போகன் - சினிமா விமர்சனம்

03-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில், பிரபுதேவாவும் டாக்டர் K.கணேஷும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
ஜெயம் ரவி கதாநாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வருண், அக்ஷரா, பொன்வண்ணன், நாசர், நாகேந்திர பிரசாத், சிந்து ஷ்யாம், பிரகாஷ் ராஜன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
இசை – D.இமான், ஒளிப்பதிவு – செளந்தர் ராஜன், கலை – ஆண்டனி, கலை – மிலன், வசனம் – K.சந்துரு, சண்டைப் பயிற்சி – திலீப் சுப்புராயன், பாடல் – தாமரை, மதன் கார்க்கி, ரோகேஷ், நடனம் – ராஜு சுந்தரம், பிருந்தா, ஸ்ரீதர், ஷெரீஃப், கதை, திரைக்கதை & இயக்கம் – லக்ஷ்மன்.

ராஜ குடும்பத்து வாரிசான அரவிந்த் சுவாமியின் சிறு வயதிலேயே அவரது தந்தை அரசாங்கம் அளித்த சொத்துக்களைக் குந்தித் தின்று அழித்துத் தற்கொலையும் செய்து கொள்கிறார். எல்லாம் இழந்து விட்டாலும் அரவிந்த் சுவாமிக்கு ராஜ சுகத்துடன் வாழ்க்கையை அனுபவித்துத் தீர்க்க ஆசை. அதற்காக உல்லாசப் பயணிகளின் சுற்றுலா கைடாகவும், பார்களில் சில்லறைத் திருட்டுக்களிலும் ஈடுபட்டு வருகிறார். பின், போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தொல்லியல் துறையில் வேலைக்குச் சேர்ந்து, சித்தர் போகர் அருளிய பரகாயப் பிரவேசம் பற்றிய ஓலைச்சுவடியைத் திருடி, கூடு விட்டு கூடு பாயும் சக்தியைப் பெறுகிறார்.
லலிதா ஜூவல்லரியின் மேனஜர் உடலுக்குள் புகுந்தும், வங்கி ஊழியரான ஜெயம் ரவியின் தந்தை நரேன் உடலுக்குள் புகுந்தும் லட்சம் லட்சமாய்ப் பணத்தைத் திருடுகிறார். தந்தை மேல் விழும் பழியைத் துடைக்க டெபுடி கமிஷ்ணரான ஜெயம் ரவி, தீர ஆராய்ந்து அரவிந்த் சுவாமியை கைது செய்து சிறையில் தள்ளுகிறார்.
அரவிந்த் சுவாமியோ பதற்றப்படாமல் ஜெயம் ரவியின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார். அரவிந்த் சுவாமியின் உடலில் சிக்கிக் கொள்ளும் ஜெயம் ரவி சிறையில் மாட்டிக் கொள்கிறார். ஜெயம் ரவியின் உடலில் இருக்கும் அரவிந்த் சுவாமி சுதந்திரமாக வெளியில் நடனமாடுகிறார். ஜெயம் ரவி எப்படித் தன் உடம்பை மீட்டு அரவிந்த் சுவாமியை வெல்கிறார் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.
ராஜ வம்சத்து ஆதித்யாவாக அரவிந்த் சுவாமி நன்றாக நடித்துள்ளார். எல்லாவற்றையும் அனுபவித்து வாழ நினைக்கும் அவர்தான் போகன். அவரின் அறிமுக காட்சியிலேயே இயக்குநர் லக்ஷ்மன் உலகித்திலேயே தான் சொர்க்கம் உள்ளதென அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அரவிந்த் சுவாமி மயம். அவர் எது செய்தாலும் பேசினாலும் அழகாக உள்ளது. அவரின்றி போகனைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. அவரது கண்களில் உறைந்து படம் முடிவதில் இருந்தே, அவர் தான் படத்தின் நாயகன் எனச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் இயக்குநர் லக்ஷ்மன். ஹாலிவுட் தழுவல் இருப்பதாலோ என்னவோ, போகன் 2-க்கான முத்தாய்ப்போடு படத்தை முடித்துள்ளார்.
டெபுடி கமிஷ்ணர் விக்ரமாக ஜெயம் ரவி நடித்துள்ளார். மிகத் திறமையான காவல் அதிகாரி. தொடர்ந்து வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, தமிழ் சினிமாவில் தன் முத்திரையை ஆழப் பதித்து வருவது சிறப்பு. அரவிந்த் சுவாமியாக உலா வரும் சமயத்தில், ஹன்சிகா உணவு ஊட்டி விடும் பொழுது ஜெயம் ரவி அழும் காட்சி அட்டகாசமாக உள்ளது. சாதுவாய் இருக்கும் நாசர், சட்டென தன் வில்லத்தனத்தைக் காட்டும் பொழுது அதை அழகாய்ச் சமாளிக்கிறார் ஜெயம் ரவி.
அழகு பதுமையாக ஹன்சிகா. குடித்து விட்டு அவர் ச்எய்யும் அமர்க்களம் ரசிக்க வைக்கிறது. ஆனால், திடீரென க்ளைமேக்ஸில் கமிஷ்ணர் ஆஃபீஸிற்கு எப்படி வந்தார் என்பதுதான் தெரியவில்லை. தயாரிப்பாளர் கணேஷின் அக்கா மனான வருண்க்குக் காட்சிகள் குறைவெனினும், நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பார்-மேனாக வந்து ‘டை’யை அட்ஜஸ்ட் செய்யும் சிறு காட்சி எனினும், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் தனித்துத் தெரிகிறார்.
இமானின் பின்னணி இசை படத்தின் ஃப்ளோவிற்கு உதவியுள்ளது. செளந்தர் ராஜனின் ஒளிப்பதிவில், ஒரு பிரம்மாண்டம் தெரிகிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில் எடுத்துக் கொண்ட சிரத்தையும் மெனக்கெடலும் பளிச்செனத் தெரிகிறது. யார் உடம்புக்குள் யார் என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படாத வண்ணம் கச்சிதமாய்த் திரைக்கதை அமைத்துள்ளதற்கு இயக்குநர் லக்ஷ்மனுக்கு ஒரு சபாஷ். அதைத் திரையில் கச்சிதமாய்ச் சாத்தியமாக்கியுள்ளார் எடிட்டர் ஆண்டனி.
போகன் – தவற விடாமல், குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம்.

0 comments: