ரூபாய் - சினிமா விமர்சனம்

17-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

God Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான  பிரபு சாலமன் தயாரிப்பில், ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஆர்.ரவிச்சந்திரனின் இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் இது.
இந்தப் படத்தில் ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.                                                         
மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், பாடல்கள் – யுகபாரதி, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – ஏ.பழனிவேல், நடனம் – நோபல், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், நிர்வாகத் தயாரிப்பு – ஜே.பிரபாகர், இணை தயாரிப்பு – ஆர்.ரவிச்சந்திரன், தயாரிப்பு – பிரபு சாலமன், எழுத்து, இயக்கம் – அன்பழகன்.

பணம் எல்லோருக்கும் அவசியம்தான். அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம். நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். இதுதான் இந்த படத்தின் கதைக் கரு.
பரணி(கயல் சந்திரன்), பாபு(கிஷோர் ரவிச்சந்திரன்) இருவரும்  நெருங்கிய நண்பர்கள். ஒரு மினி லாரியை கடனில் வாங்கி அதை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இன்னும் இரண்டு நாட்களுக்குள் லாரிக்கான தவணைத் தொகையைக் கட்டவில்லை என்றால், இவர்களின் ஒரே சொத்தான லாரியை கடன் கொடுத்த சேட்டு பறிமுதல் செய்துவிடும் நிலைமை.
இந்த நேரத்தில் தேனியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.  வந்த இடத்தில் பணம் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அப்போது வாயிலேயே முழம் போடும் குணமுடைய குங்குமராஜனை (சின்னி செயந்த்) சந்திக்கிறார்கள். அவர் அன்று காலையில் தனது வீட்டை காலி செய்யப் போவதாகச் சொல்லி பொருட்களை எடுத்துச் செல்ல மினி லாரி தேடி அலைகிறார்.
இவருடைய வேலையையும் செய்தால் கிடைக்கும் பணத்தில் சேட்டிடம் கட்டி வண்டி பறிமுதல் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த கிஷோர், பரணியை இதற்கு சம்மதிக்க வைக்கிறார்.
சின்னி ஜெயந்த் இவர்களை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு போகிறார். அங்கே பொருட்களை கீழே இறக்கி லாரியில் அடுக்குகிறார்கள் இருவரும். இந்த நேரத்தில் சின்னியின் மகளான ஆனந்தி அங்கே வர.. அவரை பார்த்தவுடன் லவ்வாகிறார் சந்திரன்.
புது வீட்டிற்கு போகும்போது எதிர்பாராதவிதமாக ‘இப்போது வீடு காலி இல்லை’ என்கிறார் அந்த வீட்டு உரிமையாளர். இதனால் நடுரோட்டில் நிற்கிறார்கள் அனைவரும். வீட்டு புரோக்கர் சில வீடுகளை காட்ட அந்த நேரத்தில் ஆனந்தியை பிரிய மனமில்லாத சந்திரன் ஏதாவது பேசி பிரச்சினையை கிளப்பி வீடு கிடைக்கவிடாமல் செய்து விடுகிறார்.
சாயந்தரமாகியும் வீடு கிடைக்காமல் போக கிஷோர் கோபமாகிறான். சின்னியுடன் சண்டையிடுகிறான். இன்று இரவுக்குள் வீட்டை கண்டுபிடிக்கிறேன் என்று சின்னி சொல்கிறார். அந்த நேரத்தில் அவர்களது லாரி பஞ்சராக.. பஞ்சர் கடை காலையில்தான் திறக்கப்படும் என்பதால் அந்த இரவு நேரத்தில் அனைவரும் லாரியிலேயே இருக்கிறார்கள்.
அந்த இரவில் அருகில் இருக்கும் ஒரு வங்கியில் 2 கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை தனி நபராகச் சென்று கொள்ளையடிக்கிறார் ஹரிஷ் உத்தமன். தடுக்க வந்த காவலாளியையும் கொலை செய்து விடுகிறார்.
மறுநாள் காலை கிஷோருக்கும், சின்னிக்கும் இடையில் சண்டை ஏற்பட பஞ்சாயத்து போலீஸுக்கு போகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டரான மாரிமுத்து “இன்னிக்கு எவ்வளவு நேரமானாலும் வீட்டை பிடிச்சுக் கொடுத்து பொருட்களை இறக்கி வைச்சுட்டு போ..” என்று பஞ்சாயத்து தீர்ப்பை சொல்லிவிட சின்னி மீது பெரும் கோபமாகிறார் கிஷோர்.
இந்த நேரத்தில் பைபாஸ் சாலையில் இருக்கும் டோல்கேட்டில் நள்ளிரவு நடந்த கொள்ளைக்காக அனைத்து வாகனங்களையும் சோதனை செய்கிறார்கள் போலீஸார். அந்த வழியாக வரும் ஹரிஷ் பணம் உள்ள பை தான் வைத்திருந்தால் சிக்கலாகிவிடும் என்பதால் தனது காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கிஷோரின் லாரியில் போட்டுவிட்டு தானும் காரில் அவர்களை பின் தொடர்கிறார்.
ஆனால் போலீஸ் லாரியைவிட்டுவிட்டு ஹரீஷின் காரை பிடித்து சோதனையிடுகிறது. இந்தக் களேபரத்தில் லாரி ஹரீஷின் கண் பார்வையில் படாமல் போகிறது. ஒரு பாலத்தின் அருகே வந்தவுடன் கிஷோர் வண்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சின்னியின் பொருட்களையெல்லாம் எடுத்து கீழே வீசுகிறார்.
இந்த நேரத்தில் சேட்டு அனுப்பிய ஆட்கள் இருவரும் வந்து லாரியை கைப்பற்றி எடுத்துச் செல்கிறார்கள். இதனைல் இன்னமும் கோபமாக கிஷோரும், சின்னி ஜெயந்தும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள்.
அப்போது அந்த பணப் பை கீழே விழுக.. அதில் பணம் இருப்பது தெரிந்து அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். இந்த இனிய எதிர்பாராத அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிகிறார் சின்னி ஜெயந்த்.
ஆனந்தி மேல் உள்ள காதலால் உடனேயே சின்னியை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முனைகிறார் சந்திரன். பணம் இருக்கும் சந்தோஷத்தில் கிஷோரும் இதற்கு ஒத்துழைக்கிறார். மருத்துவமனையில் சின்னிக்கு சிகிச்சையளிக்க அந்தப் பணத்தில் இருந்து எடுத்து செலவழிக்கிறார்கள்.
அதே நேரம் ஹரீஷ் லாரியை பைபாஸ் சாலையில் பார்த்துவிட்டு அதைத் தடுத்து நிறுத்தி அதில் இருந்த பொருட்களை பற்றி விசாரிக்கிறார். லாரியை கடத்தியவர்களை அழைத்துக் கொண்டு சின்னி அண்ட் கோ இருந்த இடத்தில் வந்து தேடுகிறார். இப்போது அங்கே அவர்களது பழைய பொருட்கள் மட்டுமே இருக்கிறது. அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே நேரம் ஹரீஷ் உத்தமனிடம் கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த தாதா, பணத்தோடு வரவில்லையெனில் ஹரீஷின் குடும்பத்தினர் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று போனில் மிரட்டுகிறார்.
இனி என்னவாகிறது.. என்பதுதான் இந்த தேடுதல் வேட்டையை மையப்படுத்திய ‘ரூபாய்’ படத்தின் கதை.
தனது முதல் படமான ‘சாட்டை’யில் அரசுப் பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள் பிரச்சினையை அலசி, ஆராய்ந்து வெற்றி பெற்ற இயக்குநர் அன்பழகன் இப்போது இந்தப் படத்தையும் எழுதி, இயக்கியிருக்கிறார்.
நேர்மையற்ற வழியில் கிடைக்கும் பணத்தால் பிரச்சினைகளும் வரும் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது. ஆனால், உண்மையில் ‘கயல்’ சந்திரனின் காதல் விளையாட்டால்தான், இந்தக் குடும்பம் ஒரு மோசமான நிலைமையைச் சந்திக்கிறது என்பதுதான் உண்மை.
‘கயல்’ சந்திரனின் கேரக்டர் ஸ்கெட்ச் வெறுப்பை ஏற்படுத்துவதாய் அமைந்திருக்கிறது. அந்தப் பெண்ணோ சின்னப் பெண். அம்மா இல்லாத பெண். அப்பா மட்டுமே..! வீட்டைக் காலி செய்கிறார்கள். அவர்கள் சட்டென்று புது வீட்டில் அமர்வதுதான் அந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு. அவரது அப்பாவுக்கும் நல்லது.
ஆனால் முன் பின் தெரியாமல் அந்த ஒரு நிமிடத்தில் பார்த்த அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் குடும்பம் குடி போக நினைக்கும் வீடெல்லாம் சரியில்லை என்று சொல்லி வீடு பிடிக்க முடியாமல் செய்துவிட்டு அவர்களை இரவெல்லாம் தங்களுடன் தங்க வைப்பது சரியான மனநிலை உள்ள நபர் செய்யக் கூடிய செயல்தானா..?
இப்படியொரு கிறுக்குத்தனமான குணமுள்ளவன் எப்படி உண்மையான காதலனாகவும், மனிதனாகவும் இருக்க முடியும்..? பைத்தியக்காரத்தனமான திரைக்கதை இது. இதனாலேயே படத்தின் முற்பாதியில் படத்தின் மீது ஒருவித சலிப்புத் தன்மை ஏற்படுகிறது.
கிஷோர் தங்களுக்குள்ள பிரச்சினைகளை சொல்லும்போதெல்லாம் கயல் சந்திரன் “அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. இப்போதைக்கு எனக்கு காதல்தான் முக்கியம்…” என்று சொல்வதெல்லாம் ரசிகர்களை வெறுப்பேற்றுகிற விஷயம். அதையும் அழுத்தமான இயக்கத்தின் மூலம் காட்டுயிருப்பது ரசிகர்களை சித்ரவதை செய்ததற்கு சமமான விஷயம்.
பணத்தைப் பார்த்தவுடன் கிஷோரும்கூட மனம் மாறி ஆனந்தி அண்ட் கோ-வுடன் இணைவது காமெடிதான். பணம்தான் இவர்களையெல்லாம் ஒன்று சேர்க்கிறது என்பதை மட்டும் அழகாக, அழுத்தமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
சந்திரனுக்கும், ஆனந்திக்குமான காதல் துவங்குவதும், வளர்வதுமாக படத்தின் திரைக்கதையின் ஊடாகவே சென்றிருப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.
இருந்தாலும் ஹரீஷின் திரைக்கதையில் தேனி செக்போஸ்ட்டில் ஒரு போலீஸாரை கொலை செய்துவிட்டு காரில் தப்பி மூணாறுவரையிலும் இவர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக காட்டுவது மிகப் பெரிய திரைக்கதை ஓட்டை.
இதேபோல் மூணாறிலேயே பட்டப் பகலில் கடைத் தெருவில் ஒரு கடையைக் கொள்ளையடிக்கும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து இவர்கள் தப்பிக்கும் செயலும் காதில் பூ சுற்றுவது போன்றுள்ளது.
இதேபோல் இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கே வந்து இவர்களை மிரட்டி, அடித்து, உதைத்து பணத்தைப் பறிப்பதெல்லாம் நம்புவது போலவா இருக்கிறது..? இவர்கள் மூன்று பேர் ஆண்கள்.. இவர்கள் ஹரீஷிடமிருந்து தப்பிக்கும் சூழல் இருக்கிறது. ஹரீஷ் இவர்களை மிரட்டி உட்கார வைப்பதற்கு ஏதுவான காரணங்கள் படத்தில் இல்லை என்பதும் உண்மைதான். இங்கேயே 3 கொலைகள் அடுத்தடுத்து நடக்கின்றன. இப்போதும் அந்த வெள்ளை நிற காரை மூணாறு போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் எப்படிங்க இயக்குநரே..?
கிளைமாக்ஸில் வங்கியைக் கொள்ளையடிப்பதும், போலீஸ் வந்து சுற்றி வளைத்து பிடித்து சுட்டுத் தள்ளுவதும் மிக எளிதாக, இயக்குநரின் திரைக்கதையில் வந்துவிட்டது. ஆனால் அந்த சின்ன ஊரான மூணாறில் இந்தக் காரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதெல்லாம் டுபாக்கூர் திரைக்கதையாகும்.
படத்தில் நடிகர்களின் நடிப்பும், இயக்கமும், பாடல்களும், இசையும் மட்டுமே அபாரம்.  சின்னி ஜெயந்திற்கு மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு அற்புதமான கேரக்டர் கிடைத்திருக்கிறது. கடன் வாங்கிவிட்டு கொடுக்க வேண்டாம் என்று நினைக்கும் அவரது மெண்டாலிட்டியை போன்ற நிறைய மனிதர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களது பேச்சு, உடல் மொழியை அப்படியே உதாரணப்படுத்துகிறார் சின்னி ஜெயந்த்.
சந்திரனைவிடவும் கிஷோர்தான் வெகுவாக நடித்திருக்கிறார். சின்னியுடன் இவர் போடும் சண்டையும், பொருட்களை தூக்கியெறிந்துவிட்டு ஆவேசம் காட்டும் காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். கயல் சந்திரனுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் இல்லை. படத்தின் பிற்பாதியில் ஆக்சன் காட்சிகளில்தான் அவருக்கான ஸ்கோப் கிடைத்திருக்கிறது.
ஆனந்தி சின்னப் பெண்ணாகத் தெரிகிறார். அந்தப் பெண்ணுக்கே உரித்தான சங்கடம், கோபம், காதல் இதையெல்லாம் காட்டியிருக்கிறார். “நான்தான் அப்பவே சொன்னனே.. நேர்மையில்லாத காசுல எனக்கு எதுவும் வேண்டாம்”ன்னு என்று சொல்லிக் கொண்டே தோடுகளை கழட்டிக் கொடுக்கும் காட்சியில் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கிறார்.
ஹரீஷ் உத்தமன் தனது வில்லத்தனத்தை காட்சிக்கு காட்சி கூட்டி ரசிகர்களையும் டென்ஷனாக்குகிறார். ஹலோ கந்தசாமி தப்பிப் போகும் சமயத்தில் குறுக்கே காரை நிறுத்தி அவரை ஏற்றிக் கொள்ளும் அந்த அமைதியான காட்சியில் பயமுறுத்தியிருக்கிறார்.
தயாரிப்பாளர் பிரபு சாலமனின் ஆஸ்தான இடமான கேரளா, மூணாறு பகுதிகளில்தான் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும் என்கிற முன் தீர்மானத்தின்படியே கதை வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஒளிப்பதிவாளர் இளையராஜாவின் வேலைத் திறனால் காட்சிக்கு காட்சி படம் அழகுற படமாக்கப்பட்டிருக்கிறது. மூணாறு பகுதிகளை அத்தனை அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.
டி.இமானின் ரம்மியமான இசையில் ‘டுக்கும் டுக்கும்’ பாடல் தாளம் போடவும் வைக்கிறது. ‘அசத்துதே’, ‘உன்கூட பேசத்தானே’, ‘பாத்துக்குறேன்’ பாடல்கள் கேட்கும் ரகம். இமான் சந்தேகமேயில்லாமல் இப்போதைய ஒரிஜினல் இசையமைப்பாளர் என்றே சொல்ல்லாம். ‘டுக்கும் டுக்கும்’ பாடலுக்கான நடனமும் அசத்தல். பாடலை படமாக்கியவிதமும் சூப்பர்.
‘பணம் படுத்தும் பாடு’ என்கிற கதைச் சுருக்கத்தோடு திரைக்கதை எழுதியவர்கள் காதலையும் இணைத்து எழுதியதால் படம் முழுமையாக இல்லாதது போலிருக்கிறது. திரைக்கதை எல்லை மீறல்களை மன்னித்தால், ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம் என்றே சொல்லலாம்..!

0 comments: