11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - டிசம்பர் 12-19

07-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தும் 11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதிவரையிலும் சென்னையில் நடக்கவிருக்கிறது..

தமிழ்ச் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள், கேமிராமேன்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோரை உறுப்பினராக்க் கொண்ட இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு முதலே இந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது..! கடந்த 5 ஆண்டுகளாக சிறந்த தமிழ்ப் படங்களுக்கான விருதுகளும், சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.. 


இந்த ஆண்டும் வரும் டிசம்பர் 12-ம் தேதி சென்னையில் தொடங்கும் இந்த 11-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா போட்டியில் பங்கேற்கும் சிறந்த தமிழ்த் திரைப்படங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..!

இதற்கான விண்ணப்பங்களை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், எண் : 4, 2-வது மாடி, இ பிளாக், ஜெமினி பார்சன் குடியிருப்பு, சென்னை-600006 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.. தொலைபேசி : 044-2821652, 044-65163866. செல் : 9840151956 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்..!

2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதிவரையிலும் சென்சார் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவையாகும்..

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களோடு போட்டியில் பங்கேற்கும் தமிழ்ப் படங்கள் ஆங்கில சப்-டைட்டில்களுடன் கூடிய 2 டிவிடிகளையும் ஒப்படைக்கப்பட வேண்டும்.. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 10.


சென்சார் சர்டிபிகேட்டுக்கான கடைசி தேதியை அக்டோபர் 30 வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நிகழ்ச்சி நடத்தும் அமைப்பிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக அதன் செயலாளர் தங்கராஜும் கூறியிருக்கிறார்.. ஆக, இந்தத் தேதியும் தள்ளிப் போனாலும் இந்த வருடத்திய சிறந்த படத்திற்கான போட்டி மிகக் கடுமையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..!

கும்கி, நீர்ப்பறவை, விஸ்வரூபம், ஹரிதாஸ், பரதேசி, சென்னையில் ஒரு நாள், சூது கவ்வும், நேரம், ஆதலால் காதல் செய்வீர், தங்கமீன்கள், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக் குட்டியும் - இவைகள்தான் முதல், இரண்டாவது மற்றும் சிறப்புப் பரிசுகளுக்குப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறேன்..!

என்னுடைய சாய்ஸ் :

முதல் பரிசு : பரதேசி

இரண்டாவது பரிசு : ஆதலால் காதல் செய்வீர்

நடுவர்களின் சிறப்புப் பரிசு : தங்கமீன்கள்

இந்தப் பரிசுத் தொகையான 1 லட்சம் என்பதே மிகக் குறைவு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார். இதனையும் பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார் செயலாளர் தங்கராஜ்..!

மேலும் இந்தாண்டு விழாவைத் துவக்கி வைக்க உலக நாயகன் கமல்ஹாசனை அழைக்க பெரும் முயற்சி எடுத்து வருவதாகக் கூறியிருக்கிறார். இது பற்றி இன்றைக்கு அவரைச் சந்தித்து உறுதி செய்யவிருப்பதாகவும் கூறினார்.. அவரையே அழையுங்கள்.. பொருத்தமாகத்தான் இருக்கும்..!

நிகழ்ச்சி சிறப்புற நடைபெற எனது வாழ்த்துகள்..!

2 comments:

kanavuthirutan said...

சார், அப்டியே ப்லிம் ஃபெஸ்டிவல் பாக்க என்ன பார்மாலிட்டி... எங்க ரிஜிஸ்டர் பண்ணனும்ணு சொன்னா... கொஞ்ச யூஸ்ஃபுல்லா இருக்கும் சார்...

பரிசுக்கான உங்களுடைய சாய்ஸும் என்னுடைய சாய்ஸும் பெரும்பாலும் ஒத்திருக்கிறது.... நன்றி...

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

சார், அப்டியே ப்லிம் ஃபெஸ்டிவல் பாக்க என்ன பார்மாலிட்டி... எங்க ரிஜிஸ்டர் பண்ணனும்ணு சொன்னா... கொஞ்ச யூஸ்ஃபுல்லா இருக்கும் சார்...

பரிசுக்கான உங்களுடைய சாய்ஸும் என்னுடைய சாய்ஸும் பெரும்பாலும் ஒத்திருக்கிறது.... நன்றி...]]]

நீங்க ஏற்கெனவே ICAF மெம்பரா இருந்தா 300 ரூபாய்தான் நுழைவுக் கட்டணம்..

இல்லைன்னா.. 500 ரூபாய் நுழைவுக் கட்டணம்..! கைல ஒரு போட்டோவோட பதிவுல இருக்கு அட்ரஸுக்கு நேரா போங்க.. பணத்தைக் கட்டினீங்கன்னா அங்கயே அடையாள அட்டை கொடுத்திருவாங்க..!