04-01-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நட்பை மையமாக வைத்து வந்திருக்கும் 101-வது படம் இது..! ரொம்ப நல்லவனாகவே இருக்கும் ஹீரோவும், நல்லவனாக நடிக்கும் நண்பனும் சேர்ந்திருந்தால் என்ன நடக்கும் என்பதையும், அதற்கு காதலை ஒரு சப்ஜெக்ட்டாகவும் வைத்து கதை பின்னியிருக்கிறார்கள்..!
இப்போது ஆரம்பித்து நடு, நடுவே பிளாஸ்பேக் கதையாக கொண்டு போயிருக்கிறார்கள். வர்ஷனின் மகன் தன் அப்பாவை காணாமல் தேடுகிறான். ஒருவேளை சொந்த ஊருக்குப் போயிருப்பாரோ என்ற நினைப்பில் நண்பர்களுடன் கோபாலபுரம் நோக்கி காரில் செல்கிறான். அதே கோபாலபுரம் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் வர்ஷன் தன் பிளாஷ்பேக் கனவுகளுடன் உட்கார்ந்திருக்கிறார்.. இங்கேயிருந்து பிளாஷ்பேக் துவங்குகிறது..!
ஹீரோ சஞ்சீவும், இன்னொரு ஹீரோ வர்ஷனும் பிளஸ் டூ படிக்கும் ஸ்டூடண்ட்ஸ்.. இதில் சஞ்சீவ் 2 வருஷம் கோட் அடிச்சு அப்பாவின் ஆசைக்காக படிச்சுக்கிட்டிருக்காரு. ஹீரோயின் வெண்ணிலாவை பார்த்தவுடனேயே வர்ஷனுக்கு புடிச்சுப் போகுது.. லவ் லெட்டர் எழுதி வெண்ணிலா புத்தகத்துக்குள்ள வைச்சர்றார்.. அதே ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டரா இருக்கும் வர்ஷனோட அப்பாவான ராஜ்கபூர், அந்த நேரம் பார்த்து கிளாஸுக்கு வர்றாரு.. வர்றவரு கண்ல இந்த லவ் லெட்டர் பட.. யார் எழுதினதுன்னு கேட்டு மாணவர்களை மிரட்டுறாரு. வர்ஷனை காப்பாத்த வேண்டி சஞ்சீவ் தான்தான் செஞ்சேன்னு சொல்லி பழியை தன் மேல ஏத்துக்குறாரு..!
சஞ்சீவை ஸ்கூலைவிட்டு வெளில அனுப்பிர்றாங்க. இவர் மேல பரிதாப்ப்பட்ட வர்ஷன் வீட்ல இருந்து பணத்தைத் திருடிட்டு வந்து சஞ்சீவ்கிட்ட கொடுக்குறாரு.. இந்த நேரம் பார்த்து வெண்ணிலா தான் சஞ்சீவை லவ் பண்றதா சொல்ல.. ஒரு டூயட்டுக்கு சிச்சுவேஷன் சிக்கிருச்சு..! வர்ஷன்கிட்ட இருந்து டிவிஎஸ் 50 வண்டியை எடுத்துக்கிட்டு ஹீரோயினை உக்கார வைச்சு ஊரைச் சுத்துறாரு சஞ்சீவ். இது தெரிஞ்சு ராஜ்கபூர் தன் பையனை கண்டிக்க.. அப்படியே உல்டா அடிக்கிறான் பையன்..
சஞ்சீவ்தான் தன்னை மிரட்டி பணம் பிடுங்குனதாவும், இப்போ வண்டியை வேற மிரட்டி எடுத்துக்கிட்டதாவும் சொல்ல ராஜ்கபூர், சஞ்சீவின் வீடு தேடி வந்து அவங்கப்பா தலைவாசல் விஜய்யை திட்டிப்புடுறாரு.. விஜய் மவனை அடிச்சுப்புடுறாரு.. வெண்ணிலாவும் சஞ்சீவை நடிக்கிறான்னு சொல்லி லவ்வை கட் பண்ணிட்டு போயிடறாங்க. பையன் சோகத்துல ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சுல போய் படுத்துக்க.. அங்கே வேலை பார்க்குற பெஞ்சமின் மாமா இரக்கப்பட்டு வெளியூர்ல இருக்குற ஒரு ரைஸ் மில்லுல வேலைக்கு சேர்த்து விடுறாரு.. அங்க போய் பணம் சம்பாதிச்சு வீட்டுக்கு மாசம் 2000 அனுப்பி நல்ல பேரு எடுக்கிறாரு சஞ்சீவ்..
சஞ்சீவோட தங்கச்சி வெண்ணிலாகிட்ட போயி “ஸ்கூல் புக்குல லவ் லெட்டரை வைச்சது சஞ்சீவ் இல்லை.. வர்ஷன்தான்”னு சொல்லுது.. இதைக் கேட்டு மளுக்குன்னு தண்ணியை கண்ணுல இருந்து கொட்டுது ஹீரோயின்.. திரும்பவும் லவ் ரீ ஸ்டார்ட் ஆவுது.. சஞ்சீவும் ஊர்ல இருந்து திரும்பி வர்றாரு.. அதுக்குள்ள 4 வருஷம் ஓடிப் போவுதாம்..! இப்போ வெண்ணிலா காலேஜ் முடிச்சிருச்சாம்.. வர்ஷன் பி.இ. முடிச்சிட்டானாம்.. வெண்ணிலாவும், சஞ்சீவும் இதுக்கு இடைல 2 டூயட்டை பாடி கொளுத்துறாங்க..
வெண்ணிலாவோட அப்பாவுக்கு நல்ல படிச்ச பையன்தான் தனக்கு மாப்பிள்ளையா வரணும்னு கொள்ளை ஆசை.. ராஜ்கபூர்கிட்ட வர்ஷனை மாப்பிள்ளையா கொடுங்கன்னு கேக்குறாரு.. இந்த நேரத்துல தலைவாசல் விஜய் தன் தங்கச்சி பொண்ணை சஞ்சீவுக்கு பேசி முடிச்சிடறாரு.. சஞ்சீவும் குழப்பத்துல இருக்காரு.. வர்ஷன் மாப்பிள்ளை கெத்துல வெண்ணிலாவை பார்க்கப் போக.. அவுக என் மனசுல சஞ்சீவ்தான் இருக்காகன்னு சொல்லிப்புடுறாங்க.. வர்ஷன் வழக்கம்போல “அப்படியா.. அவர் எனக்கு அண்ணன்தான்.. அப்போ நானே உங்களை சேர்த்து வைச்சுடறேன்.. நீங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்குங்க..” என்று ஐடியா கொடுக்குறான்..!
இவனை நம்பி மறுநாள் காலை ரயில்வே ஸ்டேஷனில் பெட்டியுடன் சஞ்சீவ் காத்திருக்க.. வர்ஷன் வந்து “வெண்ணிலா அங்க இருக்கா”ன்னு சொல்லி அவனை கூட்டிட்டுப் போய் அங்கே தயாரா இருந்த ஆளுககிட்ட மாட்டி விட்டுடறான்.. சஞ்சீவை பொலி போட்டுறானுக.. அப்புறம் சுமூகமா வெண்ணிலாவை வர்ஷனே கல்யாணம் பண்ணிட்டு குழந்தையும் பொறக்குது. குழந்தை பொறந்த அன்னிக்குத்தான் சஞ்சீவ் செத்துப் போயிட்டான்ற மேட்டரே வெண்ணிலாவுக்குத் தெரியுது..! வீர ஆவேசமா அப்பா, புருஷன்கிட்ட நியாயம் கேட்டவ.. மொட்டை மாடில இருந்து கீழ விழுந்து செத்துப் போயிடறா.. இப்போ கைக்குழந்தையோட வர்ஷன் கதறி அழுகுறான்..
கட் செஞ்சா.. 25 வருஷம் கழிச்சு.. அதே நாள்.. அதே நேரம்.. அதே பெஞ்சுல வயசான வர்ஷன் உக்காந்திருக்கான்.. வெண்ணிலாவுக்கும், சஞ்சீவுக்கும் துரோகம் செஞ்சதை நினைச்சு விஷத்தைக் குடிச்சு உசிரை விட்டுர்றாரு அந்த மானஸ்தன்.. இவ்ளோதாங்க படம்..!
ஹீரோவா சஞ்சீவ்.. ஏற்கெனவே ஆச்சரியங்கள் படத்துல நடிச்சவரு.. நல்லா டான்ஸ் ஆடுறாரு.. கொஞ்சமா நடிக்கிறாரு.. பரவாயில்லைதான்.. ஆனா இவரைவிட வர்ஷனுக்குத்தான் நடிப்புல ஸ்கோப் அதிகம். காமெடி நடிகர் ஜெயமணியோட பையனாம். அப்பாவி கேரக்டருக்கு கச்சிதமாத்தான் இருக்காரு.. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கே..! பொழைச்சுப்பாரு..!
ஹீரோயினா ஒரு பச்சைப் புள்ளைய கொண்டாந்திருக்காங்க. மணிஷீஜித்.. ‘கம்பீரம்’ படத்துல சரத்குமாருக்கு மகளா நடிச்சதாம் 4 வயசுல.. இப்போ என்ன 13 வயசு இருக்குமா..? சின்னப் பொண்ணு.. பார்க்கவே பரிதாபமா இருக்கு.. ஸ்கூல்ல படிக்குறதுக்கு பொருத்தமான்னு இயக்குநர் இழுக்குறாரு.. இருந்தாலும் நமக்குத்தான் ஹீரோயினாவே பார்க்க முடியலை.. ஆனா பொண்ணுக்கு நடிப்பும், டயலாக் டெலிவரியும் நல்லாவே வருது.. பிக்கப் பண்ணினா நல்லதுதான்..!
1985-கள்ல வந்த கள்ளக்காதல் மேட்டரை இங்கேயும் வைச்சு, அதுக்கு டபுள் மீனிங் டயலாக்குகளையும் கொடுத்து “மதினி, மதினி”ன்னு அந்த பேரையும் சேர்த்து கெடுத்து வைச்சிருக்காங்க.. சென்சார்ல எப்படி வுட்டாங்கன்னுதான் தெரியலை..! கிராமத்துல இதெல்லாம் சகஜம்ன்னு இவுக சொன்னாலும், இது படத்துக்குத் தேவையில்லாதது..!
இப்போதெல்லாம் இது மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களும் தங்களது திருமுகத்தை ஒரு சீன்லயாவது காட்டணும்னு துடியாய் துடிக்கிறாங்க. அது போலவே இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஒரு குத்துப் பாட்டுல செம ஆட்டம் ஆடியிருக்காரு. அவருக்கு இதுலேயே திருப்தியாயிருக்கும்னு நம்புறேன்..! அதுனால நாம அவரை பத்தி ஒண்ணும் கவலைப்பட தேவையில்லை..!
பிரம்மாவின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது ஆச்சரியம்தான்.. மற்றபடி ஒளிப்பதிவு, எடிட்டிங் பற்றியெல்லாம் படம் பார்த்தவங்களே கவலைப்படலை.. நீங்க ஏன் எதிர்பார்க்குறீங்க..? நட்பின் வலிமையைச் சொல்லியிருக்கேன்னு இயக்குநர் சொன்னாலும், வர்ஷனின் கேரக்டர் ஸ்கெட்ச் மிரட்டலான அப்பாவிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவி புள்ளையாத்தான் காட்டுது..! ஏதோ வெள்ளந்தியா பேசுறான்.. பழகுறான்னு எடுத்துக்கிட்டாலும், சஞ்சீவை காட்டிக் கொடுக்குற சீன் வரும்போது ஏதோ வில்லன் மாதிரி முகத்தைக் காட்டுறது மனசுல ஒட்ட மாட்டேங்குது.. இதனாலேயே கிளைமாக்ஸ்ல ஐயோ பாவமெல்லாம் வராம, சீக்கிரமா ஆம்புலன்ஸை கூட்டிட்டு எங்களை விட்ருங்கப்பான்னு சொல்ல வைக்குது..!
அவ்வளவு சின்ன ஊர்ல இந்தப் பொண்ணை கூட்டிட்டு டிவிஎஸ் வண்டில சுத்துறது ஊர்க்காரங்க கண்லேயே படலைன்னு சொல்றது ரொம்பவே டூ மச், டைரக்டர் ஸார்..! சஞ்சீவ் செத்ததுகூட தெரியாமலேயே ஒரு வருஷமா அந்தப் பொண்ணு வீட்ல இருந்துச்சுன்னா சொன்னா எவனால தாங்கிக்க முடியும்..? லவ் லெட்டர்ல இருக்குற கையெழுத்தை வைச்சுக்கூட தன் மகனான்னு ராஜ்கபூரால கண்டு பிடிக்க முடியாதா..? அப்புறம் அவரென்ன ஹெட்மாஸ்டரு..? - இப்படி படத்துல இருக்குற லாஜிக் ஓட்டைகளை கேட்டுட்டே போலாம்.. போதும்..
ஏதோ ஆசைப்பட்டு தனது முதல் படத்தை எடுத்துக் கொடுத்திருக்காரு இயக்குநர்.. அடுத்த படத்துல நிச்சயமா ஜெயிக்கிற மாதிரி ஒரு நல்ல கதையோட, சிறந்த இயக்கத்தோட வரட்டும்..! குத்துப் பாட்டில் முகம் காட்டி தனது இருப்பை நிலை நாட்டிக் கொண்ட தயாரிப்பாளருக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்..!
|
Tweet |
6 comments:
// பிக்கப் பண்ணினா நல்லதுதான்..!//
அப்ப பண்ணிருங்க :)
உங்க விமர்சனமே படம் பார்த்தப்போல இருப்பதால் இதே போதும்ண்ணா!
நல்ல விமர்சனம்
[[[Caricaturist Sugumarje said...
//பிக்கப் பண்ணினா நல்லதுதான்..!//
அப்ப பண்ணிருங்க :)
உங்க விமர்சனமே படம் பார்த்த போல இருப்பதால் இதே போதும்ண்ணா!]]]
அப்ப சரி.. விட்ருங்க..! காசு மிச்சம்ன்னே நினைச்சுக்குங்க..!
[[[Hemanth said...
நல்ல விமர்சனம்.]]]
வருகைக்கு நன்றி ஹேமந்த் ஸார்..!
//தயாரிப்பாளருக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்..!
//
ungalukkum valthukal annae...
[[[ஜெட்லி... said...
//தயாரிப்பாளருக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்..!//
ungalukkum valthukal annae...]]]
எதுக்கு..? இப்படி உங்களுக்காக கஷ்டப்பட்டு படங்களை பார்த்து விமர்சனம் எழுதி உங்களை காப்பாத்துறதுக்கா..?
Post a Comment