26-09-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி விரைவில் செயல்படுத்தக் கோரி வரும் அக்டோபர் 1-ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் முழு அளவிலான பந்த் நடத்தப்படும் என்று தமிழக அரசை ஆளும் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரான முதல்வர் அறிவித்துள்ளார்.
பந்த் என்றால் என்ன நடக்கும்?
அரசுப் பேருந்துகள் இயங்காது.. ரயில் சேவை நிறுத்தப்படும். தொழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் மூடப்படும். சினிமா தியேட்டர்கள் மூடப்படும். சாலைகள் அமைதியாக யாருமற்று காணப்படும்.
இவை அனைத்தும் ஊடகங்களின் கவனத்திற்குட்பட்டு, 'பந்த் மாபெரும் வெற்றி' என அறிவிக்கப்படும்.
இதனால் யாருக்கு லாபம்..?
ஒரு நாளின் தொழிலும், வர்த்தகமும் நிறுத்தப்படுமாயின் எவ்வளவு ரூபாய்கள் அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு நாளைய வர்த்தகமே 5 கோடி என்கிறார்கள். இவை சாதாரண இடைநிலை, கடை நிலை வர்த்தகர்களுக்கு கிடைக்கப் போகும் பணம். அன்று ஒரு நாள் அவர்களுக்குக் கிடைக்காது. சரி.
ஆனால், அழுகும் நிலை காய்கறிகளை விற்பனை செய்யும் இந்த அன்றாடங் காய்ச்சிகளுக்கு அது இழுப்புதானே.. அன்றைக்கு அழுகிப் போன காய்கறிகளை மறுநாள் மார்க்கெட்டின் எதிர்ப்புறம் இருக்கும் குப்பையில்தான் போட வேண்டும். அதை உற்பத்தி செய்ய ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு போராடியிருப்பான்..? இதை யாரிடம் போய் இவன் சொல்லுவான்..?
பேருந்துகள் ஓடாது.. அன்றைக்கு தாம்பரத்தில் இருக்கும் ஒருவரின் உறவினர் வண்ணாரப்பேட்டையில் இறந்துவிட்டால் அவர் என்ன செய்வார்..? கால்டாக்ஸி பிடித்துச் செல்ல வேண்டுமா..? அல்லது அவரால்தான் முடியுமா? எத்தனை பேரால் இந்த சமூகச் சீர்கேட்டை உடனடியாக ஒரே நாளில் எதிர் கொள்ள முடியும்..? இதற்கான வசதியும், வாய்ப்புகளும் மக்கள் அனைவரிடமும் இருக்கின்றதா..?
ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவனைக்கு எப்படிச் செல்வது? ரோட்டில் பஸ், கார், லாரி எதுவும் போகக்கூடாது என்று சில கும்பல்கள் கையில் கம்புகளுடன் நடு ரோட்டில் வந்து நிற்கும்போது அந்த உயிரைப் பற்றிக் கவலைப்படப் போவது யார்..?
நகரப் பகுதிகளில் பரவாயில்லை.. எப்படியாவது ஆட்டோ, டாக்ஸி பிடித்தாவது சென்றுவிடுவார்கள். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று முறை வந்து செல்லும் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கும் கிராமப்புற மக்கள் என்ன செய்வார்கள்? அது அவர்களது தலையெழுத்தா..? அல்லது ஓட்டுப் போட்டதற்கு கிடைத்த பரிசா..?
வர்த்தகர்கள் குறித்த நேரத்தில் பணம் அனுப்பினால்தான் பொருட்கள் கிடைத்து அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் நம்பகத்தன்மைதான் அவருடைய மிகப் பெரிய முதலீடு. அதையும் உடைத்துவிட்டால் அவர் எங்கே போய் புலம்புவார்..?
பந்த் என்பதற்காக அன்றைய ஒரு நாளைய வட்டி கேட்கப்பட மாட்டாது என்று எந்த வங்கியும், லேவாதேவிக்காரர்களும், வட்டி பிஸினஸ் செய்பவர்களும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை..
அன்றைக்கு கடைசி தேதி என்று அறிவிக்கப்படும் எந்தவொரு தொழில், நுகர்வோர் விஷயங்களும் பந்த் என்பதால் விட்டுக் கொடுக்கப்பட்டு விடுமா..? இல்லையெனில் யாரிடம் போய் கேட்பது..?
அன்றைய நாளில் ஏதேனும் ஒரு கடை திறந்து வைக்கப்பட்டு அதனை கலவரக்காரர்கள் தாக்கினால் அதற்கு யார் பொறுப்பு..?
ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படியரு பந்தை நான் எதிர்க்கிறேன் என்று சொல்லி ஆங்காங்கே சிலர் கடைகளைத் திறந்து வைத்திருந்தால் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்கப் போவது யார்..?
அரசே சொல்லிவிட்டதால் கடைகளை இழுத்து மூடியே தீர வேண்டும் எனில் அந்த ஒரு நாளைய வருமானத்தை அந்தக் கடைக்காரர்களுக்கு யார் தருவது..? அந்தத் தொகையை இழக்க வைப்பது அவரிடமிருந்து திருடுவதற்கு சமமில்லையா..?
அரசுகள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டுமெனில் இங்கே என்ன கருத்து சுதந்திரம் உள்ளது..?
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அவர்களுடைய அடாவடித்தனத்தைக் காட்டுவதற்கு ஒரு மேடை அமைத்துக் கொடுப்பதுதான் அரசின் வேலையா..?
நகரங்களில் பேச்சிலராக இருப்பவர்கள் சோத்துக்கு என்ன செய்வார்கள்?
இது மாதிரி பந்த் அறிவித்தால் முதலில் மூடப்படுவது ஹோட்டல்கள்தான். ஏனெனில் அன்றைக்கு கூட்டம் குறைவாக வந்துவிட்டால் செய்தது எல்லாம் வீணாகிவிடுமே என்பது ஒன்று.. மற்றொன்று கலவரக்காரர்கள் முதலில் குறி வைக்கப்போவது இது மாதிரியான ஹோட்டல்களைத்தான்.. அதுதான் இப்போது தட்டிக் கேட்கவும் ஆட்களே இல்லையே.. அரசே சொல்லிவிட்டதால் போலீஸ் கை வைத்துவிடுமா என்ன?
நானும் முன்னொரு சமயம் இதே போன்று ஒரு பந்த் தினத்தன்று கடைகளைத் தேடி நாயாக அலைந்து பின்பு வேறு வழியில்லாமல் 5 ஆண்டுகளாக நான் சென்னையில் இருப்பது தெரிந்திருந்தும் அழைக்காமல் இருந்த ஒரு வீட்டிற்கு, அழையா விருந்தாளியாகச் சென்று 'முழுங்கிவிட்டு' வந்ததை வெட்கத்துடன் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்..
சென்னையில் ரூம் டுத்துத் தங்கியிருப்பவர்களுக்கு அன்றைய உணவுக்கான பொறுப்பு எவருடையது என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.. அது அவர்கள் பாடு.. பேச்சிலர்களாக இருந்து, இது போல் கடைகளையே நம்பி வாழுகின்ற ஜீவன்களை உணவுக்காகவே "நாளை யார் வீட்டுக்குப் போகலாம்.." என்று யோசிக்க வைக்கின்ற கொடுமையை அரசுகளே செய்வது பசியின் கொடுமையைவிட கொடியது..
ஏற்கெனவே செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை... அக்டோபர்-1 திங்கள்கிழமை பந்த்-கட்டாய விடுமுறை, அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி.. விடுமுறை நாள்தான்..
இப்படி தொடர்ந்து மூன்று விடுமுறை நாட்கள் வந்ததெனில் அரசுத் துறையின் வேலைகள் எவ்வளவு பாதிக்கப்படும்..?
அன்றைய நாளில் கிடைப்பதாக இருப்பவை மூன்று நாட்கள் கழித்தெனில் அந்த மூன்று நாட்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படப் போவது யார்? பொதுமக்கள்தானே..
ஏற்கெனவே மாதத்திற்கு 10 நாட்களுக்குக் குறைவில்லாமல் விடுமுறை கிடைக்குமளவுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து கெடுத்து வைத்திருப்பவை அரசுகள்தான்.. இதில் இதுபோல் திடீர் விடுமுறைகளை வழங்கி அவர்களை வளைப்பது ஓட்டு வங்கியை வளைக்கின்ற நோக்கம் மட்டும்தானே..
அதிலும் இந்த முறை கூடுதல் கவன ஈர்ப்பாக அக்டோபர் 1-ம் தேதியன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் வருகிறது.
அன்றைக்கு அவருடைய ரசிகர்கள் ஊர்வலமாகச் சென்று கடற்கரையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலையணிவித்து நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார்கள். இப்போது இந்த ரசிகர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
"உன் தலைவனை அடுத்த நாள் கும்பிட்டுக் கொள்.." என்றா..?
அப்படியென்றால் அனைத்துத் தலைவர்களின் விசேஷ நாட்களிலும் இப்படி ஆளுக்கொருவர் பந்த் அறிவித்தால் நம்மை வளர்த்த சான்றோர்களின் மீது நமக்கிருக்கும் அக்கறைதான் என்ன..?
ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் பந்த் எனில் தொழில் துறையில் மட்டுமே சுமாராக 2000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமாகும்..
இந்த நஷ்டம் வெளியில் தெரியாமல், இதனால் நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல் இருப்பதினாலும்தான் இந்த பந்த் கூத்து அனைத்து அரசுகளாலும், அனைத்து அரசியல் கட்சிகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
பந்த் நடத்தித்தான் மக்களின் கவனத்தைக் கவர முடியுமா?
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுதத வேண்டும் என்பது கோரிக்கை.
அந்தத் துறை யாருடையது மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையுடையது. அந்தத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பாலு. தி.மு.க.வின் மேல் மட்டத் தலைவர். அவர் தலைமையில் இருக்கின்ற அமைச்சகமே சரிவர வேலை செய்யவில்லை எனில் அவரைத்தானே கேள்வி கேட்க வேண்டும்.. அவரையும் மீறி நடக்கிறது எனில் அவர் ராஜினாமா செய்துவிட்டு தன்னை மீறி தன் துறையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன என்று உண்மையை மக்களிடம் சொல்லாமே..?
மத்தியில் ஆளும் கூட்டணி அரசிற்கும், தமிழக முதல்வர்தான் தலைவர். புத்தக வெளியீட்டு விழாவுக்கும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும், தனிப்பட்ட நிகழ்வுகளுக்கும் நொடியில் போனில் பேசுகின்ற அளவுக்கு செல்வாக்கும் இருக்கின்றபோது அதன் வழியாக இந்தப் பிரச்சினையை விரைந்து செயல்படுத்துபடி பேசுவதை விட்டுவிட்டு அப்பாவி மக்களின் அடிமடியில் கை வைப்பது எந்த வகையில் சிறந்த அரசியல்..?
மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த ஆவணத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அதை வெளியில் சொல்லி எங்கள் கருத்தை ஏற்காத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று சொல்லி கூட்டணியிலிருந்து வெளியேறலாமே..? மக்கள் மனமுவந்து ஏற்பார்களே..
இதைச் செய்யாமல் ஏதோ ரிக்ஷா ஓட்டுபவனும், கை வண்டி இழுப்பவனும்தான் இந்த விஷயத்தில் குற்றவாளி என்பதைப் போல், அவனது ஒரு நாள் பொழைப்பைக் கெடுப்பது சிறந்த நிர்வாகமா?
கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மத்தியில் ஆளும் நிர்வாகத்தினர். அவர்களுடைய நிர்வாகத்தில் இங்கே இருப்பவர்களும் பங்கு கொண்டுள்ளார்கள். அப்படியிருக்க தமிழகத்தில் பந்த் எதற்கு? பேசாமல் இங்கேயுள்ள ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி சென்று பிரதமர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடலாமே..?
'மத்திய அரசின் கவன ஈர்ப்புத்தானே' இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கம். அதை டெல்லியிலேயே போய்ச் செய்யலாமே..? உடனடி கவனம் பெறுமே..?
இப்போது அனைவருக்குள்ளும் எழுகின்ற கேள்வி யாதெனில், மக்களுக்கு உண்டாகப் போகின்ற கெடுதிகளை வருமுன் காக்கின்ற கடமையைச் செய்ய வேண்டியவை அரசுக்கு இருக்கிறதா? இல்லையா..?
விஷயம் கோர்ட்டின் பரிசீலனையில் உள்ளது என்பதனை மறைத்துவிட்டு, 'இதனால் நமக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. நாம் எப்போதும் நல்லவர்களாகத்தான் மக்களின் கண்களுக்குக் காட்சி தர வேண்டும்.. எப்போதும் நம்மை எதிர்ப்பவர்களே கெட்டவர்கள்.. நம்மை எப்போதும் ஆதரிப்பவர்களே நமது தோழர்கள்' என்கிற ஆளும்கட்சிகளின் அரசியல் சூத்திரத்தில் சிக்கித் தவிக்கும் ஓட்டுப் போட்ட மக்கள்தான், இவை இரண்டையும் பார்த்துக் கொண்டு எப்போதும் அமைதியாக இருப்பவர்கள்..
இவர்களின் அமைதி என்றைக்கு முடிகிறதோ, அன்றைக்குத்தான் இது மாதிரியான முட்டாள்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.
|
Tweet |
33 comments:
பந்த் என்பது இந்தியர்களின் சாபக்கேடு. அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தைக் காட்ட இதை நடத்துகிறது. இந்த பந்த் ஆளும் கட்சியாலேயே நடத்தப்படுவது வேடிக்கை
பந்த் என்பது தேவையில்லாத ஒன்று. கண்டனங்களைத் தெரிவிக்க எத்தனையோ வழி இருக்கும் பொழுது இப்படி உற்பத்தித் திறனை பாதிக்கச் செய்வது மிகத்தவறு. அதிலும் ஆளும்கட்சியே பந்த் நடத்தும் அவலம்! :-(
***************************************
நகரங்களில் பேச்சிலராக இருப்பவர்கள் சோத்துக்கு என்ன செய்வார்கள்?
***************************************
உணமதாங்க உண்மைத் தமிழன் போன தடவ எந்த எழவுக்கு பந்த் பண்ணாங்கன்னு தெரியல, ஆனா சோறு கிடைக்காம நாயா அலைந்தது எனக்கு தான் தெரியும்.
மத்திய அரச எச்சரிக்கும் விதமா கனிமொழி அம்மா வ ராஜினாமா செய்ய சொல்லலாமே. . . .?
அதெல்லாம் செய்ய மாட்டாங்க ஆனா நம்மள கஷ்டப் படுத்த்த தயங்கமாட்டாங்க. . . .
இப்படிப் பட்ட அரசியல் தலைவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் தொண்டர்களை என்ன வென்று சொல்வது.....?
நன்றி வித்யா கலைவாணி.. அரசியல் கட்சிகள் தங்களது பலத்தைக் காட்டத்தான் இப்படி நடத்துகின்றன. நான் குறிப்பிட மறந்த குறிப்பு. நன்றிகள்..
நன்றி கொத்ஸ்.. இப்போது டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நாளை ஹியரிங்காம். பார்ப்போம். என்ன நடக்கிறதென்று..?
நன்றி வெங்கட்ராம் ஸார்..இப்ப தொண்டர்களே இல்லை. அவர்களெல்லாம் கூலியாட்கள் ரேஞ்சுக்கு போயிட்டாங்க.. காசு கொடுக்கிறவன் என்ன சொல்றான்னோ அதைச் செஞ்சுட்டுப் போறதுதான் அவர்களுடைய வேலை.. அன்னிக்கும் அதைத்தான் செய்யப் போறாங்க.
அடடே நீங்க எழுதியிருக்கீங்களா?? இப்ப தான் நானும் ஒன்னு எழுதி பப்ளிஷ் செய்திட்டு வந்தேன்...
ஆனா சிவாஜி மேட்டர் ரெம்ப ஓவர் ஆமாம்...
பந்த் நாளில் கலைஞர் டி.வி.,முரசொலி,மற்றும் அண்ணா அறிவாலய ஒருநாள் புக்கிங் நிகழ்ச்சிகளை ரத்து செய்து,வருமானத்தை மறுத்து போராட்டம் அறிவித்தால் பந்த்'ன் நோக்கத்தைப் பாராட்டலாம்...
உண்மைத்தமிழன்,
யார்வீட்டுக்கு சாப்பாட்டுக்குப் போகலாம் என்று சிந்திக்க நேரிடும் பேச்சிலர் சாப்பாட்டுப் பிரச்சினையை,
யாராவது செத்துப்போனா முடிச்சூரில் இருந்து மீஞ்சூருக்கு எப்படிப் பயணிப்பது என்று சாமானியனின் யதார்த்த அவஸ்தைகளை கண்முன்னே எடுத்து வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
தமிழினத் தலைவர் (திஸ் வேர்ல்டு அண்ட் அதர் காலக்ஸீஸ்) மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதியை இப்படி எதிர்க்கின்றீர்களே நீங்க அக்மார்க் தமிழன் தானா?
இப்போ அதிமுக ஜெ வேற கோர்டுக்கு இந்த பந்த் மேட்டரை இழுத்திருக்காங்க...
எதுக்கும் தமிழின எதிரி /பார்ப்பன அடிவருடின்னு ஏதாவது கழக பட்டம் பெற தயாராக இருங்கள். :-))
வெங்கட்ராமன்,
//மத்திய அரச எச்சரிக்கும் விதமா கனிமொழி அம்மா வ ராஜினாமா செய்ய சொல்லலாமே. . . .?//
இதுக்குத்தானா மதுரையில் தினகரன் அலுவலகத்தில் வெடிகுண்டுவீசி, தயாநிதியை வூட்டுக்கு அனுப்பி என்று பொதுக்குழு சம்மதத்துடன் கழகம் மேற்கொண்ட உரிமைப் போராட்டம் எல்லாம்??
மடிந்து போன தினகரன் ஊழியர்கள் ஆத்மாவுக்குச் செய்யும் மரியாதையே கனிமொழி பதவியில் தொடர்வது!
உண்மைத்தமிழன் உங்களுக்கு கிடைக்கப்போற கழக பட்டத்தை பகிர்ந்துக்க ஆள் கிடைச்சுட்டார் :-))
தேவையில்லைதான், ஆனால் ஒரு நாள் லீவ் கிடைக்கிறதே.}}
சிவாசி பத்தி எழுதி ... நல்ல காமெடி. மத்தபடி, பதிவ முழுசா படிக்க முடியலை..}}
//இப்ப தொண்டர்களே இல்லை. அவர்களெல்லாம் கூலியாட்கள் ரேஞ்சுக்கு போயிட்டாங்க.. காசு கொடுக்கிறவன் என்ன சொல்றான்னோ அதைச் செஞ்சுட்டுப் போறதுதான் அவர்களுடைய வேலை.. அன்னிக்கும் அதைத்தான் செய்யப் போறாங்க.//
ஏப்பா இப்படி எழுதற?, இணையத்துல இருக்கற ஏஜெண்ட்களைப் பகைச்சுக்கற?, இப்படியெல்லாம் எழுதினா அப்புறம் என்ன நடக்கும், ஆட்டோ வரும். வீட்டுக்கு ஆட்கள் வரும்.....ஈமெயில்ல அசிங்கமா திட்டுவரும்....இதெல்லாம் தெரிஞ்சும் இப்படி ஒரு கருத்தச் சொல்ல எப்படி மனசு வருது....
இதுக்கெல்லாம் பேரு என்ன தெரியுமா?, அதுதான் "பார்பன அடிவருடித்தனம்".....ஹிஹிஹி
கருணாநிதி பண்ணினா மட்டுமே எதிர்க்கிறீங்க அப்படின்னு ஒரு புண்ணாக்கு எழுதும் பாத்துக்கீனே இருங்க....
//We The People said...
அடடே நீங்க எழுதியிருக்கீங்களா? இப்பதான் நானும் ஒன்னு எழுதி பப்ளிஷ் செய்திட்டு வந்தேன்... ஆனா சிவாஜி மேட்டர் ரெம்ப ஓவர் ஆமாம்...//
என்ன ஸார் ஓவர்..?
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், அண்ணா மறைந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், தந்தை பெரியார் மறைந்த நாள் - இந்த நாட்களில் பந்த் அறிவிப்பார்களா என்ன..?
//அறிவன் /#11802717200764379909/ said...
பந்த் நாளில் கலைஞர் டி.வி., முரசொலி, மற்றும் அண்ணா அறிவாலய ஒருநாள் புக்கிங் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, வருமானத்தை மறுத்து போராட்டம் அறிவித்தால் பந்த்'ன் நோக்கத்தைப் பாராட்டலாம்...//
இது எப்படி இருக்கு..?
அதியமான் ஸார்..
முடியல ஸார்.. என்னை விட்ருங்க.. அர்த்தம் புரியாம நான் எதையாவது எழுதி.. நீங்க அதை மறுப்பு எழுதி.. வேணாம்.. ரெண்டு பேருமே விட்ருவோம்..
//Hariharan # 03985177737685368452 said...
உண்மைத்தமிழன், யார்வீட்டுக்கு சாப்பாட்டுக்குப் போகலாம் என்று சிந்திக்க நேரிடும் பேச்சிலர் சாப்பாட்டுப் பிரச்சினையை, யாராவது செத்துப்போனா முடிச்சூரில் இருந்து மீஞ்சூருக்கு எப்படிப் பயணிப்பது என்று சாமானியனின் யதார்த்த அவஸ்தைகளை கண்முன்னே எடுத்து வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.//
நன்றி.. இப்போதே சென்னை மாம்பலத்தில் மேன்ஷனில் தங்கியிருப்பவர்கள் அன்றைக்கு என்ன செய்வது? யார் வீட்டுக்குச் செல்வது என்று பிளான் செய்து கொண்டிருக்கிறார்கள்..
//தமிழினத் தலைவர் (திஸ் வேர்ல்டு அண்ட் அதர் காலக்ஸீஸ்) மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதியை இப்படி எதிர்க்கின்றீர்களே நீங்க அக்மார்க் தமிழன்தானா?//
ஐயோ.. இதிலென்ன ஸார் உங்களுக்குச் சந்தேகம்.. நான் அக்மார்க் ISI முத்திரை பெற்ற தமிழன்தான்..
//இப்போ அதிமுக ஜெ வேற கோர்டுக்கு இந்த பந்த் மேட்டரை இழுத்திருக்காங்க... எதுக்கும் தமிழின எதிரி / பார்ப்பன அடிவருடின்னு ஏதாவது கழக பட்டம் பெற தயாராக இருங்கள். :-))//
ஏற்கெனவே எடுத்தாச்சே.. தெரியாதா உங்களுக்கு.. பட்டம் வழங்கியவர் முத்தமிழ்மன்றம் நடத்தி முத்தமிழை உலக மக்களிடையே பரப்பி வரும் திருவாளர் மூர்த்தி அவர்கள்தான்.
///வெங்கட்ராமன்,
//மத்திய அரச எச்சரிக்கும் விதமா கனிமொழி அம்மா வ ராஜினாமா செய்ய சொல்லலாமே. . . .?//
இதுக்குத்தானா மதுரையில் தினகரன் அலுவலகத்தில் வெடிகுண்டுவீசி, தயாநிதியை வூட்டுக்கு அனுப்பி என்று பொதுக்குழு சம்மதத்துடன் கழகம் மேற்கொண்ட உரிமைப் போராட்டம் எல்லாம்?? மடிந்து போன தினகரன் ஊழியர்கள் ஆத்மாவுக்குச் செய்யும் மரியாதையே கனிமொழி பதவியில் தொடர்வது!///
ம்.. இதை நான் படித்துக் கொண்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
//உண்மைத்தமிழன் உங்களுக்கு கிடைக்கப்போற கழக பட்டத்தை பகிர்ந்துக்க ஆள் கிடைச்சுட்டார் :-))//
அதுனாலதான் சுதாரிப்பா மேல பதில் சொல்லிருக்கேனாக்கும்..
//Jyovram Sundar said...
தேவையில்லைதான், ஆனால் ஒரு நாள் லீவ் கிடைக்கிறதே.}}//
அதுதான்.. அரசு ஊழியர்களுக்கு இது ஒண்ணே போதும் சுந்தர்..
//சிவாசி பத்தி எழுதி ... நல்ல காமெடி. மத்தபடி, பதிவ முழுசா படிக்க முடியலை..}}//
உங்களுக்கும் காமெடியா தெரியுதா..? சரி விட்டுர்ரேன்.. பதிவை படிக்காமயே கமெண்ட்ஸா..? கொடுமை..
Anonymous said...
///இப்ப தொண்டர்களே இல்லை. அவர்களெல்லாம் கூலியாட்கள் ரேஞ்சுக்கு போயிட்டாங்க.. காசு கொடுக்கிறவன் என்ன சொல்றான்னோ அதைச் செஞ்சுட்டுப் போறதுதான் அவர்களுடைய வேலை.. அன்னிக்கும் அதைத்தான் செய்யப் போறாங்க.//
ஏப்பா இப்படி எழுதற?, இணையத்துல இருக்கற ஏஜெண்ட்களைப் பகைச்சுக்கற?, இப்படியெல்லாம் எழுதினா அப்புறம் என்ன நடக்கும், ஆட்டோ வரும். வீட்டுக்கு ஆட்கள் வரும்.....ஈமெயில்ல அசிங்கமா திட்டுவரும்....இதெல்லாம் தெரிஞ்சும் இப்படி ஒரு கருத்தச் சொல்ல எப்படி மனசு வருது.... இதுக்கெல்லாம் பேரு என்ன தெரியுமா?, அதுதான் "பார்ப்பன அடிவருடித்தனம்".....ஹிஹிஹி..///
அதுதான் எப்பவோ எடுத்தாச்சே அனானி..
'மேல்' விபரங்களை ஹரிஹனுக்குச் சொன்ன பதில் கமெண்ட்டில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..
//Anonymous said...
கருணாநிதி பண்ணினா மட்டுமே எதிர்க்கிறீங்க அப்படின்னு ஒரு புண்ணாக்கு எழுதும் பாத்துக்கீனே இருங்க....//
வந்திருக்கு அனானி.. அதெப்படி கரெக்ட்டா சொல்றீங்க... ஆனா, கொஞ்சம் 'முத்தமிழ்ல' இருக்கிறதால இங்க பப்ளிஷ் பண்ண முடியலை..
பாலம் கட்டறதுனால மட்டும் ஆதாயமாக்கும். சரி, என் கவலைய பதிஞ்சுட்டு போறேன். வேலைநிறுத்தத்துக்கு யாரும் அழைப்பு விடுவதாயில்லை. எதிர்ப்போரும் 'பந்த்'தைத் தான் ஆதரிக்கிறீர்கள்.
þ¨¾ò¾¡ý Á¢Êø ¸¢Ç¡Š Á§É¡À¡Åõ ±ýÚ ¦º¡øÅ¡÷¸û.
பந்த் என்பது ஒரு விடுமுறைதினம் போலதான், முன்னறிவிக்கபட்ட பந்த்தினால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு கவன ஈர்ப்பு முயற்சிதான். எதுக்கு சு.சாமியும், ராம கோபாலனும், மற்றவர்களும் பந்த்தை பார்த்து இப்படி அலறுகிறார்கள், மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டு விடும் என்பதாலா? அப்படியென்றால், நீங்களும் பந்த் நடத்தலாமே, பாலத்தை இடிக்கக்கூடாதுன்னு!!!!
நீர் உண்மைத்தமிழனே அல்ல பொய்த்தமிழன்.
Anonymous said...
இதைத்தான் மிடில் கிளாஸ் மனோபாவம் என்று சொல்வார்கள்.
அக்டோபர் 1 சென்னை வந்து இறங்கி நாகப்பட்டிணம் போகலாம் என்றிருந்தேன்...(சும்மா)
விமான நிலையத்திலேயே தங்க அரசாங்கம் உதவி செய்யுமா?இல்லை அக்டோபர் 1 சென்னை வரும் விமானங்கள் என்ன செய்யப்போகின்றன?்கொமெரிமெர்
மெரினாவிலேயே நிறுத்திவிடாதீர்கள்.:-))
Waste of time/resources.
Bandh must be banned all over India whoever rules.
பிரம்மச்சாரிகள் அன்று விரதம் இருக்கலாம்.இல்லை என்னை மாதிரி ரொட்டி ஜாம் வைத்து மூன்று வேளையும் அதையே சாப்பிடலாம்.
//முகவை மைந்தன் said...
பாலம் கட்டறதுனால மட்டும் ஆதாயமாக்கும். சரி, என் கவலைய பதிஞ்சுட்டு போறேன். வேலைநிறுத்தத்துக்கு யாரும் அழைப்பு விடுவதாயில்லை. எதிர்ப்போரும் 'பந்த்'தைத்தான் ஆதரிக்கிறீர்கள்.//
'பந்த்'-க்கும், வேலை நிறுத்தத்துக்கும் என்ன வித்தியாசம்..?
//ரஞ்சித் said...
பந்த் என்பது ஒரு விடுமுறை தினம் போலதான், முன்னறிவிக்கபட்ட பந்த்தினால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு கவன ஈர்ப்பு முயற்சிதான். எதுக்கு சு.சாமியும், ராம கோபாலனும், மற்றவர்களும் பந்த்தை பார்த்து இப்படி அலறுகிறார்கள், மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டுவிடும் என்பதாலா? அப்படியென்றால், நீங்களும் பந்த் நடத்தலாமே, பாலத்தை இடிக்கக் கூடாதுன்னு!!!!//
பந்த் என்ற பெயரில் அரசே கட்டாயமாக வேலை நிறுத்தம் செய்கிறது. அதை எதிர்த்துத்தான் பதிவே எழுதியிருக்கிறேன்..
மக்களின் கவனத்தை ஈர்க்க என்ன செய்யலாம் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறேன்.. பதிவை மறுபடியும் படித்துவிட்டு பதில் போடவும்.
//நீர் உண்மைத்தமிழனே அல்ல பொய்த்தமிழன்.//
சந்தோஷம்..
//Anonymous said...
இதைத்தான் மிடில் கிளாஸ் மனோபாவம் என்று சொல்வார்கள்.//
உண்மைதான்.. எங்கள் கஷ்டம் எங்களுக்குத்தானே தெரியும்.. எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் எங்களால்..? நாங்கள்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் திட்டமிட்டு ஏமாற்றப்படும் ஏமாளிகளாச்சே..
//வடுவூர் குமார் said...
அக்டோபர்-1 சென்னை வந்து இறங்கி நாகப்பட்டிணம் போகலாம் என்றிருந்தேன்...(சும்மா)
விமான நிலையத்திலேயே தங்க அரசாங்கம் உதவி செய்யுமா? இல்லை அக்டோபர்-1 சென்னை வரும் விமானங்கள் என்ன செய்யப்போகின்றன? கொமெரிமெர்
மெரினாவிலேயே நிறுத்திவிடாதீர்கள்.:-))//
அப்படியெல்லாம் செய்ய மாட்டோம்.. தாராளமாக நீங்க வந்து இறங்கலாம். ஊருக்குள்ள வரணும்னா மட்டும் கால்டாக்சி, இல்லாட்டி ஆட்டோகாரங்க கேக்குற காசை வெட்டிட்டுப் போகலாம்.
//Waste of time/resources.
Bandh must be banned all over India whoever rules.//
நிசம்தான்.. இது யாருக்கு இங்க புரியுது.. அரசியல்வாதிகளுக்கு மக்களின் புலம்பல்கள் புரிய வேண்டுமென்பதில்லையே..
//பிரம்மச்சாரிகள் அன்று விரதம் இருக்கலாம்.இல்லை என்னை மாதிரி ரொட்டி ஜாம் வைத்து மூன்று வேளையும் அதையே சாப்பிடலாம்.//
இந்த அட்வைஸுக்கு அடுத்த வாட்டி சென்னைக்கு நீங்க வரும்போது நேர்ல பார்க்க முடிஞ்சா பதில் தர்றேன்..
//'பந்த்'-க்கும், வேலை நிறுத்தத்துக்கும் என்ன வித்தியாசம்..?//
பந்த் என்பது தமிழ்ச்சொல் அல்ல ;-) அதுதான் வேறுபாடு. எரியிறது எல்லாமே கொள்ளி. அதனால தான் என் கவலையை தனிப்பட்டுச் சொன்னேன்.
///முகவை மைந்தன் said...
//'பந்த்'-க்கும், வேலை நிறுத்தத்துக்கும் என்ன வித்தியாசம்..?//
பந்த் என்பது தமிழ்ச்சொல் அல்ல ;-) அதுதான் வேறுபாடு. எரியிறது எல்லாமே கொள்ளி. அதனால தான் என் கவலையை தனிப்பட்டுச் சொன்னேன்.///
சொல் மட்டும்தானே வேறு வேறு.. அர்த்தம் ஒன்றுதானே.. ஸோ, எனக்கு மாதிரியே உங்களுக்கும் வயித்துல கொள்ளி எரியுது.. வேற வழியில்ல.. நாம இப்படி பேசித்தான் அதை அணைக்கணும்..
நீங்கள் சரவணகுமார் என்ற பெயரிலேயே சுருக்கமாக எழுதுங்கள்.
மற்றபடி, எதிர்கட்சியே பந்த் வெற்றி... பஸ் ஒடவில்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்த முதல் பந்த் இது வாகத்தான் இருக்கும்
//Anonymous said...
நீங்கள் சரவணகுமார் என்ற பெயரிலேயே சுருக்கமாக எழுதுங்கள்.//
திருமிகு அனானி அவர்களே, திரு.சரவணகுமார் அவர்களின் பதிவைச் சென்று படித்தீர்களா..?
அவர் 2006-லேயே பதிவு போட்டுத் தனது வலையுலக பிரவேசத்தைத் துவக்கியுள்ளார்.
நான் எழுதத் துவங்கியதோ 2007 மார்ச்சில்தான்...
வித்தியாசம் தெரிகிறதா..? அவர் யாரோ? நான் யாரோ..? நம்புங்கய்யா..
இதை ஒண்ணுக்கு எழுதி மாரடிக்கவே நேரமில்லை.. இதுல இன்னொண்ணா..?
வேற வேலையில்லாத ஆள்கிட்ட போய் விளையாடுங்கப்பா..
//Anonymous said...
மற்றபடி, எதிர்கட்சியே பந்த் வெற்றி... பஸ் ஒடவில்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்த முதல் பந்த் இதுவாகத்தான் இருக்கும்..//
எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே உதாரணமாகத் திகழ்கிறது. அந்த வரிசையில் இதையும் சேர்த்துக் கொள்வோம்..
See who owns petmeds.co.uk or any other website:
http://whois.domaintasks.com/petmeds.co.uk
Post a Comment