வில்லா (பீட்சா-2) - சினிமா விமர்சனம்

16-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சஸ்பென்ஸ், திரில்லர் வகை கதைகளில் பேய்க்கதைகளுக்கு தனியிடம் உண்டு.. ஒரு வீட்டில் பேய் உலவுவதாகச் சொல்லி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழிலும் உண்டு. இந்திய மொழிகளிலும் உண்டு.. கடைசியாக பேய் வீடு என்றொரு படத்தைக்கூட நான் பார்த்துத் தொலைத்தேன்..! படம் பார்த்தவர்கள்தான் பேய்களாகத் தெரிந்தார்களே தவிர.. படத்தில் பேயை கடைசிவரையிலும் காட்டவேயில்லை..!


அது போன்ற படங்கள் உப்புமாவாகி காலாவதியான சூழலில் அதே கதைக்களத்துடன் மீண்டும் வந்துள்ளார் புதுமுக இயக்குநர் தீபன். அவரளவுக்கு மிகச் சிறந்த முறையில்தான் படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் இது போன்ற படங்களுக்குத் தேவையான திகிலும், திரில்லரும்தான் போதுமான அளவு படத்தில் இல்லை..!

பீட்சாவின் வெற்றியைத் தொடர்ந்து அதே வெற்றியை எப்பாடுபட்டாவது வசூலித்துவிட துடித்திருக்கும் தயாரிப்பாளர் தரப்பு.. இதனையே பீட்சா-2-வாக பாவித்தது.. அப்படீன்னா "பீட்சா படத்தோட இரண்டாம் பாகமா?" என்று கேட்டதற்கு துவக்கத்தில், 'இல்லை'ன்னும் சொல்லலை.. 'ஆமாம்'ன்னும் சொல்ல்லை.. ஆனா படத்தோட இசை வெளியீட்டு விழா.. பிரஸ் மீட் நிகழ்ச்சிகள்லதான் "இந்தப் படத்துக்கும் அந்தப் படத்துக்கும் துளிகூட சம்பந்தமில்லை"ன்னு சொன்னாங்க.. "அப்புறம் எதுக்கு அந்த பீட்சா-2 விளம்பரம்"ன்னு கேட்டதுக்கும் பதில் இல்லை. இப்போது அதற்கான பலனை அவர்களே அனுபவிக்கிறார்கள்..!

பீட்சா லெவலுக்கு கற்பனை செஞ்சு உள்ள வந்த கூட்டம் அது போன்ற திகிலையும், பரபரப்பும் கிடைக்காமல் படத்தை பொத்தாம் பொதுவாக மவுத் டாக்கில் விமர்சித்துவிட்டுப் போகிறது.. எல்லாம்.. இவர்களே இழுத்துக் கொண்டதுதான்..! என்னளவில் இது நல்லதொரு முயற்சிதான்.. 

சொந்த பிஸினஸ் செய்து தோல்வியடைந்து.. கதை எழுதி அதனை புத்தகமாக வெளியிட முயன்று தோற்றுப் போயிருக்கும் சூழலில் ஹீரோவின் அப்பா காலமாகிறார். அவருடைய மரணத்திற்குப் பின்புதான் பாண்டிச்சேரியில் ஒரு வீடு இருப்பதாக அவருடைய நெருங்கிய நண்பர் சொல்ல அந்த வீட்டைப் பார்க்கச் செல்கிறார் ஹீரோ. வீட்டின் பிரமாண்டம் அவருக்கு மகிழ்ச்சியளிக்க.. அந்த வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் பணத்துடன் சென்னையில் செட்டிலாகலாம் என்று தனது காதலியுடன் திட்டம் போடுகிறார்..!

அந்த நேரத்தில் பூட்டிக் கிடக்கும் ஒரு அறையில் கிடைக்கின்ற சில ஓவியங்கள் ஹீரோவின் வாழ்க்கையில் சந்தித்த விஷயங்களையும், சந்திக்கப் போகும் விஷயங்களையும் சொல்வதாக இருக்க.. ஹீரோ மனம் குழம்புகிறார்.. அந்த ஓவியங்களின் மூலத்தைத் தேடத் துவங்குகிறார்.. அடுத்தடுத்து சில திருப்பங்கள் அவருக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்க.. அந்த வீடு என்ன ஆகிறது என்பதுதான் கதை..!

இது போன்று ஓவியத்தின் மூலம் கதை.. புத்தகத்தின் மூலம் நடந்துவிட்ட சம்பவங்களின் கதைகளையெல்லாம் படமாக பார்த்தாகிவிட்டது..! மலையாளத்தில்கூட சில படங்கள் வந்திருக்கின்றன..! தமிழில் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்..! அளவுக்கதிகமாக காட்சிகளின் நேரத்தை இழுக்காமல், தேவையில்லாமல் வேறு காட்சிகளையும் சேர்க்காமல் படம் முழுவதுமே ஒருவித வேகத்துடன் ஓடுவதுதான் படத்தை கடைசிவரையிலும் இருந்து ரசிக்க வைக்கிறது..!

படத்தின் ஹீரோ அசோக் செல்வன்.. 'சூது கவ்வும்' படத்தில் நடித்தவர்..! திரில்லர் வகைகளில் நடிகர்களும் கொஞ்சம் பயமுறுத்தினால்தான் கதைக்கு ஆவும்..! ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி.. நடிப்புக்கு ஸ்கோப் இல்லை என்றாலும், கேமிராவுக்கு ஏற்ற முகம்..! இவர்களைவிட அந்த வீட்டை நாசருக்கு விற்ற ஓவியர் வீரசந்தானத்தின் மகனாக நடித்த பொன்ராஜ் கேரக்டர்தான் நிஜமாகவே நடித்திருக்கிறார்.. டயலாக் டெலிவரிகளில் நிறுத்தி, நிதானித்து.. கொஞ்சம் நடிப்பையும் கூடவே கொடுத்திருக்கிறார்.. வாழ்த்துகள்ண்ணே..!

படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநருடன் பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பெஸ்ட் போட்டோகிராபி.. வீட்டின் உள்புறம் முழுவதும் சிவப்பு கலரை வாரி இறைத்து... கண்ணை கவர்கிறது.. நாசர் மற்றும் வீரசந்தானத்தின் ரீஎன்ட்ரி காட்சிகள்.. எலெக்ட்ரிக் சர்க்யூட் வெடித்துச் சிதறும்போது அதனை படமாக்கியிருக்கும்விதத்தில்தான் கொஞ்சம் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறார்கள்..! அந்த வீட்டில் பேய் இருக்கு.. ஏற்கெனவே தற்கொலை செஞ்சிருக்காங்க என்றெல்லாம் பழைய பல்லவியை பாடாமல்.. நல்ல எண்ணங்கள்.. கெட்ட எண்ணங்கள் என்று பெயர் மாற்றி அதனைச் சொல்லியிருக்கும் விதம் ரசிக்க வைத்தது. ஆனாலும் இதனை போக்க அதே மாந்தரீக வழிதான் கிடைத்ததா..? 

நாய் செத்துக் கிடக்கிறது.. வீட்டின் கேட் உடைந்து விழுந்து நண்பனின் வாழ்க்கை வீல் சேர் என்றாகிறது.. வீட்டில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலைமை.. காதலியும், நண்பனும் சேர்ந்து பிரச்சனையை ஏற்றிவிட.. அது காதலனை தற்கொலை செய்யும் அளவுக்குப் போகிறது.. அந்தத் தற்கொலை காட்சிக்கு அத்தனை வலுவில்லாததால் படத்தின் முடிவு என்ன என்ற குழப்பத்தில்தான் ரசிகர்கள் வெளியேறுகிறார்கள்..! இது போன்ற சம்பவங்களை மர்மக்கதை எழுத்தாளர்கள் பலரும் எழுதி முடித்திருக்கிறார்கள். ஆனால் படமாக வந்ததில்லை. இதுதான் முதல் முறை..!

படத்தின் மிகப் பெரிய குறையே ஒலிப்பதிவும், வசனங்களும்தான்.. நான் எப்போதும் சொல்லி வருவது.. சென்னை போன்ற சிட்டிகளின் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களின் சவுண்ட் சிஸ்டத்தை அடிப்படையாக வைத்தே பல பெரிய இயக்குநர்களும் ஒலிப்பதிவை செய்து வருகிறார்கள். மல்டிபிளெக்ஸை தாண்டி மற்ற தியேட்டர்களில் ஸ்பீக்கர் அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும் சூழலில் அவர்களால் படத்தில் ஒன்றிவிட முடியாது என்கிறேன்.. இப்போதும் அதேதான் நடந்திருக்கிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வசனங்கள் தியேட்டரில் முக்கால்வாசி பேருக்கு விளங்கவில்லை.. அப்படியொரு ஒலிப்பதிவு..! அதோடு படத்தின் மிக முக்கியமான வசனங்களில் அதிகமான ஆங்கில சொல்லாடல்கள்..! இது பி அண்ட் சி தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு புரியுமா..? வசனமே புரியாமல் மனதில் எப்படி அதனை ஏற்றுவது..? 

பீட்சா அளவுக்கு இல்லையென்றாலும், படத்தின் மேக்கிங்கில் ஒரு வித்தியாசத்தைக் கொடுத்திருப்பதால் இந்தப் படமும் தமிழில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்துவிட்டது..!   

இயன்ற அளவு சிறப்பான படைப்பை வழங்க முனைந்திருக்கும் இயக்குநர் தீபனுக்கு எனது பாராட்டுக்கள்.. அடுத்தடுத்து வேறு படங்கள் அமைந்து இதைவிட சிறப்பாக தனது பெயரை கோடம்பாக்கத்தில் அவர் பதிவு செய்ய வாழ்த்துகிறேன்..!


10 comments:

Philosophy Prabhakaran said...

// ஹீரோயின் சஞ்சனா.. //

சஞ்சிதா... எங்க சொல்லுங்க ?

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

// ஹீரோயின் சஞ்சனா.. //

சஞ்சிதா... எங்க சொல்லுங்க?]]]

சொல்லிட்டேன்.. திருத்திட்டேன்..!

உஷ்.. அப்பா.. இந்தப் பயபுள்ளைக இப்படி அநியாயம் பண்றானுகளே..! நல்லவிதமா எழுதினா நாலு வார்த்தை பாராட்டுவோம்ன்னு மனசு வரவே வராது..! தப்பா எழுதிட்டோம்ன்னா வரிஞ்சு கட்டிட்டு வந்திருவானுக..!

Nondavan said...

அண்ணே, செமயா சொன்னீங்க... மவுத் டாக்னாலயே இதுக்கு நெகடிவ் பப்ளிசிட்டி.... :(

எல்லாதுக்கும் நீங்க சொன்ன அந்த Pre-Productions la பிச்சா-2 என்று போட்டுக்கொண்டது தான்...

கலக்குறீங்க அண்ணே...

Nondavan said...

உங்களிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் போல உள்ளது... உங்க தொலைபேசி நம்பர் இருந்தா, தாங்கண்ணே... yeshari123@gmail.com

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணே, செமயா சொன்னீங்க... மவுத் டாக்னாலயே இதுக்கு நெகடிவ் பப்ளிசிட்டி.:(

எல்லாதுக்கும் நீங்க சொன்ன அந்த Pre-Productions-la பிச்சா-2 என்று போட்டுக் கொண்டதுதான்.

கலக்குறீங்க அண்ணே...]]]

நான் மட்டும் சொல்லலை.. ஒட்டு மொத்த கோடம்பாக்கமும் இதைத்தான் சொல்லுது நொந்தவன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

உங்களிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் போல உள்ளது... உங்க தொலைபேசி நம்பர் இருந்தா, தாங்கண்ணே. yeshari123@gmail.com]]]

உங்களுடைய அன்புக்கு பெரிதும் நன்றி நண்பரே..!

9840998725. மெயிலிலும் அனுப்பியிருக்கேன். பாருங்க..!

குரங்குபெடல் said...

எப்ப பாரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு
அட்வைஸ் பண்ணிகிட்டு . .


விமர்சனம் எழுதுங்க அண்ணே . .


"எதுக்கு அந்த பீட்சா-2 விளம்பரம்"ன்னு "


அதான் ஒரு ஸீன் கடையில் 2 pizza காட்றாங்களே

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

எப்ப பாரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு
அட்வைஸ் பண்ணிகிட்டு . .
விமர்சனம் எழுதுங்க அண்ணே . .
"எதுக்கு அந்த பீட்சா-2 விளம்பரம்"ன்னு " அதான் ஒரு ஸீன் கடையில் 2 pizza காட்றாங்களே..]]]

ஓ.. இதுதான் காரணமா..? நமக்குத் தெரியாம போச்சே..? உண்மையை உரத்துச் சொன்னதுக்கு நன்றிகள்ண்ணே..!

Nondavan said...

அண்ணே, உங்களிடம் பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சி.... கண்டிப்பா மீண்டும் பேசுவேன் :)

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணே, உங்களிடம் பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சி.... கண்டிப்பா மீண்டும் பேசுவேன் :)]]]

தொடர்பில் எப்போதும் இருப்போம் ஸார்..!