ஆகஸ்ட்-5-பட்டறை-எனது டைரி குறிப்பு-1

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அறிமுகம்

ஆகஸ்ட் 4.

மதியம் ஆபீஸில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தபோது உலக அதிசயமாக கூகிள் டாக்கில் வந்தார் தம்பி பாலபாரதி.

"அண்ணே.. பட்டறை வேலைக்குத் தன்னார்வத் தொண்டர்கள் உடனடியா தேவை.." என்றார். என் நிலைமையைச் சொன்னேன்.. "ரெண்டு நாளா குளிர் காய்ச்சல் வந்து லீவு. அதுக்கப்புறம் ரெண்டு நாள் பெர்மிஷன் வேற எடுத்திருக்கேன். இன்னிக்கு சீக்கிரம் கிளம்ப முடியாது"ன்ணேன்.. "சரி. அப்ப... சாயந்தரமா பல்கலைக்கழகத்துக்கு வந்திருங்க என்றார் பாலா. "நான் நேரா வித்லோகாவே வந்தர்றேன்.. அங்க இருந்து ரெண்டு பேரும் சேர்ந்தே போயிரலாம்.." என்றேன்.

அலுவலகத்திலிருந்து மாலை 6 மணிக்கு கிளம்பி வித்லோகா சென்றேன். உள்ளே ஆன்மிகச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. "நல்ல விஷயம்.. இதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும் தம்பி.." என்று பாலாவை வாழ்த்தினேன்.. "ங்கொய்யால.." என்று தன் கண்களாலேயே என்னைத் திட்டிவிட்டு, "நீங்க முன்னாடி போங்கண்ணேன்.. நான் கடையை மூடிட்டு வர்றதுக்கு லேட்டாகும்.." என்றார். அதுவும் சரிதான் என்று நினைத்து பல்கலைக்கழகம் வந்தேன்.

அங்கே காலேஜ் புரொபஸர் ஒருவர் கையில் மார்க்கர் ஒன்றை வைத்துக் கொண்டு போர்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது 'ஓசை செல்லா' என்று.

உடன் தன் உடன்பிறவா சகோதரனான மடிக்கணினியை மடியில் அமர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தார் மா.சி. அருகில் ஒரு இளைஞி. பின்புறம் தம்பி வினையூக்கி. அவரருகில் ஜே.கே. செல்லாவின் அருகில் விக்கி. உடன் அருள்குமார்.

அறிமுகம் முடிந்ததும் அவர்களுடைய பேச்சு வார்த்தை தொடர்ந்தது. யார், யாருக்கு எந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம் என்று பேசத் துவங்கினார்கள்.

இடையில் அந்த இளைஞியிடம் "நீங்கதான் கவிதாவா..?" என்றேன்.. "இல்ல ஸார்.. எனக்கு கவிதா யாருண்ணே தெரியாது.." என்றார். "அப்புறம்..?" என்றேன்.. "நான் ஜெயா.." என்றார். "ஜெயாவா..? கேள்விப்பட்டதே இல்லையேம்மா.." என்றேன். "நான் ரொம்ப rare-ஆகத்தான் பதிவு போடுவேன். 'அகமும் புறமும்' என்பது எனது வலைப்பூவின் தலைப்பு.." என்றார். "நான் பார்த்ததே இல்லம்மா..." என்றேன்.

தம்பி வினையூக்கி பின்னால் வந்து அமரும்படி சொன்னார். அருகில் போனேன். அமர்ந்தவுடனேயே "போன வாரம் போன் பண்ணி நான் என்ன சொன்னேன்? ஏதாவது பதிவு போடுங்கன்னு சொன்னேன்ல.. ஏன் போடலை..?" என்றார் கோபத்துடன். என்னத்த சொல்றது? "இல்லப்பா.. நேரமில்லை.." என்றேன். "அப்ப கமெண்ட்ஸாவது போடலாம்ல.." என்றார். "அதுக்கும் நேரமில்லப்பா.." என்று சொல்லிச் சிரித்தேன். 'ஐய்ய. அழகு வடியுது..' என்ற தோரணையில் நொந்து கொண்டார் தம்பி வினையூக்கி.

அதற்குள் செல்லாவும், மா.சி.யும் அவரவர் மடிக்கணினிகளை சோதனை செய்து முடிக்க.. மாடிக்குப் போகலாம் என்று அழைத்தார்கள். அங்கே சென்றோம். இரண்டு அறைகளிலும் கம்ப்யூட்டர்களை பரப்பி வைத்திருந்தார்கள். வினையூக்கி அனைத்தையும் ஆர்வமாகப் பார்த்துவிட்டு "நாளைக்கு நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.." என்று மா.சி.யின் தலையில் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார்.

செல்லா என்னையும், வினையூக்கியையும் அமர வைத்து தன் செல்பேசியில் பதிவு செய்து கொண்டார். இடையில் திடீரென்று உள்ளே பிரவேசித்தார் அருமை உடன்பிறப்பு லக்கிலுக். அவருடன் அவருடைய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். "ஹாய்" என்றேன்.. "ஹலோ.." என்றார் லக்கி.. அவ்வளவுதான். தொடர்ந்து நா.ஜெய்சங்கர் வந்து கட்டியணைத்துக் கொண்டார். நா.ஜெ. ஏதோ பெரிய திட்டத்தோடுதான் வந்திருக்கிறார் என்பது எனக்கு மறுநாள்தான் தெரிந்தது.

மறுபடியும் கீழே வந்தோம். "வருபவர்களுக்கு கொடுப்பதற்கான கிப்ட் பைகளை நிரப்ப வேண்டும்.." என்றார் மா.சி. இந்த நேரத்தில் தம்பி நந்தா எங்கோ வெளியில் சென்று அலைந்து, திரிந்த களைப்புடன் வந்து சேர்ந்தார். "உங்களை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.." என்று நந்தாவிடமே கேட்டேன். தம்பி ரொம்ப டிஸ்டர்ப்பாகிவிட்டார். "என்னையும் மறந்திட்டீங்களா.." என்றார் தம்பி.

தொடர்ந்து நான், மா.சி., நா.ஜெய்சங்கர், அருள்குமார், நந்தா நால்வரும் தரையில் அமர்ந்து கிப்ட் பையை நிரப்ப ஆரம்பித்தோம். இடையில் 'சரக்கு' அடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஓசை செல்லா நழுவப் பார்த்தார். மா.சி. அவரையும் இழுத்துப் பிடித்து அமர வைத்துவிட்டார்.

இடையில் ஜெயா தனது அம்மாவுக்கு போன் செய்து, "இப்ப வந்தர்றேம்மா.. பத்து நிமிஷத்துல கிளம்பிருவேம்மா.." என்று பொறுப்பாகப் பதில் சொன்னவர், பட்டறைக்கான பேனரை இந்த இடத்தில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு போன் நம்பரை எழுதிக் கொடுத்தார். கூடவே, "பணம் கொடுக்க வேண்டாம்.." என்று பத்து முறை அழுத்தி, அழுத்திச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

கிப்ட்களை நாங்கள் நிரப்பிக் கொண்டிருக்க.. அந்த நேரம் புயலாய் உள்ளே நுழைந்தார் பொன்ஸ். கை நிறைய பைகளோடு ஷாப்பிங் போய்விட்டு வந்தவர் என்னைப் பார்த்ததும் "வாங்க.. வணக்கம்.." என்று கொங்கு பாஷையில் வரவேற்றார்.

"ஏன் நீங்க பதிவே போட மாட்டேங்குறீங்க.. எல்லாரும் எங்களையே கேக்குறாங்க..." என்றார். வழக்கம்போல எல்லாவித பொய்களையும் சேர்த்துச் சொல்லி அப்போதைக்கு தப்பித்தேன்..?

இடையில் மா.சி. பேனர் வாங்க வேண்டும் என்று ஞாபகப்படுத்த செல்பேசியில் அட்ரஸ் கேட்டுக் கொண்டு நானும், நந்தாவும் என்னுடைய வண்டியில் ஆழ்வார்பேட்டை கிளம்பினோம்.

வழி தவறி வேறொரு ரோட்டிற்குச் சென்று அங்கிருந்து போன் செய்து, மீண்டும் வேறொரு ரோட்டிற்குச் சென்று அங்கிருந்து போன் செய்தோம். இருந்த இடத்தைச் சொன்னதால், "அங்கேயே இருங்க.. கடைப் பையனை வரச் சொல்றேன்.." என்றார் கடைக்காரர்.

கடைப் பையனை நாங்கள் கண்டுபிடித்து "அப்பாடா கண்டுபிடிச்சாச்சுடா ராசா.." என்று நிம்மதியோடு வண்டியில் ஏறி உட்கார.. எனது வண்டியின் பின் டயர் பஞ்சர்.

'சரி.. முருகன் காலைல இருந்தே நம்மகிட்ட பேசலையே.. வந்துட்டானா..' என்று நினைத்துவிட்டு நந்தாவை கடைப் பையனோடு அனுப்பிவிட்டு நான் வண்டியைத் தள்ளிக் கொண்டே சென்று டூவீலர் கடையைத் தேடினேன்.

ஒரு பத்து நிமிடம் வண்டியைத் தள்ளியவுடன் ஒரு கடை இருந்தது. அங்கேயோ கடைப் பையன்கள் "முடிஞ்சிருச்சுங்க.. நாளைக்குத்தான்.." என்றார்கள் ஒரே போடாக.. "நூறு ரூபா தர்றேன்பா.." என்றேன்.. அலட்சியமாக, "வேணாம் ஸார்.. நாங்க வீட்டுக்குப் போகணும்.." என்றார்கள். "ரொம்ப தூரம் போகணும்பா.." என்றேன்.. "வேற இடம் பாருங்க ஸார்.." என்று தீட்சண்யமாகச் சொல்லிவிட மீண்டும் தள்ளு வண்டிதான்..

இந்த முனையில் இருந்து அந்த முனைவரை வியர்வையில் குளித்தபடியே தள்ளிக் கொண்டு வந்தவன் நேரத்தைப் பார்த்தேன். மணி 10. இனி அவ்வளவுதான்.. ஆட்டோ புடிச்சு 500 ரூபாவுக்கு செலவுதான் என்று நினைத்து காளியப்பா மருத்துவமனை அருகே வந்து சோர்வாக நின்றேன்.

அங்கேயிருந்த பிளாட்பாரத்தில் தன் கையைத் தலகாணியாய் பாவித்து படுத்தபடியே என் பரிதவிப்பை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனநோயாளி(என்று நினைக்கிறேன். காரணம், அவ்வளவு துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருந்தார்) வேகமாக எழுந்தவர் என் அருகில் வந்து, "இப்படியே திரும்பிப் போய்கிட்டே இரு. ஒரு போலீஸ் பூத் வரும். அது பக்கத்துல ஒரு கடை இருக்கு.. Twenty four hour-non stop workshop. இப்ப இருக்கும். சீக்கிரமா போ.." என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் அதே பிளாட்பாரத்தில் போய் படுத்துக் கொண்டு போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டு எதையோ சொல்லி பிதற்ற ஆரம்பித்தார்.

என்னுடைய உள்ளுணர்வு எனது 10 ஆண்டு கால அனுபவத்தால் 'அவன் சொன்ன இடத்திற்குப் போ' என்றது. 10 நிமிட தள்ளுதலுக்குப் பிறகு அங்கு சென்று பார்த்தால், நிஜமாகவே அங்கே ஒரு கடை இருந்தது. கடைக்காரர் என்னைத்தான் எதிர்பார்த்திருந்திருப்பாரோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரெடியாகவே இருந்தார். மெய்சிலிர்த்துப் போனேன் அந்த மனநோயாளியை நினைத்து...

முருகன் அவ்வப்போது என்னைச் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான். சோதனையைக் கொடுத்து உடன் தீர்வையும் அவனே சொல்லுவான். இது எனது வாழ்க்கையில் அன்றாடம் நான் சந்திக்கும் நிகழ்வு. முருகன் இன்னிக்கு இந்தக் 'கோலத்துக்கு' இறங்கிட்டானே என்று நினைத்து என் கண்ல தண்ணியே வந்திருச்சு.. முருகா..

பஞ்சர் ஒட்டிக் கொண்டிருக்க.. அதற்குள் நந்தா பேனரை வாங்கிக் கொண்டு ஒரு கிலோமீட்டர் நடந்து போயே போய்விட்டார். மறுபடியும் போனில் அழைத்து இடத்தைச் சொல்லி வரவழைத்தேன்.

கையில் பேனருடன் கூடவே அரங்கத்தில் இருப்பவர்கள் சாப்பிடுவதற்கென்று ஸ்நாக்ஸையும் சேர்த்தே வாங்கி வந்திருந்தார் நந்தா. பாசம் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு..

பசி கொஞ்சமாக வயிற்றைக் கிள்ளியிருந்ததால் எதிர்க் கடையில் ஒரு பால் குடித்துக் கொண்டிருக்கும்போது நந்தாவின் போனில் மா.சி. "நாங்க வீட்டுக்குப் போறோம். நீங்க வந்து பேனரை வைச்சுட்டு கிளம்பிருங்க.." என்றார். நந்தா பார்சலை கையில் வைத்துக் கொண்டு பரிதாபமாகப் பார்த்தார்.

வேறொரு சமயம் என்றால் நானே சுட்டிருப்பேன். இப்போது அந்த பழி பாவம் எனக்கு வேண்டாம் என்பதால் "வீட்டுக்குக் கொண்டு போய் சாப்பிடுங்க.." என்றேன். இதைத்தான் மறுநாள் பட்டறை முடிந்த பிறகு நான், நந்தா, மா.சி. செல்லா, ஜே.கே. என்று சிலர் மட்டும் வெட்டினோம்..

மறுபடியும் நந்தாவை ஏற்றிக்கொண்டு பல்கலைக்கழகம் வந்தேன். அங்கே தம்பி ஜேகே மட்டுமே இருந்தார். கம்ப்யூட்டர்களை பொருத்திக் கொண்டிருந்தார். "இன்னும் கொஞ்ச நேரம் வேலையிருக்கு. முடிச்சிட்டு கிளம்பிருவேன். நீங்க போங்க.." என்றார் ஜேகே. அங்கே பேனரை வைத்துவிட்டு நந்தாவும், நானும் அவரவர் வண்டிகளில் வீட்டிற்குக் கிளம்பினோம்.

வீடு வந்து சேர்ந்தவுடன் முதல் வேலையாக மா.சி.க்கு போன் செய்து "நாளைக்கு காலைல 5.30 மணிக்கு மறக்காம எழுப்பி விட்ருங்க.." என்று கேட்டுக் கொண்டேன். "அதுக்குத்தான அவதாரம் எடுத்திருக்கேன் நான். செய்றேன்.." என்று பொறுப்பான பொறுப்பாளராகப் பதில் சொன்னார்.

இவரன்றோ பொறுப்பாளர்..?

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

7 comments:

வடுவூர் குமார் said...

இது உண்மைத்தமிழனின் உண்மைப்பதிவு.
கொஞ்சம் கால தாமதமாக வந்தாலும் நன்றாகவே சொல்லியுள்ளீர்கள்.

வவ்வால் said...

பதிவர் பட்டறையின் புதிய பதிப்பாக ஓடும் இந்த படமும் நல்லா இருக்கு ஆனா வெறும் செண்டிமென்ட் டிராக்காவே இருக்கே , கொஞ்சம் காமெடி டிரக் சேருங்க! அது பட்டறையில் பேசுறதா போட்டா தான வந்துரும்னு சொல்றிங்களா அப்போ ஓ.கே!

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
இது உண்மைத்தமிழனின் உண்மைப்பதிவு. கொஞ்சம் கால தாமதமாக வந்தாலும் நன்றாகவே சொல்லியுள்ளீர்கள்.//

நன்றி வடுவூரார் அவர்களே.. இது கமெண்ட்டு.. பழசை மறக்காம உடனே ஓடியாந்துட்டீங்க பாருங்க.. இது நட்பு.. வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
பதிவர் பட்டறையின் புதிய பதிப்பாக ஓடும் இந்த படமும் நல்லா இருக்கு ஆனா வெறும் செண்டிமென்ட் டிராக்காவே இருக்கே , கொஞ்சம் காமெடி டிரக் சேருங்க! அது பட்டறையில் பேசுறதா போட்டா தான வந்துரும்னு சொல்றிங்களா அப்போ ஓ.கே!//

வவ்வால்ஜி.. காமெடியை சேர்த்தா எல்லாமே காமெடியாயிரும்.. நீங்க சொன்ன மாதிரி பட்டறை காமெடியை நம்ம பதிவர்களே வரிசையா செஞ்சாங்க.. பின்னால வருது.. பொறுமையா படிங்க..

Nakkiran said...

1வது பாகம்...
படிச்சிட்டம்ல...

உண்மைத்தமிழன் said...

//Nakkiran said...
1வது பாகம்... படிச்சிட்டம்ல...//

1-வது பாகம்தான்.. ஆனா 2-வது தேங்க்ஸ்..

சொல்லிட்டோம்ல..

abeer ahmed said...

See who owns infibeam.com or any other website:
http://whois.domaintasks.com/infibeam.com