சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

03-04-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




ஹிதேந்திரன். வித்தியாசமான இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்கவே முடியாது..! அந்தச் சம்பவம் நடக்கும்வரையில் நமக்கு யாரென்று தெரியாத ஹிதேந்திரன், தன் சாவிற்குப் பின்பு ஒரு புதிய விழிப்புணர்வு, தமிழகத்தில் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டான்..!

2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள்..! 

உடல் உறுப்பு தானம் என்ற மருத்துவம் சார்ந்த தான விஷயத்தை அவ்வளவாக அறிந்திராத அந்தச் சமயத்தில், தீயில் வெறுமனே வெந்து போய் சாம்பலாகிவிடும் அந்த உடல் உறுப்புகள் இன்னும் பலருக்கும் வாழ்க்கையைக் கொடுக்குமே என்ற எண்ணத்தில் ஹிதேந்திரனை கருணைக் கொலை செய்துவிட்டு அவனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க அனுமதி தந்தனர் அவனது பெற்றோர்கள்..!

அதன் பேரில் நல்ல நிலையில் இருந்த ஹிதேந்திரனின் கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை அகற்றப்பட்டன..! கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கும், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை ஆயிரம்விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதயம் மட்டுமே சில மணி நேர இடைவெளியில் வேறு உடலில் பொருத்தப்பட்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததினால், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பவர்கள் யார் என்று சென்னையில் தேடப்பட்டது. கடைசியாக சென்னை முகப்பேரில் இருக்கும் டாக்டர் செரியரின் இருதய மருத்துவமனையில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் சிறுமி அபிராமி கண்டறியப்பட்டாள்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தயார் நிலையில் இருந்த அபிராமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தை பொருத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேனாம்பேட்டை அப்பலோவில் ஹிதேந்திரனின் உடலில் இருந்து அகற்றப்படும் இதயத்தை, முகப்பேரில் இருக்கும் செரியனின் மருத்துவமனைக்கு மிக விரைவில் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது என்று யோசித்தார்கள் மருத்துவர்கள்..!

காவல்துறையின் உதவியின்றி இதனை விரைந்து தனியாக செயல்படுத்த முடியாது என்று முடிவு செய்து காவல்துறைக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடைய உதவியுடன் தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேர் வழி நெடுகிலும் டிராபிக்கை நிறுத்திவைத்து, 14 கிலோ மீட்டர் தூரத்தை, வெறும் 11 நிமிடங்களில் கடந்து சென்று செரியன் மருத்துவமனையில் இதயத்தை ஒப்படைத்தது காவல்துறை.. அந்தச் சிறுமி அபிராமிக்கு இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு சாதனை படைத்த அந்தச் சம்பவத்தைத்தான் 2011-ம் ஆண்டு மலையாளத்தில் ‘டிராபிக்’ என்ற பெயரில் படமாக எடுத்து சூப்பர் ஹிட்டாக்கினார்கள்..!

முறையாக தமிழில்தான் இதனை முதலில் எடுத்திருக்க வேண்டும். நமது இயக்குநர்களுக்கு இதையெல்லாம் யோசிப்பதற்குக்கூட நேரமில்லாத காரணத்தினால் மலையாளத்தில் எடுத்த டிராபிக்கை தமிழில் ரீமேக் செய்யக்கூட தயங்கினார்கள்.. இப்போது ரேடன் பிக்சர்ஸ் தைரியமாக தனது கம்பெனி பெயரில் தயாரித்திருக்கிறார்கள்..! கூடவே இவர்கள் செய்த ஒரு நல்ல காரியம்.. மலையாள டிராபிக்கில் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஷாகித் காதரையே இயக்க வைத்திருப்பதுதான்..! 

டிவி மீடியா உலகில் தானும் ஒரு பிரபலமான செய்தியாளராக வர பெரும் விருப்பம் கொண்டிருக்கும் கார்த்திக், நடிகர் பிரகாஷ்ராஜை பேட்டியெடுக்க அவசரமாக செல்லும்போது.... நான்கு வாலிபர்கள் காரோட்டி வரும் ஒரு பெண்ணை தங்களது பைக்கில் துரத்தி வர.. அவசரத்தில் அந்தப் பெண் கார்த்திக் மீது மோதிவிட.. நண்பன் சிறு காயத்துடன் தப்பிக்க.. கார்த்திக் மட்டும் தலையில் அடிபட்டு சுயநினைவை இழக்கிறார்.. மூளைச் சாவு என்று மருத்துவமனையில் சொல்கிறார்கள்..!

அதே நாள் நடிகர் பிரகாஷ்ராஜின் மகள் திடீரென்று ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக மருத்துமனையில் சேர்க்கப்பட அந்தப் பெண்ணுக்கு உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம்.. கார்த்திக் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் இதயம் மாற்று தேவை பற்றிய செய்தி வர.. கார்த்திக்கின் அப்பா, அம்மாவிடம் முதலில் அனுமதி கேட்கிறார்கள். மருத்துவரான அவரது அப்பா முதலில் மறுத்தாலும், பின்பு ஒத்துக் கொள்கிறார்..!

இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை.. ஒய்.எம்.ஆர். ரோட்டில் இருக்கும் குளோபல் மருத்துவமனையில் இருந்து, சிறுமி இருக்கும் வேலூர் மருத்துவமனைக்கு இதயத்தை எப்படி கொண்டு செல்வது என்பதுதான்.. 170 கிலோமீட்டர் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் கடந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை பார்த்து போலீஸ் கமிஷனர் சரத்குமார் முதலில் தயங்க.. பின்பு விஜயகுமார் போனில் பேசும்.. "இன்னிக்கு நீங்க செய்யப் போற ஒரு விஷயம் நாளைக்கு சரித்திரமா நிக்கப் போகுது.." என்று வார்த்தைகளைக் கேட்டு மனம் மாறி ஒத்துக் கொள்கிறார்..!

தனது குடும்பத் தேவைகளுக்காக கை நீட்டி லஞ்சம் வாங்கி ஆன் தி ஸ்பாட்டிலேயே பிடிபட்டு வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்பு ஒரு அரசியல்வியாதியின் சிபாரிசில் மறுபடியும் வேலையில் சேர்ந்திருக்கும் டிராபிக் கான்ஸ்டபிள் சேரன் இந்த ஓட்டத்தைத் தான் செய்வதாக முன் வருகிறார்..! எப்படி இதனைச் சாதிக்கிறார்கள் என்பதுதான் மிச்ச மீதிக் கதை..!

மலையாள இயக்குநர்.. அதே படத்திற்கு இணை இயக்குநராக மலையாளம், இந்தி இரண்டிலுமே பணியாற்றியவர் என்ற தகுதியில் ஷாகித் அக்தர்.. படத்தின் தன்மை கெடாமல் கடைசிவரையிலும் விறுவிறுப்பு குறையாமலும் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்..! வெல்டன்..!

தான் காதலிக்கும் பெண்ணுடனான தனது உறவை வீட்டாருக்குத் தெரியாமல் வைத்திருந்தும், அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும் காட்சியும், ஜெயபிரகாஷ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து வீட்டுக்கு வரும்படி அழைப்பதும் மனதை ஏதோ ஒன்று செய்தது..! இதயத்தை எடுத்துக் கொண்டு கார் செல்வதும், அது தங்களைக் கடந்து போனதை பார்த்துவிட்டு பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் அழுது ஆறுதல் சொல்லும் அந்தக் காட்சியும் மனதைவிட்டு இன்னமும் நீங்கவில்லை..! லஷ்மி ராமகிருஷ்ணனும், ஜெயபிரகாஷும் கச்சிதமான நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள்..!

பிரசன்னா, இனியா, பிரசன்னாவின் நண்பன் கதை ஊகிக்கவே முடியாததுபோல் கொண்டு போயிருப்பதும்,  தன்னை போலீஸ் கண்டுபிடித்துவிட்டதாக தவறாக யூகித்து பிரசன்னா செய்யும் அந்த டைவர்ஸனும், அதனைத் தொடர்ந்த படபடக்கும், தடதடக்கும் காட்சியமைப்புகளும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. இடைவேளைக்கு பின்பான அந்த சேஸிங்குதான் பலமே.. தூரத்தைக் குறைத்து கடப்பதற்காக இடையில் வரும் ஒரு ஊருக்குள் நுழைந்து வெளியேறும் சேஸிங்கும், இதற்கு நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் உதவுவது போலவுமான காட்சிகளெல்லாம் சிறந்த திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டு..!

நடிகர் பிரகாஷ்ராஜ், இதில் நடிகராகவே வருகிறார்..! பிரமோஷனுக்காக அழைக்க வேண்டி தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் வந்து காத்திருப்பது.. அலட்சியமாக அவர்களைப் புறக்கணித்துவிட்டு செல்லும் பிரகாஷ்ராஜை போலத்தான் நிறைய நடிகர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்..! இயக்குநருக்கு இதற்காகவே ஒரு பாராட்டு..! நடிகர்களின் அலட்டல், பந்தா, தங்களை மிகைப்படுத்தி தாங்களே பேசிக் கொள்வது என்பதையெல்லாம் அவரது ஒரு பேட்டி மூலமாகவே வெளிக்கொணர்ந்திருப்பது ரசிக்கும்படிதான் இருந்தது..!  “அவ பொறந்த நாளாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று ராதிகா பொறுமுவதும், பிரகாஷ்ராஜ் பதில் சொல்லத் தெரியாமல் நிற்பதும் படத்திற்கு சோகத்தை கூட்டுகிறது..! “நான் யாருன்னு சொன்னியா..? மந்திரிக்கு போனை போடு..” என்று எகத்தாளமிக்க பிரகாஷ்ராஜின் கேரக்டருக்கு மிகக் கச்சிதமான வசனங்கள்..! வசனகர்த்தா அஜயன்பாலாவுக்கு எனது வாழ்த்துகள்..! மனிதர் இதில் தனியே மிளிர்கிறார்..! 

டிராபிக் கான்ஸ்டபிளாக வரும் சேரன் இதில் அளவோடு நடித்திருக்கிறார். ச்சும்மா வந்து நின்னு பார்த்தாலே போதும்.. பேசினாலே போதும் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார் போலும்.. இறுதியாக, பணியை நிறைவுடன் செய்து முடித்துவிட்ட திருப்தியில் ஒரு சின்னதாக சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள்.. இதுவே போதும்தான்..! இவருக்கு ஜோடி ஆட்டோகிராப் மல்லிகா.. அந்தச் சூழலை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்ப்பதும், அதற்குப் பின்பு அந்தக் குடியிருப்பில் அவருக்கு கிடைக்கும் மரியாதைக் குறைவை நினைத்துப் பார்த்து வருந்துவதுமான அந்தக் காட்சிகள்தான் சேரனுக்கு மிகப் பெரிய பலம்.. இயக்குநர் கச்சிதமான காட்சிகள் மூலம் இதனை நகர்த்தியிருக்கிறார்..!

படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ஒளிப்பதிவு நிஜமாகவே மலையாளக் கரையோரம் நடக்கும் கதையாகவே நமக்குக் காட்டியிருக்கிறது..! கார் சேஸிங்கில் பிரசன்னாவின் மிரட்டலுக்குட்பட்டு கார் போகும் திசையையும், வேகத்தையும் பதிவு செய்திருக்கும் விதம், படத்தின் எடிட்டருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் சபாஷ் போடச் சொல்கிறது..! அடுத்தடுத்த சோகக் காட்சிகளையும்,  ஆபரேஷனுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் அந்த பயணக் காட்சிகளில் மிக அழகாக கத்திரி போட்டு ரசிக்க வைத்திருக்கிறார்கள்..! வெல்டன் எடிட்டர்..!

ஒரு சிட்டி போலீஸ் கமிஷனர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் ஒரு சாதாரண டிராபிக் கான்ஸ்டபிள் எப்படி கலந்து கொண்டார் என்பதற்கான காரணங்களை நாம் யூகிக்கவே முடியாத அளவுக்கு அந்தக் காட்சியை ஒரு எதிர்பார்ப்புடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்..! இந்த ஒரு மைனஸை அவருக்காக நாம் விட்டுக் கொடுப்பது படத்திற்கு நாம் கொடுக்கும் பாராட்டாகவே இருக்கட்டும்..!

ஹிதேந்திரனின் மரணம் பற்றிய செய்திக்குப் பிறகு தமிழகத்தில் கொஞ்சமேனும் உடல் உறுப்பு தானங்கள் நடந்திருக்கின்றன.. இப்போது இந்த வெற்றி திரைப்படத்தின் மூலம் இந்த விழிப்புணர்வு இன்னமும் கூடும் என்றே நான் நினைக்கிறேன்..! ஒரு திரைப்படத்தின் மூலம் என்ன செய்ய முடியும் என்பதற்கு இத்திரைப்படத்தை சான்றாகக் கொள்ளலாம்..! 

அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்..! 

13 comments:

பழமைபேசி said...

அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய இடுகை..!

saravanan selvam said...

படத்தை விட உங்களது விமர்சனம் மிக அருமை.உடல் உறுப்பு தானத்தை பற்றி நீங்கள் உங்களது விமர்சனத்தில் highlight செய்து காட்டி இருபது மிக அருமை.

Anonymous said...
This comment has been removed by the author.
உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள
வேண்டிய இடுகை..!]]]

வாழ்த்துக்கு நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[saravanan selvam said...

படத்தைவிட உங்களது விமர்சனம் மிக அருமை. உடல் உறுப்பு தானத்தை பற்றி நீங்கள் உங்களது விமர்சனத்தில் highlight செய்து காட்டி இருபது மிக அருமை.]]]

அதுதான் மிக முக்கியம்..! ஹிதேந்திரனுக்கு பின்பு பல மரணங்களின்போது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு பலருக்கும் வாழ்க்கை கிடைத்திருக்கிறது..! இனியும் இது தொடர வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[மா.சரவணக்குமார் said...

தனியாக மாட்டிக் கொண்ட தமிழ் பேசும் கல்லூரி பெண்களை தன் நண்பர்களுடன் சேர்ந்து, நாயடி... அடிக்கும் ஆண்.]]]

இதையெதுக்கு இந்த போஸ்ட்டுல போய் டேக் செஞ்சீங்க..?

Anonymous said...
This comment has been removed by the author.
deepa said...

ஒரு சிட்டி போலீஸ் கமிஷனர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் ஒரு சாதாரண டிராபிக் கான்ஸ்டபிள் எப்படி கலந்து கொண்டார் //

சிட்டி போலீஸ் கமிஷனர் அந்தக் கூட்டத்துக்கு அழைத்தது "All police drivers and VIP escort drivers in the city" அந்த ஒரு மைனஸூம் படத்துல இல்லைங்க சார்

உண்மைத்தமிழன் said...

[[[deepa said...

ஒரு சிட்டி போலீஸ் கமிஷனர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் ஒரு சாதாரண டிராபிக் கான்ஸ்டபிள் எப்படி கலந்து கொண்டார் //

சிட்டி போலீஸ் கமிஷனர் அந்தக் கூட்டத்துக்கு அழைத்தது "All police drivers and VIP escort drivers in the city" அந்த ஒரு மைனஸூம் படத்துல இல்லைங்க சார்..]]]

அப்படியா..? மன்னிக்கணும்.. நான்தான் சரியாகக் கவனிக்கவில்லையோ..?

kanavuthirutan said...

ஹிதேந்திரன் சம்பவம் தொடர்பான விவரணைகள் அருமை.... பதிவிற்கு நன்றி..

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

ஹிதேந்திரன் சம்பவம் தொடர்பான விவரணைகள் அருமை.... பதிவிற்கு நன்றி.]]]

அப்படிச் சொன்னால்தான் அதன் அருமை தெரியும்.. வெறுமனே பெயரை மட்டும் சொல்லிவிட்டுப் போவதில் என்ன இருக்கு..?

வருகைக்கு நன்றி நண்பரே..!

Dr. Ashokan said...

http://www.youtube.com/watch?v=3JYxeB0WhKw

உண்மைத்தமிழன் said...

[[[Dr. Ashokan said...

http://www.youtube.com/watch?v=3JYxeB0WhKw]]]

மிக்க நன்றிகள் அசோகன் ஸார்..! காணொளியைக் கண்டு நெக்குருகிப் போனேன்..! ஹிதேந்திரன் ஒரு வரலாற்றின் துவக்கம்.. இதில் ஐயமில்லை..!