19-04-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
A Film by என்று டைட்டில் கார்டு போடுவதற்குத் தகுதியுள்ள தமிழ் இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். அந்தப் பெயரை இந்தப் படத்திலும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்..! பிரகாஷ்ராஜின் நிஜமான கேரக்டர் என்னவோ.. எதுவாகவோ இருக்கட்டும்.. ஆனால் ராதாமோகன் என்னும் பொக்கிஷத்தை கண்டெடுத்து அதனை இன்னமும் வீரியம் இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்ற வகையில் அண்ணன் பிரகாஷ்ராஜை உச்சி முகிர்ந்து மெச்ச வேண்டும்..!
தன்னுடன் படித்த சண்முகம் என்ற தனது நண்பனைச் சந்திக்க அவனது ஊருக்குச் செல்கிறார் ஹீரோ அல்லு சிரீஷ். அங்கே அவரைக் காணவில்லை. மாறாக அவரைப் பற்றிய பகீர் செய்திகள்தான் கிடைக்கிறது.. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம், அந்த ஊரின் பெரும்புள்ளியான உயர்சாதியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜின் பெண்ணை காதலித்து அவளை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்டதாக முதல் கட்டத் தகவல் கிடைக்கிறது. ஆள் சென்னைக்குத்தான் போனார் என்கிறார்கள்.. எங்கே என்று தெரியவில்லை..!
சண்முகத்தின் தந்தையின் பரிதவிப்புக்காக அவனைத் தேடும் முயற்சியில் ஹீரோ தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். துணைக்கு தன்னுடன் படித்த நண்பனையும் இணைத்துக் கொள்கிறார். தொழிற்சங்கவாதியான செளந்தரபாண்டியனின் மகளான ஹீரோயினும் இந்தக் கூட்டணியில் சேர்கிறார்..! சண்முகத்தின் அண்ணன் மாரியும் இவர்களுக்கு உதவி செய்கிறார். ஒரு கட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்தும் சண்முகத்துடன் படித்த நண்பர்கள், நண்பிகள் அனைவரையும் வரவழைக்கிறார்கள்..! இந்த 50 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டம் சண்முகத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறது..! இந்த டீம் சண்முகத்தைக் கண்டுபிடித்ததா..? அவரது கதி என்ன என்பதுதான் இந்தப் படத்தின் மிச்சம் மீதிக் கதை..!
ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த பிரஸ்மீட்டில் “கவுரவக் கொலைகள் நாட்டில் அதிகமாக நடக்க ஆரம்பித்துள்ளன. இது பற்றிய விழிப்புணர்வை இன்றைய சமுதாயத்தினருக்கு கொடுக்கும்வகையில் ஒரு சமூகப் பொறுப்போடு இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாகச்” சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார் பிரகாஷ்ராஜ். ஆனால் ‘கவுரவக் கொலை’ என்பதற்கு அவர் சொன்ன ‘பணக்காரன்-ஏழை’ விளக்கம்தான் பத்திரிகையாளர்களுக்கு ஏற்புடையதாகவே இல்லை..! திரும்பத் திரும்ப ‘பணக்காரன்-ஏழை வர்க்க வித்தியாசத்தினால் செய்யப்படும் கொலைதான் கவுரவக் கொலை’ என்று சொல்லியே பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டார். ஆனால் படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு இடத்தில்கூட ‘பணக்காரன்-ஏழை’ என்ற வசனமே இல்லை. முழுக்க முழுக்க உயர்சாதி, தாழ்ந்த சாதி பிரச்சினையைத்தான் பேசியிருக்கிறார்கள். படத்தில் சொல்லியிருப்பது சரிதான் என்றாலும், பிரகாஷ்ராஜின் வருமுன்காப்போம் யுக்திதான் சற்று வருத்தப்பட வைக்கிறது. இத்தனை அழகாக படமெடுத்திருப்பவருக்கு ஏன் இந்த பயம்..? அந்த உண்மையை தைரியமாகவே நெஞ்சை நிமிர்த்தி சொல்லியிருக்கலாம்..!
தனி காலனி, இரட்டை டம்ளர்.. செருப்பு அணிய அனுமதியில்லை.. சினிமா தியேட்டரில் பக்கத்தில் அமர அனுமதியில்லை.. இதற்காகவே தாக்கப்படும் மக்கள்.. பரம்பரை பரம்பரையாக கூலி வேலை செய்யும் மக்கள்.. கற்பழிக்கப்படும் கீழ்ச்சாதிப் பெண்கள்.. என்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போதும் நடந்து கொண்டிருக்கும் ஜாதி வெறியினை ஜாதிகளின் பெயரைச் சொல்லாமலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..!
படத்தின் மிகப் பெரிய பலமே வசனம்தான்.. ராதாமோகனின் ஆஸ்தான வசனகர்த்தா விஜியின் நறுக்கலான வசனங்கள் இந்த சாதி பிரச்சினையை மனதுக்குள் கொண்டு போய் நுழைத்து விடுகிறது..! யதார்த்தமாக சொல்லப்படும் வசனங்கள்.. அழுது வடியும் சோகத்துடன் சொல்லப்படுவதைவிடவும் அதிகமாகக் கவனிக்கப்படும் என்பதை ராதாமோகன் உணர்ந்திருக்கிறார் போலும்..!
இரட்டை டம்ளர் முறையை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே டீக்கடையில் அமர்ந்திருக்கும் உள்ளூர் பெரிசுகள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பற்றிய தங்களுடைய அறிவை வெளிப்படுத்தும் காட்சி ஒரு குறியீடாகவே தெரிகிறது..! “ஊரைச் சுத்தி நாலு சுடுகாடு இருக்கு.. ஊர்ப் போய்ச் சேருங்க தம்பி..” என்று அன்பாக சொல்லியனுப்பும் வசனமும் அந்தக் கிராமத்தின் இன்றைய நிலையை எடுத்துக் காட்டுவதை போலத்தான் சொல்லப்பட்டிருக்கிறது..! “என்ன ஷூவெல்லாம் போட்டிருக்க..?” என்ற கேள்விக்கு.. “இதாவது பரவாயில்லை.. முன்னாடியெல்லாம் செருப்பு போட்டால்ல கட்டி வைச்சு அடிப்பாங்க..” என்கிறார் மாரி..! இன்றைக்கும் ஊருக்குள் செருப்பு அணிய அனுமதியில்லாத ஊர்களும் தமிழ்நாட்டில் உண்டே..!
புதுமுகம் அல்லு சிரீஷ்.. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தம்பியாம்.. இதுதான் படத்துக்கும் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.. இந்தக் கேரக்டரில் தமிழின் பெரிய நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக மிகப் பெரிய அளவுக்கு ரீச்சாகியிருக்கும்.. இப்போது படத்திற்கு வரவிருக்கும் எதிர்மறை விமர்சனங்கள், சர்ச்சைகள், எதிர்ப்புகள் இவை மட்டுமே படம் பற்றிய டாக்கை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் என்றே நினைக்கிறேன்..!
அல்லு சிரீஷ்.. புதுமுகம். முதல் படம் என்பதால் எதுவும் சொல்வதற்கில்லை..! டயலாக் டெலிவரியை மிகச் சரியாகச் செய்திருக்கிறார் என்றாலும் அவருடைய நடிப்புக்கு வேறொரு படம்தான் தீனி போட வேண்டும்..! விஜியின் வசனங்களும், ராதாமோகனின் இயக்கமும் இணைந்து படத்தைக் கொண்டு செல்வதால் நடிகர், நடிகைகள் தனித்து தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டவர்களுக்கே இந்தக் கதிதான்..!
ஹிந்தி விக்கி டோனரில் நடித்த யாமி கவுதம் என்னும் புதுமுகம் தமிழுக்கு அறிமுகம். இவர் மாதிரியான முக ஜாடையில் இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார்கள்.. தொழிற்சங்கவாதியான நாசரின் மகளாக ஆக்ட் கொடுத்திருக்கும் இவரது கேரக்டர் படத்துக்காகவே எழுதப்பட்டிருப்பது போல் தெரிகிறது.. இது போன்ற சமூக விழிப்புணர்வுமிக்க படங்களில்கூட காதல் தவிர்க்க முடியாமல் வைக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் தமிழ்ச் சினிமாக்களின் சோகம்..! இதனை இதில் நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம்.. ஹீரோ கல்யாணமானவராகவே காட்டியிருக்கலாம்.. தப்பில்லாமல் இருந்திருக்கும்..!
பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. உருக்கமான காட்சிகளெல்லாம் இல்லாமல் பெரிதாக நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பதினாலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினின் நடிப்பைக் காணலாம்..! ஆனாலும் கோர்ட் சீனில் அவருடைய பதட்டமில்லாத அந்த சின்ன வாதத்தில் பார்வையாளர்கள் மொத்த பேரையும் இழுத்திருக்கிறார்.. ஹாட்ஸ் ஆஃப் மேடம்..!
கவுரவக் கொலை என்று சொல்லியாகிவிட்டாலும், அந்தக் கொலையின் மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்தையும் இந்தப் படம் சொல்லியிருப்பதால் இது சஸ்பென்ஸ்-திரில்லர் சினிமாவாகவும் மாறிவிட்டது..! செல்வியின் தம்பி கேரக்டர்.. ‘இல்லை’ என்ற ஒற்றை வரி வசனம் படத்தின் தன்மையையே இடைவேளைக்கு பின்பு மாற்றும் காட்சி திடுக் திருப்பம்தான்..! அவனுக்குள் இருக்கும் ஓவியத் திறமையே படத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது..!
காலனிக்குள்ளேயே காவி வேட்டி கட்டிக் கொண்டு திரியும் அந்த சாமி.. கற்பழிக்கப்பட்ட அவமானத்தைச் சுமந்து கொண்டு ஊருக்குள்ளேயே இருக்கும் செல்வி.. எப்போதும் மேல்ஜாதிக்கே ஒத்துப் போகும் போலீஸ் அதிகார வர்க்கம்.. எதையெடுத்தாலும் சென்சிட்டிவ் பிரச்சினை.. பார்த்துப் பேசுங்க என்று அட்வைஸ் செய்யும் அதிகாரிகள்.. என்று சகலத்தையும் கொண்டு வந்து கொடுத்தும் கவுரவக் கொலை செய்யும் ஜாதிக்காரர்களை விளாச வேண்டிய சந்தர்ப்பத்தில், மட்டும் தனது பேனாவுக்கு சென்சார் கொடுத்துவிட்டார் விஜி..
பிரகாஷ்ராஜும், அவரது மகனும் மட்டுமே ஒருவர் மாற்றி ஒருவர் இதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். பிரகாஷ்ராஜின் மனைவி கவுரவக் கொலையை தன் வீட்டுப் பிரச்சினையாக மட்டுமே பேசுகிறார்.. பிரகாஷ்ராஜ் தனது கவுரவத்திற்காக கடைசியில் எடுக்கும் முடிவு எதிர்பார்த்ததுதான் என்பதால் அதில் பீலிங் வராமல் போய்விட்டது..! மாரி தனது காலனி ஆட்களிடம் “எத்தனை நாளைக்கு நாமளே அடி வாங்கிட்டு இருக்குறது.. எப்போ நாம திருப்பிக் கொடுக்கிறது?” என்கிறார். செல்வியை உதாரணப்படுத்தும்போது “ஏன் நீயே கல்யாணம் செஞ்சுக்கலாமே..? ஏன் அதைச் சொல்லலை..?” என்று வசனமெல்லாம் நடந்த கொடூரத்திற்கு மருந்துபோடும் வேலையை மட்டுமே செய்திருக்கிறது..!
ஜாதி பிரச்சினை எப்படி மெல்ல, மெல்ல ஆரம்பித்து கடைசியில் உச்சத்தை அடையும் என்பதை வேதம் புதிது படத்தில் பாரதிராஜா மிக அழகாக காட்டியிருப்பார். ஊர் கோவில் பிரச்சினை பற்றி பேசி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் ஆள் ஆளுக்கு ஒரு யோசனையை சொல்லி திசை திருப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரவர் தங்களுக்கு ஆதாயம் பெறும் நோக்கில் பேசுவதையே சொல்லிக் காண்பித்து அதன் பின்புதான் ஜாதிக்குக் கொண்டு வருவார்.. இதுதான் இப்போது தர்மபுரியிலும் நடந்திருக்கிறது..! கீழ்சாதியினர் தங்களைவிட பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டார்களே என்கிற பல வருட வெறியை தர்மபுரி ஜாதி வெறியர்கள் தணித்துக் கொண்டதை பார்க்கும்போது எத்தகைய வன்மம் இன்னமும் நம் மக்களிடையே இருக்கிறது என்பதை நினைத்து பயப்பட வேண்டியிருக்கிறது..!
பிரகாஷ்ராஜின் முடிவோடு படத்தை முடித்திருக்க வேண்டிய விஷயம் சினிமாவுக்காக சமரசம் செய்யும் நோக்கில், நாயக மனப்பான்மையோடு அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சியை தவிர்த்திருக்க வேண்டும்..! அது ஒரு வணிகச் சினிமா நோக்கில் செய்யப்பட்டதாகவே படத்தின் முடிவைக் காட்டுகிறது..! உண்மையில் இத்தனை மாணவர்களும் இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் வந்து போராடி உண்மையை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய நேரத்தில் இந்தச் சண்டை காட்சி தேவையில்லாமல் திசை திருப்பிவிட்டது..!
அவ்வளவு பெரிய பணக்காரரின் மருமகள், டீச்சர் வேலைக்குச் செல்வது.. பிரகாஷ்ராஜின் மனைவி ஹீரோவிடம் வந்து பேசுவது.. சத்தியம் வாங்குவது.. பழனியை இதில் இழுத்துவிடுவது.. பழனி பற்றி மருமகள், ஹீரோவிடம் வந்து சந்தேகத்துடன் பேசுவது.. நாசரை கடைசிவரையில் எழுந்திருக்கவிடாமல் களத்திற்கு கொண்டு வராமலேயே தடுத்து வைத்தது.. இத்தனை சீரியஸான கதைக் களனில் அவ்வப்போது சில்லறைத்தனமாக நகைச்சுவை என்ற பெயரில் வசனங்களை பேசுவது.. இறுதியில் ஹீரோ, ஹீரோயினிடம் “நம்ம லவ் பண்ணா இந்த ஊர்ல யாராச்சும் எதிர்ப்பாங்களா?” என்று கேட்பது.. இது போன்ற காட்சிகளெல்லாம் சினிமாட்டிக்காக எழுதப்பட்டிருப்பதால் படத்தின் தன்மையை குறைத்தேவிட்டது..!
கிராமங்களில் நடக்கும் ஜாதி பிரச்சினையை அந்தக் களத்திலேயே சந்தித்து போராடி ஜெயித்த இளைஞர்கள் கூட்டம் பற்றிய படம் என்று இப்படத்திற்கு பெயர் வந்திருக்க வேண்டும்.. ஆனால் அதற்குப் பதிலாக மறைக்கப்பட்ட ஒரு உண்மையை துப்பறிந்து வெளிப்படுத்திய இளைஞர் கூட்டத்தின் கதை என்பதாக மாறிவிட்டதுதான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் துரதிருஷ்டமான சோகம்..!
எது எப்படியிருந்தாலும், என் உடல் மண்ணுக்கு.. என் உயிர் தமிழுக்கு என்றெல்லாம் வீர வசனம் பேசி கோடிகளில் கல்லா கட்டிக் கொண்டு ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை வைத்து தங்களுக்குத் தாங்களே பால்குடம் தூக்கி பால் அபிஷேகம் செய்ய வைத்துக் கொண்டு.. நாட்டு நடப்புகளுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதாக நடித்துக் கொள்ளும் சில, பல நடிப்புத் திலகங்களுக்கு மத்தியில், இந்த அளவுக்காச்சும், ஒரு சிறிய பொறியையாவது கிளப்ப வேண்டும் என்று நினைத்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், தோள் கொடுத்திருக்கும் இயக்குநர் ராதாமோகனுக்கும், வசனகர்த்தா விஜிக்கும், படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்..! நன்றிகள்..!
|
Tweet |
20 comments:
உடனடி விமர்சனம்....ரொம்ப கெளரவமா இருக்கு...அல்லு அர்ஜுனா தம்பி தானே...நன்றாகவே இல்லை..ஒருவேளை தெலுங்கிலும் வெற்றி பெறனும் அப்படிங்கிறதுக்காக அவரை போட்டு இருப்பாங்களோ...
பார்ப்பேன்.
அண்ணாச்சி,
ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு படம் பார்த்திருக்கீங்க போல தெரியுது.
"khap panchayat"என உத்திரப்பிரதேசம்,ராஜஸ்தான்,ஹரியானா,பஞ்சாப், மாநிலங்களில் இருக்கு ,ஜாட் சமூகத்தினர் தான் பெரும்பாலும் இதனை நடத்துவது.
அவர்கள் விதிக்கும் ஜாதிய கட்டுப்பாடுகளை மீறினால் மரணத்தன்டனை கொடுத்து தற்கொலைனு கேசை மூடிருவாங்க.இதனை மையமாக வைத்து
"khap" என்ற இந்திப்படம், ஓம்புரி நடிப்பில் போனவருடம் வந்தது, அதனை அப்படியே உல்டா அடிச்சு எடுக்கப்பட்டிருக்கு "கவுரவம்" :-))
தமிழ்நாட்டிலும் ஜாதிய கொடுமை இருக்கு தானே அப்புறம் என்ன எனலாம், இந்தியில் எடுத்தப்பிறகு தானே அந்த ஐடியாவே இங்கே வந்திருக்கு.
இந்தி படம் ஏற்படுத்தின பரபரப்பை தமிழ் படம் ஏற்படுத்தினா போல தெரியலை.
நல்ல விமர்சனம் அண்ணா..
கண்டிப்பாக பார்கிறேன்..
ராதா மோகன் போன்ற சில நல்ல இயக்குனர்கள் படங்களை
நாம் கண்டிப்பாக ஆதரிக்கவேண்டும்.
Sir,
The Heroine's Name is Yami Gautham & Not Gupta, as you've Mentioned Here.
விமர்சனம் ரொம்ப லென்த் ஆ இருக்குங்கனா ... படம் பாக்குற எபெக்ட் கிடச்சிது படிக்கும் பொது
படம் பார்த்து விட்டு முழு கருத்துக்கள் எழுதுறேன்
நடை.உடை.பேச்சு அத்தனையும் தெலுங்கு டப்பிங் படம் பார்த்த உணர்வே வருகிறது. மொழி படம் பார்த்துவிட்டு இப்படம் பார்த்தால் ஏமாற்றமே..
டிரைலரில் வரும் ஹீரோவின் முகம் என்னவோ படத்தை பார்க்கும் ஆவலை குறைத்து விடுகிறது. உங்கள் விமர்சனத்தை படித்து விட்டேன். ஒரு முறை படத்தை டிரைலரில் வரும் ஹீரோவின் முகம் என்னவோ படத்தை பார்க்கும் ஆவலை குறைத்து விடுகிறது. உங்கள் விமர்சனத்தை படித்து விட்டேன். ஒரு முறை படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்.
[[[கோவை நேரம் said...
உடனடி விமர்சனம்....ரொம்ப கெளரவமா இருக்கு...அல்லு அர்ஜுனா தம்பி தானே...நன்றாகவே இல்லை..ஒருவேளை தெலுங்கிலும் வெற்றி பெறனும் அப்படிங்கிறதுக்காக அவரை போட்டு இருப்பாங்களோ...?]]]
ஆமாம்.. தமிழ் கவுத்தாலும், தெலுங்கு காப்பாத்திரும்ன்னு ஒரு நம்பிக்கைதான்..!
[[[rajasundararajan said...
பார்ப்பேன்.]]]
அவசியம் பாருங்கள்ண்ணே.. உங்களது விமர்சனத்திற்கு ஆவலுடன் எதிர்பார்ப்பு..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு படம் பார்த்திருக்கீங்கபோல தெரியுது.]]]
ஆமாம்..!
"khap panchayat" என உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மாநிலங்களில் இருக்கு. ஜாட் சமூகத்தினர்தான் பெரும்பாலும் இதனை நடத்துவது.
அவர்கள் விதிக்கும் ஜாதிய கட்டுப்பாடுகளை மீறினால் மரணத்தன்டனை கொடுத்து தற்கொலைனு கேசை மூடிருவாங்க. இதனை மையமா வைத்து
"khap" என்ற இந்திப் படம், ஓம்புரி நடிப்பில் போன வருடம் வந்தது, அதனை அப்படியே உல்டா அடிச்சு எடுக்கப்பட்டிருக்கு "கவுரவம்" :-))]]]
தகவலுக்கு மிக்க நன்றிகள் பிரதர்..!
[[[தமிழ்நாட்டிலும் ஜாதிய கொடுமை இருக்குதானே அப்புறம் என்ன எனலாம், இந்தியில் எடுத்த பிறகுதானே அந்த ஐடியாவே இங்கே வந்திருக்கு. இந்தி படம் ஏற்படுத்தின பரபரப்பை தமிழ் படம் ஏற்படுத்தினா போல தெரியலை.]]]
அதுவும் உண்மைதான்.. அங்கே படம் குறிப்பிடுவது ஜாட் சமூகத்தை என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எந்த மேல்சாதி என்று குறிப்பிடப்படவே இல்லை..! பின்பு எப்படி பிரச்சினையாகும்..? பரபரப்பாகும்..?
[[[Doha Talkies said...
நல்ல விமர்சனம் அண்ணா.
கண்டிப்பாக பார்கிறேன். ராதாமோகன் போன்ற சில நல்ல இயக்குனர்கள் படங்களை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.]]]
அவசியம் பாருங்க பிரதர்..! பார்க்க வேண்டிய படம்தான்..!
[[[King Viswa said...
Sir, The Heroine's Name is Yami Gautham & Not Gupta, as you've Mentioned Here.]]]
தவறுதான்.. திருத்திவிட்டேன் நண்பரே..!
[[[நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...
விமர்சனம் ரொம்ப லென்த் ஆ இருக்குங்கனா ... படம் பாக்குற எபெக்ட் கிடச்சிது படிக்கும்பொது..]]]
இது போதும் எனக்கு..! நன்றி கார்த்தி..!
[[[நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...
படம் பார்த்து விட்டு முழு கருத்துக்கள் எழுதுறேன்.]]]
அவசியம் எழுதுங்கள் கார்த்தி.. அப்போதுதான் உங்களது ரசனை என்னவென்று புரியும்..!
[[[kaliaperumal Kali said...
நடை உடை பேச்சு அத்தனையும் தெலுங்கு டப்பிங் படம் பார்த்த உணர்வே வருகிறது. மொழி படம் பார்த்துவிட்டு இப்படம் பார்த்தால் ஏமாற்றமே.]]]
ஒப்பீடே தவறானது நண்பரே.. மொழி வேறு களம்.. இது வேறு.. இயக்கத்தில் ராதாமோகன் தவறு செய்யவில்லை. கேஸ்ட்டிங்கிலும், திரைக்கதையிலும்தான் பிரச்சினை..!
[[[நிஷா - பிரதீபன் said...
டிரைலரில் வரும் ஹீரோவின் முகம் என்னவோ படத்தை பார்க்கும் ஆவலை குறைத்து விடுகிறது. உங்கள் விமர்சனத்தை படித்து விட்டேன். ஒரு முறை படத்தை டிரைலரில் வரும் ஹீரோவின் முகம் என்னவோ படத்தை பார்க்கும் ஆவலை குறைத்து விடுகிறது. உங்கள் விமர்சனத்தை படித்து விட்டேன். ஒரு முறை படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்.]]]
தமிழ் முகம் இல்லை என்பதால் நமக்குப் பிடிபடவில்லை..! அவ்வளவுதான்..! அவசியம் படம் பாருங்கள்..
நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. ஆனால் கண்டிப்பாக படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்... பதிவிற்கு நன்றி..
திருமதி தமிழ் விமர்சனம் எங்கே? விரைவில் விடவும், காத்திருக்கிறோம்!
Post a Comment