காஸி - சினிமா விமர்சனம்

17-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பி.வி.பி. சினிமா நிறுவனம், மேட்டினி எண்டர்டெய்ன்மெண்ட்  நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.
பிரம்மாண்டமான செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக டாப்சி நடித்திருக்கிரார். இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் போன்ற அனுபவ நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – மதி, இசை – கே, படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், எழுத்து, இயக்கம் – சங்கல்ப் ரெட்டி.

இந்தாண்டின் துவக்கத்தில் வந்திருக்கும் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். இதுவரையிலும் இந்திய-பாகிஸ்தான் போர்கள் பற்றி பள்ளி பாடப் புத்தகங்களில் நாம் படித்த கதைகளையெல்லாம் மிஞ்சும்வகையில் நடந்திருக்கும் ஒரு போர்க் கதை இது.
1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷில் சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அந்த நேரத்தில் வங்க தேசத்தில் இருந்த பாகிஸ்தான் படைகளுக்கு ராணுவத் தளவாடங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்ல பாகிஸ்தானில் போர்க் கப்பல்கள் தயாராக இருந்தன.
இந்தச் சூழலில் போரினால் லட்சணக்கணக்கான மக்கள் அகதிகளாய் இந்தியாவுக்குள் குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்திற்குள் நுழைந்ததையடுத்து அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி பங்களாதேஷில் போராடும் சுதந்திரப் போராளிகளுக்கு மறைமுகமாக உதவிகளை செய்து வந்தார்.  இதனையறிந்த பாகிஸ்தான், இந்திராகாந்தி மீது குற்றம் சுமத்தியது.
வெளிப்படையாக போரில் இறங்காமல் இருந்த இந்தியா, அப்போது இதனை மறுத்தாலும் மனிதாபிமான அடிப்படையில் வங்காளத்தில் இருந்து அகதிகளாய் வந்த மக்களுக்கு பெரும் உதவிகளைச் செய்தது.
இத்தகைய போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில் பாகிஸ்தானின் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு செல்லும் கப்பல்களை, இந்திய கப்பல் படை நடுவழியில் தாக்கினால் நிலைமை மோசமாகும் என்று பயந்தது பாகிஸ்தானின் ராணுவம்.
அப்போது இந்தியாவிடம் இருந்த விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் திறமை பற்றி பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்த பயம்தான் இதற்கெல்லாம் காரணம்.
அப்போது பாகிஸ்தானிடம் எந்தவொரு விமானம் தாங்கிக் கப்பலும் கைவசம் இல்லை. இந்தியாவிடம் மட்டுமே இருந்தது என்பதால் கடல் வழியாக மோதி இந்தியாவை ஜெயிக்க முடியாது என்பது பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரிந்திருந்த்து.
இதனால் தந்திரமாக வேறொரு சூழ்ச்சி வேலையைச் செய்தது. தன்னிடம் இருந்த ‘காஸி‘ என்கிற நீர் மூழ்கிக் கப்பலை வங்காள விரிகுடா பகுதிக்கு அனுப்பி இந்தியாவின் பகுதிகளைத் தாக்கி இதன் மூலமாக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலை திசை திருப்பி வைக்க பாகிஸ்தானின் ராணுவம் முடிவெடுத்தது.
இந்த ‘காஸி ‘என்கிற கப்பல் அமெரிக்காவில் 1944-ம் ஆண்டு கட்டப்பட்டு 1945 மார்ச் 31-ம் தேதியன்று அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இதன் பின்னர் பல வருடங்களாக, பல போர்களில் அமெரிக்க ராணுவத்தில் ‘காஸி’ பயன்படுத்தப்பட்டு வந்தது.
Tench-class diesel-electric முறையில் செயல்படும் இந்தக் கப்பலின் ஆரம்பக் கால பெயர் ‘Diablo’. இதற்கு ஸ்பானிய மொழியில் ‘பேய்’ என்று அர்த்தமாம். அமெரிக்க ராணுவ குறியீட்டில் ‘SS 479’ என்றும் இந்தக் கப்பல் அழைக்கப்பட்டது.
 2414 டன் எடை கொண்டது இந்த ‘காஸி’ கப்பல். இதன் நீளம் 311 அடி. அகலம் 27 அடி. உயரம் 17 அடி. கடற்பரப்பில் மணிக்கு 20.25 கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்த ‘காஸி’ கடலுக்கு அடியில் 8.75 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 400 கி.மீ. தூரம் வரையிலும் கடலுக்கு அடியில் செல்லும் சக்தி படைத்தது. 7 அதிகாரிகள் மற்றும் 69 வீரர்களுடன் ஆசியாவை வலம் வந்து கொண்டிருந்தது இந்த ‘காஸி’ நீர் மூழ்கி கப்பல்.
1945-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டுவரையிலும் அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றிய இந்த ‘காஸி’ நீர் மூழ்கி கப்பல் அமெரிக்க ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றது.
இதன் பின்பு ‘காஸி’யை பாகிஸ்தான் கப்பல் படைக்கு நான்காண்டு காலப் பயன்பாட்டிற்கென்று 1964-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று குத்தகை அடிப்படையில் கொடுத்திருந்தது அமெரிக்க அரசு. இந்த குத்தகை ஒப்பந்த விலை 1.5 மில்லியன் டாலர்.
அப்போதைய பாகிஸ்தானின் ஆட்சியாளரான ஜெனரல் அயூப்கானுடன் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி நட்புறவை பேணும் பொருட்டு இந்த உதவியினைச் செய்திருந்தார். அப்போது ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவுடன் இந்தியா தீவிரமான நட்பில் இருந்ததால் ராஜதந்திர நடவடிக்கையாக அமெரிக்க அதிபர் கென்னடி ‘காஸி’ நீர் மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானுக்குக் கொடுத்து இந்திய தீபகற்பத்தை பதற்றமாக்கியிருந்தார்.
அதேபோல் இந்தியாவின் அப்போதைய நீர் மூழ்கிக் கப்பலான ‘ஐ.என்.எஸ். ராஜ்புத்’ எனப்படும் ‘H-09’ என்றழைக்கப்பட்ட கப்பலும், இங்கிலாந்து அரசிடம் இருந்து இந்திய அரசு வாங்கிய கப்பலாகும்.
இது 1941-ம் ஆண்டு கட்டப்பட்டு 1942 ஆகஸ்ட் 27-ம் தேதியன்று இங்கிலாந்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. அப்போது இதன் பெயர் ‘HMS Rotherham’. இரண்டாம் உலகப் போரின் போது ஆசியப் பகுதி போர்களில் கலந்து கொண்ட பெருமை கொண்டது இந்தக் கப்பல்.
1945-ம் ஆண்டு இந்தக் கப்பல் இங்கிலாந்து ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்தியா சுதந்திரமடைந்த பின்பு கப்பல் படைக்கு வலு சேர்க்கும் பொருட்டு வாங்கப்பட்ட முதல் நீர் மூழ்கிக் கப்பல் என்ற பெயரை இந்த ‘ரோதர்ஹாம் கப்பலே’ பெற்றது.
இங்கிலாந்திடமிருந்து 1948-ம் ஆண்டு இந்த நீர் மூழ்கிக் கப்பல் விலைக்கு வாங்கப்பட்டு 1949-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதியன்று இந்திய ராணுவத்தில் ‘ஐ.என்.எஸ். ராஜ்புத்’ என்கிற பெயரில் சேர்க்கப்பட்டது. அன்றிலிருந்து பல வருட காலமாக இந்தியக் கடற்படையில் நீண்ட சேவையாற்றிய இந்தக் கப்பல் 1976-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றது.
1971-ம் ஆண்டு வங்க தேசத்தில் சுதந்திர போராட்டம் வெடிக்க.. இந்த ‘காஸி’யை களத்தில் இறக்கியது பாகிஸ்தானின் ராணுவம். ‘காஸி’ கப்பல், கராச்சி துறைமுகத்தில் இருந்து கிளம்பி அரபிக் கடல் வழியாக தமிழகத்தைச் சுற்றி வந்து வங்காள விரிகுடாவில் பயணித்தது.
இதன் வருகையை உளவுப் பிரிவின் மூலம் அறிந்த இந்திய ராணுவம் கிழக்கு கடற்படையினருக்கு இது குறித்து எச்சரிக்கை செய்ய.. வங்காள விரிகுடா பகுதியை அப்போது பாதுகாத்துக் கொண்டிருந்த ‘ஐ.என்.எஸ். ராஜ்புத்’ என்னும் நமது நீர்மூழ்கிக் கப்பலை களமிறக்கியது இந்தியா.
‘காஸி’யின் நோக்கம் பாகிஸ்தானின் ராணுவ கப்பலை பத்திரமாக சிட்டகாங் கொண்டு செல்லும் வழியை சீராக்க வேண்டி.. ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலை திசை திருப்புவதற்காக நடுவில் இருக்கும் விசாகப்பட்டிணம் கடற்பிரதேசத்தை தாக்குவதுதான்.
அப்போது இந்தியப் படைகளின் கவனம் முழுவதும் விசாகப்பட்டிணம் மீதே இருக்கும். அந்த நேரத்தில் தங்களது ராணுவக் கப்பலை சிட்டகாங் கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்து தந்திரமாக காய் நகர்த்தினார்கள்.
ஆனால் தொழில் நுட்பத்திலும் பாகிஸ்தானைவிடவும் ஒரு படி மேலேயே இருந்த இந்திய வீர்ர்களிடத்தில் அந்த வேலை பலிக்கவில்லை. 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியன்று விசாகப்பட்டிணம் கடல் பிரதேசத்தில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ஒரேயொரு நீர் மூழ்கிக் கப்பலான ‘காஸி’ இந்தியாவின் ஐ.என்.எஸ். ராஜ்புத் நீர் மூழ்கிக் கப்பலால் அழிக்கப்பட்டது.
இதனை முதலில் ஒத்துக் கொள்ள மறுத்த பாகிஸ்தான், பின்பு மூன்று தினங்கள் கழித்து 1971, டிசம்பர் 7-ம் தேதியன்று காஸி நீர் மூழ்கிக் கப்பல் திடீரென்று கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தினாலேயே அழிந்து போனது என்றும், இந்தியாவின் கப்பல் படையால் அது தாக்கப்படவே இல்லையென்றும் சொல்லி சமாளித்தது.
ஆனால் உண்மை நிலவரத்தை அப்போதைக்கு இந்தியா உலகம் முழுக்க பறை சாற்றி தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டது.
இந்த வீரச் சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்த ‘காஸி’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சங்கல்ப். இதை எடுத்த எடுப்பிலேயே படமாக்கிவிடவில்லை சங்கல்ப். முதலில் நடந்த சம்பவத்தை புத்தகமாக தானே எழுதியிருக்கிறார். பின்புதான் சினிமாவாக எடுக்க முனைந்திருக்கிறார் இயக்குநர்.
‘ஐ.என்.எஸ். ராஜ்புத்’ நீர் மூழ்கிக் கப்பலின் கேப்டனாக கே.கே.மேனனும், துணை கேப்டனாக ராணா டக்குபதியும், தலைமை செயல் அதிகாரியாக அதுல் குல்கர்னியும் நடித்துள்ளனர். வங்காள தேசத்தில் இருந்து தப்பி வரும் அகதிப் பெண்ணாக டாப்சி நடித்திருக்கிறார். மேலும், கிழக்கு பிராந்திய கடற்படையின் சீப் கமாண்டராக ஓம்பூரியும், துணை கமாண்டராக நாசரும் நடித்திருக்கின்றனர்.
அப்போதைய டெலிகிராம்படி கிடைக்கும் சங்கேத வார்த்தைகளில் ‘காஸி’யின் பயணப்பாடு கிழக்கு பிராந்திய கப்பல் படையின் தலைமையகத்திற்கு கிடைக்கிறது. உடனேயே தனது பணியைத் துவக்கும் தலைமை கமாண்டர் ஓம்புரி ‘ராஜ்புத்’தை தயார் செய்யச் சொல்கிறார்.
அந்த நீர் மூழ்கிக் கப்பலின் கேப்டனான கே.கே.மேனன் அதிரடியாகச் செயல்படுவார். மேலதிகாரிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ரு நினைக்காதவர். இந்தக் காரணங்களுக்காக சில காலம் இடைக்கால பணி நீக்கத்திலும் இருந்தவர் என்பதெல்லாம் தெரியும் என்றாலும் இந்த இக்கட்டான நேரத்தில் ஆளை மாற்ற வேண்டாம் என்கிறார் ஓம்பூரி.
இவருக்கு நேரெதிர் குணமான ராணாவை துணை கேப்டனாக நியமித்து கூடவே அனுப்பி வைக்கிறார்கள். இதனால் ஏவுகணைகளை வீசும் அனுமதி கட்டளை பொறுப்பு இருவருக்கும் சம அளவில் கிடைக்கிறது. கப்பலின் தலைமை செயல் அதிகாரியான அதுல் குல்கர்னி தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேரும்படி சொல்லிவிட்டு உடனடியாக பணிக்கு வந்துவிடுகிறார்.
பயணம் துவங்கியது முதலே அதிரடியாகவே செயல்படும் மேனனை, ராணாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனாலும், கீழ்ப்படிதல் குணமுள்ள அதுல் குல்கர்னி அனைத்தையும் தன் தோளில் தாங்கிக் கொள்கிறார்.
‘காஸி’யும் லேசுப்பட்ட கப்பல் இல்லை. அதில் இருக்கும் பாகிஸ்தானின் ராணுவ வீர்ர்களும், இந்தியாவின் ‘ராஜ்புத்’தின் வருகையை கண்டறிகிறார்கள். ‘ராஜ்புத்’தின் கவனத்தைத் திசை திருப்ப வங்கத்தில் இருந்து அகதிகள் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலை குண்டு வீசு அழிக்கிறார்கள்.
‘ராஜ்புத்’தில் இருந்து இந்தத் தகவல்கள் எல்லாம் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகமான விசாகப்பட்டிணத்திற்குச் செல்கிறது. ராணா கடலுக்குள் இறங்கி அங்கே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த டாப்சியையும், ஒரு சிறுமியையும் காப்பாற்றி தங்களது கப்பலுக்குக்குள் கொண்டு வருகிறார்.
இப்போது தங்களது தாக்குதல் இலக்குக்கு எளிதாக நேருக்கு நேராக சில மைல் தொலைவில் நிற்கும் இந்தியாவின் ‘ராஜ்புத்’தை தாக்க ஏவுகணைகளை வீசுகிறார்கள் காஸி வீரர்கள். இதனையறியும் மேன்ன் சமயோசிதமாக யோசித்து ராஜ்புத்தை கீழ் நோக்கி கொண்டு சென்று கப்பலை காப்பாற்றுகிறார். இதைத் தொடர்ந்து மேலும், மேலும் ஏவுகணைகள் வீசப்பட இப்போதும் அது போலவே தப்பிக்கிறார்கள் ராஜ்புத்தின் வீரர்கள்.
இதனால் தந்திரத்தை கையாளும் காஸி படையினர் கன்னி வெடியை கடலுக்குள் செலுத்திவிட்டு இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்து தள்ளிப் போகிறார்கள். எதிராளிகள் இருக்கும் சிக்னல் கிடைக்காமல் ராஜ்புத் நகர்ந்து வரும்போது எதிர்பாராதவிதமாக கன்னி வெடியில் சிக்கிக் கொள்ள ராஜ்புத்தின் சில பகுதிகள் கன்னிவெடியால் சிக்கி சிதறுகின்றன.
ஆனாலும் இந்தத் தாக்குதலில் கேப்டன் மேனன் உயிரிழக்கிறார். அதுல் குல்கர்னி காயம்படுகிறார். இந்த நேரத்தில் வேறொரு தந்திரத்தை பயன்படுத்தி காஸி, ராஜ்புத்தை அழிக்க நினைக்க… ராணாவின் தலைமையில் இந்திய கடற்படை வீரர்கள் அதனை வீர தீரத்துடன் எதிர்த்து போராடி ஜெயிக்கிறார்கள். அது எப்படி என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..!
இயக்குநர் சங்கல்ப் ரெட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும்..! கலை இயக்கம், தன்னுடைய இயக்கம், நடிகர்களின் திறமை.. அறபுதமான ஒளிப்பதிவு.. நொடிக்கு நொடி எதிர்பார்ப்பைத் தூண்டும் கச்சிதமான படத் தொகுப்பு.. கதையையும், காட்சியையும் கெடுக்காத அளவுக்கான பின்னணி இசை.. தத்ரூபமான கடல் சண்டை காட்சிகள்.. அனிமேஷன் காட்சிகள்.. என்று அனைத்திலும் ஒரு சிறிய குறைகூட சொல்ல முடியாத அளவுக்கு படத்தினை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இறுக்கமான, கண்டிப்பான கேப்டன் என்கிற தோற்றத்தில் நடித்திருக்கும் கே.கே.மேனன் நடிப்பில் அனைவரையும் மிஞ்சிவிட்டார். வசனங்களை உச்சரித்த பாணி, தனது கம்பீரம் குறையாமலும், எதிர்ப்புகளை சமாளிக்கும்விதமாக ராணாவுக்கு பதில் சொல்லியபடியே தனது கட்டளைக்கு அனைவரும் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று உத்தரவிடும் காட்சிகளில் லயிக்க வைத்திருக்கிறார்.
ஒரு கேப்டன் என்ற முறையில் இல்லாமல் ஒரு வீரன் என்கிற முறையில் நேரத்தை வீணடிக்கும்வகையில் தலைமைக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வரும் உத்தரவின்படி நடத்தல் என்னும் ராணுவத்தின் பாரம்பரியமான வழிகாட்டுதல் முறையை அவர் வெறுப்பதை நறுக்கென்று சில வசனங்களில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர்.
அவரைப் புரிந்து கொள்ளாத ராணாவுக்காக கடைசியில் அவர் தன் உயிரை இழப்பதும், இதன் பின்பு கடற்படையின் வழக்கப்படி அவருக்கு நடக்கும் இறுதிச் சடங்கு மரியாதையும் மனதைத் தொடும் காட்சிகள்.
அதுல் குல்கர்னி.. கீழ்ப்படிதல் என்பதுதான் ராணுவத்தின் முதல் பணி என்பதை கச்சிதமாக புரிந்த கொண்ட ஆபீஸராக காட்சியளிக்கிறார். “யெஸ் ஸார்…” என்கிற ஏற்றுக் கொள்ளுதலை பலவிதங்களில், பல மாடுலேஷன்களில் அவர் உச்சரிக்கும்விதமே எப்பேர்ப்பட்ட அழுத்தத்தின் கீழ் ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
ராணாவுக்கு சிற்சில காட்சிகளே அழுத்தமான நடிப்புக்கு இடைவேளைக்கு பின்பாக கிடைத்திருக்கிறது. திரைப்படத்தின் வேகமான திரைக்கதையில் தப்பிப்பார்களா..? இல்லையா என்கிற பதைபதைப்பில் படத்தை நகர்த்தியிருப்பதால் இந்தப் படத்தில் இதற்கு மேல் நடிப்பு என்பதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவே கூடாது.
டாப்ஸிக்கும் பெரிய அளவுக்கு ரோல் இல்லை என்றாலும், அவசரத்திற்கு உதவிய அகதி மருத்துவராகவும் நடித்து திரைக்கதையில் பெரிதும் உதவியிருக்கிறார். ‘சாரே ஜகான்கி ஹச்சா’ பாடலும், ‘ஜன கன மன’ பாடலும் மிகச் சரியான நேரத்தில் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மதியின் அழகான ஒளிப்பதிவில் நீர் மூழ்கிக் கப்பலின் உட்புறமும், சமுத்திரத்தின் அலைபாயும் அலைகளுக்கிடையே தெரியும் காட்சிகளும்.. அங்கே நடக்கும் தாக்குதலுக்கு பின்னான காட்சிகளிலும் கேமிராவின் பங்களிப்பு மிக, மிக அதிகம். மதி சொக்க வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு அருமை. கடல் பயணத்தில் துவங்கும் பொழுதிலிருந்து இறுதிவரையிலும் படத்தின் வேகத்தை கொஞ்சமும் குறைத்துவிடாமல் அதே வேகத்துடன் படத்தையும் பயணிக்க வைத்திருக்கிறார். ஏவுகணைகள் ஒவ்வொன்றாக வரும் காட்சியில் திரையில் நடித்தவர்களிடையே இருந்த பதட்டத்தையும், நெர்வஸையும், படம் பார்த்த ரசிகர்களிடையேயும் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
நல்லவேளையாக பாடல்களே இல்லாத படமாக வந்திருக்கிறது. இது ஒன்றே இந்தப் படத்தின் சிறப்புக்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அதட்டலாக இல்லாமல் காட்சிக்கு ஏற்றாற்போல் இடையூறு இல்லாமல் இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கே.
கலை இயக்குநருக்கு ஒரு ‘ஜே’ போடலாம். நீர் மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பு.. உள் கட்டுமானம்.. தொலைத் தொடர்புகள்.. கம்பியில்லா தந்தி தகவல்கள் பரிமாறும்விதம், சுருக்கமாக ரகசிய சங்கேத வார்த்தைகளில் தந்தியில் தகவலைச் சொல்வது.. நாட்டிக்கல் மைல்.. ஏவுகணைகள் எத்தனை மீட்டர் தூரத்தில் இருக்கிறது.. வருகிறது என்பதையெல்லாம் கண்டறிவது.. கடலுக்குள் இருக்கும் சின்ன மின் காந்த அசைவுகளைக்கூட கண்காணிப்பது.. கப்பல் முன், பின் நகரும் வேகம்.. கீழே கடலுக்குள் ஆழத்திற்குள் செல்லும்விதம்.. கடலுக்குள் கன்னி வெடி என்னும் தொழில் நுட்ப வளர்ச்சி.. என்று இதுவரையிலும் பார்க்காத பல போர் விஷயங்களையும், போர்க் கப்பல் தொடர்பான பாடங்களையும் இந்தப் படம் சொல்லித் தந்திருக்கிறது. இது அத்தனையையும் நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கும் கலை இயக்குநர் நிச்சயம் பெரும் பாராட்டுக்குரியவர்.
இது போன்ற படங்களை ரசிப்பதற்கு மனதில் தேச பக்தி என்ற உணர்வு இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சிறந்த திரைப்படங்களை ரசிக்கும் மனப்பான்மை இருந்தாலே போதும். அது இந்தியா, பாகிஸ்தான் என்றில்லாமல் இரண்டு எதிரிகளுக்கிடையில் நடக்கும் போரில் எப்படி ஜெயிக்கிறார்கள்..? எதனால் தோற்கிறார்கள் என்ற பார்வையிலேயே படத்தைப் பார்த்தாலும், இந்தப் படம் நிச்சயம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்தமான படமாகத்தான் இருக்கும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் என்கிற பிரிவிலும் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது. இதுவரையிலும் பார்க்காதவகையில் ஒரு வித்தியாசமான திரைப்படம் ஒன்றை பார்க்கப் போகிறீர்கள். தயவு செய்து மிஸ் செய்துவிடாதீர்கள்..!
அவசியம் பார்க்க வேண்டிய படம் இது..!

0 comments: