25-08-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது எனது வீடு இருந்த தெரு முழுவதும் வீட்டு வாசலில் அந்தந்த வீட்டுப் பெண்கள் குசுகுசுவென்று பேசியபடியே நின்று கொண்டிருந்தார்கள்.
வீட்டு வாசலில் நின்று அட்டெண்டெண்ஸ் கொடுத்துக் கொண்டிருந்த எனது அக்காவிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். "நம்ம கெளரியம்மா வீடு இருக்குல்லே. அதுல ஒரு டாக்டர் குடி வந்திருக்கார்.. இப்பத்தான் சாமான்லாம் வந்து இறங்குச்சு.." என்றார். அப்போதைய எனது வயதில் அது சாதாரண ஒரு விஷயம் என்றாலும், அதன் பின் அந்தத் தெருவிலும், என் வீட்டிலும் அந்த வீட்டைப் பற்றியும், அந்த டாக்டரைப் பற்றியும் பேசப்பட்ட பேச்சுக்கள் ஏதோ வானத்திலிருந்து வந்த ஒருவர்தான் அந்த டாக்டர் என்பதைப் போல் இருந்தது.
நாளாக, நாளாக அந்த டாக்டர் தொழில் மீதும், டாக்டர்கள் மீதும் சமூகத்தின் மிடில் கிளாஸ் மன்னர்களுக்கு இருக்கின்ற மரியாதையும், மதிப்பும் தெரிந்தது. ஒரு மருத்துவரை நாடி வருகின்ற சாமான்யனுக்கு அம்மருத்துவரே தெய்வம். அப்படித்தான் அவனும் நினைக்கின்றான். அரசு பொது மருத்துவமனைகளுக்குச் சென்று பாருங்கள்.. கண் கூடாகப் பார்க்கலாம்..
அந்த வெள்ளை கோட்டுக்கு இருக்கின்ற மரியாதையை மருத்துவமனைகளில் பார்த்தால், இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம் மனதில் தோன்றும்..
தெய்வத்திற்கு அடுத்த நிலை தெய்வமாகத் திகழும் மருத்துவத் தொழிலுக்கு இப்போது என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. வருங்கால இந்திய இளைஞர்கள் அதைப் புறக்கணிக்கவும் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இன்றோ, நாளையோ சாகக்கூடிய நிலையில் இருப்பவர்கள்கூட இன்றைக்கும் தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காமல் போய்விட்டதை அங்கலாய்க்காமல் இருப்பதில்லை. அவ்வளவு தூரம் நுழையவே கடினமான கல்லூரி மருத்துவக் கல்லூரி.. முடியவே முடியாது என்று கையில் காசில்லாமல் சத்தியம் செய்தவர்களே, இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இன்றைக்கு அதே கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார்கள்.
இந்தாண்டு ப்ளஸ்டூ முடித்து மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வான மாணவர்களில் 58 பேர் டாக்டர் சீட் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பொறியியல் கல்லூரிகளுக்குத் தாவியிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றபோது இதை நம்பலாமா வேண்டாமா என்று என் மனது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அப்படியென்ன மருத்துவப் படிப்புக்கு மவுசு குறைவு என்று பார்த்தால், கரன்ஸி நோட்டை மையமாக வைத்துத்தான் இந்த இடப்பெயர்ச்சி என்பது தெரிகிறது.
டாக்டர் படிப்பு ஐந்தரை வருடங்கள். முடித்துவிட்டு ஏதாவது ஒரு மருத்துவனையில் உதவி மருத்துவராகச் சேர வேண்டும். அல்லது தனியாக மருத்துவமனை வைக்கலாம். தனியாக வைத்தால் இப்போது தெருவுக்குத் தெரு மருத்துவர்களைப் போல், தெருவுக்குத் தெரு மருந்து கடைகளும் வந்துவிட்டன.
முன்பெல்லாம் மருந்துகளை மட்டுமே விற்றுக் கொண்டிருந்த மருந்து கடைகள் இப்போது மருத்துவர்களுக்கு கஷ்டம் வைக்காமல் தாங்களே பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் மருத்துவம் பார்க்கத் தொடங்கிவிட்டன. மருந்து கடைகளிலேயே தன் நோயைச் சொல்லி ஒரு மாத்திரையையோ, டானிக்கையோ வாங்கிக் கொண்டு வீடு செல்கிறது இன்றைய இளைய சமுதாயம். நேரத்திற்கும் நேரம் மிச்சம். பணத்திற்கு பணமும் மிச்சம் என்று இதற்கும் காரணம் சொல்கிறது அவசர யுகம்.
தனியாக மருத்துவமனை வைத்தால் மெட்ரோபாலிட்டன் நகர்களின் மத்தியப் பகுதிகளில் அதிகப்பட்சம் 50 முதல் 150 வரை கன்ஸல்டிங் பீஸ் வாங்கலாம். கிடைக்கும். கொஞ்சம் ஒதுக்குப்புறமாகச் சென்றால் 50 ரூபாயை டாக்டர்தான் கொடுத்து தன் மருத்துவமனைக்கு ஆள் பிடிக்க வேண்டும். ஆங்காங்கே 10, 20, 30 என்று புடவை கடை வியாபாரம் போல் ரேட்டைக் குறைத்துக் கொண்டு ஸ்டதெஸ்கோப்பைக் கையில் எடுத்தும் மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களுக்கு ஈடு கொடுத்து மருத்துவம் பார்க்க வேண்டுமெனில் 5 ரூபாய் கொடுத்தால்கூட அதை கோடியாக நினைத்து வாங்கினால்தான் அடுத்த நாளும் அந்த நோயாளி வருவார். இல்லையெனில் அந்த நோயாளியின் காம்பவுண்டில் குடியிருக்கும் ஒருவரும் வர மாட்டார்கள். பற்ற வைப்பதில் இந்த விஷயத்தில் மட்டும் மக்கள் ஒருவருக்கொருவர் வஞ்சகம் செய்வதில்லை.
ஒரு நாளைக்கு 10 பேர் வந்தாலும் அதிகபட்சம் 200 அல்லது 300 ரூபாய் தேறும். சில நாட்கள் அதுவும் இல்லை எனும்பட்சத்தில் ஒரு சாதாரண சராசரி மருத்துவரின் மாத வருமானம் அதிகபட்சம் 7000 ரூபாயிலிருந்து 9000 ரூபாய் வரைக்கும் வரும்.
அரசு மருத்துவமனை மருத்துவர் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு உண்டு. இதில் மதிப்பெண்ணே பிரதானம் என்பதால் போட்டிகள் அதிகம். தேர்வானாலும் சம்பளம் என்னவோ 15,000 ரூபாய்தான். மாலை வேளைகளில் இந்த மருத்துவர்களும் கிளினீக் வைத்தாலும்கூட ஒரு 9000 ரூபாய் சேர்த்து மொத்தம் 24000 என்று வைத்துக் கொள்ளலாம்..
அது சரி.. எத்தனையோ மருத்துவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களே? அது எப்படி? அவர்கள் மேற்படிப்பை முடிக்கிறார்கள். மேலும், மேலும் ஒரு குறிப்பிட்டத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு நிபுணர்களாக மாறுகிறார்கள். மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான இடங்களும் மருத்துவக் கல்லூரிகளில் குறைவு. இதற்கும் பலத்த போட்டிகள் உண்டு. நுழைவுத் தேர்வும் உண்டு. ஜெயிக்க வேண்டுமே.. ஈஸியாக ஜெயிக்கலாம் என்பதற்கு அதென்ன கந்த சஷ்டி கவசமா.. தினமும் காலை எழுந்து மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு..
ஒவ்வொரு புத்தகமும் தலைக்கு வைத்துத் தூங்கலாம் என்பதைப் போல் அத்தனை கனமாக உள்ளன. எப்படி படிக்கிறார்களோ என்பதைவிட எப்படித் தூக்குகிறார்கள் என்றே நான் நினைத்துள்ளேன்.
சில மருத்துவமனைகளில் கூட்டம் அலை பாய.. சிலவற்றில் காத்தாடும். எல்லாவற்றிற்கும் ஒரு ராசி உண்டு என்பார்கள். இந்த மருத்துவத் தொழிலில் மட்டுமே கைராசி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனது இளம் பிராயத்தில் எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வீரமணியும் அதே வகைப்பாட்டில் வந்தவர்தான். இவரிடம் சிகிச்சை பெற 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் கிராமத்தில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
இந்த ராசிக்காரர் என்ற பெயர் அனைவருக்கும் கிடைத்துவிடாதே.. "ஏதோ எமதர்மராஜனுக்கு இந்த டாக்டர் மச்சான் போல இருக்கு. இவர்கிட்ட வந்தா எமன் இப்போதைக்கு பக்கத்துலேயே வர மாட்டான்.." என்று நினைத்துத்தான் அனைவரும் தத்தமது கைராசி மருத்துவர்களிடம் ஓடுகிறார்கள். ஒரு நாள் அந்த கைராசிக்காரரே தனது மச்சானிடம் 'போய் சேர்ந்த' பிறகு 'ஏதோ சொத்து தகராறு ஆயிருச்சாம். எமன் முந்திக்கிட்டான்'னு என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அடுத்த கைராசி பட்டத்தை யாருக்குக் கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பிக்கிறது பொதுஜனம். இதுதான் நம் தமிழகத்தின் எல்லா ஊரிலும் நடக்கும் சாதாரண விஷயம்.
இன்னும் சில பணக்கார மருத்துவர்கள், பரம்பரை மருத்துவர்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஆஸ்பத்திரியை கட்டி வைத்துக் கொண்டு சாதாரண ஊசிக்கே முன்னூறு ரூபாய் கலெக்ஷன் செய்து கல்லாப் பெட்டியை நிரப்பிவிடுவார்கள். இன்னும் சிலர் உலகத்திலேயே என்னை மாதிரி பத்து பேர்தான் இருக்கோம். எல்லாருமே சிவனின் நேரடிப் பார்வையில் பிறந்தவர்கள் என்ற தோற்றத்தில் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பார்கள். தினமும் ஊர், ஊராகப் பறந்து சிகிச்சையளித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களைப் போல் அனைத்து மருத்துவர்களாலும் பறக்கவும் முடியாது. 'கைராசிக்காரன்' என்ற பெயரையும் பெற முடியாது.. ஆனாலும் சமூகத்தில் டாக்டர் என்ற சோஷியல் ஹீரோ பட்டத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் படும்பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.
ஆனால் பொறியியல் துறை அப்படியல்லவே. தெளிவாகத் தெரிந்துவிட்டது. அருமைப் புதல்வன் கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸ் செய்து விட்டாலே போதும், கம்பெனிக்காரனே நேரில் வந்து தூக்கிப் போய் தலையில் வைத்துக் கொள்வான். நாம் அவன் தலையில் உட்கார்ந்து கொள்வதற்கு, அவனே லம்பமாக 40000 ரூபாய் முதல் 50000 ரூபாய்வரைக்கும் எடுத்த எடுப்பிலேயே கொட்டுவான்.. நாமும் மகனை படிக்க வைக்கச் செய்யும் செலவை சீக்கிரத்திலேயே எடுத்துவிடலாம் என்று அனைத்து தகப்பனார்களும் கணக்குப் போட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
அதுதான் இந்தக் கட்சித் தாவலுக்குக் காரணம்..
ஒரு பக்கம் அப்பாவி மாணவர்கள், கல்விக் கட்டணம் என்ற அரக்கனைக் கையில் வைத்து பூச்சாண்டி காட்டும் கல்லூரிகள்.. கோடீஸ்வரர்களுக்கு ஒரு போன் தகவலை வைத்தே, கோடிகளை கடனாக கொட்டும் வங்கிகள், ஏழை மாணவர்களின் படிப்புக்கு 68 விதிமுறைகளையும், உத்தரவாதங்களையும் கேட்டுக் கழுத்தைப் பிடிக்கின்றன. அவர்கள் என்ன செய்வார்கள்? போட்ட காசை எடுக்க வேண்டாமா? சாதாரண மக்களை குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?
ஆக மருத்துவம் என்பது உயிர் காக்கும் புனிதமான துறை என்பதிலிருந்து மெல்ல, மெல்ல நழுவி காசு சம்பாதிப்பதில் இரண்டாம் இடம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. இதனால் யாருக்கு என்ன லாபம்?
ஏற்கெனவே தமிழகத்தின் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் பணியாற்றுவதையே மருத்துவர்கள் முதலில் வெறுக்கிறார்கள். அங்கே தனியாக கிளினீக் வைத்தால் காசு அதிகம் பார்க்க முடியாது என்பது அவர்களது கருத்து.
தமிழகம் என்பது வெறும் மெட்ரோபாலிட்டன் நகரங்கள் மட்டுமல்லவே.. வருசநாட்டின் மலை மீது பத்து கிலோ மீட்டர் கழுதை மீது கற்பாதையில் நடந்து சென்றால்தான் ஒரு கிராமத்தையே அடைய முடியும். அந்த ஊரில் யாருக்கு என்னவோ என்றாலும் தொட்டில் கட்டி அவர்களை பத்து கிலோ மீட்டர் தூரம் தூக்கித்தான் மருத்துவமனைக்குக் கொண்டு வருகிறார்கள்.
அவர்களைக் கேட்டால், "இது நாங்கள் பிறந்த மண். எதற்காக மலையிலிருந்து இறங்கி இங்கே வர வேண்டும். இங்கே வந்தாலும் நாங்கள் என்ன தொழில் செய்ய முடியும்? எங்களது நிலம் மலையில் அல்லவா இருக்கிறது.." என்பார்கள். மருத்துவர்களைக் கேட்டால், "எங்களைப் போல் எங்களது பிள்ளைகளும் மருத்துவர்களாக வேண்டாமா? அதற்காக நன்கு படிக்க வேண்டாமா? அந்தப் படிப்பைக் கற்றுக் கொடுக்கும் நல்ல பள்ளிகளில் சேர்க்க வேண்டாமா? அந்தப் பள்ளிகள் உள்ள ஊர்களில்தானே நான் பணியாற்ற முடியும்.." என்பார்கள். இது சுவாசம் மாதிரி சுழற்சியான ஒரு பதிலாகிவிட்டது. யாரையும் குற்றம் சொல்ல இயல்வதில்லை.
மருத்துவம் என்பது முதலில் ஒரு தொழில் அல்ல.. அது ஒரு தவம் என்று நாம் மட்டும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்களின் முதலாமாண்டில் முதல் வகுப்பே மருத்துவம் சார்ந்த அறிவைப் புகட்டுவதுதானாம். எடுத்த எடுப்பிலேயே நாம் போற்றும் தவத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துவிடுவதால், ஐந்தாண்டுகள்வரை அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களா என்ன..?
இப்போது நாடும், அரசும், மக்களும் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே பல ஊர்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை. இருப்பவர்களும் ராஜினாமா செய்துவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் பெருத்த சம்பளம்.
இந்த ரீதியில் இன்றைய வருடத்தில் ஆரம்பித்த இந்த தாவல் சம்பவம் தமிழகத்தில் மேலும் தொடருமேயானால், நாடு முழுவதும் மருந்து கடைகள்தான் ஏழை மக்களுக்கு மருத்துவமனைகளாக இருக்கும்.
இதைத் தடுக்க வேண்டுமெனில் முதலில் மாணவப் பருவத்திலிருந்தே மருத்துவத் தொழிலை ஒரு சமூக அக்கறையுள்ள தொழில் என்ற எண்ணத்தை இளைஞர்களுக்குப் புகட்ட வேண்டும். இந்தத் தொழிலில் பணம் கிடைக்காமல் போனாலும், மனிதர்களின் பாராட்டுக்களும், ஆசிகளும் மருத்துவர்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் நல்வாய்ப்பை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
இந்தச் சமூகம் நல்வழி காண மருத்துவர்கள்தான் பெரும் பங்கு ஆற்றப் போகிறார்கள். அவர்கள்தான் ஏழை மக்களின் நிகழ் கால கடவுள்கள். அந்த வாய்ப்பை ஒரு போதும் நழுவவிடக்கூடாது..
மருத்துவர்கள் செய்வது தொழில் அல்ல. ஒரு கடமை.. அதிலும் இந்தத் தேசத்திற்கு அவர்கள் ஆற்றுகின்ற ஒரு கடமை..
ஆசாத் காஷ்மீரின் நுழைவாயிலில் பனிப்புயலில் காவல் காக்கும் ராணுவ வீரனும், இங்கே ஆண்டிப்பட்டியில் ஒரு ஏழையின் உயிரைக் காப்பாற்ற அவன் வீடு நோக்கி டூவிலரில் பயணிக்கும் ஒரு மருத்துவனும் ஒன்றுதான் என்கின்ற உண்மையை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தங்களது பிள்ளைகளை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது நாட்டிற்கு நாம் செய்கின்ற மிகப் பெரும் பெரும் உதவி என்று பெற்றோர்களும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது, நூறு கோவில்களை ஆண்டாண்டு காலமாகச் சுற்றினாலும் கிடைக்காத புண்ணியத்தைத் தானே தேடி கொள்வது என்ற உண்மையை அம்மருத்துவரும் உணரும் காலம் வந்தால்..
பணமே பிரதானம் என்ற எண்ணமும், உயர்வான வாழ்வே நிசமான வாழ்க்கை என்ற கானல் நீரும் அடுத்து வரும் சுபிட்சம் என்னும் பெரும் மழையில் நிச்சயம் காணாமல் போகும்..
|
Tweet |
