சென்னை 8-வது உலகத் திரைப்பட விழா துவங்கியது..!

16-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற மாதம் நான் எழுதிய இந்தப் பதிவில்  குறிப்பிட்டிருந்தது போல 8-வது உலகத் திரைப்பட விழா சென்னையில் இன்று கோலாகலமாக துவங்கியது.

முறைப்படியான துவக்க விழா மாலையில் நடந்தாலும் காலையிலேயே திரைப்படங்கள் திரையிடத் துவங்கிவிட்டன. உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சினிமா வர்த்தக சபை அரங்கு, ஆகிய மூன்று திரையரங்குகளிலுமே காலையில் படங்கள் திரையிடப்பட்டுவிட்டன.

வருடாவருடம் இந்த திரைப்பட விழாவுக்கு வரும் மாணவ, மணிகளின் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது.. இந்த முறை தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்திருப்பதால் கொஞ்சம் நிறைய விளம்பரம் செய்திருந்தார்கள். இதன் காரணமாக முதல் நாளே கூட்டம் அள்ளிவிட்டது..

அதிலும் மாணவர்களின் கூட்டம்தான் அதிகம். இதன் பின்புதான் என்னைப் போன்ற வெட்டி ஆபீஸர்களின் கூட்டம்.. எப்போதும்போல் சினிமா பிரபலங்களின் வருகை படத்தின் திரையிடலின்போது கொஞ்சம்தான் இருந்தது. சந்தானபாரதியும், ரமேஷ்கண்ணாவும் ஜோடி போட்டுக் கொண்டே அலைந்தார்கள். பானா காத்தாடி படத்தின் இயக்குநர் பத்ரிவெங்கடேஷும், அமிர்தம் திரைப்படத்தின் இயக்குநர் வேதம் புதிது கண்ணனும் வந்திருந்தார்கள்.

எப்போதும் வரும் வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நேற்று காணவில்லை. ஒருவேளை நாளை முதல் வரலாம்..

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக அன்று திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் கதைச் சுருக்கத்தை அந்தக் கால ஜூனியர் போஸ்ட் வடிவத்தில் பத்திரிகையாக அச்சடித்து வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பத்திரிகை விநியோகத்திற்கும், சீட்டுகளை அடையாளம் காட்டும் பணிக்காகவும் கல்லூரி மாணவிகளைப் பயன்படுத்தியிருப்பதுதான் கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாகவும், அவஸ்தையாகவும் இருந்தது. நாம் தியேட்டருக்குள் சென்றால் எதை முதலில் பார்ப்பது..? படத்தையா? அவர்களையா..? கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

இதில் இன்னுமொரு காமெடி.. திரையில் பிட்டு சீன் ஓடும்போது வேண்டுமென்றே தங்களைக் குறும்புப் பார்வையுடன் பார்த்த பயபுள்ளைகளைக் கண்டு அந்த மாணவிகளே சற்று பயந்துதான் போனார்கள்.

காலையில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் முதலில் பார்த்த படம் 8 TIMES UP என்ற பிரெஞ்சுத் திரைப்படம். இளம் வயதிலேயே ஆரம்பக் காதலிலேயே கலவியினால் பிள்ளை பெற்று பின்பு வளர்ந்தவுடன் டைவர்ஸாகி தனியே வாழும் பரிதாபமான ஒரு பெண்ணின் கதை..

அதே நேரத்தில் உட்லண்ட்ஸ் சிம்பொனியில் VIRTUALLY A VIRGIN என்ற ஹங்கேரி நாட்டுத் திரைப்படம் போட்டிருந்தார்கள். அழுவாச்சிக் காவியத்தைக் காண விரும்பாதவர்கள் பட்டென்று இருட்டிலேயே தடவித் தடவி எழுந்தோடி சிம்பொனிக்குள் நுழைந்து இன்ப அதிர்ச்சியானார்கள்.

தலைப்பைப் போலவே படத்தில் சிற்சில காட்சிகள் இருந்ததைக் கண்டு அங்கிருந்தபடியே உட்லஸண்ட்ஸில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு போன் அடித்து இங்க வாங்கடா என்று அழைத்த கொடுமையும் நடந்தது..

இந்தப் படமும் நல்ல படம்தான்.. வேறு வழியில்லாமல் விபச்சாரத் தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை.. நிச்சயம் பாராட்டுக்குரியது இத்திரைப்படத்தின் கதை.. ஒரு இடத்தில் ஹீரோ கேட்கிறான் “நீ விபச்சாரம் செய்கிறாயா..?” என்று.. அதற்கு அவள் சொல்லும் பதில் “என் உடலை மட்டும்தான்..”

இடையிடையே நமது மசாலா திரைப்படங்களைப் போல ஒரு ரவுடி வந்து இடைஞ்சல் செய்வதாகக் காட்டினாலும் அது படத்தோடு ஒட்டி வந்ததால் தவறில்லாமல்தான் இருந்தது.. இத்திரைப்படத்தைப் பற்றித் தனிப்பதிவாக எழுத வேண்டும்..

வெளியில் வந்து ஒரு காபியைக் குடித்துவிட்டு மீண்டும் உட்லண்ட்ஸுக்குள் நானும் ஜாக்கியும் தஞ்சமானோம். ஜாக்கியின் அதிதீவிர ரசிகை ஒருவரும் அங்கே வந்திருந்தார். அந்தப் படத்தின் பெயர் TWISTED ROOTS. பின்லாந்து நாட்டுப் படம்.

சாவை எதிர்நோக்கியுள்ள ஒரு நோயாளியின் குடும்பத்தில் அடுக்கடுக்காக வரும் சோதனைகளால் அக்குடும்பத்தினர் அத்தனை பேரும் சகல விதத்திலும் பாதிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட நம்மூர் டெலிசீரியல் டைப்பில் திரைக்கதை இருந்தாலும், காட்சிகள் அவர்கள் பாணியிலேயே இருந்ததால் கண்களில் கண்ணீரோடு கடைசிவரையில் பார்க்க முடிந்தது.

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் சிதறிவிட்ட குடும்ப உறவுகளைப் பற்றி அவர்களுக்கு மிகப் பெரும் கவலை. இதனாலேயே அத்தனை நாடுகளிலும் மக்கள் மகிழ்ச்சியோடு இல்லையோ என்கிற கவலை அந்தந்த அரசுகளுக்கும், முக்கியமாக கலைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் பார்க்கிறேன். ஐரோப்பிய திரைப்படங்களின் அடித்தளமே குடும்ப உறவுகளின சிதைவுகளைக் குற்றம் சொல்பவையாகவே இருக்கின்றன.. நிச்சயம் அங்கே ஒரு நல்ல மாற்றம் வரட்டும்..

நேற்றைய மதியச் சாப்பாடு ஸ்பான்சர் தம்பி ஜாக்கி.. புதுக்கல்லூரியின் நேரெதிரே இருக்கும் ஒரு பிரியாணி கடையில் மட்டன் பிரியாணி வாங்கிக் கொடுத்தான். அவனுக்கு எனது நன்றி.. நாளைக்கு யாரோ..?

மீண்டும் உட்லண்ட்ஸ் சிம்பொனிக்கு வந்தபோது இப்படியொரு ரஷ்ய படமா என்று ஆச்சரியப்பட வைத்துவிட்டார்கள்.

BLACK LAMB என்றொரு ரஷ்யத் திரைப்படம். தற்போதைய ரஷ்யாவின் அன்றாட அரசியல், சமூக வாழ்க்கையை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். பிளாக் காமெடி என்பார்களே அதற்கு இத்திரைப்படமும் ஒரு நல்ல உதாரணம்.. இதைப் பற்றியும் தனிப்பதிவு போட வேண்டும்..

மாலையில் துவக்க விழா நிகழ்ச்சிகள் இருந்ததால் உட்லண்ட்ஸில் அதற்கு மேல் காட்சிகள் இல்லை. கிடைத்த இடைவெளியில் காபி குடித்து, அ.ராசா ஊழல் விஷயமாக ரெய்டு என்று நானும் ஜாக்கியும், பட்டர்பிளை சூர்யாவும் கலந்துரையாடினோம்..

வெளியில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட போஸ்டரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் வந்திருந்த பதிவர்களுக்குள் தள்ளுமுள்ளுவே நடந்தது.. கடைசியாக விடாப்பிடியாக போராடி அனைவருமே எடுத்துக் கொண்டார்கள். ஜாக்கியும், சூர்யாவும் இது பற்றிய புகைப்படங்களை இடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மாலை நிகழ்ச்சி மிகக் கச்சிதமாக தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் நம்மூர் வழக்கப்படியே தாமதமாகத்தான் துவங்கியது.. மாதவனும், ரம்யாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். இரண்டு பேர் பேசிய பின்பு குத்துவிளக்கேற்றிய நேரத்தில்தான் அரங்கத்திற்குள் நுழைந்தார் அமைச்சர் பரிதி இளம் வழுதி.

காலையில் வராத நட்சத்திரங்களெல்லாம் மாலையில் நடந்த துவக்க விழாவுக்கு ஆஜராகியிருந்தார்கள். சுஹாசினி, ரேவதி, ரோகிணி, உமா பத்மநாபன், லஷ்மி ராஜகோபால், ஷைலஜா, லிஸி பிரியதர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ்,  இயக்குநர்கள் ஷங்கர், பார்த்திபன், வசந்த், நாகா, மீரா கதிரவன், மனோபாலா, நடிகர்கள் சிவாஜி, சின்னி ஜெயந்த், மாதவன், ஜெயராம், விக்ரம், எஸ்.வி.சேகர் இவர்களுடன் தற்போதைய உள்ளம்கவர் கன்னிகள் ஓவியா, அஞ்சலி, மோனிஷா, அபர்ணா என்று பட்டியல் பெரியதாகத்தான் இருந்தது. ரசிகர்கள் பட்டாளம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தங்கத் தலைவி குஷ்பூ ஏனோ வரவில்லை. இத்தனைக்கும் ஆட்சி மன்றக் குழுவில் அவரும் ஒருவர்..

நிகழ்ச்சியை ஸ்பான்ஸர்ஷிப் என்ற முறையில் விஜய் டிவி ஒளிப்பதிவு செய்தாலும் பல்வேறு இணையத்தளங்கள், தனியார் சேனல்காரர்களும் ஆளாளுக்கு வந்து குவிந்து தங்களது ஸ்டேண்டை போட்டுவிட.. ஆடியன்ஸில் பாதிப் பேருக்கு மேடையை உற்று நோக்க சிரமமமாகிவிட்டது..

யாரோ ஒரு பொதுஜனம் எழுந்து நின்று கத்திய கத்தில் மேடையில் மாடலாடிக் கொண்டிருந்த மாதவனும், ரம்யாவும் பேச்சை நிறுத்திவிட்டு கேட்க வேண்டியதானது. அந்தப் பொதுஜனத்திற்கு எனது நன்றி. அதற்குப் பின்புதான் கடை விரித்திருந்த சேனல்காரர்கள் கடையைக் காலி செய்து விட்டு ஓரத்திற்குப் போய் குந்தினார்கள்.

இந்த எட்டாவது சென்னை உலகத் திரைப்பட விழாவின் துவக்கமாக குத்துவிளக்கை ஏற்றி வைத்த சாதனையாளர்கள் நடிகைகள் ஓவியா மற்றும் அஞ்சலி ஆகிய இருவர்தான் என்கிற மகா கொடுமையை இங்கே சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு.. இதெல்லாம் மார்க்கெட்டிங்கிற்காம்..

ஏற்கெனவே ஒரு முறை மோனிஷா என்ற குழந்தை நட்சத்திரம் பிரான்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவைத் துவக்கி வைத்த சரித்திரமும் சென்னையில் நடந்துள்ளது.

மாதவன் ஆங்கிலத்தில் அள்ளிவிட.. அதையே ரம்யா தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.. வந்திருந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக மாதவனின் ஆங்கிலம் என்று தெரிகிறது..

நிகழ்ச்சியின் முடிவில்தான் போட்டிப் பிரிவில் இடம் பெறும் சிறந்த தமிழ்ப் படத்தைத் தேர்வு செய்யவிருக்கும் நடுவர்களான சிங்கீதம் சீனிவாசராவ் மற்றும் சாருஹாசனை மேடையேற்றி யார் கண்ணிலும் படாத இடத்தில் அமர வைத்து கொடுமைப்படுத்திவிட்டார்கள்.

மேடையில் பேசியவர்களிடம் முன்பே ரத்தினச் சுருக்கமாக பேசும்படி சொல்லியிருந்ததால் அனைவருமே நேரத்தைச் சுருக்கி பேசிவிட்டு அமர்ந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.. விக்ரமிற்கும், இயக்குநர் ஷங்கருக்கும்தான் மிகப் பெரிய அளவுக்கு பாராட்டுதலும், வரவேற்பும் கூட்டத்தினரிடையே கிடைத்தது.

விழா முடிந்து அஞ்சலி வெளியேறியபோது பல வரிசைகளில் இருந்தும் மாணவர்கள் தாண்டிக் குதித்து பாப்பாவைப் பார்க்க ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஓவியா இன்னொரு பக்கம் செல்ல.. அந்தப் பக்கமும் பாதிக் கூட்டம் தாவியது.. ஓடியது.. இவர்களிடமிருந்து பாப்பாக்களைக் காப்பாற்றியனுப்ப பெரும்பாடுபட்டுவிட்டார்கள்.

இந்தத் திரைப்பட விழாவின் லோகோவை டிஸைன் செய்தது இயக்குநர் கெளதம் மேனன் என்றார்கள். மிக அழகாக இருந்தது. இதனது டிரெயிலர் ஏனோ நேற்று வெளியிடப்படவில்லை. ஒருவேளை நாளை வருகிறதா என்று பார்ப்போம்..

துவக்க விழாவுக்குப் பின்பு திரையிட்ட படம் SOUL KITCHEN. முற்பாதியில் என்ன படம் இது என்று சற்றுச் சலிப்புத் தட்ட வைத்தாலும் பிற்பாதியில் பட்டையைக் கிளப்பிவிட்டது. இறுதியில் ஒட்டு மொத்தக் கூட்டமும் எழுந்து நின்று கை தட்டியது. அந்த அளவுக்கு உணர்ச்சியைத் தூண்டிவிட்டது இத்திரைப்படம்.. நிச்சயம் தனிப்பதிவாகத்தான் இதற்கு விமர்சனம் எழுத வேண்டும்.

காதலுக்காக ஒருவன் என்னவெல்லாம் செய்து அல்லல்படுகிறான் என்பதையும், முடிவில் அவனுக்கு நேரும் துன்பத்தைக்கூட மிக எளிதாக தாண்ட நினைக்கும் அவனது அந்த முடிவு சூப்பர்..

இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், சினிமா துறையினர் என்பவர்களையும் தாண்டி பொதுவான சினிமா ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்து வந்திருந்தது.. சென்னையின் ஹை கிளாஸ் சொஸைட்டி பார்ட்டிகாரர்கள் தங்களது கூட்டத்தோடு வந்திருந்ததும் தனிச் சிறப்புதான்.

நான்கு திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 19 திரைப்படங்கள். வருகின்ற 23-ம் தேதிவரையிலும். நுழைவுக் கட்டணம் 500 ரூபாய் என்பது மிக மிகக் குறைவுதான். பார்க்க விரும்பும் அன்பர்கள் விரைந்து வருக..

தினம்தோறும் காலை முதல் காட்சி 10 மணிக்கு பிலிம் சேம்பர் தியேட்டரிலும், 10.15 மணிக்கு உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி தியேட்டரிலும் துவங்குகிறது.. மதிய உணவுக்குத்தான் நமக்குத் தோதான நல்ல ஹோட்டல்கள் அருகில் இல்லை. இந்த ஒரு குறையைத் தவிர மற்ற வசதிகள் நன்றாகவே உள்ளன.

இந்தத் திரைப்பட விழாவுக்கு வரப் போகும் வி.ஐ.பி.கள் பற்றி இத்தளத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அவசியம் அங்கு சென்று படிக்கவும். 
 
தினம்தோறும் இது தொடர்பான செய்திகளைப் போடலாம் என்று நினைக்கிறேன்.. ஆனால் நேரம் வேண்டும். முருகனும் மனம் வைக்க வேண்டும்.. தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்திருப்பதால் கண்கள் சொக்கியிருக்கும் இந்த நிலையிலும் இந்தப் பதிவைப் போடுகிறேன்..

நேரம் கிடைத்தால் அன்றாடம் பார்க்கவிருக்கும் திரைப்படங்களின் கதையை அன்றன்றைக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறேன்..

நன்றி..!

31 comments:

க ரா said...

enjoy annachi ....

முச்சந்தி said...

உடனடி விமர்சனம் , கலக்குங்க அண்ணாச்சி , நேரம் கிடைக்கும் போது SOUL KITCHEN விமர்சனத்தையும் எழுதுங்கோ
நன்றி

Philosophy Prabhakaran said...

// ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறேன் //

:))))

நேசமித்ரன் said...

அண்ணே மிக நல்ல தொகுப்புப் பகிர்வு. அழைப்பிற்கான ரகசிய ஈர்ப்பை பதிவு செய்திருக்கும் விதம் பிடித்திருந்தது

மாணவன் said...

//நேரம் கிடைத்தால் அன்றாடம் பார்க்கவிருக்கும் திரைப்படங்களின் கதையை அன்றன்றைக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறேன்..//

எதிர்பார்ப்புடன்....

தொடருங்கள்.......

பகிர்வுக்கு நன்றி

Sreenivasan said...

//தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்திருப்பதால் கண்கள் சொக்கியிருக்கும் இந்த நிலையிலும் இந்தப் பதிவைப் போடுகிறேன்..


Thanks for your pain for us :).

Hope I can expect snaps taken by you on this occasion

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...
enjoy annachi ....]]]

தொடர்ந்த வருகைக்கு நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[muchanthi said...
உடனடி விமர்சனம் , கலக்குங்க அண்ணாச்சி, நேரம் கிடைக்கும் போது SOUL KITCHEN விமர்சனத்தையும் எழுதுங்கோ. நன்றி]]]

கண்டிப்பா எழுதணும் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[தோழி said...
தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.எங்களின் முயற்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/]]]

அழைப்புக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[philosophy prabhakaran said...

// ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறேன் //

:))))]]]

என்ன ஆச்சரியம் தம்பி..? எழுத முடியாதுன்னு நினைக்கிறியா..?

உண்மைத்தமிழன் said...

[[[நேசமித்ரன் said...
அண்ணே மிக நல்ல தொகுப்புப் பகிர்வு. அழைப்பிற்கான ரகசிய ஈர்ப்பை பதிவு செய்திருக்கும் விதம் பிடித்திருந்தது.]]]

ஆஹா.. நல்லா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா காரணத்தை..!

உண்மைத்தமிழன் said...

[[[மாணவன் said...

//நேரம் கிடைத்தால் அன்றாடம் பார்க்கவிருக்கும் திரைப்படங்களின் கதையை அன்றன்றைக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறேன்..//

எதிர்பார்ப்புடன்....

தொடருங்கள்.......

பகிர்வுக்கு நன்றி]]]

வருகைக்கு நன்றி மாணவன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sreenivasan said...

//தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்திருப்பதால் கண்கள் சொக்கியிருக்கும் இந்த நிலையிலும் இந்தப் பதிவைப் போடுகிறேன்..

Thanks for your pain for us :). Hope I can expect snaps taken by you on this occasion.]]]

அதை நான் எடுக்கவில்லை. ஜாக்கியும், சூர்யாவும்தான் எடுத்திருந்தார்கள். வாங்கிப் போடுகிறேன்..

kumar said...

"நேரம் கிடைத்தால் அன்றாடம் பார்க்கவிருக்கும் திரைப்படங்களின் கதையை அன்றன்றைக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறேன்."

நெசமாவா? நம்புற மாதிரி இல்லையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present brother

Ashok D said...

pass இருந்தால் சொல்லவும்.. மாலையில் கலந்துகொள்கிறேன் :)

நித்யன் said...

அண்ணா...

விரிவான அலசல் அருமை.

வரலாற்றுப் பதிவில் என் பெயரை விட்டுவி்ட்டீர்களே அண்ணா...

soul kitchen க்குப் பிறகு எங்கு போனீர்கள். மொபைல் போன் அடித்துக் கொண்டேயிருந்தது.

லிங்குசாமியைப் பார்த்தேன். காலேஜ் கண்மணிகளுடன் வளைத்து வளைத்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அன்பு நித்யன்.

செங்கோவி said...

சிங்கம் களமிறங்கிடிச்சு டோய்...அண்ணே, படம் பார்க்க டிக்கெட் எவ்வளவுன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

---செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

Madurai pandi said...

padam pakradhulaam ok.. but namma ooru aalunga , andha padangalai apdiye ultaa aaki edukkaama irundha sari...

மாதேவி said...

சுவாரஸ்யமாகத் தந்துள்ளீர்கள்.

Indian Share Market said...

தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்திருப்பதால் கண்கள் சொக்கியிருக்கும் இந்த நிலையிலும் இந்தப் பதிவைப் போடுகிறேன்............
வந்து அட்டன்டன்ஸ் போட்டு போயிருக்கேன்

உண்மைத்தமிழன் said...

[[[basheer said...

"நேரம் கிடைத்தால் அன்றாடம் பார்க்கவிருக்கும் திரைப்படங்களின் கதையை அன்றன்றைக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதுகிறேன்."

நெசமாவா? நம்புற மாதிரி இல்லையே?]]]

போட்ட பின்னாடியாச்சும் நம்புங்க சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present brother]]]

படம் பார்க்க வரலாமே பிரதர்..?

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...

pass இருந்தால் சொல்லவும்.. மாலையில் கலந்துகொள்கிறேன் :)]]]

கட்டணம் 500 ரூபாய்தான்.. வந்து வாங்கிப் படம் பாருங்கள் அசோக்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[நித்யகுமாரன் said...

அண்ணா... விரிவான அலசல் அருமை. வரலாற்றுப் பதிவில் என் பெயரை விட்டுவி்ட்டீர்களே அண்ணா...]]]

ஸாரி தம்பி.. மறந்திட்டேன்..! கடைசில சொல்லணும் நினைச்சிருந்தேன்..!

[[[soul kitchenக்குப் பிறகு எங்கு போனீர்கள்? மொபைல் போன் அடித்துக் கொண்டேயிருந்தது.]]]

அங்கேயேதான் இருந்தேன்.. சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்..!

[[[லிங்குசாமியைப் பார்த்தேன். காலேஜ் கண்மணிகளுடன் வளைத்து வளைத்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அன்பு நித்யன்.]]]

செய்யட்டுமே.. அவரும் வயசுப் பையன்தானே..?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...
சிங்கம் களமிறங்கிடிச்சு டோய். அண்ணே, படம் பார்க்க டிக்கெட் எவ்வளவுன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

---செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்]]]

அடுத்த வார வியாழக்கிழமையான 23-ம் தேதிவரையிலும் இத்திரைப்பட விழா நடைபெறுகிறது. கட்டணம் 500 ரூபாய்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை பாண்டி said...
padam pakradhulaam ok.. but namma ooru aalunga, andha padangalai apdiye ultaa aaki edukkaama irundha sari...]]]

இதனுடைய பாதிப்புகள் இல்லாமல் இனி வரும் இயக்குநர்களால் பணியாற்றவே முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[மாதேவி said...
சுவாரஸ்யமாகத் தந்துள்ளீர்கள்.]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்திருப்பதால் கண்கள் சொக்கியிருக்கும் இந்த நிலையிலும் இந்தப் பதிவைப் போடுகிறேன். வந்து அட்டன்டன்ஸ் போட்டு போயிருக்கேன்]]]

மிக்க நன்றி..!

Unknown said...

தினப்பத்திரிக்கையில் பணிபுரியும் நிருபர்கள் நிகழ்ச்சி முடிந்து ஒருமணி அவகாசத்தில் அதை எழுதி உதவி ஆசிரியரிடம் ஒப்படைக்கணும்.வாரப்பத்திரிக்கையிலும் இதேதான்.மறுநாள் கொடுக்கலாம்.இரவு ஒரு ஒரு மணிக்கு பதிவு போட்டிருககிறீர்கள்.சூப்பர்!!!

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...
தினப் பத்திரிக்கையில் பணி புரியும் நிருபர்கள் நிகழ்ச்சி முடிந்து ஒருமணி அவகாசத்தில் அதை எழுதி உதவி ஆசிரியரிடம் ஒப்படைக்கணும். வாரப் பத்திரிக்கையிலும் இதேதான். மறுநாள் கொடுக்கலாம். இரவு ஒரு ஒரு மணிக்கு பதிவு போட்டிருககிறீர்கள். சூப்பர்!!!]]]

எனது வலைத்தளத்தையே பத்திரிகை போலத்தான் பாவிக்கிறேன் தமிழன்..!