Showing posts with label தேர்தல்கள். Show all posts
Showing posts with label தேர்தல்கள். Show all posts

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்த கதை..!

01-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனால் கலைத்துறையின் உச்சத்தைத் தொட்ட நிலையிலும் எம்.ஜி.ஆரை போல அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை..! இது காலத்தின் கட்டாயமாக அவருக்கு கிடைத்த அனுபவம்..!


அவர் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, அவரே தோற்றுப் போய் அவரது கட்சியினர் ஒருவர்கூட ஜெயிக்காமல் அவமானத்துக்குள்ளாகி, கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதாதளம் கட்சியில் தனது எண்ணற்ற தொண்டர்களுடன் கரைந்து போனார்..! கடைசியில் ஜனதா தளம் கட்சியும் கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விட அதிலிருந்தும் ஒதுங்கியவர் தனது மரணம் வரையிலும் அரசியலைத் தொடவில்லை..!

அவர் கட்சி ஆரம்பித்த அன்று அவரது வீட்டில் நடந்த நிகழ்வுகளை அன்றைய ஜூனியர் விகடன் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அரசியலில் ஆர்வமுடையவர்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது..!

அதற்கு முன்பாக அப்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலை கொஞ்சம் தெரிந்து கொண்டு அதன் பின்பு ஜூ.வி.க்குள் நுழைவோம்.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்த மறுநாளில் இருந்தே ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க.வில் உருவானது..!

ஜெயலலிதா தனது வீட்டின் பால்கனியில் நின்றபடியே தினம்தோறும் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கத் தொடங்கினார். இதனாலேயே அவருக்கு பால்கனி பாவை என்ற நற்பெயரும் கிடைத்தது. இந்தப் பெயரை அவருக்குச் சூட்டியது கா.காளிமுத்து..!

அப்போதைய சட்டப் பேரவையில் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 132. இதில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள். மீதமிருந்தவர்கள் ஆர்.எம்.வீ.யுடன் இருந்தார்கள். ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவைச் சமாளிக்க வேண்டி இதற்கு ஜானகியம்மாள்தான் முதல்வராக வேண்டும் என்று லாபி செய்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி அவரையே முதல்வராகத் தேர்வு செய்தார். அதுவரையிலும் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பதவி வகித்து வந்தார். அவர் தன்னைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுப் பார்த்தார். ஒரு எம்.எல்.ஏ.கூட அவரை ஆதரிக்காதது அவரது துரதிருஷ்டம்தான்..! 1989 ஜனவரி 7-ம் தேதியன்று ஜானகியம்மாள் தமிழகத்தின் முதல் பெண் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

 

132 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். சபாநாயகர் பி.எச்.பாண்டியனும், துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்பிரமணியனும் ஜானகியை ஆதரித்தனர். அதே சமயத்தில் அப்போது திமுகவின் பத்து உறுப்பினர்கள்  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்தற்காக அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது.

புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 1988, ஜனவரி 26- ல் நடத்தப்பட்டது. இன்றைக்குத்தான் பல ஆண்டுகள் கழித்து கோபாலபுரத்தில் கால் வைத்தார் ஆர்.எம்.வீரப்பன்..! கலைஞரை சந்தித்து அ.தி.மு.க.வின் ஜானகி தலைமையிலான ஆட்சிக்கு தி.மு.க.விடம் ஆதரவு கேட்டார்..!

நினைத்துப் பார்க்க முடியாத மாற்றம்.. எம்.ஜி.ஆர். மறைந்து சில நாட்களுக்குள்ளாகவே ஆட்சியைப் பிடிக்க ஆளாய் பறந்து, "தீய சக்தி" என்று வர்ணித்து, யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ, அதே நபரிடம் போய் ஆதரவு கேட்டார் எம்.ஜி.ஆரின் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன். கலைஞர் எப்போதும்போல் கட்சியின் மேல் மட்டத்தினருடன் கலந்தாலோசித்து சொல்வதாக வீரப்பனை அனுப்பி வைத்தார்.!


சட்டப் பேரவையில் தி.மு.க., இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. சபாநாயகர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை கட்சி கொறடா உத்தரவை மீறியதற்காக அவையிலிருந்து நீக்கினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே  சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது.  கூடவே ஜேப்பியாரின் தலைமையில் நுழைந்த ஒரு கும்பல் ஜானகியம்மாள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதாகச் சொல்லி ஜெயலலிதாவை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களை பதம் பார்த்துவிட்டனர். பலருக்கும் ரத்தக் காயம்..!

அவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார்.  ஆனால் இதனை மாநில கவர்னர் குரானா ஏற்கவில்லை..!

காங்கிரஸின் காலை வாரி விடும் கலாச்சாரத்தின்படி இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த மத்திய காங்கிரஸ் அரசு, ஜனவரி 31-ம் தேதியன்று ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை  பிரகடனப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. இரு பிரிவினரும் தனித்தனியாக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று பேட்டியளித்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அ.தி.மு.க.வாக ஏற்க மறுத்தது. அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.

சட்டப் பேரவையின் வாக்கெடுப்பின்போது ஜானகியம்மாளை ஆதரிக்க வேண்டும் என்று சிவாஜி, காங்கிரஸ் மேலிடத்திடம் வற்புறுத்தினார்.  ஆனால் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களோ.. "இதுதான் சரியான சந்தர்ப்பம்..  அ.தி.மு.க.வை பலமிழக்க வைத்தால், அது நமது காங்கிரஸுக்குத்தான் நல்லது. எதிர்காலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தலாம்" என்று மேலிடத்திடம் வற்புறுத்த.. ராஜீவ்காந்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக தடம் மாறினார். ஜானகியம்மாளுக்கு ஆதரவில்லை என்று காங்கிரஸ் முடிவெடுத்தது..! இதுவே ஜானகியம்மாளுக்கும், அதிமுகவுக்கும் பெரும் அதிர்ச்சி. இதனைவிட அதிர்ச்சி சிவாஜிக்கு..!

எம்.ஜி.ஆரின் மீதிருந்த அபிமானம், ஜானகியம்மாளின் மீதி்ருந்த பாசம் மற்றும் இரக்கத்தில் சிவாஜி இதனைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது ஜென்ம விரோதியான மூப்பனாருடன் மோதி அவரால் ஜெயிக்க முடியவில்லை. 

மிகுந்த வேதனையுடன் நான்கு பக்கங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.






இந்த நேரத்தில்தான் இடையில் நுழைந்தார் ஆர்.எம்.வீரப்பன்..! சிவாஜியை சந்தித்து தனிக் கட்சிக்கு தூபம் போட்டார். கட்சியின் செலவுகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், கட்சிக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், தேர்தல் நேரத்தில் தாங்கள் இருவரும் கூட்டணி வைத்துக் கொண்டால், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்றும் ஆசை வார்த்தை காட்ட.. இதுவரையிலும் தனக்கான மரியாதையைச் செய்யத் தவறிய காங்கிரஸுக்கு பாடம் புகட்ட நினைத்து சிவாஜியும் தலையாட்டினார். அதன் விளைவுதான் அவர் ஆரம்பித்த கட்சியான 'தமிழக முன்னேற்ற முன்னணி'..!

இனி ஜூ.வி.யின் அன்றைய நேரடி வர்ணனையைத் தொடர்ந்து படியுங்கள்..!

10.02.1988

கடைசியில், சிம்மக் குரலோன் புதுக் கட்சி தொடங்கியேவிட்டார்!  பிப்ரவரி மாதம் 10-ம் தேதி சென்னை - தி.நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான 'பிள்ளை’கள் கூடினார்கள்.  தொடக்க நாளன்று சிவாஜி மிகவும் டென்ஷ​னாகவே காணப்பட்டார். காரணம் - கட்சியின் பெயர்(தமிழக முன்னேற்ற முன்னணி)கூட 10-ம் தேதி, காலை 10 மணிவரையிலும்கூட முடிவாகாமல் இருந்ததுதான்..!

''சிவாஜிக்கு எந்தப் பதவியும் தராமல் அலட்சியப்​படுத்தி, அவர் எதிர்பார்ப்புகளை நிராகரித்தே வந்தது இந்திரா காங்கிரஸ். இந்த நிலையில் வேறு கட்சிக்கு உடனே போவது என்பது கௌரவக் குறைச்சல். எனவேதான், சிவாஜியைத் தனிக் கட்சி ஆரம்பிக்க ஆர்.எம்.வீ. வற்புறுத்தினார்.

இதனால், எதிர்வரும் தேர்தலில் இ.காங்கிரஸுக்குத் தேர்தல் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் போகலாம். சிவாஜி மன்ற ரசிகர்களுக்கு மட்டும்தான் கொடி கட்டவும், கூட்டத்துக்கு ஆள் திரட்டவும் தெரியும் என்பது மேலிடம் கவனிக்க மறந்த விஷயம். ஆனால், ஆர்.எம்.வீ. அதை மறக்காமல் செயல்​பட்டார்...'' என்று நம்மிடம் சொன்னார் ஜானகி கோஷ்டி ஆதரவாளர் ஒருவர்.

ஆனாலும், புதுக் கட்சித் தொடங்க சிவாஜி லேசில் உடன்படவில்லை. அவரை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், 'தமிழ் தேசம்’, 'தமிழர் காங்கிரஸ்’ 'சிவாஜி காங்​கிரஸ்’, 'தமிழக முன்னேற்றக் கழகம்’ என்று சுமார் 50 பெயர்களை சிவாஜியின் ஆதரவாளர்கள்  தேர்ந்து எடுத்து அவர் முன் வைத்தார்கள்.

''ஏம்ப்பா கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே, இவ்ளோ வேகமா செயல்படறீங்களே... இந்த வேகம் கடைசிவரை இருக்குமாப்பா?'' என்று கேட்டார் சிவாஜி. தொடர்ந்து, ''எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸ் பெயரை உபயோகப்படுத்த வேண்டாம். 'தேசியம்’கிற வார்த்தை வர்ற மாதிரி ஒரு பேரைத் தேர்ந்தெடுங்க...'' என்று சொன்னார். ஆனால், 'தேசியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த அனுமதி கிடைக்காது என்ற தகவல் வந்தது. கடைசியில் 'தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற பெயர் சிவாஜிக்குப் பிடித்துவிட்டது.

கட்சிக் கொடியின் நிறம், அதன் பொருள், கொள்கை போன்ற விஷயங்கள், வெங்கட்ரமணன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்) ஆகியோர் அடங்கிய ஒரு குழு முடிவு செய்து சிவாஜியின் ஒப்புதலைப் பெற்றது.

சிவாஜி மூலம் எம்.எல்.ஏ. பதவி பெற்றவர்கள் சிலர் இந்தப் புதுக் கட்சியில் சேராமல் நழுவியது குறித்து சிவாஜி வருத்தப்பட்டார். ''நம்பிக்கைத் துரோகம் பல ரூபத்திலே தொடருதேப்பா...'' என்றார்.

அருகில் இருந்த சைதை துரைசாமி, ''நாங்க இருக்கோம்ணே... கவலைப்படறதை விட்டுட்டுத் தலை​வருக்குரிய பந்தாவைக் காட்ட ஆரம்பிங்கண்ணே..'' என்றார்  சிவாஜியிடம்.

இதுபோல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையேதான் புதன்கிழமை தொடக்க விழா நடந்தது. சாலையின் முனையில் பிரமாண்டமான கட்-அவுட். அதில்கூடக் கவனமாக சிவாஜியின் வேஷ்டியில் இருந்த காங்கிரஸ் பார்டரை நீக்கி இருந்தார்கள்!

வீட்டுக்கு வெளியே பெரிய பந்தலும், வீட்டுத் தோட்டத்தில் ஷாமியானாவும் போட்டு அலங்காரம். காலை 8 மணியில் இருந்தே, ரசிகர்களின் கூட்டம். வந்தவர்கள் எல்லோருமே மிகவும் அந்நியோன்யமாக, சிவாஜி வீட்டின் எல்லா அறைகளுக்கும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள்.

மெயின் ஹாலில் சிவாஜி தன் மகன் ராம்குமாருடன் அமர்ந்திருந்தார். சிவாஜி மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாகத் தங்கள் படைகளுடன் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ 'தமிழக முதல்வர் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் எழுப்பி மாலை போட்டுவிட்டுச் சென்றார்கள்.

திருநெல்வேலி ரசிகர் மன்றத்தினர் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் போட, ராம்குமார் அவர்களை அருகே அழைத்து, ''இன்னும் என்னங்க... அண்ணன் சிவாஜிங்கிறீங்க... தலைவர் சிவாஜின்னு சொல்லுங்க...'' என்று உத்தர​விட்டதும், அடுத்து வந்தவர்கள் எல்லாம் 'தலைவர்’ கோஷமே எழுப்பினார்கள்.

புதுக் கட்சி உருவாக்கித் தலைவரான சிவாஜி, அன்றே வாரிசையும் அறிமுகப்படுத்திவிட்டாரா? அப்பாவுக்கு அருகில் இருந்த ராம்குமாரிடம், ''என்ன... நீங்களும் அரசியல் பிரவேசமா?'' என்றதும், ''நோ... நோ... அப்பாவுக்கு ஹெல்ப்பா இன்னிக்கு மட்டும்... அதுவும் இந்த புது அனுபவத்தை என்ஜாய் பண்றதுக்காகத்தான்...'' என்று சொல்லிவிட்டு, ''இதுல ஒண்ணும் தப்பில்லையே...'' என்று 'சிவாஜி’ பாணி​யிலேயே கேட்டார்.

ஒரு ரசிகர் வெகு ஆவேசமாய் வந்து தன் கையை பிளேடால் கீறி ரத்தம் தொட்டு, ''பாரதப் பிரதமர் டாக்டர் சிவாஜி...'' என்று உணர்ச்சிகரமாய்க் குரல் கொடுக்க... ராம்குமார், தளபதி சண்முகம், ராஜசேகரன் உட்பட எல்லோருமே, ''வாழ்க...'' என்றனர். தொடர்ந்து அந்த ரசிகர், ''துரோகி ராஜீவ்காந்தி...'' என்று கத்த, சிவாஜி மிகச் சத்தமாய்... ''வாழ்க...'' என்றார்.(பலே!)

தொடர்ந்து, ''எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன்... நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் ரொம்ப உயர்வா இருக்கணும்.  படிச்சவங்களும் பாராட்டற மாதிரி இருக்கணும். யாரையும் 'ஒழிக’ கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா... அதுவும் மறைந்த அந்த அன்னையோட பிள்ளையை - என்ன இருந்தாலும் ரொம்ப பெரிய பதவியிலே இருக்கறவரை, அப்படி சொல்லக் கூடாது. அரசியல்லே நாமளாவது நாகரிகத்தோட, நாணயத்தோட, நல்லோரோட கைகோத்து நடப்போம்...'' என்றார் கம்பீரமாக!

ஒரு மூதாட்டி - சுமார் 80 வயது இருக்கும்.  ''அப்பா... நானொரு அநாதை... அந்த மவராசன் - எம்.ஜி.ஆரு இருந்தவரைக்கும் எனக்குக் கொள்ளி போட வருவாருன்னு நெனைக்காட்டியும், எம் புள்ளையா நெனைச்சிருந்தேன்... இனி நீதாம்பா எம் புள்ளை...'' என்று அழுதபடியே ஏதேதோ பேச, சிவாஜி எழுந்து அந்த மூதாட்டியின் காலில் விழுந்து, ''உங்க ஆசீர்வாதம் கிடைக்கவே எனக்குக் குடுத்து வெச்சிருக்கணும். உங்க பிள்ளையாவே ஏத்துக்​கிட்டீங்களே... என் பாக்கியமம்மா... பாக்கியம்!'' என்றவர் உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, ''சாப்பிட்டீங்களாம்மா...'' என்று கேட்டு, சாப்பிட ஏற்பாடு செய்து அனுப்பி​னார்!

அடுத்து சிறுவர்கள் நான்கைந்து பேர் வந்து மாலை போட்டுவிட்டு, ''அண்ணே... எங்க ஏரியா முழுக்க உங்க பக்கம்தாண்ணே...'' என்றார்கள். சிவாஜி சிரித்தபடியே, ''உங்க ஏரியான்னா? உங்க வயசுப் பிள்ளைகளா? ஹூம்... உங்க ஆதரவு இருந்தா, டிஸ்ட்ரிபியூட்டருக்குத்தான் லாபம்... எனக்கு இல்லையேப்பா. ஆனா, பெரியவங்க சொல்றபடி கேட்டு நடக்கணும்... படிக்கிறீங்களா?'' என்று விசாரித்து, தட்டிக் கொடுத்து அனுப்பினார்.

காலை 10 மணியில் இருந்தே காத்திருந்த நிருபர்களில் ஒருவர், ''எப்போ சார் கட்சியைத் தொடங்கப் போறாரு...?'' என்றார். அதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், ''கொஞ்சம் பொறுங்க சார்... இன்னிக்குப் புதன்​கிழமை... பன்னிரெண்டு டூ ஒன்றரை ராகு காலம். அது முடிஞ்சதும் கரெக்டா 1.35-க்கு ஆரம்பிச்சிடலாம். நல்ல காரியத்தை நல்ல நேரத்துலே பண்ணுவோமே...'' என்று சமாதானப்​படுத்தினார்.

சரியாக மதியம் 1.40 மணிக்குக் கை கூப்பியபடியே மேடைக்கு அருகே வந்த சிவாஜி, பிள்ளையார் கோயிலை நமஸ்கரித்துவிட்டு மகன் ராம்குமாருடன் மேடை ஏறினார். சிவாஜியை வாழ்த்தும் கோஷமும், பட்டாசு வெடிக்கும் கோஷமுமாகத் தூள் கிளம்பியது.

முதலில், தளபதி சண்முகம் புதிய கட்சியின் தலைவராக சிவாஜியை முன்மொழிந்தார். அதை ஒவ்வொரு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்களும் வழிமொழிந்தார்கள். பலரும் தம் பேச்சின் முடிவில் 'ஜெய்ஹிந்த்’ என்று சொன்னார்கள். சண்முகம், ''பழக்க தோஷம்... லேசிலே போகுமா...'' என்று சொல்லிச் சிரித்தார்.

கடைசியில் சிவாஜி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டு, புதுக் கட்சி ஆரம்பித்ததற்கான அறிக்கையை வாசித்து முடித்தார்.

மேடையைவிட்டு இறங்கும் சமயம் ஒரு தயாரிப்பாளர் சிவாஜியின் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே, ''பூஜையைப் பிரமாதமா போட்டி​ருக்கீங்க அண்ணே...'' என்றார். சிவாஜி தனக்கே உரிய பாணியில், ''வாஸ்தவம்தான்... வழக்கப்படி நம்ம பிள்ளைங்க காப்பாத்துவாங்கங்கற நம்பிக்கைதான்...'' என்றார்!

காப்பாற்றுவார்களா?
''எட்டப்பர்களை ஒழிக்க வந்த கட்டபொம்மன்!''

காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த கூட்டம், அவர் காங்கிரஸில் இருந்த​போது இருந்ததைவிட, உணர்ச்சிபூர்வமாகவே பூரித்திருந்தது. காங்கிரஸ் பிரமுகர்களின் கார்கள் மட்டும் மிஸ்ஸிங்.

'வருங்கால முதல்வரே! தமிழினத் தலைவரே! வருக வருக’ போன்ற ஸ்லோகங்கள் சிவாஜியைத் தனி உலகத்​துக்கு அழைத்துச் சென்று இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தில் பிரஸ் மீட் வைத்தார். அங்கு என்னென்ன சொன்னாரோ, அது அப்படியே திருமண விழாவிலும் பிரதிபலித்தது.

''தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை ராஜினாமா செய்ய வைத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்த சிவாஜி, குருஷேத்திர யுத்தத்தில், பாண்டவர்களுக்கு உதவிய கண்ணனைப் போன்றவர். அவரை எங்கள் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டோம்!'' என்றார் செல்வேந்திரன்.

மணமக்களை வாழ்த்த வந்த ஒருவர், ''தலைவர் சிவாஜி, எட்டப்பர்களின் கொட்டத்தை அடக்க வந்த கட்டபொம்மன்!'' என்றார். ''எங்கள் இதய தெய்வம் டாக்டர் சிவாஜி!'' என்றார் பழக்கடை பாண்டியன்.

கடைசியில் பேசிய சிவாஜியின் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. ''நான் 30 வருஷமா கட்சி கட்சினு அலைஞ்சு, வேறு எதையும் சிந்திக்காமல் போயிட்டதால, சொந்தக்காரப் பயலுக எவனுமில்லாமப் போயிட்டானுக... (கூட்டம், 'நாங்கள் இருக்கிறோம்’ என அலறியது.) நம்மகிட்ட 3,60,000 மன்ற மறவர்கள் இருக்காங்க. ஒண்ணுமில்லாத கட்சி இப்போ காங்கிரஸ்தான். பொய்யை வெச்சே ஒரு கட்சி இருக்கிறதுன்னா, அது காங்கிரஸ்தான்.

இலங்கைப் பிரச்னையில் இவங்க ஆதரவும் கையெழுத்தும் எப்படி வாங்கினாங்கங்கிறது மத்தவங்களுக்கு வேணாத் தெரியாம இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்குமா? எனக்கு அங்கே மரியாதை கிடைக்கலேப்பா.  தேசியம், தேசியம்னு... பம்பாய் நம்மது, காஷ்மீர் நம்மது, டில்லி நம்மதுன்னு நினைச்சு என்னத்தைக் கண்டேன்? எல்லாம் கைவிட்டிடுச்சி. பார்த்தேன்... இனி இந்த தமிழ் மக்கள்தான்! அவங்க காலடியில வந்து விழுந்திடுவோம்கிற முடிவுக்கு வந்துட்டேன். தோளில்வெச்சு சுமந்தா, சுமக்கட்டும். இல்லாட்டி, காலில் போட்டு மிதிச்சாலும் மிதிக்கட்டும். ஏன்? 30 வருஷம் காங்கிரஸுக்கு உழைச்சதுக்கு தண்டனை வேணுமே! என் உசுரு போறதும் இந்த தமிழ் மக்கள் மடியிலேயே போகட்டும். என்ன செய்யறது... காலங்கெட்ட நேரத்துலதான் புத்தி வருது!

சரி நான்தான் வேஸ்ட் பண்ணிட்டேன். நீங்களாவது (எதிர்வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு காங்கிரஸ் பிரமுகரைப் பார்த்து) காலாகாலத்துல வந்து சேருங்க. (கரவொலி) இல்லேன்னா, அங்கேயே கிடந்து சாவுங்க. பாவம் இவரு... டெல்லிக்குக் கொண்டுபோன ஏலக்காய் மாலையைச் சேமிச்சு வைச்சிருந்தா, பெரிய ஏலக்காய்க் கடையே வைக்கலாம். என்ன ஆச்சு... ஒண்ணும் ஆகலை...''

அந்த மணமேடையை அரசியல் மேடையாக்கி, முழு அரசியல்வாதிக்கு உரிய தகுதியைப் பெற்றுவிட்டார் சிவாஜி!

நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011

மீண்டும் நான்..!

1989 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க.-ஜனதா தளம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன. ஜெயலலிதா அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியில் நின்றன. ஜானகி அ.தி.மு.க.வும், நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்னணியும் கூட்டணி வைத்திருந்தன. இந்த நேரத்தில் மருங்காபுரி மற்றும்  மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாகக் காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை.

1989, ஜனவரி 21-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 69.69 % வாக்குகள் பதிவாகின. தி.மு.க. கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏறியது..! ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு 32 தொகுதிகள் கிடைத்தது. ஜானகி எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள்தான் கிடைத்தன. நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை..! சிவாஜியே திருவையாறு தொகுதியில் தோல்வியடைந்தது மிகப் பெரும் சோகம்..!

திமுக
இடங்கள்
அதிமுக (ஜெ)
இடங்கள்
மற்றவர்கள்
இடங்கள்
திமுக
150
அதிமுக (ஜெ)
27
அதிமுக (ஜா)
2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
15
இந்திய கம்யூனிஸ்ட்
3
காங்கிரசு
26
ஜனதா கட்சி
4


அதிமுக
2




சுயேட்சைகள்
5
மொத்தம் (1989)
169
மொத்தம் (1989)
30
மொத்தம் (1989)
35
மொத்தம் (1984)
24
மொத்தம் (1984)
--
மொத்தம் (1984)
17

அ.தி.மு.க.வின் ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வழக்கமான ஆதரவு சிதறிவிட்டது. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட தி.மு.க. குறைவான வாக்குகளைப் பெற்றாலும், பெருவாரியான இடங்களில் வென்றது.

சிவாஜியை எதிர்த்து தி.மு.க.வின் சார்பில் துரை சந்திரசேகரன் என்னும் புதுமுகம் போட்டியிட்டார். தேர்தலில் துரை சந்திரசேகர் பெற்ற வாக்குகள்  36981. சிவாஜி வாங்கியது 26338. 10643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் சிவாஜிகணேசன்..! இத்தோடு நடிகர் திலகத்தின் தனிக்கட்சி ஆசையும் முடிவுக்கு வந்தது..!

சிவாஜியின் வலது, இடமாக சினிமாவுலகில் திகழ்ந்து வந்த நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜனும், வி.கே.ராமசாமியும்.. இவர்கள் இருவருமே சிவாஜியின் கட்சியில் இணைந்தார்கள். மேஜர்தான் கட்சியின் பொருளாளர் என்று நினைக்கிறேன்..! தேர்தலில் இருவரும் பிரச்சாரமும் செய்தார்கள்.

கட்சி தேர்தலில் படு தோல்வியடைந்தவுடன் மேஜர் சுந்தர்ராஜன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக பத்திரிகைகளுக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு அக்கடிதத்தை சிவாஜிக்கு அனுப்பி வைத்தார். இதனை மிகப் பெரிய அவமானமாகக் கருதிய சிவாஜி, அன்றோடு மேஜருடனான தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டார். மேஜர் விரும்பியும், அவருடன் பேச மறுத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்த மேஜர் சுந்தர்ராஜனை சந்திக்க விரும்பாமல் மாடியிலேயே உட்கார்ந்து கொண்ட சிவாஜியை யாரும் சமாதானப்படுத்த முடியவில்லை. அன்றைக்கு சிவாஜியின் வீட்டில் இருந்து வெளியேறிய மேஜர் சுந்தர்ராஜன், திரும்பவும் சிவாஜி இறந்த தினத்தன்று அவருக்கு மாலை போடத்தான் அந்த வீட்டிற்கு வந்தார்.

வி.கே.ராமசாமியும் அந்தத் தேர்தல் தோல்வியோடு தனது அரசியல் ஆசையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு சினிமாவுக்கே போய்விட்டார்..! சிவாஜி இறந்த பின்பு அடுத்தடுத்து முதலில் வி.கே.ராமசாமியும், பின்பு மேஜர் சுந்தர்ராஜனும் இறந்தது சோகம்தான்..!

"சிவாஜி தேர்தலில் பிரகாசிக்காததற்குக் காரணம் அவருக்குப் பொய் சொல்லத் தெரியாது.." என்றார் சோ. சிவாஜி இறந்த தினத்தன்று அவருக்கான இரங்கல் அஞ்சலியிலும், சோ இதைத்தான் குறிப்பிட்டார். "சிவாஜி ஒரு பச்சைக் குழந்தை.. ஒரு குழந்தை எப்படி பேசுமோ. என்ன செய்யுமோ அதைத்தான் தன் வாழ்க்கை முழுவதும் செய்தார். பேசினார்.. இதனால்தான் அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.." என்றார் சோ..!

இதையேதான் இன்றுவரையிலும் அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது திண்டுக்கல் வந்த சிவாஜியை நாகல்நகர் பொதுக்கூட்டத்தின்போது மிக அருகில் பார்த்து பரவசமடைந்தது எனக்கு இப்போதும் நியாபகத்துக்கு வருகிறது.

அன்றைக்கு திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கி வித்தியாசமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் சிவாஜி. “இத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்...” என்றெல்லாம் பேசியவர், ஜெயலலிதாவை பற்றி எதையும் சொல்லவில்லை. இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அம்மு பாவம்.. நல்ல பொண்ணு. ஏதோ சேர்வார் சேர்க்கை சரியில்லை. அதான் இப்படி செய்யுது..” என்று மனதில் இருந்ததை பளிச்சென்று சொன்னார் சிவாஜி..!

ஏற்கெனவே சிவாஜி, ஜெயலலிதாவை விமர்சிக்காமல் தவிர்ப்பது பற்றி கோபத்தில் இருந்த ஆர்.எம்.வீரப்பன், இதைக் கேள்விப்பட்டு இன்னமும் கடுப்பாகி, சிவாஜி தேர்தல் செலவுகளுக்காகக் கேட்டிருந்த பணத்தினை கொடுக்க வேண்டாம் என ராமசாமி உடையாரிடமும், சைதை துரைசாமியிடமும் சொல்லிவிட்டாராம்.. தொலைந்தது கதை..!

கடைசி நேரத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு எதிரேயிருந்த சிவாஜி கார்டனில் ஒரு பகுதியை விற்று 5 கோடி ரூபாய் அளவுக்கு செலவுகளைச் செய்தார் சிவாஜி. அத்தனையும் காலி..!

பிறிதொரு முறை ஒரு திருமணத்தன்று மூப்பனாரின் அருகில் அமர்ந்திருந்தபோது “போச்சு போச்சு.. 5 கோடி போச்சு..” என்று உச்சுக் கொட்ட மூப்பனார் சிவாஜியின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனது வரலாற்றுச் சம்பவம்..! 


நடிக்கத் தெரிந்தவர்கள் நடிக்கலாம். அரசியல் செய்யத் தெரிந்தவர்கள் அரசியல் செய்யலாம். இரண்டும் தெரிந்தவர்கள் இரண்டையும் செய்யலாம் எம்.ஜி.ஆரை போல். தெரியாதவர்கள் தெரிந்ததை மட்டும் செய்யலாம். இதற்கு முழு முதற் உதாரணம் நடிகர் திலகம் சிவாஜிதான்..!

தி.மு.க.வை முந்திய அ.தி.மு.க...!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தலைப்பைப் பார்த்தவுடன் அவசரமாக கிளிக்கிவிட்டு உள்ளே வந்திருக்கும் அன்புத் தோழர்களே.. இது கண்டிப்பாக செம மொக்கைப் பதிவுதான்..! மன்னியுங்கள்..!

இந்தத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையில் முந்திய அ.தி.மு.க. இன்னுமொரு விஷயத்திலும் முந்தியுள்ளது. அதைப் பற்றியானதுதான் இந்தப் பதிவு..!

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க., - காங்கிரஸ், பா.ம.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள், ஆமதாபாத்தை தலைமை இடமாகக் கொண்டும், டில்லியிலிருந்தும் செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.

679 வேட்பாளர்களில் 125 பேர் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளதும், இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரிய வந்துள்ளன. இந்த வேட்பாளர்களில் பலர் கோடீஸ்வரராகவும் உள்ளனராம்.

தி.மு.க., சார்பில் போட்டியிடும் 119 பேரில், 24 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை ஒத்துக் கொண்டுள்ளனர்.

பா.ம.க. சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தே.மு.தி.க.வின் வேட்பாளர்களில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 63 பேரில், 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 169 வேட்பாளர்களில், 19 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில், 3 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் 3 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் 1 நபர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ஆனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களில்  43 பேர்  மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.

இதுதான் இந்தப் பட்டியலில் அதிகம்..!

ஆக மொத்தம் தி.மு.க.வை இந்த ஒரு விஷயத்திலாவது அ.தி.மு.க. முந்தியிருக்கிறது என்று ரத்தத்தின் ரத்தங்கள் நிச்சயம் பெருமைப்படலாம்..!

கிரிமினல் பின்னணியில், நாகப்பட்டினம் பி.ஜே.பி. வேட்பாளர் முருகானந்தம்தான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் மீது சீரியஸ் வழக்குகள் 13, ஐ.பி.சி. வழக்குகள் 34 உள்ளன. இவற்றில் 5 கொலை முயற்சி வழக்குகளும், பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக 3 வழக்குகளும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தலா ஒரு வழக்கும் உள்ளன!


அடுத்த இடத்தை ஜெயங்கொண்டம் பா.ம.க. வேட்பாளர் ஜெ.குருநாதன் என்ற காடுவெட்டி குரு பிடிக்கிறார். இவர் மீது சீரியஸ் ஐ.பி.சி. கேஸ் 8, சாதாரண ஐ.பி.சி. வழக்குகள் 38 உள்ளன. இதில் ஒரு கொலை முயற்சி வழக்கு, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக 3 வழக்குகள், ஆபாசமாகப் பேசியதாக 2 வழக்குகள் உள்ளன!

அந்தியூர் தி.மு.க. வேட்பாளர் என்.கே.பி.பி.ராஜா மீது திருட்டு தொடர்பான 2 வழக்குகள் (ஐ.பி.சி. செக்ஷன் 379), அவதூறாகப் பேசிய 2 வழக்குகள், கடத்தல் தொடர்​பான ஒரு வழக்கு, பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கு ஆகியவை நிலுவையில்!

பட்டுக்கோட்டை தே.மு.தி.க. வேட்பாளர் என்.செந்தில்​குமார் மீது மூன்று கொலை முயற்சி வழக்குகளும், பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளது.

ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும், மற்றும் பயங்கர ஆயுதம் வைத்துத் தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளன.

திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி மீது இரு தரப்பினர் இடையே பகைமையைத் தூண்டியது உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. (தாத்தாவின் இத்தனை வருட சர்வீஸ்ல 3 கேஸ்தானா..?)

ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் ஜெயலலிதா மீது சீரியஸ் ஐ.பி.சி. வழக்குகள் எதுவும் இல்லை என்றாலும், அவதூறு, சொத்துக் குவிப்பு உள்ளிட்ட 8  வழக்குகளும் உள்ளன.

நன்றி : ஜூனியர் விகடன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைள்

தி.மு.கழகம் குடும்பச் சொத்தா..?

26-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'இந்திரா காந்தியின் வாரிசு அரசியலுக்கு வரலாம்... என் மகன் அரசியலுக்கு வரக் கூடாதா? என்.டி.ஆர் பேரன் நடிக்கலாம், என் பேரன் நடிக்கக் கூடாதா?' - தங்களது குடும்பத்தைப்  பற்றி யாராவது விமர்சனம் செய்தால், இப்படிப் பேசி வாரிசு அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், ''உங்களுக்கு அடுத்து ஸ்டாலின்தான் கட்சித் தலைவரா?'' என்று கேட்டால், ''திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல...'' என்று சொல்வார். அதாவது, கேள்வி கேட்கும் சூழ்நிலையைப் பொறுத்தே அவரது பதில்கள் அமையும்!

 'கட்சித் தலைவருக்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை’ என தி.மு.க-வின் அமைச்சர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வாரிசு அரசியலை வளர்க்கிறார்கள். காலம் காலமாகக் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் அடிமட்டத்திலேயே கிடக்க... வாரிசு என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக்கொண்டு, கட்சியில் பதவிக்கு வந்து 'சரசர’வென உச்சத்தைத் தொட்டுவிடப் பலரும் துடிக்கிறார்கள். கழகக் குடும்பங்களின் கதை இதோ...!

மருமகன் மட்டும் போதாது!


சுகாதாரத் துறை அமைச்சரும், கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொடக்க காலத்தில் இருந்து தன் அக்காள் மகன் செந்தில்​குமாரைத் தன் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினார். 'மருமகன் மட்டும் போதாது’ என நினைத்த பன்னீர்செல்வம், தற்போது தனது 21 வயது மகனான கதிரவனை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு புதிய வாரிசாக வளர்த்து வருகிறார். 'கட்சி போஸ்டர்கள், பேனர்களில் கதிரவனின் படம் மெகா சைஸில் இடம் பெற வேண்டும்’ என்பது எம்.ஆர்.கே-வின் தற்போதைய வாய்மொழி உத்தரவு.  'நாளைய கடலூர் மாவட்டமே’, '2016-ல் தமிழக விடிவெள்ளியே...’ என்றெல்லாம் கதிரவனை வாழ்த்தும் பேனர்கள், கடலூர் மாவட்டம் முழுக்க பளபளக்கிறது!

சிகாமணி அண்டு கோ!


தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்​முடியின் மகன் கவுதம் சிகாமணி தளபதி நற்பணி மன்றத்தின் தலைவர். அப்பா நடத்தும் சூர்யா பொறி​யியல் கல்லூரியின் தாளாளரும் இவரே. கட்சி விழாக்கள், அரசு விழாக்களில் தனது ஆதரவாளர்களுடன் ஆஜராகி​விடுவார் கவுதம். 'தளபதியின் தளபதியே’, 'உயர் கல்வியின் வாரிசே...’ என்றெல்லாம் இவரது ஆதரவாளர்கள் முழங்குவார்கள். இப்போதெல்லாம் விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வினர் அடிக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும் பொன்முடி, பொன்முடியின் மனைவி, கவுதம் சிகாமணி, அவர் மனைவி, குழந்தைகள், பொன்முடியின் தம்பிகளான அந்த சிகாமணி, இந்த சிகாமணி என்ற 'சிகாமணி வகையறா’க்களின் படங்கள் கட்டாயம் இடம் பெறுகின்றன. பொன்முடி, வரும் தேர்தலில் விழுப்புரம் தொகுதியை மகனுக்கு விட்டுக் கொடுத்து,  தொகுதியையே மாற்றிக் கொள்ளக்கூடும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது!

'கம்பன் எங்கே போனான்?'


விழுப்புரத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் நடந்து திருவண்ணாமலைக்கு வந்தால்... அமைச்சர் தண்டராம்பட்டு எ.வ.வேலு அமைத்த கல்வி வளாகங்களைக் கவனித்து வருகிறார் அவரது மகன் கம்பன். அதை மட்டும் பார்த்தால் போதுமா? தனக்குப் பின்னால் மாவட்டக் கழகம் இவரது கைக்குத்தான் போக வேண்டும் என்று வேலுவும் விரும்புகிறாராம். கட்சிக்காரர்கள் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம், 'கம்பன் எங்க போயிட்டான். அவனை வரச் சொல்லுங்க...’ என கூப்பிட்டு பக்கத்தில் வைத்துக்கொள்வாராம் வேலு. கம்பன் பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு கலைக் கல்லூரியின் இயக்குநரான கம்பன், இப்போதெல்லாம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கிறார். விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்று நடுதல் என்று கட்சியில் வேரூன்றி வருகிறார்!

கில்லாடி தம்பி!


அமைச்சர் துரைமுருகனின் அரசியல் வாரிசாக அவரது தம்பி துரைசிங்காரம் வளர்ந்துகொண்டு இருக்கிறார். மாவட்டம் முழுவதும் தொண்டர்களால் நன்கு அறியப்பட்ட சிங்காரம், மேல்மட்ட அரசியல் செய்வது, தன் அண்ணன் கலந்துகொள்ள முடியாத தொகுதி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவது போன்றவற்றைச் செய்கிறார்.  அதே சமயம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் தற்போது அரசியலை ஏக்கமாகப் பார்த்து வருகிறார். 'தம்பியா... மகனா?’ என்ற சிக்கல் துரைமுருகனுக்கு வரலாம்!

துணைவியின் மகன்!


அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி​யின் மகன் ராஜாவுடன், வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவி லீலாவின் மகன் பிரபுவும் அரசியலில் தற்போது வளர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சேலத்தில், முதல்வர் தலைமையில் கோலாகலமாக பிரபுவுக்குத் திருமணம் நடந்தது. வீரபாண்டி ஆறுமுகம் பிறந்த நாளில்... அநாதை இல்லத்துக்கு சாப்பாடு, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் போவதாக போஸ்டர் அடித்து பிரகடனப்படுத்திக்​கொண்டது பிரபு தரப்பு. பிரபு தோற்றத்தில் வீரபாண்டியாரின் சாயலில் இருப்பதால், 'சின்ன வீரபாண்டியாரே!’ என்றுதான் கட்சி வட்டாரம்  அழைக்கிறது. இப்போது கட்சியின் போஸ்டர்​களிலும் பிரபுவின் படம் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது!

மகனா... மருமகனா?


பைந்தமிழ் பாரி - அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன். கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத் தலைவர். இவரையே தனது அரசியல் வாரிசாகக் கொண்டுவர தொடக்கத்தில் திட்டமிட்டார் பொங்கலூரார். ஆனால், பரபர அரசியலில் சின்னச் சின்னச் சர்ச்சைகளில் பாரி சிக்கிக்கொண்டார். இதைத் தொடர்ந்து தன் மருமகன் டாக்டர் கோகுலைக் கொண்டு வந்திருக்கிறார் அமைச்சர். கோகுல் துணை முதல்வருக்கும் மிக நெருக்கமானவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதிக்கு அவரை வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு வந்துவிட்டது கட்சித் தலைமை. ஆனால், பொங்கலூராரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், வேட்பாளர் மாற்றப்பட்டார் என்று தகவல். இந்த முறை, 'ஸீட்டை மகனுக்காகக் கேட்பதா... அல்லது மருமகனுக்காகக் கேட்பதா?’ என்ற புரியாத குழப்பத்தில் இருக்கிறாராம் பொங்கலூரார்!

ஆணையிட்டால் அலறும்!


கே.என்.நேருவுக்கு நிகரான மரியாதை அவரது சகோதரரான கே.என்.ராமஜெயத்துக்கு திருச்சி மாவட்டக் கட்சிக்காரர்களால் வழங்கப்படுகிறது. ஏராளமான நிலபுலன்கள், ஆசியாவின் நவீன அரிசி ஆலைகள், பொறியியல் கல்லூரி நிர்வாகம், ஜனனி குரூப் எனப் பல தொழில்கள் இருப்பதாலும், அண்ணன் நேருவுக்கு சகலமுமாக இருப்பதாலும், இவரிடம் மரியாதை அளிப்பவர்களைவிட... பயத்தில் பம்மிக் கிடப்பவர்கள் அதிகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட முயற்சித்தார் ராமஜெயம். ஆனால், அதை நெப்போலியன் தட்டிப் பறித்தார் (அவரும் இவர்கள் குடும்பத்துக்காரர்தானே!). இப்போது தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்  ராமஜெயம்!

கலக்கும் கருணைராஜா!


திருச்சி தி.மு.க-வில் நேருவுக்கு சீனியர் வனத் துறை அமைச்சர் செல்வராஜ். இடையில், ம.தி.மு.க-வுக்குப் போய்விட்டு வந்ததால், திருச்சி மாவட்டத்தில் அவருக்கு கொஞ்சம் இறங்கு முகமாகிவிட்டது. ஆனால், அமைச்சராகி மீண்டும் தன் பவரைத் தக்க​வைத்து வருகிறார். இவரது மகன் கருணைராஜா திருச்சி புறநகரில் கலக்குகிறார். கான்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்து வந்தாலும், சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்தி முத்தரையர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். செல்வராஜின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்தால், கட்டாயம் கருணைராஜாவின் படத்தையும் போட்டு, இனி அண்ணனின் அரசியல் வாரிசு இவர்தான் என்று சொல்லி புளகாங்கிதம் அடைகிறார்கள்!

'உனக்கு இன்னும் வயசு இருக்கு!'


அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தம்பி, கே.கே.எஸ்.எஸ்.வி.டி. சுப்பாராஜ் விருதுநகர் மாவட்டத்துக்கு அறிவிக்கப்படாத அமைச்சர்! இந்த முறை தனக்கு ஸீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அண்ணனிடம் கறாராகவே சொல்லி இருக்கிறாராம் சுப்பாராஜ். தம்பி ஒரு பக்கம் எம்.எல்.ஏ. கனவில் மிதக்க... அமைச்சரின் மகன் ரமேஷுக்கும் அதே ஆசை. 'உனக்கு இன்னும் வயசு இருக்குடா தம்பி. சித்தப்பாவும் ஸீட் கேட்குறாரு. அதனால், நீ கொஞ்சம் பொறுமையா இரு...’ என மகனை அடக்கிக்கொண்டு இருக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்! ரமேஷ் என்ன நினைக்கிறார் என்பது தேர்தலில் தெரியும்!

விடாப்பிடி அப்பா!


அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் சுப.த.சம்பத், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். தந்தைக்குத் தொகுதி தரப்படும்போது, தனியாகத் தனக்கும் கேட்கும் வழக்​கம் இதுவரைக்கும் சம்பத்துக்கு இல்லை. இம்முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்​பதில் உறுதியாக இருக்கிறார். 'எனக்கு ஸீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என் மகனுக்கு ஸீட் கொடுத்தே ஆக வேண்டும்’ என்பதில் தங்கவேலன் விடாப்பிடியாக இருக்கிறாராம். தங்கவேலனுக்கு வயதாகிவிட்டதால் இந்தத் தேர்தலில் அவர் மகனை களத்தில் இறக்கிவிட்டு அரசியலில் அமைதியாகிவிடுவார் என்றே எதிர்​பார்க்கப்படுகிறது!

ஐ.பி.எஸ்-க்கு மரியாதை!


திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் வாரிசு ஐ.பி.செந்தில்குமார். கட்சி வட்டாரத்​திலோ, 'ஐ.பி.எஸ்.’ என்று சொன்னால் போதும்! கடந்த ஐந்து வருடங்களில் ஐ.பி.எஸ்-ஸின் வளர்ச்சி அசுர வேகமானது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐ.பி.எஸ். தலை​யீடு இல்​லாத அரசுத் துறைகளே இல்லை. கட்சிக்​காரர்​களும் சரி... அதிகாரிகளும் சரி... அமைச்​சருக்கு என்ன மரியாதை கொடுக்கிறார்​களோ, அதைவிட ஒரு மடங்கு மரியாதை ஐ.பி.எஸ்-க்கு அதிக​மாகவே கொடுக்கிறார்கள். இரண்டு பேருமே இப்போது தொகுதியை எதிர்பார்க்கிறார்கள்!

'எனக்கு பிறகு இவன்தான்!'


கோ.சி.மணிக்கு வயதாகிவிட்டது. அடிக்கடி உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. அதனால், தன் மகன் இளங்கோவனைக் கட்சி​யில் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். தான் போகும் இடமெல்லாம் இளங்கோவனையும் அழைத்துக்​கொண்டு போய், 'எனக்குப் பிறகு எல்லாமே இவன்தான்... நீங்கதான் இவனைப் பொறுப்பா பார்த்துக்கணும்...’ என்று அறிமுகப்​படுத்துகிறாராம்.  'இனிமே எனக்கு ஸீட் வேண்டாம் தலைவரே... எம் பையனுக்கு ஸீட் கொடுத்துடுங்க!’ என்று கருணாநிதியிடம் இவர் சொல்லிவிட்டாராம்!

பேராசிரியரும்..!


நிதி அமைச்சர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், இம்முறை தேர்தலில் நிற்பதற்கான ஏற்பாடு​களில் இருக்கிறார். கடந்த எம்.பி. தேர்தலிலேயே தனக்கான கோட்​டாவாக வெற்றியழகனுக்கு வாய்ப்பை எதிர்பார்த்தார் அன்பழகன். இந்த முறையும் கேட்பார். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைத் தேர்தலில் கடும் போட்டிக்கு நடுவே வென்ற வெற்றியழகன், கிரானைட் தொழிலில் இருக்கிறார். அன்பழகன் நிற்கவில்லை என்றால் வெற்றியழகன் நிச்சயம் நிற்பார்!

சமீபத்தில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி இல்லத் திருமணத்தை நடத்திவைத்த கருணாநிதி, ''அமைச்சராக இருந்த பிச்சாண்டி, அதன் பிறகு அந்தப் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக்​கொடுத்துவிட்டார். மற்றவர்களுக்கு வழி விடுகின்ற இந்தப் பெருந்தன்மை எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை!'' என்று பேசியிருக்கிறார்!

யாருக்கு யார் விட்டுக்​ கொடுக்கிறார்கள் என்ற வீட்டு விவகாரத்தைவிட, மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நாட்டு விவகாரம்தான் கழக வாரிசுகளின் தகுதிக்கு மார்க் போட வேண்டும்!

ஒன்று மட்டும் நிச்சயம்... 'கட்சி என்ன குடும்பச் சொத்தா?' என்று இனிமேல் தி.மு.க-வில் யாரும் உரக்கப் பேச முடி​யாது!

நன்றி : ஜூனியர்விகடன் - 02-03-2011

விரிவுபடுத்தப்பட்ட கொள்ளைக் கும்பல் - புதிய பட்டியல்..!

26-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 19-ம் தேதியன்று தனது கொள்ளை அமைச்சரவையில் புதிதாக மூன்று ராஜாங்க மந்திரிகளை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் நமது மாண்புமிகு பிரதம மந்திரி மன்னமோகனசிங்..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா, பஞ்சாப்பைச் சேர்ந்த அஷ்வினி குமார், கேரளாவின் கே.சி.வேணுகோபால் ஆகிய மூவர்தான் புதிய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.


1996-ல் மத்தியில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் மந்திரியாக இருந்த பெனிபிரசாத்வர்மா, இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரியாக மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு ஒதுக்கப்பட்ட துறை உருக்கு..!

அஷ்வினி குமார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கு துணை அமைச்சராகவும், கே.சி.வேணுகோபால் மின்சாரத் துறையின் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு கூடவே தனது அமைச்சரவைக் கும்பலில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார் மன்மோகன்.. தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக இருந்த பிரபுல் பட்டேல், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் சல்மான் குர்ஷித் மூவரும் கேபினட் அமைச்சராகியுள்ளனர்.

விமானப் போக்குவரத்துத் துறையின் தனிப் பொறுப்பை வகித்து வந்த  பிரஃபுல் பட்டேலுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு அவருக்கு கனரக தொழில்சாலைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இணையமைச்சர்களாக இருந்து இதுவரை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் அமைச்சராக இருந்த வயலார் ரவி விமான போக்குவரத்துத் துறையின் தனி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா பெரு நிறுவன விவகாரங்கள் துறையின் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஜெய்பால் ரெட்டி வகித்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கமல் நாத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. கமல் நாத் வகித்த தேச சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சக பொறுப்பு சி.பி.ஜோஷிக்கு அளிக்கப்பப்ட்டது.

குர்ஷித் ஆலம்கான் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெருநிறுவனங்கள் துறை முரளி தியோராவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறை தொடர்ந்து குர்ஷித்திடம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜய் மக்கான், இ.அகமது, பி.பி.வர்மா ஆகியோர் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையைச் சேர்ந்த என்.நாராணசாமி, பிரிதிவிராஜ் சவான் வகித்த பிரதமர் அலுவலக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். விலாஸ் ராவ் தேஷ்முக் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.கில் புள்ளி விவரத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விளையாட்டு, இளைஞர் நலம் துறை அஜித் மக்கானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து இப்போது மன்னமோகனின் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேபினட் அந்தஸ்தில் 35 அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாக 6 பேரும், துணை அமைச்சர்களாக 37 பேரும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரவிருக்கும் சில மாநிலங்களின் தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக்கேற்ப கூடலாம்.. அல்லது குறையலாம்..



தற்போதைய மத்திய மந்திரிகளின் துறை விவரங்கள் :-

1. மன்மோகன்சிங் : பிரதமர் - பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்சன் திட்டம். அணுசக்தி, விண்வெளி ஆய்வு துறைகள்

கேபினட் மந்திரிகள்

2. பிராணாப்முகர்ஜி : நிதி

3. சரத்பவார் : விவசாயம் மற்றும் உணவுபதப்படுத்தும் தொழில்கள்

4. ஏ.கே.அந்தோணி : ராணுவம்

5. ப.சிதம்பரம் : உள்துறை

6. எஸ்.எம்.கிருஷ்ணா : வெளியுறவு துறை

7. மம்தாபானர்ஜி : ரெயில்வே

8. குலாம்நபி ஆசாத் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

9. சுஷில்குமார் சிண்டே : மின்சாரம்

10. எம்.வீரப்பமொய்லி : சட்டம் மற்றும் நீதித் துறை

11. எஸ்.ஜெய்பால்ரெட்டி : பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

12. கமல்நாத் : நகர்ப்புற வளர்ச்சித் துறை

13. வயலார் ரவி : வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன், சிவில் விமான 
      போக்குவரத்து.

14. முரளி தியோரா : கம்பெனி விவகாரம்

15. கபில்சிபில் : மனிதவள மேம்பாடு, தொலை தொடர்பு மற்றும் தகவல் 
      தொழில் நுட்பம்

16. அம்பிகா சோனி : தகவல் ஒலிபரப்பு

17. பி.கே.ஹாண்டிக் : வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை

18. ஆனந்த் ஷர்மா : வர்த்தகம் மற்றும் தொழில் துறை

19. வீரபத்திரசிங் : மிகச்சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்

20. விலாஸ்ராவ் தேஷ்முக் : கிராமப்புற மேம்பாடு- பஞ்சாயத்து ராஜ்

21. சி.பி.ஜோஷி : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை

22. குமாரி செல்ஜா : வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, கலாசாரம்

23. சுபாத் காயந்த் சகாய் : சுற்றுலா

24. எம்.எஸ்.கில் : புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம்
 
25. ஜி.கே.வாசன் : கப்பல் துறை

26. தயாநிதிமாறன் : ஜவுளித் துறை

27. பரூக்அப்துல்லா : மறு பயன்பாட்டு எரிசக்தி

28. மல்லிகார்ஜூன கார்கே : தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு

29. பவன் கே. பன்சால் : பாராளுமன்ற விவகாரம் மற்றும் விஞ்ஞான 
     தொழில் நுட்பம், புவி அறிவியல்

30. முகுல் வாஷ்னிக் : சமூகநீதி

31. காந்திலால் பூரியா : பழங்குடியினர் நலன்

32. மு.க.அழகிரி : ரசாயனம், உரம்

33. பிரபுல்படேல் : கனரகத் தொழில்-பொதுத்துறை நிறுவனங்கள்

34. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் : நிலக்கரி

35. சல்மான் குர்ஷீத் : நீர்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலன்

தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள் :

36. அஜய் மக்கான் : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

37. பேனி பிரசாத் வர்மா: உருக்கு

38. கே.வி.தாமஸ் : நுகர்வோர் நலன்- உணவு- பொது வினியோகம்

39. தின்ஷா ஜே.படேல் : சுரங்கம்

40. கிருஷ்ணா தீரத்: பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு

41. ஜெய்ராம் ரமேஷ் : சுற்றுச்சூழல், வனம்

ராஜாங்க மந்திரிகள் :

42. ஸ்ரீகாந்த் ஜெனா : ரசாயனம், உரம்

43. ஈ.அகமது : வெளியுறவு

44. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் : உள்துறை

45. வி.நாராயணசாமி : பாராளுமன்ற விவகாரம், பணியாளர் நலன், 
      பொதுமக்கள் குறை தீர்ப்பு, பென்சன், பிரதமர் அலுவலகம்

46. ஜோதிர் ஆதித்ய சிந்தியா : வர்த்தகம், தொழில் துறை

47. டி.புரந்தேஸ்வரி : மனித வள மேம்பாடு

48. கே.எச்.முனியப்பா : ரெயில்வே

49. பனபாக லட்சுமி : ஜவுளி

50. நமோ நாராயண் மீனா : நிதித் துறை

51. எம்.எம்.பல்லம் ராஜூ : ராணுவம்

52. சவுகதா ராஜ் : நகர்ப்புற வளர்ச்சி

53. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் : நிதி

54. ஜிதின் பிரசாத் : சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

55. ஏ.சாய் பிரதாப் : கனரக தொழில்- பொதுத் துறை நிறுவனங்கள்

56. பிரனீத் கவுர் : வெளியுறவு

57. குர்தாஸ் காமத் : உள்துறை

58. ஹாரிஷ் ரவாத் : விவசாயம்- உணவு பதப்படுத்தும் தொழில்

59. பாரத்சிங் சோலங்கி : ரெயில்வே

60. மகாதேவ் எஸ்.கந்தேலா : பழங்குடியினர்

61. தினேஷ் திரிவேதி : சுகாதாரம், குடும்ப நலன்

62. சிசிர் அதிகாரி : கிராமப்புற மேம்பாடு

63. சுல்தான் அகமது: சுற்றுலா

64. முகுல்ராய் : கப்பல்

65. சவுத்ரி மோகன்ஜதுவா: தகவல் ஒலிபரப்பு

66. டி.நெப்போலியன்: சமூகநீதி, அமலாக்கம்

67. எஸ். ஜெகத்ரட்சகன் :தகவல் ஒலிபரப்பு

68. எஸ்.காந்திசெல்வன் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

69. துஷார்பாய் சவுத்ரி : சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை

70. சச்சின் பைலட் : தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

71. அருண் யாதவ் : விவசாயம், உணவு பதப்படுத்துதல் துÛ

72. பிரதீக் பிரகாஷ்பாபு படீல் : நிலக்கரி

73. ஆர்.பி.என்.சிங் : பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு, கம்பெனி 
      விவகாரம்

74. வின்சென்ட் பாலா : நீர்வளம், சிறுபான்மையினர் நலன்

75. பிரதீப் ஜெயின் : கிராமப்புற மேம்பாடு

76. அகதா சங்மா : கிராமப்புற மேம்பாடு

77. அஷ்வினி குமார் : திட்டம், பாராளுமன்ற விவகாரம், விஞ்ஞான 
      தொழில் நுட்பம், புவி அறிவியல்

78. கே.சி.வேணுகோபால் : மின்சாரம்.

இத்தனை நாட்கள் கழித்து இது ஏன் என்கிறீர்களா..? 

அன்னை சோனியாவின் தலைசிறந்த எடுபிடியான பிரதமர் மன்னமோகனசிங்கின் முதல் அமைச்சரவைப் பட்டியலை  புதிய கொள்ளைக் கூட்டக் கும்பல் - சில புள்ளி விபரங்கள் என்ற தலைப்பில்   ஏற்கெனவே எனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

அதன் தொடர்ச்சியாக இதுவும் ஒரு தகவல் சேமிப்புக்காக  இங்கே பதிவிடப்படுகிறது..!

இப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்..!

12-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று தற்செயலாக நான் படிக்க நேர்ந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

இதுதான் அந்தச் செய்தி..

1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன.


சொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர்.

தலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார்.

தேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளிலெல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார். அந்த ஜீப்பில் அவரோடு நான் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பேன். அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் அன்பாயிருப்பார் தலைவர். "கிருஷ்ணன் ஏறிட்டானா?" என்று கேட்ட பிறகே காரை எடுக்கச் சொல்வார். அந்தக் காரில் பெரும்பாலும் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை இருப்பார். இவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பர்.

ஒரு நாள் பகல் பொழுது.. உச்சிவேளை.. திறந்த ஜீப்பில் தலைவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஜீப் குலுங்கியபோது மேலிருந்த கம்பி குத்தியதில் பின்னால் இருந்த என் தலையில் அடிபட்ட ரத்தம் கொட்டியது.

தலைவரின் பிரச்சாரம் தடைபட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் நான் சமாளித்துக் கொண்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வழி நெடுக கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு வந்த தலைவர், ஒரு கட்டத்தில் என் தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டார்.

"டேய் என்னாச்சு உனக்கு..? என்னது ரத்தம்?" என்று அதிர்ந்து போய் கேட்டார். "ஒண்ணுமில்லய்யா.. ஒண்ணுமில்ல.." என்றேன். "என்னா ஒண்ணுமில்லன்றேன்..? இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு..? என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற..? நிறுத்து காரை.. உடனே இவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ.." என்று சத்தம் போட்டார்.

எங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவமனையில் எனக்குத் தலையில் கட்டுப் போட்டு  வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். குடியாத்தத்தில் தலைவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். அந்த வீட்டில் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அண்ணாமலைப் பிள்ளை மீண்டும் தலைவரிடம் போய்விட்டார்.

அன்று பகல் முழுக்கப் பிரச்சாரத்தில் இடையிடையே அடிக்கடி என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தலைவர். "அண்ணாமலை.. கிருஷ்ணனுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுனியா..? மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா..?" என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம்.

இரவு பதினோறு மணியிருக்கும். தலைவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். நான் வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் காற்றுக்காகக் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்திருந்தேன். நஏராக என்னிடம் வந்தார் தலைவர். என் தோள் மீது கையை வைத்து மிகுந்த வாஞ்சாயோடு, "என்ன கிருஷ்ணா.. இப்போ வலி எப்படியிருக்கு..? சாப்பிட்டியா..?" என்று விசாரித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போனார்.

கட்சிக்காரர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லியனுப்பிவிட்டு பன்னிரெண்டு மணி அளவில் படுக்கப் போனார் தலைவர். நானும் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.

நல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை, "டேய் கிருஷ்ணா.. எந்திரி.. எந்திரி.." என்று என்னைத் தட்டி எழுப்பினார் தலைவர். தலைவரின் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். "வானம் என்னமா மின்னிக்கிட்டிருக்கு..? பயங்கரமா இடி இடிக்குது.. மழை கொட்டப் போகுதுன்னேன்.. பிடி.. பிடி.. கட்டிலை அந்தப் பக்கம் பிடி.. உள்ள வந்து படு.. வா.." என்று பரபரப்போடு சொன்னபடியே நான் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தூக்கப் போனார்.

நான் ஆடிப் போனேன். "ஐயா நீங்க அதெல்லாம் செய்யக் கூடாதுய்யா.. நான் தூக்கிட்டு வரேன்.. நீங்க போங்கய்யா.." என்று பதறினேன். "டேய் கிறுக்கா.. மழை வந்துக்கிட்டிருக்கு.. உனக்கு ஏற்கெனவே தலைல அடிபட்டிருக்கு.. ஈரம் பட்டுச்சுன்னா ரொம்ப ஓபத்திரவமாயிரும். மொதல்ல கட்டிலைப் பிடிண்ணே.." என்று என்னை அதட்டினார்.. வேறு வழியில்லாமல் அவரும், நானுமாய்க் கட்டிலைப் பிடித்து உள்ளே கொண்டு வந்து போட்டோம்.

நான் உள்ளே வந்து படுப்பதற்கும், மழை பெய்வதற்கும் மிகச் சரியாயிருந்தது. தலைவர் உரிய நேரத்தில் என்னை வந்து உள்ளே அழைத்திருக்காவிட்டால், நான் நனைந்திருப்பேன். இது பெரிய விஷயமில்லை.. வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டுக்கூட என்னை உள்ளே அழைத்து வரச் சொல்லியிருக்கலாம்.. ஒரு முதலமைச்சரே வந்து எனக்காக கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனதை, இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கிறது.

அந்த மகத்தான தலைவரின் அவ்வளவு பெரிய அன்புக்கு நான் பாத்திரமானது என் முன்னோர் செய்த புண்ணியம். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டால்கூட தலைகால் புரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காமராஜர் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தோடு 36 ஆண்டுகள் இருக்கக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

- சொன்னவர் திரு.ஆர்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி

(நன்றி : சிகப்பு நாடா, ஜூன் 1-15, 2010)

இந்திய மாநிலத்தின் முதல்வருக்கு 4 மனைவிகள்... தமிழகம் பரவாயில்லை..!

11-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாலைப் பத்திரிகைகளை லேசாக புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட இந்தச் செய்தியைப் படித்து ஏற்கெனவே கொதிப்பில் இருக்கும் என் நெஞ்சு இப்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

அந்தச் செய்தியை நீங்களும் படித்து என் வயிற்றெரிச்சலில் பங்கெடுத்துக் கொள்ளுமாய் அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறேன்..

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இந்திய-சீன எல்லையில் உள்ளது அருணாச்சலப்பிரதேச மாநிலம். மலையும், மலைசார்ந்த பிரதேசமுமான இம்மாநிலம் பெண் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத பூமியாக இருக்கிறது என்பதுதான் இன்றைய லேட்டஸ்ட் செய்திகள்.


இம்மாநிலத்தில் வருகின்ற 13-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்த சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 60. இங்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெறுகிறது.

முதல்மந்திரியாக டோர்ஜிகாந்து பதவியில் உள்ளார். 2 முறை இவர் போட்டியில்லாமல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 3-வது முறையாகவும் முக்தோ தொகுதியில் இருந்து போட்டியில்லாமல் தேர்ந்து எடுக்கப்படவுள்ளாராம். இவரை எதிர்த்து இத்தொகுதியில் யாருமே போட்டியிட முன் வரவில்லையாம்.


விஷயம் அதுவல்ல.. இந்த மாநிலத்தின் அரசியல்வியாதிகள் தாங்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தங்களது குடும்பத்தை பற்றித் தெரிவித்திருக்கும் சில உண்மைகள் தற்போதைய பரபரப்பிற்குக் காரணம்.



முதல் மந்திரி டோர்ஜி காந்து தாக்கல் செய்துள்ள தனது வேட்புமனுவில் தனக்கு 4 மனைவிகள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரது பெயரிலும் சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மொத்தமாக குடும்பச் சொத்து 43 கோடிக்கு இருக்கிறதாம். இவருக்கு மொத்தமாகச் சேர்ந்து 4 பையன்களும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த முதல் மந்திரியைப் போலவே இந்த மாநிலத்தில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருப்பது தற்போது வேட்பு மனு தாக்கலின்போது தெரிய வந்துள்ளது.


மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான கெகாங் அபாங்குக்கும் 4 மனைவிகள்தானாம்.. இவர் காங்கிரஸ் வேட்பாளராக டுடிங்-யிங்-ரியாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேபோல் முன்னாள் துணை முதல் மந்திரி ஹேமாங்தோலாவுக்கு 3 மனைவிகள். இவர் சாயாங் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

செபா மேற்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மந்திரி ஹோரி நாதூங் என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

தற்போதைய சட்டப் பேரவையின் துணை சபாநாயகர் நகரா மார்டேவுக்கு 2 மனைவிகள்.. இவர் ஏற்கெனவே மந்திரியாகவும் பதவி வகித்தவராம்.

கோன்சா கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் டி.எல்.ராஜ்குமாருக்கு 2 மனைவிகள். இவரும் நீண்ட காலம் மந்திரியாக இருந்தவர்.

இதேபோல் பாரதீய ஜனதா கட்சியிலும் பல தார கணவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சட்டா நகரில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் லெசிலெகுக்கு 3 மனைவிகள். திருணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தலோமுக்லிக்கு 2 மனைவிகள்..

மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் அருணாச்சலப்பிரதேசத்தின் கலாச்சாரம் மற்ற இந்திய மாநிலங்களிலிருந்து வேறுபட்டது என்கிறார்கள்.


இங்கு செல்வாக்குமிக்க மனிதர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது என்கின்றன அம்மாநில பத்திரிகை செய்திகள்.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் இந்த பலதார மணம் விஷயத்தில் சட்டம் வேறுபட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

அரசியல் சட்டத்தை வகுத்தவர்களில் அதிகம்பேர் ஆண்களாகவே இருந்து தொலைத்துவிட்டதினால் அதில் ஆண்களுக்கு சாதகமாக "முதல் மனைவி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனில், பல தார மணம் தவறில்லை.." என்று ஒரு உட்பிரிவைச் சேர்த்து ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிட்டார்கள்.

இதன்படி ஒரு அரசு ஊழியர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் கொண்டவராக இருப்பதை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலும் அந்த சட்டம் இருக்கிறது. அதில் இருக்கும் உட்பிரிவான "முதல் மனைவி ஆட்சேபிக்க வேண்டும்" என்ற வரிகளை வைத்துத்தான் நமது கழகத்தின் தலையில் இருந்து வால்வரையிலும் இதுநாளும் தப்பித்து வந்திருக்கிறார்கள்.

ஆனாலும், "முதல் மனைவி ஆட்சேபம் தெரிவிக்காவிட்டாலும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்மையாக இருந்தால், அவர்களை அரசுப் பணியில் இருந்து நீக்கலாம்.." என்று தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளில் விதிமுறை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.

"அப்புறம் எப்படி ஒருத்தர், ஐந்து முறை முதல்வரானார்..?" என்று திருப்பிக் கேட்டதற்கு "ஸாரி எங்களுக்குத் தெரியாது.." என்கிறார்கள்.


"இதை அக்கட்சிகளின் மகளிரணியினரே கேட்காமல் வாயைப் பொத்திக் கொண்டிருக்க.. உனக்கெதுக்குடா இந்த வேலை..?" அப்படீன்னு நீங்க கேக்குறீங்களா..?

ஓகே.. எனக்கெதுக்கு பொறாமை..?

ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.. -))))))))))

இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன..? விளைவுகள் என்ன..?

21-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் தெரிந்து கலைஞரும், அவர் தம் பரிவாரங்களும் அடைந்திருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியில், ஒரு சதவிகிதம்கூட குறையாத அளவிற்கு இதே நேரத்தில் கொடநாடு எஸ்டேட்டில் இருக்கும் புரட்சித்தலைவியும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருப்பார்.

தன்னுடைய தலைமையில் ஒரு அணியில் இருந்து கொண்டே தன் பேச்சை மீறி தேர்தலில் நின்றிருக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது அளவற்ற கோபத்தில் இருந்தாலும், இருப்பவர்களையும் விரட்டிவிட்டு பின்பு என்ன செய்வது என்று அடக்கிக் கொண்டிருந்த அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.


ஐயாவின் சந்தோஷத்திற்கு காரணம் ஐந்து தொகுதிகளும் அவருடைய கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது.



அம்மாவின் சந்தோஷத்திற்கு காரணம், தன் வார்த்தையை மீறி தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலுமே டெபாசிட் தொகையை இழந்து மரண அடி வாங்கியிருப்பதுதான்.

கொஞ்சம் புள்ளி விபரத்தைப் பாருங்கள்..

தொண்டாமுத்தூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.என்.கந்தசாமி பெற்ற வாக்குகள் 112350. தே.மு.தி.க. வேட்பாளர் தங்கவேலு பெற்ற வாக்குகள் 40863. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெருமாள் பெற்ற வாக்குகள் 9126.

கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 81516. தே.மு.தி.க. வேட்பாளர் அருண்குமார் பெற்ற வாக்குகள் 24142. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜப்பன் பெற்ற வாக்குகள் 2303.

பர்கூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் பெற்ற வாக்குகள் 89401. தே.மு.தி.க. வேட்பாளர் வீ.சந்திரன் பெற்ற ஓட்டுக்கள் 30378. வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கண்ணு பெற்ற வாக்குகள் 1640.

திருவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி பெற்ற வாக்குகள் 53827. தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியன் பெற்ற வாக்குகள் 22468. போட்டியிட்ட வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலட்சுமி பெற்ற வாக்குகள் 3407.

இளையான்குடி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுப.மதியரசன் பெற்ற வாக்குகள் 61084. தே.மு.தி.க. வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 19628.

தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 11429.

பர்கூர், திருவைகுண்டம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வலது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 5407.

இந்த இரு கட்சிகளும் சேர்ந்து நான்கு தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 16836-தான்.

இவர்கள் இப்படியென்றால், தாமரைக் கட்சிக்காரர்களும் இவர்களுக்கு சளைக்காமல் தேர்தலில் போட்டியிட்டு தங்களது செல்வாக்கை நிலை நாட்டியுள்ளார்கள்.


இளையான்குடி தொகுதியில் 1487 வாக்குகளும், பர்கூரில் 1482 வாக்குகளும், தொண்டாமுத்தூரில் 9045 வாக்குகளும், திருவைகுண்டத்தில் 1794 வாக்குகளும், கம்பம் தொகுதியில் 946 வாக்குகளையும் பெற்று அசுர சாதனை படைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. ஐந்து தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகள் 14754.

இதில் என்னை யோசிக்கவும், சிரிக்கவும் வைத்தது கம்பம் தொகுதிதான். இத்தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளாரான சசிகுமார் கூடலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு கம்பம் திரும்பும் வழியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அண்ணன் அழகிரியைப் பார்த்து அவரிடம் திடீரென்று சரண்டரானதுதான்..

பாவம் பா.ஜ.க. தொண்டர்கள்.. இப்படி இவர் செய்வார் என்பது தெரியாமல் காசை அள்ளி வீசிய வயித்தெரிச்சலில் அன்றைய இரவில் டாஸ்மாக் கடையையே காலி செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்.

"தேர்தலை எங்கள் கட்சி புறக்கணிக்கிறது. எங்களைப் பின்பற்றி மக்களும் புறக்கணிக்க வேண்டும்.." என்று புரட்சித்தலைவி சொல்லியும் பொதுமக்கள் கேட்காமல் சராசரியாக 65 சதவிகிதத்திற்கும் மேலாக ஓட்டுக்களை மக்கள் பதிவு செய்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றுதான்.

தொகுதிக்குள் ஓட்டளிக்காமல் இருந்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர் என்றால், அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் பட்டியல் கணக்கும் இடிக்கிறது.


இதில் மொட்டை அடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் தைரியமாகத் தலையைக் கொடுத்திருக்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த முறை அ.தி.மு.க.வும் போட்டியிடாததால் அவர்களுக்கு மிகவும் வசதியாகவும் அமைந்துவிட்டது. ஓட்டுக்களைக் கூடவே அள்ளிவிடலாம் என்று நினைத்து உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்புக்கேற்ற வாக்குகள் கிடைத்திருக்கிறது.. பாராட்டுவோம்..


தோல்வி என்றிருந்தால்கூட கொஞ்சம் கவுரவமாக இருந்திருக்கும்.. ஆனால் ஒரு இடைத்தேர்தலில் நான்கு தொகுதியிலும் டெபாஸிட் காலி என்பது சிவப்புக் கொடி தோழர்களுக்கு புதுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


கேள்விப்பட்டவுடன் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காம்ரேடுகளுக்கு இந்த அளவுக்குக்கூடவா தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பஞ்சம்..? கட்சி மாநாடு எனில் சிவப்புக் கொடியேந்தி வரும் கூட்டத்தினை பார்க்கவே திருவிழா கணக்காக இருக்கும். குடும்பம், குடும்பமாக இருக்கும் இந்த தோழர்கள், இந்த முறை சுணங்கியதற்கு என்ன காரணம் என்று முழுமையாகத் தெரியவில்லை.

ஆனாலும் தொகுதிகளில் மெஜாரிட்டியாக இருக்கக் கூடிய ஜாதிக்காரர்களை நிறுத்தாமல், கட்சிக்கு நீண்ட நாள் உழைத்தவர்கள் என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தியதுதான் முதல் காரணம் என்கிறார்கள் அக்கட்சித் தோழர்கள்.

எது எப்படியோ இந்த இடைத்தேர்தலின் மூலம் தேர்தல் நடந்த தொகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க தொண்டர்களும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துபோய்விட்டது. இனி என்ன ஆகும்..?

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோழர்களின் கதி அதோகதிதான்.. அம்மா எத்தனை தொகுதிகள் தருகிறார்களோ, அதனை கையது, வாயது பொத்தி அமைதியாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போக வேண்டியதுதான்.

இல்லை.. இப்போதே கூட்டணியை முறித்துக் கொண்டு ஐயா பக்கம் போனாலும் ஐயாவும் அம்மாவின் பாணியைத்தான் கடைப்பிடிப்பார். என்ன.. ஐயா கொஞ்சம் தட்டிக் கொடுத்து மென்மையாகச் சொல்லுவார்.. அம்மா தட்டாமல் அதட்டிச் சொல்லப் போகிறார். இதுதான் வித்தியாசமாக இருக்கப் போகிறது..

"மக்கள் சேவையில் இருப்பவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது.. அது மக்களை உதாசீனப்படுத்துவது போல.." என்று சொல்லித்தான் இரண்டு கம்யூனிஸ்டு இயக்கங்களும் வரிந்து கட்டிக் கொண்டு அம்மாவின் பேச்சையும் மீறி களத்தில் இறங்கின.

இந்த ஒரு வரி கொள்கைக்காகவே நான் இவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அதே நேரத்தில் ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மக்கள் பணிகளில் அக்கறையின்மை ஆகிய நோய்களைத் தாங்கிக் கொள்ளாத இந்த கம்யூனிஸ்டு இயக்கங்களை, மக்கள் இந்த அளவுக்குப் புறந்தள்ளியிருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் வருகின்ற விடை சுயநலம்.

நம் மக்கள் இந்த அளவுக்கா சுயநல விரும்பிகளாக இருப்பார்கள்..?

எல்லாத்தையும் ஓசில சாப்பிட்டே பழகிட்டோமா..? அதான்.. வீடு எப்படி இருக்குமோ அப்படித்தாங்க நாடும் இருக்கு.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம வந்து குத்திட்டாங்க.. இந்த ஐந்து தொகுதிகளிலுமே ஓட்டுக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

"யார் எப்படி வேண்ணாலும் போங்க..? என்ன வேண்ணாலும் பண்ணிக்குங்க..? எவ்வளவு வேண்ணாலும் கொள்ளையடிச்சுக்குங்க..? ஆனா எலெக்ஷனப்போ மட்டும் எங்களுக்கு கொஞ்சம் பிச்சை போடுங்க.. வெட்கமில்லாம நாங்க அதை வாங்கிட்டு உங்களுக்குத் தயக்கமில்லாம ஓட்டைக் குத்திருவோம்.."னு சொல்லாம சொல்லிக் குத்திட்டாங்க..

மக்களும் இந்த விஷயத்தில் தெளிவாகிவிட்டதாகவே தெரிகிறது. "நமக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. நம்மால் இந்த அரசியல்வியாதிகளை ஒன்று சேர்ந்து கவிழ்ப்பது என்பது நமக்குள் இருக்கின்ற ஒற்றுமையின்மையால் முடியவே முடியாது.. ஸோ, வருவதை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போட்டுக் குத்திவிடுவோம்.. பின்பு அவர்கள் நம்மைக் குத்தினால் 'முருகா.. முருகா..' என்று அவன் மீது பாரத்தைப் போட்டுவிடுவோம்.. வேறென்ன செய்வது..?" என்ற மக்களின் சுயநலமான, பொதுநலமில்லாத, பயந்த குணத்தைத்தான் இது காட்டுகிறது.

நமக்கு எதிரிகள் நாம்தானே ஒழிய, அரசியல்வியாதிகள் அல்ல என்பது இதிலிருந்தும் நன்கு தெரிகிறது.

ஒன்வேயில் போலீஸ் நிற்பதை பார்த்தவுடன் சைக்கிளை விட்டு இறங்கித் தள்ளிக் கொண்டு போய் தப்பிக்கும் பொதுஜனமே..

அடுத்த முறையாவது பணம் வாங்காமல், இப்படி பணம் கொடுப்பதே தவறு என்று நெற்றியில் அடித்தாற்போல் சொல்லாமல் சொல்லி, ஓட்டை எதிரணிக்குக் குத்திவிடு.

உனக்கு நீயே சவக்குழி தோண்டிக் கொள்ளாதே.

வாழ்க இந்திய ஜனநாயகம்..!

வாழ்க பொதுஜனம்..!!

வாழ்க தமிழகம்..!!!