குரங்கு கைல பூ மாலை - சினிமா விமர்சனம்

12-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இந்தப் படத்தில் ஜெகதீஷ், கவுதம் கிருஷ்ணா இருவரும் ஹீரோக்களாக நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக சாந்தினி மற்றும் நிஷா, சரவண சுப்பையா, கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
மாயன் ஒளிப்பதிவு செய்ய சாய் சுரேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். சாய் குருநாத் இசையமைத்திருக்கிறார். பாடல்களை பாலு நாராயணன், மோகன்ராஜன், குரு. அய்யாத்துரை, என். இதயா ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.  குரு.அய்யாத்துரை, நீல்சன், வல்லவன் ஆகியோர் பாடல்களை பாடியிருக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.கிருஷ்ணன்.
காதல் என்ற பெயரால் ஆண், பெண் இருவருமே ஒருவருக்கொருவர் ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை காயப்படுத்துகிறார்கள். அந்தக் காயப்படுத்தலினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இந்தப் படம் விளக்கியுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிப்பதுபோல நடிக்கும் நிஷா, தன்னுடைய கம்பெனியின் முதலாளியை காதலிக்க வேண்டும் என்பதற்காக தற்போது தன்னை காதலிக்கும் இரண்டு காதலர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறாள். இதனால் ஒரு காதலரான ஜெகதீஷ் தன் வேலையை இழக்கிறார். இதன் பின்னர் பெண்கள் மீதும், காதல் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்.
இன்னொரு பக்கம் ரவுடியிஸம் செய்யும் பிரவீன்குமார் காதல் என்ற பெயரில் பெண்களை பயன்படுத்திக் கொண்டு   தூக்கியெறிவதை வழக்கமாக் கொண்டிருக்கிறார்.
ஹீரோயின் சாந்தினி தைரியமான பெண். தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்கும் தைரியமுள்ளவர். பிரவீன் கண் வைத்த ஒரு பெண்ணை அவரிடமிருந்து காப்பாற்றி போலீஸிடம் பிரவீனை மாட்டிவிடுகிறார் சாந்தினி. இதனால் பிரவீனுக்கு சாந்தினி மீது கடும் கோபம்.
முன்னதாக பிரவீனுக்கு போன் செய்து திட்டுவதாகச் சொல்லி ஒரு ராங்நம்பருக்கு போன் செய்து திட்டுகிறார் சாந்தினி. பிறகு உண்மை தெரிந்து அந்த நம்பருக்குரியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று துடியாய் துடிக்கிறார்.
அந்த நம்பரை வைத்திருக்கும் கவுதம் கிருஷ்ணா தான் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறார். முகமறியா சாந்தினியின் குரலைக் கேட்டே காதலிக்கத் தொடங்குகிறார்.
சாந்தினிக்கு இப்போது வேறொரு பிரச்சினையும் இருக்கிறது. அந்தப் பகுதி கவுன்சிலரான அவரது தாய் மாமன், சாந்தினியை திருமணம் செய்ய ஆவலாக இருக்கிறார். ஆனால் சாந்தினி அதற்கு ஒத்துக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
இந்த நேரத்தில் சாந்தினியை பழி வாங்கத் துடிக்கும் பிரவீன் சாந்தினியை பாலோ செய்து அவளது புதிய காதலன் பற்றிய தகவலை அறிந்து தன் ஆள் ஒருவனை அவள் தேடும் காதலன் போல் நடிக்க வைத்து சாந்தினியை தன் வசப்படுத்த திட்டம் தீட்டுகிறான்.
சாந்தினி தான் போனில் பேசிய கவுதமை சந்திக்க வேண்டி பூங்காவுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் அவளது தாய் மாமன் அங்கே வந்து சாந்தினியை அடித்து இழுத்துச் செல்கிறான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீஷும், சாந்தினி யார் என்று தெரியாமல் மற்ற பெண்களிடம் எக்குத்தப்பாக கேள்வி கேட்டு அடி வாங்கி பூங்காவில் தனித்து நிற்கும் உண்மை காதலன் கவுதமும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
ஜெகதீஷிடம் தனது காதல் பற்றி கவுதம் சொல்ல.. இதையடுத்து ஜெகதீஷ் தான்தான் சாந்தினி தேடும் காதலன்போலவும், காதல் தோல்வியால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது போலவும் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு ஒரு டிராமா போடுகிறார்.
இதில் சிக்கிய சாந்தினி அந்த போன் நபர் பற்றிய மர்ம்ம் புரியாமல் முழிக்கிறார். இதையறிந்து மருத்துவமனைக்கு வரும் பிரவீன் ஜெகதீஷை பார்த்து குழப்பமடைகிறான். இதே நேரம் ஜெகதீஷை முன்பு ஏமாற்றிய நிஷாவும் ஜெகதீஷிடம் வந்து சரணடைகிறாள். 
பிரச்சனை தீவிரமாகிறது.. கடைசியில் இந்தக் குழப்பம் எப்படி தெளிவாகிறது என்பதைத்தான் இடைவேளைக்கு பின்பான சுவாரஸ்யமான திரைக்கதை விளக்குகிறது.
இந்தப் படத்தின் இயக்குநரை எப்பாடுபட்டாலும் பாராட்டியே தீர வேண்டும். ஒரு குடும்பக் கதையாக இருந்தால்கூட சிக்கலான விவகாரங்களை திரைக்கதைக்குள் நம்பக்கூடிய வகையில் கொண்டு வர பெரிதும் மெனக்கெட வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் நான்கு விதமான திரைக்கதைகளுக்குள் கதையைக் கொண்டு போய் கச்சிதமாக ஒரு குழப்பம்கூட இல்லாமல் தெளிவாக கிளைமாக்ஸ்வரைக்கும் கொண்டு வந்து முடித்திருக்கிறார். ‘ஹாட்ஸ் அப்’ என்றுதான் சொல்ல தோன்றுகிறது.
ஹீரோயின்கள் சாந்தினி, நிஷா, இன்ஸ்பெக்டர் சரவண சுப்பையாவை, காமெடிக்கு நடித்த வேல்முருகனைத் தவிர மற்றவர்களெல்லாம் புதுமுகங்கள்தான். சொல்லிக் கொடுத்த்தை தங்களால் முடிந்தவரையிலும் செய்திருக்கிறார்கள். யாரும் சோடை போகவில்லை. நடிப்பென்று தனியாகத் தெரியாத அளவுக்கு மிக இயல்பாக, யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
முதற்பாதியில் ஜெகதீஷ் செய்கின்ற செயல்களெல்லாம் அவரை மோசமானவராகவே காட்டிவிடுகிறது. ஆனால் கிளைமாக்ஸில்தான் அந்த ரகசியம் உடைகிறது. உடைவதை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
இன்னொரு பக்கம் விடுதிக்கு பாலியல் பெண்ணை வரவழைத்து நடக்கும் கூத்துக்கள் ஒரு பக்கம் உண்மைக்காகவும், இன்னொரு பக்கம் காமெடிக்காகவும் வைக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமையேயே காட்டுகிறது.
‘கோலிசோடா’ சாந்தினிக்கு ஹீரோயின் வேடம் பொருந்துகிறது. சற்று மெருகேறியிருக்கிறார். அதிகம் அலட்டலில்லாத நடிப்பு என்பதால் அவர் மீதான பரிதாபம் கடைசிவரையிலும் நீடிக்கிறது. ‘அந்த போனை எடுத்துத்தான் தொலைங்களேன்பா’ என்று ஒருவித பச்சாபதமும் கடைசி நேரத்தில் உண்டாகிவிட்டது.
நிஷா தன்னை உயிராய் காதலித்த காதலர்களுக்கு செய்த துரோகத்திற்காக அவருடைய வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த தண்டனையை இயக்குநர் காட்டியிருப்பது சாலப் பொருத்தம். அதைச் சொல்லாமல் சொல்லியிருப்பதும் நன்று. கடைசியிலும் நிஷா தன் கணவருக்காக ஜெகதீஷிடம் பேசுவதும், இதையும் சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியாக உடைப்பதும் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை.
படத்துக்கு இன்னொரு பக்க பலம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சரவண சுப்பையா. மற்ற சினிமா இன்ஸ்பெக்டர்கள்போல எதற்கெடுத்தாலும் அடித்துக் கொண்டும், உதைத்துக் கொண்டும் இல்லாமல் அந்த காக்கி டிரெஸ்ஸின் மிடுக்கு மாறாமல் நடித்திருக்கிறார்.
பாலியல் பெண்ணைத் தேடி இத்தனை பேர் ஸ்டேஷனுக்கு படையெடுத்து வந்ததைக் கண்டு நொந்து போய் கடைசியாக வந்தவனிடம், வசனமே பேசாமல் கை காட்டி ‘போய் பார்த்துக்க’ என்று வெறுப்போடு சொல்லும் அந்த ஒரு ஷாட்டில் மிகவும் பிடித்துப் போகிறது அவரை.. இயக்குநரும் கச்சிதமாக இவரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இது போலவே கிளைமாக்ஸில் சரவண சுப்பையாதான் மொத்தப் படத்தையும் தாங்கியிருப்பதுபோல நடித்திருக்கிறார். ஒவ்வொருவர் தரப்பு நியாயத்தையும் கேட்டு சலித்துப் போய் யார்தான் உண்மையான காதலன் என்பது தெரியாமல் மாற்றி மாற்றி பேசுவதும், கேட்பதுமாக அந்தக் காட்சியையே சமாளித்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
இது போன்ற அசத்தல் திரைக்கதையுள்ள பட்ஜெட் படங்களில் ஒளிப்பதிவையோ, இசையையோ யாரும் முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. இசையமைப்பில் பாடல்கள் வசீகரிக்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் அடக்கமாக வாசித்து நம்மை காப்பாற்றியதற்கு ஒரு மிகப் பெரிய நன்றி.
ஒரு நல்ல கதையை நல்ல திரைக்கதைதான் காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். படத்தின் ஷூட்டிங் நாட்களைவிடவும் டிஸ்கஷன் நாட்கள் அதிகமானால்தான் இனிமேல் இது போன்று படங்கள் தரமானதாக வரும் என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தின் திரைக்கதை மீடியம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரு மிகப் பெரிய உதாரணம். இயக்குநர் கிருஷ்ணன் மிக அபாரமான திரைமொழியாக இதனைக் கொணர்ந்திருக்கிறார். திரைக்கதையைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அவசியம் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!

0 comments: