உங்கள் காதுகளுக்கும் இப்படி ஆகலாம்..!

24-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘அது’ எப்போது, எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு இப்போதும் தெரியவில்லை. நானும் மற்றவர்களைப் போல் எப்போதும் சாதாரணமாகத்தான் இருந்து வந்தேன்..

‘சானா, சர்ர்ர்ரு..’ என்று செல்லமாக என்னை அழைப்பவர்களிடம் சட்டென்று திரும்பிப் பார்த்துப் பேசியிருக்கிறேன். எந்த மாறுபாடும், வேறுபாடும் என்னிடம் காணப்படவே இல்லை. ஒரு மதிய நேரம் எனக்கு அந்த உண்மையைக் காட்டும்வரையில்..

அன்றும் வழக்கம்போல் திண்டுக்கல் ஐ.டி.ஐ.யில் டீசல் மெக்கானிக் வகுப்பில் அமர்ந்திருந்தேன். முதல் நாள் இரவு எனது தந்தையுடன் மருத்துவமனையில் தங்கியிருந்ததால் அரைத் தூக்கத்தில் வகுப்பறையில் இருந்தேன்.

வகுப்பு ஆசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் என்னை உற்று உற்றுப் பார்த்தவர் என்னைப் பார்த்தபடியே ஏதோ சொல்ல. ஒட்டு மொத்த வகுப்பும் என்னையவே திரும்பிப் பார்த்தது. அப்போதும் எனக்கு அவர் சொன்னது காதில் விழவில்லை.

ஆசிரியர் அருகில் வந்து என் கன்னத்தில் விட்ட ஒரு அறைதான் எனது அரைகுறைத் தூக்கத்தை விரட்டியது. "ஒண்ணு தூங்கு.. இல்லாட்டி பாடத்தைக் கவனி.. அரைத் தூக்கத்துல என்னைப் பார்த்து என்னையும் தூங்க வைக்கதடா.." என்றார் ஆசிரியர். அடித்ததைவிடவும் அவர் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நிறைய துக்கத்தைக் கொடுத்தது..

வகுப்பு முடிந்து வெளியில் வந்தவுடன் சக நண்பர்கள் "என்னடா ஸார் அவ்ளோ நேரம் உன்னைப் பத்தியே பேசுறாரு.. அப்படியே இடிச்சப்புளியாட்டம் உக்காந்திருக்கிறே..?" என்றார்கள். அப்போதும் நான் அவர்களிடம் கேட்டேன்.. "அப்படியா.. என்ன சொன்னார்..?" என்றேன்.. ஏதோ வித்தியாசமாக என்னைப் பார்த்தபடியே சென்றார்கள் நண்பர்கள்.

வீடு திரும்பியவுடன் எனது அக்கா வாசலிலேயே காத்திருந்தவர் சத்தம் போடத் துவங்கினார், "ஏண்டா காலைல எத்தனை தடவ கத்துறது.. நீ பாட்டுக்கு கண்டுக்கா போய்க்கிட்டே இருக்க.. சரி.. சரி.. சீக்கிரமா போ.. மாமா ஏதோ ஊருக்குப் போகணுமாம்.. அதுனால உன்னை உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்.." என்று விரட்டினார்.

ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்பதைவிட காலையில் அக்கா கூப்பிட்டது என் காதில் ஏன் விழுகவில்லை என்பதே எனக்குப் பெரிய கேள்வியாக இருந்தது.

மருத்துவமனையில் இரவு நேரத்தில் எனது தந்தை தூக்கம் வராமல் “ஒரு ஊசியைப் போடச் சொல்லுடா.. செத்தாவது போகிறேன்..” என்று கண்ணீர் சொட்டாக வடிய கெஞ்சியபோது அதுகூட எனக்குக் கேட்காமல் போய் பக்கத்து பெட்காரர் அதைக் கேட்டு எனக்கு டிரான்ஸ்லேட் செய்தபோது சத்தியமாக எனக்குத்தான் சாவு வர வேண்டும் போல இருந்தது.

அங்கே இருந்த நர்ஸ் என்னைத் தோளைத் தட்டி இழுத்து "என்னாச்சு உனக்கு? காது கேட்காதா..?" என்று கேட்டபோதுதான் அப்படியரு விஷயமே எனது காதுக்கு வந்தது.

கொஞ்சம் லேசாக கேட்டேன்.. உற்றுக் கேட்டேன்.. ஆம்.. எனது காதில் ஏதோ ஒரு சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. 'கிர்ர்ர்' என்ற சப்தம். டேபிள் பேன் ஓடினாலும் ஒரு லேசான சப்தம் எழுமே.. அதே போல்தான்.. எனது இனிய காதுக்கு ஏதோ ஒன்றாகிவிட்டது என்பது எனக்குப் புரிந்தது..

மருத்துவர்களிடம் ஓடினேன்.. தேனினும் இனிய செய்தியை நமது தேனமுத தமிழில் என் செவியில் திணித்தார்கள். “உங்களது செவித்திறன் கேட்பு எலும்பின் சக்தி குறைந்துள்ளது. அதனால் உங்களுக்கு கேட்கும் சக்தியும் குறைந்துள்ளது..” என்று.. இந்தச் செய்தியை கேட்கும் சக்தியே எனக்கில்லை..

அப்போது நான் ஒரு வயதுக்கு வந்த 16 வயது வாலிபன். ‘விக்ரம்’ படத்தை 6 முறை பார்த்துவிட்டு, நானே கமல்ஹாசனைப் போல் மனதிற்குள் எண்ணிக் கொண்டு ஒரு கனவுலக கதாநாயகனாக எனக்குள்ளேயே ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு காது அவுட் என்று சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை ஜனகராஜ் இடத்திற்கு கொண்டு வந்தார் அந்த மருத்துவர்.

உதடு துடிக்கிறது. வார்த்தைகள் வெளியில் வரவில்லை. ஏதாவது செய்யக்கூடாதா என்று கண்களில் திரண்டு நின்ற கண்ணீரோடு கேட்கிறேன்.

"இல்லை சரவணன்.. இது பரம்பரை வியாதியாக உங்களைத் தொற்றியிருக்கிறது. உங்களது அம்மாவின் 40-வது வயதில் பிறந்திருக்கிறீர்கள். அப்போது உங்களது அம்மாவுக்கும் உடம்பில் சக்தி குறைந்துள்ளது. அதனால் பிறக்கின்றபோதே இந்த வீக்னஸோடுதான் பிறந்திருக்கிறீர்கள். அதோடு உங்க அம்மாவுக்கும் இப்போது இந்த வியாதி வந்துள்ளது. ஸோ.. வருவதை.. வந்துவிட்டதை ஒன்றும் செய்ய முடியாது.." என்றார் டாக்டர் மோகன்ராவ்..

ஏற்கெனவே அப்பாவுக்கு கேன்சர் என்று ரணகளமாக இருந்த எனது இல்லம், இப்போது எனது காதுகளும் அவுட் என்றவுடன் இன்னும் கொஞ்சம் சோகத்தை அப்பிக் கொண்டுவிட்டது.

அதன் பிறகு தினமும் அனைவரும் எனது பாணியில் கத்தத் துவங்கினார்கள். “கத்திதான் பேச வேண்டும். வேறு வழியில்லை.. நாங்க சமாளிச்சுக்குறோம்..” என்று எனது அக்கா ஆறுதல் பாணியில் சொல்லி என்னைத் தேற்றினார்.

பின்னாளில் இந்த நோய்க்கு பரிகாரம் என்னவெனில் “எலும்பு மாற்று அறுவை சிகிச்சைதான்..” என்றார் சென்னையின் மிகப் பெரிய காது மருத்துவர். “ஆஸ்திரேலியாவிலிருந்து எலும்பை வரவழைப்போம். ஒரு சுமாரா 8 லட்சம் ரூபாய் செலவாகும்..” என்று கூலாகச் சொன்ன டாக்டரிடம் அவருடைய பீஸ¤க்கு ஆகும் பணத்தையே கடன் வாங்கி வந்திருக்கிறேன் என்பதை சொல்ல முடியுமா என்ன..?

“ஊரில் என் தாத்தாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன் ஸார்..” என்று சொல்லிவிட்டு வந்தவன்தான், இன்னும் அந்த கிளினிக் பக்கமே செல்லவில்லை.

ஒரு மாதம் நான் என் நினைவிலேயே இல்லை.. எனது தந்தையிடம்கூட நான் சொல்லவில்லை. அவரே “தன்னைக் கருணைக் கொலை செய்துவிடு” என்று என்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் நான் என் சோகத்தைச் சொல்லி என்ன செய்ய என்று விட்டுவிட்டேன்..

எப்படி வந்தது இது?

மருத்துவக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் செய்த அரிய செயல்களைப் பாருங்கள்..

கிரிக்கெட் என்றால் எனக்கு அப்போது உயிர். ரேடியோவை தலைமாட்டில் வைத்து கிரிக்கெட் கேட்டுக் கொண்டே இருப்பேன். “ரேடியோவை கொஞ்சம் தள்ளிதான் வையேண்டா...” என்று என் வீட்டினர் கெஞ்சினாலும் ரேடியோ என் காதோரம்தான் இருக்கும்.

ஐடிஐயில் படித்தபோது எனது நண்பன் மோகன்தாஸ் ஒரு சிறிய கையடக்க டேப்ரிக்கார்டரை கொண்டு வந்தான். அதில் கிரிக்கெட் கமெண்ட்ரியை கேட்பதற்காக hear phone-ஐ மாட்டி கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.

முன் வரிசையில் இருக்கும் நண்பர்கள் என்னிடம் திரும்பி ஸ்கோர் கேட்கும்போது நான் வேண்டுமென்றே பந்தா செய்து ஒரு இரண்டு, மூன்று கெஞ்சல்களுக்குப் பிறகு சைகையில் சொல்வேன்.. ஒரு நாளல்ல.. இரண்டு நாளல்ல.. ஒரு வருடம் தொடர்ந்தது..

ஏற்கெனவே வைட்டமின் சி அல்லது டி எதுவோ ஒன்று குறைபாடுடன் இருந்த நான் இதையும் கேட்க கேட்க.. காதின் உள் எலும்பின் சக்தி தாக்கப்பட்டு வலுவிழக்க ஆரம்பித்து, கடைசியில் முக்கால் செவிடன் என்கிற இன்றைய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது..

நண்பர்களை விடுங்கள்.. அவர்கள் பரவாயில்லை.. பக்கத்திலேயே வந்து பேசுவார்கள்.. சமாளித்துக் கொண்டேன். மற்றவர்கள்.. முதலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசி எனக்கே வெட்கமாகி பின்பு வெளியாள் யாருடனும் பேசாமல் என்னை நானே குறுக்கிக் கொண்டேன்..

அப்போதுதான் “மருத்துவர் காது கேட்கும் கருவியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை..” என்று சொன்னவுடன் எனது கனவுலகத்தைக் கலைத்துவிட்டு ஒரு பெரும் மனப் போராட்டத்திற்குப் பிறகு காது கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்திக் கொண்டேன்.

அப்போதும், இப்போதும் சிலர் கத்த முடியாமல் வெறுப்பாக என்னிடமே தங்களது முகத்தைக் காட்டும்போது அப்படியே ஜன்னல் வழியாக கீழே குதித்துவிடலாமா என்ற எண்ணம்தான் எனக்குள் வரும்.. இதற்காகவே எங்கு வேலை பார்த்தாலும் அநாவசியமாக யாரிடமும் சென்று பேசாமல் இருந்துவிடப் பழகிவிட்டேன்.

முதலில் இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிய முடிந்திருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளை சிறிய வயதிலேயே நான் எடுத்திருந்தால் என் காது பிழைத்திருக்கும். அந்த அளவிற்கான அறிவுத்திறன் என் இல்லத்தில் யாருக்கும் இருக்கவில்லை என்பதும் ஒரு குறைதான்..

இப்படியரு குறை இருக்கிறது என்று எனக்குத் தெரிந்திருந்தால் நானும் அதிகமாக ஒலியைக் கேட்காமல் தவிர்த்து எனது காதைக் காப்பாற்றியிருக்கலாம்.

அன்றிலிருந்து வாக்மேனில் பாட்டு கேட்கும் பழக்கத்தைத் தொலைத்தே விட்டேன். இப்போதும் யாராவது “வாக்மேனில் மேட்டரைத் தருகிறேன். கேட்டு டைப் செய்து கொடுங்கள்..” என்று சொன்னால் எவ்வளவு பணம் தருகிறேன் என்றாலும் “முடியாது..” என்று சொல்லிவிடுவேன்.

ஏனெனில் அதிகமான ஒலியை இப்போதும் எனது காதில் கேட்டால் அன்று இரவே என் காதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ரீங்காரமான சப்தம் என்னைத் தூங்கவிடாமல் செய்து தலைவலியை கொண்டு வந்துவிடும்.

இந்தக் காரணத்திற்காகவும் நான் வெளியில் வண்டியோட்டிச் செல்லும்போதுகூட காது கேட்கும் கருவியை மாட்டாமல்தான் சென்று வருகிறேன்.

இந்தத் தலைவலியும், அதன் உடன்பிறப்பான காய்ச்சலும் தொடர்ந்து வந்தால் நான் அடித்துச் சொல்வேன்.. எனது காது கேட்கும் திறன் 2 டெசிபல்கள் குறைந்துள்ளது என்று..

ஒவ்வொரு முறையும் இப்படித்தான் எனது காது கேட்கும் திறனான டெசிபல்கள் குறையும். அதை நான் கவனித்தே வந்திருக்கிறேன்.

இந்த காது கேளாமை நோயும் இப்போது பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிகமான சத்தம், இரைச்சலான சப்தம் ஏற்படும் இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு முதலில் தொற்றக்கூடியது இந்நோயாகத்தான் இருக்கும்.

ஏனெனில் உடல் ஊனமுற்றவர்களில் இந்த காது கேளாமை வாயிலாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கைதான் உலகளவில் முதலிடமாம்.

இப்போது உலகம் முழுவதும் 50 கோடி பேர்கள் இந்த காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிலும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்கள்தான்.

இந்தியாவில் 1000-த்துக்கு 2 அல்லது 3 குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை நோயோடு பிறக்கின்றன என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் 6.3 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பவர்களாம்.

இன்றைக்கு கக்கூஸில் இருக்கும்போதுகூட செல்போனில் பேசிக் கொண்டே அவசர வாழ்க்கை வாழ்ந்து வரும் இளைஞர்கள் நிறைய பேர், நாளைய முதியவர்களாகும்போது காது கேளாமையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதிகபட்சமான கூம்பு வடிவ ஸ்பீக்கரின் அருகில் நின்று பாட்டு கேட்பது, மேடை கச்சேரிகளின்போது அருகில் சென்று கேட்டு காதைக் கிழித்துக் கொள்வது.. நாடகம் பார்க்கச் சென்று நடிகர், நடிகைகளை அருகில் பார்க்க நினைத்து நம் காதிற்குள் வம்பாக அதிகப்பட்சமான ஒலியை திணித்துக் கொள்வது..

இவை போன்று நம்மால் முடிகின்ற விஷயங்களைத் தவிர்த்தோமானால் என்னைப் போன்ற தவிர்த்திருக்கக்கூடிய சிலரும் பிழைத்துக் கொள்ளலாம்.

நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று இப்போதே செக் செய்து கொண்டு அதற்கேற்ற மருத்துவம் எடுத்துக் கொண்டு வருமுன் காப்பது அனைவரின் குடும்பத்திற்கும் நல்லது.

அனுபவப்பட்டவன் சொல்கிறேன்..

ஏனெனில் அனுபவமே வாழ்க்கை..!

அனுபவமே இறைவன்..!

பின்குறிப்பு : இன்றைக்கு உலக காது கேளாதோர் தினம்.

35 comments:

Unknown said...

:-((

**


காலம் கடந்து குழந்தைப் பேறு அல்லது அல்லது இரண்டு குழந்தைகளுக்கு இடையே பொதிய இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து பெற்றுக் கொள்வது , பிறக்கும் குழந்தையின் திறனை பாதிக்கும்.


**

செவித்திறன் குறைவு பற்றி அதிகம் தெரியாது.

ஆனால் காதில் கம்பியை மாட்டிக் கொண்டே அலையும் இந்தியாவின் வருங்காலச் சமுதாயம் சீரழியப்போவது உறுதி.

காதில் வயருடன் அலையும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகம். அது போல் சட்டுமேனிக்கு ரிங்-டோன் சிங்-டோன் மோகம் பிடித்து அலைபவர்களும் இவர்களே. புள்ளி விவரங்கள் கிடையாது. எனது அனுபவம்.

***

அது போல் தொலைக்காட்சி முன்னாள் தவம் கிடக்கும் எல்லாருக்கும் பார்வைக்குறைவு போனஸ்.

**

வவ்வால் said...

மிக அருமையாக உங்கள் சோகத்தையும் அடுத்தவர்களுக்கு பயன் படும் வகையில் சொல்லிவிட்டீர்கள்!

பலருக்கும் ஒன்று இருக்கும் போது அதன் அருமை தெரியாது என்பதை புரிய வைத்து விட்டீர்கள்!

உண்மைத்தமிழன் said...

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
காலம் கடந்து குழந்தைப் பேறு அல்லது அல்லது இரண்டு குழந்தைகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து பெற்றுக் கொள்வது , பிறக்கும் குழந்தையின் திறனை பாதிக்கும்.//

உண்மைதான் கல்வெட்டு ஸார்.. நான் வீட்டில் கடைசி பிள்ளை. நான்காவது.. எனது தந்தையின் வயது அப்போதே 42. தாயாரின் வயது 40. தேவையா இது..? நானே கேட்டேன் அவதாரம் எடுக்கணும்னு..?

//செவித்திறன் குறைவு பற்றி அதிகம் தெரியாது. ஆனால் காதில் கம்பியை மாட்டிக் கொண்டே அலையும் இந்தியாவின் வருங்காலச் சமுதாயம் சீரழியப்போவது உறுதி. காதில் வயருடன் அலையும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகம். அது போல் சட்டுமேனிக்கு ரிங்-டோன் சிங்-டோன் மோகம் பிடித்து அலைபவர்களும் இவர்களே. புள்ளி விவரங்கள் கிடையாது. எனது அனுபவம்.//

நிச்சயம் இவர்கள்தான வருங்காலத்தில் மெஷினோடு அலையப் போகிறார்கள். அதுவும் சீக்கிரமே 40, 45 வயதிலேயே இவர்களுக்கு இந்நோய் வரக்கூடிய வாய்ப்பு உண்டு.

//அது போல் தொலைக்காட்சி முன்னாள் தவம் கிடக்கும் எல்லாருக்கும் பார்வைக்குறைவு போனஸ்.//

அதுக்குத்தான் கண்ணாடி இருக்கே என்று அலட்சியப்படுத்துகிறார்கள். கண்ணாடி அணிவது நமது மக்களுக்கு ஸ்டேட்டஸ்.. ஆனால் காது கேட்கும் கருவியை மாட்டுவது..?

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
மிக அருமையாக உங்கள் சோகத்தையும் அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் சொல்லிவிட்டீர்கள்! பலருக்கும் ஒன்று இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்!//

சிலருடைய வாழ்க்கைதான் பலருக்கும் வழிகாட்டி வவ்வால்ஜி.. அந்த வகையில் கவியரசர் கண்ணதாசனைப் படித்து வாழ்க்கையை திருத்திக் கொண்டவர்கள் லட்சக்கணக்கானோர்.. அவர்களில் அடியேனும் ஒருவன்.. என் அனுபவம் ஒருவனுக்கு நன்மையைத் தரும் எனில் எந்த அனுபவத்தையும் நான் சந்திக்கத் தயார் என்றான் கண்ணதாசன்.. அவனுக்கு முன் நானெல்லாம் எம்மாத்திரம்..?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்.
நல்ல விளிப்புணர்வுப் பதிவு. ஆனால் பந்தாவுக்கு காதில் மாட்டிக் கொண்டு திரியும் இளைஞர்கள் எத்தனை பேர் இதை படித்துத் திருந்தப் போகிறார்கள்.
இப்பதிவின் தலைப்பை "உங்கள் காதுக்கும் இப்படி ஆகலாம்" எனத் தலைப்பிடுங்கள்...காதில் அக்கறையுள்ள யாராவது எட்டிப் பார்க்கலாம்.
எதிர் காலத்தை நினைக்கப் பாவமாக இருக்கிறது.

siva gnanamji(#18100882083107547329) said...

அனுபவபூர்வமான உண்மை!
யார் கேட்பாங்க?

காதுகேளாமையின் ஒரே அனுகூலம்
வருமானவரிச்சலுகைதான்.இப்படி ஒரு சலுகை இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.அதைத்தெரிவித்திருக்கலாம்

Raveendran Chinnasamy said...

//ஏனெனில் அதிகமான ஒலியை இப்போதும் எனது காதில் கேட்டால் அன்று இரவே என் காதில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ரீங்காரமான சப்தம் என்னைத் தூங்கவிடாமல் செய்து தலைவலியை கொண்டு வந்துவிடும்//

I never have a walkman habbit . I used wonder how people listen . But after reading your blog ,i m escaped from walkman culture .

//இப்பதிவின் தலைப்பை "உங்கள் காதுக்கும் இப்படி ஆகலாம்" எனத் தலைப்பிடுங்கள்...//

Yes i agree to this point ..

Chandravathanaa said...

உங்கள் அனுபவத்தைப் பயனுள்ள வகையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

உங்களுக்கும ஏதும் நிவாரணங்கள கிடைத்து மீண்டும் கேட்கும் திறனைப் பெற மாட்டீர்களா
என்ற யோசனை எனக்குள்:
ரினிருஸ் என்றொரு வருத்தம் இருக்கறதே. அதற்கும் உங்கள் பிரச்சனைக்கும்
ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

உண்மைத்தமிழன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நல்ல விளிப்புணர்வுப் பதிவு. ஆனால் பந்தாவுக்கு காதில் மாட்டிக் கொண்டு திரியும் இளைஞர்கள் எத்தனை பேர் இதை படித்துத் திருந்தப் போகிறார்கள். இப்பதிவின் தலைப்பை "உங்கள் காதுக்கும் இப்படி ஆகலாம்" எனத் தலைப்பிடுங்கள்...காதில் அக்கறையுள்ள யாராவது எட்டிப் பார்க்கலாம். எதிர் காலத்தை நினைக்கப் பாவமாக இருக்கிறது.//

நன்றி யோகன் பாரிஸ்.. தலைப்பையும் மாற்றிவிட்டேன்.. அதற்கும் ஒரு நன்றி.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல் யாம் பெற்றத் துன்பம் தவிர்த்திடுக இவ்வையகம் என்று நினைத்து ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்களை வெளியிட்டால் மற்றவர்கள் அந்தத் துன்பங்களிலிருந்து தப்பிக்கலாம். அதற்காகத்தான் இப்பதிவு.

உண்மைத்தமிழன் said...

//sivagnanamji(#18100882083107547329) said...
அனுபவபூர்வமான உண்மை! யார் கேட்பாங்க? காது கேளாமையின் ஒரே அனுகூலம் வருமானவரிச் சலுகைதான்.இப்படி ஒரு சலுகை இருப்பது பலருக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிவித்திருக்கலாம்.//

ஐயா, இது பற்றிய முழு விபரமும் எனக்குத் தெரியாது. அதனால்தான் சொல்லவில்லை. நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதைப் பற்றி விரிவாக எழுதினீர்கள் என்றால் நல்லது. ஏனெனில் வருமான வரி கட்டுமளவுக்கு நான் சம்பாதிப்பவனல்ல. வருகைக்கு நன்றிங்க ஐயா..

உண்மைத்தமிழன் said...

//Raveendran Chinnasamy said...
I never have a walkman habbit . I used wonder how people listen . But after reading your blog, i m escaped from walkman culture.//

புரிஞ்சுக்கிட்டதுக்கு சந்தோஷம் தம்பீ.. இன்னும் நாலு, அஞ்சு பேர்கிட்ட போய் சொல்லுங்க தம்பீ..

//இப்பதிவின் தலைப்பை "உங்கள் காதுக்கும் இப்படி ஆகலாம்" எனத் தலைப்பிடுங்கள்...//
Yes i agree to this point ..//

தலைப்பையும் மாத்திட்டேன் தம்பீ..

உண்மைத்தமிழன் said...

//Chandravathanaa said...
உங்கள் அனுபவத்தைப் பயனுள்ள வகையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்களுக்கும் ஏதும் நிவாரணங்கள கிடைத்து மீண்டும் கேட்கும் திறனைப் பெற மாட்டீர்களா என்ற யோசனை எனக்குள்://

இதற்கு வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் துண்டை போட்டுத் தாண்டாத குறையாகச் சொல்லிவிட்டார்கள் மேடம். அதுதான் சொல்லியிருக்கேனே.. 8 லட்சம் ரூபாய் செலவு செய்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாமாம்.. அந்த அளவுக்குப் பணத்திற்கு எங்கே செல்வது? அதோடு அது அவசியமில்லாதது என்றும் நான் நினைக்கிறேன்..

//ரினிருஸ் என்றொரு வருத்தம் இருக்கறதே. அதற்கும் உங்கள் பிரச்சனைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?//

இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. நீங்கள் எதைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்றும் தெரியவில்லை. ஸாரி மேடம்..

Geetha Sambasivam said...

மனசுக்கு ரொம்பவே வேதனையா இருக்கு, எங்க வீட்டிலேயும் இப்படித் தான் என்னோட கடைசி மச்சினன், மாமனாருக்கே 50க்கு மேலே ஆனதும் பிறந்தான், கடைசியில் பிறக்கும்போதே இருதய நோயாளி. இன்னும் அப்படித் தான்! :(

மெளலி (மதுரையம்பதி) said...

கவனமா இருக்கவேண்டும் போலிருக்கு....நன்றி உ.தமிழா

இம்சை said...

Thanks sir, I will now avoid hearing songs in ear phone

வடுவூர் குமார் said...

உண்மைதமிழரே!
அப்படியே தியேட்டர் போய் படம் பார்க்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடலாம்.நான் சிங்கையிலும் சரி,ஊரிலும் சரி.. காது அடைப்பானுடன் தான் படம் பார்ப்பேன்.
என்ன சவுண்டு,என்ன சவுண்டு!!
எலும்பு மாற்று சிகிச்சைக்கு 8 ல வா?!

SurveySan said...

அடக் கொடுமையே.
பகிர்ந்தமைக்கு நன்றி.

டி.வி. ஒலி ஒரு 5 டெஸிபல் கொறச்சுட்டேன்.

நல்ல புத்திமதி!

உங்களுக்கும், ஆண்டவன் அருளாலோ, $ அருளாலோ, விரைவில், குணமடைய வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

//மதுரையம்பதி said...
கவனமா இருக்க வேண்டும் போலிருக்கு....நன்றி உ.தமிழா.//

ரொம்பக் கவனமா இருக்கணும் ஸார்.. காது ரொம்ப முக்கியம்.. இப்போது எனக்கு ஒரு இடத்திலும் என் தகுதிக்கேற்ற, பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என்பதற்கும், என்னால் என் உடன் பணியாற்றியவர்களைப் போல் மென்மேலும் உயர முடியாமைக்கும் முதற்காரணம் இந்தக் காது கேளாமைதான்.. என் வாழ்க்கையின் ஒரு பகுதியையும் சீரழித்துவிட்டது..

//இம்சை said...
Thanks sir, I will now avoid hearing songs in ear phone.//

குட்.. ear phone மாட்டிருக்கிறவங்களை எங்க பார்த்தாலும் ஒரு வார்த்தை இதைப் பத்திச் சொல்லிருங்க.. புண்ணியம் கிடைக்கும்.

//வடுவூர் குமார் said...
உண்மைதமிழரே! அப்படியே தியேட்டர் போய் படம் பார்க்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடலாம். நான் சிங்கையிலும் சரி,ஊரிலும் சரி.. காது அடைப்பானுடன் தான் படம் பார்ப்பேன். என்ன சவுண்டு,என்ன சவுண்டு!!//

DTS என்று சொல்லி சலம்பல் செய்கிறார்கள். ஆனால் காது போன பின்பு இதுவா காப்பாற்றப் போகிறது? கவனம் தேவைதான்.. ஆனால் அரசுகள்தான் இதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். செய்வார்களா?

//எலும்பு மாற்று சிகிச்சைக்கு 8 ல வா?!//

ஆமாம்.. நம் காதை ஸ்கேன் செய்து அளவெடுத்து அதே போல் ஏதோ ஒரு பீஸில் அந்த எலும்பைத் தயார் செய்து தற்குள் காது கேட்கும் கருவியை மிகச் சிறிய அளவில் ஒளித்து வைத்து பின்பு அதை பாதிக்கப்பட்டவருக்குப் பொருத்துவார்களாம்.. ஆகாதா பின்ன..?

//SurveySan said...
அடக் கொடுமையே. பகிர்ந்தமைக்கு நன்றி. டி.வி. ஒலி ஒரு 5 டெஸிபல் கொறச்சுட்டேன். நல்ல புத்திமதி! உங்களுக்கும், ஆண்டவன் அருளாலோ, $ அருளாலோ, விரைவில், குணமடைய வாழ்த்துக்கள்.//

குறைச்சிருங்கோ.. நல்லதுதான்.. துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்ற மாதிரி இதைப் பார்த்து சுதாரிப்பா இருக்குறதுதான் நமக்கு நல்லது.

லக்கிலுக் said...

மிக மிக நெகிழ்ச்சியான பதிவு!

நீங்கள் காமெடி நடையில் எழுதியதா நினைத்துக் கொண்டிருந்தாலும் சில வரிகள் கண்களில் நீர் பனிக்க வைக்கிறது! :-(

வண்டி ஓட்டும்போது எப்போதும் Earphoneல் எப்.எம். கேட்பது என் வழக்கம். இனி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
மிக மிக நெகிழ்ச்சியான பதிவு! நீங்கள் காமெடி நடையில் எழுதியதா நினைத்துக் கொண்டிருந்தாலும் சில வரிகள் கண்களில் நீர் பனிக்க வைக்கிறது! :-(//

நன்றி தம்பி.. மிக்க நன்றி..

//வண்டி ஓட்டும்போது எப்போதும் Earphoneல் எப்.எம். கேட்பது என் வழக்கம். இனி நிறுத்திக் கொள்ள வேண்டும்.//

தப்புடா ராசா.. ரொம்பத் தப்பு.. இப்ப ஒண்ணும் தெரியாது.. வயதான பின்புதான் அது வேலையைக் காட்டும். இப்போதே நாம் அதைத் தவிர்ப்பது, வயதான அந்த நாட்களில் ஒரு கூடுதல் ஆயுதம்போல் நமக்கு பெரும் உதவியாக இருக்கும்..

துளசி கோபால் said...

இந்தியாவிலே மக்கள்ஸ் டிவி வைக்கும் சத்தத்துலே யாருக்காவது காது கேட்டாத்தான் ஆச்சரியம்.
தான் கேக்கறது ஊருக்கே கேக்கணும் என்ற நல்ல எண்ணம்தான்.

பத்திரம். இனியாவது கொஞ்சம் கவனமா இருங்க.

படிக்கறப்ப வருத்தமா இருந்துச்சு(-:

siva gnanamji(#18100882083107547329) said...

pHYSICALLY DISABLED நண்பர்கள் தமது
வரிவிதிப்பிற்குரிய (taxable income)
வருமானத்திலிருந்து ரூ.40000 கழித்துக்கொண்டு மீதத்தொகைக்குமட்டும் வரிசெலுத்தலாம்.
கேட்கும்திறன் குறிப்பிட்ட சதவிகிதத்திற்குக் குறைந்து விட்டதாக
ENT Surgeon இடம் சான்றிதழ் பெற்று
அதன் நகலை வருமானவரிஅறிக்கை
(Incometax returns)யுடன் இணைக்க
வேண்டும்...
வெகுவிரைவில் வருமானவரி செலுத்துமளவிற்கு உங்கள் வருமானம்
உயரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
இந்தியாவிலே மக்கள்ஸ் டிவி வைக்கும் சத்தத்துலே யாருக்காவது காது கேட்டாத்தான் ஆச்சரியம். தான் கேக்கறது ஊருக்கே கேக்கணும் என்ற நல்ல எண்ணம்தான். பத்திரம். இனியாவது கொஞ்சம் கவனமா இருங்க. படிக்கறப்ப வருத்தமா இருந்துச்சு(-://

டீச்சர்.. எங்க ஊருல எந்த வீட்லயாவது டிவி சவுண்ட் அதிகம்னா நீங்க சத்தியமா நம்பிரலாம் அந்த வீட்ல காது கேட்காத பார்ட்டி ஒண்ணும் இருக்குன்னு..

கிராமப்புறம் போய்ப் பாருங்க.. ஊர்ல எல்லா வீட்லேயும் சவுண்ட் ஜாஸ்தியாத்தான் இருக்கும். வயதானவர்களுக்காக வைக்கப்படும் சவுண்ட் அது. நாங்களும் பாதிக்கப்படப் போகிறோம் என்பது புரியாமலேயே செய்யும் தவறு இது.. மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை அரசுகள்தான் அளிக்க வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

//sivagnanamji(#18100882083107547329) said...
PHYSICALLY DISABLED நண்பர்கள் தமது வரி விதிப்பிற்குரிய (taxable income) வருமானத்திலிருந்து ரூ.40000 கழித்துக் கொண்டு மீதத் தொகைக்கு மட்டும் வரி செலுத்தலாம். கேட்கும் திறன் குறிப்பிட்ட சதவிகிதத்திற்குக் குறைந்து விட்டதாக ENT Surgeon இடம் சான்றிதழ் பெற்று அதன் நகலை வருமானவரி அறிக்கை(Incometax returns)யுடன் இணைக்க வேண்டும்...//

நல்ல பயனுள்ள தகவல் ஸார்.. மிக்க நன்றி..

//வெகு விரைவில் வருமானவரி செலுத்துமளவிற்கு உங்கள் வருமானம் உயரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.//

ஆஹா.. உங்களைப் போன்ற அன்பர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தருகின்ற நம்பிக்கையில்தான் எங்களைப் போன்றவர்களின் வாழ்க்கையே ஓடிக் கொண்டிருக்கிறது.. நன்றி.. நன்றி.. தங்களது வாழ்த்துக்கள் பலிக்க வேண்டுமென்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

வெங்கட்ராமன் said...

வருத்தமான விஷயம் தான் இருந்தாலும், மற்றவர்கள் விழிப்படைய வேண்டும் என்று எழுதிய உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி.

அலுவலகத்தில் ஹெட்செட்டில்் பாட்டு கேட்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள முயல்கிறேன்.

நன்றி.

வவ்வால் said...

head set இல் பாட்டு கேட்பதால் செவித்திறன் அதிகம் பாதிக்காது என நினைக்கிறேன். ஏன் எனில் அவை எல்லாம் இத்தனை டெசிபல் தான் ஒலி உற்பத்தி செய்ய வேண்டும் எனத்தரக்கட்டுப்பாடுடன் வருகிறது. காதுக்கு தீங்கு நேராத அளவு தான் ஒலி வரும். ஆனால் திறந்த காதுகளுடன் இருக்கும் போது புற ஒலிகளால் தான் அதிகம் பாதிக்கபடுகிறது காது.திடீர் என அருகில் வரும் ஒரு வாகனம் ஒலிக்கும் ஏர் ஹாரன் சத்தம் போதும் காதை பங்சர் பண்ண.

சில சமயங்களில் இப்படிப்பட்ட காது(head phone) ஒலிப்பான்கள் தான் புற ஓசைகளில் இருந்து என் காதை காப்பாற்றி வருகிறது எனக்கூட நினைப்பேன்.சாலையில் போகும் போது நம்ம ஆட்கள் அடிக்கும் ஒலிப்பான் சத்தம் நாளு நாள் கேட்டால் போதும் காது கேட்காது.

உண்மைத்தமிழன் said...

//கட்ராமன் said...
அலுவலகத்தில் ஹெட்செட்டில்் பாட்டு கேட்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள முயல்கிறேன். நன்றி.//

இதைத்தான் ஸார் நான் எதிர்பார்த்தேன்.. புரிந்து கொண்டமைக்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
head set இல் பாட்டு கேட்பதால் செவித்திறன் அதிகம் பாதிக்காது என நினைக்கிறேன். ஏன் எனில் அவை எல்லாம் இத்தனை டெசிபல் தான் ஒலி உற்பத்தி செய்ய வேண்டும் எனத் தரக்கட்டுப்பாடுடன் வருகிறது. காதுக்கு தீங்கு நேராத அளவு தான் ஒலி வரும். ஆனால் திறந்த காதுகளுடன் இருக்கும் போது புற ஒலிகளால்தான் அதிகம் பாதிக்கபடுகிறது காது. திடீர் என அருகில் வரும் ஒரு வாகனம் ஒலிக்கும் ஏர் ஹாரன் சத்தம் போதும் காதை பங்சர் பண்ண.//

வவ்வால்ஜி இங்கனதான் நீங்க தப்பு பண்றீங்க..? head set-ல் பாடல் கேட்பதால் ஒலி நேராக செவிகளுக்குள் உட்புகுந்து அதன் செவி எலும்புகளை அடைகிறது. அந்த செவி கேட்பு எலும்பின் திறன் வன்மையாக இருந்தால் அதுவே ஓரளவுக்குத்தான் தாங்கும்.. நீங்கள் தொடர்ந்து 3 மணி நேரம் அதை காதில் மாட்டியிருந்தால் அதன் ஒலியின் தாக்கம் அந்த எலும்பைத் தாக்கக்கூடியதாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த இடத்தில்தான் நானும் தவறுகள் செய்தேன்.

ஏனெனில் எனக்கோ ஏற்கெனவே அந்த செவித்திறன் கேட்பு எலும்பின் சக்தி குறைவு. அந்த நேரத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கேட்டேன் பாருங்க.. அந்தச் சம்மட்டி அடித் தாக்குதலுக்கு அந்த எலும்பால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனுடைய கேட்கும் சக்தி குறைந்து கொண்டே போக ஆரம்பித்து இப்போது எனது இரு காதுகளிலுமே 75 சதவிகிதம் அவுட்.

அந்த செவித்திறன் கேட்பு எலும்பின் சக்தி வல்லமையாக இருந்தாலும் இது போன்ற நேரடித் தாக்குதலால் பாதிக்கப்பட்டால் வயதான பின்பு அதாவது 60 வயதுக்கு மேல் ஏதாவது ஒரு காதிலாவது அந்த எலும்பின் சக்தி குறையும் வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது என்கிறது மருத்துவம்.

அதனால்தான் வருமுன் காப்போம் என்று சொன்னேன்.. அனைத்து வகை ஒலிகளுமே ஆபத்தானவைதான் ஸார்..

//சில சமயங்களில் இப்படிப்பட்ட காது(head phone) ஒலிப்பான்கள்தான் புற ஓசைகளில் இருந்து என் காதை காப்பாற்றி வருகிறது எனக்கூட நினைப்பேன். சாலையில் போகும் போது நம்ம ஆட்கள் அடிக்கும் ஒலிப்பான் சத்தம் நாழு நாள் கேட்டால் போதும் காது கேட்காது.//

வவ்வால்ஜி.. காது ஒலிப்பான்களிலிருந்து வெளிப்படும் ஒலி நேராக நமது காதுக்குள் சென்றடைகிறது. வேறு இடங்களுக்குத் திசை மாற வாய்ப்பே இல்லை. அதனுடைய வீரியமான சக்தி முட்டி மோதுவது நமது காதுகளில் இருக்கும் எலும்புகளில்தான்.

ஆனால் புற ஓசைகளில்இ இருந்து வரும் சப்தங்கள் வெளியில் சிதற நிறைய வாய்ப்புண்டு. உதாரணமாக அருகில் சுவர்இ இருந்தால்கூட அதன் மீது அந்த ஒலி விழும். இப்படி ஒலிச்சிதறலுக்குப் பிறகுதான் நமது காதுகளை அந்த ஒலி வந்தடையும். இப்போது அந்த ஒலியின் தாக்கம் சிறிதளவாவது குறைந்திருக்கும். ஆனால் காது ஒலிப்பான்களின் ஒலியை நாம் மட்டுமே முழுசாக முழுங்குகிறோம்.

தயவு செய்து அதையும் விட்டுவிடுங்கள்.. அவ்வப்போது என் கையை வைத்து தொங்குகின்ற வயரை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு எரிச்சலாகும்போது எனக்கு வருகின்ற கோபம் இருக்கிறது பாருங்கள்.. இப்போது உங்களுக்கு வரும் கோபத்தைவிட அதிகம். அதனால்தான் சொல்கிறேன்.. நீங்கள் யாருமே இப்போது மட்டுமல்ல. எப்போதுமே இந்தத் துன்பத்திற்கு ஆளாகக் கூடாது.

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தான் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//delphine said...
நீங்கள் காமெடியாக எழுதியிருந்தாலும், மனதிற்கு கஷ்டமாக இருக்குது. பகிர்ந்தமைக்கு நன்றி.//

டாக்டர் மேடம் நிச்சயம் நான் இதை காமெடியாக எழுதவில்லை. எந்தக் கோவிலுக்கு வேண்டுமானாலும் வந்து சத்தியம் செய்யத் தயார். ஆனால் எப்போதுமே இப்படித்தான் எழுதுவேன்.. நான் எவ்வளவு சீரியஸ் விஷயத்தை எழுதினாலும் எல்லோருமே காமெடியாக இருக்கிறது என்கிறார்கள். நான் அழுகிறேன் என்று எழுதினால்கூட அப்படித்தான் நினைப்பார்களோ என்னவோ..? படிப்போரை அழுக வைக்கும் விதமாக உருக்கமாக எப்படி எழுதுவது..? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்..

ஆனாலும், உங்களது கள்ளங்கபடமில்லா மனதை(உபயம் : உங்களுக்குப் பிரியமான ஹிட்லர் தம்பி) கஷ்டப்பட வைத்ததற்காக நான் வருந்துகிறேன்..

Subbiah Veerappan said...

1.உண்மைத்தமிழனின் பதிவு
////செவித்திறன் குறைவு பற்றி அதிகம் தெரியாது.
ஆனால் காதில் கம்பியை மாட்டிக் கொண்டே அலையும் இந்தியாவின்
வருங்காலச் சமுதாயம் சீரழியப்போவது உறுதி.///

நச்'சென்ற வரிகள்.

சோகத்திலும் ஒரு சுகம் உண்டு' என்பார் கண்னதாசன்

நீங்கள் உங்கள் சோகத்தைச் சுகமாக்கிக் கொண்டு பதிவில்
எழுதிக் கலங்க வைத்துவிட்டீர்கள். கண்கள் பனித்துவிட்டன

மனஉறுதி கொண்டமைக்கு என்னுடைய இருகரம்கூப்பி வணங்குகிறேன்

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
சோகத்திலும் ஒரு சுகம் உண்டு' என்பார் கண்னதாசன். நீங்கள் உங்கள் சோகத்தைச் சுகமாக்கிக் கொண்டு பதிவில் எழுதிக் கலங்க வைத்துவிட்டீர்கள். கண்கள் பனித்துவிட்டன. மனஉறுதி கொண்டமைக்கு என்னுடைய இருகரம்கூப்பி வணங்குகிறேன்.//

வாத்யாரே.. எனக்கும் கண்ணதாசன்தான் வழிகாட்டி. தான் துன்புற்று பிறரை எச்சரிக்கை செய்து வாழ வைத்துள்ளான் பாருங்கள்.. அவனை இந்த அவனியில் மிஞ்ச யாரும் கிடையாது.. அனுபவமே வாழ்க்கை.. அனுபவமே இறைவன்..

கோவி.கண்ணன் said...

:-(

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...

- இராஜாஜி

உண்மைத்தமிழன் said...

//கோவி.கண்ணன் said...
:-( குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...
- இராஜாஜி//

உண்மை கோவியாரே..

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.." என்றார் கண்ணதாசன்..

ஆன்மிகம், நிச்சயம் மனிதர்களின் மனதுக்கு ஒரு அரிய மருந்துதான்..

sen said...

தங்கள் அறிவுரைக்கு என் மனமார்ந்த நன்றி..
இன்றுமுதல் நானும் என்னால் முடிந்த அளவிற்கு உங்களுடைய அனுபவத்தை என் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்..!!

abeer ahmed said...

See who owns skincarebeautyproducts.co.uk or any other website:
http://whois.domaintasks.com/skincarebeautyproducts.co.uk