பண்டிகை - சினிமா விமர்சனம்

18-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரபல இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகளும், நடிகையுமான விஜயலட்சுமி தனது சொந்த பட நிறுவனமான ‘Tea Time Talks’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.  
கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இவர்களோடு கருணாஸ், ‘பருத்தி வீரன்’ சரவணன், நித்தின் சத்யா, சபரிஷ், ‘கோலிசோடா’ மதுசூதனன், ‘பிளாக்’ பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – அரவிந்த், இசையமைப்பாளர் – R.H.விக்ரம், படத் தொகுப்பு – சாபு ஜோசப்ஃ, கலை இயக்கம் –  ரெமியன், சண்டை பயிற்சி –  அன்பறிவு, நடன அமைப்பாளர் – பிருந்தா  சதீஷ், காஸ்ட்யும் டிசைன்ஸ்  –  நிரஞ்சனி அகத்தியன், தயாரிப்பாளர்  – விஜயலட்சுமி அகத்தியன், தயாரிப்பு நிறுவனம் – Tea Time Talks, இயக்குநர் –  ஃபெரோஸ்.

ஹீரோ கிருஷ்ணா சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். இவரது சித்தப்பா இவரை ஒரு அனாதை விடுதியில் சேர்க்கிறார். அங்கேயிருக்கும் முரட்டு குணமுள்ள மாணவர்களுடன் பழக வேண்டிய கட்டாயத்தினால் கிருஷ்ணாவின் குணமும் மாறுகிறது.
இப்போது அவரும் அவர்களை போலவே முரட்டு சுபாவத்துடனும், முன் கோபியாகவும் இருக்கிறார். ஆனால் அடிதடிக்கெல்லாம் போகாமல் அமைதியாக ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அதே ஹோட்டலில் வேலை செய்து வருபவர் பிளாக் பாண்டி.
இதே வேலையில் தொடர விருப்பம் இல்லாத கிருஷ்ணா வெளிநாட்டிற்குச் செல்ல விருப்பப்படுகிறார். இதற்காக பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்திருக்கிறார். இது தொடர்பான செலவுகளுக்கு அவருக்கு பணம் தேவைப்படுகிறது.
இதே நேரம் வட சென்னையின் இருண்ட பக்கத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது குத்துச் சண்டை போட்டி. இதில் வீர்ர்களின் பெயரில் பணத்தைக் கட்டி சூதாட்டம்போல விளையாடுகிறார்கள் பணக்கார்ர்கள். ஆனால் இதிலும் பெட்டிங் உள்ளது. இது தெரியாமல் வீடியோ கேம்ஸ் கடை வைத்திருக்கும் சரவணன் இந்த போட்டியில் நிறைய பணத்தை இழந்துவிட்டார்.
கூடவே கிரிக்கெட் மேட்ச் புக்கிங்கிலும் தனது வீட்டை அடமானம் வைத்து வாங்கிய மொத்த பணத்தையும் இழந்துவிட்டார். இதனால் கர்ப்பிணியான இவரது மனைவி இவரைவிட்டு விலகிச் சென்றுவிட குடும்பம் பிரிந்த சோகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் டாஸ்மாக் கடையில் கிருஷ்ணா தன்னைத் தாக்கியவர்களை கோபத்துடன் திருப்பித் தாக்கியதை பார்க்கும் சரவணன், அவரை அந்தக் குத்துச் சண்டை போட்டிக்கு அழைக்கிறார். அந்த போட்டியில் கலந்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்.
பாஸ்போர்ட் பஞ்சாயத்துக்களுக்கு இப்போது பணம் தேவையாய் இருப்பதால் இதற்கு ஒத்துக் கொள்கிறார் கிருஷ்ணா. முதல் முறை நிறைய அடி வாங்கியும், அதற்காக கொஞ்சம் பணம் கிடைக்க அதை வைத்து பாஸ்போர்ட் விஷயத்தை முடிக்கிறார்.
அதற்கடுத்து திரும்பவும் அழைக்கிறார் சரவணன். வர மறுக்கிறார் கிருஷ்ணா. இடையில் கிருஷ்ணாவுக்கு ஆனந்தியை பார்த்தவுடன் காதலாகிறது. இந்தக் காதலும் ஒரு சில காட்சிகளிலேயே ஓகேயாகிவிட காதலிக்காகவும் குத்துச் சண்டையில் ஈடுபட மறுக்கிறார் கிருஷ்ணா.
பாஸ்போர்ட் விவகாரம் மறைந்து போய் இப்போது புதிய பிரச்சினை கிருஷ்ணாவுக்கு ஏற்படுகிறது. முன் பணம் கட்டினால்தான் அந்த வெளிநாட்டு வேலை கிடைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் சொல்லிவிட.. வேறு வழியில்லாமல் மீண்டும் குத்துச் சண்டையில் களமிறங்குகிறார். இப்போதும் தோற்கிறார்.
அந்தப் போட்டியை நடத்தும் மிகப் பெரிய தாதாவான மதுசூதனின் கையாளான நிதின் சத்யா அந்தப் போட்டியே பெட்டிங்குதான் என்றும் ஏற்கெனவே திட்டமிட்டுதான் அது நடத்தப்படுகிறது என்றும் சரவணனிடம் சொல்கிறார். இதைக் கேட்டு சரவணன் தான் விட்ட மொத்தப் பணத்தையும் கைப்பற்ற ஒரு திட்டம் தீட்டுகிறார்.
இதன்படி கிருஷ்ணா அடுத்த போட்டியில் நிறைய தாக்குதல்களை கொடுத்து கடைசியில் தோல்வியடைய வேண்டும் என்றும்.. இதற்கேற்ப பெட்டிங் பணத்தைக் கட்டலாம் என்றும் நினைக்கிறார். ஆனால் இதே நேரம் தாதா மதுசூதனனும் வேறு ஒரு பிளானோடு களத்தில் இறங்கி எதிராளியையும் இதேபோல் அடிப்பதுபோல் நடித்து கடைசியில் தோல்வியடையும்படி சொல்ல.. இது தரப்புமே ஒருவருக்கொருவர் திட்டம் இருப்பது தெரியாமலேயே மோதுகிறார்கள்.
சரவணன் கடைசியாக தனது கடையையும் பைனான்ஸியரிடம் அடகு வைத்து அதில் கிடைத்த பணம் மொத்தத்தையும் இதில் கட்டுகிறார். கடைசி நிமிடத்தில் ஏற்படும் குழப்பத்தில் கிருஷ்ணா வெற்றி பெற்றுவிட.. மொத்தப் பணத்தையும் இழக்கிறார் சரவணன்.
இது இவர்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்துகிறது. விட்ட பணத்தை இதே இடத்தில்தான் பெற வேண்டும் என்பதால் தாதாவின் மொத்தப் பணத்தையும் திருட முடிவெடுக்கிறார் சரவணன். இதற்கு நிதின் சத்யா உதவி செய்ய.. கிருஷ்ணாவுடன் கருணாஸும் கை கோர்க்கிறார்.
சொன்னதுபோலவே பக்கா பிளானிங்கோடு இந்தத் திருட்டு நடைபெறுகிறது. இடையில் சொதப்பனாலும் கடைசியில் கிருஷ்ணா பணத்துடன் எஸ்கேப்பாகுகிறார். இதையறிந்த தாதா லோக்கல் போலீஸ் துணையுடன் இதனைக் கண்டுபிடிக்க முனைகிறார்.
இந்தப் பணத்தை வைத்து தனது வீட்டு நிலத்தை மீட்க நினைக்கிறார் சரவணன். கிடைத்த பணத்தில் வெளிநாட்டுக்கு ஓடி செட்டிலாக நினைக்கிறார் கிருஷ்ணா. இவர்களது திட்டம் பலித்ததா..? இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
வட சென்னை பகுதியில் வலை வீசி தேடினாலும் இது போன்ற குத்துச் சண்டை போட்டிகளை இப்போது பார்க்கவே முடியாது. கிடையவே கிடையாது. சுதந்திர காலத்திற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷாரின் பொழுது போக்கிற்காக நம்முடைய தமிழர்களை பயன்படுத்தி இத்தகைய குத்துச் சண்டை போட்டிகள் நடத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. சுதந்திரத்திற்கு பின்பு இது மாதிரியான போட்டிகள் தடை செய்யப்பட்டன. இப்போது வட சென்னை முழுவதிலும் கேரம் போர்டு விளையாட்டும், கால்பந்து விளையாட்டும்தான் மிக பிரபலம்.
இப்படியொரு சூழலில்தான் ‘பூலோகம்’ படத்தைத் தொடர்ந்து குத்துச் சண்டையை மையப்படுத்தி அதுவும் வடசென்னையில் நடந்து வருவதாகச் சொல்லி எடுக்கப்படும் படங்களையெல்லாம் எந்தவிதத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
கிருஷ்ணாவுக்கு வித்தியாசமான வேடம்தான். அடாவடிக்கு அஞ்சாத கேரக்டருக்கு ஏற்ற உடல்வாகு இருந்தாலும் குத்துச் சண்டைக்கு ஏற்றபடி அவரால் தயார் செய்ய முடியவில்லை போலும்.. அடி வாங்குவதற்காகவே பிறந்திருக்கிறார் என்று சொல்ல வைப்பது போலத்தான் சண்டை காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
சின்னச் சின்ன காதல் போர்ஷன்கள்.. சரவணனுடன் சமாளிப்புகேஷன்.. திருடும்போது ஏற்படும் பிரச்சினை.. தப்பித்து போய் மாட்டிக் கொண்டு இறுதியில் எடுக்கும் குபீர் முடிவு இதிலெல்லாம் ஹீரோவாக கிருஷ்ணாவுக்கு ஒரு பெயர் கிடைக்கிறது.
ஆனந்திக்கு பெரிய அளவுக்கான காட்சிகளில்லை. இருக்கும் காட்சிகளிலும் அழகாகக் காண்பித்து முடித்திருக்கிறார்கள். சரவணனின் குணச்சித்திர நடிப்புக்கு இந்தப் படமும் பெயர் சொல்கிறது. மனைவியை பிரிந்த ஏக்கத்திலும், வீட்டை பறிகொடுத்த விரக்தியிலும் கடைசி போட்டியிலாவது போட்ட பணத்தை அள்ளிவிட நினைத்து அவர் எடுக்கும் முயற்சிகளும், அதன் முடிவில் அவர் ஏமாறுவதும் திரைக்கதையில் வேகமான போர்ஷன். படத்தின் மத்திய பகுதியான இது மட்டும்தான் இந்தப் படத்தில் ரசிப்பான இடம். சரவணனுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
நிதின் சத்யாவை முதலில் அடையாளம் தெரியவில்லை. பின்புதான் தெரிகிறார். சின்ன கேரக்டர். இதேபோல் கருணாஸின் திருடன் கேரக்டர்.. முதலில் சாதாவாக.. பூட்டைத் திறக்கும் திறமைசாலி திருடனாக இருந்து பின்பு இன்ஸ்பெக்டரின் விசாரணையில் மிகப் பெரிய டிவிஸ்ட்டை கொடுக்கும்போது மொத்த கைதட்டலையும் அள்ளுகிறார் கருணாஸ்.
ஒளிப்பதிவாளர் அரவிந்தின் கைவண்ணத்தில் குத்துச் சண்டை போட்டிகளை பரபரப்பாக படமாக்கியிருக்கிறார்கள். இதேபோல் கலர் டோன் படம் முழுவதிலும் கண்ணை உறுத்தாத வண்ணமே பிடித்திருக்கிறார்கள். ஆர்.ஹெச்.விக்ரமின் பாடல்களை தியேட்டரில் மட்டுமே கேட்க முடிந்திருக்கிறது. சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு பாராட்டத்தக்கது. படத்தின் பிற்பாதி காட்சிகளை மிக இறுக்கமான அளவில் தொகுத்திருக்கிறார். ஓகேதான்..
வெறும் பத்திரத்தை வைத்துக் கொண்டு யாரும் எதுவும் செய்துவிட முடியாது. விற்பனை செய்வதாக இருந்தால்கூட அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். அல்லது கடன் வாங்கியவரின் ஒப்புகை வேண்டும். இதில்லாமல் விற்பனை நடைபெற வாய்ப்பில்லை. பெரும் லாஜிக் மீறலை போல ஏன் இந்த பத்திரத்திற்காக இத்தனை மல்லுக்கட்டு என்று தெரியவில்லை..!
இத்தனை செய்தும் நன்றாக சமையல் செய்து அதனை கடலில் வீணாக இறைப்பதை போல.. கஷ்டப்பட்டு கொள்ளையடித்த திருட்டுப் பணத்தை அப்படியே போலீஸிடம் கொடுத்துவிட்டு போகலாம் என்று நினைக்கும் திடீர் திருப்பம் எதிர்பாராதது மட்டுமல்லாமல் முட்டாள்தனமானதுகூட.. போலீஸிடம் சிக்கினால் இந்தப் பணத்தை தங்களுக்குள் பிரித்துக் கொள்ளப் போகிறார்கள். இதுவெல்லாம் தெரிந்தும் நாம் நல்லவர்களாக காட்டிக் கொள்வோம் என்ற இமேஜை கொடுப்பதற்கு எதற்காக இத்தனை தூரம் கஷ்டப்பட வேண்டும்..? மொத்த படத்தையும் இந்தக் காட்சியே டேமேஜ் செய்துவிட்டது..!
இதனாலேயே பண்டிகை என்றாலும் கொண்டாட முடியவில்லை..!

0 comments: