07-04-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்த் திரையுலகில் இருக்கும் ஒவ்வொரு அப்பனும், தங்களுடைய பிள்ளைகளும் சினிமாவுலகத்தில் புகழ் பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், தாங்களே படமெடுத்து மகன்களை அறிமுகப்படுத்துகிறார்கள். தலையெழுத்து நன்றாக இருந்தால், அந்த மகன் முன்னேறலாம்.. இல்லாவிடில் இடத்தைக் காலி செய்யலாம்..!
2 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த கிரீப்புள்ளையில் தன் மகன் யுவனை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போவதாகச் சொன்னார் அப்பாவும், இயக்குநருமான பெரோஸ்கான். ஆனால் அதற்குள்ளாக சாட்டை படத்தில் வாய்ப்பு கிடைத்து யுவனுக்கு நல்ல பெயர் கிடைத்துவிட.. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து முதல் படத்தை ரிலீஸ் செய்தால் கொஞ்சம் பெயர் கிடைக்கும் என்ற நப்பாசையில் சமீபத்தில்தான் இதனை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.. இதில் அப்பா இயக்குநரின் திறமை அவ்வளவாக குறிப்பிடும்படி இல்லாததாலும் சாட்டையில் கிடைத்த பெயரை இதில் கோட்டைவிட்டுவிட்டார்களே என்று வருத்தப்படுகிறார்கள் யுவனின் அன்பர்கள்..!
நண்பர்களுடன் சேர்ந்து சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து தப்பித்து வரும் கீரிப்புள்ளையான யுவனுக்கு பள்ளியில் படிக்கும் திஷா மீது காதல்..! திஷாவுக்கு இவரது திருட்டுத்தனமும் தெரியுமாம்.. அப்படியும் காதலாம்..! திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன் இவர்களைத்தான் சினிமாவில் காதலிப்பார்கள் என்ற இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்றுபடியான காதல் இவர்களுடையது..!
ஒரு சந்தர்ப்பத்தில் தாதா சரவணனிடமிருந்து இன்னொரு தாதா பெரோஸ்கானை காப்பாற்றுகிறார் யுவன். இதனால் தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேட்டு வரலாம் என்று சொல்லியிருக்கிறார் பெரோஸ்கான். யுவனின் நண்பனின் அக்கா திருச்சியில் ஒரு வேலைக்காக சென்று லாட்ஜில் தங்கியிருக்க.. அன்றைய இரவில் அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் ஒருவனால் கற்பழிக்கப்படுகிறார். சோகம் தாங்காமல் அக்கா தற்கொலை செய்து கொள்ள..! விஷயம் யுவனுக்குத் தெரிய வருகிறது..!
கொதித்தெழும் யுவன் தனது படைகளுடன் சென்று அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ளுகிறார். அதே நேரத்தில் திஷாவின் அம்மா அவளுக்கு வேறொரு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு நாள் குறிக்கிறார். இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ளிய இடத்தில் தனது செல்போனை தொலைத்துவிட்ட யுவன், அதனை எடுக்க திரும்பி வரும்போது போலீஸின் கண்ணில்பட்டு எஸ்கேப்பாகுகிறார்..!
காதலி திஷாவை இழுத்துக் கொண்டு ஓடும்போது போகிற வழியில் இருக்கும் ஒரு கோவிலில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறார்.. பெரோஸ்கானிடம் அடைக்கலமாகிறார்..! பெரோஸ்கான் ஒரு பக்கம் பாசத்தைக் கொட்டினாலும் திஷாவின் மேல் காமத்துடன் இருக்கிறார். இது தெரியாமல் யுவன் அவருடன் இருக்க.. சரவணன் ஒரு பக்கம் பெரோஸ்கானை போட்டுத் தள்ள முயற்சிக்க.. போலீஸ் இன்னொரு பக்கம் யுவனைத் தேடி வர.. பயங்கர அடிதடி மோதலுடன் படத்தை பயங்கர தலைவலியுடன் முடித்திருக்கிறார்கள்..! போலீஸ் யுவனை மட்டுமே தேடுகிறார்களே ஒழிய, இந்தச் சண்டையில் சாகும் அடியாட்களை பற்றி ம்ஹூம்.. ஒரு கவனிப்பும் இல்லை..!
முதல் படம் என்பதாலும், இயக்கம் சுமார் என்பதாலும் யுவனின் நடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.. ஆனாலும் அப்பனும், புள்ளையும் போடும் சண்டையும், பறந்து பறந்து தாக்கும் காட்சிகளும் ரொம்பவே ஓவர்..! இனி சாட்டை அன்பழகன் போல நல்ல இயக்குநர்களிடத்தில் சிக்கினால் மட்டுமே இவர் பிழைப்பார்..!
திஷா.. சிரிக்க மட்டுமே தெரிகிறது..! டான்ஸ் காட்சிகளில் யுவனைவிட நன்றாகவே ஆடியிருக்கிறார்..! இவருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்தால் அது உலக மகா அதிசயம்தான்..! அந்த லட்சணத்தில்தான் இவரது அழகு ஸ்கிரீனில் காட்டப்பட்டிருக்கிறது..! ம்ஹும்.. ஒளிப்பதிவாளரை என்னவென்று சொல்வது..? எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை..! யுவனும், திஷாவும் அக்கா-தம்பி போல பளீச்சென்று இருக்கும் பாடல் காட்சிகள் காமெடியாகத்தான் இருக்கிறது..!
மகனை புரமோட் செய்வது அப்பாவின் உரிமைதான்.. அதுக்காக இப்படியா..? வேறு யாராவது ஒரு இயக்குநரிடம் கொடுத்து வேறு கதையில் எடுத்துக் கொடுத்திருக்கலாம்.. இத்துடன் பெரோஸ்கான் இந்த முயற்சியைக் கைவிடுவது அவரது மகனது எதிர்காலத்துக்கு நல்லதாகத்தான் இருக்கும்..!
|
Tweet |
5 comments:
நடிகரைப் பார்த்தால் சரி தான் நம்ம தாதா கங்குலி தான் நடிக்க வந்துட்டரோ என்று அசந்தேன்....அதே பார்வை...சிரிப்பு...
உண்மைத் தமிழரே! எப்ப எழுதப் போகிறீர்கள்; போன வருடம் எவ்வளவு வெற்றிப் படங்கள்; எத்தனை உப்புமா படங்கள் என்று....
Post a Comment