமாக.. பணத்தின் அதீத தேவை அத்தனை கண்டங்களையும் எந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது.

வாழ்க்கையில் எதுவும் நடக்கும் என்பதை புரிந்து கொண்டாலே வாழ்க்கை நமது வசமாகும் என்பதை சஜீத்தின் வாயிலாக இயக்குநர் நமக்குப் புரிய வைத்திருக்கிறார். அத்தனை காலமும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்தான் அந்த மாடு என்பது தெரிந்திருந்தும், அந்த சிறுவனைக் காப்பாற்ற அதனைக் கொலை செய்வது என்பது அவனது வாழ்க்கையை தொலைத்தலுக்கு சமம்.

இயக்குநர் அதைத்தான் விரும்பியிருக்கிறார். எல்லாவற்றையும்விட உயிர் முக்கியம்தான் என்றாலும் இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் வேறொரு பூதாகரமான பிரச்சினையும் இத்திரைப்படத்தில் இருக்கிறது.

மனித உயிரைவிட மிருகங்களின் உயிர் கீழானதா..? ஏன் அதனை கொலை செய்யாமல் அதனைப் பிடித்திருக்கக்கூடாதா என்கிற கேள்வியையெல்லாம் நம்மையே கேட்டுக் கொண்டு, பதிலையும் நாமேதான் முடிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறார் இயக்குநர்.

இத்திரைப்படத்தில் காணும் மாட்டுச் சந்தைகள் காட்சிகளெல்லாம் இந்தியத் திரைப்படங்களில் பார்க்க முடியாதவைகள்.. ஈரானிய தணிக்கைத் துறை சிற்றின்பத்தையும், மனிதக் கொலைகளையும் மட்டுமே தடை செய்திருக்கிறது என்பது இத்திரைப்படத்தின் மூலம் தெரிகிறது.

மாட்டுச் சந்தையில் வெட்டப்பட்ட மாடுகளின் தலைகளை மட்டும் தனியே ஓரிடத்தில் வைத்திருப்பது.. அதனை உருட்டிவிடுவது. மொத்தமாகத் தூக்கி வீசுவது.. வேனில் ஏற்றுவது.. ஆடுகளை தூக்கி வீசுவது.. குடல்களை மட்டும் தனியே எடுப்பது.. தோலை உரிப்பது.. ஆடு, மாடு என்று தெரியாத அளவுக்கு உரித்தெடுத்து தொங்க விட்டிருப்பது என்று அந்தக் கொடூரத்தை சிறு பிராயத்தினர் நிச்சயமாக பார்க்கக்கூடாது. தரையே தெரியாத அளவுக்கு ரத்தம் தோய்ந்து படிந்திருக்கும் அவ்விடத்தை பார்த்தவர்களுக்கு நிச்சயம் ஒரு வேளை சோறு உள்ளே இறங்காது.

ஆனால் அவர்களுக்கு இது மிகப் பெரிய விஷயமில்லை போலும்.. நம்மூரில் ஒரு நாயைக் காட்டினால்கூட அதற்கு பிராணிகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்கிறது தணிக்கைத் துறை. இத்திரைப்படத்தை நமது தணிக்கைத் துறையிடம் போட்டுக் காட்டினால் நலம் என்று நினைக்கிறேன்.

சினிமா என்பது எப்படி எடுக்கப்பட்டாக வேண்டும் என்பதனை சமீப கால ஈரானியத் திரைப்படங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்ற வரிசையிலே, இத்திரைப்படமும் அந்தப் பெருமையைப் பெறுகிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

6 comments:

butterfly Surya said...

அப்பாடா போட்டாச்சா.. எனக்கு வழி விட மாட்டிங்களே.. ??

சரி சரி.. மூத்த பதிவராச்சே..

தலைவா.. இதையும் பாருங்க.. இராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
அப்பாடா போட்டாச்சா.. எனக்கு வழி விட மாட்டிங்களே..?? சரி சரி.. மூத்த பதிவராச்சே..//

சாமி.. ஏதோ இது ஒரு தொழிலைப் பார்த்துக்கிட்டு பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கோம்.. என்னோட போய் உங்களை கம்பேர் பண்ணிக்கலாங்களா..? உங்க பதிவுல இருக்குற சினிமா விமர்சனத்துல ஒண்ணே ஒண்ணுதான் சாமி நான் பார்த்தது..

//இதையும் பாருங்க.. இராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்.//

லின்க் எங்க சாமி..?

butterfly Surya said...

என்ன தலைவா இப்படி சொல்லீடிங்க.. You are one of my great inspiration to write.

லிங்க் பிடிங்க படிங்க...

இராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்:


http://butterflysurya.blogspot.com/search/label/Half%20Moon

வெண்பூ said...

விமர்சனமும் அருமை, அதுக்கு நீங்க் குடுத்திருக்குற தலைப்பும் அருமை.

உண்மைத்தமிழன் said...

//வண்ணத்துபூச்சியார் said...
என்ன தலைவா இப்படி சொல்லீடிங்க.. You are one of my great inspiration to write.
லிங்க் பிடிங்க படிங்க...
இராக் நோக்கி செல்லும் ஹேமநாதபாகவதர்:
http://butterflysurya.blogspot.com/search/label/Half%20Moon//

வர்றேன்.. வர்றேன்.. வர்றேன்..

உண்மைத்தமிழன் said...

//வெண்பூ said...
விமர்சனமும் அருமை, அதுக்கு நீங்க் குடுத்திருக்குற தலைப்பும் அருமை.//

நன்றி வெண்பூ..