03-01-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஐயோ மறுபடியுமா என்று அலறாதீர்கள்..!
நடந்து முடிந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பற்றி திரைக்கூத்து என்னும் புதிய பத்திரிகையில் கட்டுரை கேட்டிருந்தார்கள். நானும் வழக்கம்போல 12 பக்கங்களுக்கு தட்டியனுப்பினேன். அவர்கள் திக்கித் திணறி அதில் பாதியை மட்டுமே பிரசுரம் செய்துள்ளார்கள். மீதத்தையும் சேர்த்து இந்தப் பதிவில் தருகிறேன்..!
இதில் சிறிய அளவிலான முன்னோட்டம்தான் கொடுத்திருக்கிறேன். பின்னாளில் நேரம் கிடைத்தால் ஒவ்வொன்று பற்றியும் விரிவாகப் பேசலாம்..
ஒவ்வொரு சினிமா பற்றியும் 10 வரிகள்தான் என்பதால் 20 கதைகள் என்று நினைத்துக் கோபித்துக் கொள்ளாமல் படித்து முடித்துவிட்டு மறக்காமல் உங்களது பொன்னான வாக்குகளையும், பின்னூட்டங்களையும் வாரி வழங்குவீராக.(திட்டியாவது எழுதுங்கப்பா..!)
சினிமாவில் தமிழ்ச் சினிமா, உலகச் சினிமா என்று வேறில்லை. அனைத்து சினிமாக்களும் ஒன்றுதான்..! அவைகள் சொல்லும் மொழி ஒன்றுதான்..! மொழி வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒன்றுதான்.. அந்த உணர்வுகளை சுட்டிக் காட்டும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒருவர்தான்..! ஒரு நல்ல சினிமாவை விரும்புவன் இதைத்தான் சொல்வான்.. அனைத்து கலைஞர்களும் மனிதர்களே.. அனைத்து மனிதர்களும் கலைஞர்களே..! எந்தக் கண்டத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் மனிதர்கள் வாழும் வாழ்க்கையில் தினம்தோறும் அனைவருமே ஒரு சவாலைச் சமாளிக்கத்தான் வேண்டியிருக்கிறது..! இந்த ஒருமித்த உணர்வை அனைவருக்கும் உணர்த்துவது சினிமா என்னும் கதை சொல்லிதான்..!
மிகச் சாதாரணமான ஒரு கதை.. அகதியாக வரும் ஒரு ஆப்பிரிக்க சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவன் தாய் இருக்கும் லண்டன் சென்று சேர அவனுக்காக அனைத்து உதவிகளையும் செய்து, பணத்திற்காக இசைக் கச்சேரி நடத்தி.. பக்கத்து வீட்டுக்கார்ரகள் துணையோடும், தனது மனைவியின் உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாமலும், காவல்துறையின் தேடுதல் வேட்டை மற்றும் மிரட்டல் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் அந்த அகதி சிறுவனை பத்திரமாக அனுப்பி வைத்த, சாதாரண ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் உன்னதமான உள்ளத்தை திரையில் பார்த்துவிட்டு எழுந்தபோது மனம் முழுவதும் இளகிப் போய் இருந்தது..!
இந்த உலகத்தில் மனிதம் இன்னமும் செத்துப் போய்விடவில்லை என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறது LE HAVRE என்னும் இந்த பின்லாந்து நாட்டு திரைப்படம்.
சென்னையில் சென்ற மாதம் நடந்து முடிந்த 9-வது சென்னை திரைப்பட விழாவின் 9 நாட்களும் திரையரங்குகள் இது போன்ற கதை சொல்லிகளால் நிரம்பி வழிந்தன. திரையில் தோன்றிய பிம்பங்களை அயல் நாட்டவர் என்றெல்லாம் எண்ண முடியாமல், நம் கதை அவர்களுக்கு எப்படி தெரிந்த்து என்று நமக்கு நாமே கேள்வி கேட்க வைத்தன அத்தனை திரைப்படங்களும்..!
சுவாரசியமான நாடக ஆசிரியர் அவர். அவரது நாடகங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் அவருடைய முன்னாள் மனைவி. விவகாரத்தான பின்பும் கலை ஆர்வத்திலும், நட்பினாலும் முன்னால் கணவருடன் இணைந்து நாடகங்களில் பணியாற்றும் அந்தப் பெண்ணுக்கு இப்போது ஒரு புதிய காதலன். அந்தப் புதிய காதலனும் இந்தப் புதிய நாடகத்தில் ஒரு அங்கம். திருமண பந்தம் முறிந்ததுதான் என்றாலும், கதாசிரியருக்கு இதனை ஏற்கும் பக்குவமில்லை.. இருவரையும் பிரிக்க நினைக்கிறார். காதலன் நடிக்க இயலாது என்கிறான். முன்னாள் மனைவியும் இல்லாமல் நாடகத்தை அரங்கேற்ற முடியாது என்கிறார் தயாரிப்பாளர்.. இயக்குநர் தத்தளிக்கிறார்.
எப்பாடுபட்டாவது நாடகத்தை அரங்கேற்ற முனைந்து மனைவியின் புதிய காதலையும், காதலனையும் கண் முன்னே வைத்துக் கொண்டு அவர் எழுதும் நாடகத்தைச் சொல்கிறது பிரான்ஸ் நாட்டு திரைப்படமான THE THREE WAY WEDDING.
தமிழ்ச் சினிமா என்றில்லாமல் இந்திய சினிமாவிலேயே சிறுவர்களுக்கான சினிமாக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. அத்திப்பூத்தாற் போன்றுதான் வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு மொழியில் இந்த அதிசயம் நிகழ்கிறது 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பசங்க திரைப்படம்போல்.. ஆனால் மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படங்களே இது போன்ற திரைப்பட விழாக்களுக்கு அதிகம் கொண்டு வரப்படுகின்றன. அதன் தரமே இதற்குக் காரணம் என்றாலும், அவர்களின் கதை சொல்லாடல், குழந்தைகளின் மூலமாகவே இருக்கிறது என்பதையும் நாம் கொஞ்சம் உணர வேண்டும்..!
பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான THE KID WITH A BIKE என்ற திரைப்படம் இதைத்தான் உணர்த்துகிறது. குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் சிறில் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்ட தனது தந்தையைத் தேடுகிறான். சமந்தா என்ற பெண்ணின் உதவியோடு தந்தையைக் கண்டறிந்தாலும், தந்தை அவன் மீது விருப்பம் கொள்ளாமல் தன்னைச் சந்திக்க இனிமேல் வர வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட சோர்ந்து போகிறான் சிறில்..
தந்தையிடம் இருந்து தான் பெற வேண்டிய அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் சமந்தாவிடமும், அவளது பாய்பிரண்டிடமும் பெறுவதும், அவர்களுடைய நெருக்கத்தை ஆயிரமாயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கான காட்சியமைப்புகளில் நறுக்கென்று கத்தரித்திருக்கிறார்கள் இயக்குனர்கள் :Jean-Pierre and Luc Dardenne. கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரீக்ஸ் விருதினை இப்படம் பெற்றிருப்பதில் பெரும் ஆச்சரியமில்லைதான்..!
இதுதான் இப்படியென்றால், 1900-களில் நார்வேயில் சிறுவர் சீர்த்திருத்த மையங்களில் நடைபெற்ற வாழ்வியல் போராட்டங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது நார்வேயின் KING OF ISLAND என்னும் திரைப்படம்.
சிறுவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முனையும் அதிகார அமைப்பும், அதனை எதிர்கொள்ளும் பக்குவமில்லாத இளைய சமுதாயத்தினரின் மனவோட்டத்தையும் பிரதிபலித்தது இப்படம்.
எத்தகைய வாழ்க்கைக்கும் ஒரு துவக்கப் புள்ளியையும், முற்றுப் புள்ளியையும் இணைக்கும் நேர்கோட்டை கண்டுபிடிக்கவே இயலாது என்பதை நிரூபிக்கிறது OTELO BURNING என்னும் தென்னாப்பிரிக்க திரைப்படம்.
ஸ்கை ஸ்விம்மிங்கில் புகழ் பெற விரும்பி, அதன் மீது அதீத பாசத்தால் தாக்குண்டு கிடக்கும் 2 இளைஞர்களையும், அவர்தம் குடும்பத்தினரின் கதையையும் ஒருசேர சொல்கிறது இப்படம். நிறவெறி விடுதலைக்கு முந்திய படமாக இருப்பதால், கறுப்பர்களின் அரசியல் வாழ்க்கையும் கொஞ்சம் தொட்டுத்தான் சொல்லியிருக்கிறார்கள்..!
வயதை மீறிய அதீத நடவடிக்கைகள், செயற்கைத்தனமான பேச்சுக்கள் என்றாலும், BASTARD என்ற ஜெர்மனியின் திரைப்படமும் சிறுவர்களின் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை எடுத்துக் காட்டுகிறது..!
நிகோலஸ் என்ற ஒன்பது வயது பையன் காணாமல் போக, அவனைக் கண்டுபிடிக்க போலீஸும், அவனது குடும்பத்தினரும் படும் பாட்டையும், குற்றவாளி யார் என்பது தெரிந்தும், அவனைக் கைது செய்ய முடியாமல் இருக்க அந்நாட்டின் சிறார் குறித்த அரசியல் சட்டமே குறுக்கே நிற்பதையும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள் இப்படத்தில்..! நமது இந்திய குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் காவல்துறையினர் நடவடிக்கைகளை படம் பிடிப்பதை நினைத்துப் பார்த்தால் இப்படம் எங்கோ தொலைவில் நிற்கிறது..! புறக்கணிப்பு என்ற ஒற்றை வார்த்தையினால் பாதிக்கப்பட்ட இன்னொரு சிறுவனின் கண்ணீர்க் கதையும் இப்படத்தை நிரம்பவே யோசிக்க வைத்துவிட்டது..!
தத்தி மாணவர்கள் பற்றிய கவலை உலகம் முழுவதுமே இருக்கிறது. அது போன்ற மாணவனான நாகசாகியின் கதையைச் சொல்கிறது LIFE BACK THEN என்ற ஜப்பானிய படம். வீட்டை காலி செய்து பொருட்களை அப்புறப்படுத்தும் வேலையைச் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நாகசாகியின் பள்ளிப் பருவத்தின் செயல்களை பிளாஷ்பேக்கில் சொல்லும் கதையின் ஊடேயே நாகசாகியின் அன்றாட பணி நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
தன்னையும் ஒரு பெண் காதலிப்பாள் என்று நினைத்துப் பார்க்காத நாகசாகிக்கு அது நிறைவேறும் தருணத்தில் ஏற்படும் பயங்கரம், ரசிகர்களை உலுக்கிப் போட்டது.. ஜப்பானுக்கும், இந்திய குறிப்பாக தமிழக ரசிகர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.. கர்சீப் நனையும் அளவுக்கு சோகத்தை பிழிவதில் தற்போதைக்கு தமிழுக்குப் போட்டியாக இருப்பவை ஜப்பானிய திரைப்படங்கள்தான் என்பதை இந்த படமும் நிரூபித்திருக்கிறது..!
இதற்கு நேர் எதிராக தனது மகளின் மரணத்துக்குக் காரணமான பள்ளிச் சிறுவர்களை சைக்காலஜிக்கலாக பழி வாங்கும் தாயின் கதையை CONFESSION திரைப்படத்தில் காண முடிந்தது.
பல காட்சிகள் பலரது வெர்ஷன்களாக குறிப்பிட்டுச் சொல்வதால் படம் இறுதியாக முடிவதற்குள் பல கிளைமாக்ஸ் காட்சிகளை பார்க்க வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் வேறொரு உலகத்திற்குள் சென்று வந்தது போலவே இருக்கிறது இப்படம்.
திரைப்பட தயாரிப்புத் தொழிலில் உலகளாவிய அளவில் புகழ் பெறாத இந்தோனேஷியாவின் The Mirror Never Lies என்ற திரைப்படம் இந்தாண்டு பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளைப் பெற்று வருகிறது.
இந்தோனேஷியாவின் குட்டித் தீவான காம்பக் பஜோவில் தனது தாயுடன் வசிக்கிறாள் பாகிஸ் என்ற 12 வயது சிறுமி. அவளது தந்தை கடலில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போனவர். தனது தந்தை சொன்னதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு பேசுபவள். முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாக கடலையும், தனது தொலைந்து போன அப்பாவையும் நேசிப்பவள். டால்பின் பற்றிய ஆராய்ச்சிக்காக அந்தத் தீவுக்கு வரும் டுடோவுடன் பாகிஸின் தாய் நெருக்கமாக இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள் பாகிஸ்..! தனது தாயின் திடீர் முடிவை ஏற்றுக் கொள்ளாமலும், கண்ணாடி உடைந்து போய் பல சிதறல்கள் அதில் தெரிவதையும், இனி அதனால் பயனில்லை என்பதையும் மிகத் தாமதமாக உணர்ந்தவள் என்ன செய்கிறாள் என்பதையும்தான் இப்படம் சொல்கிறது..!
இது போலவே துருக்கி மொழி பேசும் OGUL என்ற படத்தின் கதையாடல் மிக ஆச்சரியமானது..! தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வரும் குர்தீஷ் மலைத் தொடரில் மறைந்து வாழும் தீவிரவாதிகளை உள்ளடக்கிய கதை இது..!
தீவிரவாதிகளுடன் சேர்ந்துவிட்டானோ என்ற ராணுவத்தின் தொடர்ச்சியான டார்ச்சரினாலும், மகன் மீதான பயம் காரணமாகவும், தனது காதலியைத் தேடிச் சென்றிருக்கும் திரும்பிவராமல் இருக்க, விபத்தில் மரணமடையும் வேறொரு இளைஞனை தனது மகன் என்று சொல்லி அடக்கம் செய்கிறார் அப்பா. அடுத்த சில நாட்களில் நிஜமாகவே அவரது மகனும் பிணமாகவே வந்து சேர அந்தச் சடலத்தையும் அருகிலேயே புதைக்கிறார் அப்பா. இப்போது முதலில் இறந்த இளைஞனின் தந்தை தனது மகனைத் தேடி வர 2 அப்பாவி தந்தைகளும் தத்தமது மகன்களின் சமாதியில் மனம் கரைவதுதான் நம் மனதையும் கனக்கச் செய்கிறது.. அடுத்தவர் மகனின் சமாதிக்கு சிமெண்ட் பூச்சு பூசும் அப்பா, தனது மகனை வெற்று மண்ணில் புதைத்துவிட்டு அழும் அந்த இறுதிக் காட்சியில் அதிகார போதையின் ஒரு துளியை ருசிக்க முடிக்கிறது..!
இத்திரைப்பட விழாவில் அதீத பாராட்டை பெற்ற படமாக AMNESTY என்ற அல்பேனிய நாட்டு திரைப்படத்தைச் சொல்ல வேண்டும். கவிதையான காட்சிகள் அடங்கியது..
சிறைக்குள் இருக்கும் கைதிக்கு மனித உரிமைகளின் அடிப்படையில் மாதந்தோறும் ஒரு நாளில் தனது துணையுடன் உடல்உறவில் ஈடுபட ஒரு மணி நேர அவகாசம் தரப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும், ஒரு மனைவி மற்றும் ஒரு கணவன் பற்றிய கதைதான் இது. த்த்தமது துணைகளை பார்க்க சிறைக்கு வரும் இவர்களுக்குள் ஏற்படும் நட்பும், சிநேகமும், அதன் பின்னான நியாயமான காதலையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள். வெறுமனே குடும்ப ஒற்றுமைக்காக மனதை பலி கொடுத்துவிட்டு அலையும் கோடிக்கணக்கான பெண்களின் பிரதிநிதிதான் இப்படத்தின் கதாநாயகி. முடிவில் குடும்பமும், ஆணாதிக்கமும்தான் ஜெயிக்கும் என்கிற நிதர்சனத்தையும் இப்படமே சுட்டிக் காட்டியது.
நண்பர்களுக்குள் ஏற்படும் பூசலுக்கு பெண்ணே காரணமாக இருக்க.. அந்த முக்கோணக் காதலையும் முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறது RED SKY என்ற கிரீஸ் திரைப்படம். கடற்கரையோர நகரத்தில் ஒரு மூடப்பட்ட தோட்டத்தையே உருவாக்கி அதில் காய்கனிகளை உண்டாக்கி தொழில் நடத்தி வரும் Aris, Stelios என்ற நண்பர்களுடன் பழகும் கார்டோபா என்னும் பெண்ணால் ஏற்படும் விளைவுகளினால் தொழில் மற்றும் நட்பில் ஏற்படும் பிரச்சினைகள்தான் படம்..
அத்தோட்டத்தையும், அதன் வடிவமைப்பையும், காட்சிப்படுத்துவதில் இருந்த அழகியலையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக, மிக குறிப்பிடத்தக்க திரைப்படம் இது.!
அன்னா என்னும் வாய் பேச முடியாத ஒரு இளம் பெண்ணின் நிராசையாகும் கனவுதான் THE DAYS OF DESIRE என்னும் ஹங்கேரி திரைப்படம். பணக்கார தம்பதிகளுக்குள் இருக்கும் ஈகோவினால் வளர்ப்பு மகள் அந்தஸ்தில் இருந்து ஒரே நாளில் பதவியிறக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அன்னாவின் வாழ்க்கை அந்த ஒரு நொடியிலேயே கேள்விக்குறியாவது பரிதாபம்தான்..!
இந்த அன்னாவின் வாழ்க்கையை பார்க்கையில் ஜோஸப், பிலிப், லார்ஸ் என்ற இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கைக் கதை இதைவிட பரிதாபம். ஜோஸப்பு கண் பார்வை குறைபாடு கொண்டவர். பிலிப் தலையைக்கூட அசைக்க முடியாத அளவுக்கு வீல்சேரில் நடமாடுபவர். ரால்ப்ஸ் முதுகுத்தண்டில் அடிபட்டு வீல்சேரில் செயல்படுபவர். மூவருக்கும் திடீர் ஆசை ஒன்று எழுகிறது. அது சாவதற்குள் தங்களுடைய கன்னித்தன்மையை இழந்துவிட வேண்டும் என்பதுதான். அதற்காக பெல்ஜியத்தில் இருந்து பாரீஸுக்கு பயணமாகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்பவள் ஒரு பெண். என்ன ஆனது என்பதுதான் கதை..!
Come as you are என்ற Belgium திரைப்படத்தில் இந்த வித்தியாசமான கதையை அழகாகச் செதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். முதல் அனுபவம் கிட்டியவுடன் உடல் ஊனமில்லாமல் அவர்கள் நடந்து வரும் அந்த ஒரு காட்சியே போதும்.. இப்படத்தின் உண்மைத்தன்மைக்கு..!
20 Cigarettes என்னும் இத்தாலி படம் இருவேறு உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்றது..! ஒரு பக்கம் போர் பற்றிய புரிதலே இல்லாமல் பத்திரிகையாளர் மற்றும் இயக்குநர் பணியில் ஈடுபட வரும் Aureliano Amadei என்னும் 28 வயது நிரம்பிய இளைஞனின் வாழ்க்கையில் ஒரு நாளில் நடைபெறும் சம்பவத்தை பற்றிச் சொல்கிறது இப்படம். நாடு, அரசுகள், கொள்கை, மக்கள் என்று அத்தனையையும் அலசி ஆராயும் இப்படத்தின் முடிவுதான் தற்போதைய மக்களாட்சியின் தத்துவமாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை..!
ELENA என்ற ரஷ்ய திரைப்படம் மனிதர்கள் எடுக்கும் அவசரத்தனமான ஒரு நொடி முடிவுகளின் பின்னணியில் இருக்கும் விசுவாசம், நட்பு, காதல் போன்றவைகளையெல்லாம் கேள்விக்குறியாக்கியது..!
எலீனா விளாடிமீரின் தற்போதைய மனைவியாக இருந்தாலும், முதல் திருமணத்தின் மூலம் பேரன், பேத்திகள் எடுத்தவள். தனது மகன் ஊதாரியாக இருந்தாலும், அவன் மேல் பாசம் கொண்டு தேவைப்படும் பணத்தை கொடுப்பவள், பேரனின் கல்விக்காக விளாடிமிர் பண உதவி செய்ய மறுப்பதைக் கண்டு கோபமடைந்து கணவனையே சத்தமில்லாமல் கொலை செய்கிறாள். இத்தனையாண்டுகள் உடன் இருந்த்தற்கான எந்தவொரு பாசமும், நேசமும் இல்லாமல், இனி தனக்கு மகன் குடும்பம்தான் முக்கியம் என்பதாக நினைக்கும் எலீனாவைப் போன்றோர் உலகமெல்லாம் இருக்கிறார்கள்..!
இதே போன்றதுதான் Beloved என்னும் பிரான்ஸ் திரைப்படம். 1960-களில் பாரகுவே மற்றும் பிரான்ஸில் நடப்பதாக சித்தரிக்கப்படும் இப்படம், எந்தவொரு கட்டுப்பாட்டையும் நடிகர்களுக்கு விதிக்காமல், அவரவர்க்கு இருக்கும் தனி மனித உரிமையின் கீழ் அவர்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் கதையைச் சொல்கிறது..! இது போன்ற படங்கள் நிச்சயமாக நமக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..!
ஐரோப்பிய திரைப்படங்களில் இப்போதெல்லாம் அதிகமாக குடும்பக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். உலகம் தழுவிய பொருளாதாரமும், உலகளாவிய கட்டுப்பாடில்லாத வணிகச் சந்தையும் ஒவ்வொரு நாட்டின் மூலதனத்தை பெருக்கினாலும், குடும்ப உறவுகளை சீரழித்துவிட்டன என்பதை திரைப்படங்கள்தான் கடந்த சில வருடங்களாக அழுத்தமாக பதிவு செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் HAPPY NEW YEAR GRANDAMA என்ற ஸ்பெயின் திரைப்படம்.
வயதான நிலையில் எதற்கெடுத்தாலும் 55 வயதைத் தாண்டிய தனது மகள் மேட்ரிக்ஸை அழைத்து இம்சை செய்யும் மேரிக்கு வயது 80. தனது அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க்க் கூடாது என்று கடுமையாக எதிர்க்கும் மேட்ரிக்ஸ் தானே மேரியை பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறாள். ஆனால் அவள் படும்பாட்டை பார்க்கும் கணவர் தனது மகள் joxemari-யிடம் சொல்லி இதற்கு வழி கேட்க.. மகள் மற்றும் மருமகன், கைக்குழந்தையான பேத்தி, பேரன் என்று பிரச்சினைகள் சுற்றி சுற்றி கழுத்தை நெருக்குகின்றன. கடைசியில் பாட்டியை கொலை செய்யும் அளவுக்கு joxemari-யின் கணவன் இறங்கிவிட.. வீடு என்னவானது என்பதைத்தான் ரொம்பவே சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள். முடிவில் மனம் கனத்தது என்னவோ உண்மை..!
இவை மட்டுமல்ல.. நகைச்சுவைகளுக்குப் பிறகு உலக சினிமா வகையறாக்களில் அதிகம் இடம் பிடிப்பது அதிர்ச்சியூட்டும் வகை படங்கள்தான். அந்த வரிசையில் THE TRUTH OF THE LIE என்னும் ஜெர்மனி படம் அதீத பய உணர்ச்சியைக் கிளறியது எனலாம். பணத்துக்காக எந்த அளவுக்கு இறங்கி வரும் சூழல் உலகத்தில் இருக்கிறது என்பதை முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறது இந்த ஜெர்மனி திரைப்படம்.
உலகத்தின் முதல் புராதனத் தொழிலாளான பாலியல் தொழில் பாரீஸில் 19-ம் நூற்றாண்டில் எப்படியிருந்த்து என்பதை கொஞ்சமாக நம்புவதைப் போல படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள் HOUSE OF TOLERANCE என்ற பிரான்ஸ் படத்தில். கேளிக்கைகளிலும், மது வாடைகளினாலும், திரவியங்களினாலும் சூழப்பட்டிருக்கும் அந்த விடுதிகளில் இருக்கும் பெண்களுக்குள் இருக்கும் மன வாழ்க்கையை கொஞ்சம் தொட்டுப் பார்த்திருக்கிறது இப்படம்.
1900களின் துவக்கத்தில் இருந்த நுகர்வு கலாச்சாரம் முதலில் துவங்கியதே பாலியல் விடுதிகளினால்தான் என்பதை இப்போது அனைவருமே ஒத்துக் கொள்கிறார்கள். இதைத்தான் இப்படமும் சுட்டிக் காட்டுகிறது..!
பாலியலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பின்புல கதைகளையும், அவர்கள் தங்கள் மேல் திணிக்கப்படும் கதைகளையும், சதைகளையும் வேறு வழியில்லாமல் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்ளும் சிருங்கார காட்சிகளும் அதிகமாகவே இப்படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது..!
விருது பெற்ற திரைப்படங்கள் என்றால் காட்சிகள் மெதுவாக நகரும். ஒற்றை வரி வசனங்கள் இருக்கும். குறியீடுகள் அதிகமாக இருக்கும் என்கிற பார்முலாவை அப்படியே பின்பற்றியிருக்கிறது அர்ஜென்டினாவின் LAS ACACIAS என்னும் திரைப்படம். தனியாக வாழும் லாரி டிரைவரான Ruben, பல ஆண்டுகளாக Paraguay நாட்டில் இருந்து அர்ஜென்டினாவின் தலைநகரான Buenos Aires-க்கு மரம் ஏற்றிச் செல்லும் வேலையைச் செய்பவர்.
அப்படி ஒரு பயணத்தில் ஜேன்ஸிட்டா என்ற பெண்ணையும், அவளது 8 மாத கைக்குழந்தையும் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ரூபனுக்கு ஏற்படுகிறது. அந்தப் பயணமே ரூபனின் அதுவரையிலான சோகம் சூழ்ந்த வாழ்க்கையில் ஒரு சுடரை ஏற்றி வைக்கிறது..! ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது.. மெது, மெதுவாக உருவேற்றப்பட்டிருக்கும் இப்படத்தின் காட்சியமைப்புகள் பல இடங்களில் சோதனை தந்தாலும், முழுமையான படத்திற்கு அதுவே பலமாகவும் இருக்கிறது..! இறுதியில் இருவரும் இணைய வேண்டும் என்று பார்வையாளர்களை நினைக்க வைத்ததன் மூலம் இயக்குநர் தனது பணியில் ஜெயித்தேவிட்டார் என்று சொல்ல்லாம்..!
44 நாடுகளைச் சேர்ந்த 154 படங்களை மொத்தமாக திரையிட்டாலும், 5 திரையரங்குகளில் படங்கள் காண்பிக்கப்பட்டதாலும், திரையரங்குகளுக்கு இடையேயான தூரம் அதிகமானதாக இருந்ததாலும் பல சிறந்த திரைப்படங்களை பார்வையாளர்களால் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.!
9-வது ஆண்டாக நடந்து வரும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இந்த ஆண்டுதான் பலவித சர்ச்சைகளையும் சம்பாதித்திருக்கிறது. 'செங்கடல்' திரைப்படம் முறைப்படி விண்ணப்பம் அனுப்பியும் தேர்வு செய்யப்படாதது.. 'தென்மேற்குப் பருவக்காற்று' என்ற சென்ற வருடத்திய தமிழின் சிறந்த மாநில மொழித் திரைப்படமாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படம் அழைக்கப்படாதது என்ற சர்ச்சைகள் துவக்க விழாவிலேயே பெரும் ரகளையை ஏற்படுத்திவிட்டது..!
பொதுவாக உலகத்தின் எந்தவொரு திரைப்பட விழாவிலும் தணிக்கை முறை கிடையாது. ஆனால் சென்னையில் மட்டும் புதிதாக தணிக்கையை கொண்டு வந்து லீனா மணிமேகலையின் 'செங்கடலை' தள்ளி வைத்த்து சினிமா ஆர்வலர்களை கொதிக்க வைத்த்து. அதேபோல் 'கோ', 'தூங்கா நகரம்' போன்ற கமர்ஷியல் படங்களை 'இந்தியன் பனோரமா' பிரிவிற்கு தேர்வு செய்துவிட்டு, 'தென்மேற்கு பருவக் காற்று' திரைப்படத்தை அழைக்காமல்விட்டதும் படவுலகத்தினருக்கு கோபத்தைக் கிளறிவிட்டது..!
துவக்க விழா நிகழ்ச்சியை போல் இறுதி நாள் நிகழ்ச்சியிலும் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக இயக்குநர்கள் சங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அந்த 2 படங்களையும் திரையிட்டுக் காண்பித்தனர். செங்கடல் சம கால இலங்கை அகதிகளின் பிரச்சினையும், தமிழக மீனவர்களின் அல்லல்படும் வாழ்க்கையும் நறுக்குத் தெரித்தாற்போல் நமது முகத்தில் அறைந்தது.. இப்படத்தையா தடை செய்தார்கள் என்ற அதிர்ச்சிதான், பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த்து..!
இந்தியன் பனோரமாவில் போட்டியிட்ட 12 தமிழ்த் திரைப்படங்களில் 'ஆடுகளம்' முதல் பரிசையும், 'வாகை சூட வா' இரண்டாமிடத்தையும் வென்றன. நடுவர்களின் சிறப்புப் பரிசை 'அழகர்சாமியின் குதிரை' படத்திற்கு கதை, வசனம் எழுதிய பாஸ்கர் சக்திக்கு கிடைத்தது. அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் விருது கொடுக்க முயற்சிப்பதாக விழா குழுவினர் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழக அரசு கொடுத்திருக்கும் 25 லட்சம் ரூபாய் நிதியுதவிதான் இந்த்த் திரைப்பட விழாவினை இந்த அளவுக்கு சிறப்பாக செய்து முடிக்க உதவியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் இது போன்ற கலைகளை ஊக்குவிக்கும் ஒரு பொறுப்பான பணியினை மேற்கொண்ட தமிழக அரசினை நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும்..!
நன்றி : திரைக்கூத்து மாதமிருமுறை இதழ் - ஜனவரி 1-15
|
Tweet |
18 comments:
நேரம் பற்றாக்குறையால் கொஞ்சமாகவே படிக்க முடிந்தது..நாளை முழுவதும் படித்துவிட்டு மறுபடியும் கமெண்ட் போடுகிறேன்..படித்த வரையில் அருமை.நன்றி.
ரொம்ப நல்லாருக்கு. கதைச்சுருக்கம் நிஜமாவே நச்னு இருக்குண்ணே.
யுவகிருஷ்ணா பதிவுகளை ஒன்றரை நிமிசத்துக்குள் படிக்கும் அளவுக்கு எழுதுங்கள் என்று சொல்லுவார்... உங்கள் பதிவை படிக்க ஒன்றரை நாள் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
twitter லே ரெண்டு ரெண்டு வரியா போட்டா ஒரு வருஷத்துக்கு வரும்போல தெரியுது....ரெண்டு படம் பத்தி படிச்சுட்டேன். மீதி நாளைக்கு. நன்றி
ரொம்ப பிரமாதமா எழுதியிருக்கீங்க.. நீளம்னு சொல்ல மாட்டேன். ஒவ்வொரு படங்களுக்கும் பத்து வரிகளுக்குள் சுருக்கமாக தந்திருக்கிறீர்கள்.. அருமை!
அருமை!
[[[Kumaran said...
நேரம் பற்றாக்குறையால் கொஞ்சமாகவே படிக்க முடிந்தது. நாளை முழுவதும் படித்துவிட்டு மறுபடியும் கமெண்ட் போடுகிறேன். படித்த வரையில் அருமை. நன்றி.]]]
பொறுமையாகப் படித்துவிட்டு வாருங்கள் குமரன்.. நன்றி..!
[[[வானம்பாடிகள் said...
ரொம்ப நல்லாருக்கு. கதைச் சுருக்கம் நிஜமாவே நச்னு இருக்குண்ணே.]]]
அண்ணனா..? பிச்சிருவேன் பிய்ச்சு.. தம்பின்னு அன்பா கூப்பிடுங்க பெருசு..!
[[[Philosophy Prabhakaran said...
யுவகிருஷ்ணா பதிவுகளை ஒன்றரை நிமிசத்துக்குள் படிக்கும் அளவுக்கு எழுதுங்கள் என்று சொல்லுவார். உங்கள் பதிவை படிக்க ஒன்றரை நாள் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.]]]
என்னுடைய சில பதிவுகள் நீளமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்பது போன்ற கருப்பொருளைக் கொண்டவை. அவைகள் அப்படித்தான் இருக்கும் தம்பி..
[[[Chilled beers said...
twitter லே ரெண்டு ரெண்டு வரியா போட்டா ஒரு வருஷத்துக்கு வரும்போல தெரியுது....ரெண்டு படம் பத்தி படிச்சுட்டேன். மீதி நாளைக்கு. நன்றி.]]]
ஓகே.. படிச்சிட்டு சொல்லுங்க..!
[[[bandhu said...
ரொம்ப பிரமாதமா எழுதியிருக்கீங்க.. நீளம்னு சொல்ல மாட்டேன். ஒவ்வொரு படங்களுக்கும் பத்து வரிகளுக்குள் சுருக்கமாக தந்திருக்கிறீர்கள்.. அருமை!]]]
நன்றிகள் ஸார்..!
[[[Kalee J said...
அருமை!]]]
நன்றிகள் கலீல் ஸார்..!
நல்லா அறிமுகம் செய்து இருக்கீங்க. நன்றி. படங்களைப் பார்க்க கொஞ்ச நாள் ஆகும்.
புரஃபைல் போட்டோ மாத்தீட்டீங்க போல. நல்லா இருக்கு.
பதிவுகள் நீளமா இருக்கறது ஒண்ணும் தப்பில்லைங்க. உங்க பதிவுகள் நீளமா இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு நாவலை படிக்கற அனுபவம் கிடைக்குது. எல்லாரும் சும்மா நீளம் நீளம்னு சொல்லறாங்கன்னு நீங்க பாட்டுக்கு குறைவா எழுத ஆரம்பிச்சிடாதீங்க.....
[[[முகில் said...
நல்லா அறிமுகம் செய்து இருக்கீங்க. நன்றி. படங்களைப் பார்க்க கொஞ்ச நாள் ஆகும். புரஃபைல் போட்டோ மாத்தீட்டீங்க போல. நல்லா இருக்கு.]]]
இந்தப் புகைப்படம் நன்றாக இருப்பதாகச் சொல்லும் முதல் நபர் நீங்கள்தான் முகில்..! நன்றி..!
[[[முகில் said...
பதிவுகள் நீளமா இருக்கறது ஒண்ணும் தப்பில்லைங்க. உங்க பதிவுகள் நீளமா இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு நாவலை படிக்கற அனுபவம் கிடைக்குது. எல்லாரும் சும்மா நீளம் நீளம்னு சொல்லறாங்கன்னு நீங்க பாட்டுக்கு குறைவா எழுத ஆரம்பிச்சிடாதீங்க.]]]
அட முருகா.. இப்படியும் ஒரு நண்பரா..? கோடி கும்பிடு உங்களுக்கு..! உங்களை மாதிரி அன்பர்களும், நண்பர்களும் இருப்பதால்தான் என்னால் இப்படி தொடர்ந்து எழுத முடிகிறது. உங்களது ஒத்துழைப்பிற்கு எனது நன்றிகள் முகில்..!
if you ever have a chance watch dogtooth( http://en.wikipedia.org/wiki/Dogtooth_(film))write a comment they should have selected this movie for this festival
[[[beaviscartmanstewie said...
if you ever have a chance watch dogtooth( http://en.wikipedia.org/wiki/Dogtooth_(film))
write a comment they should have selected this movie for this festival]]]
பார்த்துவிட்டுச் சொல்கிறேன் நண்பரே..!
Post a Comment