துணை ஜனாதிபதி தேர்தல்-ஒரு கண்ணோட்டம்


11-08-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சப்தமில்லாமல், ஆரவாரமில்லாமல் துணை ஜனாதிபதி பதவிக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஆளையும் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.


அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் என்ற பூதாகாரப் பிரச்சினையின் பின்னால், இந்நிகழ்ச்சியின் ஆரவாரம் சற்று மங்கிப் போனது என்னவோ நிஜம்தான்..


இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டனர். இரு அவைகளிலும் உள்ள மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 788.


சிறையில் இருந்த எம்.பி.க்களான ராஜேஷ் ரங்கன் என்கிற பப்புயாதவ், அப்சல் அன்சாரி, முகமது சகாபுதீன், பாபுபாய் கதாரா ஆகிய எம்.பி.க்கள் உட்பட 762 பேர் ஓட்டுப் போட்டனர். இதில் 10 ஓட்டுக்கள் இந்திய அரசியல் பாரம்பரியத்தின்படி செல்லாததாகிவிட்டதால் மொத்த செல்லுபடியான ஓட்டுக்கள் 752.


இதில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரிக்கு 455 ஓட்டுக்களும், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர் திருமதி நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 222 ஓட்டுக்களும், மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்துக்கு 75 ஓட்டுக்களும் கிடைத்தன.

ஒரு வேட்பாளர் வெற்றி பெற 377 எம்.பி.க்களின் ஓட்டுக்களே போதுமானது.


பாராளுமன்றத்தில் தற்போதைய காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், அன்சாரிக்கு 424 ஓட்டுக்கள்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு 31 ஓட்டுக்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளது.

இது பாரதீய ஜனதா கூட்டணி மற்றும் மூன்றாவது அணி எம்.பி.க்கள் அன்சாரிக்கு ஆதரவாக கட்சி மாறி ஓட்டுப் போட்டதால் கிடைத்ததாகத் தெரிய வந்துள்ளது.

10 செல்லாத ஓட்டுக்களில் 6 ஓட்டுக்கள் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு ஆதரவாக விழுந்தவை. 3 ஓட்டு அன்சாரிக்கு ஆதரவாக விழுந்தவை. 1 ஓட்டு ரஷீத் மசூத்திற்கு ஆதரவானது.

இது குறித்து பேசிய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, "நாங்கள் 463 ஓட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 5 பேர் ஓட்டு போட வரவில்லை. 3 ஓட்டுக்கள் செல்லாததாகிவிட்டது. பாரதீய ஜனதாவிடம் இருந்துதான் எங்களுக்கு கூடுதல் ஓட்டு வந்தது. இதற்கான காரணத்தை வெளியே கூற முடியாது. அது எங்களது தேர்தல் வியூகத்தின் ரகசியமாகும்.." என்று சொல்லியிருக்கிறார்.

பாரதீய ஜனதா எம்.பி. நாராயணசாமி கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற ஓட்டுக்களைவிட இந்த முறை 10 ஓட்டு குறைவாகப் பெற்றுள்ளது(!). ஜனாதிபதி தேர்தலின்போது சிவசேனையும், திரிணாமூல் காங்கிரஸ¤ம் அவர்கள் பக்கம் இல்லை. இப்போது அவர்கள் ஆதரித்த பிறகும்கூட குறைந்த ஓட்டுக்களே வாங்கியுள்ளனர்.." என்று குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதவிதமாக சொல்லியுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் 3 அணியினருமே முஸ்லீம் வேட்பாளர்களையே நிறுத்தியிருந்தனர். முதலில் காங்கிரஸ் கூட்டணியும், மூன்றாவது அணியும் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால், வேறு வழியில்லாமல் பாரதீய ஜனதாவும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது.

இது அந்தக் கட்சியில் உள்ள தீவிர இந்துத்துவா ஆதரவாளர்களுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதாம். இதன் காரணமாகவே வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்து யோகி தித்தியநாத் உட்பட 2 எம்.பி.க்கள் ஓட்டுப் போட வராமல் புறக்கணிப்பும் நடத்தியிருக்கிறார்கள்.

ஓட்டுப் போடாதவர்கள் பட்டியலில் திரைப்பட நடிகர்கள் கோவிந்தா, தர்மேந்திரா, தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அஜீத்பாஷா கியோர் இடம் பெறுகிறார்கள்.

அரசு சலுகையைப் பயன்படுத்தி தலைநகருக்கு வந்து செல்லாத ஓட்டுக்களாகப் போடுவதற்குப் பதிலாக, வராமலேயே இருந்துவிட்டால் அந்தச் சலுகைக்குரிய பணமாவது மிச்சமாகுமே..

இதற்காகவே, ஓட்டுப் போட வராத எம்.பி.க்களுக்கு ஒரு 'ஓ' போடுவோம்..!