இது தமிழ்க் கொலைவெறிடா..!






07-01-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவிலேயே நம்பர் ஒன் வெட்டி ஆபீஸர் மன்மோகன்சிங் வரையிலும் பரவியிருக்கும் 3 படத்தின் கொலைவெறிடி பாடல் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு மட்டுமே சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆர்வலர்கள் பட்டியலில் சில, பல தமிழ்க் கவிஞர்களும் இடம் பெற்றிருந்தாலும், வெளிப்படையாக பேச முடியாமல் தவிக்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களின் தமிழ் மொழி மீதான பற்று இதன் மூலம் தெரிவதாகப் பலரும் புலம்பித் தள்ளுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனம் பற்றியும் கவலைப்படாத கவிஞர் தனுஷ், தான் விதைத்ததைத் தானே இப்போது ஊர், ஊராகச் சென்று அறுவடை செய்து கொண்டிருக்கிறார்.

பாடல் வரிகளைவிட மெட்டுதான் பலரையும் கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் அதை மெட்டில் வேறு பல வார்த்தைகளை சேர்த்து பலவித பாடல் காட்சிகள் இணையத்தில் உலா வர ஆரம்பித்துள்ளன. எதிர் மூச்சுக் காற்றைக்கூட வெளியிடாமல் தமிழகம் புழுக்கத்தில் இருக்கும்போது, ஈழத்தில் இதற்கான எதிர்ப்பை அதே வழியிலேயே வெளியிட்டிருக்கிறார் ஈழத்து இளைஞர்கள் சிலர். 

எஸ்.ஜே.ஸ்டாலின் என்னும் யாழ்ப்பாணத்து இளைஞர் எழுதியிருக்கும் இந்தப் பாடல் தமிழ் மொழியின் மீதான பற்றை நம்மைவிட அதிகமாகவே வெளிப்படுத்துகிறது..! வர்ணன் ஒளிப்பதிவு செய்ய, அமலன் படத்தொகுப்பு செய்து மிகச் சிறந்த வகையில் வெளியிட்டிருக்கிறார்கள்..! நிச்சயம் பாராட்டத்தக்க விஷயம் இது..!



ஆங்கிலக் கலப்புடன் பல தமிழ்ச் சினிமா பாடல்கள் இதற்கு முன்னே வந்திருந்தாலும், அப்போதில் இருந்தே பல பட்டிமன்றங்களில்கூட இந்தப் பாடல்கள் கொத்து புரோட்டோ போடப்பட்டிருக்கின்றன. கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவைகளைவிடவும் இந்தப் பாடல் அதீத வெளிச்சமும், புகழும் பட்டுவிட்டதால் இதற்கான எதிர்ப்பலையும் சற்று அதிகமாகவே இணையத்தில் பரவியிருக்கிறது..! ! 

"எதிர்ப்பு பாடலும் அதே மெட்டில் ஏன்..?" என்ற கேள்வி நியாயமானதுதான்..! அவர்கள் வழியிலேயே சென்றுதான் அதனை தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டும்.. அந்தவகையில் எனக்கு இந்த யாழ்ப்பாணத்து உண்மைத் தமிழ் இளைஞர்களின் செயல் போற்றக் கூடிய செயலாக இருக்கிறது..!


இதுதான் இந்தப் புகழ் பெற்ற பாடலின் வரிகள்..!


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…


செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…


கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா


யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு - தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!


ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!


தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு


தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான்தான் கலைஞன் என்றான்…


பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல - அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா - தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…!



"பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல - அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல"

ரத்தினச் சுருக்கமான இந்த நான்கு வரிகளை புரிந்து கொண்டாலே போதும்.. எது கலை..! யார் கலைஞன்..! யார் ரசிகன் என்பது புரியும்..!

வாழ்க யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள்..!

24 comments:

thatswhyiamhere said...

பணம் புகழ் இருப்பவர்கள் எது செய்ததாலும் அதனை யாரும் தட்டிகேப்பதில்லை !!!!!!???

ஆனால் தமிழ் மீது உண்மையான பற்று உள்ளவர்கள் கேட்பார்கள்

வாழ்க யாழ் தமிழர்கள்

RAVI said...

வாழ்க யாழ் தமிழர்கள்.

தமிழ்மொழியில் நான் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். வியக்கத்தக்க,உலகமேபோற்றக்கூடிய அற்புதமொழி தமிழ்தான் என்பதில் எள்ளவும் சந்தேகமேயில்லை.

தனுஷ் கொன்ற இந்தப்பாட்டு தமிழ்ப்பாட்டு லிஸ்ட்டில் இருந்து தானாகவே சில நாட்களில் காணாப்பூடும் மாமே :)

கேரளாக்காரன் said...

Ungalukku yen intha kolaveri...... Avanga ellam londonlayum francelayum irukkuravanga thala...... AR rehmaan Tamil paattukku Oscar vaangunaadhan oththukkuvinga pola irukkudhe?

கேரளாக்காரன் said...

Oru tamizhan paadi tamizhan music potta oru song world famous aagirukkudhu perumaipaduvom avlothaan ennoda karuththu......

உண்மைத்தமிழன் said...

[[[guru selva said...
பணம் புகழ் இருப்பவர்கள் எது செய்ததாலும் அதனை யாரும் தட்டி கேப்பதில்லை !!!!!!??? ஆனால் தமிழ் மீது உண்மையான பற்று உள்ளவர்கள் கேட்பார்கள். வாழ்க யாழ் தமிழர்கள்.]]]

ரஜினி, தனுஷ், ஹீரோக்கள், தமிழ்ச் சினிமாவின் முக்கியமானவர்கள் என்பதால் சினிமாவில் எல்லாமே முணுமுணுப்பாக உள்ளதாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...
வாழ்க யாழ் தமிழர்கள். தமிழ் மொழியில் நான் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். வியக்கத்தக்க,உலகமே போற்றக் கூடிய அற்புத மொழி தமிழ்தான் என்பதில் எள்ளவும் சந்தேகமேயில்லை. தனுஷ் கொன்ற இந்தப் பாட்டு தமிழ்ப் பாட்டு லிஸ்ட்டில் இருந்து தானாகவே சில நாட்களில் காணாப்பூடும் மாமே :)]]]

இந்தப் பாடல் என்றில்லை.. தற்போதைய தமிழ்ச் சினிமா பாடல்கள் அனைத்துமே ஒரு ஆண்டு மட்டுமே நீடிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Ungalukku yen intha kolaveri. Avanga ellam londonlayum francelayum irukkuravanga thala. AR rehmaan Tamil paattukku Oscar vaangunaadhan oththukkuvinga pola irukkudhe?]]]

நல்லாப் படிச்சீங்களா தல..? ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Oru tamizhan paadi tamizhan music potta oru song world famous aagirukkudhu perumaipaduvom avlothaan ennoda karuththu.]]]

சரி.. அதில் என்ன தமிழ் இருந்தது..?

ஹாலிவுட்ரசிகன் said...

நம் நாட்டவர்களின் தமிழ்ப்பற்று பாராட்டத்தக்கது. ஆனாலும் கொலைவேறி எனும் சொல் மற்றும் ஒரு சில வரிகளை தவிர ஏனைய 90வீதமான வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையே.

பின்னர் ஏன் இவர்களுக்கு இந்த பாடல் மேல் கொலைவெறி????

முத்தரசு said...

தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கொல வெறி கூட்டம் - வேறு என்னன்னு சொல்றது யாழ் தமிழருக்கு வாழ்த்துக்கள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

லாலாக்கு டால் டப்பி ம்மா போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த சொற்களைக் கொண்டு பாடல்கள் புனைந்தபோதேல்லாம் வராத இந்தத் தமிழ்வெறி, கொலை வெறி எல்லாம் இப்போது இந்த சுள்ளான் பாடியதற்கு வருகிறதேனோ? குத்துப் பாடல்களும், ஆடைக்குறைப்பும், இரட்டை அர்த்த வசனங்களும் செய்யாத தமிழ்க்கொலையை இந்தப்பாடல் மட்டும் தான் செய்து விட்டதா என்ன?

அது சரி! யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் தமிழ் வாழ்கிறதா?

Anonymous said...

கொலவெறி பாட்டுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படவேண்டிய தேவையே இல்லை. இந்தபாட்டுதான் தமிழை அழிக்கணும்னு இல்ல என்றே தோன்றுகிறது. அது உண்மையில் ஆங்கிலத்தை கொலை செய்த பாடல்.

Anonymous said...

தமிழ் உணர்வாளர்களான ஏழாம் அறிவு ஜீவிகளுக்கு இன்னொரு அவல் கிடைத்த விட்டது அடுத்த அவல் வரும்வரை மெல்லலாம்.

dondu(#11168674346665545885) said...

இது சம்பந்தமாக நானும் இப்போது பதிவிட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2012/01/why-this-kolaveri-kolaveridi.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட்ரசிகன் said...

நம் நாட்டவர்களின் தமிழ்ப் பற்று பாராட்டத்தக்கது. ஆனாலும் கொலைவேறி எனும் சொல் மற்றும் ஒரு சில வரிகளை தவிர ஏனைய 90 வீதமான வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையே. பின்னர் ஏன் இவர்களுக்கு இந்த பாடல் மேல் கொலைவெறி????]]]

ம்.. தமிழ்ச் சினிமா பாடல் என்ற டைட்டிலில் இது இடம் பெறுகிறதே.. அதனால்தான் கோவம்..!

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...

தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கொல வெறி கூட்டம் - வேறு என்னன்னு சொல்றது யாழ் தமிழருக்கு வாழ்த்துக்கள்.]]]

வருகைக்கு நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Krishna Moorthy. S. said...

லாலாக்கு டால் டப்பி ம்மா போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த சொற்களைக் கொண்டு பாடல்கள் புனைந்த போதேல்லாம் வராத இந்தத் தமிழ் வெறி, கொலை வெறி எல்லாம் இப்போது இந்த சுள்ளான் பாடியதற்கு வருகிறதேனோ? குத்துப் பாடல்களும், ஆடைக் குறைப்பும், இரட்டை அர்த்த வசனங்களும் செய்யாத தமிழ்க் கொலையை இந்தப் பாடல் மட்டும்தான் செய்து விட்டதா என்ன?
அது சரி! யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் தமிழ் வாழ்கிறதா?]]]

ஒரே பின்னூட்டத்துல 10 கொஸ்டீன் கேட்டா எப்படி ஸார்..?

அது அது அந்தந்த நேரத்துல கேட்டிரணும். இல்லைன்னா அப்ப நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்கன்னு கேள்வி வரும்.. அதுனால இந்தச் சமயத்துலேயே இப்படி பாடலால் பதில் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled beers said...

கொலவெறி பாட்டுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டிய தேவையே இல்லை. இந்த பாட்டுதான் தமிழை அழிக்கணும்னு இல்ல என்றே தோன்றுகிறது. அது உண்மையில் ஆங்கிலத்தை கொலை செய்த பாடல்.]]]

அப்படியா..? ஆங்கில உச்சரிப்பும் தவறா..? என்ன கொடுமை சரவணா இது?

உண்மைத்தமிழன் said...

[[[Chilled beers said...

தமிழ் உணர்வாளர்களான ஏழாம் அறிவு ஜீவிகளுக்கு இன்னொரு அவல் கிடைத்த விட்டது அடுத்த அவல் வரும்வரை மெல்லலாம்.]]]

ஓகே.. ஸ்டார்ட் மியூஸிக்..!

உண்மைத்தமிழன் said...

[[[dondu(#11168674346665545885) said...

இது சம்பந்தமாக நானும் இப்போது பதிவிட்டுள்ளேன், பார்க்க:

http://dondu.blogspot.com/2012/01/why-this-kolaveri-kolaveridi.html

அன்புடன்,
டோண்டு ராகவன்]]]

பார்த்தேன். படித்தேன். மகிழ்ந்தேன். வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..! உடம்பை பார்த்துக்குங்க..!

எழிலருவி said...

இந்த பாடலை தயாரித்தவர்கள் சொல்வது: நாம் கொலைவெறி பாடலுக்கு எதிராக இதனை எழுதவில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[எழிலருவி said...

இந்த பாடலை தயாரித்தவர்கள் சொல்வது: நாம் கொலைவெறி பாடலுக்கு எதிராக இதனை எழுதவில்லை.]]]

ம்.. இந்த பூதம் எப்போ வந்துச்சு..?

raj said...

தம்பி... நானும் ஈழத்தில் தான் இருக்குறேன். எங்கட சனம் தமிழ் மொழிக்கும் எங்கட கலாச்சாரத்துக்கும் செய்யுற கோல வெறிய விட தனுஷ் ஒண்ணும் தப்பு செய்யல. சும்மா யாழ்பாணம் எண்டு படம் எடுக்கதீகள்..

உண்மைத்தமிழன் said...

[[[raj said...

தம்பி... நானும் ஈழத்தில்தான் இருக்குறேன். எங்கட சனம் தமிழ் மொழிக்கும் எங்கட கலாச்சாரத்துக்கும் செய்யுற கோலவெறியவிட தனுஷ் ஒண்ணும் தப்பு செய்யல. சும்மா யாழ்பாணம் எண்டு படம் எடுக்கதீகள்..]]]

எல்லா நாட்டிலும் சனங்கள் அப்படி, இப்படி இருக்கத்தான் செய்வார்கள். ஏனென்டால் இது தலைமுறை இடைவெளி.. இப்போதைய தலைமுறை இளைஞர்களுக்கு மொழிப் பற்றோ, இனப் பற்றோ, தேசப் பற்றோ கொஞ்சம் குறைவுதான். நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுவடுகள் தெரிகின்றன.. இதனாலேயும் இந்தக் குழப்படிகள் தோன்றியிருக்கலாம்..!