நிபுணன் - சினிமா விமர்சனம்

29-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.
படத்தில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவருடைய 150-வது திரைப்படமாகும். மற்றும் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார். ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி மணிரத்னம், வைபவ், கிருஷ்ணா மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
கலை – கே.ஆறுச்சாமி, சண்டை பயிற்சி – அன்பறிவ், சுதேஷ், உடைகள் – ப்ரீத்தி கந்தன், பிரியங்கா, ஒலிக்கலவை – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், சிறப்பு சப்தம் – சின்க் சினிமா, பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா, நிகில் முருகன், ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா, இசை – எஸ்.நவீன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், மதன் கார்க்கி, அருண் வைத்தியநாதன், படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, திரைக்கதை – ஆனந்த் ராகவ், அருண் வைத்தியநாதன், எழுத்து, இயக்கம் – அருண் வைத்தியநாதன்.
திரில்லர் டைப் படங்களின் வருகையும், வெற்றியும் அதிகரித்து வருகின்றன என்பதற்கு இந்த ‘நிபுணன்’ திரைப்படமும் ஒரு உதாரணமாகிவிட்டது.

காவல்துறையின் புலனாய்வு பிரிவில் டி.எஸ்.பி.யாக இருக்கிறார் ‘ஆக்சன் கிங்’ அர்ஜூன். இன்ஸ்பெக்டர்களாக பிரசன்னாவும், வரலட்சுமியும் உடன் பணியாற்றி வருகிறார்கள்.
அர்ஜூன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதோடு எந்தச் சிக்கலான கேஸையும் புலன் விசாரணை செய்வதில் நிபுணர். மனைவி ஸ்ருதியும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. இவருடைய தம்பியான வைபவ் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். வீட்டில் தம்பியுடன் மிக நெருங்கிய நட்பாக நண்பனை போல அவருடனேயே கட்டிங் அடிக்கும் அளவுக்கு நெருக்கமாகவும் இருக்கிறார் அர்ஜூன்.
ஒரு பெரிய தொழிற்சாலை அமைப்பதற்காக பல ஆயிரம் விவசாய நிலங்களை அழிக்க நினைக்கிறார்கள். இதனை எதிர்த்து ஒரு சமூக ஆர்வலர் தலைமையில் மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் அந்த சமூக ஆர்வலர் ஒரு இரவு நேரத்தில் கடத்தப்பட்டு படு பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை வழக்கு அர்ஜூன் வசம் வருகிறது. அவரும் விசாரிக்கத் துவங்குகிறார்.
இதையடுத்து அரசு மருத்துவனையில் உடற்கூரியல் மருத்துவ நிபுணரான பெண் மருத்துவர் ஒருவரும் அதேபோல் பயங்கரமான சித்ரவதைக்கு பின் கொல்லப்படுகிறார். நகரமே பதறுகிறது. அர்ஜூன் மிக முயன்றும் கொலையின் முடிச்சு அவிழவில்லை.
அடுத்து ஒரு வழக்கறிஞர் இதே பாணியில் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். நகரமே பரபரப்பாக… வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர துடிக்கிறார் அர்ஜூன். அப்போது ஒரு பொறி தட்ட.. இப்போது தொடர்ச்சியாக கொலையானவர்களுக்கும் தனக்கும் ஒரு ரகசிய தொடர்பு இருப்பதை கண்டறிகிறார் அர்ஜூன்.
இதன்படி பார்த்தால் கொலைகாரனின் அடுத்த டார்கெட் தான்தான் என்பதை ஊகிக்கிறார் அர்ஜூன். இந்த நேரத்தில் திடீரென்று அர்ஜூனை பக்கவாத நோய் தாக்குகிறது. அது முதல் ஸ்டேஜில் இருப்பதால், உடனடியாக மருத்துவ சிகிச்சையெடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால் தனது போலீஸ் கடமை அழைப்பதால் அதனைத்தான் முதலில் முடிக்க வேணடும் என்று நினைக்கிறார் அர்ஜூன். அதற்கேற்றாற்போல் குற்றவாளியை பிடிக்க ஒரு தூண்டில் போடுகிறார். குற்றவாளியும் இதையெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்க.. யார் வலையில் யார் சிக்குகிறார்கள்..? இறுதியில் என்ன நடந்தது..? ஏன் இந்தக் கொலைகள் நடைபெற்றன என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான தேடல் மிகுந்த கதை.
ஆருஷி தல்வார். நினைவிருக்கிறதா..? 2008-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு கவுரவக் கொலையில் சிக்கி உயிரிழந்த சிறுமி. வயது 14-தான். பெற்றோர்கள் இருவரும் பிஸியான பல் மருத்துவர்கள். அந்த வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்த ஹேம்ராஜ் என்ற வேலைக்காரனுடன்தான் அதிக நேரம் இருக்க வேண்டிய சூழல் ஆருஷிக்கு..
இந்தத் தனிமையும், பேச்சு சுதந்திரமும் அவர்களை மிக நெருக்கமாக்கிவிட விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிய வருகிறது. குடும்ப மானம் பறி போனதே என்கிற கோபத்தில் வேலைக்காரனையும், மகள் ஆருஷியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வேலைக்காரன்தான் தங்களது மகளை கொலை செய்துவிட்டு கூடவே தானும் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக கதை கட்டினார்கள்.
ஆனால் டில்லி போலீஸ் மிக புத்திசாலித்தனமாக இந்த வழக்கை விசாரித்து உண்மையை கண்டறிந்து ஆரூஷியின் பெற்றோரை கைது செய்து அவர்களுக்கு தண்டனையையும் வாங்கிக் கொடுத்தது.
இந்தச் சம்பவம் அந்தச் சமயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் கவுரவக் கொலைகளின் பட்டியலில் ஒன்று என்றெல்லாம் இந்தியா முழுவதும் பேசப்பட்டு பரபரப்பானது.
இதைத்தான் இந்தப் படத்தின் மையக் கருத்தாக வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். நிச்சயமாக பாராட்டுக்குரிய கருத்து. அதையும் இந்தச் சம்பவத்தை இடைவேளைக்கு பின்பு திறந்து, இதனைச் சுற்றியே திரைக்கதை அமைத்து, கிளைமாக்ஸ் வரைக்கும் சஸ்பென்ஸை கொண்டு சென்று படத்தில் லயிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த வயதிலும் கட்டுக்கோப்பாக உடலை வைத்துக் கொண்டு, புலனாய்வு அதிகாரிகளின் தோற்றத்திற்கும், மிடுக்குக்கும் உதாரணமாக படம் முழுவதும் வலம் வருகிறார் நடிகர் அர்ஜூன். இது அவரது 150-வது படம் என்பதால் இன்னொரு சிறப்பையும் இந்தப் படம் பெறுகிறது.
மனைவியுடன் அர்ஜூன் நடத்தும் ரொமான்ஸ் காட்சிகள்தான் படத்தின் முதல் பாதியில் சுவையான திரைக்கதை. அந்தக் காட்சியில் பேசப்படும் வசனங்களும், காட்சியமைப்பும், இயக்கமும், நடிப்பும் ஒருசேர அனைவரையும் கவர்கின்றன. இந்தக் கொஞ்சல், கெஞ்சலையெல்லாம் ஸ்கிரீனில் காட்டுவதென்பது இளமையான இயக்குநர்களால்தான் முடியும். அந்த வகையில் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இளமைத் துடிப்புள்ள இயக்குநர் என்பது நன்றாகவே தெரிகிறது.
பிரசன்னாவும் அப்படியே.. சரளமான வசன உச்சரிப்புடன் வரலட்சுமியை அவ்வப்போது சீண்டி விளையாடும் ஒரு விளையாட்டுக்கார போலீஸ் அதிகாரியாகி நடித்திருக்கிறார். வரலட்சுமிக்கும் பெரிய அளவிலான துப்பறியும் வேலையில்லையென்றாலும் காட்சியமைப்பை நகர்த்துவதில் அவரும் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்.
சுகாசினி, சுமன், அவர்களது மகள் என்று இந்தக் குடும்பமும் ஒரு சில நிமிடங்களே என்றாலும் மனதில் நிற்கிறார்கள். இப்படியொரு அசம்பாவிதம் யார் வீட்டில் நடந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாதுதான். ஒரு பக்கம் பெற்றோர்கள் செய்தது தவறென்றாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் யாரால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் சரி சமமான விகிதத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
வைபவ் கேரக்டர் ரசிகர்களுக்கு கொலையாளி இவராக இருக்குமோ என்கிற சந்தேகத்தைக் கொடுப்பதற்காகவே வைக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. கிருஷ்ணா கேரக்டர். சான்ஸே இல்லை. சந்தேகிக்க இடமே இல்லாத அளவுக்கு அவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
படுகொலைகளை படமாக்கியவிதம் கொடூரமாக இருந்தாலும் அது ஏன்..? எதற்காக இந்தக் கொடூரம் என்பதற்கும் ஒரு காரணத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதுவே படத்தின் மீதான ஆர்வத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
இது போன்ற படங்களின் வேகமான ஓட்டத்திற்கும், கவன ஈர்ப்பிற்கும் சுவையான பின்னணி இசையும் காரணமாக இருக்கும். இதில் அதுவும் சாத்தியமாகியிருக்கிறது. நவீனின் பின்னணி இசை பல இடங்களில் அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.
இதேபோல் பாடல்களில் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் மனதை ஆற்றுகிறது. பாடலை எழுதிய இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு பாராட்டுக்கள். பாடல் காட்சியை படமாக்கியவிதமும் அருமைதான். ‘வாடா மோதிப் பார்க்கலாம்’ பாடல் காட்சி சிச்சுவேஷனுக்கேற்ற பாடலாக சீக்வென்ஸ் காட்சிகளாக வந்து போகிறது..!
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவே படத்தின் தரத்தை உணர்த்தியிருக்கிறது. படம் முழுவதுமே மேக்கிங் பிரமாதம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு காட்சிகளை அமைத்திருப்பதற்கு ஒளிப்பதிவே ஒரு உதாரணமாகியிருக்கிறது.
நறுக்கான வசனங்கள்.. அந்த வசனங்களையும் அழகாக கத்தரித்தாற்போல் பேச வைத்திருக்கும்விதம்.. அர்ஜூனின் அலட்சியமான நடிப்பு.. பிரசன்னா, வரலட்சுமியின் துடிப்பான தேடல்.. ஒரு நிமிடம்கூட திரைக்கதை படத்தின் மையக் கதையைவிட்டு அகலாத தன்மை.. திகிலூட்டிய பின்னணி இசை.. கொஞ்சமும் சோர்வில்லாத திரைக்கதை.. நடிகர்களின் குறைவில்லாத பங்களிப்பு.. எல்லாவற்றுக்கும் மேலாக சிறப்பான இயக்கம்.. இது எல்லாமும் சேர்ந்து இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டிய படம் என்று சொல்ல வைத்திருக்கிறது.
அவசியம் பாருங்கள் மக்களே..! நிச்சயமாக நேரம் வீணாகாது..!!

0 comments: