27-01-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் முணுமுணுப்புடன் இருந்த கருத்து வேறுபாடுகள் இன்றைக்கு வெளிப்படையாக வெடித்து முதலாளிகளையும், தொழிலாளர்களையும் ஆளுக்கொரு பக்கமாக பிரித்திருக்கிறது..!
பெப்சி எனப்படும் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் 23 திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்துள்ளன.
1. தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கம்
2. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்
3. தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
4. தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம்
5. தென்னிந்தியத் திரைப்பட படத் தொகுப்பாளர்கள் சங்கம்
6. தென்னிந்தியத் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்
7. திரைப்பட நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கம்
8. தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம்
9. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை இயக்குநர்கள் சங்கம்
10. தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம்
11. தென்னிந்தியத் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் சங்கம்
12. தென்னிந்திய திரைப்பட உடை, அலங்காரக் கலைஞர்கள் சங்கம்
13. தென்னிந்திய சலனப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம்
14. திரைப்படத் தயாரிப்பு உதவியாளர்கள் சங்கம்
15. திரைப்பட வெளிப்புற ஒளி ஊழியர்கள் சங்கம்
16. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வெளிப்புறப்
படப்பிடிப்பு யூனிட் டெக்னீஷியன்கள் சங்கம்
17. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அரங்க அமைப்பு ஊழியர்கள் சங்கம்
18. தென்னிந்திய வெண்திரை சக நடிகர்கள் சங்கம்
19. திரைப்பட (சக நடிகர்கள்) முகவர்கள் சங்கம்
20. தென்னிந்திய திரைப்பட ஸ்டில் புகைப்படக்காரர்கள் சங்கம்
21. தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாகன ஓட்டுநர்களின் சங்கம்
22. தென்னிந்தியத் திரைப்பட நளபாக ஊழியர்கள் சங்கம்
23. தென்னிந்திய திரைப்பட மகளிர் ஊழியர்கள் சங்கம்
இந்த 23 சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2007-2010-ம் ஆண்டுகளுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து, புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுவரையிலும் அது நடக்கவில்லை. காரணம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம்.
அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த இராம.நாராயணன் மீதும், அப்போதைய நிர்வாகிகள் மீதும் பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்து ஆட்சேபணை தெரிவித்து வந்த காரணத்தினால், இராம.நாராயணனால் சம்பளப் பிரச்சினை பற்றி பெப்ஸிடம் பேசுவதற்கு ஒரு கமிட்டியை கூட போட முடியவில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அப்போது பெப்சியின் தலைவர் வி.சி.குகநாதன். எம்.ஜி.ஆரின் பக்தராக பல வருடங்களாக திரையுலகில் வலம் வந்த இவர், கடந்த ஆட்சிக் காலத்தில் கலைஞரின் அதி தீவிர பக்தராகிவிட்டார். பேசுவோம்.. ஒண்ணும் அவசரமில்லை.. என்று பேச்சுவார்த்தையை தொங்கலில் போட்டுவிட்டாராம்..! எதிரணியில் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டிய இராம.நாராயணனும், அதி தீவிரமான தி.மு.க. விசுவாசி என்பதால் இருவரும் கை கோர்த்து வலம் வந்தார்கள். தொழிலாளர்கள் அமைதி காத்தார்கள்..!
மாநில சட்டசபைக்கான தேர்தல் நெருங்குகிறது.. இந்த நேரத்தில் தயாரிப்பாளர் கவுன்சிலிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது. இந்த ஊதிய விவகாரத்தில் ஏதாவது ஏடாகூடமாகிப் போனால் மீண்டும் தி.மு.க. சார்பானவர்கள் ஜெயிக்க முடியுமா என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இராம.நாராயணன் அணியினர் ரொம்பவே யோசித்திருக்கிறார்கள். பிரச்சினையை ஆறப் போட்டுவிட்டு சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்பு பெப்சியுடனான பேச்சுவார்த்தை மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே சென்றுள்ளார்கள்..!
சட்டசபைத் தேர்தலும் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஆத்தாவின் வெற்றி உறுதியான அந்த இரவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணனும், செயலாளர் சிவசக்தி பாண்டியனும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டுப் போனவர்கள், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஓட்டு போட மட்டுமே பிலிம் சேம்பருக்கு திரும்பி வந்தார்கள். தலைவர் இல்லாத நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், எதிர்ப்பே இல்லாமல் தான் தலைவராக இருக்க விரும்புவதாக கூற, அவர் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்குப் பின்பு கடந்த 2011-ம் ஆண்டு மே 31-ம் தேதியன்று பெப்சியின் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூடி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எப்படி மேற்கொள்வது என்று பேசியிருக்கிறார்கள். 2011 ஜூன் 3-ம் தேதி முதல், ஜூன் 30-ம் தேதி வரை தினமும் இரு தரப்பினரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை தயார் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.. மறுநாள் 2011, ஜூன் 1-ம் தேதியன்று பெப்சி அலுவலகத்தில் அனைத்துச் சங்கத்தின் நிர்வாகிகளையும் அழைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டி தாங்களே ஒரு ஊதிய உயர்வை நிர்ணயித்து இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று சொல்லி ஒரு கடிதத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு அனுப்பியிருக்கிறார்கள் பெப்ஸி அமைப்பினர்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மறுபடியும் பெப்ஸிக்கு கடிதம் எழுதி, நாம் முன்பே பேசியது போல ஜூன் 3-ம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்த அழைப்பை ஏற்று, பெப்ஸி அமைப்பு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.
இதற்கிடையில் பெப்சியிலும் ஒரு குழப்பம். வி.சி.குகநாதன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் அதுவரையிலும் பொருளாளராக இருந்த ராமதுரையை பொறுப்பு தலைவராக நியமித்தது பெப்சி.
அந்தப் பக்கம் தயாரிப்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலில் சங்கம் இரண்டாக பிளவுபட்டு நிற்க.. உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, பேச்சுவார்த்தையும் அப்படியே தொங்கலில் விடப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் புதிய அணி பொறுப்பேற்ற பின்பும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கிடைத்து தினச் சம்பளம் பெறும் 9 சங்கங்களில் 5 சங்க தொழிலாளர்கள் கேட்ட ஊதிய உயர்வினை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது. மிச்சமிருந்த 4 சங்கங்களின் பேச்சுவார்த்தைக்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தை பெப்சி அணுகியபோதுதான் பிரச்சினை துவங்கி இப்போதைய நிலைமை வரைக்கும் வந்துள்ளது.
இதற்கிடையில் உயர்த்தப்பட்ட புதிய ஊதியத்தின் கீழ் சில சங்க தொழிலாளர்கள் பல படப்பிடிப்புகளில் பணியாற்றி வந்திருக்கிறார்கள். ஒஸ்தி படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சம்பளம் தரப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் சில படப்பிடிப்புகளில் பழைய சம்பளத்திற்கும் தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். புதிய ஊதியத்தை கேட்டபோது ஒப்பந்தம் கையெழுத்தாகட்டும். அதன் பின்பு தருகிறோம். அதுவரையில் பழைய ஒப்பந்த்த்திலேயே வேலை பாருங்கள் என்று சில தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களை வற்புறுத்தியிருக்கிறார்கள். வேலை வேண்டும்.. இன்றைக்கு சம்பளம் வேண்டுமே என்ற அன்றாட பிரச்சினை காரணமாக சில தொழிலாளர்கள் பழைய சம்பளத்திற்கே பணியாற்றி வந்திருக்கிறார்கள்..!
இதில் செட் அஸிஸ்டெண்ட் மற்றும் லைட்மேன், புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் போன்ற சங்கங்கள் எந்தெந்த படப்பிடிப்புகளுக்கு யார், யாரை அனுப்பி வைப்பது என்கிற அதிகாரம் படைத்தவை. சங்கத்தின் மூலமாகவே இவர்கள் வேலைக்கு வருவதால், புதிய சம்பளம் கிடைக்கும் படப்பிடிப்பு, பழைய சம்பளம் கொடுக்கப்படும் படப்பிடிப்பு என்ற குழப்பத்தில் தொழிலாளர்களை பிரித்து அனுப்ப முடியாமல் அவர்களுக்குள்ளேயே சிக்கல்களை உருவாகியுள்ளது.
கடைசியாக இந்த மாதம் 12-ம் தேதியன்றும் ஊதிய உயர்வுக்காக இரு தரப்பினரும் பேசியிருக்கிறார்கள். அப்போதும் கையெழுத்தாகாமல், ஜனவரி 19-ம் தேதியன்று பெப்ஸியின் பொதுக்குழுவைக் கூட்டி அதில் பேசிய பின்பு மீண்டும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருவதாக பெப்ஸி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சொன்னது போலவே நடந்த பெப்ஸியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பல உறுப்பினர்கள் பழைய சம்பளத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதே வேலை பார்க்கும் சில தொழிலாளர்கள் புது சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இருவருக்குமிடையில் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதனை உடனேயே சரி செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டுகளாகியும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுத்தடிப்பது தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குச் சமம் என்று பலரும் பெப்ஸி நிர்வாகிகளை காய்ச்சி எடுத்திருக்கிறார்கள்.
நிர்வாகிகளில் அதிகமானோரின் கருத்துப்படி உடனடியாக புதிய ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே இனிமேல் நமது தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்று பெப்சி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது இதன் சூழலில்தான்..!
அறிக்கையை பத்திரிகைகளில் பார்த்த உடனேயே சூடாகிவிட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எப்படி எங்களிடம் சொல்லாமல் நீங்களே அறிவிக்கலாம் என்று கோபப்பட்டிருக்கிறார்கள். பெப்ஸி அமைப்பினரோ, நீங்கள்தான் கையெழுத்துக்கு முன் வர மறுக்கிறீர்களே.. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடிப்பது ஏன் என்று திருப்பிக் கேட்டுள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தையே ஈகோ பிரச்சினையாகிவிட, தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற்றது.
கூட்டம் துவங்கியது முதலே எங்களைக் கேட்காமல் ஊதிய உயர்வினை தன்னிச்சையாக அவர்களாக எப்படி அறிவிக்கலாம் என்று ஆரம்பித்து, இறுதியில் பெப்ஸி தொழிலாளர்களின் மீதான தனிப்பட்ட தாக்குதலில் கொண்டுபோய் முடித்துவிட்டதுதான் சோகம்..!
வந்திருந்த தயாரிப்பாளர்களில் முக்கால்வாசி பேர் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்கள் தங்கள் பங்குக்கு சில சங்கங்களின் அராஜக செயல்பாடுகளினால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்..!
கேமிரா அஸிஸ்டெண்ட்டுகள், செட் அஸிஸ்டெண்ட்டுகள், தயாரிப்பு உதவியாளர்கள், நளபாக ஊழியர்களை வலுக்கட்டாயமாக தங்களது தலையில் சுமத்துவதாக பல தயாரிப்பாளர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். இதில் உண்மை என்னவெனில் கேமிராவை வாடகைக்கு எடுத்தால் அந்த நிறுவனத்தில் இருந்து 2 அஸிஸ்டெண்ட்டுகளை கட்டாயமாக அனுப்பி வைப்பார்கள். கூடுதல் உபகரணங்களை நீங்கள் வாங்கினால் அதற்கேற்றாற்போல் கூடுதல் தொழிலாளர்களை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.. இது போக ஒளிப்பதிவாளரும் தனது பங்குக்கு 2 அல்லது 3 உதவியாளர்களை வைத்திருப்பார்கள்..! ஒளிப்பதிவாளரின் தரத்திற்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்..! 5 பேருக்கு பேட்டா காசு, சம்பளக் காசு அதிகமாச்சே.. 3 பேரை வைத்து வேலை செய்ய முடியாதா..? ஒருத்தரை அனுப்பி வைக்கக் கூடாதா..? எதுக்கு 2 பேரை தலைல கட்டுறீங்க..? செட் அஸிஸ்டெண்ட் ஒருத்தரை அனுப்புங்க போதும்னு சொன்னா கேக்குறதுல்ல.. 2 பேரை அனுப்பி வைச்சுக் கொல்றாங்க.. அவனுக்கு எவன் சம்பளம் கொடுப்பான்..? பேட்டா கொடுப்பான்..? என்றெல்லாம் சில தயாரிப்பாளர்கள் கொதித்தார்களாம். இத்தனைக்கும் ஒரு செட் அஸிஸ்டெண்ட்டுக்கு தினச் சம்பளம் வெறும் 350 ரூபாய்தான். இதுவே அதிகம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..!
எப்போதும் கீரியும், பாம்புமாய் இருக்கும் ராதாரவியும், பாரதிராஜவும் இந்த மேடையில் புதுமணத் தம்பதிகள்போல் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தது ஆச்சிரியமானதுதான்.. அதைவிட ஆச்சரியம்.. 2 பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி வைத்துக் கொண்டு மேடையில் அவ்வப்போது மைக்கை பிடித்து தயாரிப்பாளர்களுக்கு பூஸ்ட் கொடுத்ததுதான்..!
பாரதிராஜாவின் பேச்சும் படு சூடாகவே இருந்தது என்கிறார்கள். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு.. சென்ற வாரம் தேனியில் நடைபெற்ற அவருடைய அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தில் வேலை செய்ய சென்ற தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்தைக் கேட்க, பாரதிராஜா தர மறுத்திருக்கிறார். அப்படியானால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று அவர்கள் சொல்லியிருக்க.. அப்படியே அத்தனை பேரையும் சென்னைக்கு பேக்கப் செய்து அனுப்பி வைத்திருக்கிறார் பாரதிராஜா. அந்தக் கோபத்துடனேயே சென்னைக்கு பறந்தோடி வந்திருக்கிறார் இயக்குநர் இமயம். ரவிபிரசாத் நிறுவனத்தில் கேமிராவை பெற்றுவிட்டு தொழிலாளர்கள் புது ஊதியத்திற்காக வேலை செய்ய மறுத்த கதையையும் பாரதிராஜா மேடையிலேயே கூறினார்.
பெப்சி அமைப்பின் மீது பாரதிராஜாவுக்கு நீண்ட பல வருடங்களாக தனிப்பட்ட கோபமும் உண்டு. 'கிழக்குச் சீமையிலே' படத்தின்போது அப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தங்களது சங்கத்தை சேர்ந்தவர்களை நடிக்க வைக்காமல் லோக்கல் ஆட்களை நடிக்க வைத்ததாக கடைசி நிமிடத்தில் பெப்ஸியில் புகார் கொடுத்து 50000 ரூபாய் நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் யூனியன். அப்போதே இதனை கடுமையாக எதிர்த்துப் பேசிய பாரதிராஜா இதன் பின்பு மீண்டும், மீண்டும் வேண்டுமென்றே லோக்கல் ஆட்களையே தனது படங்களில் நடிக்க வைத்து வருகிறார்..! இதற்கு பின்பு ஒவ்வொரு முறையும் யூனியன் புகார் கொடுப்பதும், பெப்சி விசாரிக்க முடியாமல் தவிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..!
“கக்கத்தில் கருப்புப் பணம் வைத்திருக்கும் ஒரு நடிகர் இங்கேயிருந்து டில்லிக்கு சென்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். பக்கத்தில் இருக்குற முல்லைப் பெரியாறுக்காக அவர் ஏன் வாய் திறக்கவில்லை..” என்று நடிகர் விஜய் பற்றி பாரதிராஜா கூறியிருந்த கருத்துக்கு எஸ்.ஏ.சி.யிடம் பதில் கருத்து கேட்டபோது “விரைவில் சொல்கிறேன்..” என்று மட்டுமே சொல்லியிருந்தார். இங்கே மேடையில் அதையெல்லாம் தூரமாக வைத்துவிட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மட்டுமே பாவனை காட்டினார் எஸ்.ஏ.சி.
கடைசியாக பேச வந்த நடிகை ஜெயசித்ராவிடம் இருந்து மைக்கை பிடுங்குவதற்கு படாதபாடுபட்டார்கள்..! ஆனாலும் அம்மணி தான் பேச வேண்டியது அத்தனையையும் பேசிக் கொட்டிவிட்டுத்தான் அமர்ந்தார். அவருடைய மகனை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய படப்பிடிப்பில் மேக்கப் கலைஞர்கள் நேரத்தை வீணாக்கி டபுள் பேட்டா கொடுக்க வைத்ததாகக் குற்றம் சாட்டினார். இவரை போலவேதான் முக்கால்வாசி தயாரிப்பாளர்கள் புகார் புராணம் பாடினார்கள்.
கடைசியாக பேச வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், "தன்னிச்சையாக பெப்சி ஊதிய உயர்வினை அறிவித்ததால் நமக்கும் அவர்களுக்கும் இடையில் எந்தவித ஒப்பந்தமும் இப்போது இல்லை.." என்று தடாலடியாக அறிவித்தார். "15 பேர் கொண்ட குழுவை அமைத்து அவர்கள் நிர்ணயிக்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு 2 நாட்களில் அனுப்பி வைப்போம். அதனை மட்டுமே தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும். கூடுதலாக வழங்கினால் அந்தத் தயாரிப்பாளருக்கு யூனியன் எந்தவிதத்திலும் ஒத்துழைக்காது.." என்றார் சந்திரசேகர்.
இந்த நேரத்தில்தான் இயக்குநர் சேரன் குடுகுடுவென்று மேடைக்கு ஓடிச் சென்று எஸ்.ஏ.சி.யிடம் ஏதோ வாதாட.. மேடையில் இருந்த கே.ராஜனும், டி.ராஜேந்தரும் சேரனுடன் மல்லுக் கட்டினார்கள். சேரனுக்கு ஆர்.கே.செல்வமணியும், பல தயாரிப்பாளர்களும் சேர்ந்து கொண்டு ஆதரவு கொடுக்க.. டி.ராஜேந்தர் மீண்டும் மைக்கை பிடித்து, “இப்ப இருந்த பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணியாச்சு. அடுத்து புதுசா வரப் போற பொண்டாட்டி, கருப்பா சிவப்பா, குட்டையா நெட்டையான்னு நாமதான் முடிவு பண்ணணும்.. அவளை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது.. எங்க வைச்சு பண்ணிக்கிறது..? எவ்வளவு செலவுல கல்யாணத்தை வைச்சுக்குறதுன்னு முடிவெடுக்க வேண்டியது நாமதான்.. பொண்டாட்டி இல்லை.. புரிஞ்சதா..?” என்றார்..!
பல தயாரிப்பாளர்களும் மேடையேறி எஸ்.ஏ.சி.க்கு அட்வைஸ் கொடுக்க பாரதிராஜாவே எழுந்து வந்து சேரனையும், செல்வமணியையும் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி., “நாம் யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்வோம்.. அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பதையும் நாம்தான் தீர்மானிப்போம்..” என்றோம். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. (இதைத்தான் சேரன் தரப்பினர் வற்புறுத்தியிருப்பார்கள் என்று யூகிக்கிறேன்)
தயாரிப்பாளர்களின் கை தட்டலையே ஒப்புதலாக எடுத்துக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற.. பாரதிராஜா மீண்டும் மைக்கை பிடித்து தயாரிப்பாளர் கவுன்சில் எடுத்திருக்கும் இந்த்த் தீர்மானத்திற்கு இயக்குநர்கள் சங்கம் முழு ஆதரவளிக்கும் என்று ஒரு போடு போட்டார். உடனேயே கலைப்புலி தாணு எழுந்து சென்று பாரதிராஜாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார். மேடையே ராசாவுக்கு கை கொடுத்து பாராட்ட.. எஸ்.ஏ.சி., நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியின் ஆதரவை கோரினார். ராதாரவி உட்கார்ந்த நிலையிலேயே தனது கைகளை உயர்த்தி தனது ஆதரவை நல்கிவிட.. பெப்சியில் இருக்கும் 2 பெரிய சங்கங்கள் தயாரிப்பாளர்கள் யூனியனுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு எதிர்ப்பாகிய கதை உருவாகியது.
எதிர்பார்த்ததுபோலவே பெப்சி அமைப்பினர் மறுநாளே தங்களது அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி பேசினார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியில் தலைமைப் பதவிக்கு வருவதற்கு இணைக்கப்பட்ட 23 சங்கங்களில் ஏதேனும் ஒரு சங்கத்தில் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ, பொருளாராகவோ இருத்தல் அவசியம். 23 சங்கங்களின் நிர்வாகிகள் சேர்ந்துதான் பெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வார்கள். அந்த வகையில்தான் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்த வி.சி.குகநாதன் பெப்சியின் தலைவரானார். ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் செயலாளரான ஜி.சிவா பெப்சியின் செயலாளரானார். கலை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான ராமதுரை, பெப்சியின் பொருளாளரானார். அன்றைய கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் அமீரும், பொருளாளர் ஜனநாதனும் கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் பெப்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான்..!
கூட்டத்தின் முடிவில் பெப்சியை உடைப்பதற்கு யார் எந்தவிதத்தில் முயற்சியை செய்தாலும் அதனை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம் என்றும், புதிய ஊதிய ஒப்பந்தத்தை வழங்கிவரும் நேரத்தில் ஏன் அதனை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரிப்பாளர்கள் யூனியன் மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்கள். 350 ரூபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு 30 சதவிகிதம் தொகையைத்தான் உயர்த்தியுள்ளோம் என்றனர் பெப்சி அமைப்பினர். தங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்க பெப்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் கூறினார்கள். தமிழக அரசு தலையிட்டுத்தான் தங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று மறைமுக சரண்டரை பெப்சி கூறியது.
பாரதிராஜாவின் பெப்ஸி ஆதரவு பற்றி அமீரிடம் கேட்டபோது, “பாரதிராஜா பப்ளிக்கா சொன்னாரா..? இல்லீல்ல.. பொதுக்குழுலதான பேசினாரு.. எங்க சங்கக் கூட்டத்துக்கு வந்து, ஆபீஸுக்கு வந்து, சங்கம் சார்பா பேசினாருன்னா கேளுங்க.. பதில் சொல்கிறேன்..” என்றார்.. அன்னக்கொடியும், கொடி வீரனும் பட ஷூட்டிங்கில் நடந்த ஊதிய உயர்வு ரகளையைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “அப்படி எதுவும் நடக்கவே இல்லை..” என்று சாதித்தார் அமீர். ஆனால் தேனிக்கு சென்று வெறும் கையுடன் திரும்பி வந்திருந்த பெப்சி தொழிலாளர்கள் அலுவலகத்தில் மாடியருகே நின்று கொண்டு அனைத்து பத்திரிகையாளர்களிடத்திலும் நடந்த கதையை முழுதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இவருடைய இந்தக் கருத்திற்கு மறுநாள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பிரஸ் மீட்டில் இயக்குநர் சேரன் கடும் கண்டனம் தெரிவித்தார். “பெரிய பட்ஜெட் படத்தினை மட்டுமே நினைவில் வைத்து அமீர் இப்படி பேசியிருக்கிறார்.. அவர் மீது சங்கத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று சேரன் துணிவுடன் சொன்னது ஆச்சரியமானது. அமீர் பொதுச் செயலாளர். ஜனநாதன், பொருளாளர். இந்த இருவரும் பெப்சியின் பக்கம். தலைவர் பாரதிராஜா, துணைத் தலைவர் சேரன்.. இவர்கள் தயாரிப்பாளர்கள் பக்கம். மேலும் சேரன் ஏற்கெனவே தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சங்கத்தில் கடிதம் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் அதனை பாரதிராஜா ஏற்க மறுத்து நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிகிறது..! இப்படி இயக்குநர்கள் சங்கத்திலும் இந்த பிரச்சினையால் கலகம் விளைந்துள்ளது.
பெப்சி அமைப்பினர் கூறியது போல தொழிலாளர்கள் கேட்பது வெறும் 30, 40 ரூபாய்கள் அல்ல.. என்று கூறிய தயாரிப்பாளர்கள், சில பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் கேட்டிருந்த ஊதிய உயர்வுத் தொகையினை புள்ளிவிவரத்துடன் வெளியிட்டனர்.
லைட்மேன் - 350, 530
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் - 250, 320
மகளிர் யூனியன் - 290, 400
செட் அஸிஸ்டெண்ட் - 350, 625
டிரைவர்ஸ் யூனியன் - 270, 415
காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் - 700, 850
புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் - 350, 550
லைட்மேன் யூனியன் 180 ரூபாய், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் 70 ரூபாய், மகளிர் யூனியன் 110 ரூபாய், செட் அஸிஸ்டெண்ட்ஸ் 275, டிரைவர்ஸ் யூனியன் 145, காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்ஸ் 150, புரொடெக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் 200 ரூபாய் என்று தங்களது ஊதிய உயர்வை உயர்த்திக் கேட்டிருக்கிறார்கள்.
இந்தத் தொழிலாளர்கள் வாங்குகின்ற சம்பளம் 5 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..! 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி 70 ரூபாய், 110 ரூபாய், 150 ரூபாய் என்று உயர்த்துவது கூடவா தயாரிப்பாளர்களுக்கு சுமையைத் தருகிறது? என்ன கொடுமை சரவணா இது..? வருடத்திற்கு என்று பார்த்தால்கூட அதிகப்பட்சம் 45 ரூபாய்தான் உயர்த்தியிருக்கிறார்கள். இதிலென்ன தவறு இருக்க முடியும்..?
இப்போதைய சூழலில் தமிழ்த் திரைப்பட உலகத்தில் திரைப்படங்கள் எடுப்பது குறைந்துபோய் தொழிலாளர்கள் தேவைக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். இதில் ஒரு சங்கத்தில் இருப்பவர்கள் அனைவருக்குமே வேலை கிடைப்பதில்லை.. இதனால்தான் சில சங்கத்தினர் தங்களது தொழிலாளர்களை ஷிப்டிங் முறைப்படி தாங்களே அனுப்பி வைக்கிறார்கள். இப்படி அனுப்பினால் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம அளவுக்கு வேலை கிடைக்குமே என்கிற காரணத்தினால்தான்..! படத் தயாரிப்புகள் குறைவினால் ஒரு தொழிலாளிக்கு மாதத்தில் 10 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம்..!
இதில் ஒரு லைட்மேனுக்கு 530 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. 10 அல்லது 15 நாட்கள் என்று வைத்துக் கொண்டால்கூட குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகப்பட்சம் 8000 ரூபாய்தான் அந்த்த் தொழிலாளியால் சம்பாதிக்க முடியும்..! இதனை வைத்துக் கொண்டு சென்னையில் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள்..!
கடந்த வாரம் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பில் லைட்மேன் ஒருவர் உயரத்தில் கட்டியிருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டாராம்.. சங்கத்தில் இருந்து மருத்துவச் செலவுக்காக 10000 ரூபாய் கொடுத்தார்களாம். அவ்வளவுதானாம்..! அந்தத் தொழிலாளியின் மனைவி தன்னுடைய நகைகளை விற்று தற்போது கணவருக்கு சிகிச்சையளித்து வருகிறாராம். அவரால் திரும்பவும் நடக்க முடியுமா என்றே சந்தேகம் என்கிறார்கள். இப்படி வாழ்க்கையே நிரந்தரமில்லாத சூழலில் நியாயமான சம்பளம் கொடுத்தால்தானே தொழிலாளியும் மன நிறைவோடு இருக்க முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள். இதுவும் நியாயமாகத்தான் இருக்கிறது..!
ஒரு படம் வெற்றி பெற்றாலே அடுத்தப் படத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார் ஹீரோ. அவருக்கும், ஹீரோயினுக்கும் லட்சத்திலும், கோடியிலும் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் பிச்சை காசு.. சில ஆயிரம் மட்டுமே செலவாகும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் மட்டும் இவ்வளவு சிக்கனம் காட்டுவது ஏன் என்றுதான் புரியவில்லை. இதில் சில தயாரிப்புகள் Pre Production-லேயே பல லட்சங்களை செலவிடுகிறார்கள்..
வெளிநாட்டுக்குச் சென்று பாடல் கம்போஸிங் செய்கிறார்கள். வெளிநாட்டிலேயே பாடல் கேஸட்டை ரிலீஸ் செய்கிறார்கள். கதை டிஸ்கஷனுக்காக வெளிநாட்டுக்கே பறக்கிறார்கள்..! படம் ரிலீஸாகும் வரையிலும் மாதந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுக்கு கவர் கொடுத்தும், கட்டிங்கை ஊத்தியும் தங்களது படங்களை பிரபலப்படுத்த முயல்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனை லட்சங்கள் செலவாகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்..!
ஒரு லைட்மேனும், டெக்னீசியனும் காலை 6 மணி கால்ஷீட்டுக்கு ஈஸிஆர் ரோட்டுக்கு வர வேண்டுமென்றால் தனது வீட்டில் இருந்து 3 மணிக்குக் கிளம்பி தன்னை அழைத்துச் செல்ல வரும் வேனிற்காக 4 மணிக்கே காத்திருக்க வேண்டும். 5 மணிக்கெல்லாம் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு சென்று தனது பணிகளைத் துவக்க வேண்டும். மீண்டும் இரவு 6 மணிக்கு முடிந்தாலோ அல்லது தொடர்ந்து நடந்து 10 மணிக்கு முடிந்தாலோ வீடு திரும்ப 1 மணி ஆகிவிடும். மீண்டும் காலையில் 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. இப்படியே சுழற்சியாக ஓடிக் கொண்டிருப்பவன் தனது குடும்பத்தை எந்தவிதத்தில் கவனிப்பான் என்று நினைக்கிறீர்கள்..?
தங்களது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள்..? எப்படி படிக்கிறார்கள்..? அவர்களது கல்வி நிலை என்ன என்பதைக்கூட கேட்க முடியாத அளவுக்குத்தான் இந்தத் தொழிலாளர்களின் நிலைமையும் உள்ளது. வேலை இல்லாத காலத்தில் வேலை தேடுவதுதான் இவர்களிடத்தில் இருக்கும் ஒரே வேலை. இவர்களுக்குத் தெரிந்த்து சினிமா தொழில் மட்டுமே.. தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பல்வேறு பணம் சம்பாதிக்கும் வழிகள் இந்தத் தொழிலாளர்களுக்குத் தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டால் சில ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் இருந்து கோடிகளை விட்டுக் கொடுக்கிறார்கள். அதுபோல தொழிலாளர்கள் விட்டுத் தருவார்களா என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது..!
பணக்காரர்களிடத்தில் பத்திரமாக வங்கியிலோ அல்லது வீட்டிலோ ச்சும்மா வைத்திருக்கும் கோடிகள் எங்கே..? அன்றாடங்காய்ச்சிகள் அடுத்த வேளை உணவுக்காக வாங்கிச் சேமிக்க நினைக்கும் சில ரூபாய்கள் எங்கே..? எப்படி இவர்கள் இப்படி மனசாட்சியில்லாமல் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை..!?
ஒரு படம் எடுத்து தயாரிப்பாளர் நஷ்டமடைந்தால் அதற்கு தொழிலாளி எப்படி பொறுப்பாக முடியும்..? முழு பொறுப்பும் இயக்குநரைத்தான் சேரும்.. சிறந்த முறையில் படத்தை எடுக்க தெரியாமல் எடுத்துவிட்டு அதில் வேலை பார்த்த தொழிலாளர்களிடத்தில் நஷ்டஈடு கேட்பது முட்டாள்தனம் இல்லையா..?
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு நோயாளி இறந்துவிட்டால் மருத்துவமனையின் கட்டணத்தை கட்ட மறுத்தால் அவர்கள் விட்டுவிடுவார்களா..? அல்லது இதே தயாரிப்பாளர்களிடத்தில் அவர்கள் எடுத்த படம் நல்லாயில்லை. பிடிக்கலை.. போர் அடிக்குது.. காசை திருப்பிக் கொடு என்று கேட்டால் இவர்கள் திருப்பித் தருவார்களா..? என்னவொரு அராஜகமான சிந்தனை இது..? அக்மார்க் கொள்ளைக்கார முதலாளித்துவத்தின் கோரப் பல் என்று இந்த ஒரு கேள்வியையே நாம் சொல்லலாம்..!
இப்போது பால்விலையில் இருந்து பேருந்து கட்டணம் வரையிலும் உயர்ந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியா இப்போதும் இருக்கிறது..? காய்கறிகளின் விலை வாரந்தோறும் உயர்ந்து கொண்டே செல்வது இந்த முதலாளிகளின் காதுகளுக்கும், கண்களுக்கும் தெரியவில்லையா..? சென்னையில் குடும்பம் நடத்துவதே சர்க்கஸ் கம்பெனியில் சிங்கத்துடன் விளையாடுவதுபோல.. இந்த லட்சணத்தில் குடும்ப்ப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு கடின உழைப்பை செய்து வரும் இந்த்த் தொழிலாளிகளின் மேல் பரிவு கொண்டு பாசத்துடன் தங்களது சம்பாத்தியத்தை பகிர்ந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் ஒரு சிறந்த முதலாளியின் கடமையாக இருக்க வேண்டும்..!
இப்படி தான் செய்யும் பல வீண் செலவுகளையெல்லாம் கணக்கில் வைத்துக் கொள்ளாமல், நினைத்துக்கூட பார்க்காமல், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் அவர்களை முடக்கப் பார்ப்பது.. தொழிலையே அழிக்கப் பார்ப்பது சர்வாதிகாரம்..! எந்த வகையிலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாதது..
நேற்றைய தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 16 படங்களின் ஷூட்டிங் ஊதிய உயர்வு சர்ச்சையால் நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இந்தப் படப்பிடிப்புகளை நிறுத்தியிருப்பது தயாரிப்பாளர் சங்கம்தானே ஒழிய பெப்சி தொழிலாளர்கள் அல்ல..! புதிய ஊதிய உயர்வு பற்றிய தகவல் வந்த பின்பு படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் தங்களது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதால் இந்த ரத்துச் சம்பவம் நடந்துள்ளது..! இதற்கு தொழிலாளர்களை பொறுப்பாக்கக் கூடாது..!
இதற்கிடையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக எம்.ஜி.ஆர். சமாதி முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதற்காக அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர் பெப்சி அமைப்பினர். அத்தோடு கூடவே பெப்சி கார்டு இருப்பவர்களுடன் மட்டுமே எமது தொழிலாளர்கள் வேலை பார்ப்பார்கள் என்று வெளி மாநில அமைப்புகளுக்குக் கடிதம் எழுதி, அவர்களின் உதவியையும் நாடியுள்ளனர்..!
காரணம், யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்வோம். நாங்கள் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை பார்த்தால் ஓகே என்று தயாரிப்பாளர்கள் கூறியிருப்பதை இயக்குநர் இமயம் பாரதிராஜா நியாயப்படுத்தி தனது ஷூட்டிங்கை நேற்றைக்கு தேனியில் மீண்டும் துவக்கியிருக்கிறாராம்..! அவருடைய சொந்த யூனிட்.. லோக்கல் ஆட்களை வைத்து வேலை வாங்கி வருகிறாராம்..! இது கண்டிப்பாக பெப்சியை உடைக்கும் வேலை என்றே நம்புகிறார்கள் பெப்சி தொழிலாளர்கள்..!
இரு தரப்பினருமே கடைசியாக ஆத்தாவிடமே சரணடைந்துள்ளனர். படைப்பாளி பிரச்சினையின்போது ஆத்தா செய்த உதவிகளை பெப்சி பட்டியலிட்டு இப்போதும் உதவியை நாடியுள்ளது. நீ போனா நானும் வருவேன் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் அம்மா, தாயே என்று சரண்டர் ஆகியிருக்கிறார்கள்..!
தனது சக அமைச்சர்கள், கட்சி எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைவர்கள், உடனிருந்த உற்றார் உறவினர்கள் என்று பலரையும் உளவு பார்த்து அந்தத் தகவல்களை படிக்கவே நேரமில்லாமல் இருக்கும் தமிழகத்தின் அன்னைக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் இருக்குமோ தெரியவில்லை.
உங்களுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்று பத்திரிகையாளர்கள் திருப்பித் திருப்பி கேட்ட பின்புதான் எஸ்.ஏ.சி. உண்மையான சமரசத் தீர்வை சொன்னார். பெரிய பட்ஜெட் படங்களுக்கு தனி ஊதியம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு தனி ஊதியம் என்று இரண்டாக பிரித்து வழங்கலாமா என்று யோசித்து வருவதாக் கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான். தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பலையைக் காட்டியது சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான். 60 அல்லது 70 லட்சம் முதலீட்டில் படம் தயாரிக்க வருபவர்களுக்கு தேவையான பெப்சியின் தொழிலாளர்களை படத்திற்குத் தேவைப்பட்டாற்போல் குறைத்து அனுப்பலாம். அத்துடன் பட்ஜெட்டிற்கேற்றாற்போல் சம்பளத்தையும் குறைத்துக் கொள்ளலாம். எந்த்த் தொழிலாளர் இதற்கு சம்மதித்து வேலைக்கு போகிறாரோ அவரையே அனுப்பி வைக்கலாம். இதில் தவறொன்றுமில்லை.. தொழிலாளர்கள் தரப்பினர் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் நல்லதுதான்..!
விஜய் படத்தின் பாடல் காட்சிக்கு 4 கேமிரா தேவையென்றால் வைத்துக் கொள்ளலாம். தப்பில்லை. கூடுதல் தொழிலாளர்களையும் வைத்துக் கொள்ளலாம். சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தால்கூட தயாரிப்பாளர் இதனால் நஷ்டப்பட வாய்ப்பில்லை. அதே சமயம் லோ பட்ஜெட் படத் தயாரிப்பில் 500 ரூபாய் சம்பளத்தில் தொழிலாளி ஒத்துக் கொண்டு பணியாற்றினால் ஒரு சிறு முதலீட்டு படத்தினை வெளிக்கொணர்ந்த பெருமையில் அவருக்கும் பங்கு கிடைக்குமே..?
சிறு முதலீட்டுப் படங்களும் தமிழ்த் திரையுலகத்தை வாழ வைத்து வருகின்றன. எப்படியெனில், பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் பலரும் தொடர்ச்சியாக பல பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றியவர்களாத்தான் இருப்பார்கள். கேமிராமேன், இயக்குநர்கள், சொந்த யூனிட் என்றால் அதன் தொழிலாளர்கள் என்று பலரும் தெரிந்தவர்களாகவே இருப்பதினாலும், தன்னையொத்த ரசினையுடையவர்களையே தற்போதைய இளைஞர்களும் விரும்புவதால் அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
வாய்ப்பு கிடைக்காத மூத்தோர்கள் மற்றும் தங்களை முன்னிறுத்தத் தெரியாத தொழிலாளர்களை சிறு முதலீட்டு படங்கள்தான் காப்பாற்றி வருகின்றன. தொழிலாளர்களும் தற்போதைய யதார்த்த நிலைமையை மனதில் கொண்டு இந்த அடிப்படையில் தயாரிப்பாளர்களுடன் அவர்களது சமரச முயற்சியை ஏற்று பேச்சுவார்த்தையை நடத்தி வெற்றி கண்டால் அவர்களுக்கும் நல்லது.. தமிழ்த் திரையுலகத்திற்கும் நல்லது..!
|
Tweet |
39 comments:
Nice Explaination about Ongoing issue. thanks
entha pakkamum nikkamudiyaathunga sila yuniyangal pannarathu attuliyam ....sila thayarippalarkal pannarathu atha vida mosam ....
[[[ravikumar said...
Nice Explaination about Ongoing issue. thanks]]]
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ரவிக்குமார் ஸார்..!
[[[G.Ganapathi said...
entha pakkamum nikkamudiyaathunga sila yuniyangal pannarathu attuliyam. sila thayarippalarkal pannarathu atha vida mosam.]]]
சில யூனியனில் சில தலைவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக யூனியனே தேவையில்லை. அதனை உடைக்க வேண்டும் என்பதெல்லாம் பெரும் அநியாயம் இல்லையா கணபதி..?
சினிமாவில் வேலை செய்வது என்பது nonlinear - வேலை.
இதற்கு மனமும் உடலும் ஒத்துழைக்க மிகுந்த சிரமப்படும்.
எந்த ஒரு படமும் இரவு பகலாக, நேரம் காலமின்றி வேலை செய்துதான் ஆகவேண்டும்.
சம்பளம் ஏற்றித்தருவதில் தப்பில்லை.
அப்பாடா. நீள பதிவுடன் உத களமிறங்கிட்டாரு. வெல்கம்மு.
நடந்து வரும் பிரச்சனைகளையும் அதனைபற்றிய முழுவிபரங்களையும் எந்தவித ஒளிவுமறைவு இல்லாமல் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பத்திரிக்கைகளை விட பதிவில்தான் மூழுவிப்ரங்களையும் அப்படியே எந்தவித எடிட் இன்றி அப்படியே வெளிவருகின்றது. வாழ்த்துக்கள் நண்பரே
Good Article
பதிவை படித்துக்கொண்டே வரும்போதே தோன்றிய தீர்வையும் சொல்லிவிட்டீர்கள்.சினிமாவைக் காப்பாற்றுவது பட்ஜெட் படம்தான். அதை எல்லாரும் சேர்ந்துதான் காப்பாற்றவேண்டும். இதுதான் முதலில் வந்த விளக்கமான பதிவு.நன்றி
என் வலையில்;
உங்கள் நேரத்தை வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி? Time Management
ஒரு டீயும் பிஸ்கெட்டையும் எடுத்து வச்சிக்கிட்டு முன்னேற்பாடாத்தான் படிக்கவே ஆரம்பிச்சேன் உங்க பதிவை.பாதில பசிச்சதுன்னா ஃபுளோ விட்டுப் போயிடும்ல...
இந்தத் துறை ஒரு unorganised sector.எப்படிப் பார்த்தாலும் தடி எடுத்தவன்தான் தண்டல்காரன் என்ற நிலமைதான். யூனியன் இல்லைன்னா அது கொத்தடிமை வேலையாகிப் போய்விடும்.spb ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியில் சொன்னார் ; சீனிவாசன் என்பவர் முயற்சியால்தான் எல்லா யூனியன் ஓகே...தொழிலாளி சம்பளம் வந்துடுச்சின்னு சொன்னாத்தான் பிரின்ட் லேப்லே இருந்து போகும்ங்கிற நிலமையைக் கொண்டாந்தார் அதனால்தான் பாடினதும் காசு கொடுக்கிறாங்க என்று.
அப்படி செய்ததற்காக சீனிவாசன் படாத பாடு பட்டிருக்கார் பட முதலாளிகள் கிட்ட என்று.
இதில் சிக்கிக்கொண்டவர்கள் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்தாம். அவங்களுக்கு ஒரு தீர்வை ஃபெப்ஸியும் யோசிச்சு சொல்லணும்.
பொதுவா பெரிய (அல்லது நீள நீளமான) பதிவுக்கெல்லாம் இந்த font நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்.முயற்சி பண்ணுங்களேன்.
go to : Design -- Template designer - Advanced - Add CSS
அங்கே கீழே கொடுத்திருக்கிறதை பேஸ்ட் பண்ணிப் பாருங்க நல்லா இருக்கான்னு...
.post {
font-family:"Arial Unicode MS",Arial,Times New Roman;
font-size:17px;
}
[[[RAVI said...
சினிமாவில் வேலை செய்வது என்பது nonlinear - வேலை.
இதற்கு மனமும் உடலும் ஒத்துழைக்க மிகுந்த சிரமப்படும்.
எந்த ஒரு படமும் இரவு பகலாக, நேரம் காலமின்றி வேலை செய்துதான் ஆகவேண்டும். சம்பளம் ஏற்றித் தருவதில் தப்பில்லை.]]]
ஒருமித்தக் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரவி..!
[[[Avargal Unmaigal said...
நடந்து வரும் பிரச்சனைகளையும் அதனை பற்றிய முழுவிபரங்களையும் எந்தவித ஒளிவுமறைவு இல்லாமல் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பத்திரிக்கைகளை விட பதிவில்தான் மூழு விப்ரங்களையும் அப்படியே எந்தவித எடிட் இன்றி அப்படியே வெளிவருகின்றது. வாழ்த்துக்கள் நண்பரே..!]]]
எல்லாப் புகழும் பிளாக்கருக்கே..! இப்படியொரு இடம் இருப்பதால்தான் அனைத்தையும் பகிர முடிகிறது..!
[[[Prakash said...
Good Article]]]
மிக்க நன்றிகள் ஸார்..!
[[[மாயன்:அகமும் புறமும் said...
பதிவை படித்துக்கொண்டே வரும்போதே தோன்றிய தீர்வையும் சொல்லிவிட்டீர்கள்.சினிமாவைக் காப்பாற்றுவது பட்ஜெட் படம்தான். அதை எல்லாரும் சேர்ந்துதான் காப்பாற்ற வேண்டும். இதுதான் முதலில் வந்த விளக்கமான பதிவு. நன்றி]]]
சின்ன பட்ஜெட் படங்களையும் ஆதரிக்க வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களையும் கைவிடக் கூடாது.. இரண்டிலும் தொழிலாளர்களுக்கு அனுகூலங்கள் உண்டு.. இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..!
[[[Chilled beers said...
ஒரு டீயும் பிஸ்கெட்டையும் எடுத்து வச்சிக்கிட்டு முன்னேற்பாடாத்தான் படிக்கவே ஆரம்பிச்சேன் உங்க பதிவை. பாதில பசிச்சதுன்னா ஃபுளோ விட்டுப் போயிடும்ல. இந்தத் துறை ஒரு unorganised sector. எப்படிப் பார்த்தாலும் தடி எடுத்தவன்தான் தண்டல்காரன் என்ற நிலமைதான். யூனியன் இல்லைன்னா அது கொத்தடிமை வேலையாகிப் போய்விடும். spb ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியில் சொன்னார் ; சீனிவாசன் என்பவர் முயற்சியால்தான் எல்லா யூனியன் ஓகே. தொழிலாளி சம்பளம் வந்துடுச்சின்னு சொன்னாத்தான் பிரின்ட் லேப்லே இருந்து போகும்ங்கிற நிலமையைக் கொண்டாந்தார். அதனால்தான் பாடினதும் காசு கொடுக்கிறாங்க என்று.
அப்படி செய்ததற்காக சீனிவாசன் படாதபாடுபட்டிருக்கார் பட முதலாளிகள்கிட்ட என்று.]]]
உண்மைதான். உண்மையான கம்யூனிஸவாதி திரு.எம்.பி.சீனிவாசன்.. வாழ்க..! அவரால்தான் இன்றைக்கு திரையுலகம் இன்றைக்கு மிகப் பெரிய வியாபார கேந்திரமாக வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்..!
[[[Chilled beers said...
இதில் சிக்கிக் கொண்டவர்கள் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்தாம். அவங்களுக்கு ஒரு தீர்வை ஃபெப்ஸியும் யோசிச்சு சொல்லணும்.]]]
சரிதான்.. இதனை பெப்ஸியும் ஒத்துக் கொள்கிறது..! விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்..!
[[[Chilled beers said...
பொதுவா பெரிய (அல்லது நீள நீளமான) பதிவுக்கெல்லாம் இந்த font நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்.முயற்சி பண்ணுங்களேன்.
go to : Design -- Template designer - Advanced - Add CSS
அங்கே கீழே கொடுத்திருக்கிறதை பேஸ்ட் பண்ணிப் பாருங்க நல்லா இருக்கான்னு...
.post {
font-family:"Arial Unicode MS",Arial,Times New Roman;
font-size:17px;
}]]]
ஓகே ஸார்.. தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றிகள்..!
Anna Kabilan Here well done anna good article..
தமிழக முதல்வருக்கு வேறு வேலை இல்லையா? மேலும் தேவையில்லாமல் அதிகப் படி வேலையாட்களை அனுப்புவது முறையா? பணம் போடும் தயாரிப்பாளரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? முடிந்தவரை பிடுங்குவோம் என்பது என்ன மாதிரியான விளையாட்டு?. தொழிலாளர் சம்பளத்தை நடிகர்கள் சம்பளத்துடன் ஒப்பிடுவது சரியல்ல. ஜெயிக்கும் குதிரைக்கு சிறிது செலவாகும்தான், அதைக் கணக்கிட்டே நடிகர்கள் சம்பளம் இல்லயா? எந்த நடிகருக்கும், திரைத் துறைத் தொழிலாளர்களுக்கும் தோட்டம் துரவுகளை விற்று பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் இருந்தால்தான் வாழ்கையே. செலவைக் குறைத்தல் என்பது எந்த தொழிலிலும் சரியான செயலே. தயாரிப்பாளர் லோக்கல் ஆட்களை வைத்து படப் பிடிப்பு நடத்தினால் செலவு குறையும் என்றால் அப்படிச் செய்வதில் தவறென்ன?
அண்ணே!வழக்கமான உங்க பாணியில் நீண்ட கதை சொன்னாலும் இதில் முக்கியமான ஒன்றை சரியாக வலியுறுத்தவில்லையென நினைக்கின்றேன்.உதாரணமாக கறுப்பு பணத்தை கக்கத்துல கட்டிகிட்டு அன்னா ஹசாரேவுக்கு போகிறவர் ஏன் பக்கத்துல இருக்கும் முல்லைப்பெரியாறுக்கு போகவில்லையென்ற கேள்விக்கு சந்திரசேகர் அப்புறமா யோசிச்சு சொல்றேன் என்று நழுவி விட்டது.
பெரிய பட்ஜெட்டோ,சின்ன பட்ஜெட்டோ ஒரு படத்தின் செலவீனங்களை ஆக்கிரமித்துக்கொள்வதில் நடிகர்,நடிகையின் பட்ஜெட் இருக்கிறது.3 டிஜிட்டில் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையின் வருமானத்தை கூட்டினாலும் கூட 8 டிஜிட் 9 டிஜிட்ல சம்பளம் வாங்கும் நடிகர்,நடிகையின் வருமானத்தை எட்ட முடியாது.
ஒரு படம் ஹிட் ஆயிடுச்சுன்னா அடுத்த படத்துக்கு ரேட் அதிகரிக்கும் போக்கு திரைப்படங்களில் அதிகம்.இதற்கு கடிவாளம் போடுவது அவசியம்.முதலில் ரஜனி,கமல்,விஜய்,அஜித்,மற்றும் இப்ப நடிகைல டாப்ல இருக்குறவங்கன்னு பிரபலங்களின் வருமானத்திற்கு உச்ச வரம்பு வைத்தாலே பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வ்ர இயலும்.
இல்லாட்டி இந்திப்படங்கள் போல வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்து பின்பு வேறு ஒரு எதிர்கால சிக்கலில் கூட தயாரிப்பாளர்கள் மாட்டிக்கொள்ளலாம்.
தமிழகத்தின் கறுப்பு பணத்தின் இரண்டு பெரிய தொழில்கள் அரசியல்,சினிமா.
பாரதிராஜா முதல் பெரும்பாலான திரைப்பட சாதனையாளர்கள் ஒற்றை ரூமில் பீடிக்கு சிங்கி அடித்து உழைப்பால் முன்னேறியவர்களாகவே இருப்பார்கள்.பிரபலமானவுடன் பழையவற்றை யாரும் மறந்து விடக்கூடாது.
தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் தலையீடுகள் பிரச்சினைக்கு இன்னுமொரு காரணம்.பின் பிரச்சினை தீர்வுக்கும் அரசியல்வாதிகளிடமே ஓடுவது என்ற நிலைகள் எல்லாம் மாறவேண்டும்.
பெப்சி என்ற அமைப்புக்கு எனது ஆதரவு.
[[[Kabilan said...
Anna Kabilan Here well done anna good article..]]]
தம்பி கபிலா.. உன்னுடைய முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..!
[[[அமர பாரதி said...
தமிழக முதல்வருக்கு வேறு வேலை இல்லையா? மேலும் தேவையில்லாமல் அதிகப்படி வேலையாட்களை அனுப்புவது முறையா? பணம் போடும் தயாரிப்பாளரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? முடிந்தவரை பிடுங்குவோம் என்பது என்ன மாதிரியான விளையாட்டு?. தொழிலாளர் சம்பளத்தை நடிகர்கள் சம்பளத்துடன் ஒப்பிடுவது சரியல்ல. ஜெயிக்கும் குதிரைக்கு சிறிது செலவாகும்தான், அதைக் கணக்கிட்டே நடிகர்கள் சம்பளம் இல்லயா? எந்த நடிகருக்கும், திரைத் துறைத் தொழிலாளர்களுக்கும் தோட்டம் துரவுகளை விற்று பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் இருந்தால்தான் வாழ்கையே. செலவைக் குறைத்தல் என்பது எந்த தொழிலிலும் சரியான செயலே. தயாரிப்பாளர் லோக்கல் ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தினால் செலவு குறையும் என்றால் அப்படிச் செய்வதில் தவறென்ன?]]]
தொழிலாளர்கள் கேட்பது நியாயமான சம்பளம்தான்.. இன்றைய விலைவாசிக்கு ஏற்றாற்போன்று தங்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கச் சொல்கிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை..!
ராஜநடராஜன் அண்ணே.. உங்களது ஆதரவிற்கும் புரிதலுக்கும் எனது நன்றி..!
//தயாரிப்பாளர் லோக்கல் ஆட்களை வைத்து படப் பிடிப்பு நடத்தினால் செலவு குறையும் என்றால் அப்படிச் செய்வதில் தவறென்ன?//
அண்ணா யாருங்க!ஓ!அமரபாரதின்னு பெயரை இப்பத்தான் பார்த்தேன்.
போற இடத்துக்கெல்லாம் செலவு குறைக்கிறேன் பேர்வழின்னு ஆட்களைத் தேடிகிட்டுத் திரியச்சொல்றீங்க.பாரதிராஜாவுக்கு மருத மாவட்டம் வேணுமின்னா இதற்கு தோதா அமையும்.
ஒரு நிறுவனத்திற்கு ஏன் நிரந்தரப் பணியாளர்களை வைக்கவேண்டும்.செலவைக் குறைக்கிறேன் பேர்வழின்னு இன்னைக்கு ஒருத்தர,நாளைக்கு ஒருவர்ன்னு கூட ஆளை வச்சிக்கலாம்ன்னு புது ஐடியா கூட கொடுப்பீங்க போல இருக்குதே:)
பிடுங்கறது நடிகர்,நடிகைகளா அல்லது தொழிலாளர்களா?மறுபடியும் நிறுவனம்தான்.நிறுவனர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்,பிடிங்கி விடவேண்டுமென்ற சித்தாந்ததில்தான் ஒவ்வொரு நிறுவனத்தின் பணியாளர்கள் பணி புரிகிறார்களா?
திரைப்படத்துறையின் கறுப்பு பக்கங்களை அடைத்து விட்டாலே பிரச்சினை கட்டுக்குள் வந்து விடும்.
இது மாதிரியான பிரச்சினைகள் ஆங்கிலப்படத் தயாரிப்புக்கும் வருகிறதா?அல்லது அவர்கள் அடக்கி வாசிக்கிறார்களா?யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களேன்.
//உண்மைத்தமிழன் said...
ராஜநடராஜன் அண்ணே.. உங்களது ஆதரவிற்கும் புரிதலுக்கும் எனது நன்றி..!//
பதிவு என்னமோ பெருசு பெருசாத்தான் போடுறீங்க.பின்னூட்டத்துக்கு டெம்ளட் ரப்பர் ஸ்டாம்ப் வச்சிருப்பீங்களோ:)
//தொழிலாளர்கள் கேட்பது நியாயமான சம்பளம்தான்.. இன்றைய விலைவாசிக்கு ஏற்றாற்போன்று தங்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கச் சொல்கிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை//
நானும் அதை தவறென்று சொல்லவில்லை உ.த, தேவையில்லாமல் அதிகப் படி ஆட்களை அனுப்புவதைத் தானே தவறென்று சொல்கிறேன்.
ராஜ நடராஜன்.
//போற இடத்துக்கெல்லாம் செலவு குறைக்கிறேன் பேர்வழின்னு ஆட்களைத் தேடிகிட்டுத் திரியச்சொல்றீங்க// இல்லிங்களே, அப்படி லோக்கல் ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தினால் அதில் தவறில்லை என்றுதானே சொல்லியிருக்கிறேன். அதில் செலவும் குறையுமென்றால் இன்னும் நல்லதுதானே. லோக்கல் ஆட்களைத் தேர்ந்தெடுப்பது கஷ்டமாக இருந்தால் யூனியனிலிருந்தே அழைத்துச் செல்லலாம். மொத்தத்தில் செலவு குறையும் என்றால் எதுவும் சரி தான்.
[[[ ராஜ நடராஜன் said...
//தயாரிப்பாளர் லோக்கல் ஆட்களை வைத்து படப் பிடிப்பு நடத்தினால் செலவு குறையும் என்றால் அப்படிச் செய்வதில் தவறென்ன?//
அண்ணா யாருங்க!ஓ!அமரபாரதின்னு பெயரை இப்பத்தான் பார்த்தேன்.
போற இடத்துக்கெல்லாம் செலவு குறைக்கிறேன் பேர்வழின்னு ஆட்களைத் தேடிகிட்டுத் திரியச்சொல்றீங்க.பாரதிராஜாவுக்கு மருத மாவட்டம் வேணுமின்னா இதற்கு தோதா அமையும். ஒரு நிறுவனத்திற்கு ஏன் நிரந்தரப் பணியாளர்களை வைக்க வேண்டும். செலவைக் குறைக்கிறேன் பேர்வழின்னு இன்னைக்கு ஒருத்தர, நாளைக்கு ஒருவர்ன்னு கூட ஆளை வச்சிக்கலாம்ன்னு புது ஐடியா கூட கொடுப்பீங்க போல இருக்குதே:)
பிடுங்கறது நடிகர், நடிகைகளா அல்லது தொழிலாளர்களா? மறுபடியும் நிறுவனம்தான். நிறுவனர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார், பிடிங்கிவிட வேண்டுமென்ற சித்தாந்ததில்தான் ஒவ்வொரு நிறுவனத்தின் பணியாளர்கள் பணிபுரிகிறார்களா?
திரைப்படத் துறையின் கறுப்பு பக்கங்களை அடைத்து விட்டாலே பிரச்சினை கட்டுக்குள் வந்து விடும்.
இது மாதிரியான பிரச்சினைகள் ஆங்கிலப் படத் தயாரிப்புக்கும் வருகிறதா? அல்லது அவர்கள் அடக்கி வாசிக்கிறார்களா? யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களேன்.]]]
அண்ணே.. எனக்குத் தெரிஞ்சு ஒரு தமிழ் ஹீரோ படம் முடியறவரைக்கும் மாதாமாதாம் 10 லட்சம் ரூபாய் பாக்கெட் மணியாக வாங்குகிறார். இதைக் கொடுத்தால்தான் படத்தில் நடிப்பார். சம்பளம் தனி.. இப்படி வாங்குபவர், படம் தோல்வியடைந்தால் கண்டு கொள்ளாமல் சென்றுவிடுவார்..! இவரிடம் பணத்தைக் கேட்க மாட்டார்களாம்.. மொத்தமே 6000 ரூபாய் சம்பாதித்திருக்கும் தொழிலாளரிடம் கேட்பார்களாம்.. நல்லாயிருக்கு இவுங்க நியாயம்..?
[[[ராஜ நடராஜன் said...
//உண்மைத்தமிழன் said...
ராஜநடராஜன் அண்ணே.. உங்களது ஆதரவிற்கும் புரிதலுக்கும் எனது நன்றி..!//
பதிவு என்னமோ பெருசு பெருசாத்தான் போடுறீங்க. பின்னூட்டத்துக்கு டெம்ளட் ரப்பர் ஸ்டாம்ப் வச்சிருப்பீங்களோ:)]]]
போண்ணே.. எழுதினதையே திருப்பித் திருப்பி எழுதறதுக்கு போரடிக்குது..!
[[[அமர பாரதி said...
//தொழிலாளர்கள் கேட்பது நியாயமான சம்பளம்தான்.. இன்றைய விலைவாசிக்கு ஏற்றாற்போன்று தங்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கச் சொல்கிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை//
நானும் அதை தவறென்று சொல்லவில்லை உ.த, தேவையில்லாமல் அதிகப்படி ஆட்களை அனுப்புவதைத்தானே தவறென்று சொல்கிறேன்.]]]
இதையும் தொழிலாளர்களின் வசதிக்காகத்தான் யூனியன் சொல்கிறது. எப்படியெனில் கேமிரா மற்றும் அதன் உபகரணங்களை தூக்கிச் செல்ல சில கம்பெனிகள் 1 அல்லது 2 பேரை மட்டுமே அனுமதிக்கிறது. இது அந்தத் தொழிலாளர்களுக்கு பெரும் சுமை. 4 பேர் செய்ய வேண்டிய வேலையை 2 பேர் செய்தால் அவர்களுக்கு எப்படியிருக்கும்..? அதனால்தான் தொழிலாளர்களே உதவிக்கு கூடுதல் நபர்களை கேட்கிறார்கள்..!
[[[ராஜ நடராஜன்.
//போற இடத்துக்கெல்லாம் செலவு குறைக்கிறேன் பேர்வழின்னு ஆட்களைத் தேடிகிட்டுத் திரியச்சொல்றீங்க//
இல்லிங்களே, அப்படி லோக்கல் ஆட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தினால் அதில் தவறில்லை என்றுதானே சொல்லியிருக்கிறேன். அதில் செலவும் குறையுமென்றால் இன்னும் நல்லதுதானே. லோக்கல் ஆட்களைத் தேர்ந்தெடுப்பது கஷ்டமாக இருந்தால் யூனியனிலிருந்தே அழைத்துச் செல்லலாம். மொத்தத்தில் செலவு குறையும் என்றால் எதுவும் சரிதான்.]]]
நடிக்க வைப்பது என்றால் எனக்குக் கூட ஓகேதான். ஆனால் தொழில் அமைப்பு என்றால், யூனியன் தொழிலாளர்களை பயன்படுத்துவதுதான் அந்தத் தொழில் வளர்ச்சிக்கு உதவும்..!
many more happy returns of the day
மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துகள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஷர்புதீன், ரத்னவேல், வேலுஜி மூவருக்கும் எனது நன்றிகள்..!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். (சற்றே தாமதம்!)
[[[ஸ்ரீராம். said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். (சற்றே தாமதம்!)]]]
மிக்க நன்றிகள் ஸ்ரீராம் ஸார்..!
hii.. Nice Post
Thanks for sharing
More Entertainment
Best Regarding.
Post a Comment