ஆடுகளம் - சினிமா விமர்சனம்

16-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இந்தாண்டின் துவக்கமே தனுஷுக்கு மட்டுமல்ல நமக்கும்  நல்லதொரு சினிமாவைக் கொடுத்திருக்கிறது..!


சேவற்கட்டு என்னும் சேவற்சண்டை தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் வீர விளையாட்டைப் போலவே பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதுதான்.. எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் சண்டைகளுக்காகவே சேவல்கள் வளர்க்கப்படுவதும், அந்தச் சண்டைக் காட்சிகள் ஆங்காங்கே நடப்பதும் நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து வந்ததுதான். ஆனால் அதனையே ஒரு கதைக்களமாக்கி நான் பார்க்கும் முதல் திரைப்படம் இதுதான்.

சேவற்சண்டை பற்றிய ஒரு ஆவணப் படம் என்று சொல்லுகின்ற அளவுக்கு படத்தின் முற்பாதி முழுக்க சேவல்களின் ஆக்கிரமிப்பு அதிகம். எந்த அளவுக்கு சேவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டும்..? தீனி எவ்வாறு கொடுக்க வேண்டும்..? சண்டையின்போது அவற்றை எப்படிப் பராமரிக்க வேண்டும்..? சிறிய காயங்களுக்கு மருந்து போடுவது எப்படி..? இது பற்றியதையெல்லாம் விலாவாரியாக முற்பாதியில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இடைவேளையின்போது நடைபெறும் சேவற்சண்டைக் காட்சிகள் மட்டும் 17 நாட்கள் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்க்கும்போதே அதன் கடின உழைப்பு தெரிகிறது.. ஆனால் சேவற்சண்டையின் பல இடங்களில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது என்றாலும், அது தவிர்க்க முடியாத செயல்தான்.. ஏனெனில் உண்மையான சேவற்சண்டையில் மனித மல்யுத்த சண்டைகளைப் போலவே தள்ளிக் கொண்டே போய் கோட்டைத் தொட்டுவிடச் செய்தாலோ.. படுத்துவிட்டு எழுந்திருக்காமல் இருந்தாலோ, சண்டை போட பிரியமில்லாமல் பின் வாங்கி ஓடினாலோ எதிரணி வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம்.

ஆனால் சினிமாவிற்கு டிராமாட்டிக் தேவைப்படுகிறது என்பதால் ஆக்ரோஷச் சண்டைகள் கிராபிக்ஸின் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. தாரளமாக இதனை ஏற்றுக் கொள்ளலாம்.

இதையடுத்து பிற்பாதி முழுவதும் இந்தச் சண்டையினால் அதுவரையில் அண்ணன், தம்பியைப் போல பழகியவர்களுக்குள் இடையே ஏற்படும் மன மாற்றங்கள்.. பழி வாங்கல்கள், துரோக எண்ணங்கள் அத்தனையையும் படிப்படியாக கொண்டு வந்து நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.


படம் முழுவதும் வியாபித்திருப்பது சந்தேகமேயில்லாமல் தனுஷ்தான். எனக்கு இப்போதைய நடிகர்களில் தனுஷைத்தான் மிகவும் பிடிக்கிறது. மிக எளிமையான தோற்றம் என்பதோடு, நடிப்புக்கு ரொம்ப மெனக்கெடாமல், இயல்பாக தானாகவே வருவதைப் போல தெளிகின்ற அவரது நடிப்பைப் பார்க்கின்றபோது இந்த நடிகர் இன்னும் ஒரு சிகரத்தை எட்டிப் பிடிக்கப் போகிறார் என்றே நினைக்கிறேன். புதுப்பேட்டை பல்வேறு காரணங்களால் எனக்குப் பிடிக்காமல் போனது. ஆனால் அதிலிருந்த தனுஷை மட்டும் பிடித்திருந்தது..

இந்தப் படத்திலும் எந்த பிரேமிலும் தன்னுடைய பணக்காரத் தோரணையும், பேச்சும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார் என்பதை ஷாட் பை ஷாட் உணர முடிகிறது.

பார்த்தவுடன் காதல் என்கிற தமிழ்ச் சினிமாவின் அவசர டிரெண்ட்டின்படி காதலிக்கத் துவங்கும் அவரது செயல்கள் ரசிப்புக்குரியவை. டவுசர் தெரியும்படியாக கைலியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு “எனக்கு இந்தப் புள்ளைய தெரியும்..” என்று சொல்லி தப்ஸியின் வீட்டுக்குள் நுழைந்து பேசுகின்ற அந்தக் காட்சி ஒன்றே போதும்.


படத்திற்குப் புதுமுகமாக நடித்திருக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலனின் தேர்வு மிகக் கச்சிதமானது.. முகத்தில் பாதியை மீசை மூடியிருந்தாலும் அவரது கண்களே பல கதைகளைப் பேசுகிறது. இவரை தேர்வு செய்த வெற்றிமாறனுக்கு இன்னுமொரு ஷொட்டு..

பேட்டையப்பன் என்ற கேரக்டரான இவருக்குக் குரல் கொடுத்திருக்கும் ராதாரவியின் இம்மியளவும் மாறாத மாடுலேஷன்ஸ் அசத்தல். சண்டைக் கோழியைப் போல கொத்திக் கொத்திப் பேசும் இந்த வசன மாடுலேஷனை தேர்வு செய்தமைக்கு இயக்குநரையும் பாராட்டத்தான் வேண்டும்.

சேவற்சண்டை பஞ்சாயத்தில் இன்ஸ்பெக்டர் ரத்தினத்திடம் உறுமுவதாகட்டும்... தனுஷை விட்டுக் கொடுக்காமல் கிஷோரிடம் பேசுகின்ற காட்சியிலும், இன்ஸ்பெக்டரை நேரில் பார்க்கப் போய் உன் செல்வாக்கை நிரூபிச்சிட்டீல்ல என்று பொருமித் தள்ளுவதாகட்டும்.. தனுஷ் ஒவ்வொரு முறையும் ஜெயிக்கின்ற போதெல்லாம் தனது ஆற்றாமையை ஒதுக்கிவைத்துவிட்டு நான் வளர்த்த பையனாச்சே.. விவரம் தெரியாமய்யா இருந்திருப்பான் என்று விரோதத்தை தேனில் குழைத்து பேசுகின்ற அந்தப் பேச்சாகட்டும்.. மனைவியை சந்தேகப்பட்டு பேசுகின்ற வில்லன் பேச்சின்போது நாம எழுந்து அடித்துவிடலாமா என்கிற லெவலுக்கு இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மனதில் ஒட்டிப் போய்விட்டது.. சபாஷ் கவிஞரே..


தனுஷின் உடன் வரும் அந்த கருப்பு நண்பன், திடீர், திடீரென்று டிரான்ஸ்லேஷன் செய்வதற்காக உதவியாளராக இருக்கின்றபோது நகைக்க முடிகிறது.. உயிருக்குயிரான தம்பியாகப் பழகி பட்டென நட்பு உடைந்து மோதலுக்குத் தயாராக இருக்கும் அண்ணனாக கிஷோர்.. இவரது வேகத்தைப் பார்த்து உடன் இருந்து ஒத்து ஊதும் பேட்டையப்பனை கடைசிவரையில் புரிந்து கொள்ளாதவகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

மீனாளின் நடிப்பும் சொல்லத் தகுந்தது.. தனுஷ் சொல்லித்தான் சேவலை வாங்க ஆள் வந்திருக்கிறது என்பதைக் கேட்டவுடன் பேட்டையப்பன் கொதி நிலையில் நிற்க.. பேச்சை மாற்றிப் பேசுகின்ற அந்த சமாளிப்பு.. அவர் தன்னைச் சந்தேகப்பட்டு பேசியவுடன் மண்ணை வாரியள்ளித் தூவிவிட்டு புலம்பியபடியே செல்வதுமாக அக்மார்க் தெக்கத்திப் பொண்ணுதான்..

படத்திலேயே மிகப் பெரிய வேஸ்ட் ஹீரோயின் தப்ஸிதான். பல இடங்களில் லிப் மூவ்மெண்ட்டுகள் தப்பும், தவறுமாக இருக்க.. பேச முயற்சித்திருக்கிறார் என்பதுதான் தெரிகிறது. பேச்சே இப்படியெனில் நடிப்பு எப்படி இருந்திருக்கும்..? ஸ்கோப் இல்லாத படத்தில் நடித்துவிட்டார். இப்படியே சிரித்துக் கொண்டிருந்தால் லைலாவின் இடத்தைப் பிடித்துவிடலாம்.. விளம்பரப் படங்களில் அம்மணி இன்னும் கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் முதலிடத்தில் நீண்ட நாட்கள் அமரலாம்.

வெற்றிமாறனின் இயக்கம்தான் படத்தை இறுக்கமாக்கியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில்கூட சினிமாத்தனங்கள் இல்லாமல் எடுக்க முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. அவரவர் கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருந்து நழுவ விடாமல் கொண்டு போயிருப்பது பாராட்டுக்குரியது..


போலீஸ் ஸ்டேஷனில் பேட்டையப்பனை கான்ஸ்டபிள் அடிப்பதைக் காட்டாமல், அடித்த பின்பு காட்டுவதும், போலீஸ் தனுஷை அழைத்துச் சென்று அடித்திருப்பதையும் காட்டாமல் அதற்குப் பின்னான காட்சியையும் காட்டி நிறுத்தியிருப்பதும் ஒரு புதுவித காட்சியமைப்புக்குள் தனுஷை தள்ளியிருக்கிறார் என்று புரிகிறது.

இன்னுமொரு ஆச்சரியமான கேரக்டர் எதிராளியான ரத்தினத்தின் தாயார். எப்படியாவது இந்த வருஷமாவது ஜெயிச்சுப் புடு.. உங்கய்யா உசிரோட இருக்குறவரைக்கும் ஒரு தடவைகூட மண்ணைத் தொட்டதில்லை என்று மகனை உசுப்பிவிடும் அக்மார்க் தாயின் புலம்பல்.. சேவற்சண்டையின் முதல் நாள் படுத்த படுக்கையாகி ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்காமல் அடம் பிடிக்கும் அந்த பிடிவாதத்தனம்.. இப்போதும் பல ஊர்களில் வீட்டில் கேட்கும் விசும்பல் சப்தங்களுக்கெல்லாம் இந்தத் தாய் போன்ற சிலரும் காரணமாக இருந்து தொலைக்கிறார்கள். 

இன்னொரு தாயும் இருக்கிறார். அது தனுஷின் அம்மா. சினிமாத்தனமான முகமே இல்லாமல் தேர்வு செய்திருப்பதன் பலன் படத்தில் கிடைத்திருக்கிறது. எப்படியும் பையன் வீட்டை மீட்டுக் கொடுத்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் ரேஷன் கடைக்காரரிடம் "அந்தப் பக்கமா வந்தா வீட்டுக்கு வாங்க.." என்று அழைப்பது.. அந்த நம்பிக்கை சிதைந்தவுடன் மகனை நள்ளிரவில் போட்டு டார்ச்சர் செய்வதுமாக இன்னொரு தாயின் பக்கத்தையும் காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறனின் இயக்கம் மிகச் சிறப்பானது.. இடைவேளைக்குப் பின்னான பல காட்சிகள் இரவு நேரத்திலேயே சுருட்டப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் வேல்துரையின் பணிதான் பெரிதாக உதவியிருக்கிறது. போலீஸ் தேடி வரும்போது ஆளுக்கொரு பக்கமாக ஓடிக் கொண்டேயிருக்கும் காட்சியில் கேமிராவும் அந்தக் கிராமத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் ஓடுகின்ற லாவகத்தை பாராட்டத்தான் வேண்டும்..

“உன்னை நான் பெத்த அப்பன் போலத்தான நினைச்சேன்..” என்று தனுஷ் சொல்லும் கிளைமாக்ஸின் காட்சியில் நடிப்பைவிட கேமிராவின் ஆக்ஷன் சூப்பர்ப்.. ஒரு நொடியில் பேட்டைக்காரன் எடுக்கும் அந்த முடிவைப் படமாக்கியிருக்கும்விதம் அருமை. சத்தியமாக நான் அப்படியாகும் என்று நினைக்கவில்லை.. எக்ஸலண்ட் வெற்றிமாறன்..


ரொம்ப நாட்களுக்குப் பிறகு மதுரையின் சந்து பொந்துகளையும், திருப்பரங்குன்றத்தின் என் அப்பனின் வீட்டையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இப்போதும் மதுரை ரயில்வே குவார்ட்டர்ஸில் ஆங்கிலோ இந்தியன்ஸ் சிலர் இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த குவார்ட்டர்ஸ்களில் அலங்கார லைட்டுகளை போட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஆட்கள் நள்ளிரவு நேரத்தில் பவனி வருவதை நானே பார்த்திருக்கிறேன். இப்போது மீண்டும் ஒரு முறை. அவர்களுடைய வீட்டில் பெண்களும் குடிப்பதைப் பார்த்து முதல் முறையாக ஆச்சரியப்பட்டு நின்றிருக்கிறேன். அந்த ஆச்சரியம் இந்தப் படத்தைப் பார்த்தும் தொடர்கிறது.
 
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். "யேத்தே யேத்தே" என்ற பாடலில் "வெள்ளாவில போட்டு வெளுத்தாங்களா" என்ற பாடல் வரிகளுக்கு தியேட்டரில் செம வரவேற்பு.. தப்ஸி பார்க்கவே அப்படித்தான் இருக்கிறார். இதேபோல் தனது காதல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆடியபடியே வரும் அந்தப் பாடலும் தியேட்டரில் ரசிகர்களை ஆடத்தான் வைக்கிறது.


தப்ஸியுடனான காதல் திணிக்கப்பட்ட விஷயம் என்கிற ஒன்றுதான் கதையில் உறுத்துகிறதே தவிர, மற்றபடி கதை நீட்டாக ஹைவேஸில் பயணிக்கும் ஆம்னி பஸ் போலத்தான் அலுங்காமல், குலுங்காமல் போயிருக்கிறது. இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் இறுக்கமாக இருப்பதால் ரசிகர்களின் ஆரவாரம், எதிர்பார்ப்பு எல்லாம் புஸ்ஸாகிப் போன நிலையில்தான் இருந்தார்கள். ஆனாலும் கதையின் முடிவைக் காண அனைவரும் ஆவலோடு காத்திருந்ததால், அந்த டெம்போ குறையாத அளவுக்குத் திரைக்கதையைக் கொண்டு போயிருந்தததால் படம் தப்பித்தது என்று நினைக்கிறேன்..

தனுஷ் இது போன்ற படங்களைத் தேர்வு செய்து நடித்தால் அவருக்கும் நல்லது. நமக்கும் நல்லது என்று சொல்லும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். படத்தில் மிக மோசமான விஷயம் ஒன்றே ஒன்று.. அது ஒலிப்பதிவு.. பாதி வசனங்கள் கேட்க முடியாத அளவுக்கு இருந்தது ஏன் என்று தெரியவில்லை.. சென்னையில் இருக்கும் அதி நவீன தியேட்டர்களிலேயே முடியவில்லை என்றால் தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்.. தமிழ்நாடு முழுக்கவே இப்படித்தான் என்ற தகவல் இப்போது வந்திருக்கிறது..

சமீப காலமாக வெளி வந்த முக்கியமான திரைப்படங்களிலெல்லாம் ஒலிப்பதிவு மிக மோசமாகத்தான் இருந்தது.. அதுவொரு ஸ்டைல் மாதிரி ஆக்கிவிட்டார்களோ என்னவோ.. நல்லவேளை டாப்ஸிக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்திருக்கிறார் என்பதால் அந்தப் பொண்ணு கொஞ்சம் பிழைத்துப் போனது.. மற்றபடி இது ஒரு முக்கியப் பிரச்சினை.. தீர்க்க வேண்டியது இயக்குநர்களின் கடமை.

இன்னொன்று.. தற்போதைய திரைப்பட உலகின் டிரெண்ட்டை யோசித்துப் பார்த்து இத்திரைப்படத்திற்கான கட்டணங்களை முதல் நாளில் இருந்தே 100, 120 என்று சில இடங்களில் உயர்த்தி வைத்து கூட்டத்தை குறைத்துவிட்டார்கள். கேட்டால் எப்படியும் படம் 2 வாரங்கள் மட்டுமே ஓடும் என்பதால் உயர்த்தும்படி விநியோகஸ்தர்கள்தான் சொன்னார்கள் என்றார்கள்.

நான் முதல் நாள் ஈவினிங் ஷோ பார்த்தேன். தியேட்டரில் பாதி காலியாகத்தான் இருந்தது.. 50 ரூபாய் என்றால்கூட கூட்டம் வந்திருக்கும். ஒரேயடியாக இப்படி உயர்த்தினால் சாதாரண பொதுஜனம் எப்படி வரும்..? இது சினிமா தொழிலுக்கு நல்லதல்ல. பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டுமா? அல்லது சினிமா வசூல் அதிகமாக இருக்க வேண்டுமா என்பதில் அதிகக் கவனம் தேவை. இப்போதைய தயாரிப்பாளர்கள் வசூலில் குறியாக இருக்கிறார்கள். இதனால் நடிகர், நடிகைகள் தொலைந்து போகும் அபாயம் உண்டாகும். அடுத்த படங்களுக்கு வசூல் குறையும் அபாயமும் வரும்.. திரையுலகினர் புரிந்து கொண்டால் நல்லது. 

ஆடுகளம் தனுஷின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமும் கூட..

32 comments:

kanagu said...

2011-ல் தமிழ் சினிமா வெற்றியோடு ஆரம்பிச்சிருக்கு அப்படி-னு தான் சொல்லணும்-ணா.. :) அட்டகாசமான் படம்... உண்மையிலேயே உலக திரைப்படம் நாம சொல்ற படங்களுக்கு நிகரான படம். மனித உளவியலை வைத்து அற்புதமாக கதை செய்து இருக்கிறார் வெற்றிமாறன்... :)

விமர்சனம் நன்று... எனக்கு தப்சிய பிடிச்சு இருந்துது.. :) :) முதல் படம் தானே... அதே மாதிரி அவங்க படத்துல இல்லைன்னா நமக்கு இவ்வளவு நல்ல பாடல்கள் கேக்க கிடைச்சு இருக்காது.

ஒரு வேண்டுகோள் அண்ணா... தியேட்டர்கள மற்றும் டிக்கெட் விலை நிர்ணயம் பத்தி வேற ஒரு முழு பதிவா போடாலாமே??? இதிலேயே போட்டு இருப்பது அதோட முக்கியதுவத்த கொறச்சிடும்-னு தோணுது...

க ரா said...

என்னமோ போங்க.. எல்லாரும் நல்லபடியா சொல்றீங்க.. பாத்துற வேண்டியதுதான் :)

ஜோதிஜி said...

எனக்கு தனுஷ் நடிப்பு பிடிக்கும். உங்கள் தனிப்பட்ட ரசனையும் விருப்பமும் எழுதிய வரிகளில் நிறைய காண முடிகின்றது. தெளிவா சொல்லியிருக்கீங்க.

முத்தரசு said...

சரி பார்த்துட்டா போச்சி - பார்த்துட்டு வந்து பேசிக்கிறேன்

pichaikaaran said...

நல்ல விமர்சனம் . பிட்டு படங்கள் விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆச்சே

அகில் பூங்குன்றன் said...

Ungal vimarsanthukkagave padam pakkanumnnu thonuthu uncle

middleclassmadhavi said...

வித்தியாசமான கதைக் களம்; நல்ல விமர்சனம். பாத்துடுவோம்!

Indian Share Market said...

அண்ணே......உங்களுடைய இந்த விமர்சனமா படம் பார்க்கும் ஆவலை
தூண்டுகேறது ....நல்ல விவரிப்பு ...

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
2011-ல் தமிழ் சினிமா வெற்றியோடு ஆரம்பிச்சிருக்கு அப்படினுதான் சொல்லணும்ணா:) அட்டகாசமான் படம். உண்மையிலேயே உலக திரைப்படம் நாம சொல்ற படங்களுக்கு நிகரான படம். மனித உளவியலை வைத்து அற்புதமாக கதை செய்து இருக்கிறார் வெற்றிமாறன்.:)

விமர்சனம் நன்று. எனக்கு தப்சிய பிடிச்சு இருந்துது.:):) முதல் படம் தானே. அதே மாதிரி அவங்க படத்துல இல்லைன்னா நமக்கு இவ்வளவு நல்ல பாடல்கள் கேக்க கிடைச்சு இருக்காது.

ஒரு வேண்டுகோள் அண்ணா... தியேட்டர்கள மற்றும் டிக்கெட் விலை நிர்ணயம் பத்தி வேற ஒரு முழு பதிவா போடாலாமே??? இதிலேயே போட்டு இருப்பது அதோட முக்கியதுவத்த கொறச்சிடும்-னு தோணுது...]]]

கருத்துக்கு நன்றி கனகு..

இந்தப் படத்தின் விலையேற்றத்தை இதனுடன்தானே குறிப்பிட வேண்டும். அத்தோடு இத்தனை நல்ல படமாக இருந்தும் ஏன் அதிக நாட்கள் ஓடவில்லை என்ற கேள்வி நாளை எழுந்தால் அதற்கும் இதுவே பதிலாக இருக்குமே.. அதனால்தான் இதுலேயே குறிப்பிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...
என்னமோ போங்க.. எல்லாரும் நல்லபடியா சொல்றீங்க.. பாத்துற வேண்டியதுதான் :)]]]

அவசியம் பாருங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
எனக்கு தனுஷ் நடிப்பு பிடிக்கும். உங்கள் தனிப்பட்ட ரசனையும் விருப்பமும் எழுதிய வரிகளில் நிறைய காண முடிகின்றது. தெளிவா சொல்லியிருக்கீங்க.]]]

இப்படியொரு சின்னப் பையன்கிட்ட இருந்து இப்படிப்பட்ட நடிப்பை வாங்க முடியுதுன்னா நிச்சயம் அவன் நடிகன்தாண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...
சரி பார்த்துட்டா போச்சி - பார்த்துட்டு வந்து பேசிக்கிறேன்..]]]

ஓகே.. காத்திருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
நல்ல விமர்சனம் . பிட்டு படங்கள் விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆச்சே.]]]

பிட்டு படமெல்லாம் இப்போ வர்றதில்லையே நண்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...
Ungal vimarsanthukkagave padam pakkanumnnu thonuthu uncle.]]]

அவசியம் பாருங்க அகில்..!

உண்மைத்தமிழன் said...

[[[middleclassmadhavi said...
வித்தியாசமான கதைக் களம்; நல்ல விமர்சனம். பாத்துடுவோம்!]]]

அவசியம் பார்க்க வேண்டிய படம் மாதவி..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
அண்ணே. உங்களுடைய இந்த விமர்சனமா படம் பார்க்கும் ஆவலை
தூண்டுகேறது. நல்ல விவரிப்பு..]]]

நன்றி ஸார்.. அவசியம் படத்தைப் பார்த்துட்டு வந்து சொல்லுங்க..!

Anonymous said...

புதுபேட்டை படம் ஒரு எதார்த்தவாத அடிப்படையில் எடுக்கப்பட்ட கலை நேர்த்தியான படம். அந்த படம் யாரையும் திருப்தி செய்ய எடுக்கப்பட்ட படம் அல்ல.அது உனக்கு பிடிக்காதது ஆச்சரியமில்லை. ஆடுகளத்தில், முக்கியமாக கையை கிழித்து நான் உன்னை காதலிக்கறேன் என்பது போன்ற சினிமா பம்மாத்துதான் உனக்கு பிடிக்கும் போல.

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...
புதுபேட்டை படம் ஒரு எதார்த்தவாத அடிப்படையில் எடுக்கப்பட்ட கலை நேர்த்தியான படம். அந்த படம் யாரையும் திருப்தி செய்ய எடுக்கப்பட்ட படம் அல்ல.அது உனக்கு பிடிக்காதது ஆச்சரியமில்லை. ஆடுகளத்தில், முக்கியமாக கையை கிழித்து நான் உன்னை காதலிக்கறேன் என்பது போன்ற சினிமா பம்மாத்துதான் உனக்கு பிடிக்கும் போல.]]]

தங்களுடைய விமர்சனத்திற்கு நன்றி நண்பரே..!

Margie said...

தனுஷ் கிட்ட ஒரு sincerity & realistic தெரியுது.

அண்ணே, நானும் படம் பார்த்திட்டேண்ணே.

எங்க ஊரு மதுர, தெரியுமுல்ல!!!

உண்மைத்தமிழன் said...

[[[Margie said...
தனுஷ்கிட்ட ஒரு sincerity & realistic தெரியுது.
அண்ணே, நானும் படம் பார்த்திட்டேண்ணே. எங்க ஊரு மதுர, தெரியுமுல்ல!!!]]]

எங்க ஊரும் மதுரைதான் தெரியுமுல்ல..!

Anonymous said...

என்ன தனுஷ் மழுங்க ஷேவ் செய்து வந்தால் தான் பார்க்க நல்லாயிருக்காது. மற்ற படி
அவர் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே கிடையாது.
/// அண்ணே நானும் மதுரை தான்ணே. அந்த உரிமையில கேக்குறேன், நம்ம ப்ளாக் பக்கம்
வந்து போட்டு இருக்கிற மேட்டர்ருக்கு கருத்து சொன்னீங்கன்ன நல்லாருக்கும் ///

உண்மைத்தமிழன் said...

[[[பன்-பட்டர்-ஜாம் said...
என்ன தனுஷ் மழுங்க ஷேவ் செய்து வந்தால்தான் பார்க்க நல்லாயிருக்காது. மற்றபடி அவர் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே கிடையாது.]]]

ஷேவ் செய்த கெட்டப்பில் பார்க்கச் சின்னப் பையனாக இருக்கிறார்.. அது ஒரு குறையுமில்லை..!

//அண்ணே நானும் மதுரைதான்ணே. அந்த உரிமையில கேக்குறேன், நம்ம ப்ளாக் பக்கம் வந்து போட்டு இருக்கிற மேட்டர்ருக்கு கருத்து சொன்னீங்கன்ன நல்லாருக்கும்///]]]

வர்றேன்.. வர்றேன்.. வர்றேன்..!

Anonymous said...

நானும் படம் பார்த்தேன். பெரியவர் கேரக்டர் இரண்டாம் பாதியில் மாறியதை மக்கள் ரசிக்கவில்லை. ஆடுகளம் பற்றி என் விமர்சனம்(நேரம்/விருப்பம் இருந்தால்)
http://nanbendaa.blogspot.com/2011/01/blog-post.html

Anonymous said...

>>> என்ன ஆள் ஆளுக்கு மதுரை, மதுரைன்னு சொல்றீங்க. நானும் மதுரை பக்கம்தான்..ராஜபாளையம். ஆனா பிறந்து வளந்தது,இப்ப வண்டி ஓட்டுவது எல்லாம் நம்ம மெட்ராஸ்ல தான்.

Sundar said...

வணக்கம்,

நானும் தெற்க்கத்திக்காரன் தான் (நெல்லையில் பிறந்து, கும்ரியில் படித்து, மதுரையில் வளர்ந்தவன்).

ஆனாலும், உங்கள் விமர்சனத்தில் பாரபட்சம் தெரிகிறது. வளரும் இயக்குனரை பாராட்டி ஊக்குவிக்கவேண்டியதுதான். உங்கள் பரந்த மனது புரிகிறது. இருந்தாலும், இவ்வளவு பாராட்டா?

ரஜினி/ஷங்கர்/மாறன் இவர்களை இவ்வளவு நுனுக்கமாக விமர்சித்து, தமிழ்மணம் சினிமா பிரிவில் இரண்டாம் பரிசு வாங்கிய அந்த விமர்சனம் அளவுக்கு இல்லை என்றாலும், கொஞ்சமாவது இன்னும் நடுநிலையாக இருந்திருக்கலாம், இந்த விமர்சனத்தில்...

எந்திரன் விமர்சனம் பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நம்முடைய எதிர்ப்பு, கோபமாக வெளிப்பட வேண்டுமே தவிர, புலம்பலாக மாறிவிடக்கூடாது... அப்படித்தான் ஆகிவிட்டது, உங்களின் அவாளின் எதிர்ப்பு விமர்சனம். நறுக் சுருக் என்று இருந்திருக்கவேண்டிய அந்த விமர்சனம், எனக்கு என்னமோ வழவழா கொழகொழா போல்தான் தெரிகிறது...

உங்களுக்கு சாதகமான, என்னுடைய பங்கு... எந்திரனில் ஐஸ்-ன் வீட்டில் எல்லா முகங்களும் அவாளின் முகமாக இருந்ததாக குறைபட்டிருந்தீர்கள். ஆனால், இன்னொரு பார்வையில், அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் பெண்கள், ஆண் துணை இல்லாதவர்கள். இது அவாளின் வாழ்வில் சகஜம் என்று சிரித்துவிட்டு போகலாமே!!!

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...

நானும் படம் பார்த்தேன். பெரியவர் கேரக்டர் இரண்டாம் பாதியில் மாறியதை மக்கள் ரசிக்கவில்லை.]]]

ஆனால்.. அதற்குண்டான தனுஷின் நடிப்புதான் இப்போது பேசப்படுகிறது..! இதுவே படத்திற்குக் கிடைத்த வெற்றிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
>>>என்ன ஆள் ஆளுக்கு மதுரை, மதுரைன்னு சொல்றீங்க. நானும் மதுரை பக்கம்தான்.. ராஜபாளையம். ஆனா பிறந்து வளந்தது, இப்ப வண்டி ஓட்டுவது எல்லாம் நம்ம மெட்ராஸ்லதான்.]]]

மெட்ராஸ்ல தடுக்கி விழுந்தா அசலூர்காரனுகதான்.. சொந்த மண்ணுன்னு சொல்லிக்கிறவனுக ரொம்ப கம்மி..!

உண்மைத்தமிழன் said...

[[[Sundar said...

வணக்கம், நானும் தெற்க்கத்திக்காரன்தான் (நெல்லையில் பிறந்து, கும்ரியில் படித்து, மதுரையில் வளர்ந்தவன்).
ஆனாலும், உங்கள் விமர்சனத்தில் பாரபட்சம் தெரிகிறது. வளரும் இயக்குனரை பாராட்டி ஊக்குவிக்க வேண்டியதுதான். உங்கள் பரந்த மனது புரிகிறது. இருந்தாலும், இவ்வளவு பாராட்டா?]]]

இந்தப் படத்திற்கு அந்தத் தகுதி இருக்கிறது. அதனால் பாராட்டியிருக்கிறேன் சுந்தர்..!

[[[ரஜினி/ஷங்கர்/மாறன் இவர்களை இவ்வளவு நுனுக்கமாக விமர்சித்து, தமிழ்மணம் சினிமா பிரிவில் இரண்டாம் பரிசு வாங்கிய அந்த விமர்சனம் அளவுக்கு இல்லை என்றாலும், கொஞ்சமாவது இன்னும் நடுநிலையாக இருந்திருக்கலாம், இந்த விமர்சனத்தில்...

எந்திரன் விமர்சனம் பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நம்முடைய எதிர்ப்பு, கோபமாக வெளிப்பட வேண்டுமே தவிர, புலம்பலாக மாறிவிடக் கூடாது... அப்படித்தான் ஆகிவிட்டது, உங்களின் அவாளின் எதிர்ப்பு விமர்சனம். நறுக் சுருக் என்று இருந்திருக்க வேண்டிய அந்த விமர்சனம், எனக்கு என்னமோ வழவழா கொழகொழா போல்தான் தெரிகிறது...

உங்களுக்கு சாதகமான, என்னுடைய பங்கு... எந்திரனில் ஐஸ்-ன் வீட்டில் எல்லா முகங்களும் அவாளின் முகமாக இருந்ததாக குறைபட்டிருந்தீர்கள். ஆனால், இன்னொரு பார்வையில், அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் பெண்கள், ஆண் துணை இல்லாதவர்கள். இது அவாளின் வாழ்வில் சகஜம் என்று சிரித்துவிட்டு போகலாமே!!!]]]]

மன்னிக்க வேண்டும். நான் எழுதியது உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். மறுபடியும் அந்தப் பதிவின் முன்னுரையை நன்கு கவனமாகப் படித்துப் பார்க்கவும்..!

மதுரைக்காரன் said...

Really an Awesome movie...

உண்மைத்தமிழன் said...

[[[பேர் சொல்லும் பிள்ளை இல்லை said...

Really an Awesome movie...]]]

உண்மைதான் நண்பரே.. தனுஷிற்கு பெயர் சொல்லியிருக்கும் படம் இது..!

பாசத்திற்குரிய பாரதிராஜா said...

எனக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. உங்கள் விமர்சனம் மிகவும் நன்று

உண்மைத்தமிழன் said...

[[[பாசத்திற்குரிய பாரதிராஜா said...
எனக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. உங்கள் விமர்சனம் மிகவும் நன்று.]]]

வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தம்பி..!