மதில் மேல் பூனை..! - சினிமா விமர்சனம்

08-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்சார் போர்டெல்லாம் எதுக்கு..? தேவையே இல்லை என்கிற கருத்து உள்ளவர்களெல்லாம் இந்தப் படத்தை அவசியம் தத்தமது குடும்பத்துடன் பார்த்துவிட்டு வந்து கருத்துச் சொல்லவும்..! இந்த அளவுக்கு கெடுபிடித்தனம் காட்டியும், இப்படியெல்லாம் படம் எடுத்துக் காட்டும் சிலர், சென்சார் போர்டு என்ற அமைப்பே இல்லையென்றால் இன்னும் எப்படியெல்லாம் எடுத்துக் காட்டுவார்களோ..? 

கவிதைத்தனமான தலைப்பை வைத்துக் கொண்டு அதி தீவிரமான சைக்கோ படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.. ஒரு 'ஏ' அல்ல.. 'டிரிபுள் ஏ' கொடுக்கப்பட வேண்டும் இந்தப் படத்திற்கு.. பெரியவர்களே பொறுமையாக உட்கார முடியாத அளவுக்கு எடுத்திருக்கும் இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்தால் என்னவாகுமோ..?


பள்ளிப் பருவத்தில் உடன் படிக்கும் மாணவியால் பாதிக்கப்படும் 4 பேர், அந்த மாணவி பெரியவளாகி திருமணம் செய்து கணவனோடு ஊருக்குத் திரும்பி வரும்போது அவளையும், அவளது கணவனையும் கடத்திச் சென்று குரூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய முயற்சிப்பதுதான் கதை..! 

சினிமா பார்த்துதான் மாணவர்களும், மாணவிகளும் கெட்டுப் போகிறார்கள் என்கிற எதிர்ப்பாளர்களுக்கு 10 கிலோ உரமூட்டும் அளவுக்கு பள்ளிக்கூட காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.  வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் அப்பனை பார்த்து சிகரெட் பிடிக்க ஆசைப்படும் மகன்.. ஐயர் வீடென்ற போதிலும், பக்திப் பாடலை போட்டுவிட்டு டிவியில் எஃப் டிவி பார்க்கும் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து ஒரு மகன்.. சித்தி கொடுமையினால் தினம் தினம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு மகன்.. இவர்களோடு பள்ளியிலேயே திருட்டுத்தனத்தை செய்யத் துணியும் 2 மகன்கள்.. என்று இந்த 5 தலைமகன்களின் அலப்பறைகளை மாணவ, மாணவிகள் பார்த்தால், இதன் பாதிப்பு நிச்சயமாக அவர்களிடத்தில் தென்படும் என்பது உறுதி..!

இவர்களது வகுப்புக்கு புதிதாக வரும் திவ்யா என்ற மாணவியிடம் ஐயர் பையன் நெருங்கிப் பழக, இதன் தாக்கம் மற்றவர்களையும் பாதிக்கிறதாம்.. படிக்கிறதைத் தவிர மத்ததையெல்லாம் செய்யும் இவர்களுக்கு படிப்பு ஒரு விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் இவர்களோடு சுற்றினாலும் ஐயர் பையன் மட்டும் நன்கு படித்து முதல் மார்க் வாங்குகிறானாம். படத்துக்குப் படம் மைண்ட் வாய்ஸிலேயே பாராட்டைப் பெறும் தம்பி இராமையா என்னும் வாத்தியார், “இவன் மூத்திரத்தை குடிங்கடா..” என்று வகுப்பறையிலேயே அன்பாக போதிக்க. இதில் கடுப்பான பெயிலான மாணவர்கள், ஐயர் பையனை அரை நிர்வாணக் கோலமாக்கி தங்களது கோபத்தைக் காட்டுகின்றனர்.

இந்த விவகாரம் திவ்யா மூலமாக தலைமை ஆசிரியருக்குப் போக.. அவர் மேற்படி மாணவர்களை முக்கால் நிர்வாணமாக்கி மைதானத்தில் மண்டி போட வைக்கிறார். இதில் பெருத்த அவமானத்தை சந்திக்கும் விஜய் என்னும் ஒரு மாணவன், ஐயர் மாணவனை செங்கல் சூளையில் வைத்து உயிரோடு கொளுத்துகிறான்..!  பின்பு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது திவ்யா இவர்களைக் காட்டிக் கொடுக்க சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே நடைபெறும் ஒரு மோதலில் விஜய் ஒரு கண்ணில் பார்வையை இழக்கிறான்.  போதாத்துக்கு அங்கே இருக்கும் வார்டனால் வன்புணர்ச்சியும் செய்யப்படுகிறான். இதனாலேயே அவன் மனம் மிருகத்தனமாக மாறி திவ்யாவை பழி வாங்கியே தீருவதாக சபதமெடுத்து திரிகிறானாம். இவனோடு சேர்ந்து மற்றவர்களின் படிப்பும், வாழ்க்கையும் வீணாகி தண்ணி, தம், பொண்ணு என்று அலைகிறார்கள் திவ்யா வரும்வரையிலும்..!

குலதெய்வ வழிபாட்டுக்காக புதுமணத் தம்பதிகளாக கோவிலுக்கு வருபவர்களை துரத்தும் இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் இருந்து சீனுக்கு சீன் ரத்தம் தெறிக்கிறது..! கை முறிக்கப்படுகிறது.. கால் ஒடிக்கப்படுகிறது.. கை விரல்கள் துண்டாக்கப்படுகிறது..! நெஞ்சு கத்தியால் குத்தப்படுகிறது..! இத்தனையையும் தாங்கிக் கொண்டு ஹீரோ விஜய் வசந்த் இறுதிவரையிலும் போராடி அவர்களை கொல்கிறார் என்பதே எவ்வளவு பெரிய விஷயம்..?! ஹீரோவையும், ஹீரோயினையும் உயிரோடு கொளுத்தும்போது அவர்கள் தப்பிக்க போகும்போது விஜய்வசந்த் வீசும் பெட்ரோல் குண்டு அவர்களைத் தாக்குகிறது. எரியும் தீயை அணைத்துவிட்டு மேலும் மேலும் ஓடி வருதையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் எந்த லட்சணத்தில் நமது ரசிப்புத் தன்மையை வைத்திருக்கிறோம் என்று பெருமையாகவே இருக்கிறது..!

விரட்டல், துரத்தல்.. என்று போய்க் கொண்டிருக்க.. இடையில் போலீஸ் வேறு இவர்களின் பின்னால் வந்து பக்கத்தில் வந்தும் திடீரென்று ரூட் மாறிச் சென்றுவிட்டார்களோ என்னவோ.. கடைசிவரையிலும் வரவேயில்லை..!  அச்சன்கோவில் காட்டுக்குள் ஏழாம் அறிவு சூர்யாவை போல ஒரு ஜடாமுடி சாமி.. கம்பு, சிலம்பமெல்லாம் சூப்பரா ஆடுறாரு.. கதாநாயகி அவரிடம் அபயம் தேட.. குங்பூ ஸ்டைலில் அவர் ஒரு பத்து நிமிஷம் இவர்களுடன் சண்டைபோட்டு கடைசியில் வேல்கம்பால் குத்துப் பட்டு சாகிறார். இவருடன் இருக்கும் ஒரு 6 வயது சிறுமியும் இவர்களை எதிர்த்து கடைசியில் உயிரை விடுகிறாள்..! அப்படியும் வெறித்தனம் அடங்காமல் துரத்தியிருக்கிறார் இயக்குநர்..!

காட்டுக்குள் துரத்தத் துவங்கி, பின்பு சோளக்காடு, கரும்புக் காடு என்றெல்லாம் பரந்து விரிந்து இறுதி யுத்தம் ஆற்று மணலில் நடக்கிறது..! 
இடைவேளைக்கு பின்பு போகும் இந்த ரத்தவெறியான திரைக்கதையைப் பார்த்து “எப்படா முடிப்பீங்க.. சீக்கிரமா அவங்களை கொன்னுட்டாச்சும் எங்களை விட்ருங்கப்பா..” என்று ஜனங்களை புலம்ப வைத்திருக்கிறார்கள்.. முடியலை..! இத்தனை வன்முறையும், குரூரமும், இரத்தச் சகதியும் கொண்ட கதை தேவைதானா..? இந்த மண்ணில் எடுப்பதற்குக் கதையா இல்லை..? ஏன் இந்த கந்தரக்கோலம்..?

இடைவேளைக்கு முன்பான  ஹீரோ-ஹீரோயின் லவ் சப்ஜெக்ட்டே பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தது.. அதையே இன்னும் கொஞ்சம் பில்டப்புடன் கொண்டு போயிருக்கலாம்..! இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களில் இவர்கள் காட்டும் இரத்த வெறியினால் அந்த அழகான காதல் கதை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது..!

படத்தின் ஹீரோ விஜய்வசந்த்.. இதில் நடிப்பதற்குக் கொஞ்சம் ஸ்கோப் இருக்கிறது..! ஆனால் வித்தியாசம் ஏதுமில்லை.. இந்தப் படம் ரிலீஸாகும் இதே நாளில் வேறொரு புதிய படத்திற்கு பூஜையும் போட்டுவிட்டார்கள். காசு இருக்கும்போது என்ன கவலை..? விபா என்னும் புதுமுகம் ஹீரோயின்.. இதில் அறிமுகம் என்றாலும், இதற்கு முன்பே நான் வெளியாகிவிட்டது..! காதல் காட்சிகளிலும், பாடல்களிலும் அழகாக மிளிர்கிறார்.. கோபப்படும்போது நடிப்பும் தெரிகிறது..! ஒரு புதுமுகமாக இருந்தும் இந்த துரத்தல் காட்சிகளிலெல்லாம் கஷ்டப்பட்டு நடித்திருப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது..! வெல்டன் விபா..!

பாடல் காட்சிகள் என்று நொள்ளையாக ஒன்று.. பாடல்களே காதில் விழுகவில்லை.. மூக்கால் பாடியிருக்கும் பாடகர்கள்.. சேஸிங்கின்போது பேக்கிரவுண்டில் ஒலிக்கும் சம்போ சிவ சம்போ பாடல் என்று பற்றாக்குறையாகவே இசை இம்சித்திருக்கிறது..!

இந்தப் படத்தையெல்லாம் தியேட்டரில் பார்க்கும் அப்பாவி பொதுஜனம் அடுத்த 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரவே மாட்டான் என்பது உறுதி.. இதனாலேயே பாதிக்கப்படப்போவது சின்ன பட்ஜெட் படங்களும், திரைப்படத் துறையும்தான்.. ஒருவரின் தவறுகளால் அத்துறையே எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதற்கு இப்படமே சாட்சியாக இருக்கும்..! முன்னர் 'நடுநசி நாய்களில்' இப்படித்தான் நம்மைக் குதறியெடுத்தார்கள். இப்போது இது..!

போவதும் போகாத்தும் உங்களுடைய விருப்பம்..!

18 comments:

Hemanth said...

Nan poven

”தளிர் சுரேஷ்” said...

அட கொடுமையே! தலைப்பை பார்த்து நல்ல படமா இருக்கும்னு நினைச்சேன்!

ராம்ஜி_யாஹூ said...

விசில் படக் கதையின் பாதிப்பு போல

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

:)..]]]

என்னைப் பார்த்து வருத்தப்படுறீங்களா..? ஒரு காலத்துல நீங்களும்தான் அனுபவிச்சீங்க.. மறந்திராதீங்க ராசா..!

உண்மைத்தமிழன் said...

[[[Hemanth said...

Nan poven]]]

அப்புறம் உங்க தலையெழுத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

அட கொடுமையே! தலைப்பை பார்த்து நல்ல படமா இருக்கும்னு நினைச்சேன்!]]]

நானும் அப்படி நினைச்சுத்தான் ஏமாந்துட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

விசில் படக் கதையின் பாதிப்பு போல]]]

இல்லை.. இயக்குநரை வேறு ஏதோவொரு உலகப் படம் ரொம்பவே பாதிச்சிருச்சு போலிருக்கு. அதான் இப்படி..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

அது என்னமோ தெரியலை,அறிமுக இயக்குனர்கள், லோ பட்ஜெட் படம் என்றால் ரொம்ப அறச்சீற்றம் காட்டுறிங்க ;-))

//இத்தனை வன்முறையும், குரூரமும், இரத்தச் சகதியும் கொண்ட கதை தேவைதானா..? இந்த மண்ணில் எடுப்பதற்குக் கதையா இல்லை..? ஏன் இந்த கந்தரக்கோலம்..?
//

விஷ்வரூபம் மட்டும் இந்த மண்ணுக்கான கதையா, அதில் வன்முறை இல்லையா? ரத்தம் தெறிக்கலையா, ஆனால் அதை உலகப்படம்னு தூக்கி வச்சூப்பீங்க :-))

உண்மையில் மதில் மேல் பூனை ஹாலிவுட் தரத்திலான கல்ட் கிளாசிக் வகைப்படம் ,அதை புரிந்துக்கொள்ள கொஞ்சம் உலகப்பட அறிவும்,பொது அறிவும் தேவை! இதை போல பல நூறு ஹாலிவுட் ஹாரர், கிரைம் திரில்லர் படங்கள் வந்துள்ளன.

SAW,the cell,wrong turn,வகையில் தமிழிலும் எடுக்க முயற்சித்திருக்கலாம், லோ பட்ஜெட், இன்ன பிறக்காரணங்களால், கொஞ்சம் மொக்கையாக போய் இருக்கும், சா சீரிஸ் படங்கள் பாருங்கள் ,இந்த வன்முறையெல்லாம் ச்சுச்சுபீனு சொல்வீங்க :-))


சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்,.ஹனிபல் எல்லாம் பார்த்தால் என்ன சொல்வீங்க?

தமிழில் லோகநாயகரை தவிற\ மத்த யாரும் உலகப்படம் எடுக்க விட மாட்டிங்க போல இருக்கே :-))

நம்பள்கி said...

அய்யா உண்மைத் தமிழரே!

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

//ஐயர் வீடென்ற போதிலும், பக்திப் பாடலை போட்டுவிட்டு டிவியில் எஃப் டிவி பார்க்கும் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து ஒரு மகன்..//


உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, அது என்னமோ தெரியலை,அறிமுக இயக்குனர்கள், லோ பட்ஜெட் படம் என்றால் ரொம்ப அறச்சீற்றம் காட்டுறிங்க ;-))]]]

இல்லையே.. சுமாரா இருந்தால்கூட வரவேற்கத்தான் செய்கிறேன்.. அடுத்தடுத்த படங்களில் ஜெயித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்..!

உண்மைத்தமிழன் said...

[[[//இத்தனை வன்முறையும், குரூரமும், இரத்தச் சகதியும் கொண்ட கதை தேவைதானா..? இந்த மண்ணில் எடுப்பதற்குக் கதையா இல்லை..? ஏன் இந்த கந்தரக்கோலம்..?//

விஷ்வரூபம் மட்டும் இந்த மண்ணுக்கான கதையா, அதில் வன்முறை இல்லையா? ரத்தம் தெறிக்கலையா, ஆனால் அதை உலகப் படம்னு தூக்கி வச்சூப்பீங்க))]]]

அது உலகப் படம்ன்னு நான் சொல்லலை.. சொன்னவங்ககிட்ட போய் கேளுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[உண்மையில் மதில் மேல் பூனை ஹாலிவுட் தரத்திலான கல்ட் கிளாசிக் வகைப் படம், அதை புரிந்து கொள்ள கொஞ்சம் உலகப் பட அறிவும்,பொது அறிவும் தேவை! இதை போல பல நூறு ஹாலிவுட் ஹாரர், கிரைம் திரில்லர் படங்கள் வந்துள்ளன.

SAW, the cell, wrong turn, வகையில் தமிழிலும் எடுக்க முயற்சித்திருக்கலாம், லோ பட்ஜெட், இன்ன பிறக் காரணங்களால், கொஞ்சம் மொக்கையாக போய் இருக்கும், சா சீரிஸ் படங்கள் பாருங்கள், இந்த வன்முறையெல்லாம் ச்சுச்சுபீனு சொல்வீங்க :-))

சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்,.ஹனிபல் எல்லாம் பார்த்தால் என்ன சொல்வீங்க?]]]

Saw, சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப், ஹனிபால் மூணும் பார்த்தாச்சு..! இது அந்த வகைப் படம்ன்னா ஹாலிவுட்டுக்கு போய் எடு்க்க வேண்டியதுதானே..? இங்க எதுக்கு..? கூட்டம் குடும்பத்தோட வருமா..? அப்புறம் எப்படி காசு தேறும்..? இங்கே உள்ளவங்களுக்கு அதையெல்லாம் ரசிக்கிற அளவுக்கு ரசிப்பு மனப்பான்மை இருக்கான்னு யோசிக்க வேண்டாமா...?

உண்மைத்தமிழன் said...

[[[தமிழில் லோகநாயகரை தவிற \ மத்த யாரும் உலகப் படம் எடுக்க விட மாட்டிங்க போல இருக்கே :-))]]]

யோவ்.. லோக நாயகரை வம்பிழுக்கலைன்னா உமக்கு தூக்கமே வராதா..?

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

அய்யா உண்மைத் தமிழரே! இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

//ஐயர் வீடென்ற போதிலும், பக்திப் பாடலை போட்டுவிட்டு டிவியில் எஃப் டிவி பார்க்கும் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து ஒரு மகன்..//]]]

அவாளும் நம்மவா மாதிரி "ஆச்சாரமான" குடும்பம்ன்னுதான் சொல்ல வந்தேன்..!

Unknown said...

Your reviews are full detail good knowledge.

வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஹாலிவுட்டுக்கு போய் எடு்க்க வேண்டியதுதானே..? இங்க எதுக்கு..? கூட்டம் குடும்பத்தோட வருமா..? அப்புறம் எப்படி காசு தேறும்..? இங்கே உள்ளவங்களுக்கு அதையெல்லாம் ரசிக்கிற அளவுக்கு ரசிப்பு மனப்பான்மை இருக்கான்னு யோசிக்க வேண்டாமா...?
//

விஷ்வரூபத்துக்கும் இதைத்தாங்க எல்லாரும் சொல்லுறாங்க, இந்த படம் தமிழ் மண்ணுக்கு தேவையா? இதை குடும்பத்தோட பார்க்க முடியுமா? இங்கே உள்ளவங்களுக்கு புரியுமானு :-))

அப்படிலாம் எடுக்கணும்னா ஹாலிவுட்டுக்கு போய் எடுத்து இருக்கலாமே, இங்கே எடுத்து வெளியிட்டுவிட்டு இதை புரிஞ்சுக்க உலக அரசியல் அறிவு, பொது அறிவு வேணும் என்பதும், நான் என்ன நடக்காததையா சொல்கிறேன் என்பதும் எப்படி சரியாகும்?

நம்ம ஊருக்கு மதில் மேல் பூனையா தேவையானு கேட்கிற உங்களுக்கு ,லோகநாயகர் படத்தைப்பார்த்து அப்படிக்கேட்க தோணலையே :-))

மதில் மேல் பூனை படக்குழுவுக்கு லோகநாயகர் அளவுக்கு விளமபரம் செய்ய தெரியலை :-))

உண்மைத்தமிழன் said...

வவ்வால்..

விஸ்வரூபம் காட்டுவது உலக அரசியல்.. தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு அவையெல்லாம் ஒரு பிரமிப்பு.. ஆர்வம்..! பார்க்கத்தான் செய்வார்கள்.. இன்னமும் ஹாலிவுட்டில் துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு ஓடத்தானே செய்கிறார்கள்.. ஏன்..?

ஆனால் இது போன்ற கதைகள் நமக்கு புதிதுதானே..? தியேட்டருக்கு வர்றவன் இந்தச் சோகத்தை அதிலும் குரூர சித்ரவதைகளை பார்க்க விரும்பும் ரசிகர்கள் அல்ல..!

பார்த்தால் ஒரு கல் ஒரு கண்ணாடி.. இல்லாவிடில் வழக்கு எண் போன்றவைகள்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[vi jay said...

Your reviews are full detail good knowledge.]]]

விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் விஜய்..!