Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

ராவண தேசம் - சினிமா விமர்சனம்

14-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ் ஈழப் போராட்டம் பற்றி இதற்கு முன் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மெட்ராஸ் கபே-யை தவிர மற்றவைகள் பெரிதாகப் பேசப்படவில்லை.. ஆனால் திரையிடுவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. 'உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும், தடைகளும் அது போன்ற படங்களையே தயாரிக்கும் முடிவோடு யாரும் கோடம்பாக்கத்திற்குள் கால் வைக்க்க் கூடாது என்பதையே உணர்த்தியது. ஆனாலும் அதற்குப் பின்பும் 'மிதியடி' என்றொரு படம் வந்தது.. நீலிமாராணி நடித்தது.  யுத்தக்களத்தில் புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.. இயக்குநர் நண்பர் இகோர் இப்போது 'தேன்கூடு' என்றொரு படத்தை தயாரித்து இயக்கிவிட்டு சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்..! ஆனால் இந்தப் படத்தை எப்படி சுலபமாக யு/ஏ சர்டிபிகேட் வாங்கி வெளியிட்டார்கள் என்றால் அதற்கான காரணத்தை நீங்கள் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும்..! 


சிங்கள அரசு, சிங்கள ராணுவம், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்திய அரசு, தமிழக அரசு என்று யாரையும் விட்டுவைக்காமல் அவ்வப்போது லேசுபாசாக விமர்சனம் செய்துவிட்டு அந்த விமர்சனத்தைக்கூட சில இடங்களில் காட்சிகளாக பதிவு செய்திருக்கிறார்கள்..  படம் முழுவதிலும் தமிழ் ஈழ மக்களின் பேச்சு ஸ்டைல்.. கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது.. புலிக்கொடி பறக்கும் காட்சிகள் ஒரு தமிழ்ச் சினிமாவில் காட்டப்பட்டு, அது இந்தியாவில் திரையிடப்படும் இந்தச் சூழலை நாம் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும்..!


முல்லைத்தீவில் இருந்துதான் கதை துவங்குகிறது.. துவக்கத்தில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் வாழும் மக்கள்.. தமிழ்ச் சினிமா போல ஒரு காதல்.. என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், ஏக்கத்திலும் ஹீரோ அஜய்யை சுற்றிச் சுற்றி வரும் ஹீரோயின் ஜெனிபர்.. அங்கிருந்து தமிழகம் தப்பி வரும் மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பி வைக்கும் புரோக்கர்.. வெளியூர் போய் பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகளை வாங்கி வந்து அதனை ரேஷன் முறையில் கொடுப்பதாகச் சொல்லி பாதியை பதுக்கி வைத்து அதையும் பிளாக்கில் விற்பனை செய்யும் அக்மார்க் தமிழன்.. எப்போதே காணாமல் போன தனது மகன் திரும்பி வருவான் என்றெண்ணி அவனுக்காகக் காத்திருக்கும் வயதான தம்பதிகள்.. தனது மகனை பெரிய படிப்பாளியாக உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாசக்கார அப்பா.. இப்படி அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரு சிலரை மையப்படுத்தியே கதையை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குநரும், படத்தின் ஹீரோவாவுமான அஜெய் நூத்தகி. 

இதனூடே இன்னொரு சின்னப் பையன் கேரக்டர்.. இவரை வைத்துதான் அனைத்துவித விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் இயக்குநர். காணாமல் போன பையனைத் தேடியலையும் வயதானவரின் பெயர் வேலுப்பிள்ளை. இவரைக் குறி வைத்தே பல வசனங்கள் செல்கின்றன..!


சிங்கள ராணுவம் திடீரென்று அந்தப் பகுதியைத் தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட.. தமிழர்கள் கொல்லப்பட்டு.. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குட்பட்டு கொல்லப்படும் சூழலில் மீண்டும் அடுத்த அதிரடியாக புலிகள் தாக்குதலில் மீண்டும் அப்பகுதியில் புலிக்கொடி பறக்கிறது..! வரும் தளபதியிடம் மக்கள் கேள்விகளை வீசுகிறார்கள்.. இந்தப் போராட்டத்தினால் யாருக்கு லாபம்..? இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறது..? என்றைக்கு இது நிற்கும்.. என்று கோப்படுகிறார்கள்..! 


மீண்டும் மீண்டும் விமான தாக்குதல்கள்.. சோத்துப் பிரச்சினை.. எத்தனை நாளைக்கு பிரெட்டையும், பிஸ்கட்டையும் சாப்பிடுவது.. இந்தியாவுக்கு போயாவது வாழலாம் என்று முடிவெடுத்தால், புலிகள் இயக்கம் அதனைத் தடை செய்கிறது.. அனுமதிக்க மறுக்கிறது.. ஒரு சூழலில் புலிகளை எதிர்த்து அனைவரும் ஒன்றாகவே படகில் அங்கிருந்து இந்தியா நோக்கி கிளம்பி வருகிறார்கள்.. இதற்கு மேல்தான் இந்தப் படம் நாடகத்தனமான, வழக்கமான தமிழ்ச் சினிமா என்பதிலிருந்து மாறி அழகியல் கலையாகவே மாறிவிட்டது..!

தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்து கிளம்பினாலும், அவர்களுக்கிடையில் இருக்கும் குரோதங்கள்.. கோபங்கள்.. என்று அனைத்தையும் அவ்வப்போது இடையிடையே வெளிப்படும் சூழலும் ஏற்படுகிறது.. வழி தவறிய நிலையில் அந்த தப்பித்து வரும் அகதி மக்களின் அவல நிலையை இதைவிடவும் வேறு யாரும் மிக எளிமையாக புரிய வைத்துவிட முடியாது..!   

இந்தப் படத்தின் இயக்குநர் அஜெய் தமிழர் அல்ல.. ஆந்திராக்காரர்..! அடிக்கடி காக்கிநாடா கடல் பகுதிக்கு வழி தவறி வந்து நிற்கும் தமிழர்களின் படகுகள் பற்றிய செய்தியைப் பார்த்தும், படித்தும் கேள்விப்பட்டும் அவர்களது அந்த அவலத்தை ஒரு படமாக எடுத்துப் பதிவு செய்ய நினைத்து இதனை எடுத்தாராம்..! இவரை எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்..! 


படகு செல்லும் பாதையை எப்படி தீர்மானிப்பது.. கப்பல் படைகள் வந்தால் எப்படி தப்பிப்பது..? ஒன்றரை நாளில் இந்தியா வந்துவிட வேண்டிய இவர்கள் வழி தவறியதால், 10 நாட்களுக்கு மேல் கடலில் பயணித்து எதனை இழந்து எதனை பெற்றார்கள் என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

ஹீரோவாகவும், இயக்குநராகவும் அசத்தியிருக்கிறார் அஜெய்.. இவருக்கு ஜோடியாக ஜெனிபர்.. நந்திதா என்ற இயற்பெயரோடு இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருக்கிறார். கல்யாணம் செஞ்சு, பிள்ளையும் பெத்த பின்பு இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது.. பையனை தேடிக் கொண்டிருக்கும் முதியவர்களான அந்த வயதான பெண்மணியும், வேலுபிள்ளை கேரக்டரில் நடித்திருக்கும் கொண்டாவும் மனதை உருக வைத்துவிட்டார்கள்..! இப்படியெல்லாம் முடிவுகள் ஒரு அப்பனுக்கும், அம்மாவும் வருமெனில் எந்தப் பிள்ளையால் தாங்கிக் கொள்ள முடியும்..? அந்தச் சின்னப் பையன் படபடவென பேச்சில் பட்டாசாக வெடிக்கிறான்.. அனைவரையும் லெப்ட் அண்ட் ரைட்டாக வெளுத்துக் கட்டும் அவனது பரிதாப முடிவுதான் அந்தக் கேரக்டருக்கு கனம் சேர்க்கிறது..! அவனை வைத்து இயக்குநர் கேட்டிருக்கும் கேள்விகளைத்தான் சம்பந்தப்பட்ட பலரும் தமிழ்நாட்டில் தினம் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! கைக்குழந்தையுடன் தனது மனைவியுடன் பயணிக்கும் சந்திரன்.. ஆஸ்துமா நோயாளியான அந்த முதிய பெண்மணி.. அவளைக் காப்பாற்றத் துடிக்கும் பெரியவர்.. மற்றவர்களுக்கு கொடுக்க நினைக்காமல் தானே சாப்பிட நினைக்கும் புரோக்கர்.. மனிதாபிமானம் நிறைந்த அவனது மனைவி என்று அனைவருக்குமான திரைக்கதையை அழகாக எழுதியிருக்கிறார் இயக்குநர்..!


இடைவேளைக்கு பின்பான பகுதி முழுவதும் கடலாக இருக்க.. அனைத்தையும் கண் முன்னே அழகாகக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ராஜ்.. கொஞ்சமும் பிசிறு தட்டாமல் நெய்திருக்கும் எடிட்டர் கார்த்திகா சீனிவாஸ் இருவரும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. இந்தப் படம் சொல்லியிருக்கும் பாடமும்,  கேட்டிருக்கும் கேள்விகளும் தமிழ்த் திரையுலகில், "நாங்க என்ன செய்ய முடியும்..? அதான் மீட்டிங் போட்டு பேசியாச்சுல்ல.. பேட்டியெல்லாம் கொடுத்தாச்சுல்ல..." என்று சொல்லி தப்பிப் போயிருக்கும் தமிழ் இயக்குநர்களை நோக்கித்தான் வீசப்பட்டிருக்கிறது..!   அவர்கள்தானே இதனை முதலில் கேட்டிருக்க வேண்டும்.. இதற்கும் ஒரு ஆந்திராக்காரன்தான் வர வேண்டுமா..? 

"நாங்கள் இப்போது தோற்றவர்களாக இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்.. எங்களது வாரிசுகள் வெல்வார்கள்.." என்ற நம்பிக்கையையும் வார்த்தைகளால் இந்தப் படம் சொல்கிறது.. இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்த சென்சார் போர்டுக்கு மீண்டும் எனது நன்றிகள்..! 

அவசியம் பார்க்க வேண்டிய படம் மக்களே..! தவற விடாதீர்கள்..!

தி.மு.க.வுக்கு கடைசி சான்ஸ்..!


13-03-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று தாங்கள் நடத்திய பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக டெசோ அமைப்பு கூறியிருக்கிறது..! லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை மற்றும் அரசு இயந்திரங்களின் உதவியால் அடக்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது.. அதையும் மீறி இப்போதும் பல இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார்கள்.. இவைகளை எந்த வகைகளில் முடித்து வைக்கலாம் என்று யோசித்து வருகிறது ஆத்தாவின் தற்கொலைப் படையான போலீஸ்..! 

‘ஈழத்தாய்’ என்று வாய் கூசாமல் மேடையில் முழங்கியதைக் கேட்டு கடைவாய்ப்பல் தெரியும் அளவுக்கு தனது புன்னகையைச் சிந்திய அதே தாய்தான், இன்றைக்கு தனது ஏவல் படையினரை வைத்து இந்த உண்ணாவிரத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.. சட்டப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினார்.. இலங்கைக்கு எதிராகவே பேசினார்.. ராஜபக்சேவை கண்டித்தார்.. எதிர்ப்பாளர்களே அகமகிழ்ந்தார்கள்.. ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை மன்னிக்கும் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்தார்..! 

‘இலங்கை பிரச்சினை இந்த அளவுக்கு தீவிரமாக கருணாநிதியே காரணம்’ என்கிறார் ஜெயலலிதா..  ஆனால் கருணாநிதியால் பதிலுக்கு ஜெயலலிதாதான் எல்லாத்துக்கும் காரணம் என்று குற்றம்சாட்ட முடியவில்லை..! காரணம், கடைசியாக போர் நடந்த காலக்கட்டத்தில் மத்திய ஆளும் காங்கிரஸ் அரசுக்கு முட்டுக்கட்டை கொடுத்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் நிறுத்தியிருந்தது தி.மு.க.தான்.. தி.மு.க. நினைத்திருந்தால் போரின் துவக்கத்திலேயே எப்பாடுபட்டாவது போரை நிறுத்தியிருக்கலாம்.. இல்லாவிடில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவோம் என்று மிரட்டியாவது அந்தக் கடைசிக்கட்ட ஈழப் போரை நிறுத்தியிருக்க வேண்டும்..! 

காங்கிரஸ் அவ்வளவு சீக்கிரமாக ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்க முயலாது.. அதனால் ஒருவேளை இவர்களது மிரட்டலுக்கு அவர்கள் பயப்பட வேண்டிய கட்டாயம் வந்திருக்கும்..! ஆனால் கடைசிவரையில் சீரியல்களே தோற்றுவிடும் அளவுக்கு சீன்களை போட்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு தானே ஒரு காரணகர்த்தாகவாகவும் ஆகிவிட்டார் கருணாநிதி..! 

இப்போதும் அதே கொலைகார காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து அவர்களது ஆட்சியில் வெட்கமில்லாமல் பங்கெடுத்து வருகிறது தி.மு.க. அதே தி.மு.க.தான் இன்றைக்கு பந்த்தையும் நடத்துகிறது.. யாரை எதிர்த்து. எதற்காக நடத்துகிறோம் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல்.. கொஞ்சமும் கூச்ச நாச்சமும் இல்லாமல் இன்றைக்கு தி.மு.க. தலைவர்கள் ‘வெற்றி’, ‘வெற்றி’ என்று கூக்குரலிடுவதைக் கேட்கும்போது நமக்கு வாய்த்த தறுதலைகளை நினைத்து நாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..!

மத்தியில் ஆளும் அரசின் ஒரு அங்கமாக இருந்து கொண்டே அதே மத்திய அரசை வலியுறுத்தியும், கண்டித்தும் போராட்டம் நடத்துவது என்பது வேடிக்கையாக இல்லை...?! ஆனால் வருடக்கணக்காக இது போன்ற கண் துடைப்பு நாடகங்களை நடத்தியே பழகிப் போய்விட்டதால் தி.மு.க.வினருக்கு இதுவொரு வாடிக்கையாகிவிட்டது..!

மாணவர்கள் உண்மையாக அறிவாலயத்தை எதிர்த்து, தி.மு.க.வை எதிர்த்துதான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.. மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று தி.மு.க.வைக் கண்டித்துதான் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்.. லயோலா மாணவர்களின் போராட்டக் களத்தை திசை திருப்ப டெசோ அபிமானிகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பார்க்கும்போதும் ஒரு விஷயம் தெளிவாகிறது.. எந்தப் போராட்டமாக இருந்தாலும் “தாங்கள்தான் முன்னால் நிற்போம்.. நீங்களெல்லாம் எங்களுக்கு வால்தான் பிடிக்க வேண்டும்..” என்கிற அரசியல் தலைகளின் ஆணவம்தான் அது..! முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போதே திருமாவின் கட்சிக்காரர்கள்தான் மாணவர்களை அடித்து, விரட்டி கூட்டத்தை சிதைத்து ஊர்வலத்தை இழுத்துக் கொண்டு போனார்கள்..! அதை அவர்களால் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது..! 

உண்ணாவிரதம் என்பதே ஒருவகையில் பிளாக்மெயில்தான்..! இதனை உலகம் முழுவதுமே கடைபிடித்திருக்கிறார்கள்..! காந்தியார் எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்து அஹிம்சை வடிவத்திற்கு உயிர் கொடுத்தார் என்று தெரியவில்லை.. அதனால் இது அஹிம்சை வழியாகிவிட்டது.. அந்த வழியை இன்றைக்கும் புத்தகங்களில் மிகச் சிறப்பாக எழுதி, அதையே படிக்கச் சொல்லிவிட்டு, இன்று ஏதேனும் ஒரு கோரிக்கைக்காக அதனைக் கையில் எடுத்தால் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று சொல்லி கைது செய்து உள்ளே வைக்கிறார்கள்..! இந்தக் கேவலங்கெட்ட இந்திய அரசியல்வியாதிகளுக்கு பிரிட்டிஷ்காரனே பரவாயில்லை போலிருக்கே..!?

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களிடத்தில் போய் “இது வேலைக்கு ஆகாது.. நாம் மத்திய அரசைத்தான் எதிர்க்க வேண்டும்.. ஐ.நா.வைத்தான் மிரட்ட வேண்டும்..” என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார் திருமா. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவங்களோட கூட்டணில நாம ஏன் இருக்கணும்ன்னு தன்னோட மனசாட்சியிடம் கேட்கவே மாட்டாரா திருமா..? இப்பவும்.. இவ்வளவு தூரம் நடந்த பின்பும், “நாங்கள் மத்தியில் கூட்டணியில் இருப்பதா வேண்டாம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிவரும்..” என்று கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. வெட்கங்கெட்ட அரசியல்..!

இவர் வானளாவப் புகழும் பிரபாகரனின் உயிரைப் பறித்துக் கொண்ட அதே ராஜபக்சேவை நேரில் சென்று சந்தித்து அளவளாவிவிட்டு,  “கண்டனம் தெரிவிக்கவே நான் சென்று வந்தேன்..” என்று கூசாமல் சொன்னபோதே, திருமா இந்திய அரசியலில் பாஸ் மார்க் செய்துவிட்டார் என்பது புரிந்துவிட்டது..!  பிரபாகரனின் தாய் மற்றும் தந்தையர் இறந்தபோது மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலமாக விசா பெற்று அங்கே சென்றபோதே அவர் தமிழகத்து அரசியலில் தனியிடத்தைப் பிடித்த இதையும் ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்துகிறார் என்பதும் புரிந்துவிட்டது.. இது புரிந்துதான் வைகோ தலைமையினர் அவரிடமிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள் போலும்..!

இதில் கொஞ்சம் வித்தியாசமானவர் செந்தமிழன் சீமான்..! எங்கு பார்த்தாலும் கை முஷ்டியை காட்டி ஜெயிப்போம் என்று சொல்லிவரும் அண்ணன், இன்றுவரையிலும் எங்கேயிருக்கிறார் என்று தெரியவில்லை.. மாணவர்களை தூக்கிச் சென்று மருத்துவமனையில் வைத்ததை  கண்டித்துகூட அறிக்கை விடவில்லை என்றால் அண்ணனின் தைரியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..! ஆத்தாவிடம் அடுத்த கூட்டணிக்கு சீமான் தயாராகிறாரோ..? என்ன எழவோ..? 

ஆத்தாவை சொல்லவே வேண்டாம்.. முழு ஓய்வில் இருக்கிறார்.. புதிய அமைச்சர்கள் வேலைகளை சரியாகச் செய்கிறார்களா என்று தனது உளவுத் துறை போலீஸை அனுப்பி தினமும் ரிப்போர்ட் பெற்று தனது அரசு கடமையைச் செய்து வருகிறாராம்.. தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே அமைதியாகிவிடும் என்று அடிக்கடி சொல்லி வரும் ஆத்தா, அதற்கேற்றாற்போன்ற சூழ்நிலையை உருவாக்கவே தனது ஏவல் படையை பயன்படுத்துகிறார்.. இப்போதும் மாணவர்களை அடக்கி ஒடுக்கி வைத்து எப்படியாவது அமைதிப் பூங்கா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்..! 

அதே சமயம் பெங்களூர் கோர்ட் வழக்கில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று சகல வழிகளையும் யோசித்து அனைத்து வழிகளையும் திறந்தே வைக்கிறார் என்பதும் புரிகிறது..! ஒரு பக்கம் மத்திய அரசைத் திட்டுவது.. இன்னொரு பக்கம் அவர்களுக்கு மறைமுகமாக உதவிகள் செய்வது.. இன்னொரு பக்கம் அரசியல் களத்தில் காய்களை நகர்த்த ஈழத்து பிரச்சினையை பயன்படுத்துவது என்று அனைத்தையும் சப்தமில்லாமல் செய்து வருகிறார் இந்த ஈழத்து தாய்.. 

உண்மையாக இவர்தான் ஈழத்துத் தாய் என்றால் இவர்தானே இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னால் நின்றிருக்க வேண்டும்..! காவிரி பிரச்சினைக்காக இவர்பாட்டுக்கு மெரீனா பீச்சில் கேரவன் வேனை பக்கத்தில் நிறுத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தபோது அது தவறான வழிமுறையாக இவருக்குத் தோன்றவில்லையா..? இப்போது ஈழப் பிரச்சினைக்காக அதனை மற்றவர்கள் பின்பற்றக்கூடாதா..? என்ன எழவு அறிவுடா இவங்களுக்கு இருக்கு..? 

ஒரு இனமே பாதி அழிந்துவிட்டது.. மிச்சத்தில் பாதி உள்நாட்டிலும் பாதி வெளி நாட்டிலும் இருக்கிறது.. உள் நாட்டில் இருக்கும் இனத்தில் பாதிப் பேருக்கு கல்வி அறிவே கொடுக்கப்படவில்லை என்னும் உண்மையை நமது அரசியல்வாதிகள் எப்போதுதான் உணர்வார்கள்..? ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்பார்கள். இன்றைக்கு அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கும் சிங்கள அரசு கூடுதலாக நமது தொப்புள் கொடி சொந்தங்களின் மூன்றாம் தலைமுறைக்கு செய்திருக்கும் மிகப் பெரிய கொடுமையே அவர்களுக்கான கல்வியை மறுத்திருப்பதுதான்..! 

இத்தனையாண்டு கால ஈழத்து வரலாற்றில்  புலிகள் தந்த பள்ளிக்கூட வாய்ப்புகளை மட்டுமே பெற்றிருக்கும் அந்தத் தலைமுறையும், அதற்கடுத்த தலைமுறையும் நமது பிள்ளைகள் அனுபவிக்கும் கல்வியின் ஒரு பகுதியையாவது தொட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்..! இப்படியொரு இனத்தையே கற்காலத்தில் பின்னோக்கித் தள்ளியிருக்கும் சூழலில் எப்பாடுபட்டாவது மிக விரைவில் அவர்களை சுதந்திர தனி ஈழத்தில் அமர்த்த நினைக்காத இந்திய, தமிழக அரசுகளை நினைத்தால் இங்கேயும் ஒரு பிரபாகரன் வரக் கூடாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..!

எத்தனையோ ஈழத்துத் தமிழர்கள் பல வெளிநாடுகளில் என்னென்னமோ அடிமைத்தனமான வேலைகளைச் செய்து தங்களது வயிற்றை நிரப்பி.. சொல்ல முடியாத துயரங்களை சந்தித்துவிட்டு.. தாங்கள் இறப்பதற்குள் தங்களது தாய் மண்ணைத் தொட்டுவிட வேண்டும் என்ற நினைப்போடு ஒவ்வொரு நாளையும் கடந்து வரும்வேளையில்.. அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலையும், ஆதரவையும் தர வேண்டிய தமிழகம் தங்களது சுயலாபத்துக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது கேவலத்திலும் மகா கேவலம்..!

தனி ஈழம் தவிர வேறு எதுவும் இனிமேல் பலனளிக்காது.. தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே சகோதரர்களாக வாழ முடியாத சூழலை அங்கேயிருக்கும் அரசியல்வியாதிகள் உருவாக்கிவிட்டார்கள் என்பதை உலக சமுதாயத்திற்கு தகுந்த முறையில் எடுத்துக் கூற வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு. ஐ.நா. மூலமாகவே இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுத்து நிச்சயம் முடிந்தால்.. தனி ஈழத்தைச் சாதிக்கலாம்..! ஆனால் அதற்கு தமிழர்களை சொந்தங்களாக கருதும் மத்திய அரசு முதலில் தேவை.. இப்போது இருப்பவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு வர எம்.பி.க்கள் என்னும் துருப்புச் சீட்டுக்களை கையில் வைத்திருக்கும் தி.மு.க.தான் முன்வர வேண்டும்..! 

தனது குடும்பத்தினருக்கு இந்த அமைச்சுப் பதவிதான் வேண்டும்.. இல்லையெனில் பதவியே ஏற்க மாட்டார்கள் என்றெல்லாம் மிரட்டத் தெரிந்த தாத்தாவுக்கு.. தனி ஈழத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லையென்றால், தங்களுடைய ஆதரவும் இல்லை என்று சொல்ல மட்டும் தைரியம் ஏன் வரவில்லை..? மகாபாராத திருதராஷ்டினைவிட மோசமாக குடும்பப் பாசத்தில் சிக்குண்டவராக இருக்கும் இவரை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாகவும் இருக்கிறது.. இன்னொரு பக்கம் கோப வெறியும் வருகிறது..!

தனது பிள்ளைகளின் பணத்தாசை.. குடும்பத்தாரின் அதிகார வெறி.. கட்சியினரின் ஆட்சி வேட்கை.. இதையெல்லாம் தாண்டி இவரால் தற்சமயத்துக்கு வேறு எதையும் யோசிக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை..! தன் காலம் எப்படி போனாலும் போகட்டும் என்ற நினைப்போடு முடிந்தவரையில் பிள்ளைகளை அனுசரித்து போவதே தனக்கு நல்லது என்று நினைத்து காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்..! 

உலகம் முழுவதிலும் இருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் இப்போது இவர் ஒருவரே.. கருணாவைவிடவும், டக்ளஸை விடவும் மிகப் பெரிய துரோகியாகிவிட்டார்..! ஜெயலலிதாவை இந்த லிஸ்ட்டில்கூட சேர்க்காமல் இருக்க ஆரம்பத்திலேயே பழகிவிட்ட ஈழத்து மக்கள், கருணாநிதியை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதை அவர் ஏன் இன்னமும் உணரவில்லை என்பதும் தெரியவில்லை..!

இப்போதும் கெட்டுவிடவில்லை.. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகிவிட இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இதனைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை தனி ஈழத்துக்கு ஆதரவு என்கிற நிலையை எடுக்க வைத்தாலே ஈழத் தமிழர்கள் தி.மு.க.வையும் கருணாநிதியையும் ஏறெடுத்து பார்ப்பார்கள். நிச்சயம் கையெடுத்து வணங்குவார்கள்..! 


ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!

29-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல எப்போதும் நடக்கின்ற கொலைதான் என்கிறவகையில் தற்போது கடைசியாக நடந்திருக்கும் நாகப்பட்டினம் மீனவர் ஜெயக்குமாரின் கொலை, சிறிதளவு இந்திய, தமிழக அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கிறது..!


தேர்தல் நேரம் என்பதாலும், இதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து சினிமாத்தனமாக அனைவருக்கும் முந்திக் கொண்டு இரவோடு இரவாக அரசு வேலை தரும் ஆணையை கிராமத்து வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறது மாநில அரசு.

இந்த வேகத்தை முதல் மீனவன் பலியானபோதே இலங்கை அரசை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் நிகழ்த்தியிருந்தால் மிச்சம் இருந்த 535 பேரின் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கலாமே..?

அரசுகளின் இந்த அவலட்சணத்தை இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில், இப்போது இணைய ஊடகங்களும் களத்தில் குதித்துவிட்டன.

வலைத்தளங்களில் பல பதிவர்கள் சிங்கள அரசின் கொடுமையைக் கண்டித்தும், மீளாத் துயிலில் மூழ்கியிருக்கும் தமிழக, மத்திய அரசைக் கண்டித்தும் பதிவெழுதிவிட்டார்கள்.

கூகிள் பஸ் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களிலும் உடனுக்குடன் எதிர்ப்பு கோஷங்களும், அரசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே போய் உணர்வுள்ள அத்தனை பேரையும் உடனுக்குடன் ஒருங்கிணைக்கும் வசதி கொண்ட ட்வீட்டரில் இதற்கென  http://twitter.com/
#TNfisherman என்ற தனி ஐ.டி.யை ஆரம்பித்து அதில் தங்களது கோபத்தையும், கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர் தோழர்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பாக வலையுலக நண்பர் டிபிசிடி ஆரம்பித்த இந்த மீனவர்களுக்கான ஆதரவுப் போராட்டத்திற்கு இரண்டாவது நாளிலேயே ஊடகங்கள் ஆதரவு கொடுத்து அடையாளப்படுத்தின.

ட்வீட்டர் என்றில்லாமல் அங்கே இடுகின்ற செய்திகளும், கண்டனங்களும், கோரிக்கைகளும் http://www.savetnfisherman.org  என்ற வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேகத்தோடு இது அரசின் காதுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையோடு கடந்த மூன்று தினங்களாக ட்வீட்டர் உலகம் கலங்கிப் போய் இருக்கிறது..!

இதன் உச்சக்கட்டமாக நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்த டிவீட்டரின் மூலம் இயங்கும் மீனவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

9 மணி என்றில்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ட்வீட்டர்களும் கண்டனங்களை அதில் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 9 மணிக்குப் பிறகு, மேலும் வேகம் பிடித்து ட்வீட்டர் ஓவர் லோடு ஆகும் அளவுக்கு தமிழர்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 3710 ட்வீட்டுகள் மீனவர் பிரச்சினை தொடர்பாக இடப்பட்டன. நேற்று இரவு 10 மணிவரையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பான பதிவர்கள் இட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியிருந்தது..!


இத்தனை களேபரங்களும் இங்கே நடந்து கொண்டிருக்க.. மத்திய அரசோ மிக மெதுவாக “நாளைக்கு நாள் நல்லாயில்லை. அடுத்த நாள் நல்லாயிருக்கும்..” என்று தேர்ந்தெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நமது வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புகிறதாம். அவர் அங்கே போய் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இதுநாள்வரையிலும், இத்தனை மீனவர்கள் இறந்தார்களே.. அவர்களுடைய மரணத்திற்கு காரணம் யார் என்றுகூட விசாரிக்க முடியாத, விசாரிக்கத் தெரியாத இந்தத் துப்புக் கெட்டவர்கள் “சுடாதீங்க.. அவங்க பாவம்ல்ல.. எங்களுக்கு நிறைய பிரச்சினையாகுதுல்ல..” என்று சொல்வதற்காக ஒரு தூதரை அனுப்பி வைக்கிறார்கள். இதுவே மிகக் கேவலம்.

நான் எழுதிய
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!  என்ற கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

"தி.மு.க. இப்போது ஆட்சியைவிட்டு விலகினால்.. கருணாநிதி இல்லை என்றால் சிங்கள அரசு தமிழக மீனவர்களைச் சுடாது என்கிறீர்களா..?"
 
"அல்லது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்கிறீர்களா..?" என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்றே தெரியவில்லை.

இப்போது நடப்பது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமிழகத்தின்  முதல்வர் கருணாநிதிதான். செத்தவன் தமிழகத்தைச் சேர்ந்த மீனவன். நியாயத்தை யாரிடம் கேட்பது..? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடமா கேட்க முடியும்?

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் இறந்தபோது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால் சுடத்தான் செய்வார்கள் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். யார் இதனை இல்லை என்று சொன்னது..? அப்போது அதனை மறுத்தும், எதிர்த்தும் பேசிய கருணாநிதி இன்றைக்கு தனது ஆட்சியிலேயே ஒரு மரணம் நிகழ்ந்ததும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்..? நாங்கள் எங்கே ஜெயலலிதாவை உத்தமி என்று சொன்னோம்..?

தற்போது இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு எனில், மத்திய அரசை எப்பாடுபட்டாவது வற்புறுத்தி இந்தப் படுகொலைகளை நிறுத்துவது மாநில அரசின் கடமையல்லவா..? கருணாநிதி ஏன் செய்யவில்லை..? ஏன் இவரால் செய்ய முடியாது..?

தனது பேரன்களின் கேபிள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க சட்டம் வரப் போகிறது என்ற தகவல் கிடைத்த 1 மணி நேரத்திற்குள் கவர்னர் மாளிகைக்கு அன்பழகன் தலைமையில் கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்து புலம்பத் தெரிந்தவர்தானே இந்தக் கருணாநிதி..!

தனது பேரனுக்கும், தனது கட்சிக்காரர்களுக்கும் நல்ல லாபமான, பசையான துறைகளை வாங்கித் தர வேண்டி இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியின் தெருக்களில் லாவணி பாட ஓடத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

கேட்ட துறைகள் கொடுக்கப்படவில்லை என்றவுடன் பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டோம். நாங்கள் வெளியேயே நின்று கொள்கிறோம் என்று மிரட்டத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

நாங்கள் இருக்கவா வேண்டாமா என்பதை முடிவெடுத்துச் சொல்லுங்கள் என்று மிரட்டி ஜெயிலில் இருந்து தனி உத்தரவு மூலம் தான் மட்டும் வெளியேறத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தொலைக்காட்சி துவங்க 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் பி்ன்னுக்குத் தள்ளிவிட்டு விண்ணப்பம் கொடுத்து 15 நாட்களில் தனது தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி வாங்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

உலகத்தில் எந்த நாடும் செய்திருக்காத சாதனையாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஜீரோக்களை எண்ணக்கூடத் தெரியாதவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் அந்த ஊழல் நாயகனைக்கூட திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தனது மகனை ரவுடி என்று விமர்சித்த பேரனை ஒரே நொடியில் தனது சார்பான அமைச்சர்கள் பட்டியலில் இருந்து தூக்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரியாத மகனை, இது இரண்டு மட்டுமே தெரிந்த பிரதமரின் அமைச்சரவையில் கேபினட் மினிஸ்டராக ஆக்கத் தெரிந்திருக்கிறதே இந்தக் கருணாநிதிக்கு..!

இன்னும் எத்தனையோ திருட்டுக்களையும், கொள்ளைகளையும் மறைமுகமாகச் செய்து பிழைத்து வரும் இந்தக் கருணாநிதிக்கு மீனவர்களின் தொடர் படுகொலையை தடுக்கக் கூடவா தெரியாது..?

இவருடைய கட்சி எம்.பி.க்களின் ஆதரவோடுதானே மத்திய அரசே இயங்குகிறது.. அந்த மத்திய அரசில் இவரும் ஒரு அங்கம்தானே.. பின்பு இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது..?

இவர் உண்மையான தமிழனாக இருந்தால், முள்ளிவாய்க்கால் போரின்போதே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிட்டது ஐயா தனது குடும்பத்தினருக்கு மட்டும்தான் தமிழன் என்று..!

நானாக இருந்திருந்தால் ஆட்சியில் இருந்து விலகியிருப்பேன். மத்திய அரசை நட்டாத்தில் விட்டிருப்பேன். அடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது நானே முதல் படகில் அமர்ந்து சென்று “இப்போ வந்து சுட்டுப் பாரு..!” என்று சவால் விட்டிருப்பேன்.

கடற்படையினரை நம்பி இனிமேல் புண்ணியமில்லை. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு ஓட்டுப் போட்ட மக்களைக் காப்பாற்ற நான்தான் முனைய வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறையினரை மீனவர்களின் பாதுகாப்புக்காக நடுக்கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதனை செய்திருப்பேன்..!

எதிர்க்க வருபவர்களை, தடுக்க நினைக்கும் மத்திய அரசினை எதிர்த்து மக்களைத் திரட்டியிருப்பேன். போராடியிருப்பேன்.. ஆட்சி டிஸ்மிஸாகும் என்றாலும் பரவாயில்லை. துணிந்து நிற்கிறேன். டிஸ்மிஸ் செய்து பார் என்று சவால் விட்டிருப்பேன்.

ஆனால் கருணாநிதி செய்யவில்லையே.. அவருக்கு இப்போது என்ன கவலை..? ஒரே கவலைதான். தனது ஆட்சி போகக்கூடாது. அவ்வளவுதான். தனது ஆட்சியை நம்பித்தான் தனது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அவர்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ.. தனது குடும்பத்தினர் மீது கை வைத்து விடுவார்களே என்று பயப்படுகிறார்.

“நான் எனது நாட்டு மக்களைவிட எனது குடும்பத்தினரை அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். நடிக்கிறேன். பேசுகிறேன். அவர்களைவிட்டுவிட்டு வேறு யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. மத்திய அரசை பகைத்துக் கொண்டால் எனது மகனும், பேரனும் மந்திரி பதவியை இழந்துவிடுவார்கள். அதன் பின் கட்சியில் குழப்பம் ஏற்பட்டால்கூட சமாளித்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தில் குழப்பம் வரும். அதனை என்னால் சமாளிக்க முடியாது.. இப்போது எனது குடும்பத்தினர் சம்பாதித்து வரும் பணம் குறைந்துவிடும். சம்பாத்தியம் போய்விடும். ஏற்கெனவே சம்பாதித்ததற்கு கணக்கு வழக்கு கேட்பார்கள். வழக்குத் தொடர்வார்கள். அதனைச் சமாளிக்க வேண்டுமெனில் என்னிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லையெனில் எனது குடும்பத்தினரே என்னை மதிக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும்விட எனக்கு எப்போது மரணம் என்று தெரியவில்லை. ஆனால் நான் சாகும்போதுகூட முதல்வராகவே சாக விரும்புகிறேன். அப்படி இறந்தால்தான் எனது 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரை போல எனக்கும் பெயர் கிடைக்கும்..  ஆகவே எந்த நாடு, எத்தனை தமிழர்களைக் கொலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு எனது ஆட்சிதான் முக்கியம்.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..”

- இப்படி சதா சர்வகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியே சிந்தித்து வருபவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? நேற்றுகூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 38 பேர் இறந்தார்களே.. ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் என்று..?

நீ ஏண்டா ஒரு நாள் அம்மணமா ஆடுறன்னு கேட்டா.. அவன் 38 நாள் ஆடுனானேன்னு அது உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்கிறார் இந்தத் தமிழினத் தலைவர்..! இதுவா நியாயவான் பேசுகிற பேச்சு.. அப்போது இவரும் ஒரு ரவுடிதானே? ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமே அதே அளவுக்கு மரியாதைதான் இவருக்கும் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா எதையும் சொல்லிவிட்டுச் செய்வார். கருணாநிதி சொல்லாமல் செய்வார், செய்தவர் என்பதால் அந்த மரியாதையைக்கூட இப்போது இழந்துவிட்டார்.

இப்போது மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவர்களில்லை. வாங்குபவர்களும் இல்லை. இப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். பேசியிருப்பார்கள்.

இப்படி ஜெயலலிதாவைக் காட்டியே அவரைவிட பல மடங்கு பணத்தையும், சொத்துக்களையும் தனது குடும்பத்தினருக்காகச் சம்பாதித்துக் குவித்திருக்கும் கருணாநிதி மீண்டும், மீண்டும் ஜெயலலிதா என்னும் பூச்சாண்டியைச் சொல்லியே நம்மிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்..!

அவருக்கு மட்டுமல்ல, இனி ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் அனைவருக்குமே ஒரு பாடத்தைப் புகட்டுவதைப் போல நாம் நமது எதிர்ப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே வர வேண்டும். இது தேர்தல் சமயத்தில் நமது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக இந்த கோபாலபுரத்து கோயபல்ஸின் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக வேண்டும்..!

பதிவர்களும், வாசக அன்பர்களும் மீனவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தளத்திற்குச் சென்று பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதத்தை உங்களது ஒப்புதலுடன் அனுப்பி வையுங்கள்..

மேலும் நேரமிருப்பவர்கள், வாய்ப்பு இருப்பவர்கள் ட்வீட்டரில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் http://www.facebook.com/savetnfisherman என்ற தளத்தில் இணைந்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மால் முடிந்ததை அந்த மீனவர்களின் சமுதாயத்தினருக்கு செய்வோம்..! வாருங்கள்..!

தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!

24-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி இது என்று வாய் கூசாமல் புளுகிக் கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலச் சேவைகள் இதோ இன்றைக்கும் தொடர்ந்திருக்கிறது.

இதுவரையிலும் 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையிலும் இந்தியா இன்றைக்கும் அமைதிப் புறாவாக "ஏன் ராசா என் மக்களை கொல்றீங்க?" என்று புலம்பலை மட்டும் செய்து கொண்டிருக்கிறது..!


இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!

இதற்குக் காரணம் 'கொடுக்க' வேண்டியதைக் கொடுத்தால் தமிழக ஆட்சியாளர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர்களுடைய மக்களை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள். நாம் கஷ்டப்படத் தேவையில்லை என்பதை மத்திய ஆளும் கட்சியினரும் கண்டறிந்து வைத்துள்ளனர்.

எச்சில் இலைக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருக்கும் நாய்களைப் போல மாநில அரசின் ஆளுநர்கள், தங்களது குடும்பச் சுகத்திற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகளிடம் தமிழ்நாட்டை அடகு வைத்து வெகுநாட்களாகிவிட்டது..

இப்போதும் அடுத்து ஆட்சிக்கு வருவதுதான் தனது குடும்பத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து மத்திய அரசு என்ன சொல்கிறதோ.. எப்படி நடக்கச் சொல்கிறதோ அப்படியே நடந்து கொண்டு பதவியைப் பிடித்துக் கொள்ள நாடகமாடி வருகிறார் தமிழக முதல்வர்..!

மாதத்திற்கு இரண்டு தமிழ் மீனவர்களாவது சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதுவோம்.. எழுதிவிட்டோம். பிரதமரும் பதில் கடிதம் போட்டுவிட்டார்.. இனி அதுபோல் நடக்காது என்று பழைய கீறல் விழுந்த ரிக்கார்டையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார் முதல்வர்.

மத்தியில் இருக்கின்ற ஆட்சியிலும் ஒரு தமிழர்தான் பிரதான மந்திரியாக இருந்து வருகிறார். 'சின்னப் பயல் சிதம்பரம்' என்ற இந்த மாடி வீட்டு மேதாவியின் கைக்கங்கரியத்தால் இவருடைய உற்றமும், சுற்றும் மட்டும் மீண்டும் மெகா கோடீஸ்வரர்களான நிலையில் உள்துறையை செப்பனிட்டு பாதுகாக்க சவுத் பிளாக்கிற்கு அனுப்பப்பட்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் நாடு இன்னும் பல அல்லல்களுக்குள் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது. இருபது மைல் தொலைவில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தமிழர்தான் இந்தியாவுக்கே உள்துறை அமைச்சர் என்பது தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத, அதே சமயம் கசப்பான உண்மை.

இவர் தமிழரே இல்லை என்பது மட்டுமல்ல... மனிதரே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கி, தமிழ் ஈழத்து மக்களைக் கொலை செய்ய ஆயுதங்களையும் கொடுத்து உதவியிருக்கிறார்.. இந்த மனிதரிடம் போய் நடவடிக்கை எடு என்றால் எப்படி எடுப்பார்...?

இன்னும் பத்து, நூறு மீனவர்கள் செத்தால்கூட இந்த மாடி வீட்டு மேதைகள் படியிறங்கி வர மாட்டார்கள். பேசாமல் இன்றைக்கு அவரது வீட்டுக்கு புடவை, ஜாக்கெட், வளையல் சகிதமாக வந்திருந்த சீர்வரிசையை பிறந்த வீட்டுச் சீதனமாகப் பெற்றுக் கொண்டாவது தனது பெருமையை இவர் பறை சாற்றிக் கொள்ளலாம்.

பாண்டியன், ஜெயக்குமார் என்ற இரண்டு மீனவர்களும் அடுத்தடுத்த 10 நாட்கள் இடைவெளிக்குள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் துயரமான சம்பவங்கள். கடல் எல்லையைத் தாண்டாதீர்கள் என்று அரசு சொல்லுமேயானால், கடல் எல்லையாத் தாண்டாமல் செல்ல அந்த எல்லையில் இவர்கள் நின்றிருக்க வேண்டுமே..? அல்லது அதுதான் எல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் என்ன பாதுகாப்பு வசதிகளை அங்கே செய்து வைத்திருக்கிறார்கள்.


மிதக்கும் மிதவைகளைப் போட்டு வைத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் மிக வசதியாக அன்றாடம் கடலோரக் காவல்படை சென்று வரும் மிகக் குறுகிய இடங்களில் மட்டுமே அடையாளத்திற்காக வைத்துள்ளது கடற்படை.

மீனவர்கள் மீன்கள் எங்கு இருக்குமோ அங்குதான் மீன் பிடிக்கப் போவார்களே ஒழிய.. மிதவைகள் எங்கே இருக்கின்றன என்று தேடிப் பார்த்து அவற்றின் அருகே வந்து மீன்களைப் பிடிக்க முயல்வதி்ல்லை. இந்த ஒரு சிறிய அறிவார்ந்த பிரச்சினையைக்கூட அணுகத் தெரியாத அளவுக்கு கடற்படையும், தமிழக அரசும், மத்திய அரசும் இருக்கிறது என்றால் இவர்களெல்லாம் எதற்காக இங்கே இருக்கிறார்கள் என்றுதான் கேள்வி கேட்க வேண்டும்..!

அப்படியே எல்லை தாண்டிப் போனாலும்கூட நமது நாட்டு தொழில் நுட்பத்தையும், பண உதவியையும், விலை மதிக்க முடியாத ஆயுத உதவியையும் பெற்று வைத்திருக்கும் அந்த நாடு நமது நாட்டு மீனவர்களுக்கு உரிய மரியாதையை தந்திருக்க வேண்டுமே..?

துப்பாக்கிச் சூடும், நிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதும், கழுத்தில் கயிற்றைக் கட்டி கொலை செய்வதும்தான் அந்த நாடு செய்யும் நன்றிக் கடனா..? இப்படியொரு நாட்டிற்கு மத்திய அரசு ஏன் மீண்டும், மீண்டும் நிதியுதவி செய்கிறது..?

நன்றி கெட்ட நாட்டை சொற்களால் திருத்த வழியில்லையெனில், பலத்தைக் காட்டலாமே..? பலத்தைக் காட்டத் துப்பில்லையெனில் எதற்காக இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்..? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

ஒரு மரணம் நமது வீட்டில் நிகழ்ந்திருக்கிறது என்றால், அதனை முறைப்படி தெரிவித்து ஆகக்கூடிய நிவாரணப் பணிகளையும் தெரிவிப்பதுதான் ஜனநாயக அரசின் கடமை. இப்போது இப்படியா நடக்கிறது..?

கொலையா..? மீனவர்களா..? போராட்டமா..? சேலை வழங்குகிறார்களா..? எங்க..? என்று ஆளும் கட்சிக்குச் சொந்தமான டிவியில் வலைவீசி தேடும் அளவுக்கு செய்திகளைச் சுருக்குகிறார்கள்.

எந்தவிதத்திலும் கொலைச் சம்பவம் மக்கள் மத்தியில் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.


எழவெடுத்த தற்போதைய முதல்வர், சுடுகாட்டில் பொணத்துக்குக் கொள்ளி வைக்கக் கற்பூரத்தைக்கூட நான்தான் வாங்கிக் கொடுத்தேன் என்று சொல்வார் போலிருக்கிறது.. கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்குக் கொடுத்த நிதியுதவி செய்தி பேப்பரில் கூட வெட்கமில்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறார். என்ன எழவுடா இது? இவர்களுக்கு மானம், ரோஷமெல்லாம் கிடையவே கிடையாதா..?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி செத்த வீட்டிலும் விளம்பரம் தேடிக் கொள்ள இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறது..!

இந்த லட்சணத்தில் மக்கள் மனதை திசை திருப்ப வேண்டி இந்திய நாட்டுச் செய்திகளையே பிரதானமாகச் சொல்லிவிட்டு கடைசியில் போனால் போகிறதென்று தமிழகத்துச் செய்தியில் மீனவர் கொல்லப்பட்டது பற்றிச் சொல்லி முடிக்கிறார்கள் தொலைக்காட்சி உறவினர்கள்..! அவரவர்க்கு அவரவர் சம்பாத்தியம் முக்கியமாக இருக்கிறது.. ஆனால் இவர்களையெல்லாம் ஆட்சிக்குத் தேர்வு செய்த நாம்தான் இதற்காக வெட்கப்பட வேண்டும்..!

மக்கள் மத்தியில் கசப்புணர்வு என்றவுடன் தாத்தா உடனடியாக ஓய்வு என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துவிட்டார். இதைச் சொன்னவுடன் தமிழர்கள் அனைவரும் பொங்கி வந்து கண்ணீர் விட்டுக் கதறியழுது இவரைத் திரும்ப அழைப்பார்கள் என்று நம்புகிறார்.. அப்படியே இந்தத் துரோகி, ஒரேயடியாகப் போனால்கூட இங்கே எவருக்கும் கவலையில்லை என்பதை இந்த நேரத்தில் வருத்தத்துடன் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!

ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு ஆளை பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தையே பலி கொடுக்கலாம் என்பதை காந்தியாரே ஒப்புக் கொண்டிருக்கிறார்..!

இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!

இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!

ஈழத்துச் செய்திகள்..! - 12-11-2010

13-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இறுதிக் கட்டப் போரில் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்..!

விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுத விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து இதுவரை 21 நீண்டதூர ஆட்லறிப் பீரங்கிகளும், சுமார் 800 பல்வேறு வகையான மோட்டார்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப் படைத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு "ஐலன்ட்" நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் விபரம் வருமாறு :-

152 மி.மீ ரகத்தைச் சேர்ந்த ஆட்லறிப் பீரங்கிகள் ஆறு.
130 மீ.மீ ஆட்லறிகள் ஒன்பது,
122 மி.மீ ஆட்லறிகள்  ஆறு.
85 மி.மீ ஆட்லறிகள் இரண்டு. 

இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார்கள்:-

120 மி.மீ மோட்டார்கள் 57,
82 மி.மீ மோட்டார்கள் 38,
81 மி.மீ மோட்டார்கள் 147,
60 மி.மீ மோட்டார்கள் 487,
கொமாண்டோ மோட்டார்கள் 65

ஆகியனவும் அடங்கியுள்ளன.

அத்துடன், ஆறு குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கிகள் மூன்று, 
பின்னுதைப் பற்ற பீரங்கிகள் 14   ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்பான ஆட்லறிகளும் மோட்டார்களும் என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறியளவிலான ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்பட்டு வருகின்றன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான கனரக ஆயுதங்கள் போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஏ-9 வீதிக்கு கிழக்குப் பக்கத்திலேயே மீட்கப்பட்டன.

இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட ஆயுதங்களில்

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 21,
தெர்மோபெரிக் ஆயுதங்கள் 55,
40  மி.மீ கிரனேட் செலுத்திகள் 253,
ஏவுகணை செலுத்திகள் 14,
23 மி.மீ பீரங்கிகள் 07,
12.7 மி.மீ கனரகத் துப்பாக்கிகள் 96,
பல நோக்கு இயந்திரத் துப்பாக்கிகள் 273,
ரி 56 துப்பாக்கிகள் 14,232,
ஏ.கே 47 துப்பாக்கிகள் 103,
எம் 16 துப்பாக்கிகள் 63,
குறி பார்த்துச் சுடும் சினப்பர் துப்பாக்கிகள் 34,
9 மி.மீ கைத் துப்பாக்கிகள் 441,
மைக்ரோ கைத்துப்பாக்கிகள் 167,
14.5 மி.மீ இடம் நகர்த்தக் கூடிய விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் 25,
விமான எதிர்ப்பு ஏவுகணை கள் 08,
ரி 55 பிரதான மர் டாங்கி கள் 02,
152 மி.மீ, 130மி.மீ, 122மி.மீ, 120 மி.மீ பீரங்கிக் குண்டுகள் 3964,
விமானக் குண்டுகள் 1143,
கிளைமோர் குண்டுகள் 7069,
கைக்குண்டுகள் 35,315,
வெடிக்க வைக்கும் கருவிகள் 61,788,
புலிகளின் தயாரிப்பு வெடிபொருள்கள் 4517
 

ஆகியனவும் அடங்கியுள்ளன.

இதைவிட புலிகளின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கான மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.  இவற்றில்...

167 மைக்ரோ கைத்துப்பாக்கிகளுடன் கூடிய 377 தற்கொலைத் தாக்குதல் அங்கிகள்,
6265 கிலோ எடையுள்ள சி 4 வெடிமருந்து,
188 கிலோ எடையுள்ள ரி.என்.ரி வெடி மருந்து,
3186 கிலோ ஜெலிக் நைற்,
40 தற்கொலை இடுப்புப் பட்டிகள்

உள்ளிட்ட பல பொருள்களும் அடங்கியுள்ளன.

இரண்டு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 21 துப்பாக்கிகளில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தன.

20 தற்கொலைத் தாக்குதல் படகுகள்,
13 சேதமடைந்த கடற்புலிகளின் படகுகள்,
228 வெளியிணைப்பு இயந்திரங்கள்,
11 இஸ்ரேலிய மினியுசி துப்பாக்கிகள்
உள்ளிட்ட 279 வகையான பொருள்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

சிங்கள ராணுவம் கூட்டிச் சென்ற எங்கள் கணவன்மார்கள் எங்கே..?: யோகி, இரத்தினதுரை மனைவிமார் கதறல்..!

“2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் திகதி வட்டுவாகலில் வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட எங்கள் கணவன்மாரைப் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில்லை. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதையாவது வெளிப்படுத்துங்கள்..” என விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகி மற்றும் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னர் சட்சியமளித்துள்ளனர்.

கற்றிந்த பாடங்களுக்கும் நல்லிணக்கணத்திற்குமான ஆணைக் குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான அமர்வு நேற்று அரியாலை சரஸ்வதி சனசமுக நிலையத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்கையில், “எங்கள் கணவன்மார் மே மாதம் 18-ம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து ஏற்றிச் செல்லப்பட்டனர். இன்றுவரைக்கும் எந்த முடிவும் கூறப்படவில்லை” என்றனர்.

யோகியின் மனைவி ஜெயவதி சாட்சியமளிக்கையில் “கடந்த மே மாதம் 17-ம் திகதி நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தோம். 18-ம் திகதி காலை சரணடையுமாறு இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது கணவர் மற்றும் புதுவை இரத்தினதுரை மற்றும் பேபி சுப்பிரமணியம், லோரன்ஸ் திலகன் ஆகியோர் சென்றிருந்தனர்.


சரணடைந்தவர்கள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர் இன்றுவரைக்கும் அவர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை..” என்றார்.

தொடர்ந்து புதுவை இரத்தினதுரையின் மனைவி சிறீரஞ்சனி தனது சாட்சியத்தில் “யோகியுடன் எனது கணவரும் ஏற்றிச் செல்லப்பட்டார். அவர் பற்றிய முடிவுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. அவர் பற்றிய முடிவுகளையும் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதுடன் தமது கணவன்மாருடன் சுமார் 6 பேருந்துகளில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவருடைய விபரங்கள்கூட இன்னமும் வெளியிடப்படவில்லை..” எனவும் தெரிவித்தனர்.

மேலும் “தமது கணவன்மாரை ஜோன்சன் என்கிற பாதிரியாரே சரணடையுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் பற்றிய தகவல்கூட இன்னும் இல்லை” எனக் கூறினர்.

எனினும் இவ்விடயம் பற்றி தாம் ஆராய்வதாக கூறிய ஆணைக் குழுவின் தலைவர் சி.ஆர்.டீசில்வா “உங்களுடைய கணவன்மார் புலிகளுடன் தொடர்புடையவர்களா..?” என குறுக்குக் கேள்விகளை கேட்டனர்.

மகனை இழந்த தாய் ஈ.பி.டி.பி. கட்சிக்கு எதிராக ஆணைக் குழு முன் சாட்சியம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) முகாமுக்குள் 2006.02.02 அன்று சென்ற எனது மகன் இன்னும் திரும்பி வரவேயில்லை. அவரை அங்கு தேடிச் சென்றபோது தன்னை விரட்டியடித்ததாக நேற்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த விதவைத் தாய் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த கால யுத்த சூழலில் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மாரில் ஒருவரான ரங்கநாதன் விசாலாட்சி என்கிற விதவைத் தாய் தேசிய நல்லிணக்க ஆணைக் குழு முன் சாட்சியம் வழங்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு :

சம்பவ தினம் யாழ். நகரப் பகுதிக்கு சென்று வருகின்றேன் என்று சொல்லி சைக்கிளில் புறப்பட்டு சென்ற மகன் திரும்பி வரவே இல்லை. அவர் ஈ.பி.டி.பி முகாமுக்குள் கூட்டிச் செல்லப்பட்டமையை கண்டதாகவும், அவர் திரும்பி வெளியில் வரவே இல்லை என்றும் நான் விசாரித்தபோது நேரில் பார்த்தவர்கள் கூறி இருந்தனர்.

நான் உடனடியாக ஈ.பி.டி.பி முகாமுக்கு சென்று மகனை விசாரித்தபோது என்னை அங்கிருந்து கலைத்து விட்டனர். திருப்பி அனுப்பினர். எனது கணவர் புற்று நோயால் இறந்து விட்டார். இரு பிள்ளைகளில்  மற்றவர் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்.

ஈ.பி.டி.பி முகாமுக்கு பின்னரும் பல தடவைகள் சென்று விசாரித்து இருக்கின்றேன். பலரிடமும் முறையிட்டிருக்கின்றேன். எந்த பலனும் இல்லை. எனவே நீங்கள்தான் எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த விதவைத் தாய் கண்ணீர் மல்க  தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு வாகரையில் உயர் பாதுகாப்பு வலயமும் சிங்கள குடியேற்றமும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே உள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகரை பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமும் இதற்குள் பாரிய இராணுவ முகாமும் இதனை அண்டிய பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றவும் முயற்சி இடம் பெறுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்போது இந்த பிரதேசத்தில் அதாவது வாகரைக்கு தெற்கே உள்ள காயாங்கேணி மாங்கேணி பனிச்சங்கேணி போன்ற இடங்களில் பிரதான வீதியின் இருமருங்கிலும் படையினரால் வேலி இடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன சுமார் 15 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட பிரதேசத்தில் கடற்படையினரும் இராணுவத்தினரும் முகாமிடுவதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

இந்த பிரதேசத்திற்குள் அடங்குகின்ற மாங்கேணி என்ற இடத்தில் அமைந்துள்ள மரமுந்திரிகை கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்காக கட்டுமானப் பொருட்கள் ஏற்கனவே இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்ததும் அறிவோம்.

இந்த அத்து மீறிய சிங்கள குடியேற்றங்களை உடன் நிறுத்துமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக பலமுறை பாராளுமன்றத்திலும் உரையாற்றி இருந்தார்கள் இதற்கும் மேலாக இந்தியாவிடமும் இந்த அத்துமீறிய குடியேற்றங்களை உடன் தடுத்து நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும்படி கேட்டிருந்தார்கள் ஆனால் இவைகளால் எந்த பயனும் கிடைக்கவில்லை மாறாக சிங்கள அரசு திட்டமிட்டபடி தனது செயற்பாட்டை தொடர்கின்றதைக் காண்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசம் இயற்கை வளம் நிறைந்த தமிழரின் பூர்வீக பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் எதிர்காலத்தில் இந்த பிரதேசத்தில் தமிழர்கள் வாழ்வார்களா? என்பது கேள்விக்குறியாகவேதான் தென்படுகின்றது.

யாழில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்ற முயற்சி : திவயின பத்திரிகை தகவல்..!

யாழ். நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

1983-ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்களக் குடும்பங்கள் தற்போது நாவற்குழி பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு தமிழ்க் குடும்பங்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

50 தமிழ் குடும்பங்கள் குறித்த பிரதேசத்திற்கு வந்து தமது காணிகளை கைப்பற்ற முயற்சித்ததாக யாழ்ப்பாண சிங்கள மக்கள் அமைப்பின் தலைவி எச்.கே.கே. குமாரி சகுந்தலா தெரிவித்துள்ளார்.

88 சிங்களக் குடும்பங்கள் நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருப்பதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் பலவந்தமாக விகாரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் பலர் கடந்த போயா தினத்தின்போது இரத்மலானையிலுள்ள பௌத்த விகாரையொன்றுக்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இரத்மலானை ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்களே அவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தொழில் வழங்குவதாகக் கூறி பெரும் நாடகத்தையே ஆடி, அதன் மூலம் தமிழ் வர்த்தகர்களை தன் கைக்குள் போட்டுக் கொண்ட ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலை வலையமைப்பின் தலைவர் சுதத் தேவபுரவே அதற்கான சூத்திரதாரி என்று தெரிய வருகின்றது.

ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையே இனத்துவேசத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் என்று பரவலாகத் தெரிந்துள்ள நிலையில், அவரது பலவந்தப்படுத்திய பௌத்த வழிபாடானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பானது என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தமிழ், முஸ்லிம்களின் கையில் இலங்கையின் ஆடை உற்பத்தித்துறை இருப்பதை கையகப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆசியுடன் ஆடைத் தொழிற்சாலைத் துறையில் குதித்தவர்தான் சுதத் தேவபுர.

அதன்பின் அகில இலங்கை பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மதத்தின் தீவிரப் போக்குக் கொண்ட அமைப்புக்களில் முக்கிய பதவிகளுக்கு தன் குடும்ப அங்கத்தினர்களை அமர்த்தும் அளவுக்கு அவர் செல்வாக்கானவராக மாறினார்.

அதன் காரணமாக பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளுடனும் நல்லுறவைப் பேணிக் கொண்டு தமிழ், சிங்கள மக்களுக்கு எதிரான துவேசப் போக்குகளை வெளிப்படுத்தி வருவதில் முன்னின்ற அவர், இலங்கையில் சந்திக்குச் சந்தி புத்தர் சிலைகளை அமைக்கும் கலாசாரத்தின் முன்னோடியும் ஆவார்.

கிழக்கு விடுவிக்கப்பட்ட கையுடன் அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பு என்ற போர்வையில் மில்லியன் கணக்கிலான அரச வங்கிகளின் கடனுதவி மற்றும் அரசாங்கத்தின் சலுகைகள் என்பவற்றைப் பயன்படுத்தி திருமலையின் தம்பலகாமம் பகுதியில் தமிழரின் நிலம் கபளீகரம் செய்யப்பட்டு கிழக்கிலங்கையின் முதலாவது ட்ரை ஸ்டார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

அதற்கு சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தின் உயரத்தைவிட உயரமான இடமொன்றில் புத்தர் சிலையொன்றை நிறுவும் யோசனையொன்றையும் அவர் அக்காலத்தில் ஜனாதிபதியிடம் முன் வைத்திருந்தார். ஆயினும் குறித்த திட்டத்திற்கு சில முக்கியஸ்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் அது ஏற்கப்படவில்லை.

முறிகண்டியில் பௌத்த சிலை அமைப்பதற்கான முழு ஒத்தாசையும் வழங்கியவரும் அவர்தான். இப்படியான இனத்துவேச வரலாறு கொண்ட சுதத் தேவபுரவின் ஆடைத் தொழிற்சாலையின் உற்பத்திகளை தமிழர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், வெளிநாடுகளில் தனக்கான கூடிய சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் அவர் ஆடிய நாடகம்தான் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு ட்ரை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலை வேலை வாய்ப்பு நாடகமாகும்.

அதனை வைத்து தற்போதைக்கு பல நாடுகளில் அவரது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் வட-கிழக்கின் பெரும் பரப்பளவிலான காணிகளும் அவரது கம்பெனிக்கு வெகுமதியாக கிடைக்கவுள்ளன என்றும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளம் காரணமாக பாராளுமன்றத்திற்கு இரண்டு கோடி நஷ்டம்

கொழும்பில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

அதற்கு மேலதிகமாக பாராளுமன்றத்தின் சூழலில் பொருத்தப்பட்டிருந்த பல கருவிகள் பலத்த சேதத்துக்குள்ளாகியிருப்பதுடன், அவற்றைப் பழுது பார்க்கும்  சாத்தியம் குறித்து இன்னும் எதுவும் கூற முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 16-ம் திகதி பாராளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்பாக  சேதங்களைப் புனரமைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அத்துடன் சகதி படிந்துள்ள பாராளுமன்றச் சூழலை சுத்தப்படுத்த விசேட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்வதே தீர்வுக்கு வழி : பேராசிரியர் சிற்றம்பலம் சாட்சியம்!

வடக்கு கிழக்குத் தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்வதன் மூலமே இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று வாழ்நாள் பேராசிரியரும், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

யாழ். செயலகத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு முன் பேராசிரியர் சிற்றம்பலம், பேராசிரியர் ரத்தினஜீவன் கூல், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  ஆகியோர் நேற்று சாட்சியம் அளித்தனர்.

பேராசிரியர் சிற்றம்பலத்தின் காரசாரமான சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மத்தியில் தேசிய இனத்துடன் அதிகாரப் பரவலாக்கி மாநிலத்தில் சுயாட்சிகொண்ட சமஷ்டி அரசமைப்பை உருவாக்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண முடியும்.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசமைப்புக்கள் மூலம் எல்லா நன்மைகளையும் சிங்கள மக்கள் மட்டுமே அனுபவித்தனர். ஆனால் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தமது அபிலாஷைகளை எட்டாத நிலையில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டனர்.

1987-ல் செய்து கொள்ளப்பட்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை அரசமைப்பில் உறுதி செய்து கொண்டு வரப்படும் தீர்வு மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றார் அவர்.

பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வாக அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதான நியாயமான தீர்வொன்றை அரசாங்கம் முன் வைக்க வேண்டும் என்பதுடன் அதற்கு காலம் தாழ்த்தவும் கூடாது” என்று பேராசிரியர் ரத்தினஜீவன் கூல் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு சாட்சியமளித்த பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க சென்றிருந்த போதும் நேரமின்மை காரணமாக நேற்று அவரது சாட்சியம் பதியப்படவில்லை. அவர் இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.

பெரும்பாலும் அவர் அரசாங்கம் ஏற்கெனவே தயாரித்துக் கொடுத்த அறிக்கையை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர் போன்று அரசுக்கு சார்பான முறையில் சாட்சியமளிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் அல்லது ரூபவாஹினியில் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனப்படும் வேர்க்கிங் டிரெக்டர் பதவிக்கு தற்போது தயா மாஸ்டர் பெயர் அடிபடுகின்றது. மிக விரைவில் அவருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தவுடன் அவர் அப்பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.

மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படலாம்: யாழில் சி.வி.கே. சாட்சியம்

யுத்தம் முடிவடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் வருவதை எவராலும் தடுக்கமுடியாது என நல்லிணக்க ஆணைக் குழு முன் சி.வி.கே.சிவஞானம் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்; நல்லிணக்க ஆணைக் குழுவின் சாட்சிய பதிவுகள் இன்று மாலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம் பெற்றன. இதன்போது பலரும் சாட்சியமளித்தனர். அத்துடன்,  அமெரிக்க தூதரக அதிகாரியும் பார்வையாளராக இருந்தார் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன்கூல், பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் மாநகர ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் போன்றோர் சாட்சியமளித்தனர்.

இதன்போது கருத்துரைத்த ராஜன் கூல், தாம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டதும் பின்னர் அதற்கு எதிராக நடந்த விடயங்களையும் எடுத்துரைத்தார்

நோர்வே ஏற்பாட்டிலான பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பக்கசார்பான விடயங்கள் இடம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பாலசுந்தரம்பிள்ளையும், சிற்றம்பலமும் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை பற்றி பேசினர்

சி.வி.கே.சிவஞானம் கருத்துரைக்கையில் யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் தமிழ் மக்கள் அபிலாசைகள் முடிவு பெறவில்லை. சாத்வீக வழியில் அதனை பெற்றுக் கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வருவதை எவராலும் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டார்

அடிப்படையான கட்டுமானப் பணிகளை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முடிவை எட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

உதயன் பத்திரிகையின் ஆசிரியர் கானமயில்நாதன் சாட்சியமளித்தார். அவர் கடந்த காலத்தில் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை உட்பட்ட ஊடகங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஆணைக் குழுவின் முன்னால் தெரிவித்தார்.

யாழ்ப்பாண செயலகத்தில் இடம் பெற்ற சாட்சிய நிகழ்வை அடுத்து குருநகரில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அங்கு பலர் சாட்சியமளித்தனர்.

அனைவருமே தமது உறவுகள் காணாமல் போனமையும் கைது செய்யப்பட்டமையும் அதன் பின்னர் காணாமல் போனமையும் மற்றும் கடத்தப்பட்டமையும் குறித்த முறைப்பாடுகளை சாட்சியங்களாக தெரிவித்தனர்

இதேவேளை இன்றைய சாட்சிய நிகழ்வின் அமெரிக்க தூதரகத்தின் செயலக மட்ட அதிகாரி ஒருவரும் தூதரகத்தின் தமிழ் அதிகாரியான பத்மினியும் பார்வையாளர்களாக பங்கேற்றமை முக்கிய அம்சமாக இருந்தது.

7 கோடி ரூபா வங்கிக் கொள்ளை - இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய்களுக்குத் தொடர்பு

ஏழு கோடி ரூபா வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்களுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எச்.எஸ்.பி.சீ வங்கியின் டெலர் இயந்திரங்களுக்கு பணம் போடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஏழு கோடி ரூபா பணம் களனி பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் எனவும், இன்னும் இரண்டு பேரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவினர் கொள்ளை, கொலை மற்றும் கப்பம் பெறல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

விசேட அதிரடிப் படையினரால் ஐந்து பொதுமக்கள் மன்னாரில் கைது

விசேட அதிரடிப் படையினர், மன்னாரில் கடந்த வியாழக்கிழமையன்று பிற்பகல் 3 மணியளவில் ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

இவர்களில் இருவர் குடும்பஸ்தர்கள். மூவர் இளைஞர்களாவர். இவர்கள் ஐவரும் மன்னார் பேசாலை பிரதேசத்தில் வைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தியா அருள்சீலன் மிரிந்தா, செபஸ்டியன் சீலன் குரூஸ், செபஸ்டியன் ஜெனிபர் குரூஸ், சேவியர் பெனோ பென்டியோ மற்றும் சந்தியாகோ மாசன்ட் குரூஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இந்த நிலையில் இவர்கள் ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அவர்களின் வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ். அரச அதிபரின் செயற்பாடுகள், தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பை குறைத்துள்ளது

யாழ்ப்பாணத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழு மேற்கொண்டு வரும் சாட்சியங்களின்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் பார்வையாளராக சமுகம் அளிப்பது சாட்சியாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

தமது கடமைகளை விட்டுவிட்டு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் நல்லிணக்க சாட்சியங்களில் பங்கேற்று வருகின்றார். அத்துடன் நல்லிணக்க குழுவுக்காக பரிந்து பேசும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

எனவே நல்லிணக்கக் குழு முன்னிலையில் தமது ஆதங்கத்தை தெரிவிக்க வேண்டும் என வருகின்றவர்கள்கூட, சில விடயங்களை தெரிவிக்காமல் விடுவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக் குழுவின் சாட்சியங்களின் போது அங்குள்ள அரசாங்க அதிபர்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என யாழ்ப்பாண செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்துடன், அண்மையில் இமெல்டா சுகுமார், கொழும்பில் வைத்து நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் அளித்த சாட்சியங்களும் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

யுத்தக் காலத்தில் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மதிப்பை அந்த சாட்சியம் குறைத்து விட்டதாகவே கருதப்படுகிறது.

ஈழத்துச் செய்திகள் : 01-11-2010

02-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கில் வசித்து வரும் மூன்று புலி ஆதரவாளர்கள் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய மனோகரன், பொன்னம்பலம், தம்பையா ஆகியோரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.  இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டென்மார்க் சட்டத்தரணி ஜோன் எல்ம்க்யூட்ஸ் என்பரிவினால் புலி ஆதரவாளர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
வழக்கு விசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் 111 நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், அனைத்துலக நீதிமன்ற பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  வழக்குத் தொடர்ந்த குறித்த புலி ஆதரவாளர்கள் மாதாந்தம் ஒரு லட்சம் யூரோக்களை புலிகளுக்காக திரட்டியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாண நூலக அத்துமீறிய செயலுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு தொடர்பில்லை : அரச ஊடகங்கள் பரப்புரை..!

யாழ்ப்பாண பொது நூலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை என அரசாங்க பத்திரிகைகளான தினகரன் மற்றும் சண்டே ஒப்சேவர் ஆகியவற்றில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் நுழைந்த ஜனாதிபதி செயலத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர், அங்கு முறைகேடாக செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.  எனினும் இது தொடர்பில் காவற்துறையினர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வாறான சம்பவம் ஒன்று அங்கு நடைபெறவில்லை என தெரிவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் திட்டமிட்ட குற்றச்சாட்டு எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை பொது நூலகம் மீதான வன்முறையை பிரயோகிக்க அரசாங்கம் துணை போகாது எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இந்த அறிக்கை உள்நாட்டின் வேறு எந்த பத்திரிகையிலும் வரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு

பல்கலைக்கழக மாணவர் பிரச்சினை தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் நடவடிக்கைகளுக்கு ஆளும் கூட்டணி அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் செயற்படும்விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சருக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவர் போராட்டங்களில் ஈடுபட்ட பல மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிப்பதன் மூலமோ சிறையில் அடைப்பதன் மூலமோ எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களை அரசியலிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுவதனை ஏற்றுக் கொள்ள முடியாதென கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

திருகோணமலையில் முஸ்லிம் குடியிருப்புகள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தீ வைப்பு

திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் ஏழை மக்கள் குடியிருந்த சுமார் 50 குடிசைகளை இன்று காலை பாதுகாப்புத் தரப்பினர் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிகிறது.

குறித்த காணிகளில் குடியிருந்தவர்களுக்கு அவற்றின் அனுமதிப் பத்திரம் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், அதன் காரணமாகவே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த காணிகளில் ஏழை முஸ்லிம்கள் சிலர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுடன், அப்பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் மூலமாக உறுதிப்படுத்தவும் முடியுமென்று தெரிவிக்கும் கிண்ணியா பிரதேச செயலக அதிகாரியொருவர், திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் குடியிருப்புகளைச் சுற்றிலும் சிங்களக் கிராமங்களை உருவாக்கும் அரசின் இரகசிய செயற்திட்டத்துக்கு அமைவாகவே பிரஸ்தாப தீ வைப்புச் சம்பவம் இடம்  பெற்றுள்ளதாக கூறுகின்றார்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களின் காணிகளைப் பறித்தெடுக்கும் சதித்திட்டங்களின் ஓரு அங்கமாகவே பிரஸ்தாப தீ வைப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டும் சமூக சேவையாளர் ஒருவர், தீ வைக்கப்பட்ட குடியிருப்புக்கள் சட்ட விரோத காணிகளில் அமைக்கப்பட்டிருந்தால்கூட அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

அதற்குப் பதிலாக அப்பாவி ஏழை மக்களின் உடைமைகளையும் சேர்த்து குடிசைகளுக்குத் தீ வைத்திருப்பதன் பின்னணியில் பலமான சதித்திட்டம் ஒன்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அவர், பெரும்பாலும் அந்த இடங்களில் விமானப் படையினருக்கான வீடமைப்புத் திட்டமொன்று மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

ஏனெனில் இன்றைய தீ வைப்புச் சம்பவத்தின் போது வழக்கத்துக்கு மாறாக பொலிசாருடன் விமானப் படையினரும் இணைந்து தீ வைப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றதாகவும் குறித்த சமூக சேவையாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், இன்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இன்று காலை நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்த மக்கள் வெளியேறிய பின், சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்க அதிபரின் அனுமதியுடன் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களே இவ்வாறு பொலிஸாரால் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மீளக்குடியேறிய மக்களின் 20-ற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் முற்றுமுழுதாக நாசமாக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வளாகத்தில் நட்சத்திர விடுதி கட்டக்கூடாது - பேராசிரியர் சிற்றம்பலம் கோரிக்கை..!

“தமிழர்களின் இனத்துவ அடையாளங்களைப் பறிக்கும் ஈனச் செயலிற்கு தமிழினத்தைச் சேர்ந்த சில புல்லுருவிகளும் பண முதலைகளும் துணை போகின்றார்கள். இவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை” என பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் சுட்டிக் காட்டியுள்ளார். நல்லூர் ஆலயச் சுற்றாடலில் நட்சத்திர விடுதி அமைப்பது தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “யாழ் மாவட்டத்தில் நட்சத்திர விடுதியொன்றை அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் அது நல்லூர் ஆலயச் சுற்றாடலில் அமையக்கூடாது. போர்துக்கீசர் இலங்கைக்கு வந்த காலப் பகுதியில் இலங்கையில் இருந்த மூன்று அரசுகளில் யாழ்ப்பாண அரசும் ஒன்று. இதன் ராசதானி நல்லூரிலேயே அமைந்திருந்தது.

தற்போது விடுதி அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் யாழ்ப்பாண அரசின் அரச காரியங்கள் பலவும் நடைபெற்ற ஓரு பகுதி. எனவே இந்த இடம் தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு இடமாகும். இதனாலேயே இந்த இடத்தில் அமைக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

உன்மையில் அரசாங்கம் சிங்கள மன்னர்களினதும் பாரம்பரியங்களினதும் தொல்பொருட்களை எப்படிப் பாதுகாக்கின்றதோ அப்படி எமது சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும்.  ஆனால் மாறாக எங்கள் அடையாளங்களை சிதைக்கின்ற செயற்பாடுகளையே செய்கின்றனர். அதற்கு இங்குள்ள சில புல்லுருவிகளும் துணை போகின்றார்கள். இது வேதனைக்குரியது” என்றார்.

போர் முடிவுற்றாலும் அரசாங்கம் கடன் பெறுவதனை நிறுத்தவில்லை : ஐ.தே.க  குற்றச்சாட்டு!

போர் நிறைவடைந்துள்ளபோதிலும் அரசாங்கம் கடன் பெறுவதனை நிறுத்தவில்லை எனவும், அதிகளவான வட்டிக்கு அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்றுக் கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கடன் மீளச் செலுத்தப்படும்போது அதிகளவான சுமையை மக்கள் சுமக்க நேரிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதனை விடவும், அவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் மன்னிப்பு கோர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்ற அமைச்சர்கள், கிழக்கில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) மன்னிப்பு கோர வேண்டுமென பிள்ளையான் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் மௌனம் காத்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரை நகர் கடற்கரைக்கான புதிய வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது

கசூரினா கடற்கரை என்றழைக்கப்படும் காரை நகர் கடற்கரைக்கான புதிய வீதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரால் குறித்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முற்று முழுதாக கொங்கிறீட்டினாலான பிரஸ்தாப புதிய வீதி அரைக் கிலோ மீற்றரை அண்மித்த தூரமும், சுமார் 30 அடிகள் அகலமும் கொண்டது என்று தெரிய வருகின்றது.

வீதி நிர்மாண வேலைகளுக்கென 20 மில்லியன் செலவிடப்பட்டிருந்ததுடன், நிர்மாணப் பணிகளின்போது பொதுமக்களின் பங்களிப்பும் பெறப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீதியின் நிர்மாணம் தொடர்பான சிந்தனையை முதலில் முன் வைத்தவர் காரை நகர் பிரதேச சபையின் செயலாளராகவிருந்து காலம் சென்ற சிவஞானம் என்பவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா - இந்தோனேசியா பேச்சு

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிள்ளார்ட்கும், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோ ஆகியோர் இன்று காலை பேச்சு நடத்தியுள்ளனர்.

ஆசிய பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜுலியா கிள்ளர்ட், இன்று இந்தோனேசிய சென்று அவரை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்து பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு திமோரில் அகதிகளை பராமரிக்கும் மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் பேசப்பட்டதாக ஏ.பி.சி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே அவுஸ்திரேலியா பிராந்திய ஒத்துழைப்பு குறித்த பிரேரனை ஒன்றை முன்வைத்துள்ளது.

எனினும் இதற்கு கிழக்கு திமோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இதற்கு இந்தோனேசியாவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை இந்தோனேசியாவிலேயே தடுத்து நிறுத்தும் வகையிலான முயற்சிகள் இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பிலான உள்ளடக்கங்களை முழுமையாக அறியாதவரையில் அவுஸ்திரேலியாவின் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மலேசியா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு விளக்க மறியற் சாலையில் தமிழ் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

கொழும்பு விளக்க மறியற் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார்.

விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த 42 வயதுடைய குணரெட்ணம் மனோகரன் என்பவரே தன்னை விடுதலை செய்யக் கோரி இன்று காலை 7 மணி தொடக்கம் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள கைதியின் கோரிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கடந்த 26.10.2008-ம் திகதி அன்று விசுவமடு முல்லைத்தீவில் வைத்து பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்க மறியற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தான் பல தடவைகள் தனது விடுதலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்தும் ஆனால் இதுவரை தனது விடுதலை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து விளக்க மறியற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,

அதே நேரம் தனது மூன்று குழந்தைகளும் மனைவியும் விசுவமடு 12-ம் கட்டை புணர்வாழ்வு முகாமில் உள்ளதாகவும் இவர்களைப் பராமரிப்பதற்கும் பிள்ளைகளைப் படிப்பிற்பதற்கும் தனது மனைவியால் முடியாமல் இருப்பதாகவும் இதனால் தன்னை விடுதலை செய்து தனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைவதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.  தனது இந்த கோரிக்கை நிறைவேறும்வரை தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடரப் போவதாகவும் அந்த கோரிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரின் மனைவி மேரி லூசியா வயது 37, குழந்தைகள் மெரிசலா(பெண்) வயது-10, திரிசலா(பெண்) வயது-8, நிர்மலன்(ஆண்) வயது-2 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலையில்லாப் பட்டதாரிகள், வெய்ட்டர் பணிகளை செய்தாலும் தவறில்லை : அமைச்சர் திஸ்ஸாநாயக்கா பேச்சு.. 

“வேலையில்லாப் பட்டதாரிகள் வெய்ட்டர் பணிகளை செய்தாலும் தவறில்லை. நாட்டுக்கும் வீட்டுக்கும் சுமையாக இருப்பதனை விடவும் ஹோட்டல் ஒன்றில் வெய்ட்டராக கடமையாற்றுவது எவ்வளவோ மேல்..” என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொழில் கிடைக்கும்வரையில் ஏதாவது ஓர் தொழிலில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில வேளைகளில் ஹோட்டல்களில் வெய்ட்டர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் வெளிநாடுகளில் பட்டதாரிகள் பணியாற்றுவதாகவும் அதனை அவர்கள் இழிவாக கருதவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தராதரம் பாராது தமக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பட்டதாரிகள் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடு சென்று கூலி வேலைகள், பத்திரிகை விநியோகம் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலைவாசி உயர்வை எதிர்த்து ஜே.வி.பி. நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்  நடத்தியது.

விலைவாசி உயர்வு, அரசின் அதிகூடிய வரி விதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக ஜே.வி.பி. நேற்று கொழும்பு மெனிங் மார்க்கட் பகுதியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.

நாடு தழுவிய ரீதியில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளன என ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  கொழும்பு மெனிங் மார்க்கட்டில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆட்சியின் கீழ் நாட்டில் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதோடு, வரி விதிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2005-ம் ஆண்டில் நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரசு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியது.
அதாவது, தற்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது. பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக எதுவும் செய்ய முடியாது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் விலை குறைக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கைச் செலவு, வரி விதிப்புகள் ஆகியவை குறைக்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.  ஆனால், ஜனாதிபதி மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

யுத்தம் நடைபெற்றதால் அனைத்துச் சுமைகளையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். தற்போது பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட முடியாது என அன்று அரசு வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் ஏற்றனர்.  ஆனால், யுத்தம் நிறைவடைந்து 17 மாதங்கள் கழிந்தும் மக்களின் வாழ்க்கைச் செலவு இதுவரை குறைவடையவில்லை.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 46.6 வீதமானோரின் நாளாந்த வருமானம் இரண்டு அமெரிக்க டொலர்களுக்கும் குறைவு. அது மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகளில் 29.4 சதவீதமானவர்கள் நிறை குறைந்தவர்கள்.

குறைந்த வருமானம் பெறுபவர்களில் 20 சதவீதமானவர்களுள் தேசிய வருமானத்தில் 4.6 சதவீதம் வருமானத்தையே பெறுகின்றனர். இதனால் மூன்று நேர உணவு உண்ண வேண்டியவர்கள் உணவு வேளையை இரண்டு நேரமாகக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, நாட்டில் தற்போது காணப்படும் பொருட்களின் விலை உயர்வு, வரி விதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.

இப்படி அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் குழுவை புறக்கணிக்கும் போராட்டம்

எதிர்வரும் நவம்பர் 03-ம் திகதி முதல் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான நடைபெறும் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் பங்கெடுக்குமாறு ”தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள்”  எனும் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு அனைவரும் சமூகம் கொடுக்குமாறு தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் சார்பில் சூ பொல்ட்டன் அவர்கள் ஊடக அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.  இப்போராட்டத்திற்கு பல இடதுசாரி அமைப்புக்களும், தமிழ் அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

இம்மின்னஞ்சல் ஊடாக தாங்களும் உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.  இந்நிகழ்வு சம்பநதமான விளம்பரமும், ஊடக அறிக்கையும் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஓர் பகிஷ்கரிப்பு போராட்டம் சிட்னியிலும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி "Voice of Tamils" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு போராட்ட நிகழ்வுகளிற்கும் மெல்பேர்ன், சிட்னி வாழ் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு ஏற்பாட்டாளர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்றைய ஈழத்துச் செய்திகள்..! - 31-10-2010

01-11-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நேற்றைய ஈழத்துச் செய்திகளில் முக்கியமானவற்றைத் தொகுத்து தந்துள்ளேன். ச்சும்மா படித்துப் பாருங்கள்..! ஈழத்துத் தமிழையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்..!

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் அடாவடித்தனம் : யாழ்  அதிகாரி உடனடி இடமாற்றம்

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத யாழ் சிவில் நிர்வாக படை அதிகாரி ஒருவர் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


அண்மையில் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளால் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த வேளை அடாவடித்தனத்தில் ஈடுபட்டமையை அடுத்து அங்கு ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து யாழ் சிவில் நிர்வாக அலுவலரான மேஜர் பண்டார பலாலி படைத் தலைமையக அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படி கொழும்பு பகுதிக்கு இடமாற்றம் அசய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது படை அதிகாரிகளுக்கிடையிலான பழிவாங்கல் நடவடிக்கையென விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதே வேளை கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கைப் பயணிகள் யாழ் பொது நூலகத்தைப் பார்வையிடுவதற்காக வாகனங்களில் வந்திற்ங்கியபோதும் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அங்கு வந்த ஒரு சிலர் பொது நூலகத்திற்கு முன்பாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
 
விஷயம் வேறொன்றுமில்லை. கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்குச் சில சிங்களவர்கள் சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் மாலை நேரத்தில் யாழ்ப்பாண நூலகத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்த நேரம் பார்வையாளர் நேரம் முடிவுற்றதால் அவர்களை உள்ளேவிட காவலாளி அனுமதிக்கவில்லை.

"எங்களையா உள்ள விட மாட்டேன்ற..?" என்று கோபப்பட்ட சிங்கள சுற்றுலாப் பயணிகள் வலுக்கட்டாயமாக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை எடுத்துக் கீழே வீசியிருக்கிறார்கள். அலமாரிகளை அப்படியே கவிழ்த்துக் குப்புறப் போட்டிருக்கிறார்கள். கைக்கு கிடைத்த புத்தகங்களை எடுத்துத் தாறுமாறாக வீசியிருக்கிறார்கள். தாங்கள் வந்து சென்றதை இப்படி நிலை நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.
 
காவல்துறை, ராணுவம் என்று சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லியும் இந்தக் களேபரம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வாரம் கழித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு யாழ்ப்பாணப் பகுதிக்குப் பொறுப்பான இந்த மேஜரை தண்ணியில்லாத காட்டுக்குத் தூக்கியிருக்கிறார்கள் நம்மூர் போலவே..!
 
தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பது உறுதியாகிறது : சுரேஸ் பிரேமச்சந்திரன் வருத்தம்

யாழ். நூலகத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற சம்பவம் படித்த, நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள்தான் என்பதனை அரசாஙகம் நிரூபித்துவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
 
கடந்த வாரம் யாழ் நூலகத்துக்குள் நுழைந்த தென்னிலங்கைச் சிங்களச் சுற்றுலாப் பயணிகள் அறிவித்தலை மீறி நூலகத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த புத்தக ராக்கைகளை கீழே தள்ளிவிட்டுப் புத்தகங்களையும் வீசிய சம்பவம் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது :
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டதன் பின்னர் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் புதுவித கருத்தொன்று இன்று தோன்றியுள்ளது. தாங்கள் எங்கும் செல்லலாம் எதனையும் செய்யலாம். யாரும் ஏன் எதற்கு என்று எதனையும் கேட்க முடியாது. தாம் எப்படி நடந்து கொண்டாலும் அதற்கு இலங்கை அரசின் படைத்தரப்பு பாதுகாப்புத் தர வேண்டுமென்ற எண்ணத்திலேயே. இவர்கள் இன்று உள்ளனர். விரும்பத்தகாத குறிப்பிட்ட சம்பவத்தை ஆராயும்போதுகூட இதுவே புலப்படுகிறது.

யாழ் நூலகமென்பது கற்றலுக்கானதொரு இடம். அங்கு செல்பவர்கள் அமைதியான முறையில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அங்கு ஒரு நிகழ்வு நடக்குமானால் அதனைக் குழப்புவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்தோ அல்லது வெள்ளை மாளிகையிலிருந்தோ எவரும் வர முடியும். ஆனால், நாட்டின் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானதே. ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகிறேன் என்னை உள்ளே அனுமதியுங்கள் என்று ஒருவர் கேட்டால் அவரை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. ஆனால், அவருக்கு அடிபணிந்து இராணுவமும், பொலிஸாரும் செயற்படுவது கண்டித்தக்க விடயம்.
 
அநுராதபுரத்துக்கும் பொலநறுவைக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் சென்று இவ்வாறு நடந்து கொள்ள முடியுமா? அவ்வாறு நடந்து கொண்டால் நிலைமை என்னவாகும்? இங்குள்ள காணிகளில் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தோம் என்று கூறினால் அது கிடைக்குமா.. அல்லது இதனை அரசாங்கம்தான் ஏற்றுக் கொள்ளுமா?
 
யாழ். ரயில்வே நிலையத்தில் சுமார் 150 சிங்கள மக்கள் தங்கியுள்ளனர். தாம் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் இங்கு வாழ்ந்ததாக இவர்கள் கூறுகின்றனர். இருந்திருக்கலாம்.
 
நாம் இல்லையென்று மறுக்கவில்லை. இப்போது அவர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கொழும்பிலிருந்து அமைச்சர் வந்து அவர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார். கொழும்பிலிருந்து அவர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுகிறது.
 
ஆனால், இருபது முப்பது வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே உள்ளனர். அவர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு இந்த நாட்டில் அமைச்சர்களும் இல்லை. அதிகாரிகளும் இல்லை.
 
இதேபோன்று கிழக்கு மாகாணத்தின் தூர், சம்பூர் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களையாவது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் அக்கறை இந்த அரசாங்கத்துக்கு இல்லை. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்துக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஒன்றுக்குப் பத்து மடங்கான உதவிகளும் ஒத்தாசைகளும் பாதுகாப்புகளும் வழங்கப்படுகின்றன.
 
ஆனால், தமிழ் மக்கள் என்றால் அவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் நோக்கப்படுகின்றனர். பயறுத்தி அவர்களை அடக்கும் முயற்சிகளே இடம் பெறுகின்றன.
 
வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் செய்யும் சிங்கள மக்கள் இந்த மனோபாவத்தைக் கைவிட வேண்டும். அதனையும் மீறி இவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைளில் ஈடுபட்டால் அவர்கள் தண்டிக்கப்பட்டவேண்டும். இதனை விட்டுவிட்டு அவர்களைப் பாதுகாப்பதும், கௌரவிப்பதும் ஓர் அநாகரிகமான செயல்.
 
இதேவேளை, அரசாங்கம் கூறும் இன நல்லிணக்கம் என்பது கிட்டவே நெருங்கி வர முடியாத ஒன்று என்பதும் இந்தச் சம்பவங்கள் மூலம் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
 
நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு 257 சிங்களவர் தெரிவு! தமிழ் மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை

இலங்கை நிர்வாக சேவை 2009-ம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகப் பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் 257 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் தமிழ் மொழி மூலம் எவருமே தெரிவு செய்யப்படவில்லை.
 

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நுழைவாயில் அறிவித்தல் பலகையில் எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
இதில் இலங்கை நிர்வாக சேவை 2009-ம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சையின் எழுத்துப் பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்க தகுதியுடையோரென 257 பேரது பெயர், விபரம், சுட்டிலக்கம், பரீட்சைக்கு தோற்றிய மொழி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த 257 பேரில் தமிழ் மொழி மூலம் தோற்றிய ஒருவரேனும் இல்லையெனத் தெரிவிக்கப்படுவதுடன், இது குறித்து தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
 
பரீட்சைகள் திணைக்களமே மேற்படி எழுத்துப் பரீட்சையை நடத்தியுள்ளது. சிங்கள மொழி மூலம் தோற்றியோரில் 257 பேரே அடுத்த நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த வருடமும் இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தெரிவான 32 பேரும் தற்போது உள்ளகப் பயிற்சியை பெற்று வருகின்றனர். இதில்கூட 32 பேரும் சிங்கள மொழி மூலம் தெரிவானவர்களேயாவர்.
 
தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய எவருமே தெரிவாகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றாகவே நடத்தப்படுவதாகவும், ஈழம் என்றொரு தேசம் உருவாக வேண்டிய அவசியமி்ல்லையென்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு இணையாகவே நடத்தப்படுவதாகவும் ரீல் மேல் ரீல் ஓட்டிக் கொண்டிருக்கும் சிங்களவர்களுக்கு ஜால்ரா போடும் தமிழகத்து மகா ஜனங்கள் இதனைப் படித்தாவது அங்கே உள்ள உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இது எதனைக் காட்டுகிறது எனில் இனி வரும்காலங்களில் அரசு அலுவலகங்களில் தமிழ் பேசக்கூடிய ஒருவர்கூட இல்லாத நிலைமையை உருவாக்கி, ஆட்சி மொழியில் சிங்களத்தை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழை குப்பைத் தொட்டியில் வீசப் போகிறார்கள். இதற்கான முன்னோட்டமாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்..!
 
அரசு அலுவலகங்களில் மொழியைத் தடை செய்தாலே போதுமே.. அந்த அலுவலகத்திற்கு அந்த மொழி பேசும் மக்கள் போகவே முடியாதே. போனாலும் பிரயோசனமில்லை என்ற நிலைமைதான் இருக்கப் போகிறது..!
 
தனது சிங்கள அரசின் நீண்ட நாளைய நிம்மதியை மனதில் கொண்டு நன்கு திட்டமிட்டு எதிர்காலத்தையும் மனதில் வைத்திருந்து ஆட்சி செய்யும் நவீன ஹிட்லர்தான் மஹிந்த ராஜபக்சே என்பதில் சந்தேகமில்லை.
 
சிங்களவர்கள் உட்பட்ட 72 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் தென் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் உட்பட்ட 72 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் தென் பகுதி மாணவர்கள் எவரும், சிரேஷ்ட மாணவர்களினால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
30 வருட கால இடைவெளிக்குப் பின்னர் அதிக அளவிலான தென் பகுதி மக்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தென் பகுதி மாணவர்கள் பெரும்பாலும் மருத்துவம், சட்டம், முகாமைத்துவ பீடங்களுக்காகவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
இதேவேளை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கும் இந்த முறை வர்ததக, முகாமைத்துவ பீடங்களுக்கு அதிக சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
வடக்கு மாகாண நிர்வாகம் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்படுகிறது!

வட மாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகளை திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்தில் மாற்றுவதற்கு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
தற்போது வடக்கில் மாகாண சபை இல்லாதபோதும், வடமாகாண நிர்வாக நடவடிக்கைகள் யாவும் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
எனினும் அதனை கிளிநொச்சி மாவட்டத்துக்கு மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி முன்னெடுத்து வருகிறார். எனினும் இந்த முயற்சிக்கு ஜனாதிபதி உள்ளிட்ட உயர் மட்டத்தினரிடம் விருப்பம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் வடக்கின் பிரதான நகரமாக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
 
இதற்கிடையில் அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை அடுத்து அங்கு கட்டாயமாக மாகாண சபையை நிறுவ வேண்டிய தேவை ஏற்படும்.
 
எனவே அதனை திருகோணமலையில் தொடர்ந்து நடத்த முடியாது என்ற அடிப்படையில் இதனை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற அரசாங்க தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் எம்.பி. பதவியை பறிக்க முடியாது! ரணில்  பேச்சு..!

உலகில் ஜனநாயக நாடாளுமன்ற முறை நடைமுறையிலுள்ள நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இராணுவ நீதிமன்றத் தீர்ப்பினால் பறிக்கப்பட்டதில்லை என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் தான் மேற்கொண்ட விஜயத்தின்போது அறிந்து கொண்ட விடயங்கள் குறித்து  நேற்று முன் தினம் பன்னல போப்பிட்டி விகாரையில் நடைபெற்ற பூஜையின்போது ரணில் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:
 
சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இந்தத் தண்டனை வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்தேன். இதுபோன்ற சிறைத்தண்டனை மூலம் அவரது நாடாளுமன்ற எம்.பி பதவியைப் பறிக்க முடியாதெனவும் கூறியிருந்தேன்.
 
பிரிட்டனிலுள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தில் பொதுநலவாய அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக நாடுகளின் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருள்ளனர். சுமார் ஜம்பது நாடுகளின் பிரதிநிதித்துவம் அதிலுள்ளது.
 
எனது பிரிட்டிஷ் விஜயத்தின்போது நான் அந்த சங்கத்துக்கும் சென்றிருந்தேன். இராணுவ நீதிமன்றமொன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு சிறைத் தண்டனை வழங்க முடியுமா என விசாரித்தேன். அவ்வாறான அதிகாரம் இல்லையென்று அவர்கள் உடனடியாகப் பதிலளித்தனர்.
 
அதேபோல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நபரொருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், அவரை இராணுவ நீதிமன்றத்துக்கு முன்னால் ஆஜர் செய்ய முடியுமா என்றும் கேட்டேன். பொதுநலவாய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் எந்தவொரு நாடாளுமன்றத்திலும் இது போன்றதொரு நிலைமை ஏற்பட்டதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
 
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவரை இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உட்படுத்த முடியாதென்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். இருந்தும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் சிவில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
இராணுவ நீதிமன்றத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது எவ்வாறென பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வியப்புத் தெரிவிக்கின்றன. 

பிரிட்டனில் எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் பொதுக் கொள்கையொன்றின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்கின்றன. 

அதன்படி அந்த இரு தரப்பினரும் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை வன்மையாகக் கண்டிக்கின்றனர்.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
புதிதாகப் படை வீரர்கள் சேர்க்கப்படவில்லை - இராணுவத் தலைமைத் தளபதி தகவல்..!

இலங்கையின் அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் இனி புதிதாக இராணுவத்துக்கு ஆட்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என இராணுவம் தெரிவத்துள்ளது. இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை இராணுவத்தில் 2 லட்சத்துக்கு 10 ஆயிரம் பேர் படை வீரர்களாக உள்ளனர்.

அவர்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய பாதுகாப்பு தேவையான அளவுக்கு மாத்திரமே இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இனிவரும் காலங்களில் புதிதாக இராணுவ வீரர்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர் தேவை ஏற்படும் பட்சத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம்

புலிகளுக்கு ஆதரவான செய்திகளையும், சிறிலங்கா அரசுக்கும், ஜனாதிபதிக்கும் எதிரான செய்திகளையும் வெளியிடுகின்ற இணையத் தளங்களை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 
இதற்கமைவாக, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலேயே அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் பல சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளன.
 
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த "லங்கா நியூஸ் வெப் இணையத் தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தடைசெய்திருந்தது.
 
புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களையும் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, அரசுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் எதிரான செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் மீது தடையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை பகிரங்கமாகவே மேற்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலவச கல்வி நிறுத்தப்பட்டால் குற்றங்கள் அதிகரிக்கும் : ஜே.வி.பி அச்சம் தெரிவிப்பு..!

இலவச கல்வி முறைமை ஒடுக்கப்பட்டால் நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கை உயர்வடையும் என ஜே.வி.பி கட்சி அறிவிவித்துள்ளது.
 

அரசாங்கம் சர்வதேச சக்திகளுடன் இணைந்து இலவச கல்வி முறைமையை இல்லாதொழிப்பதற்கு முயற்சித்து வருவதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களுக்கு அரசாங்கம் வேறும் வழியிலான அர்த்தங்களை கற்பிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இலவசக் கல்வி முறைமைக்கு குந்தகம் ஏற்பட்டால் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களைப் போன்று குற்றவாளிகளும், கல்வியறிவற்றவர்களும் உருவாக்கக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய உயர் கல்வி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக பெற்றோர் குரல் கொடுக்க வேண்டுமென சோமவன்ச வலியுறுத்தியுள்ளார்.
  
மட்டு.வாழைச்சேனையில் வெடிப் பொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பிரதேசத்திலுள்ள கிரான் தேக்கஞ்சேனை என்னுமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடி மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.


தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகலையடுத்து அங்கு சென்ற புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் அவ்விடத்தை சோதனை செய்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு மற்றும் சி.4 எனப்படும் ஒருகிலோ நிறையுடைய வெடி மருந்து பொருட்கள், ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் 183, ரி 56 ரக துப்பாக்கி மெகசீன் ஒன்று, வோக்கி டொக்கி ஒன்று என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட இந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துப் பொருட்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வெடி மருந்துப் பொருட்கள் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமப் பணியாளரைத்  தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்யாவிடில் கடையடைப்பு! வர்த்தகர்கள் எச்சரிக்கை..!

மட்டக்களப்பு செங்கலடியில் கிராம சேவை உத்தியோகத்தரை தாக்கி, அவரிடமிருந்த உத்தியோகப்பூர்வ ஆவணங்களை பறித்து கிழித்தெறிந்த ஏறாவூர்ப் பொலிஸ் கான்ஸ்டபிளை இன்றைக்குள் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்காவிடில் நாளை மாவட்டம் பூராகவும் கடையடைப்பில் ஈடுபடப் போவதாக செங்கலடி வர்த்தகர் சங்கத் தலைவர் கே. மோகன் தெரிவித்தார்.

அத்துடன், இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக அரசாங்க திணைக்கள உத்தியோகத்தர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை மாலை செங்கலடி தளவாய் கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரான கே. ஜெகநாதன் அவரது பிரிவில் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சட்ட ஆவணங்களுடன் சென்று பிரச்சினைக்குத் தீர்வு கண்டு தனது வீடு திரும்பும் வழியில் ஏறாவூர் நகர் பிரதேச சபை உறுப்பினரொருவரின் பாதுகாப்பு கடமையில் இணைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் வழிமறித்து தாக்கியதுடன் அவரிடமிருந்த சட்ட ரீதியிலான ஆவணங்களும் கிழித்தெறியப்பட்டன.
 
இது தொடர்பாக கிராம சேவகர் கே.ஜெகநாதன் ஏறாவூர்ப் பொலிஸிலும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுமில்லை. குறித்த கான்ஸ்டபிளை கைது செய்யவுமில்லை.

பொலிஸார் தமது கடமையைச் செய்ய வேண்டும் என்றும் அரச அதிகாரிகள் தமது கடமையை சுதந்திரமாக நிறைவேற்ற அனுமதிக்குமாறும் கோரியுமே இந்த கடையடைப்பு போராட்டத்தை  நடாத்தவுள்ளதாக வர்த்தகர் சங்கத் தலைவர் கே. மோகன் மேலும் தெரிவித்தார்.
 
தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
 
கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற் படையினர் பணம் மற்றும் படகில் இருந்து இறால் மீன்களை கொள்ளையடித்து சென்றனர்.


இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 23 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர், கடற்படை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவுக்கு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற் பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் படகுகளில் ஏறி அதில் இருந்த விலை உயர்ந்த இரால்களை பறித்தனர். மேலும் மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்து கொள்ளைடித்து சென்று விட்டனர். இதனால் மீனவர்கள், மீன்பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து அவர்கள் படகு உரிமையாளர்களிடம் புகார் செய்தனர். இது குறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க செயலாளர் சேசுராஜா கூறியதாவது:-

கலெக்டர் மற்றும் கடற்படை அதிகாரிகள் உறுதி அளித்ததால் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். ஆனால் இலங்கை கடற்படையினர் மீண்டும் மீனவர்களை தாக்கி, இரால் மீன்களை பறித்து சென்றுள்ளனர்.

இதனால் தலா ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டி கொடுக்கும் மீனவர்களை ஏன் அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரியவில்லை. இலங்கை கடற்படை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் அல்லது மீனவர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.