
வேழ முகத்தோனே! ஞான முதல்வனே!
விநாயகனே! வினை தீர்ப்பவனே..!
ஆவணி மாதம் சுக்கில பட்சம் சதுர்த்தியில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று பொருள். ‘நாயகன்’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.
விநாயகருக்கு மற்றொரு பெயர் விக்னேஸ்வரர். 'விக்னம்' என்றால் 'தடை' என்று பொருள். 'தடைகளை நீக்குகின்ற ஈஸ்வரன்' என்பதனால் இப்பெயர் பெற்றார்.
“குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்” என்ற பழமொழியை கேட்டிருப்பீங்க. உண்மையிலேயே “குட்டுப்பட்டாலும் மோதகக் கையால் குட்டுப்பட வேண்டும்” என்பதுதான் இதன் அர்த்தம்.
விநாயகரைத் தவிர நாம் வேறு எந்தத் தெய்வத்தின் முன்னாலும் நாம் குட்டுப் போட்டுக் கொள்வதில்லை. ஆனால் தினமும் விநாயகர் முன்னால் இதனைச் செய்கிறோம்.
விநாயகருக்கு ஐந்து கரங்கள் உண்டு. ஒரு கையை தாய், தந்தையரான பரமசிவம்-பார்வதிக்கும், மற்றொரு கையைத் தேவர்களின் நலம் பொருட்டும், ஒரு கையைத் தன் பொருட்டும், இரு கைகளை நமக்கு உதவுவதன் பொருட்டும் வைத்திருக்கிறார் என்று தணிகைப் புராணம் கூறுகிறது.
‘ஓம்’ என்ற எழுத்தின் வடிவமாய் ஓங்கார ரூபத்தில் எழுந்தருளி இருக்கும் சகல ஞானத்திற்கும் அதிபதியான விநாயகரைத் தொழும் சிறந்த கால் விநாயகர் சதுர்த்தி நாளன்றுதான்.
இப்படிப்பட்ட முழுமுதற் கடவுளான விநாயகர் எங்கும் இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் தனித்து நிற்கிறார்.
வழிபாடு
விநாயகர் வழிபாடு என்பது பாரத நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, போர்னியோ, இந்தோனேசியா, சீனா, சிரு, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி எனப் பற்பல நாடுகளிலும் பற்பல நூற்றாண்டுகளாகப் பரவி, நிலவியமைக்கும் பல சான்றுகள் உள்ளன.
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
ஊரும், பேரும் ஒரே பெயர். அவர்தான் பிள்ளையார்பட்டி பிள்ளையார்.
பரஞ்சோதி முனிவர் வாதாபியிலிருந்து கொண்டு வந்த விநாயகரை திருச்செங்காட்டான் குடியில் பிரதிஷ்டை செய்தபோது பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருந்தான்.
பிள்ளையார் உருவம் அவன் மனதைப் பெரிதும் கவர்ந்தது. காரைக்குடியை அடுத்த குன்றக்குடி அருகே ஒரு குன்றில் அப்பிள்ளையார் உருவத்தை அமைத்தான். அங்கே கற்பக விநாயகர் அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்துவிட்டார்.
கும்பகர்ணப் பிள்ளையார்
இந்தப் பிள்ளையார் கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
ஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரைப் பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி எறி எனறு கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார். விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் விநாயகப் பெருமானுக்கு கும்பகர்ணப் பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.
ஸ்ரீஆதியந்தப் பிரபு
சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் அழகிய கோயிலில் இந்த விநாயகர் அமர்ந்திருக்கிறார்.
இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான விக்கிரகத்தை இங்கு பார்க்கிறோம்.
இதில் மற்றுமொரு விசேஷம். நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்தக் கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.
இரட்டைப் பிள்ளையார் தரிசனம்
ஒரு விநாயகரை வணங்கினாலே சிறப்பு. இரட்டை விநாயகரை வணங்கினால் மிகவும் சிறப்பு.
ஆனால் இரட்டை விநாயகர் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில இடங்களில் இருக்கிறார்கள்.
சங்கரன்கோவிலில், சங்கரநாராயணர் கோவிலின் பின்புறம் வேலப்ப தேசிகர் திருக்கோவில் உள்ளது.
இக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.
இக்கோவிலில் இரட்டை விநாயகர் அமைந்து அருள் பாலித்து வருகின்றனர்.
வலம்சுழி வெள்ளை விநாயகர்
தமிழ்நாட்டில் கோவில்கள் சூழ்ந்த இடம் என்று கும்பகோணத்தைச் சொல்வார்கள்.
கும்பகோணத்திற்கு அருகில் இருப்பது சுவாமி மலை. சுவாமி மலைக்கு மிக அருகில் இருப்பது திருவலஞ்சுழி.
இந்தத் திருக்கோயிலில் வலம்சுழி வெள்ளை விநாயகர் தரிசனம் தருகிறார். வெள்ளை நிறக் கையினால் தொடப்படாதவர் இவருக்கு பச்சைக் கற்பூரத்தால்தான் அபிஷேகம். பார்க்கடல் கடையுமுன்னர் வழிபட்ட மூர்த்தி என்று கூறப்படுகிறது.
உற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் வாணி, கமலா என்ற இரு தேவிமார்கள் இருக்கின்றனர்.
துதிக்கை வலமாக சுருண்டிருப்பதினாலேயே வலஞ்சுழி என்று இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டது.
இவருடைய திருவடிவை கடல் நுரையால் உருவாக்கி, தேவேந்திரன் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகத் தல புராணம் கூறுகிறது.
இந்த விநாயகரைத் தரிசிக்க வந்த கவி காளமேகம் மிக அழகான பாடலொன்றைப் பாடியுள்ளார்.
“பறவாத தம்பி கருகாத வெங்கரி பண் புரண்டேஇறுகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல்நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில்பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே”
தும்பி, வெங்கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்னும் பெயர்கள் ஆனையைக் குறிக்கும் சொற்களாகவும் நற்றமிழில் விளங்குகின்றன.
அவற்றை இப்பாடலில் விநாயகருடன் பொருந்தி, ‘பறக்காத தும்பி, கருகாத கரி, ஸ்வரம் எழுப்பாத வீணைத் தந்தி, உருகாத பொன், சிவப்பைக் காட்டாத சிந்துரம், பூச முடியாத சந்தனம், நீல் நிலையில் தோன்றாத ஆம்பல்’ என்று சிலேடையைக் கவி காளகமேகம் பாடுவது ஆழ்ந்து, ரசிக்கத்தக்க அற்புதமாய் விளங்குகிறது.
வினைகளைத் தீர்க்கும் வில்வ விநாயகர்
வேழமுகத்து விநாயகர் சில திருத்தலங்களில் வன்னி மரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கொலு வீற்றிருப்பார். அவரை வணங்கி அல்லல் நீங்கப் பெற்றிருப்போம்.
ஆனால் சிவனுக்கே உரிய வில்வ மரத்தடியில் அமர்ந்த வலம்புரி விநாயகராக அருள் புரியும் பிள்ளையார் பெருமானை நீங்கள் தரிசத்ததுண்டா?
சென்னை குரோம்பேட்டை உமையாள்புரம் என்னும் வீதியில் விநாயகப் பெருமான் வில்வ மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
நிறம் மாறும் அற்புத விநாயகர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் கேரளபுரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே ஒரு அழகிய ஆலயம் உள்ளது. இதுவே மகாதேவன் ஆலயமாகும்.
இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சந்நிதியே கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. இங்கு எழுந்தருளியிருப்பவரே நிறம் மாறும் விநாயகராவார்.
ஆண்டு தோறும் உத்தராயண காலத்தில் (மாசி மாதம் முதல் ஆடி மாதம்வரை) இவ்விநாயகர் (ஆவணி மாதம் முதல் தை மாதம்வரை) நிறம் கருமையாக உள்ளது என்பது இதன் சிறப்பு.
ஈச்சனாரி விநாயகர்
கோவை மாவட்டத்தில் மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படுவது பேரூர் ஆகும்.
இங்குள்ள பாடல் பெற்ற பராதனப் பெருமைமிக்க பண்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.
அப்படி வண்டியில் வைத்து எடுத்து வந்தபோது வண்டியின் அச்சுமுறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளியிருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.
விநாயகர் சிலையைப் பட்டீஸ்வரத்திற்கு எடுத்துச் சென்ற பக்தர்களால் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.
இறைவனின் விருப்பத்தை யார் தடுக்க முடியும்?
இறுதியில் அங்கேயே விநாயகப் பெருமான் கலியுகக் கர்ணாமூர்த்தியாக அருள் புரிய சித்தம் கொண்டார்.
ஆம், அவ்விடத்தில் பிள்ளையார் பெருமானுக்குப் புகழ் பெற்ற ஆலயம் எழும்பியது. அதுவே இப்போது ஈச்சனாரி விநாயகர் கோயில் என்றழைக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பூஜை
ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.
விநாயகரின் திருவுருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளைச் சலவைக்கல், முத்து, பவழம், யானைத் தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைந்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.
அந்தப் பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயகப் பெருமானின் பலவிதப் பெயர்களைச் சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தைச் சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டைப் பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது. எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியைப் பெற்றுத் தரும்.
எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.
வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களைத் தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.
சந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.
அவரே வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள்.
|
Tweet |
12 comments:
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
விநாயகரப் பத்தி நல்லா சொல்லீட்டீங்க.
ஆனா விநாயக சதுர்த்தி எப்பங்கிறதயும்
நாள், தேதி
சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.
இன்றுதான்.. 15-09-2007 விநாயகர் சதுர்த்தி. இது தெரியாமலா இருந்தீர்கள்? ஆச்சரியம் போங்கள்..
"வேல முகத்தோனே"?? நான் "வேழ முகத்தோனே"ன்னு நினைச்சேன்??அர்த்தம்லாம் தெரியாது...
வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
புள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து(க்)கள்.
ஆரம்பத்தில் இருக்கும் வரிகளில்
வேல முகத்தோனே = வேழ முகத்தோனே.
இன்னிக்கு உங்க வீட்டுக்குத்தான் அனுப்பி இருக்கேன்
கஜமுகனை.
எதுக்கு?
கொழுக்கட்டைக்குத்தான்:-)))))
//Radha Sriram said...
"வேல முகத்தோனே"?? நான் "வேழ முகத்தோனே"ன்னு நினைச்சேன்??அர்த்தம்லாம் தெரியாது...
வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!//
உண்மைதான் மேடம்.. தப்புதான்.. 'வேழம்' என்றால் 'யானை' என்று அர்த்தம். வாழ்த்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
//துளசி கோபால் said...
புள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து(க்)கள். ஆரம்பத்தில் இருக்கும் வரிகளில் வேல முகத்தோனே = வேழ முகத்தோனே.//
திருத்திட்டேன் டீச்சர்.. திருத்திட்டேன்.. நன்றி..
//இன்னிக்கு உங்க வீட்டுக்குத்தான் அனுப்பி இருக்கேன் கஜமுகனை. எதுக்கு?
கொழுக்கட்டைக்குத்தான்:-)))))//
சொன்னா நம்ப மாட்டீங்க.. கரெக்ட்டா உங்க மெயில் வருது.. என் கைல கொழுக்கட்டையும் கிடைக்குது. ஆபீஸ்ல விநாயகரை கும்பிட்டோம்.. வாழ்க துளசி டீச்சர்.. ஜகமுகன்கிட்ட கொஞ்சம் கொடுத்தனுப்புறேன் டீச்சர்.. கப்பல்ல வரும்.. ரிஸீவ் பண்ணிக்குங்க..
வாழ்த்துக்கள் உ.தமிழன்.
நல்ல பதிவு....ஒரு உப செய்தி, மதுரைக் கோவிலிலும் இரட்டை வினாயகர் உண்டு...
விவரமாக வேழ முகத்தானை
விளித்த அன்பரே, அன்பு
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!
//மதுரையம்பதி said...
வாழ்த்துக்கள் உ.தமிழன். நல்ல பதிவு....ஒரு உப செய்தி, மதுரைக் கோவிலிலும் இரட்டை வினாயகர் உண்டு...//
மதுரையம்பதி.. மதுரையில 7 வருஷம் இருந்தும் இதுகூட தெரியாம இருந்திருக்கிறனே.. எந்தக் கோவில்ன்னு கொஞ்சம் சொல்றீங்களா? அடுத்த தடவை மதுரை போகும்போது தரிசனம் பண்ணிட்டு வந்திடறேன்..
//ஜீவா (Jeeva Venkataraman) said...
விவரமாக வேழ முகத்தானை விளித்த அன்பரே, அன்பு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!//
ஆஹா.. விவரமாக விநாயகனுக்கு மொத்தப் படையலையும் உம்பதிவில் போட்டுவிட்டு என்னைச் சொல்கிறீரோ..? நல்லது நண்பரே.. உமது பதிவையும் படித்தேன்.. தமிழ்தான் எத்தனை சக்தி வாய்ந்தது? பக்திக்கு ஏற்ற மொழி தமிழ்தான் என்பதை நான் உரக்கச் சொல்வேன்..
வினாயக பக்தனே வாழ்க. வினாயகர் அருள் பெற்று எல்லோரும் இன்புற்று இருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே
See who owns freepatentsonline.com or any other website:
http://whois.domaintasks.com/freepatentsonline.com
Post a Comment