சுடச் சுட - சினிமா விமர்சனம்

03-03-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இணையச் சாட்டிங் மூலம் பெண்களுடன் தொடர்பு கொண்டு பேசி,  அவர்களைக் கவர்ந்திழுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சைக்கோ கேரக்டரை காட்டும் சைக்கோ படம் இது..!

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இளம் பெண்கள் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் படத்தை எடுத்திருக்கிறேன் என்கிறார் படத்தின் இயக்குநர். ஆனால் முதலில் இதனைப் பார்க்க பெண்கள் வந்தால்தானே அது தெரிவதற்கு..? படம் 'ஏ' சர்டிபிகேட்.. படத்தின் டைட்டிலும், காட்சிகளும், விளம்பரங்களும் ஏதோ வில்லங்கத்தை சொல்வதுபோலவே இருக்கிறது.. பின்பு எப்படி பெண்கள் கூட்டம் வரும்..? இதே கதையில்தான் தற்போது நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.. எத்தனை தேறுமென்று தெரியவில்லை..!


நகரில் பல இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க துப்பில்லாத ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.. இவருக்கு ஒரு மேலதிகாரி.. இந்தக் கேவலத்துடன் சேர்த்து நான் சிகப்பு மனிதன் பாக்யராஜ் ஸ்டைலில் வேறொரு அதிகாரியாக படத்தின் இயக்குநர் இதயனே நடித்திருக்கிறார். இவரும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் சேர்ந்து கடைசியில் கண்டுபிடிக்கிறார்களாம்..!
இதயன் கேஸை விசாரிப்பதைவிட வடை, பஜ்ஜி, போண்டா பக்கத்தில் எந்த ஹோட்டலில் கிடைக்கும் என்பதையே அதிகமாக விசாரிக்கிறார்.. இடையிடையே இந்த வசனங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கும் ரிலீப்..! 

அதிசயமாக அழகான ஹீரோயின்.. நடிப்பு தெரிந்த ஹீரோயின்.. உண்மையாகவே அசத்தலாக நடித்திருக்கிறார் ஸ்ரீஇரா.(பொண்ணோட பேரே இதாங்க).. சாட்டிங்கில் சைக்கோவுடன் முதலில் பேசும் அவருடைய மாடுலேஷனும், அடுத்தடுத்து பாலியல் நோக்கில் பேசப்படும் வசனங்களை அப்பெண் எதிர்கொள்ளும் விதமும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள்..! அதேபோல் சைக்கோவை “லதா எங்கடா?” என்று கேட்டு டார்ச்சர் செய்யும்போது விதவிதமான ஆக்சனில் இவர் காட்டியிருக்கும் நடிப்பையும் வெகுவாக ரசிக்கலாம்..!

பொதுவாக இது போன்ற படங்களில் முழுமையான இயக்கத்தை பார்க்கவே முடியாது.. இதிலும் அப்படியே.. துண்டு, துண்டான காட்சியமைப்பு.. ஒழுங்கில்லாத கேமிரா கோணங்கள்.. உப்புச்சப்பில்லாத முக பாவனைகளுடன் மற்றவர்களெல்லாம் வந்து போய்க் கொண்டிருந்தாலும், ஸ்ரீஇராவும், இவருடைய தோழியாக நடித்திருக்கும் லீமாவும் மட்டுமே உருப்படியாக நடித்திருக்கிறார்கள்..

இதில் சைக்கோ கேரக்டரில் நளன் என்பவர் உருட்டித் தள்ளியிருக்கிறார்..! இவர் ஏன் இப்படியிருக்கிறார்..? எப்படி சைக்கோவாக மாறினார்.. என்கிற பின்புலத்தையெல்லாம் சொல்லாமல்.. ச்சும்மா கேடுகெட்டவன் என்கிற ரீதியில் கொண்டு போயிருக்கிறார்கள்..! கொஞ்சமே ஆறுதல் தருபவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஷோபனா வாசுதேவும்.. படத்தின் இயக்குநர் இதயனும்தான்..! 

சைக்கோ பற்றிய படம் என்பதற்காக இத்தனை கொடூரமாகத்தான் அத்தனையையும் காட்ட வேண்டுமா..? நிச்சயம், தியேட்டரில் இடைவேளையோடு பாதி பேர் எழுந்து போய்விடுவார்கள்.. படமெடுக்க தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் லோ பட்ஜெட்டில் எடுத்து 4 தியேட்டர்களில் ரிலீஸ் செய்துவிட்டு நானும் படமெடுத்துட்டேன்.. ரிலீஸ் செஞ்சுட்டேன்.. டைட்டில் கார்டுல இயக்குநரா என் பேரும் வந்திருச்சுன்னு சொல்றதுல என்ன பெருமை இருக்கப் போகிறது..? யாருக்குமே பிரயோசனமில்லாமல் ஒரு தொழிலைச் செய்வதினால் யாருக்குத்தான் லாபம்..? சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள், தாங்களே தங்கள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொள்கிறார்கள்.. அதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி..! 

இந்தப் படத்துக்கு இவ்ளோதான் எழுத முடியும்..! 

5 comments:

கோகுல் said...


உங்களையே அவ்ளோதான்னு சொல்லவைச்சுடுச்சா அண்ணே?

லோ பட்ஜெட் இயக்குனர்களே அண்ணனை இனியும் இப்படி எழுத வைக்காதீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[கோகுல் said...

உங்களையே அவ்ளோதான்னு சொல்ல வைச்சுடுச்சா அண்ணே? லோ பட்ஜெட் இயக்குனர்களே அண்ணனை இனியும் இப்படி எழுத வைக்காதீர்கள்.]]]

எழுதணுமான்னுகூட யோசிச்சேன்.. நேரம் இருந்ததால எழுதித் தொலைச்சேன்..! அவ்ளோதான்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

இந்த வாரம் சினிமா வா... ஆஆரமா சுடச்சுட 3 படம் விமர்சனம் ஆனால் ஒரு படமும் உருப்படியாவே இல்லையே?

நாலைஞ்சு படமாச்சும் "சுடச்சுட" சூடா போட்டிருக்கலாம் :-))

முன்னல்லாம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவேனு "பிரத்யோகமா" படம் எடுத்து "அவனும் அவளும்" என்றெல்லாம் பெயர் வச்சு வரும் ,நடு நடுவே குளியல் காட்சி ,ரேப் சீன் எல்லாம் ஓடும் :-))

அது மாதிரி எடுக்கலாம்னு எடுத்திருப்பார், நீங்க பார்த்தது "கட் வெர்ஷன்" கட்டிங் போடாத வெர்ஷன் எங்காவது புறநகர் தியேட்டரில் ஓடும் ,அங்கே பார்த்தா தான் "முழுசா" புரிஞ்சிக்க முடியும் இது போன்ற காவியங்களை :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, இந்த வாரம் சினிமா வா... ஆஆரமா சுடச்சுட 3 படம் விமர்சனம் ஆனால் ஒரு படமும் உருப்படியாவே இல்லையே? நாலைஞ்சு படமாச்சும் "சுடச்சுட" சூடா போட்டிருக்கலாம் :-))]]]

வந்ததில எல்லாமே அவுட்டுதான்.. சந்தமாமாவும், லொள்ளு தாதாவும் மட்டும்தான் தேறிருக்கு! கொஞ்சம் பார்க்குற மாதிரி இருந்தது இந்த இரண்டும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[முன்னல்லாம் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவேனு "பிரத்யோகமா" படம் எடுத்து "அவனும் அவளும்" என்றெல்லாம் பெயர் வச்சு வரும் ,நடு நடுவே குளியல் காட்சி ,ரேப் சீன் எல்லாம் ஓடும் :-)) அது மாதிரி எடுக்கலாம்னு எடுத்திருப்பார், நீங்க பார்த்தது "கட் வெர்ஷன்" கட்டிங் போடாத வெர்ஷன் எங்காவது புறநகர் தியேட்டரில் ஓடும் ,அங்கே பார்த்தா தான் "முழுசா" புரிஞ்சிக்க முடியும் இது போன்ற காவியங்களை :-))]]]

இது மாதிரில்லாம் இப்போ எடுக்க முடியாது வவ்ஸ்..! ஓட்டுறதுக்கு தியேட்டர்களும் இல்லை.. நடிக்கிறதுக்கு ஆளுகளும் இல்லை..!