Showing posts with label சுசீந்திரன். Show all posts
Showing posts with label சுசீந்திரன். Show all posts

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

04-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான பழிவாங்கும் கதைதான்.. ஆனால் திரைக்கதையும், இயக்கமும் சேர்ந்து சிறந்த படம் என்று சொல்ல வைக்கின்றன..!



'பாண்டிய நாடு' என்று சொல்லி மதுரைக்குள் படமெடுத்தால் மட்டுமே போதாது.. மதுரை மண்ணின் கதையைத்தான் படமாக்க வேண்டும் என்று சுசீந்திரன் நினைத்துவிட்டார் போலும்..! சென்ற ஆட்சிக் காலத்தில் கொடி கட்டிப் பிறந்த அரசியல் தாதாக்களின் கதையோடு இணைத்து.. அந்த ஆட்சிக் காலத்தில் மதுரை எப்படி இருந்தது என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்..

கிரானைட் கற்களை வெட்டியெடுக்கும் பிஸினஸில் அரசியல்வியாதிகள் தங்களது அல்லக்கைகள் மூலமாக என்றைக்கு தலையிட்டார்களோ அன்றைக்கே அது வளம் கொழிக்கும் பிஸினஸாகிப்போனது.. அது சென்ற தி.மு.க. ஆட்சியில்தான் அமோகமாக வளர்ந்து ஆக்டோபஸாக உயர்ந்து மதுரையின் உயர் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அளவுக்கு சர்வசக்தி படைத்த விஷயமாக மாறியது..!

இந்த ஆட்சிக் காலத்தில் ஏதோ ஒப்புக்கு நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்து சீன் போட்டு.. ஒரே நாளில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கொடுத்து கொள்ளையர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. வாங்க வேண்டியதை வாங்கிவிட்டுத்தான் செய்திருக்கிறார்கள் என்பதை அரசியல் அறிந்தவர்கள் உள்ளம் சொல்கிறது..!

கனிமவளத் துறையின் உதவி இயக்குநராக வேலை செய்யும் விஷாலின் அண்ணன், வில்லனின் அரசு அனுமதியின்றி நடத்தப்படும் கிரானைட் பிஸினஸை இழுத்து மூட வைக்கிறார்.. கோபம் கொண்ட வில்லன் விஷாலின் அண்ணனை கொலை செய்து அதனை விபத்து என்று செட்டப் செய்துவிடுகிறார்..! அடிதடி என்றாலே பத்து முறை யோசிக்கும் விஷால், தனது அண்ணனின் மரணத்துக்குப் பதிலடி கொடுக்க நினைக்கிறார். ஆனால் அது அடிதடியாகிப் போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று யோசித்து வில்லனின் கதையை வேறு வழியில் முடிக்க எண்ணுகிறார். அதே நேரம் அவருடைய அப்பா பாரதிராஜா, தனது மகனின் கொலைக்கு பழி வாங்க தானும் ஒரு வழியில் முயல்கிறார்.. இதில் யாருடைய முயற்சி வெற்றி பெற்றது என்பதுதான் கதை..! இதற்கிடையில் தமிழ்ச் சினிமாவுக்கே உரித்தான ஒரு காதல்.. பாடல்கள் என்று இன்னொரு பக்கமும் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்..!

'நான் மகான் அல்ல' படம் போலவே இதிலும் திரைக்கதையை பிய்த்து பிய்த்து கொடுத்திருக்கிறார் என்றாலும் அதுவே சுவாரசியம்..! ஒரு பக்கம் வில்லனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லியபடியே இன்னொரு பக்கம் விஷாலின் குடும்பம், அவரது காதலின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் ஒன்றுக்கொன்று டச் செய்யாத விஷயமாகக் கொண்டு போயிருக்கிறார்..!

விஷாலின் கல்யாணப் பேச்சு நடக்கும் சமயமெல்லாம், வில்லன் மறுபுறத்தில் படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்..! விஷாலின் காதல் துளிர்க்கும்போதுதான் அவரது அண்ணனின் குணம் வெளிப்படுகிறது..! ஒரு துர்மரணத்தை பார்த்து மனம் கேட்காமல் போய் சண்டையிட்டு அதன் விளைவாய் வில்லனின் குவாரிகளுக்கு சீல் வைக்கும் காட்சியில் மனம் ஒன்றிப்போய்தான் விட்டது.. காரணம்.. வெரி சிம்பிள்.. அந்த மார்ச்சுவரி காட்சியை அவ்வளவு யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இய்க்குநர்..!

தனது காதலுக்கு உதவிய நண்பனுக்கு ஒரு உதவியைச் செய்யப் போகும் அந்தக் காட்சியின் தொடர்ச்சி, விஷாலின் வீடு தேடி வரும் வில்லனின் அடியாளை வழியிலேயே போட்டுத் தள்ள முயல்கிறது..! இதற்கு அடுத்தடுத்த காட்சிகளாக மருத்துவமனையில் அடியாள்.. விஷால் அண்ணன் கதை முடியும் காட்சியும் தொடர்ச்சியாக வர திரைக்கதையின் ஓட்டத்தில் நம்மை ஆழ்த்துகிறது..!  இரண்டாம் பாதியில் திரைக்கதைதான் படத்தை தொய்வின்றி கொண்டு போயிருக்கிறது..! 

மிகச் சிறப்பான இயக்கம். ஒரு  பிரேமில்கூட தேவையில்லாமல் எவரும் சும்மா நிற்கவில்லை..! துவக்கத்தில் வரும் கேங் லீடர் இறப்பு காட்சியில்கூட அந்தப் பாடலை வைக்க எந்த இயக்குநருக்கும் மனசு வராது.. அதனை எடுக்க வேண்டியவிதத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்..!

சும்மா சோபாவில் படுத்துத் தூங்குவது போன்ற காட்சி என்றாலும்கூட தானே படுத்துக் காண்பித்துவிட்டு நடிக, நடிகையரிடம் நடிப்பை வாங்கும் இயக்குநர் இமயம் இதில் ஒரு தகப்பனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.. பெஸ்ட் ஆக்ட்டிங் ஸார்..!(இங்கிலீஷ்ல சொன்னா ஸார் ரொம்ப சந்தோஷப்படுவார்..!) மகனின் மரணத்தைத் தொடர்ந்து இவர் காட்டுகின்ற நடிப்பு.. மருத்துமனையில்.. கையெழுத்திட மறுத்து பேசும் பேச்சு..! தனது நண்பரிடம் உதவி கேட்டுச் சென்று பேசுவது.. லோக்கல் ரவுடிகளை தேடிச் சென்று பேசுவது.. என்று அத்தனையிலும் ஒரு சராசரி தகப்பனை பிரதிபலித்திருக்கிறார் பாரதிராஜா. ஒருவேளை அவரது பண்பட்ட நடிப்பு இது முதல் முறை என்பதால் நமக்கு மிகவும் பிடிக்கிறதோ என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப, ரொம்பப் பிடித்திருக்கிறது நடிகர் பாரதிராஜாவை..!

விஷாலுக்கு இதற்கு முன் கிடைத்ததெல்லாம் இயக்குநர்கள் அவருக்காக கொடுத்த வேடம்.. இது சொந்தப் படம் என்பதாலும், ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இப்போது இருப்பதாலும் இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்துவிட்டு தான் நினைத்ததை சாதித்திருக்கிறார்..! இதுபோலவே இனி வரும் வருடங்களிலும் செய்தால் ஒரு தயாரிப்பாளராகவும் இவர்  பெருமையுடன் கோடம்பாக்கத்தில் வலம் வரலாம்..!

லஷ்மி மேனன் படத்துக்கு படம் மின்னுகிறார்.. கும்கியில் காணாத அழகு இதில்..! படிப்பதோ 11-ம் வகுப்பு. ஆனால் இதில் டீச்சர் வேடம்.. சேலை அணிந்து வந்தால் எந்தப் பெண்ணும் பெரியவளாகத்தான் தெரிவார்கள்.. இதில் பார்த்தவுடன் காதல் வருவதை போல பாடலையும் வைத்து லஷ்மியையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. அழகுதான்.. 'ஒத்தக்கடை' பாடலின் இடையில் கல்யாணத்தை ஜூலைக்கு அப்புறம் வைச்சுக்கலாமா என்று கேட்கும் அந்த ஷாட்டே கொள்ளை அழகு.. அப்புறம் ஏன் அப்படி டான்ஸ் ஆட மாட்டாங்க..?! 

லஷ்மியை டாவடிக்க விஷால் மேற்கொள்ளும் முயற்சிகளும்.. லைன்மேனை கரெக்ட் செய்து கரண்ட்டை கட் செய்து மொட்டை மாடியில் தனக்குத்தானே பில்டப் கொடுக்கும் காட்சிகளும்.. பிரதர்கூட புதருக்குள்ள என்னடி பேச்சு என்ற சூரியின் டைமிங்கான காமெடியும் அந்தக் காட்சியை பெரிதும் ரசிக்க வைக்கின்றன..! இந்தக் காதல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! ஆனாலும் தமிழ்ச் சினிமாவை பிடித்த வரமா, சாபமா என்றே தெரியாத இந்தக் காதலும், பாடல் காட்சிகளும் பல படங்களில் தொய்வை ஏற்படுத்துகின்றன என்பது மட்டும் உண்மை.. 

இதிலும் பிற்பாதியில் வரும் 'பை பை' பாடல் காட்சி திரைக்கதைக்கு மிகப் பெரிய இடையூறுதான்.. அந்தப் பாடல் இல்லாமல் இருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.. ஆனாலும் அந்தப் பாடலில் லஷ்மியின் குத்தாட்டமும், பாடலை படமாக்கியிருக்கும்விதமும் ரசிக்கத்தான் வைக்கிறது..! இமான் வழக்கம்போல ஏமாற்றவில்லை.. அவரே சொன்னதுபோல, ஒரு படத்தில் ஏதாவது ஒரு பாடலையாச்சும் ஹிட்டாக்கிரணும்னு நினைச்சு வேலை பார்த்தா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்..! ஷோபியின் நடன அமைப்பு எல்லா பாடல்களிலுமே அசத்தியிருக்கிறது..! 'ஒத்தக்கடை' பாடலின் காட்சிகள் முழுவதும் தெற்குத் தெரு அருகில் படமாக்கப்பட்டிருப்பதுபோல தெரிகிறது. அங்குதான் இது போன்ற நெளிவு, சுளிவு தெருக்கள் அதிகம்..! ஆனாலும் பிரேமில் வெளியாள் ஒருத்தரைக்கூட காட்டாமல் எடுத்திருக்கிறார் பாருங்கள்.. இதுதான் ஆட்டம்..!

லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை..! கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் விஷாலின் கோபம் மட்டுமே வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து அனல் அரசு ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார் போலும்.. சினிமா சண்டையாக நினைத்தும், வில்லன் வீழ்வது சினிமாவின் கட்டாயம் என்பதாலும் இதனை விமர்சிக்கவே முடியாது.. இப்படி பார்த்தால் தமிழ்ச் சினிமாவில் எல்லா படங்களும் ஓட்டைதான்..! யார் கொலைகளைச் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டிருப்பதாக இயக்குநர் இறுதியில் சொல்கிறார்..! பாரதிராஜா ஏற்பாடு செய்த ரவுடியின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்தாலே இதில் பாரதிராஜா பிடிபட வாய்ப்புண்டு.. அந்த போன் அழைப்புக்கு பின்புதானே படம் பரபர என்கிறது..! 

அனைத்துத் திரைப்படங்களும் சொல்வதை போலவே இந்தப் படமும் அடியாட்களை மட்டுமே வதம் செய்கிறது.. இந்த ஊழலுக்கும், அராஜகத்திற்கும் துணை நின்ற அரசியல்வியாதிகளை எதுவும் செய்யாமல் விட்டுவிடுகிறது.. இப்படித்தான் படத்தை எடுக்க முடியும்.. வேறு வழியில்லை என்பது தமிழக அரசியல் சூழல்..! 

அரசியல் ரவுடித்தனத்தில் விளையும் அனைத்துவித பயங்கரங்களுக்கும் பின்னணியில் மூளையாக இருப்பது அரசியல்வியாதிகள்..! ஆனால் அவர்களை கை வைப்பதுபோல எடுத்தால் சென்சார் பிரச்சினை.. கட்சிகள் பிரச்சினை என்று பலவும் வரும்.. அதனை எதிர்கொள்ளும் தைரியம் இங்கே இப்போது யாருக்கும் இல்லை.. போட்ட காசை எடுக்க வேண்டுமெனில் அரசியல்வியாதிகளை பகைத்துக் கொள்ளாமல் போய்விடுவதே நல்லது என்று நினைக்கிறார்கள் கோடம்பாக்கத்தார்..!

நட்ட நடு இரவில் பாரதிராஜா தனது நண்பரின் வீட்டுக்கு போய் கதவைத் தட்டி  "பணம் கொடுத்தா கொலை செய்வாங்களாமே.. அது மாதிரி ஆளுகளை உனக்குத் தெரியுமா..?" என்கிறார்.. "முடியலடா.. மறக்க முடியலடா.. மூத்த பிள்ளைடா.. தூங்கவே முடியல.. ஏதாவது செய்யணும்டா.. செஞ்சாத்தான் என் மனசு ஆறும்.." என்று அழுது அரற்றுகிறார்..! இந்த உணர்வுதான் அனைவருக்குமே..! 

இவங்களுக்கு எதிரா எதையாவது செய்யணும் பாஸ்..!


ஆதலால் காதல் செய்வீர் - சினிமா விமர்சனம்

15-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ராஜபாட்டை' என்ற கொடுமையைக் கொடுத்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்ட இயக்குநர் சுசீந்திரன் மீண்டும் தன் பெயரை இதில் மீட்டெடுத்திருக்கிறார்..!

எங்கு பார்த்தாலும் காதல்.. காதலர்கள்.. காலையில் பார்த்து மாலையில் ஐ லவ் யூ சொல்லி மறுநாளிலேயே கல்யாணம் பற்றிப் பேசும் அளவுக்கு பாஸ்ட் ரைடிங்கில் போய்க் கொண்டிருக்கும், கல்லூரி காதலினால் ஏற்படும் இன்னொரு அவலத்தை தொட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்..!


நண்பர்களாக இருக்கும் ஹீரோவும், ஹீரோயினும்..... ஹீரோவின் வழக்கமான 'செத்துருவேன்' என்ற மிரட்டலிலும், செய்து காட்டும் வீரத்திலும் ஈர்க்கப்பட்டு 'ஐ லவ் யூ' சொல்லித் தொலைகிறாள். இந்தக் காதல் இப்போதைய டீன் ஏஜ் காதலை போலவே வேகமாக போய் மகாபலிபுரத்தில் ரூம் போடுவதில் முடிகிறது.. 5 ரூபாய்க்கு சிக்கனப்பட்டு கடைசியில் ‘அது’ ஹீரோயின் வயிற்றில் உதித்தேவிடுகிறது.. கருவைக் கலைக்க அல்லலோ அல்லல்படுகிறார்கள் கல்லூரி மாணவர்களான ஹீரோவும், ஹீரோயினும்..

விஷயம் வீட்டுக்குத் தெரிந்து பஞ்சாயத்து கூடுகிறது.. ஒரு பக்கம் பையனின் அப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பதுபோல் நடித்து கம்பி நீட்ட பார்க்கிறார். இன்னொரு பக்கம் பெண்ணின் அப்பா கல்யாணத்திற்காக எதிர்த் தரப்பினர் காலில் விழுகவும் தயாராக இருக்கிறார்.. இடையில் காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்சினை பெற்றவர்களைவிடவும் படு ஸ்பீடாக போய் அவர்களை பிரித்தேவிடுகிறது.. 

உதயமாகும் ஒரு புது ஜீவன் எங்கோ ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்து வர.. இங்கே காதலர்கள் அவரவர் போக்கில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடர.. அந்த பாவப்பட்ட ஜீவனை அழுக வைத்து, நம்மையும் கண் கலங்க வைத்து இதில் யார் செய்தது சரி.. தவறு.. என்று நம்மையே யோசிக்க வைத்துவிட்டு... இப்போது மதுரையில் விஷாலை வைத்து ‘பாண்டியநாடு’ பட ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்..! வெல்டன் ஸார்…!

ஹீரோ புதுமுகம்.. அப்படி தெரியவில்லை.. அந்தக் கேரக்டருக்கு ஏற்ற தேர்வு.. லேசாக கோக்குமாக்காக இருக்கும் நிலையில் இவனை அழகுப் பெண் காதலிப்பதுதான் விதி என்பதாக வைத்திருக்கிறார் போலும்..! காதலனாக நடிக்க வேண்டிய காட்சியில் நடித்தும், பதற்றத்துடன் அலையும் காட்சிகளிலும் அப்பாவியாய் நடித்தும், தனது அப்பாவை எதிர்த்து தீர்க்கமாக பேசும் காட்சிகளில் இன்றைய இளைய தலையமுறையையும் பார்க்க வைத்திருக்கிறார். 

வழக்கு எண்ணில் நடித்த மனீஷாதான் ஹீரோயின்.. தன்னைத்தான் காதலிக்கிறான் என்று தெரிந்த கணத்தில் இருந்துதான் இந்தப் பெண்ணும் நடித்திருக்கிறது..! ஒரு காட்சியில்கூட இயக்குநர் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பதே தெரியவில்லை..! தனது காதலை மறைக்கவும், கர்ப்பத்தை மறைக்கவும் இவர் படும்பாட்டில் நமக்கே சிரிப்பும், சோகமும் சேர்ந்தே வருகிறது..!   படத்தின் துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிவரையிலும் இயக்கத்திற்கு பக்கபலமாக இருக்கும் வசனங்களுக்காக ரகளை செய்த டீன் ஏஜ் கூட்டம் இறுதியில் குழந்தையைக் காட்டியவுடன் கப்சிப்பானதுதான் இயக்கத்தின் சிறப்பு..! 

இன்றைய இன்ஸ்டண்ட் காதல்கள் எப்படி உருவாகிறது என்பதையெல்லாம் முதல் ரீலிலேயே பட்டவர்த்தனமாக காட்டியிருக்கிறார் சுசீந்திரன்.. காதல் ஒரு நேரத்தில் எப்படியெல்லாம் அலைபாய்கிறது. திசை மாறுகிறது என்பதை இதைவிடவும் சமீபத்திய எந்தப் படமும் காட்டியதில்லை.. ஹீரோவின் பிரெண்ட்டாக நடித்தவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது..  டைமிங்கில் பின்னியிருக்கிறார்.. காதலர்களுக்காக கூச்சப்படாமல் பேசும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர்.. ஒருவனின் காதலுக்கு சப்போர்ட் செய்யப் போய். அது திசை மாறி உடன் இருக்கும் வேறொருவனை காதலிப்பதாக அந்தப் பெண் சொல்வதும், அதனை அவர்கள் சமாளிப்பதும் ஏக ரகளை..!

காதலருடன் போனில் பேசுவதை சந்தேகப்படக் கூடாது என்பதற்காக ‘அண்ணா’ என்று இழுத்து இழுத்து பேசிவிட்டு வெளியில் வந்து காதலனை திட்டுவது.. வீட்டில் தனித்திருக்க வந்த நிலையில் தெரிந்தவர் வர.. ஹீரோவை போஸ்ட் மேன் கணக்கில் வாசலில் நிற்க வைத்து பேசி சமாளிப்பது.. எப்படியெல்லாம் பொய் சொல்லி காதலர்கள் வெளியில் ஊர் சுற்றுகிறார்கள் என்பதைச் சொல்லியிருப்பது.. எதற்கெல்லாம் காதலர்கள் சண்டையிட்டு சட்டென்று மனம் மாறுகிறார்கள்.. காதல் எப்படியிருந்தால் உருவாகும்.. காதலி யாருக்கெல்லாம் கிடைப்பார்கள் என்கிற சூத்திரத்தையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக இதில் கொட்டித் தீர்த்திருக்கிறார் சுசீந்திரன்.. இதில் இவருக்கு பக்க பலமாக வசனம் எழுதியிருக்கும் தம்பி கிளைட்டனுக்கு எனது பாராட்டுக்கள்..! 40 பவுன் நகையை எடுத்திட்டு வந்திருக்கேன் என்பதற்கும், இன்னும் கொஞ்ச நாள்ல அப்பாவாயிருவான் என்ற வசனத்திற்கும் தியேட்டரே அதிர்ந்தது..!

முற்பாதி முழுவதும் ரகளையாக போய்க் கொண்டிருந்த படம் பிற்பாதியில் ஆஸ்பத்திரி, கருக்கலைப்பு, பெற்றோர்களின் சுமை என்று ஏகத்துக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. ஹீரோயினின் அம்மாவாக நடித்திருக்கும் துளசிக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.. ஹீரோவின் வீடு தேடி வந்து அவர் பேசுகின்ற பேச்சும், நடிப்பும்.. அட்சரச்சுத்தம்.. இந்த ஒரு காட்சியிலேயே ஹீரோவும், ஹீரோயினும் மனசு மாறுகின்ற அந்தத் தருணம் பொய்யில்லாதது.. 

எதற்காகக் காதலிக்கிறோம் என்பது தெரியாமலேயே நிறைய பேர் காதலிக்கிறார்கள் என்பதைத்தான் நமது மெரீனா பீச் காதலர்களின் ‘சேட்டை’ காட்டுகிறது.. அதையேதான் இதிலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ‘காதல்’ என்பதே கல்யாணத்தின் முதற்படி.. கல்யாணம் பிள்ளை பெற்று வம்ச விருத்தியை செய்வதற்கான முதற்படி.. கல்யாணமும், பிள்ளை பெற்றலும், குடும்ப உறவு வளர்ப்பும் இல்லையெனில் பின்பு எதற்கு காதல்..? அந்தக் காதலை வைத்து என்னதான் செய்வது..?

குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள்..! பிள்ளைகள் வளர்ப்பு என்பதிலும், அவர்களுடைய விஷயத்தில் எந்த அளவுக்கு கண்காணிப்போடு இருத்தல் வேண்டும் என்பதையும் எச்சரிக்கை உணர்வுடன் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்..! அதே நேரம் காதலர்களுக்குள் இருக்கும் உறவு எந்த நிலையிலும் ஒரு எல்லையைத் தாண்டக் கூடாது என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி.. இவர்கள் இருவரின் தவறுகளால் அப்பாவி அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது..? 

திருமணம் என்ற குடும்பப் பந்தம் இருவருக்குமே பாதுகாப்பானது என்பதைவிட அடுத்து வருகின்ற ஜெனரேஷனுக்கு இதுதான் மிக முக்கியம் என்பதை காதலர்கள் மறந்துவிடக் கூடாது.. இந்தப் படம் வரும் நேரம்தான் கோடம்பாக்கத்திற்கு மிகப் பெரிய சோதனை காலமாக இருக்கிறது. அண்ணன் சேரனின் மகள் விஷயத்தில் மீடியாக்கள் கோடம்பாக்கத்தை போட்டு துவைத்து எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்.. 'நீங்கதானே காதலை வளர்த்துவிட்டீங்க.. அனுபவிங்க' என்று சாபம் கொடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்.. இப்படியொரு படத்தைக் கொடுத்த இயக்குநர் சுசீந்திரனுக்கு எனது நன்றிகள்..!

இந்தப் படத்தை பார்க்கும் காதலர்களில் ஒரு சிலராவது தங்களை கட்டுக்குள் வைத்துக் கொண்டு வாழ்க்கையை புரிந்து காதலித்தாலே போதும்.. இப்படியொரு நிலைமை வருவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு காதல், கல்யாணம் பற்றி புரிந்து கொள்ள வைத்தாலே.. இந்தப் படத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

ஆதலால் காதல் செய்வீர் - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

ராஜபாட்டை- சினிமா விமர்சனம்


23-12-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஒரு படம் வெற்றியடைந்தவுடன் அடுத்தப் படத்தின் வெற்றி தானாகவே வரும் என்று நினைப்பதுதான் பல இயக்குநர்களின் எண்ணம். சுசீந்திரனும் அதில் விதிவிலக்கல்ல..! வெண்ணிலா கபடிக் குழுவினால் அவருக்கு வாழ்க்கை கிடைத்தது. நான் மகான் அல்ல படத்தினால் ஹீரோவுடனும் ஜெயிப்பார் என்று நிரூபணமானது. அழகர்சாமியின் குதிரையில் இலக்கியமும் படைப்பார் என்றானது.. ஆனால் இந்த ராஜபாட்டையில் முழுவதுமாக சறுக்கி விழுந்திருக்கிறார்..! பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றமே கிடைத்திருக்கிறது..!

அனல் முருகன் என்ற பெயரில் சினிமாவில் வில்லன் நடிகராகப் பெயரெடுக்க நினைத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா நடிகர் விக்ரம்..! தனது மனைவியின் பெயரில் அமைந்திருக்கும் அனாதை ஆசிரம இடத்தை எம்.எல்.ஏ. சீட்டுக்காக கேட்கும் மகனிடமிருந்து தப்பி வந்து விக்ரமிடம் அடைக்கலமாகிறார் கே.விஸ்வநாத். அந்த அனாதை ஆசிரம இடத்தை வளைக்க நினைத்து ஏமாற்றமாகிறார் அக்கா என்னும் அரசியல் வித்தகி ரங்கநாயகி.. மகனைத் தூண்டிவிட்டு தேடச் சொல்கிறார். அவரது அடியாட்களும் தேடுகிறார்கள். விஸ்வநாத் கிடைத்தாரா..? விக்ரம் விட்டாரா? என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

கதை என்னவோ தற்போதைய தமிழகத்தின் ஹாட் ஸ்டோரிதான் என்றாலும், திரைக்கதை அரதப் பழசு. 1985-1990-களில் வெளி வந்த மசாலா படங்களின் டைப்பில் திரைக்கதையை எழுதியிருக்கிறார் சுசீந்திரன். இதையெல்லாம் செய்துவிட்டு திரைக்கதை-இயக்கம் என்று தைரியமாக தன் பெயரையும் போட்டிருக்கிறார்.. ஆச்சரியமான தைரியம்தான்..!

அடுத்தடுத்து காட்சிகள் எப்படி வரும்..? என்னவாக வரும்..? வசனங்கள் என்ன..? ஹீரோ என்ன செய்வார் என்பதை முன்பேயே ஊகித்துவிடுவதால் படத்தில் மூழ்கி முத்தெடுக்க முடியவில்லை. போதாக்குறைக்கு எந்தவித்த்திலும் சேர்க்க முடியாத வெள்ளரி பிஞ்சாக ஹீரோயின்.. கோவில் இல்லை அட்லீஸ்ட் இவருக்காக போஸ்டர்கூட அடிக்க முடியாத அளவுக்கு ஒரு அழகு ஹீரோயின்..  புகைப்படங்களில் மட்டுமே அழகாக இருக்கிறார். படத்தில் செகண்ட் ஹீரோயின் லெவலில் இருக்கிறார். ஒளிப்பதிவாளருடன் ஏதாவது சண்டையோ..! இவருக்கு அப்படியே நேரெதிர், அக்காவாக நடித்திருக்கும் அரசியல் வில்லி.  குளோஸப் காட்சிகளில் குஷ்பூ போலவே இருக்கிறார்..! பேசாமல் கதையை மாற்றி ஹீரோயினுக்கு அம்மாவாகவாவது வைத்திருந்தால் ரசித்திருக்கலாமோ..?

விஸ்வநாத், விக்ரமுக்கு காதலிக்க அட்வைஸ் கொடுக்கும் காட்சிகளும், ஹீரோயினை லின்க் செய்துவிடும் காட்சிகளும் ரொம்பவே ஓவர் என்றாலும், அந்தக் காட்சிகளில் விஸ்வநாத் இல்லாமல் வேறு நபர்களை வைத்திருந்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மனதில் இருக்கும் மரியாதையை கட் செய்து காக்காய்க்கு போட முடியலை..! டூ மச்சாகவே இருந்தாலும் கொஞ்சம் ரசித்தேன்..!

மகனாக அவினாஷ்..! அப்பாவிடம் கெஞ்சப் போகிறேன் என்று சொல்லிவிட்டு நொடியில் முகத்தை மாற்றிப் பேசும் அந்த ஒரு நடிப்பு அவரது இத்தனை வருட நாடக வாழ்க்கையை பளிச்சென்று சொல்லிக் காட்டியது..! 

தெலுங்கின் மெகா வில்லனான பிரதீப் இதில் வாப்பா என்ற பெயரில் வில்லனாக உருமாறியிருக்கிறார். கதைக்கு வில்லன் தேவைதான் என்றாலும், இப்போதைய காலக்கட்டத்தில் இப்படியொரு கேரக்டர் ஸ்கெட்ச் தேவையா..? வாப்பாவின் தோழர்கள் அனைவரும் அரிவாளோடு ஓடி வந்து முருகனுடன் சண்டையிடுவதை நினைத்துப் பார்த்தால் நிஜத்தில் பகீரென்கிறது..! இதுவரையில எந்தவொரு சினிமாவிலும் இப்படி பகிரங்கமாக முருகனையும், வாப்பாவையும் மோதவிட்டதில்லை என்று நினைக்கிறேன்..! 

தசாவதாரம் படத்தின் மீது அனைத்து அரிதார நடிகர்களுக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதற்காக அது போன்றே அத்தனை வேடங்களையும் ஒரே படத்தில், ஒரே காட்சியில் இப்படித்தானா வைத்து ஆற்றிக் கொள்ள வேண்டும்..!? விக்ரமின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது..! 

சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் என்றால் அவரது நண்பர்கள் அனைவரும் வாட்டசாட்டமாக ரவுடிகளை போலவே இருப்பார்கள்.. கதைக்குப் பொருத்தமானதாக இருக்கும். திரைக்கதையில் பல்வேறு போலிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் சுசீந்திரன். பிரதீப்பை சிபிஐ, லோக்கல் போலீஸ் என்று ஆள் மாறாட்டம் செய்து விசாரிக்கும் உத்தி, முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும், விக்ரமின் பலவேஷ மேக்கப் காட்சிகள்தான் கொஞ்சம் காமெடியாகிவிட்டது..! இதனைச் செய்யாமலேயே இருந்திருக்கலாம்..!

அவனவன் வட்டிக்கு கடன் வாங்கி, அந்தக் கடன் வட்டியையே கட்ட முடியாமல், திரும்பவும் வட்டிக்கு கடன் வாங்கி.. ஒரேயொரு கையெழுத்தில் 50 வருட சம்பாத்தியத்தையே இழந்து கோடம்பாக்கத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், லட்சங்களில் செலவு செய்து வெளிநாட்டில் போய் ஷூட் செய்திருக்கும் ரீமாசென், ஷ்ரேயா, விக்ரமின் பாடல் காட்சியை இப்படியா எண்ட் டைட்டிலில் வைத்து கொடுமைப்படுத்துவது..? பாவம் தயாரிப்பாளர்.. என்றைக்காவது ஒரு நாள் இதனை நினைத்து தலையணையில் முகம் புதைத்து அழுகத்தான் போகிறார்..!

இடையிடையே நகைச்சுவை என்ற பெயரில் விஸ்வநாத்தும், தம்பி ராமையாவும், எதிரணியில் இருக்கும் 2 மொன்னை ரவுடிகளும் ரவுசு கட்டுகிறார்கள்..! இதுவே போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார்..! 

இசை யுவன்ஷங்கர்ராஜாவாம்.. அனைத்துப் பாடல்களும் யுகபாரதியாம்.. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வார்த்தைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார். ஆனாலும் மனதில் நிற்கவில்லை..! ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடும் அழகியைவிடவும் அதன் பாடல் வரிகள் நில்லாததுதான் கொடுமை..! 

கமர்ஷியல் படங்கள் எடுக்கலாம்தான்.. ஆனாலும் விக்ரம் போன்ற மாஸ் ஹீரோக்களை கையில் வைத்துக் கொண்டு அவர் ஏற்கெனவே நடித்த தில், தூள் வகையறாவிலேயே தோசை சுட்டால் எப்படி..? விக்ரமாவது கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டாமா..? தெய்வத்திருமகளில் கிடைத்த பாராட்டுக்களில் கால்வாசிகூட இந்தப் படத்திற்காக அவருக்குக் கிடைக்கப் போவதில்லை..!

ஸாரி.. தலைவலி வரவில்லைதான்.. அதே சமயம் வீணாகிவிட்டதே என்கிற கோபமும் வருகிறது..!