எமன் - சினிமா விமர்சனம்

24-02-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சகுனியின் தாயக்கட்டைதான் உலகத்திலேயே மிகப் பெரிய சூழ்ச்சி எந்திரம் என்பார்கள். அதைதான் இந்தியத் திருநாட்டில் இப்போதைய அரசியல்வாதிகளும் கையாண்டு வருகிறார்கள்.
இப்போது இந்தியாவில் அரசியல் பதவிக்காக கொலைகளை செய்வது சாதாரணமான சமூகக் கொலைகளைவிடவும் அதிகமாகிவிட்டது. அரசியலை வைத்துதான் அதிகாரமும், பணமும், உயர் பதவிகளும் தானாகவே வந்து சேர்கிறது என்பதால் அந்த அரசியல் அதிகாரத்தை கைவிட அரசியல்வாதிகள் சுடுகாட்டுக்கு போகும்வரையிலும்கூட விட மறுக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அரசியலை பட்டவர்த்தனமாக சொல்லக்கூடிய திரைப்படங்கள் தமிழில் அதிகம் இல்லை. ‘அமைதிப்படை’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மட்டுமே அரசியல்வாதிகளின் உண்மைத்தனத்தை தோலுரித்த திரைப்படங்கள். இப்போது மூன்றாவதாக ஒரு கெட்ட அரசியல்வாதி எப்படி உருவாகி வெற்றியடைகிறான் என்பதை வெளிப்படுத்த வந்திருக்கிறது இந்த ‘எமன்’ திரைப்படம்.

திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட விஜய் ஆண்டனி தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்த காரணத்துக்காக விஜய் ஆண்டனியின் அப்பாவை அவரது சொந்த தாய் மாமனும், அப்போதைய அரசியல்வாதியான அருள்ஜோதியும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.
தனது தாத்தா சங்கிலி முருகனின் வளர்ப்பிலேயே வளர்த்தெடுக்கப்படுகிறார் மகன் விஜய் ஆண்டனி. இப்போது தாத்தாவுக்கு வயிற்றில் ஏற்பட்டிருக்கும் கேன்சர் கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். சில லட்சங்கள் தேவை என்கிற நிலையில் இருக்கும் விஜய் ஆண்டனி, இந்தப் பணத்துக்காக எதையும் செய்யும் தயார் நிலையில் இருக்கிறார்.
அரசியல்வாதியாகவும் மற்றும் ரவுடியாகவும் இருக்கும் ஜெயக்குமாரின் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த ஒரு வழக்கில் செட்டப் டிரைவராக ஜெயிலுக்குள் போகிறார் விஜய் ஆண்டனி. இதற்கு பரிகாரமாக அவருக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து தனது தாத்தாவின் கேன்சர் ஆபரேசனை செய்து முடிக்கிறார்.
அதே நேரம் ஜெயிலில் அரசியல்வாதி மாரிமுத்துவின் நட்பு விஜய் ஆண்டனிக்கு கிடைக்கிறது. ஜெயக்குமாருக்கும் மாரிமுத்துவுக்கும் இடையில் பகை ஏற்பட்டு இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கொலை செய்ய துடித்துக் கொண்டிருப்பதும் விஜய் ஆண்டனிக்குத் தெரிகிறது.
சிறையில் தன்னைச் சந்திக்க வரும் சமயத்தில் வரம்பு மீறி, தன்னைத் தாக்கும் ஜெயக்குமாரை பதிலுக்குத் தாக்குகிறார் விஜய் ஆண்டனி. அதோடு சிறையில் மாரிமுத்துவை கொலை செய்ய வந்த ஜெயக்குமாரின் ஆட்களையும் அடித்து விரட்டுகிறார். இதனால் விஜய் ஆண்டனியை கொலை செய்ய ஆத்திரத்துடன் இருக்கிறார் ஜெயக்குமார்.
மாரிமுத்துவின் அழைப்பின் பேரில் அவரது கூட்டணியில் சேர்கிறார் விஜய் ஆண்டனி. மாரிமுத்து, ஜெயக்குமார் இருவரின் அரசியல் குருவான முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகரன் என்னும் தியாகராஜன் இருவரையும் அழைத்து சமரசம் செய்து வைக்கிறார்.
அப்போது விஜய் ஆண்டனியை பற்றி தெரிந்து கொள்ளும் தியாகராஜன் ஜெயக்குமார், மாரிமுத்து கூட்டணி தனது சமரசப் பேச்சின் அடிப்படையில் விஜய் ஆண்டனியை கொலை செய்ய தீர்மானிக்கிறது. இந்த விஷயத்தை விஜய் ஆண்டனியிடம் போட்டுக் கொடுக்கிறார் கருணாகரன். இதனால் அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கும் விஜய் ஆண்டனி.. பதிலுக்கு தந்திரமாகச் செயல்பட்டு மாரிமுத்துவை அவரது அடியாள் மூலமாகவே கொலை செய்ய வைக்கிறார்.
இப்போது தியாகராஜனிடமே சரண்டராகும் விஜய் ஆண்டனிக்கு ஒரு ஏ.சி. பார் லைசென்ஸை தொகுதி மந்திரியான அருள்ஜோதியிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறார் தியாகராஜன். தன்னைப் பார்க்க வரும் விஜய் ஆண்டனியை பார்த்து அதிர்ச்சியாகிறார் மந்திரி. 30 வருடங்களுக்கு முன்பு தான் கொலை செய்த அப்பா விஜய் ஆண்டனியின் நகலாக, அப்படியே இவரும் இருப்பதைக் கண்டு பேச்சுமூச்சற்றுப் போகிறார்.
ஆனாலும் கருணாகரனின் சிபாரிசுப்படி அந்த ஏ.சி. பாரை விஜய் ஆண்டனிக்கே கொடுக்கிறார். இருந்தாலும் ஜெயக்குமாரிடம சொல்லி விஜய் ஆண்டனியை கொலை செய்ய முயல்கிறார் மந்திரி. இந்தக் கொலை முயற்சியிலும் தப்பிக்கும் விஜய் ஆண்டனி மீண்டும் தனது தந்திர புத்தியால் மந்திரியை வைத்தே ஜெயக்குமாரின் கதையை முடிக்கிறார்.
இடையில் திரைப்பட நடிகையான மியாவின் மீது காதல் கொள்கிறார் விஜய் ஆண்டனி. தக்க தருணத்தில் மியாவுக்கு உதவி செய்வதால் அவரும் இவருடன் நட்பாக பழகுகிறார். தன்னை படுக்கைக்கு அழைக்கும் மந்திரியின் மகனை பற்றி விஜய் ஆண்டனியிடம் சொல்கிறார் மியா.
விஜய் ஆண்டனி இது பற்றி மந்திரியிடம் சொல்லி எச்சரிக்க.. அவரோ அதை மிக அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார். இதனால் கோபப்படும் விஜய் ஆண்டனி மந்திரியை ஒருமையில் திட்டிவிட்டுப் போக கோபப்படும் மந்திரி தனது அடியாட்களை வைத்து மியா வீட்டிலும், விஜய் ஆண்டனியின் வீட்டிலும் பெட்ரோல் குண்டுகளை வீச வைக்கிறார்.
இந்த்த் தாக்குதலில் விஜய் ஆண்டனியின் தாத்தாவான சங்கிலி முருகன் இறந்து போக.. மியா தப்பிக்கிறார். இதன் பின்பு தான் தனியாளாய் நின்று இவர்களை ஜெயிக்க முடியாது என்று நினைக்கும் விஜய் ஆண்டனி அரசியலில் கால் பதிக்க முடிவெடுக்கிறார்.
அரசியலில் விஜய் ஆண்டனியால் ஜெயிக்க முடிந்ததா..? தியாகராஜன் இவரை வளர விட்டாரா..? மியா-விஜய் ஆண்டனி காதல் என்ன ஆனது..? மந்திரி என்ன ஆனார் என்பதெல்லாம் சுவையான திரைக்கதையில் பார்க்க வேண்டியவை.
விஜய் ஆண்டனி தனக்கேற்ற கதையை தேர்வு செய்வதை தொடர்ந்து தப்பில்லாமல் செய்து வருகிறார். இந்தக் கதையும் அவருக்கேற்ற கதைதான். என்ன…!? ஒரே மாதிரியான நடிப்பை தொடர்ந்து பார்த்து வருவதால், ரசிகர்களுக்கு கொஞ்சம் போரடிக்குமே என்றும் சொல்லத் தோன்றுகிறது.
மற்றபடி முரட்டு உருவமும், முறுக்கிவிட்ட மீசையுமாய், ஆஜானுபாகுவாய் அம்சமாய் இருக்கிறார் விஜய் ஆண்டனி. அரசியல்வாதிகளுக்கே உரித்தான திமிர், ஆணவத்தை தனது நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் அழுத்தமாக காட்டியிருக்கிறார்.
விஜய் ஆண்டனியிடம் விருதுக்குரிய நடிப்பாக இல்லாமல் அவரிடத்தில் என்ன இருக்குமோ அதுவே நியாயமாக வெளிப்பட்டிருக்கிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக கிளைமாக்ஸில் தியாகராஜனிடம் அவரது ஆட்டம் குளோஸ் என்பதை சொல்லும் மேடை காட்சியில் அரை பக்க முகம் மட்டுமே தெரிந்தது என்றாலும் விஜய் ஆண்டனி பொல்லாத அரசியல்வாதியாய் மிகவும் கவர்ந்திழுக்கிறார்.
தமிழ்ச் சினிமாவில் ரொமான்ஸ் மிக முக்கியமானது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இதுவரையிலான விஜய் ஆண்டனியின் எந்தப் படத்திலும் இல்லாததால். ஒரு சாராருக்கு அவரை இன்னமும் பிடிக்காமலேயே இருக்கிறது என்பதை விஜய் ஆண்டனி உணர வேண்டும்.
இந்தப் படத்திலும் காதல் காட்சிகள் இல்லாமல் மொன்னையாக கொண்டு போயிருப்பதால் அந்த போர்ஷன் ரசிக்கப்படவில்லை. காதலே இல்லாததால் பாடல் காட்சிகளும் அதிகமாக ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை.
சண்டை காட்சிகளில் மட்டுமே புதிய தொழில் நுட்பத்தின் கை கொண்டு புதிய, புதிய உத்திகளுடன் கவனமாக படமாக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து காமெடியையும் கொண்டு வந்துவிட்டால் ஹீரோக்கள் லிஸ்ட்டில் நிச்சயமாக இடம் பிடித்துவிடுவார் விஜய் ஆண்டனி. தமிழகத்தில் அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் ஹீரோக்கள்தான் அதிகம் பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவருக்கு பின்பு என்றால் அது மந்திரியாக நடித்த அருள்ஜோதிக்குத்தான். சில படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கும் இவருக்கு இதில் மிகப் பெரிய கேரக்டர்தான். தின்னவேலி பாஷையில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். மகன் விஜய் ஆண்டனியை பார்த்தவுடன் இவர் காட்டும் நடிப்பிலேயே காட்சியில் ஒன்றிப் போக வைத்திருக்கிறார்.
ஜெயக்குமார், மாரிமுத்து இருவரும் ஆளுக்கொரு பக்கமாக திரைக்கதையை இழுத்திருக்கிறார்கள். நடிப்பிலும் சோடை போகவில்லை. நடிகர் சார்லியின் பண்பட்ட நடிப்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்தப் படம் அமைகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு என்றாலும் தியாகராஜனின் கம்பீரமான நடிப்பு, இந்தப் படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலம். தியாகராஜனின் மிகப் பெரிய பலமே அவரது குரல்தான். அந்தக் குரலை வைத்து இந்தப் படத்தில் தனது கேரக்டருக்கு மேலும் வலு கூட்டியிருக்கிறார்.
உண்மையைச் சொல்கிறாரா அல்லது பொய்யாக நடிக்கிறாரா என்பதையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முதல் சில காட்சிகளில் அவருடைய நடிப்பு இருக்கிறது. இதனாலேயே இயக்குநர் ஜீவா சங்கர் இவருக்குக் கொடுத்த கேரக்டர் நியாயமாகிறது. கிளைமாக்ஸில் அத்தனை பயத்தையும் முகத்தில் காட்டிக் கொண்டு விஜய் ஆண்டனியை சமாதானம் செய்ய முயலும் காட்சியில்கூட அந்த நடிப்பு ரசனையானது. வெல்டன் ஸார்..
ஹீரோயின் மியா ஜார்ஜுக்கு பெரிய அளவில் நடிப்புக்கான ஸ்கோப் இல்லையென்றாலும் தன்னை படுக்கைக்கு அழைக்கும் மந்திரியின் மகன் பற்றி சொல்லும்போது மட்டும் அவரை ரசிக்க வைத்திருக்கிறார். அவர் ஆடும் சோலோ நடனமும் அழகுதான்..! ஆனால் அந்த நடனத்தை அந்த இடத்தில் எதற்காக ஆடுகிறார் என்பது இயக்குநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இயக்குநர் பணியோடு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய இயக்குநர் ஜீவா சங்கர் அதையும் திறம்பட செய்திருக்கிறார். வெளிநாட்டு லொகேஷன்களை தேடித் தேடிப் பார்த்து படமாக்கியிருக்கிறார். அழகு. அதேபோல் படத் தொகுப்பாளர் வீரசெந்தில் ராஜின் பணிகளும் சிறப்பு. இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் கத்திரியை போட்டிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
படத்தின் பின்னணி இசை ஓகேதான். ஆனால் பாடல்கள்..? ‘என் மேல கை வைச்சா காலி’ என்ற பாடல் மட்டுமே பாடவும், துள்ளவும் வைத்திருக்கிறது. டூயட்டுகள் ஏமாற்றத்தை அளித்த கையோடு, படத்தின் வேகத்துக்கும் மிகப் பெரிய தடைக்கல்லை போட்டிருக்கின்றன.  
வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய அரசியலை அலசி ஆராய்ந்து துவைத்து காயப் போடுவதுபோல சுவாமிநாதனும், விஜய் ஆண்டனியும் பேசும் காட்சிகளும், மந்திரியின் பி.ஏ.வான சார்லி பேசும் சில வசனங்களும் இன்றைய யதார்த்த அரசியல் உலகத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.
ஜீவா சங்கர் மிகத் திறமையான இயக்குநர். அவருடைய முந்தைய படங்களான ‘நான்’, ‘அமரகாவியம்’ ஆகியவற்றில் அவர் எழுதிய கதை, திரைக்கதையைவிடவும், இயக்கத் திறமைதான் அந்தப் படங்களை அதிகம் பேச வைத்தது. அதுபோலவேதான் இந்தப் படமும்..!
லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை.. மாரிமுத்து இறக்கும் காட்சி, ஜெயக்குமார் இறக்கும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகளில் உண்மைத்தன்மை இல்லை. இயக்குநர் இந்தக் காட்சிகளில் ஏன் கோட்டைவிட்டார் என்பது புரியவில்லை. படம் நெடுகிலும் ஆள், ஆளுக்கு கொலை செய்து கொண்டிருக்க போலீஸின் நடவடிக்கைகள் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருந்தால் திரைக்கதை சமமாக இருந்திருக்கும்.
ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் இது சொல்வது இன்றைய தமிழக அரசியல் உலகத்தின் யதார்த்த நிலைமையைத்தான் காட்டுவதாகச் சொல்லலாம்.. விஜய் ஆண்டனி என்னும் தமிழரசனும் ஒரு அயோக்கியன்தான். அந்த அயோக்கியன் எத்தனை பேரை வெட்டி, வீழ்த்திவிட்டு அரியணை ஏறுகிறான் என்பதை படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ஆனால் இது ஹீரோயிஸ படமாக இருப்பதால் ஒரு கெட்டவனை ஹீரோவாக காட்டியிருக்கிறார் என்கிற ஒரு தவறையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
மற்றபடி இந்த எமனும் பார்க்கக் கூடிய ஒரு எமன்தான்..!

1 comments:

ADMIN said...

அருமையான விமர்சனம். ஒரு ஆன்டி ஹீரோ படம்ங்கிறது உங்க விமர்சனத்துல தெளிவா தெரியுது.