வண்ண ஜிகினா - சினிமா விமர்சனம்

29-08-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வண்ணமயமான ஜிகினா பேப்பருக்குள் பரிசுப் பொருட்களை கொடுத்து வாங்குபவரை மகிழ்விக்கலாம். அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து நாமும் மகிழலாம். அதே ஜிகினா பேப்பருக்குள் கொலை ஆயுதத்தையும் வைத்து எதிராளியை பயமுறுத்தலாம். அதற்கும் இந்த ஜிகினா பேப்பர் பயன்படுத்தான் செய்யும்.
ஜிகினா என்பது ஒரு அலங்காரம் மட்டுமே.. வெளிப்புற அழகு மட்டுமே.. அதுவே பொருளாகிவிடாது.. அதுவே பரிசாகிவிடாது..  இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் இந்த ‘வண்ண ஜகினா’ படத்தின் கதைக்குப் பொருத்தமாக தலைப்பு வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி.

கருப்புக் கலரில் ஆனால் அழகான முகவெட்டுடனும், தோற்றத்துடனும் இருக்கும் விஜய் வசந்த், தனது நிறத்தினால் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார். கால் டாக்சி டிரைவரான இவர், ரெகுலராக ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கு காரோட்டி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து தண்ணியடித்து நண்பர்போல பழகும் விஜய்யின் சொந்தப் பெயர் பாவாடை சாமி. இந்தப் பெயரும் சேர்ந்தே இவருக்கு இம்சை கொடுக்கிறது. பெயரைக் கேட்டவுடன் சிலர் சிரிப்பதை பார்த்து, இவருக்குள்ளேயே ஒரு சங்கடம்.
ஐடி நண்பர்கள் ஆளாளுக்கு 2 பெண் நண்பிகளை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுவதை பார்த்து இவருக்குள்ளும் ஒரு பொறாமை. கோபம்.. தன்னிடம் ஒரு பெண்கூட பழக வரவில்லையே என்று ஏக்கப்படுகிறார். இவருடைய ஏக்கத்தை போக்க ஐடி நண்பர்கள் உதவுகிறார்கள். கிஷோர் குமார் என்கிற வேறொரு நபரின் புகைப்படத்தை விஜய்க்கு அணிவித்து முகநூலில் ஒரு பேக் ஐடியை உருவாக்கிக் கொடுக்கின்றனர். இதில் இவர்களே விஜய்க்காக பல பெண்களை நண்பர்கள் பட்டியலில் கோர்த்தும் விடுகின்றனர்.
அப்படி வந்து சிக்கும் ஒரு பெண்தான் ஏஞ்சல் பிரியா. இந்த அக்கவுண்ட்டில் இருக்கும் பெண்ணிடம் தினமும் வாய்ஸ் சாட்டிங் செய்து தனது காதல் பொழப்பை ஓட்டி வருகிறார் விஜய். ஒரு நாள் இந்த ஏஞ்சல் பிரியாவே இவருடைய காரில் பயணிக்க.. பதற்றம் தொற்றுகிறது விஜய்க்கு.
விஜய்யின் எளிமையான பேச்சினால் கவரப்படும் அந்த ஏஞ்சலான ஹீரோயின் சானியா தாரா விஜய்யுக்கு திக்கான நண்பராகிறார். விஜய்யின் ஊக்கத்தினால் கோரஸ் பாடகியாக இருந்து தனிப் பாடகியாக வளரும் அளவுக்கு உருமாறுகிறார்.
இந்த நேரத்தில் எப்படியாவது தான்தான் அந்த கிஷோர்குமார் என்கிற உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்து தவிக்கிறார் ஆனால் முடியவில்லை. சொல்லாமல் தயக்கத்தில் காத்திருக்கும் நேரத்தில் எல்லாமே தாறுமாறாக நடக்கிறது.
முகநூல் மூலமாக பெண்களை மடக்கி அனுபவிக்கத் துடிக்கும் ஒருவனும், சானியாதாராவை பார்த்து ஜொள்ளுவிட்டு அவளை அடையத் துடிக்கிறான். பின்னணி பாட வேண்டும் என்று நைச்சியாகப் பேசி அவளை அழைத்து வந்து வன்புணர்வு கொள்ள முயல்கிறான். இதில் தப்பிக்கும் சானியாதாரா, விஜய்யின் துணையோடு அவனது காரிலேயே தப்பிக்கிறாள்.
இருவரும் கொடைக்கானலுக்குத் தப்பியோட.. அங்கே நடக்கும் விபத்தில் சிக்கி விஜய் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அத்தருணத்தில் சானியா தாரா கொடுக்கும் சர்ப்ரைஸ் அதிர்ச்சியில் மேலும் பாதிப்பாகும் விஜய், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மலையுச்சிக்குச் செல்கிறார்.
ஆனால் அங்கே ஒரு பெண் இதேபோல் தற்கொலைக்கு முயல்வதைப் பார்த்து அவளுடன் பேசி இருவரும் ஒன்றாக தற்கொலை செய்யலாம் என்று நினைக்கிறார் விஜய். ஆனால் அவர்களுக்கிடையேயான பேச்சில் ஒரு வார்த்தையில் இருவருக்குமான பந்தம் வெளிப்பட.. திகைக்கிறார்கள் இருவரும்..
இவர்கள் யார் என்பதும், விஜய்யின் கல்யாணம், காதல், காதலி கனவு என்ன ஆனது என்பதும்தான் சஸ்பென்ஸ்..!
கதையின் அடித்தளம் ஒரு கருப்பான மனிதனின் நிறம் பற்றிய வெறுப்பு என்கிறார் இயக்குநர். அழகு என்பது கருப்பிலும் உண்டே.. கருப்பழகியாகவும் இருப்பவர்கள் இங்கே நிறைய இருக்கிறார்களே..? ‘பாவாடை சாமி’யில் சிரிக்க என்ன இருக்கிறதென்று தெரியவில்லை..? இதுவொரு சாமி பெயர்தான். இன்னும் சொல்லப் போனால் இது சமூகத்தின் அடித்தட்டு மக்களிடையே சர்வசாதாரணமாகப் புழங்கும் பெயர்.
இந்தப் பெயர் மற்றும் நிறத்தினாலேயே ஒருவன் தனக்கான அங்கீகாரம் சமூகத்தில் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதும், வேதனைப்படுவதும் இங்கே அவ்வளவாக இல்லை. இந்த ஒரு விஷயத்துக்காகவே தற்கொலை என்றெல்லாம் பேசுவது சரியில்லையே இயக்குநர் ஸார்..!
விஜய் வசந்த்.. இந்தக் கேரக்டருக்கு மிகப் பொருத்தமான நபர்தான்.. சில நேரங்களில் கவர்கிறார். பல நேரங்களில் இன்னும் நல்லா செய்திருக்கலாமே என்று சொல்லவும் வைக்கிறார். இன்னமும் நிறைய இயக்குநர்களின் கைவண்ணத்தில நடித்து தனது நடிப்பை இம்ப்ரூவ்மெண்ட் செய்து கொள்வார் என்றே நம்புகிறோம்.. ஆனால் நடனம், வசன உச்சரிப்பிலெல்லாம் பக்காவான நடிகராகவே தோன்றுகிறார்.
சானியாதாரா. பரவாயில்லை என்ற முகம். ஆனால் சிறப்பான இயக்கத்தினால் சமாளித்திருக்கிறார். முக பாவனைகளில்கூட ஏன் இத்தனை கஷ்டம் என்றுதான் தெரியவில்லை. அம்மணிக்கும் தனியா டிரெயினிங் தேவையாக இருக்கிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்..
கருகமணியாக நடித்த ஸ்ரீதேவி மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவ்வளவு அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். முதலில் பார்த்தவுடன் என்னடா இது… சினிமாவுக்கேற்ற முகம் இல்லியே என்கிற வருத்தத்தோடு பார்த்த பார்வையெல்லாம் அதன் பிறகு இவரது காட்சிகளிலெல்லாம் ஊடேயே வரும் ஒருவித சோகத்தை உணரும்போது சிறப்பாகத் தெரிகிறது.. நல்ல நடிப்பு.
படத்தில் தேவையே இல்லாத ஒரு கேரக்டராக வந்திருக்கும் அந்த வில்லனை மறந்துவிடலாம்.. ஆனால் சில காட்சிகளே வந்தாலும் சிங்கம்புலி கிளைமாக்ஸின் கனத்தைக் குறைக்க உதவியிருக்கிறார்.
ஜான் பீட்டர்ஸின் இசையில் ‘காத்தோட உன் வாசம்’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாகத்தான் இருந்தன. குத்துப் பாடல் ரசிகர்களுக்காக ‘ஐயோ’ பாடலும் இருக்கிறது..!
பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகள் ஜில்.. மற்றபடி எடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கை வண்ணத்தில் பல காட்சிகளை நறுக்கியிருப்பதன் பலன் படத்தில் தெரிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ‘படாபட்’ என்ற வசனத்தைச் சொல்லும்விதமும், அதை கருகமணி கண்டறியும் இடமும் பட்டென்று பாராட்ட வைக்கிறது.. நன்று..
முகநூலில் பார்க்காமலேயே காதல் என்று வளர்ந்து காதலரைத் தேடி சென்னைக்கு ஓடி வரும் மாணவிகள், பெண்கள் பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த அவலத்தையெல்லாம் போக்கும்வண்ணம் கூடுதலான வசனத்தின் மூலம் இந்த முகநூலின் ஆபத்துகளையும் இயக்குநர் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
முகமூடி ஐடிக்களின் காதல் இந்த லட்சணத்தில்தான் முடியும் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதற்கு நன்றி. அவரவர்க்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். மேலதிகமாக ஆசைப்பட வேண்டும் என்பதைத்தான் இயக்குநர் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் போலும். சொல்லியேவிட்டார்..!
வண்ண ஜிகினா – பாதி காதல் ; மீதி எச்சரிக்கை..!

0 comments: