பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

04-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான பழிவாங்கும் கதைதான்.. ஆனால் திரைக்கதையும், இயக்கமும் சேர்ந்து சிறந்த படம் என்று சொல்ல வைக்கின்றன..!



'பாண்டிய நாடு' என்று சொல்லி மதுரைக்குள் படமெடுத்தால் மட்டுமே போதாது.. மதுரை மண்ணின் கதையைத்தான் படமாக்க வேண்டும் என்று சுசீந்திரன் நினைத்துவிட்டார் போலும்..! சென்ற ஆட்சிக் காலத்தில் கொடி கட்டிப் பிறந்த அரசியல் தாதாக்களின் கதையோடு இணைத்து.. அந்த ஆட்சிக் காலத்தில் மதுரை எப்படி இருந்தது என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்..

கிரானைட் கற்களை வெட்டியெடுக்கும் பிஸினஸில் அரசியல்வியாதிகள் தங்களது அல்லக்கைகள் மூலமாக என்றைக்கு தலையிட்டார்களோ அன்றைக்கே அது வளம் கொழிக்கும் பிஸினஸாகிப்போனது.. அது சென்ற தி.மு.க. ஆட்சியில்தான் அமோகமாக வளர்ந்து ஆக்டோபஸாக உயர்ந்து மதுரையின் உயர் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அளவுக்கு சர்வசக்தி படைத்த விஷயமாக மாறியது..!

இந்த ஆட்சிக் காலத்தில் ஏதோ ஒப்புக்கு நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்து சீன் போட்டு.. ஒரே நாளில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கொடுத்து கொள்ளையர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. வாங்க வேண்டியதை வாங்கிவிட்டுத்தான் செய்திருக்கிறார்கள் என்பதை அரசியல் அறிந்தவர்கள் உள்ளம் சொல்கிறது..!

கனிமவளத் துறையின் உதவி இயக்குநராக வேலை செய்யும் விஷாலின் அண்ணன், வில்லனின் அரசு அனுமதியின்றி நடத்தப்படும் கிரானைட் பிஸினஸை இழுத்து மூட வைக்கிறார்.. கோபம் கொண்ட வில்லன் விஷாலின் அண்ணனை கொலை செய்து அதனை விபத்து என்று செட்டப் செய்துவிடுகிறார்..! அடிதடி என்றாலே பத்து முறை யோசிக்கும் விஷால், தனது அண்ணனின் மரணத்துக்குப் பதிலடி கொடுக்க நினைக்கிறார். ஆனால் அது அடிதடியாகிப் போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று யோசித்து வில்லனின் கதையை வேறு வழியில் முடிக்க எண்ணுகிறார். அதே நேரம் அவருடைய அப்பா பாரதிராஜா, தனது மகனின் கொலைக்கு பழி வாங்க தானும் ஒரு வழியில் முயல்கிறார்.. இதில் யாருடைய முயற்சி வெற்றி பெற்றது என்பதுதான் கதை..! இதற்கிடையில் தமிழ்ச் சினிமாவுக்கே உரித்தான ஒரு காதல்.. பாடல்கள் என்று இன்னொரு பக்கமும் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்..!

'நான் மகான் அல்ல' படம் போலவே இதிலும் திரைக்கதையை பிய்த்து பிய்த்து கொடுத்திருக்கிறார் என்றாலும் அதுவே சுவாரசியம்..! ஒரு பக்கம் வில்லனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லியபடியே இன்னொரு பக்கம் விஷாலின் குடும்பம், அவரது காதலின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் ஒன்றுக்கொன்று டச் செய்யாத விஷயமாகக் கொண்டு போயிருக்கிறார்..!

விஷாலின் கல்யாணப் பேச்சு நடக்கும் சமயமெல்லாம், வில்லன் மறுபுறத்தில் படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்..! விஷாலின் காதல் துளிர்க்கும்போதுதான் அவரது அண்ணனின் குணம் வெளிப்படுகிறது..! ஒரு துர்மரணத்தை பார்த்து மனம் கேட்காமல் போய் சண்டையிட்டு அதன் விளைவாய் வில்லனின் குவாரிகளுக்கு சீல் வைக்கும் காட்சியில் மனம் ஒன்றிப்போய்தான் விட்டது.. காரணம்.. வெரி சிம்பிள்.. அந்த மார்ச்சுவரி காட்சியை அவ்வளவு யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இய்க்குநர்..!

தனது காதலுக்கு உதவிய நண்பனுக்கு ஒரு உதவியைச் செய்யப் போகும் அந்தக் காட்சியின் தொடர்ச்சி, விஷாலின் வீடு தேடி வரும் வில்லனின் அடியாளை வழியிலேயே போட்டுத் தள்ள முயல்கிறது..! இதற்கு அடுத்தடுத்த காட்சிகளாக மருத்துவமனையில் அடியாள்.. விஷால் அண்ணன் கதை முடியும் காட்சியும் தொடர்ச்சியாக வர திரைக்கதையின் ஓட்டத்தில் நம்மை ஆழ்த்துகிறது..!  இரண்டாம் பாதியில் திரைக்கதைதான் படத்தை தொய்வின்றி கொண்டு போயிருக்கிறது..! 

மிகச் சிறப்பான இயக்கம். ஒரு  பிரேமில்கூட தேவையில்லாமல் எவரும் சும்மா நிற்கவில்லை..! துவக்கத்தில் வரும் கேங் லீடர் இறப்பு காட்சியில்கூட அந்தப் பாடலை வைக்க எந்த இயக்குநருக்கும் மனசு வராது.. அதனை எடுக்க வேண்டியவிதத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்..!

சும்மா சோபாவில் படுத்துத் தூங்குவது போன்ற காட்சி என்றாலும்கூட தானே படுத்துக் காண்பித்துவிட்டு நடிக, நடிகையரிடம் நடிப்பை வாங்கும் இயக்குநர் இமயம் இதில் ஒரு தகப்பனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.. பெஸ்ட் ஆக்ட்டிங் ஸார்..!(இங்கிலீஷ்ல சொன்னா ஸார் ரொம்ப சந்தோஷப்படுவார்..!) மகனின் மரணத்தைத் தொடர்ந்து இவர் காட்டுகின்ற நடிப்பு.. மருத்துமனையில்.. கையெழுத்திட மறுத்து பேசும் பேச்சு..! தனது நண்பரிடம் உதவி கேட்டுச் சென்று பேசுவது.. லோக்கல் ரவுடிகளை தேடிச் சென்று பேசுவது.. என்று அத்தனையிலும் ஒரு சராசரி தகப்பனை பிரதிபலித்திருக்கிறார் பாரதிராஜா. ஒருவேளை அவரது பண்பட்ட நடிப்பு இது முதல் முறை என்பதால் நமக்கு மிகவும் பிடிக்கிறதோ என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப, ரொம்பப் பிடித்திருக்கிறது நடிகர் பாரதிராஜாவை..!

விஷாலுக்கு இதற்கு முன் கிடைத்ததெல்லாம் இயக்குநர்கள் அவருக்காக கொடுத்த வேடம்.. இது சொந்தப் படம் என்பதாலும், ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இப்போது இருப்பதாலும் இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்துவிட்டு தான் நினைத்ததை சாதித்திருக்கிறார்..! இதுபோலவே இனி வரும் வருடங்களிலும் செய்தால் ஒரு தயாரிப்பாளராகவும் இவர்  பெருமையுடன் கோடம்பாக்கத்தில் வலம் வரலாம்..!

லஷ்மி மேனன் படத்துக்கு படம் மின்னுகிறார்.. கும்கியில் காணாத அழகு இதில்..! படிப்பதோ 11-ம் வகுப்பு. ஆனால் இதில் டீச்சர் வேடம்.. சேலை அணிந்து வந்தால் எந்தப் பெண்ணும் பெரியவளாகத்தான் தெரிவார்கள்.. இதில் பார்த்தவுடன் காதல் வருவதை போல பாடலையும் வைத்து லஷ்மியையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. அழகுதான்.. 'ஒத்தக்கடை' பாடலின் இடையில் கல்யாணத்தை ஜூலைக்கு அப்புறம் வைச்சுக்கலாமா என்று கேட்கும் அந்த ஷாட்டே கொள்ளை அழகு.. அப்புறம் ஏன் அப்படி டான்ஸ் ஆட மாட்டாங்க..?! 

லஷ்மியை டாவடிக்க விஷால் மேற்கொள்ளும் முயற்சிகளும்.. லைன்மேனை கரெக்ட் செய்து கரண்ட்டை கட் செய்து மொட்டை மாடியில் தனக்குத்தானே பில்டப் கொடுக்கும் காட்சிகளும்.. பிரதர்கூட புதருக்குள்ள என்னடி பேச்சு என்ற சூரியின் டைமிங்கான காமெடியும் அந்தக் காட்சியை பெரிதும் ரசிக்க வைக்கின்றன..! இந்தக் காதல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! ஆனாலும் தமிழ்ச் சினிமாவை பிடித்த வரமா, சாபமா என்றே தெரியாத இந்தக் காதலும், பாடல் காட்சிகளும் பல படங்களில் தொய்வை ஏற்படுத்துகின்றன என்பது மட்டும் உண்மை.. 

இதிலும் பிற்பாதியில் வரும் 'பை பை' பாடல் காட்சி திரைக்கதைக்கு மிகப் பெரிய இடையூறுதான்.. அந்தப் பாடல் இல்லாமல் இருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.. ஆனாலும் அந்தப் பாடலில் லஷ்மியின் குத்தாட்டமும், பாடலை படமாக்கியிருக்கும்விதமும் ரசிக்கத்தான் வைக்கிறது..! இமான் வழக்கம்போல ஏமாற்றவில்லை.. அவரே சொன்னதுபோல, ஒரு படத்தில் ஏதாவது ஒரு பாடலையாச்சும் ஹிட்டாக்கிரணும்னு நினைச்சு வேலை பார்த்தா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்..! ஷோபியின் நடன அமைப்பு எல்லா பாடல்களிலுமே அசத்தியிருக்கிறது..! 'ஒத்தக்கடை' பாடலின் காட்சிகள் முழுவதும் தெற்குத் தெரு அருகில் படமாக்கப்பட்டிருப்பதுபோல தெரிகிறது. அங்குதான் இது போன்ற நெளிவு, சுளிவு தெருக்கள் அதிகம்..! ஆனாலும் பிரேமில் வெளியாள் ஒருத்தரைக்கூட காட்டாமல் எடுத்திருக்கிறார் பாருங்கள்.. இதுதான் ஆட்டம்..!

லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை..! கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் விஷாலின் கோபம் மட்டுமே வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து அனல் அரசு ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார் போலும்.. சினிமா சண்டையாக நினைத்தும், வில்லன் வீழ்வது சினிமாவின் கட்டாயம் என்பதாலும் இதனை விமர்சிக்கவே முடியாது.. இப்படி பார்த்தால் தமிழ்ச் சினிமாவில் எல்லா படங்களும் ஓட்டைதான்..! யார் கொலைகளைச் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டிருப்பதாக இயக்குநர் இறுதியில் சொல்கிறார்..! பாரதிராஜா ஏற்பாடு செய்த ரவுடியின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்தாலே இதில் பாரதிராஜா பிடிபட வாய்ப்புண்டு.. அந்த போன் அழைப்புக்கு பின்புதானே படம் பரபர என்கிறது..! 

அனைத்துத் திரைப்படங்களும் சொல்வதை போலவே இந்தப் படமும் அடியாட்களை மட்டுமே வதம் செய்கிறது.. இந்த ஊழலுக்கும், அராஜகத்திற்கும் துணை நின்ற அரசியல்வியாதிகளை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறது.. இப்படித்தான் படத்தை எடுக்க முடியும்.. வேறு வழியில்லை என்பது தமிழக அரசியல் சூழல்..! 

அரசியல் ரவுடித்தனத்தில் விளையும் அனைத்துவித பயங்கரங்களுக்கும் பின்னணியில் மூளையாக இருப்பது அரசியல்வியாதிகள்..! ஆனால் அவர்களை கை வைப்பதுபோல எடுத்தால் சென்சார் பிரச்சினை.. கட்சிகள் பிரச்சினை என்று பலவும் வரும்.. அதனை எதிர்கொள்ளும் தைரியம் இங்கே இப்போது யாருக்கும் இல்லை.. போட்ட காசை எடுக்க வேண்டுமெனில் அரசியல்வியாதிகளை பகைத்துக் கொள்ளாமல் போய்விடுவதே நல்லது என்று நினைக்கிறார்கள் கோடம்பாக்கத்தார்..!

நட்ட நடு இரவில் பாரதிராஜா தனது நண்பரின் வீட்டுக்கு போய் கதவைத் தட்டி  "பணம் கொடுத்தா கொலை செய்வாங்களாமே.. அது மாதிரி ஆளுகளை உனக்குத் தெரியுமா..?" என்கிறார்.. "முடியலடா.. மறக்க முடியலடா.. மூத்த பிள்ளைடா.. தூங்கவே முடியல.. ஏதாவது செய்யணும்டா.. செஞ்சாத்தான் என் மனசு ஆறும்.." என்று அழுது அரற்றுகிறார்..! இந்த உணர்வுதான் அனைவருக்குமே..! 

இவங்களுக்கு எதிரா எதையாவது செய்யணும் பாஸ்..!


20 comments:

ஜோதிஜி said...

இந்த உணர்வுதான் (காசு சம்பாரிக்க முடியாமல் நமக்கு எப்ப வாய்ப்பு வரும்ன்னு காத்திருக்க) அனைவருக்குமே..!

”தளிர் சுரேஷ்” said...

படம் பற்றி அனைவருமே நல்லதாகத்தான் சொல்கிறார்கள்! விஷாலுக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையட்டும்! வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

அண்ணாச்சி,

செல்ஃப் எடுக்காத காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வாங்களாம் :-))

சரி இந்தப்படமாச்சும் விசாலுக்கு ஓடுதா பார்ப்போம்.

# //விஷாலுக்கு இதற்கு முன் கிடைத்ததெல்லாம் இயக்குநர்கள் அவருக்காக கொடுத்த வேடம்.. இது சொந்தப் படம் என்பதாலும், ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இப்போது இருப்பதாலும் இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்துவிட்டு தான் நினைத்ததை சாதித்திருக்கிறார்..!//

விசாலோட பெரும்பாலான படங்கள் அவருக்கு சொந்தப்படம் தானே ,என்ன அப்பா,அண்ணன் பேரை தயாரிப்பாளர்னு போட்டுப்பார், இப்போ அவரோட பேர போட்டு இருக்கார் அவ்வ்!
மீடியாவில இருக்க நீங்களே ஒன்னுமே தெரியாத போல பேசினா எப்பூடி?

எனவே முந்தையப்படங்களின் கதையும் இயக்குனர் கொடுத்து ,இவர் அப்பாவியா சிக்கினதுனு சொல்ல முடியாது, இவரா தேர்வு செய்தது தான், தொடர்ந்து அடி விழவே சுதாரிச்சுக்கிட்டு கதையில கவனம் செலுத்த பார்க்கிறார்.

# //அனைத்துத் திரைப்படங்களும் சொல்வதை போலவே இந்தப் படமும் அடியாட்களை மட்டுமே வதம் செய்கிறது.. இந்த ஊழலுக்கும், அராஜகத்திற்கும் துணை நின்ற அரசியல்வியாதிகளை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறது.. இப்படித்தான் படத்தை எடுக்க முடியும்.. வேறு வழியில்லை என்பது தமிழக அரசியல் சூழல்..!

அரசியல் ரவுடித்தனத்தில் விளையும் அனைத்துவித பயங்கரங்களுக்கும் பின்னணியில் மூளையாக இருப்பது அரசியல்வியாதிகள்..! ஆனால் அவர்களை கை வைப்பதுபோல எடுத்தால் சென்சார் பிரச்சினை.. கட்சிகள் பிரச்சினை என்று பலவும் வரும்.. அதனை எதிர்கொள்ளும் தைரியம் இங்கே இப்போது யாருக்கும் இல்லை.. //

ஏன் ...ஏன் இப்படி?

இப்போ வந்த ஆரம்பம் படத்துல கூட அரசியல்வாதிகள நேரடியாத்தான் காட்டுறாங்க.

விசாலோட "சத்யம்" படத்துல கூட அமைச்சர்கள்ட்ட தான் மோதுவார் ,ஏன்அந்த படத்த ஓட வச்சிருக்கிறது,

சூற மொக்கை சுரா படத்துல கூட அமைச்சரத்தான் வில்லானா காட்டியிருப்பாங்க, ஹீரோ வதம் செய்வார்.

தூள்,கில்லி, னு பலப்படங்கள் இருக்கே, விக்ரம் அருள் படத்துல எம்.எல்.ஏவ அடிச்சி கொன்னுட்டு அரசியல்வதிக்கு எதிராத்தான் ஹீரோயிசம் காட்டுவார்.

முதல்வர் தானே முக்கியம் அவங்கள காட்டலையேனா... முதல்வன் படம் இருக்கு :-))

புதுப்பேட்டை படத்துல ஆளுங்கட்சியும்,எதிர்க்கட்சியும் கூலிப்படைய பயன்ப்படுத்தி தான் அதிகாரத்துல இருக்காங்கனு காட்டியிருப்பாங்க, ஆனால் படம் ஓடலையே அவ்வ்!

இம்பூட்டு ஏன் விசயகாத்ந் எல்லா படத்துலவும் அரசியல்வாதிகள பின்னிப்பெடலு எடுக்கிறாப்போலத்தான் நடிச்சிருப்பார் அவ்வ்!

படத்துல குறை சொல்லியே ஆகனும்னு சொல்ல ஆரம்பிச்சா உங்கள போல கண்டுப்பிடிச்சு சொல்லிடலாம், ஏன் அரசியல்வாதிய பத்தி பேசலை, காவல்துறைய பத்திப்பேசலனு அவ்வ்!

மாதேவி said...

நன்றி.

Manimaran said...

உங்கள் விமர்சனப் பார்வையே வித்தியாசம்தான்... கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

Ganesh kumar said...

உண்மை தமிழன் அண்ணே...ஆரம்பம் வசூல மிஞ்சுமா ??? கதாநாயகி லக்ஷ்மி மேனன்/காதல் கத்தரிக்கா தேவையா ???

குறும்பன் said...

அண்ணே இந்தப்படம் நன்றாக திரை அரங்கில் ஓட வேண்டும் என்பது சரி. ஆனா 1 மாதம் கழித்து எந்ததெந்த படம் வசூலில் தயாரிப்பாளருக்கும் விநியோகம் பண்ணியவர்களுக்கும் இலாபம் கொடுத்தது என்று இடுகை போடுங்கள். இடுகை சின்னதா பரவால நாங்க கோவிச்சுக்க மாட்டோம்.

கேரளாக்காரன் said...

////////பாரதிராஜா ஏற்பாடு செய்த ரவுடியின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்தாலே இதில் பாரதிராஜா பிடிபட வாய்ப்புண்டு.. அந்த போன் அழைப்புக்கு பின்புதானே படம் பரபர என்கிறது..! //////////



அண்ணே அவரு காயின் போன்ல இருந்து பேசுவாரு...

செல் நம்பர் இருந்தா அவரை ஏன் தேடி அலையனும்?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

இந்த உணர்வுதான் (காசு சம்பாரிக்க முடியாமல் நமக்கு எப்ப வாய்ப்பு வரும்ன்னு காத்திருக்க)
அனைவருக்குமே..!]]]

ஆமாங்கண்ணே.. ஏதாவது செய்யணும்ன்னே சாகுறதுக்குள்ள..!!!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

படம் பற்றி அனைவருமே நல்லதாகத்தான் சொல்கிறார்கள்! விஷாலுக்கு இது ஒரு வெற்றிப் படமாக அமையட்டும்! வாழ்த்துக்கள்!]]]

உண்மையாகவே நல்ல படம்தான். அவசியம் பாருங்கள் சுரேஷ்..!

உண்மைத்தமிழன் said...

வவ்வால் அண்ணாச்சி..

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[மாதேவி said...

நன்றி.]]]

நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

[[[Manimaran said...

உங்கள் விமர்சனப் பார்வையே வித்தியாசம்தான்... கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.]]]

அவசியம் பாருங்கள் ஸார்.. நான் சொல்வதை ஒத்துக் கொள்வீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ganesh kumar said...

உண்மை தமிழன் அண்ணே...ஆரம்பம் வசூல மிஞ்சுமா ???]]]

மிஞ்சாது.. ஆரம்பம்தான் டாப்..


[[[கதாநாயகி லக்ஷ்மி மேனன்/காதல் கத்தரிக்கா தேவையா ???]]]

யாரை லவ் பண்ணுதாம்..?

உண்மைத்தமிழன் said...

[[[குறும்பன் said...

அண்ணே இந்தப் படம் நன்றாக திரை அரங்கில் ஓட வேண்டும் என்பது சரி. ஆனா 1 மாதம் கழித்து எந்ததெந்த படம் வசூலில் தயாரிப்பாளருக்கும் விநியோகம் பண்ணியவர்களுக்கும் இலாபம் கொடுத்தது என்று இடுகை போடுங்கள். இடுகை சின்னதா பரவால நாங்க கோவிச்சுக்க மாட்டோம்.]]]

முயல்கிறேன் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன் said...

////////பாரதிராஜா ஏற்பாடு செய்த ரவுடியின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்தாலே இதில் பாரதிராஜா பிடிபட வாய்ப்புண்டு.. அந்த போன் அழைப்புக்கு பின்புதானே படம் பரபர என்கிறது..! //////////

அண்ணே அவரு காயின் போன்ல இருந்து பேசுவாரு. செல் நம்பர் இருந்தா அவரை ஏன் தேடி அலையனும்?]]]

பணத்தோட பஸ்ஸ்டாண்டுக்கு வரச் சொல்லும்போது எந்த போன்ல பேசுறாருன்னு கவனிச்சீங்களா..?

Nondavan said...

எனக்கு அடிக்கடி தோன்றும் ஆதங்கம் தான்... பல சமயங்களில் நல்ல படங்கள் இங்கு ரிலீஸ் ஆவதே இல்ல... இந்த் பாண்டியநாடு’ கூட இங்கு ரிலீஸாகவில்லை அண்ணே...

சமீபத்தில்கூட, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் இங்கு திரையிடப்படவே இல்ல..

கொஞ்சம் ஏன்னு சொல்லுங்க அண்ணே....

இத்தனைக்கும் இங்கு நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள், தியேட்டரில் போய்க்காண....

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

எனக்கு அடிக்கடி தோன்றும் ஆதங்கம்தான். பல சமயங்களில் நல்ல படங்கள் இங்கு ரிலீஸ் ஆவதே இல்ல. இந்த் பாண்டியநாடு’கூட இங்கு ரிலீஸாகவில்லை அண்ணே.

சமீபத்தில்கூட, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் இங்கு திரையிடப்படவே இல்ல.. கொஞ்சம் ஏன்னு சொல்லுங்க அண்ணே.]]]

உங்க ஊர்ல இருக்குற டிஸ்டிரிபியூட்டர்ஸ் அதை வாங்க ஆசைப்படலை.. அதான் காரணம்.. அவங்ககிட்ட கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வாங்கச் சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

எனக்கு அடிக்கடி தோன்றும் ஆதங்கம்தான். பல சமயங்களில் நல்ல படங்கள் இங்கு ரிலீஸ் ஆவதே இல்ல. இந்த் பாண்டியநாடு’கூட இங்கு ரிலீஸாகவில்லை அண்ணே.

சமீபத்தில்கூட, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் இங்கு திரையிடப்படவே இல்ல.. கொஞ்சம் ஏன்னு சொல்லுங்க அண்ணே.]]]

உங்க ஊர்ல இருக்குற டிஸ்டிரிபியூட்டர்ஸ் அதை வாங்க ஆசைப்படலை.. அதான் காரணம்.. அவங்ககிட்ட கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வாங்கச் சொல்லுங்க..!

Nondavan said...

//
உங்க ஊர்ல இருக்குற டிஸ்டிரிபியூட்டர்ஸ் அதை வாங்க ஆசைப்படலை.. அதான் காரணம்.. அவங்ககிட்ட கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வாங்கச் சொல்லுங்க..! //

மிக்க நன்றி அண்ணே...யாரோ சொல்லிட்டாங்க போல, தயாரிப்பாளருக்கோ அல்லது டிஸ்டிரிபியூட்டர்களுக்கோ.. இங்கு படம் பட்டய கிளப்பது.... எல்லா தியேட்டர்களிலும்... ஆரம்பம், அழகுராஜாவை கடாசிட்டு இது நல்லா ஓடுது...

முக்கியமான விஷயம், சினிப்ளக்ள ஓடுவது... பெரிய ஸ்டார்ஸ் படம் மட்டும்தான் இங்கு சில நாள் தாக்குபிடிக்கும்.. அங்கும் ரிலீச் செய்து நல்ல கூட்டம்