இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

01-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை Masala Pix நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன், M.K.R.P. Productions நிறுவனத்தின் தயாரிப்பாளரான எம்.கே.ராம்பிரசாத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். பல விருதுகளை வாங்கிக் குவித்த கன்னட படமான ‘யூ டர்னில்’ நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ளார். இதுதான் இவருக்கு முதல் தமிழ்ப் படமாகும். படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மக்கள் தொடர்பு – ஜான்சன், ஒளிப்பதிவு – பிரசன்னா குமார், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், விவேக், நடனம் – சிவசங்கர், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, கலை – பாப்பி, இணை தயாரிப்பு – எம்.கே.ராம் பிரசாத், எழுத்து, இயக்கம் – ஆர்.கண்ணன்.

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.கண்ணன் இந்தப் படத்தைத் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். இது இவர் இயக்கியிருக்கும் ஆறாவது படமாகும்.
அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் அப்பாவிகள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை இதுவரையிலும் பார்த்திராத புதுமையான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
பொறியியல் படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டவர்கள் ஹீரோ கெளதமும், அவருடைய உயிர் நண்பன் ஆர்.ஜே.பாலாஜியும். படிப்பை கைவிட்டாலும் படிப்பு அவர்களைக் கைவிடவில்லை. துறை சார்ந்த அறிவும், தொழில் நுட்ப அறிவும் நிரம்பவே இருக்கிறது இந்த இளைஞர்களுக்கு.
ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இவரிடத்தில் லேப்டாப் வாங்கிய ஹீரோயின் ஷ்ரத்தா அது வேலை செய்யாததால் மாற்றித் தரும்படியும், இல்லாவிடில் கொடுத்த காசை திருப்பித் தரும்படியும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார். ஆனால் தராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் கெளதம்.
இந்த நேரத்தில் தமிழகம் முழுவதிலும் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் தரம் குறைவாக இருப்பதாகவும், வசதி வாய்ப்புகளே இல்லாமல் இருப்பதாகவும் சொல்லி அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி இழுத்து மூடும்படி உத்தரவிடுகிறார் மத்திய அரசின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான தேவராஜ் என்னும் சுப்பராயன். ஆனால் உண்மையில் சுப்பராயன் இப்படியொரு உத்தரவை போட்டுவிட்டு மறைமுகமாக கல்லூரியின் உரிமையாளர்களிடத்தில் கல்லூரியைத் திறக்க லஞ்சம் வாங்கிக் குவிக்கிறார்.
இந்த நேரத்தில் அமைச்சர் சுப்பராயனின் வீட்டில் சிசிடிவி கேமிராவை மாட்டும் பணியில் ஈடுபடுகிறார் கெளதம். அதற்கான தொகையான 23000 ரூபாயை அமைச்சரின் மைத்துனான சில்வாவிடம் கேட்கிறார் கெளதம். இதோ தருகிறேன். அப்புறம் தருகிறேன்.. என்று சொல்லி ஏமாற்றுகிறார் சில்வா. இதனால் நேரடியாக அமைச்சரிடமே சென்று புகார் சொல்கிறார்கள் இருவரும். இது சில்வாவுக்கு தெரிய வர அவர்களை அழைத்து அவமானப்படுத்தியதுடன் அவர்களுடைய பைக்கையும் ஆள் வைத்து தூக்கிச் செல்கிறார் சில்வா.
இதனால் மிக மிக கோபமடையும் கெளதம், இவர்களுக்கெதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள். யோசித்த வேகத்தில் அமைச்சர் வாங்கும் லஞ்சப் பணம் கெளதமின் மனதைக் குடைகிறது. அமைச்சர் செய்யும் மோசடிகளை வெளிக்கொணர முடிவெடுக்கிறார் கெளதம்.
ஹீரோயின் ஷ்ரத்தா படிக்கும் கல்லூரியில் மாணவர்களிடமிருந்து பெறப்படும் பணம் அமைச்சருக்கு லஞ்சமாக செல்வதை அறிகிறார் கெளதம். இதனை தான் கண்டுபிடித்த ஈ கேமிரா மூலமாக படம் பிடிக்கிறார். இந்த வீடியோவில் அமைச்சரின் மைத்துனரான சில்வா சிக்கிக் கொள்கிறார். கெளதம், இதனை யூ டியூபில் போஸ்ட் செய்ய இந்தியாவே பற்றிக் கொள்கிறது.
அமைச்சருக்கு பதவி பறி போகிறது. சில்வாவுக்கும், அமைச்சருக்குமான நட்பு உடைகிறது. அமைச்சரின் லஞ்ச லாவண்யம் பற்றி கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.
பெரும் கோபம் கொள்ளும் அமைச்சர் சுப்பராயன் இந்தச் செயலை செய்தது யார் என்பதை கண்டறியும் வேலையில் இறங்குகிறார். கெளதமோ அமைச்சரின் பெயரை ஒட்டு மொத்தமாக டேமேஜாக்கும் வகையில் தினம், தினம் டிஸைன், டிஸைனான மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
கெளதமுக்கு ‘ரங்கூனுக்கு’ பின்பு மிகப் பெரிய வெற்றி படம் இது. அவருக்கேற்ற கேரக்டர். அதுவும் ரிச்சி தெருவில் கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞன் எப்படியிருப்பானோ அது போலவே காட்சியளித்திருக்கிறார். “வெறும் மூணாங் கிளாஸ் படித்த நீங்க கோடி, கோடியா கொள்ளையடிப்பீங்க.. ஆனால் பி.இ. படிச்சிட்டு நாங்க மட்டும் எவ்ளோ உழைச்சாலும் பத்து, இருபதாயிரம்தான் சம்பளம் வாங்கணுமா..?” என்று ஆக்ரோஷமாய் கேட்கும் கேள்வி, தமிழகத்தின் லட்சணக்கான மாணவர்கள் கேட்கும் கேள்வி. அவர்களின் பிரதிநிதியாய் இவர் எழுப்பும் அனைத்து வினாக்களுக்கும் தியேட்டரில் கை தட்டல் அள்ளுகிறது.
முதலில் இருந்து கடைசிவரையிலும் ஒரு துடிப்பான இளைஞனாக, உழைத்த பணத்தை திரும்ப வாங்கியே ஆக வேண்டும் என்கிற கொள்கை பிடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் கெளதம். தான் ஏமாற்றப்பட்டதையடுத்து எதையாவது செய்யணும் என்கிற வெறியில் இவர் செய்யும் தந்திரங்களால்தான் ‘இவன் தந்திரன்’ என்கிற படத்தின் தலைப்புகூட கச்சிதமாக பொருந்துகிறது.
இவருக்கு படத்தின் கடைசிவரையிலும் தோள் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. “அம்பானியும், ஆட்டக்காரங்களும் கட்டிப் பிடிக்குற மாதிரி..” என்கிற நக்கல்.. “ஓலா வந்ததால ஆட்டோக்களுக்கு பாதிப்பு வந்திருச்சா.. நீங்க ஒழுங்கா மீட்டர் போட்டிருந்திருக்கலாம்ல..?” என்ற கிண்டல்… கல்லூரியில் படிப்பை பாதியில் முடித்தவர்களை கிண்டல் செய்யும் முன்னாள் கல்லூரி தோழனிடம் தங்களுடைய தற்போதைய நிலைமையின் பெருமையை எடுத்துரைப்பது.. அதேசமயம் ஐ.டி.யில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் குடும்ப, பணிச் சிக்கல்களை பற்றியெல்லாம் எடுத்துச் சொல்வது என்று படத்தின் கதை இம்மியளவும் மையக் கதையிலிருந்து விலகிவிடாமல் அதனுடையே டிராவல் செய்வது போலவே இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் அமைந்திருப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. வெல்டன் பாலாஜி..
கன்னட ‘யூ டர்னின்’ நாயகியான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் முதல் அறிமுகம். அழகு முகம்.. நொடியில் முகபாவனைகளை மாற்றிக் காட்டி நடிப்பைக் காட்டும் நவரசம். பாடல் காட்சிகளில் ஆடும் நளினம்.. கூடவே வஞ்சகமில்லாத நடிப்பு.. இதையெல்லாம் பிளஸ் பாயிண்ட்டாக வைத்திருக்கும் ஷ்ரத்தா தமிழ்ச் சினிமாவுலகத்தில் ஒரு பெரிய ரவுண்டு வர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
அச்சு அசலாக ஒரு அயோக்கிய அரசியல்வியாதியை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் அமைச்சர் தேவராஜாக நடித்திருக்கும் மூத்த சண்டை பயிற்சியாளரான சூப்பர் சுப்பராயன். லஞ்சத்திற்கு அடையாளமாக கொண்டு வரப்படும் லட்டை இவ்ளோதானா என்று விரட்டி, விரட்டி கூடுதலாக்குவதும்..
தன் பதவியைப் பறிக்க வைத்த கெளதமை யாரென்று தெரியாமல் தேடியலையும் அந்த வெறியையும், விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கையில் அப்படியே கதையைத் திருப்பிப் போடுவதுபோல டப்பிங் வசனம் பேசி குழப்புவதிலும் மிகச் சிறந்த நடிப்பைக் காட்டியிருக்கிறார் சுப்பராயன்.
வில்லன் தகுதியான நபராகவும், வெயிட்டானவராகவும் இருந்தால்தான் ஹீரோ மேல் மரியாதை வரும் என்பார்கள். இந்தப் படத்தில் சுப்பராயனால்தான் கெளதம் ஹீரோவாக பார்க்கப்படுகிறார் என்பது மட்டும் உண்மை.
கல்லூரியில் பணம் கட்ட வசதியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் அந்த இளைஞன், அவர்களது வசதி வாய்ப்பில்லாத பெற்றோர்களான கயல் தேவராஜ் மற்றும் கவுதமியின் கதறல்.. சில்வாவின் பரிதாப மரணம்.. ஒரு காட்சியில் வந்தாலும் லட்டு கொடுத்து அனைவரையும் கவர்ந்த வெங்கட் என்று பலரையும் மிக அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.  இயக்குதலில் ஒரு சிறிய தவறுகூட இல்லாமல் இருப்பதினால் மிக அழகாக பயணிக்கிறது திரைப்படம்.
பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவும், செல்வாவின் படத் தொகுப்பும் இயக்குநருக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். இரவு நேரக் காட்சிகளையும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் ஒரு பிரேம்கூட தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதற்காக சண்டை பயிற்சியாளரையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறோம்.
தமனின் இசையில் இரண்டு பாடல்களும் கேட்கும் ரகம் என்றாலும் பின்னணி இசையை அடக்கி வாசித்திருப்பதால் வசனங்களையும், காட்சிகளையும் நன்கு ரசிக்க முடிந்திருக்கிறது. இதற்காகவே இவருக்கு ஒரு பாராட்டு. இரண்டாவது டூயட் பாடலின் பாடல் வரிகள் மிக அழகாக காதில் விழுகின்றன என்பதுதான் ஆச்சரியம். இது தமனின் இசையல்லவா.. அதனால்தான் ஆச்சரியம்..!
“சினிமாவுக்கான கதைகளை வேறு இடங்களில் இருந்து தேடாதீர்கள். உங்களிடமிருந்து எடுங்கள்.. உங்கள் வீட்டில் இருந்து கைப்பற்றுங்கள்.. உங்கள் காதுகளில் கேட்ட செய்திகளை எழுத்தாக்குங்கள்…” என்பதுதான் இப்போதைய இளம் இயக்குநர்களுக்கு மூத்த இயக்குநர்கள் சொல்லும் செய்தி. அதைத்தான் இயக்குநர் ஆர்.கண்ணனும் இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.
நம்மிடையே இன்றைக்கும் அதிகமாக புழங்கிக் கொண்டிருக்கும் கதையைத்தான் இதில் கருவாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.  தனியார் பொறியியல் கல்லூரிகள், மாணவர்களிடத்தில் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைவிடவும் அதிமாகவே கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.  
கல்லூரிக்குள் ரெளலட் சட்டம் போல பல்வேறு சட்டங்களை இயற்றி, அதை மீறும் மாணவர்களிடத்தில் தண்டத் தொகையை விதித்து, அதையும் வசூலித்து இதன் மூலம் ஒரு அடிமைத்தனத்தை மாணவர்களிடையே ஊட்டி அவர்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் பணத்தில் கொஞ்சத்தை அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்து தங்களது சாம்ராஜ்யத்தை காப்பாற்றிக் கொண்டே வருகிறார்கள் தனியார் கல்லூரி அதிபர்கள். இதுதான் காலம்காலமாக இப்போதும் நடந்து வருகிறது. இந்தக் கொடுமையைத்தான் படத்தில் பல இடங்களில் வசனமாகவும், காட்சிகளாகவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.
தாரா பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் காரை விட்டு இறங்காமலேயே ஒரு பையில் லட்டுவை கொடுத்தனுப்பி எத்தனை லட்டு இருக்கோ.. அத்தனை கோடி லஞ்சம் என்று சொல்வதாக காட்சியமைத்திருக்கிறார் இயக்குநர். இதுதான் உண்மை. யதார்த்தம். இப்படித்தான் லஞ்சப் பணம் மறைமுகமாக அனைவருக்கும் போய்ச் சேர்கிறது. இந்தக் காட்சியை படமாக்கியிருக்கும் நேர்த்தி அழகோ அழகு.. இதனூடேயே கதாநாயகன் தனது கதையையும் அமைச்சரிடம் சொல்லி பணத்தைக் கேட்கும்விதமும் திறமையான திரைக்கதை என்று சொல்ல வைக்கிறது.
அமைச்சருக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சத்திற்காக கல்லூரி நிர்வாகம் மறைமுகமாக மாணவர்களிடத்தில் சுரண்டுவதையும், அதுவும் தேர்வு சமயத்தில் கூடுதல் பணத்தைக் கொடுத்தால்தான் ஹால் டிக்கெட் கொடுப்போம் என்று கல்லூரி அலுவலர் சொல்லும் காட்சியின் வீரியம் கடைசியாக தனி மனித தாக்குதலாகவும், அப்பாவி மாணவர்களின் வாழ்க்கைக்கே உலை வைக்கவும் தயங்க மாட்டோம் என்று சொல்வதில் தனியார் கல்லூரி முதலாளிகளின் பண வெறி தெரிகிறது. அழுத்தமான திரைக்கதையை அழகாக எழுதி, படைத்திருக்கிறார் இயக்குநர்.
பல காட்சிகளை சுவாரஸ்யமாக இணைத்தமையே படத்தின் மீதான ஈர்ப்புக்கு இன்னொரு காரணமாகவும் அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸில் சீனிவாசா தியேட்டரில் ஓடும் ஜாக்கிசான் படக் காட்சிகளையும் பயன்படுத்தியிருப்தில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. கெளதம் கார்த்திக் கடைசியாக வெடித்துக் கிளப்பும் உண்மைகள் ‘வாவ்’ என்று படக் குழுவினரை பெரிதும் பாராட்டவே வைக்கிறது.
நாயகியின் மீதான தனது காதலை கெளதம் சொல்லுமிடம் ஒரு கவிதை. இதற்கு நாயகி காட்டும் ரியாக்ஷன் அதைவிட பெரிய ஹைக்கூ கவிதை.. நச்சென்று படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதேபோல் நாயகி திரும்பி வந்து நாயகனிடம் தேர்வில் நடந்த்து என்ன என்பதை சொல்லும் காட்சியில் அப்படியொரு டிவிஸ்ட்.. நாயகி சொல்லும்விதத்தில் அது தவறே இல்லையே என்றுதான் நமக்கும் தோன்றுகிறது. இதனை அழகான காட்சியாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
வீடியோ ஆதாரம் இருந்தாலும், விசாரணை கமிஷன் முன்பு அதனை அப்படியே திருப்பிப் போட்டு “டப்பிங் பண்ணியிருக்காங்க ஸார்…” என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் அந்த திறமை, இன்றைய அரசியல்வாதிகளுக்கு நிறையவே உண்டு. இந்த டிவிஸ்ட் எதிர்பாராதது.
அதேபோல் கெளதமின் சீனியர் தான் மட்டும் லாரியை பாலோ செய்துவந்து தனியே மாட்டிக் கொண்டு அடிபடுவதும், இதனைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட ஆபரேஷனுக்கு அனைவரும் களத்தில் குதித்திருப்பது தெரிய வரும்போது இன்னொரு மிகப் பெரிய ஷாக்காக இருக்கிறது.
தொடர் ஓட்டமாக நகரும் படத்திற்கு வேகத்தடை இருக்கவே கூடாது என்பதற்காக இரண்டு பாடல்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். அதற்காக இன்னொரு பாராட்டு. இரண்டாவது பாடல் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைத்திருக்கிறது என்பது உண்மை.
ஒட்டு மொத்தமாய் ஒரு திரைப்படமாய் இரண்டே கால் மணி நேரத்தில் நமது நாட்டு நடப்பை பத்தி நமக்கே புட்டு, புட்டு வைத்திருக்கிறது இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தைப் பார்த்து, ஆதரவளித்து, ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை. அவசியம் தியேட்டருக்கு சென்று பாருங்கள் மக்களே..!

1 comments:

Unknown said...

//இத்திரைப்படத்தைப் பார்த்து, ஆதரவளித்து, ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை. அவசியம் தியேட்டருக்கு சென்று பாருங்கள் மக்களே..!//

Athaan full kathaiyum sollitiye,, appuram edhuku theatre la poyi paakka poraanga.